சிங்கப்பூரில் இருந்து வந்து கிட்டத்தட்ட 2+ வருடங்கள் ஆனாலும், சிங்கப்பூர் பாசம் போகுமா?! எனக்கு மூன்றாவது வீடு போல இருந்த இடமாச்சே கோபி, சென்னைக்குப் பிறகு 🙂 . தற்போது ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது.
ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
தம்பி கோகுல், “அண்ணா! பெருமாள் கோவில் குடமுழுக்கு பார்த்தீங்களா?” என்று கேட்டு, நேரலையாக எடுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட YouTube காணொளியை அனுப்பினான். சிங்கப்பூரே திரும்பச் சென்று வந்தது போல இருந்தது.
கோகுல் அன்புக்கினிய தம்பி, நான் படித்த பள்ளியில் எனக்கு இளையவன்.
பழமையான கோவில்
1855 ம் ஆண்டுக் கட்டப்பட்ட இக்கோவில் சிங்கப்பூரில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது.
இங்கே உள்ள இன்னொரு சிறப்பு, தைப்பூசத்தின் போது காவடி ஊர்வலம் இங்கே இருந்து தான் கிளம்பும். சரவெடியாக இருக்கும்.
மதம் என்பதை மறந்து விடுங்கள்.. இன்னொரு நாட்டில் நம்மவர்கள் ஆயிரக்கணக்கில் காவடி எடுத்துப் பரபரப்பான சாலையில் அணிவகுத்து வரும் போது பார்த்தால், சிலிர்க்காமல் இருக்க முடியாது. அப்படியொரு மிரட்டலாக இருக்கும்.
Read: தாரை தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம் [சிங்கப்பூர் 2014]
முருகன் தான் விருப்பக்கடவுள், பெருமாள் கோவில் எப்போதாவது தான் செல்வேன். இக்கோவில் மிக அழகாக நேர்த்தியாக, அமைதியாக, சுத்தமாக இருக்கும்.
அதோட பிரசாதம், அன்னதானம் செமையா இருக்கும் 🙂 . இந்தக் கோகுல் பய என்னை அழைத்துச் செல்லும் போதெல்லாம் பல நாள் தீர்ந்து இருக்கும்.
நான் முறைப்பதை பார்த்ததும் “இல்லண்ணா.. இப்பத் தான் தீர்ந்து இருக்கும் போல” என்று சமாளிப்பான். கோகுல் பெருமாளின் அதி தீவிர பக்தன் 🙂 .
4 மில்லியன் SGD
கோவில் குடமுழுக்கு 4 மில்லியன் SGD செலவில் செய்யப்பட்டுள்ளது.
மிக நேர்த்தியாக, அறிவிப்புகளுடன் விழா நடந்துள்ளது. ஆரம்பிக்கும் போது 25,000 பேர் என்றும் இறுதியில் 40,000 த்தை எட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், எங்குமே தள்ளுமுள்ளு பார்க்க முடியாது. திறன்பேசியை வைத்துப் படம் எடுக்கிறேன் என்று இம்சையைக் கூட்டுபவர்களை அதுபோலச் செய்யாதீர்கள் என்று அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
எந்த நாடாக இருந்தாலும், இது மட்டும் மாறாது போல.
தமிழின் இனிமை
நேரலையில் வர்ணனையாளர்கள் பணி அற்புதம் அதிலும் குறிப்பாக ஆண் வர்ணனையாளரின் ஆங்கிலம் கலக்காத தமிழ் கேட்கவே இனிமை. இதுபோலக் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு!
சிங்கப்பூரில் தமிழுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் அருமை.
ஆங்கிலம் கலக்காத இவர்களின் ஊடகப் பேச்சுகள் தொலைக்காட்சியில் கேட்கவே “இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்று இருக்கும்.
“வசந்தம்” தொலைக்காட்சியில் செய்திக்காக இல்லையென்றாலும் இவர்களின் தமிழுக்காகவே செய்திகளைக் கேட்கலாம்.
இவ்வளவு அழகான தமிழை விட்டுட்டு பலர் ஆங்கிலத்தைக் கலந்து கொலை செய்கிறார்கள் / றோம்.
பிரதமர் Lee Hsien Loong
கோவில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் Lee Hsien Loong கலந்து கொண்டார். நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல அல்லாமல் இங்கே அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மத நல்லிணக்கம் என்பதை இவர்களிடையே கற்றுக்கொள்ளலாம். பல சீனர்களும் தீவிர பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமாள் கோவில் லிட்டில் இந்தியா அருகே இருப்பதால், எப்போதும் கூட்டமாகவே இருக்கும். முஸ்தபா வருகிறவர்கள், வேறு வேலையாக லிட்டில் இந்தியா வருகிறவர்கள் பெரும்பாலும் இங்கேயும் வந்து செல்வார்கள்.
இக்காணொளி முழுவதும் பார்க்க நிச்சயம் பொறுமை இருக்காது, இருப்பினும் விட்டுவிட்டாவது பாருங்கள், சில காட்சிகள், தரம், விழா அமைப்பு உங்களுக்கு வியப்பைத் தரலாம்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
எனக்கு இன்னமும் தீரா ஆச்சரியம் என்னவென்றால் டில்லி அரசும் நம்ம ஹிந்திகாரன்களின் பப்பும் இன்னமும் சிங்கப்பூரில் வேகாமல் இருக்கின்றதே?
ஊர் பாசம் குறையாத நெகிழ்ச்சி… கட்டுரையில் ததும்புகிறது.
மகிழ்ச்சி.
சிங்கப்பூரின் விடுதலை / மலேசியா தள்ளிவைத்த காலத்தில் இந்திய / இலங்கை தமிழர்கள் அரசிற்கு மிகுந்த உதவியாய் இருந்துள்ளார்கள். இலங்கையில் தெல்லிப்பழை என்ற இடத்தில் இருந்து கணிசமான தமிழர் சிங்கபூரிற்கு ஆசிரிய பணி/ எழுத்துனர் வேலைக்கு சென்றுள்ளார்கள். இலங்கை திரும்பி உயிரோடு உள்ளவர்களிற்கு இன்னமும் சிங்கபூர் பென்சன் உள்ளது. எழுபதுகளின் தொடக்கத்தில் இலங்கை போன்று ஆக விரும்பிய நாடுகளில் முக்கியமானவை சிங்கபூரும் கொரியாவும். கொரியாவினை இலங்கையில் குப்பம் என்று சொல்லுவார்களாம். சிங்கப்பூரின் போக்குவரத்து சேவையானது இலங்கையின் போகுவரத்து சேவையை பின்பற்றி அமைக்கப்பட்டது. என்னுடய தாத்தா முறையானவர் தற்போதய பிரதமரிற்கு ஆசிரியராக இருந்துள்ளார். நீண்ட காலத்திற்கு பின்னர்தான் அவர் லீயின் மகனேன்று தெரியுமாம். என்னுடய தாத்தாவே என்னிடம் ஒரு முறை சொல்லியுள்ளார். பொங்கோல் இலகு ரயில் நிலையம் ஒன்றின் பேர் ” கடலூர் ” என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தை பூசத்த்னை விடுமுறை தினமாக அறிவிக்க அரசிற்கு வேண்டுகோல் விடுத்தார்கள். எல்லா மதங்களிற்கும் 2 விடுமுறை இருப்பதாகவும், சைவத்திற்கு மட்டும் 1 ( தீபாவளி) விடுமுறையென்றும். என்ன நடந்த்தௌ என்று அதற்கு பின் தெரியவில்லை.
உங்களுடைய பதிவுகளை படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசை மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.. வாய்ப்பு சரியாக கிடைக்கும் நேரத்தில் சென்று நீங்கள் உங்கள் பதிவுகளில் குறித்த இடங்களை சுற்றி பார்க்க வேண்டும்.. இந்த கோவிலையும் சேர்த்து.. பகிர்வுக்கு நன்றி கிரி.
வணக்கம் அண்ணா. விசேஷத்தின் அன்று செல்ல இயலவில்லை. மண்டலாபிஷேக கலை நிகழ்ச்சிகளில் நண்பர்கள் சிலர் பங்கேற்பதை காணும் பொருட்டு கடந்த திங்களன்று கட்டாயம் செல்லும்படி ஆனது. மிகவும் சிறப்பாகவும், புது பொலிவுடனும் கோயிலை காண மிக்க மகிழ்ச்சி. தவிர, உங்களை நாங்கள் மிகவும் miss செய்கிறோம். குறிப்பாக லிட்டில் இந்தியா வருகையில்.
@ஜோதிஜி அவனுக சும்மா இருப்பாங்களா.. தமிழை எடுத்துட்டு இந்தி போட சொன்னாங்க!
அரசாங்கம் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தமிழர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியிலும், சிங்கப்பூர் சுதந்திரத்தின் போது ஏற்பட்ட இன்னல்களில் உறுதுணையாக இருந்தவர்கள்.
எனவே, தமிழை பிரிப்பதை பற்றி பேச்சே இல்லை என்று கூறி விட்டார்கள்.
@முத்து 🙂
@ப்ரியா அடேங்கப்பா! பெரிய ஆளா இருப்பீங்க போல இருக்கே! 🙂
நீங்க கூறியது பல தகவல்கள் சரி தான்.. ஆனால், “கடலூர்” விசயம் நான் கேள்விப்பட்டதில்லை.
தைப்பூச விடுமுறை வேண்டுகோள் உண்மை தான் ஆனால், அரசாங்கம் மறுத்து விட்டது.
ஒவ்வொரு மதத்துக்கும் இரு நாட்கள் விடுமுறை என்பதில் இந்து மதத்துக்கு தீபாவளி மற்றும் Buddha Purnima (Vesak day) இது புத்த பண்டிகையாக இருந்தாலும், சில இந்துக்களும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக இந்தியா, இலங்கை, திபெத், நேபாள்.
இதை இந்து பண்டிகையில் சேர்த்ததால், இரண்டு கணக்கு ஆகி விட்டது.
அரசாங்கம் தீபாவளி மற்றும் தைப்பூசத்துக்கு விடுமுறை விடலாம்.
@யாசின் அங்கே இருக்கும் போதே சிங்கப்பூர் வந்துட்டு போய்டுங்க.. ஊருக்கு எல்லாம் வந்தால், திரும்ப போவதென்பது சிரமமாகி விடும்.
@மகேஷ் 🙂 உண்மை தான்.