மணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல்

5
manirathnam-padaipugal-or-uraiyaadal மணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல்

ணிரத்னம் தன் படங்களின் கதாப்பாத்திரங்களைப் போலவே அதிகம் பேசாதவர். வாயே திறக்காத இவரையே பேச வைத்து ‘மணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல்’ என்று பேட்டி எடுத்துஉள்ளார், திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன்.

இதுவரை மணிரத்னம் குறித்து நாம் கேள்விப்பட்டு இராத தகவல்களை, அவர் படம் குறித்த தகவல்களை இந்தப் புத்தகம் தெரிந்து கொள்ள உதவியது.

நாம் ஊகத்திலோ அல்லது மற்றவர்கள் கூறியதை மட்டுமே நம்பி இருந்த தகவல்களை மணிரத்னம் அவர்கள் விளக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது.

நேரடி இயக்குநர்

உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம் மணிரத்னம் அவர்கள் உதவி இயக்குநராகப் பணி புரியாமல் நேரடியாகவே திரைப்படத்தை இயக்க வந்து விட்டார்.

இவருக்குத் திரைத் துறைக்கு வர வேண்டும் என்று சிறு வயதிலேயே ஆர்வமெல்லாம் இல்லை, ஒரு ரசிகனாகத் தான் இருந்து இருக்கிறார். MBA படித்து பாம்பேயில் பணியில் இருந்த இவர் இயக்குநரானது எதிர்பாராத நிகழ்வு.

பல போராட்டங்களைச் சந்தித்து, ஐந்தாவது படமான “மௌன ராகம்” தான் இவரின் முழுமையான சுதந்திரத்தில் எடுக்கப்பட்ட படமாக வந்து இருக்கிறது.

அதுவரை தயாரிப்பாளர்களின் நெருக்கடியால் சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்து இருக்கிறது. இது எந்த அறிமுக இயக்குநருக்கும் ஏற்படும் வழக்கமான பிரச்சனை தான்.

பரத்வாஜ் ரங்கன் என்ற திரைப்பட விமர்சகர்

புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பரத்வாஜ் ரங்கன் தான் பணி புரிந்த நிறுவனத்தில் கொடுத்த உற்சாகத்தால் இப்புத்தகத்தை எழுதி வெற்றியும் பெற்று இருக்கிறார். தான் அறிவுஜீவி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

விமர்சகர்கள் என்றாலே இல்லாத ஒன்றை தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு அதற்கு அர்த்தம் கற்பிப்பவர்கள்.

உண்மையில் ஒரு காட்சி சாதாரணமாக இருக்கும் ஆனால், விமர்சகர்கள் அதற்குப் பல அர்த்தம் கற்பித்து அது பற்றி விளக்கி கடுப்பைக் கிளப்புவார்கள்.

இதுவே புத்தகத்திலும் பிரதிபலிப்பதால் சில நேரங்களில் எரிச்சலே மேலிடுகிறது.

கமல் பட விமர்சனங்களில் கமல் மீது தீராப் பற்றுக் கொண்டுள்ளவர்கள் இந்தத் தவறை செய்வதைப் பார்க்கலாம். கமல் சாதாரணமாக ஒரு காட்சியை வைத்து இருக்கலாம் ஆனால், இவர்கள் அதற்கு ஆயிரம் காரணம் கற்பித்துச் சிலாகிப்பார்கள்.

இதே தவறை பரத்வாஜ் ரங்கனும் செய்து இருக்கிறார். ஒவ்வொரு விளக்கத்தின் போதும் மணிரத்னம் அதை மறுத்து நான் காட்சியை சாதாரணமாகத் தான் வைத்தேன், இப்படியெல்லாம் யோசித்து வைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

ஒரு விதத்தில் மணிரத்னம் அவர்களின் வெளிப்படைத் தன்மையைப் பாராட்ட வேண்டும்.

ஏனென்றால், நம் படத்தை ஒருவர் ஏதேதோ கற்பனை செய்து பாராட்டும் போது அதில் குளிர்ந்து “ஆமாம்!” என்று கூறாமல், நான் சாதாரணமாகத் தான் வைத்தேன் என்று கூற மனசு வேண்டும்.

அதே சமயம் 10 கல்லு விட்டால் ஒன்று அடிப்பது போலப் பரத்வாஜ் ரங்கன் கூறும் சில விளக்கங்களுக்கு அதைச் சரியென்றும் மணிரத்னம் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.

இது சாதாரண ரசிகனான எனக்குத் தெரியவில்லை ஆனால், விமர்சகரின் பார்வையில் அது தெரிந்து இருக்கிறது.

பல்லவி அனுபல்லவி (கன்னடம் 1983)

முதல் படமான “பல்லவி அனுபல்லவி”யில் வரும் துவக்கப்பாடல் இசை படம் வெளியாகி அடுத்த வருடம் தமிழில் வந்த “வாழ்க்கை” (1984) படத்தின் “மெல்ல மெல்ல என்னைத் தொட்டு” பாடலின் இசையாகும்.

இளையராஜா கன்னடப் படத்தில் போட்ட இசையைத் தமிழுக்குப் பயன்படுத்திக் கொண்டார் போல.

இந்தப் படத்தில் துவக்கத்தில் கன்னட இசையமைப்பாளரை ஏற்பாடு செய்து பின் அவர் சரிவராததால் இளையராஜாவை கேட்டு இருக்கிறார்.

அதோடு இளையராஜா பெறும் சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு தான் தர முடியும் என்று கூறியதற்கு இளையராஜாவும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

வியப்பாக இருந்தது. Passion என்ற ஒன்று இருந்தால் மட்டுமே இது சாத்தியம். யாரும் குறைந்த சம்பளத்திற்கு அதுவும் ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கு வர வாய்ப்பே இல்லை. இங்கு வந்தவர் தளபதி வரை மணிரத்னத்துடன் பயணித்து இருக்கிறார்.

உணரு (மலையாளம் 1984) / பகல் நிலவு (1985) / இதயகோயில் (1985)

மலையாளப் படமான “உணரு” எடுக்கும் போது தயாரிப்பாளர்களுக்கும் இவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு வந்து கொண்டே இருந்து இருக்கிறது.

பழமைவாதக் காட்சிகளை எடுக்க வேண்டி தன்னை நொந்து கொண்ட சம்பவங்களாக இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

“பகல் நிலவு” படத்தில் யாருக்குமே ஒப்பனை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடனம் அமைக்கும் போது நடன அமைப்பாளர்கள் காட்சியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் நடனம் அமைப்பதால், இதைச் சரி செய்யச் சிரமப்பட்டு இருக்கிறார். நீங்கள் பழைய படங்களில் கவனித்து இருக்கலாம், இன்னும் இது தொடர்வது சோகம்.

இதயகோயில் தனக்குப் பிடிக்காமலே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனக்குப் பிடித்த படங்களை எடுத்தவர்கள் தான் நிலைத்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பின் எடுத்தது தான் “மௌன ராகம்” என்று கூறி இருக்கிறார்.

கவுண்டமணி செந்தில் நகைச்சுவை இதில் கவனம் பெற்றது.

மௌன ராகம் (1986)

பலருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி மௌனராகம் படத்தில் முதலில் கார்த்திக் கதாப்பாத்திரமே இல்லையாம்.

இந்தப் படத்திற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்ததே இந்தக் கதாப்பாத்திரம் தான் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

“சந்திரமௌலி Mr சந்திரமௌலி!” எல்லாம் மறக்கக் கூடிய காட்சியா..!

ரேவதி திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு உறுதியான காரணத்திற்காகத் தான் கார்த்திக் கதாப்பாத்திரம் என்று கூறியிருக்கிறார்.

10 வருடங்கள் கழித்து எடுத்து இருந்தால், கார்த்திக் கதாப்பாத்திரத்தை நீக்கி இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

எழுத்தாளராகவோ ஃபிலிம் மேக்கராகவோ இருப்பதில் ஒரு வசதி நம்முடைய உண்மையான கதாப்பாத்திரத்தில் இருந்து மற்றவர்களாக வாழ்ந்து பார்க்கலாம் என்பது.

நாம் கெட்டவராக இருந்தால், நல்லவராக நம்மைக் கற்பனை செய்து நம்மை இன்னொருவர் மூலம் நடிக்க வைக்கலாம் என்கிறார். மறுக்க முடியாத உண்மை.

கதையை டெல்லி கொண்டு சென்றதற்குக் கூறிய காரணம் மிக நியாயமாக இருந்தது.

அதாவது கருத்து வேறுபாடால் ரேவதி எளிதில் திரும்பி வர முடியாத முடியாத இடமாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லியைத் தேர்ந்தெடுத்து உள்ளார்.

இளையராஜா பற்றிக் கூறும் போது நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும் இல்லையென்றால் அவர் உடனே இசையமைத்து கொடுத்து விடுவார், திரும்ப மாற்றுவது கடினம்.

நாம் எதிர்பார்ப்பதற்கு மேல் இசையைக் கொடுப்பார் என்று கூறியிருக்கிறார்

இளையராஜா பற்றி பல இடங்களில் ஏனோ தானோவென்று இல்லாமல் அவரைப் பற்றி / அவரது திறமை பற்றி மற்றவர்கள் கூறாத செய்திகளை சம்பவங்களை கவனித்துக் குறிப்பிட்டு இருக்கிறார்.

நாயகன் (1987)

பரத்வாஜ் ரங்கன் தீவிர கமல் ரசிகர் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், இந்தப் படம் குறித்து ஆர்வமாக வரிவரியாகக் கேட்டு இருக்கிறார் அதோடு மணிரத்னம் அவர்களுக்கே தெரியாத விஷயங்களுக்குக் கூட விளக்கம் கேட்டு இருக்கிறார்.

நாயகன் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் கமல் கேட்டுக்கொண்ட பிறகு திடீர் என்று உருவாகிய படம். மணிரத்னம் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று நாயகன்.

மணிரத்னம், தான் எதிர்பார்த்ததற்கு மேல் பன் மடங்கு  நடிப்பை கமல் வழங்கினார் என்றும் கமலால்  பெருமளவு அவருடைய சிரமம் குறைந்தது, அதோடு ஒப்பனையில் மிகப் பெரும் உதவி புரிந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எனக்குத் தனிப்பட்ட முறையில் கமலின் ஒப்பனை (வயதான கதாப்பாத்திரம்) பிரம்மிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. சொட்டை உருவாக்கி வாயில் எதையோ வைத்து முதுமையைக் கொண்டு வந்து இருப்பார்.

வயதானவராகக் காட்ட கமல் முதலில் தாடி வைக்கலாம் என்று கூறியதற்கு மணிரத்னம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் முடிந்த பிறகு முழுக்க மொட்டையைப் போட்டு நடித்த படம் தான் “சத்யா”.

புதுமுகம் தான் வேண்டும் என்று சரண்யாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார். பாலியல் விடுதிக்கு கமல் முதலில் செல்லும் போது அவரிடம் எந்தப் பதட்டமும் இருக்காது.

இது குறித்துப் பரத்வாஜ் ரங்கன் கேட்டதற்கு மணிரத்னம் கூறும் பதில் ஓரளவு ஏற்புடையதாகவே இருக்கிறது.

நாயகனை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு,

எந்தப் படத்தையும் அது வெளியான பிறகு நான் பார்த்ததே இல்லை. அவற்றைப் பார்த்தால் அதில் உள்ள குறைகளே என் கண்களுக்குத் தெரியும். எனவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னால் பார்க்க முடியாது!

என்று கூறி இருக்கிறார்.

உலகின் 100 சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக “நாயகன்” படத்தை “Time” செய்தி நிறுவனம் தேர்ந்தெடுத்தது நமக்கெல்லாம் பெருமையளிக்கும் செய்தி.

Bollywood is shorthand for Bombay Hollywood, seat of the largest Indian film industry. But it manufactures only about 200 of the thousand or so Indian feature films; a half-dozen regions boast production sites larger than most of the world’s national cinemas.

Madras, capital of the Tamil state, is one such place, and its leader — arguably India’s top pop-film auteur — is Mani Ratnam. – Time

நாயகன் படத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம், அத்தனை தகவல்கள் இருக்கிறது.

அக்னி நட்சத்திரம் (1988)

“மௌனராகம்’ நல்ல படம் என்றாலும் வசூல் ரீதியாக மணிரத்னம் அவர்களுக்குத் திருப்தி அளிக்காத படம். எனவே, விட்ட இடத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டதே அக்னி நட்சத்திரம்.

அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

மணிரத்னம் மெட்ராசை வைத்து கதை அமைத்து, இளைஞர்களுக்குப் பிடித்த காட்சிகளை வைத்ததால் தான் அப்போதைய இளைஞர்களின் விருப்ப இயக்குநராக மணிரத்னம் இருந்தார் என்று பரத்வாஜ் ரங்கன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் வரும் அமலாவையும் “இந்த ஒரு எலி இரண்டு எலி இருக்குல்ல.. அது மாதிரி அஞ்சலி” வசனத்தையும், பிரபு கார்த்திக் மோதலையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

தங்கமணி” வசனம் (மணி ரத்னம் நகைச்சுவை பகுதி இல்லையென்றாலும்) காலம் கடந்து நிற்கிறது 🙂 .

இறுதிக் காட்சியில் வரும் Flickering காட்சிகளை மாற்றியமைக்கவில்லை என்றால் படம் மிகப் பெரிய தோல்வியாகிவிடும் என்று இளையராஜா நண்பர் பந்தயம் கட்டியிருக்கிறார் 🙂 .

படம் வெற்றி என்றாலும் இந்தக் காட்சி படம் பார்த்தவர்கள் அனைவரையும் கடுப்படித்த காட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கீதாஞ்சலி (தெலுங்கு 1989) தமிழில் இதயத்தைத் திருடாதே

தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு முதலில் மணிரத்னம் கூறிய பெயர் “நின்னுக்கோரி” ஆனால், தயாரிப்பாளர் மற்றும் மற்ற கலைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இதைக் “கீதாஞ்சலி” என்று மாற்றி இருக்கிறார்.

தனக்குத் தெலுங்கு தெரியாததால் தெரிந்தவர்கள் உணர்ந்து கூறுவதை மறுக்க முடியாமல் அனைவர் விருப்பப்படி “கீதாஞ்சலி”க்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

படத்தில் வரும் பனி, கதைக்கு ஒரு சோகத்தைக் கவித்துவத்தைக் கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார் அது உண்மை என்று தான் நானும் கருதுகிறேன்.

துவக்கத்தில் மருத்துவமனையைக் காட்டி பின் சந்தோசத்தைக் காட்டியதின் மூலம் விபத்தின் தாக்கத்தைக் குறைத்ததாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது.

அஞ்சலி (1990)

“அஞ்சலி” படத்தின் பெயரை முன்னரே முடிவு செய்து வைத்து கதையையும் யோசித்து இருக்கிறார்.

குழந்தைகளை வைத்து எடுப்பது சந்தோசமாக இருந்தது அதோடு “ஷாமிலி” சிறப்பாக நடித்தார் என்று கூறி இருக்கிறார். Image Credit

இதற்காகச் சிறப்புக் குழந்தைகளைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.

முதலில் ரகுவரன் கதாப்பாத்திரத்தில் மோகனை நடிக்க வைக்க முயற்சித்துப் பின் ரகுவரன் மாறி இருக்கிறார்.

எனக்கு இன்னும் இருக்கும் வியப்பு, எப்படி இத்தனை குழந்தைகளை வைத்து அஞ்சலியை இயக்கினார் என்பது. தேசிய விருது பெற்ற ஷாமிலியின் நடிப்பு விருதுக்கு மிக மிகத் தகுதியானது.

இந்த வயதில் புரிந்து எப்படி நடித்தார் என்பது இன்னமும் என்னால் நம்ப முடியாத விசயம்.

இளையராஜா இசையில் அஞ்சலி 500 வது படம். நாயகன் 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி (1991)

தளபதி குறித்துப் பெரும்பாலும் தொழில்நுட்பத் தகவல்களே அதிகம் இருக்கின்றன. உணர்வுப்பூர்வமான காட்சிகள், தலைவர் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு.

நாயகனை எப்படி ஆர்வமாகக் கேட்டாரோ அதற்கு இந்தப் பகுதி எதிராக உள்ளது. கேள்விகளில் ஆர்வமே தெரியவில்லை.

மணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல் எனக்கு தலைவர் ரசிகனாக ஏமாற்றமாக இருந்தது. தளபதி பற்றி நான் தனி இடுகையாக அடுத்தது எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை : “தளபதி” நினைவுகள் [1991]

ரோஜா (1992) / திருடா திருடா (1993) / பம்பாய் (1995) / அலைபாயுதே (2000)

“ரோஜா” படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியில் கவனம் செலுத்தியதற்குச் சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லையென்று கூறி இருக்கிறார்.

படத்தின் பெயர் ‘ரோஜா’, தயாரிப்பாளர் பாலச்சந்தருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பின்னர் இதுவே தொடர்ந்தது.

இதில் இளையராஜா இல்லாமல் போனதற்கு எந்தக் காரணமும் இல்லை, ரகுமான் வரவு எதேச்சையானது என்கிறார், நம்பத்தான் முடியலை.

நான் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்த போது “ரோஜா” படத்தின் இசை மாணவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று இருந்தது.

விடுதியில் இந்தப் பாடல்கள் அடிக்கடி போடப்படும். பத்திரிக்கை விளம்பரங்களும் புதுமையாக இருந்தன.

“திருடா திருடா” இவர் ரசித்து இயக்கி இருந்தாலும் படம் சரிவர ஓடவில்லை என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

“பம்பாய்” படம் தணிக்கை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையும் அதிகாரிகளுடன் சம்பந்தமே இல்லாதவர்கள் அமர்ந்து பார்த்ததையும் கண்டு கடுப்பாகி இருக்கிறார்.

இவர் நிலையிலிருந்து பார்த்தால் நிச்சயம் உணர முடியும்.

மலையாளத்தில் எடுக்க நினைத்துப் பட்ஜெட் காரணமாகத் தமிழில் பம்பாயை எடுத்து இருக்கிறார்.

பல படங்கள் காதலர்கள் இணைவதையே காட்டி முடிக்கும் போது அவர்கள் திருமணம் செய்த பிறகு என்ன நடக்கிறது என்பதைக் காட்ட விரும்பி எடுத்தது தான் “அலைபாயுதே”.

மற்ற படங்கள்

மற்ற படங்கள் நான் அதிகம் ரசித்துப் பார்த்த படங்கள் அல்ல.

எனவே, அது குறித்துக் குறிப்புகள் எழுதவில்லை. அதோடு மற்ற படங்களைப் பற்றி முந்தையைப் படங்களில் பேசும் போதே ஆசிரியர் கேள்விகள் கேட்டு விட்டதால், பின்னர்ப் படிக்கச் சுவாரசியமில்லாமல் போனது.

பரத்வாஜ் ரங்கன் ஒரு படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று இன்னொரு படத்திற்குக் கேள்விகள் கேட்கிறார் இதனால் நாம் எந்தப் படத்தைப் பற்றிப் படித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற குழப்பம் ஏற்படுகிறது.

அதோடு ஒரு படத்தைப் பற்றிச் சுவாரசியமாகப் படித்து ஒரு மனநிலையில் பொருந்தி இருக்கும் போது இன்னொரு படம் இடையில் வருவதால், படிக்கும் ஃப்ளோ போய் விடுகிறது.

தமிழ் மீது மணிரத்னம் பற்றாக இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு குரு படம் தவிர வெளிநாட்டில் எந்தப் பாடலையும் காட்சியையும் படமாக்கியதில்லை. இதற்கு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மணிரத்னம் அவர்கள் பதில் அசத்தல் 🙂 .

கற்பனை வளம்

“பல்லவி அனுபல்லவி” படம் முடிந்ததும் தன்னுடைய யுக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி விட்டதாகவும் இனி என்ன செய்வது? என்று நினைத்து பயப்பட்டதாகவும் ஆனால், அது போல ஆகவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அசத்தலான கருத்து. இதை நான் பின்னர் விரிவாக எழுதுகிறேன். இது குறித்து எனக்கு இருந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்தது.

பிற்சேர்க்கை : Writer’s Block / கற்பனைத் திறன் / Passion

அனுபவப்பாடம்

மணிரத்னம் தான் செய்த தவறுகளை உணர்ந்து இருக்கிறார் அதேசமயம் கடல் போன்ற படங்களுக்குக் கொடுக்கும் விளக்கத்தைப் பார்த்தால், அவரின் தவறுகளை உணரவில்லையோ என்றும் நினைக்க வைக்கிறார்.

இது போல விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு இயக்குநராக அவரின் எண்ணங்களை அனுபவங்களைப் படிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. இவற்றை நமக்குத் தெரிந்து கொள்ளப் பரத்வாஜ் ரங்கனின் கேள்விகள் உதவி இருக்கிறது.

மணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல் கட்டுரையாக அல்லாமல் முழுக்கப் பேட்டியாக / உரையாடலாக உள்ளது.

மணிரத்னம் அவர்கள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்குப் பயனுள்ள புத்தகம். ஒரு மிகப்பெரிய இயக்குநரிடம் பொறுமையாக அவரிடம் இருந்து பதில்களைப் பெற்ற ஆசிரியர் பரத்வாஜ் ரங்கன் பாராட்டுக்குரியவர்!

புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.

அமேசானில் வாங்க –> மணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல் Link

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. நல்லதொரு விமர்சனம்

  தளபதி பற்றிய பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  ஏன் சிலர் / பலர் ரஜினி சாரை இந்த அளவிற்கு வெறுக்கிறார்கள்.

  மைதீன்

 2. இந்த பதிவு புதுமையான ஒன்றாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் இவரின் இயக்கத்தில் மௌன ராகம் மிகவும் பிடிக்கும். இசையில் ராஜா சார் பின்னி எடுத்து இருப்பார். குறிப்பாக பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும்..

  புத்தகத்தின் விலை ₹500. (புத்தகத்தின் விலை கொஞ்சம் கண்ண கட்டுது) பகிர்வுக்கு நன்றி கிரி.

 3. மணிரத்னம் சில நினைவுகள்:

  இதயக்கோயில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது எப்படி தோல்வி படமாச்சுன்னே புரியலை.

  மணிரத்னத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் அவரை தயாரிப்பாளர்களிடம் இளையராஜா சிபாரிசு செய்வதுண்டாம். அப்படி ஒரு சிபாரிசில் கிடைத்த வாய்புதான் இதயக்கோயில். அது தோல்வி படமாக ஆனதால் மேலும் ஒரு தயாரிப்பாளரை போய் பார்க்கும்படி கூறியுள்ளார். மணிரத்னம் எதுவும் கூறாமல் சரி போய் பார்க்கிறேன் என்று கூறினாராம். இளையராஜா பார்க்கும்படி கூறியது ஜி.வியை, இளையராஜாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? ஜி.வி தன் அண்ணன் என்பதை ஏன் என்னிடம் மறைத்தார் என்று ஆதங்கப்பட்டு இருந்தார். சைக்கலாஜிபடி பின்னாளில் எப்படி மணிரத்னத்துக்கு அப்படி ஒரு இசையை இளையராஜாவால் வழங்க முடிந்ததோ?

  “ராஜா ராணி“ “மௌனராகத்தின்” மாடர்ன் வடிவம் என்ற ரீதியில் விகடன் விமர்சனம் செய்து இருந்தது. மௌனராகமே “அந்த 7 நாட்களின்” படத்தின் தழுவல் [இரு மாற்றங்களுடன்] என்பதை விகடன் போன்ற அறிவுஜீவிகள் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் கூறியதுபோல் அறிவுஜீவிகளின் ஒப்பீடு ஏ சென்டர் ரேஞ்சில் அளவில்தான் இருக்கும் போல………. சொல்லப்போனால் பாக்யராஜிடம் ரைட்ஸ் வாங்கமல் ரீமேக் செய்யப்பட்ட படம்தான் ராஜா ராணி [ பாக்யராஜ்-ஜெய், ராஜேஷ்-ஆர்யா, அம்பிகா-நயன்தாரா, இறந்துபோன ராஜேஷின் மனைவி – நஸ்ரியா நசீம்]

  இளையராஜாவுக்கு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பாலசந்தருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பாலசந்தர் தயாரித்த ரோஜாவில் இளையராஜா இல்லை. இவர்கள் அனுகி அவர் மறுத்தாரா, இல்லை இவர்கள் அனுகவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் ரோஜாவில் ராஜா இல்லாமல் போனதற்கு காரணம் ராஜா பாலசந்தர் மோதலே!

  ரோஜாவுக்கு பிந்தைய மணிரத்னம் படத்தில் எனக்கு பிடித்தது “அலைபாயுதே” மட்டுமே………

 4. தல,
  பகிர்வுக்கு நன்றி. எனக்கு பல மணிரத்னம் படங்கள் பிடிக்கும்.. குறிப்பா தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், நாயகன், மௌன ராகம்

  – அருண் கோவிந்தன்

 5. @மைதீன் அதற்குக் காரணம் இவர் உயர உயர போவதால் ஏற்படும் பொறாமை.

  @யாசின் புத்தகத்தின் விலை அதிகம் என்று அனைவரும் கூறுவது சரி தான்.

  @காத்தவராயன்

  “சைக்கலாஜிபடி பின்னாளில் எப்படி மணிரத்னத்துக்கு அப்படி ஒரு இசையை இளையராஜாவால் வழங்க முடிந்ததோ?”

  உண்மை தான் 🙂

  இளையராஜா வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருந்தால் அவர் ஏற்பாடு செய்து தந்து இருப்பார் என்று மணிரத்னம் கூறியிருக்கிறார். எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்.

  @அருண் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here