சிங்கப்பூர் உணவகங்கள் – 2

3
Singapore Hotels சிங்கப்பூர் உணவகங்கள் - 2

சரவண பவன் No.8,Shenton Way, #B1-22, AXA Building, Singapore – 068811 (Tanjong Pagar)

சரவண பவன் கிளைகள் நிறைய இருந்தாலும் என் அலுவலகம் அருகே இருப்பதால் நான் அடிக்கடி செல்வது Tanjong Pagar கிளை தான்.

பொதுவாக ஒரே இடத்தில் சமையல் செய்யப்பட்டு அனைத்துக் கிளைகளுக்கும் அனுப்பப் படுகிறது.

எனவே சுவை ஒரே மாதிரி தான் என்றாலும் இங்கே மெது வடை ரொம்ப நன்றாக இருக்கும். இங்கே கண்ணன் என்பவர் தான் வடை செய்கிறார்.

லிட்டில் இந்தியா கிளையை விட இங்கே ரொம்ப நன்றாக இருக்கும். சாம்பாருக்கும் வடைக்கும் செம்ம பொருத்தம்.

இந்த அஜித் விஜய் ரசிகர்கள் வடை சுடுறது என்று இணையத்தில் கிண்டல் செய்து இப்ப எனக்கு வடை சுடுவது என்றாலே இவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள் 🙂 .

சகுந்தலா போலவே இங்கேயும் அனைவருமே மிக நட்பானவர்கள். குடும்பத்தில் ஒருவர் போலவே எனக்குத் தோன்றும்.

தமிழரசி அக்கா நன்கு பழக்கம். தொடர்ச்சியாக வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களை நன்றாகக் கவனிப்பதும் இவர்களின் சிறப்பு.

இங்கே காலை உணவில் பொங்கல், இட்லி, ஊத்தாப்பம், வடை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும். சாம்பார் சுவை ரொம்பப் பிடிக்கும்.

அடிக்கடி வந்தால் சாம்பார் சுமாராகவும் எப்பவாது வந்தால் சூப்பராகவும் இருக்கிறது 🙂 . காஃபி சுவை அசத்தல்.

பொதுவாகவே சரவணபவனில் விலை அதிகம். மதிய சாப்பாடுக்கு நான் மிகக் குறைவான நாட்களே சென்று இருக்கிறேன்.

இங்கே வந்தீங்க என்றால் கண்டிப்பா கண்ணன் சுடும் வடை சாப்பிட்டுப் பாருங்க.. தேங்காய் சட்னி / சாம்பாருடன்..!

இவர்களுடைய இன்னொரு கிளை லிட்டில் இந்தியாவில் எப்பாவது சாப்பிடுவேன் தவறாமல் குடிப்பது சாக்லேட் மில்க்க்ஷேக்.

விலை அதிகம் ஆனால், சுவை நன்றாக இருக்கும். இங்கே பணி புரிபவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாக இருக்கிறார்கள்.

இங்கே சூப்பர்வைசர் சுபாகர் சுறுசுறுப்பா பணி புரிவார். வருபவர்களை நன்கு கவனிப்பார். பழகுவதிலும் கவனிப்பதிலும் சூப்பர்வைசர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

கேஷியர் ஒருவர் இருக்கிறார். கேஷியர் (என்று சொல்லக் கூடாது) என்றாலும் இங்கே இவர் முக்கியமான நபர் என்று கூறினார்கள்.

இவர் ரொம்ப அமைதி, நன்றாகப் பழகுவார். அநாவசியமாகப் பேச மாட்டார்.  வாடிக்கையாளர்களிடம் மிக மரியாதையாக நடந்து கொள்வார்.

இவர் குறித்து Tanjong Pagar கிளையில் உள்ள தமிழரசி அக்காவிடம் கேட்ட போது புகழ்ந்து தள்ளிட்டாங்க. தம்பி தங்கக்கம்பி என்று கூறிட்டாங்க 🙂 .

பொதுவா மேலதிகாரிகளைத் திட்டிப் பேசுவதைத் தான் கேட்டு இருக்கிறேன் இங்கே தான் பாராட்டிப் பேசுறாங்க.

இவர் பெயர் கனகராஜ் என்று கூறி கடைசியா ஒண்ணு சொன்னாங்க.. நான் அப்படியே சாசாசாக் ஆயிட்டேன் 🙂 .

சரவணபவன் முதலாளியோட சித்தப்பா பையன் என்று கூறினாங்க. இவரைப் பார்த்தால் அப்படியே தெரியவே இல்லை.

ஏனென்றால் ஒன்னுமில்லாதவன் எல்லாம் இல்லாத பந்தா விடுறாங்க ஆனால், இவ்வளவு பெரிய ஆள் அடக்கமாக இருக்காரே! என்று என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியலை.

இவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் இவருடைய அமைதியான குணத்திற்காகவே.

Suntec City யில் உள்ள சரவணபவன் இரண்டு முறை சென்று இருக்கிறேன். இங்கே அதிகம் தெரியாது.

சரவண பவனுக்கும் எனக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. சென்னையில் இருந்த போது கண்ட உணவு விடுதியில் சாப்பிட்டு (சோடா காரணம்) வயிற்று வலி வந்து விட்டது.

அதன் பிறகு சரவண பவன் தான் என்னைக் காப்பாற்றியது 🙂 .

கடந்த முறை சென்னை சரவண பவனில் பொங்கல் கேட்டேன், சாம்பார் கொடுக்கும் கப் அளவில் கொடுத்தார்கள்.

இனி சென்னை வந்தால் பொங்கலை மோந்து தான் பாக்கணும் போல! 🙂 .

Komala Vilas 76 Serangoon Rd, Singapore 217981 (Little India)

சிங்கப்பூரில் உள்ள பழமையான உணவகங்களில் இதுவும் ஒன்று.

நான் இங்கே வார இறுதியில் மதிய உணவு மட்டும் எப்பவாவது சாப்பிட வருவேன். டிபன் எனக்கு இங்கே பிடிப்பதில்லை. காஃபி இங்கே நன்றாக இருக்கும், முயற்சித்துப் பாருங்கள்.

கீரைக் கூட்டு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. கொடுப்பது அளவுச் சாப்பாடு என்றாலும் கேட்டால் கூடுதலாகக் கொடுப்பார்கள்.

மதியம் தாமதமாகச் சென்றால் வடை இருக்காது… அப்புறம் “வட போச்சே!” தான் 🙂 .

கட்டணத்தைச் சீராக உயர்த்திக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு Buffalo (இங்கே ஃபில்டர் காஃபி நன்றாக இருக்கும்) மற்றும் Race course சாலையில் கிளைகள் உள்ளது என்றாலும் நான் அதிகம் சென்றதில்லை.

Muruga Vilas Dunlop street, near Komalas Vegetable store

இந்த உணவகத்தில் இட்லி கேட்டால் வித்யாசமாக நான்கு இட்லி கொடுப்பார்கள். நான் முதன் முறை சாப்பிடும் போது தோசையோ ஊத்தப்பமோ சாப்பிட்டு விட்டு இட்லி கூறினேன்.

இரண்டு வரும் என்று நினைத்தால் நான்கு வந்து விட்டது. கேட்டால்.. இங்கே அப்படித் தான் என்றார்.

நான் இரவில் மட்டுமே சாப்பிட்டு இருக்கிறேன், சூடாக இட்லி கிடைக்கும். இங்கே “கலக்கி” என்ற வித்யாசமான ஆம்லேட்டும் இல்லாமல் ஹாஃபாயிலும் இல்லாமல் உருண்டையாக ஒன்று கொடுப்பார்கள். ரொம்ப நன்றாக இருக்கும்.

கலக்கி என்று இருப்பதே இங்கே வந்த பிறகு தான் தெரியும். பின்னர்த் தான் தெரிந்தது எனக்குத் தான் இதுவரை தெரியல என்று.

பல உணவகங்களில் கேட்டால் கொடுக்கிறார்கள் ஆனால், இந்தச் சுவை இல்லை.

பெப்பர் சிக்கன், நெஞ்சு எலும்பு ரொம்பச் சுவையாக இருந்தது. இட்லிக்கு வைக்கும் சாம்பார் சட்னி இல்லாமல் பெப்பர் சிக்கன் இணைந்து சாப்பிட்டால் அசத்தல்.

இங்கே சென்றால் இட்லி [அவசரப்பட்டு வாயில போட்டுடாதீங்க கொதிக்கக் கொதிக்க இருக்கும் 🙂 ] பெப்பர் சிக்கன், நெஞ்சு எலும்பு குழம்பு (சூப்), கலக்கி இந்த நான்கும் முயற்சித்துப் பாருங்க.

கட்டணம் குறைவு தான். மதிய உணவு / சாப்பாடு நான் இங்கே முயற்சித்தது இல்லை. இங்கே உள்ள குறை வாடிக்கையாளர் கவனிப்பு ரொம்ப சுமார். எப்பவாவது போகலாம்.

Moghul Sweet Shop – 48 Serangoon Rd, Singapore 217959

வரிசை கட்டி இங்கே இனிப்பு வாங்க நிற்பார்கள். எப்பப் பார்த்தாலும் குறிப்பாக மாலை / இரவு நேரங்களில் கூட்டமாகவே இருக்கும்.

ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, விரைவிலேயே கொடுத்து விடுவார்கள். மிகப் பிரபலமான கடை. தெக்கா மால் எதிரேயே உள்ளது.

தம்பி கோகுல்.. இந்தப் பக்கம் வந்தால், பையன் உடனே குஜாலாகி “அண்ணா! வாங்க இங்க சாப்பிட்டுட்டு போலாம்!” என்பான்.

யோவ் வேண்டாம்யா! நேரமாச்சுன்னு கூட்டிட்டுப் போயிட்டேன்.. அவ்வளவு தான்.. நான் செத்தேன்.

ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடுங்கற மாதிரி என்னை அனத்தி எடுத்துடுவான்.

எங்க சாப்பிட்டாலும் “அண்ணா! ஃபினிஷிங் டச் கொடுப்போம்!” என்று இங்கே தள்ளிட்டு வந்துடுவான் 🙂 .

எனக்கு இனிப்பு பிடிக்காது என்பதால், ரசமலாய் மட்டும் எப்போதாவது சாப்பிடுவேன்.

இங்கே “லட்டு” சாப்பிடலைனா கோகுலுக்குக் கை நடுங்க ஆரம்பித்துடும் 😀 . அந்த அளவுக்கு அதி தீவிர ரசிகன். ரசிகர் மன்றம் ஏதாவது வைத்து இருக்கானா என்று தெரியலை.

அதனால் மக்களே! இதுவரை சென்றதில்லை என்றால் கோகுலுக்காகவாது போய் லட்டு சாப்பிடுங்க 🙂 .

அடுத்த பாகத்தோட முடிச்சுக்கிறேன் 🙂 . Image Credit – Google street view.

தொடர்புடையவை : சிங்கப்பூர் உணவகங்கள் – 3

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. சரவணபவன் ஹோட்டல இதுவரை எங்கும் சாப்பிட்டதில்லை, கால உள்ள வைக்க போறதுக்கு முன்பே நண்பர்கள் “மாமா” விலை அதிகம் வேணாமுன்னு வெளியில் தள்ளி கொண்டு வந்து விடுகிறார்கள். UAE ல நம்ம ஊர் ஹோட்டல் எல்லாமே விலை அதிகம் என்றே தோன்றுகிறது.

    சில நாட்கள் முன் நடந்த ஒரு சுவையான சம்பவம் : நண்பர்கள் 5 பேர் ஒரு சாதாரண ஹோட்டல்ல சாப்பிடலாம் என்று வெளியில் சென்ற போது, ஒருத்தன் சொன்னான் “மச்சி” போன மாசம் இந்த ஹோட்டல சாப்பிட்டேன் சுவை நன்றாக இருந்தது. சீப் & பெஸ்ட் என்றான். சரி என்று உள்ளே சென்றோம்.

    சர்வர் மெனு கார்டு கொடுக்கும் முன்பே ஸ்டார்ட்டர் ஆர்டர் செய்தோம். என் பங்குக்கு நண்டு சூப். சூப்பில் உப்பு, காரம், சூடு எதுவும் இல்லை. ஸ்டார்ட்டர் கூட மெனு கார்டு வந்தது பார்த்த உடனே, மெதுவா கஷ்டப்பட்டு உள்ள போகிகொண்டு இருந்த சூப் வெளியில் வர ஆரம்பிச்சிடுச்சி. விலை எல்லாம் தாறுமாறு.

    ஒவ்வோருதணும் ஒருத்தன் முஞ்சை மாறி மாறி பார்த்து வெறும் ஸ்டார்ட்டர்ரோட வெளியில் வந்தோம். எல்லோருக்கும் நல்ல பசி வேற… நண்பனிடம் என்னடா சீப்&பெஸ்ட் சொன்ன”னு கேட்ட அவன் ரொம்ப கூலா சாரி “மச்சான்” போன முறை வந்தப்ப காச கூட வந்தவன் கொடுத்ததால விலை தெரியல????? சரி நீ சொல்லு நண்டு சூப் எப்படி இருந்தது?????

  2. @கணேஷ் அப்படியா… எனக்குத் தான் தெரியல போல 🙂

    @யாசின் சரவண பவன் உணவு விலை ரொம்ப அதிகம்.. அதோட அங்கு கொடுக்கப்படும் உணவின் அளவும் ரொம்பக் குறைவு குறிப்பா சென்னையில்.

    “சாரி “மச்சான்” போன முறை வந்தப்ப காச கூட வந்தவன் கொடுத்ததால விலை தெரியல??”

    அங்கே வச்சாரு பாருங்க.. ட்விஸ்ட்ட 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!