“Mani Iyer Mess” Hindoo Rd (Little India)
என்னது சிங்கப்பூரில் மெஸ்ஸா?! என்று நீங்கள் ஆச்சர்யப்படுவது தெரிகிறது 🙂 . பெயர் தான் மெஸ் ஆனால், வழக்கமான உணவகம் போலத் தான் இருக்கும்.
இந்த உணவகம் மிகத் தாமதமாகத்தான் அறிமுகமானது. இங்கே சாப்பிட்டு வெறுத்தே போயிட்டேன். அட! இது தெரியாம பல நாள் எங்கெங்கோ சாப்பிட்டோமோ என்று 🙂 .
நம்ம வீட்டில் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது.
ஊருக்கு கிளம்புற நேரத்தில் இந்த உணவகம் அறிமுகம் ஆனதை நினைத்து உண்மையிலேயே கடுப்பாக இருந்தது. இதன் சுவைக்குக் கிட்டத்தட்ட அடிமை ஆகி விட்டேன்.
பெரும்பாலும் வார இறுதியில் இங்கே தான் சாப்பிடுவேன்.
நண்பர்கள் கூட என்ன கிரி… மணி ஐயர் மெஸ்ஸா இன்னைக்கு! என்று வார இறுதி நாட்களில் கேட்பார்கள். பொரியல் கூட்டு என்று அனைத்துமே அசத்தல்.
இதை எழுதும் போதே எனக்கு எச்சில் ஊறுகிறது 🙂 . ஊறுகாய் கூட அருமையாக இருக்கிறது.
கேசரி
இங்கே கேசரி சூடாக வைப்பார்கள். சுவை அட்டகாசம். அதோட பாயாசம் சுவையும் கலக்கலாக இருக்கும். இதில் ஒன்று இல்லையென்றாலும் நான் ஏமாற்றமாகி விடுவேன்.
இனிப்பே பிடிக்காத எனக்கு இங்கே கொடுக்கப்படும் கேசரி மீது அலாதிப் பிரியம்.
இதில் அறிந்து கொண்டது என்னவென்றால், சுவை நன்றாக இருந்தால் எதையும் சாப்பிடுகிறேன் என்பது தான்.
இங்கே எதையுமே தனித்துக் கூற முடியாது அனைத்துமே அசத்தலான சுவை தான்.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இவர்கள் சாப்பாட்டில் அல்லது மோரில் தூக்க மருந்து கலக்கிறார்களோ என்று 🙂 . சாப்பிட்ட பிறகு தூக்கம் வரும் பாருங்கள்… யப்பா.
நான் மற்ற உணவகத்தில் சாப்பிட்டால் இப்படித் தூக்கம் வருவதில்லை ஆனால், இங்கே சாப்பிட்டால் பயங்கரமா தூக்கம் வருகிறது. நான் சோதனை செய்து பார்த்துட்டேன் 🙂 .
கடைசியா மோர் குடித்த பிறகு பேருந்தில் அமர்ந்தால் கண்ணைக் கட்டி விடும்.
இங்கே பணி புரிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, கவனிப்பு படு மோசம்.
வடிவேல் ஒரு படத்தில் பேருந்தில் நடத்துநர் மீதி சில்லறை கொடுப்பாரா என்று அவர் நடக்கும் போதெல்லாம் பார்த்துட்டே இருப்பாரே அது போல இவர்கள் எப்போது சாப்பாடு கொண்டு வருவார்கள் என்று பரிதாபமா காத்துக்கொண்டு இருக்கணும்.
சுறுசுறுப்பு என்பது கிலோ என்ன விலை தான். பொறுமை இருந்தால் மட்டுமே இதை எல்லாம் சகிக்க முடியும்.
இவர்கள் உணவின் சுவை தாறுமாறு என்பதால் இதை எல்லாம் சகித்துக் கொள்கிறேன். இல்லையென்றால் இந்தப்பக்கமே வர மாட்டேன்.
இங்கே மதிய உணவின் சுவை தான் எனக்குப் பிடித்தது டிபன் பிடிக்கவில்லை. இங்கே மீல்ஸ் கட்டணம் வார இறுதி / பொது விடுமுறை நாட்களில் 7$ மற்ற நாட்களில் 6$.
“Ganga” Stanley street (Near Cecil street / Telok Ayer street)
எங்கள் அலுவலகம் அருகே இருப்பதால் மதியம் இங்கே அடிக்கடி சாப்பிடுவேன். சாப்பாடு, சிக்கன், மட்டன், உசிலிப் பொரியல், சிக்கன் தம் பிரியாணி போன்றவை நன்றாக இருக்கும்.
இங்கே பணிபுரியும் பலர் நன்றாகப் பணி புரிவார்கள் என்றாலும் பொன் பாண்டியன் என்பவர் நன்கு பழக்கம்.
நல்லா சாப்பிடுங்க நல்லா சாப்பிடுங்க என்று நிறைய வைத்து விடுவார். அப்புறம் நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு.. இப்ப குறைவா வைக்கிறார் 🙂 .
மோர் இங்கே நன்றாக இருக்கும். நான் எப்போதும் தனியாக 1$ கொடுத்து வாங்கிக் குடிப்பேன்.
இங்கே கேரளா ரைஸ் கிடக்கும், கேட்டால் மட்டும் கொடுப்பார்கள். இளையராஜா 1980 – 90 பாடல்கள் அடிக்கடி ஓடிக்கொண்டு இருப்பது சுகமான அனுபவம் 🙂 .
இவர்களுக்கு Lau Pa Sat ல் கிளை உள்ளது. நான் இங்கே காலை உணவு சாப்பிட்டதுண்டு ஆனால், மதிய உணவுக்குச் செல்வதில்லை.
“Amirtha” Veerasamy Rd (Little India)
கங்கா உணவு விடுதி அருகே இருந்த உணவகம். இந்தப் பகுதியில் பலருக்கு ரொம்பப் பிடித்த உணவகம்.
நம்ம வீட்டுச் சாப்பாடு போலவே இருக்கும், வாழை இலையில் வைத்துக் கொடுப்பதால் இதற்காகவே வருபவர்கள் இருக்கிறார்கள்.
அண்ணன் தம்பி இருவரும் இணைந்து நடத்துகிறார்கள். தோசை, கொத்து பரோட்டா, சிக்கன், மட்டன் என்று எல்லாமே நல்லா இருக்கும். சைவம் / அசைவம் இரண்டும் உள்ளது.
இவர்கள் கதை கொஞ்சம் சோகமானது. இவர்கள் இருந்த பகுதி Pub அதிகரித்து வந்ததால், இவர்கள் கடை கட்டிட முதலாளி காலி செய்யக் கூறி விட்டார், Pub க்கு அதிக வாடகை என்பதால்.
இதை நம்பி Lau Pa Sat ல் இருந்த கடையையும் வாடகை அதிகம் என்று கை விட்டு இருந்தார்கள்.
பல மாதங்கள் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை. நண்பர் சுரேஷ் லிட்டில் இந்தியா வீராசாமி சாலையில் கடை வைத்து இருக்கிறார்கள் என்று கூறியதை கேட்டுச் சென்றேன்.
அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்களை இழந்து விட்டதை கூறினார்.
எனக்கு இருவரில் அண்ணன் தான் நன்கு பழக்கம். ரொம்ப வருத்தப்பட்டார்.
இதைப் படிக்கும் Telok Ayer தெரு அமிர்தாவில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் வீராசாமி சாலையில் இருக்கும் அவரது கடைக்கு ஆதரவு கொடுங்கள்.
“Anjappar” Lau Pa Sat
அஞ்சப்பரில் (Lau Pa Sat) விலை அதிகம் என்று நான் இங்கே போவதே இல்லை. ஒரு நாள் நண்பன் இங்கே நன்றாக இருக்கும் என்று அழைத்துச் சென்றான்.
பின்னர்த் தான் பல நாள் தவறவிட்டது போலத் தோன்றியது.
இங்கே சிக்கன் பிரியாணி ரொம்ப நன்றாக இருக்கும். நான் அவ்வப்போது சாப்பிடுவதும் இது தான்.
சாப்பாடு, கல் தோசை, பரோட்டா, முட்டை தோசை (அளவில் பெரியது) போன்றவை நன்றாக இருக்கும் இருப்பினும் சிக்கன் பிரியாணி தான் எனக்கு ரொம்பப் பிடித்தது.
இங்கே ஒருத்தர் இருக்கிறார் அவர் பெயர் தெரியவில்லை இவர் தான் முக்கியமான நபராகத் தெரிகிறார். வாடிக்கையாளர்களிடம் நட்பாகவும் மிக மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்.
நான் சில முறையே சென்று இருக்கிறேன் ஆனால், நட்பாகி விட்டார்.
அது என்னமோ நான் எங்கே சென்றாலும் சில நாட்கள் பழக்கத்திலேயே கடையில் உள்ளவர்கள் நன்கு பழகி விடுகிறார்கள்.
இது எனக்கு மட்டும் நடக்குதா எல்லோருக்கும் நடக்குதா என்று தெரியலை 🙂 .
முடிவு
இதோட இத்தொடரை நிறைவு செய்கிறேன்.
என்னுடைய சமீப இடுகைகளில் பலரைச் சென்றடைந்த இடுகைகள் என்றால் இந்த உணவக அறிமுகம் தான்.
சாப்பாடு பற்றி நான் இதுவரை எழுதியதில்லை காரணம், நான் ரசித்துச் சாப்பிடுபவனல்ல (உண்மையிலே என்னை திருப்தி செய்தால் ஒழிய).
தற்போது தான் புரிகிறது ஏன் எல்லோரும் உணவு பற்றி எழுதுகிறார்கள் என்று. ஆயிரக்கணக்கானோர் கடந்த இரு உணவு இடுகைகளைப் படித்து இருக்கிறார்கள்.
உணவுக்குப் பலர் ரசிகர்கள் போல இருக்கு..! அதே போலப் புதிய உணவகங்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ம்ம் சென்னை வந்த பிறகு எழுதுகிறேன் 🙂 .
அப்புறம்.. நான் குறிப்பிட்டுள்ள உணவகங்கள் மட்டும் தான் நன்றாக இருக்கும் என்று அர்த்தமில்லை. இவை நான் அடிக்கடி செல்பவை என்பதால் குறிப்பிட்டேன்.
எனக்குத் தெரியாத பல நல்ல உணவகங்களைக் குறிப்பிடாமல் இருந்து இருக்கலாம்.
நான் வழக்கமாகச் செல்லும் உணவகங்கள் பலவற்றை எண்ணிக்கை காரணமாகக் குறிப்பிடமுடியவில்லை.
இத்தொடரை கொஞ்சம் முன்னாடியே எழுதி இருக்கணுமோ என்று தற்போது தோன்றுகிறது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு எழுதிய தொடர் வெற்றிகரமானது குறித்து எனக்கு மகிழ்ச்சி!
சில உணவகங்கள் உங்களுக்கு நிச்சயம் நல்ல அறிமுகமாகவும் சிங்கப்பூர் வர இருப்பவர்களுக்கு உபயோகமாகவும் இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
பலரிடையே கொண்டு சென்ற அனைவருக்கும் என் நன்றிகள் 🙂 .
தொடர்புடையவை : சிங்கப்பூர் உணவகங்கள் – 1
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வணக்கம் கிரி
நீண்ட நாள் கழித்து உங்கள் ப்ளாக் பக்கம்
ரொம்ப சந்தோஷம் உணவகங்கள் விபரம் கண்டு
படிக்குற அப்போவே இவரு நம்ம ஆளுயா என்று நினைக்க வைச்சுடுறீங்க.. அது தான் உங்க பலம்
வாழ்க வளமுடன்
அருண் பிரகாஷ்
சாந்தி விலாஸ் ( cuff road) – சைவம், நெய் தோசை மற்றும் சப்பாத்தி நல்லா இருக்கும். மிக சாதாரண உணவகம் விடுமுறை நாட்களில் சேவை சுமாராகத்தான் இருக்கும்.
நெடுதூர பயணம் என்றாலே அழையாத விருந்தாளி இளையராஜா சார். அதுவும் நல்ல சுவையான உணவு உண்ணும் போதும் போது அவரது பாடல்களை கேட்டுக்கொண்டே உண்பது பாக்கியம். கங்கா உணவகத்தில் இந்த வசதி இருப்பது சிறப்பான ஓன்று.
சிங்கப்பூரில் தமிழ் உணவகங்கள் பற்றி சுருக்கமாக, சுவையாக, அழகாக பதிவு கொடுத்தமைக்கு நன்றி. ஒவ்வொரு எழுத்திலும் சாப்பாட்டின் ருசி சொட்டுகிறது…
மூன்று பகுதியாக எழுதிய உணவகங்கள் பற்றிய தகவல் அருமை. தொடரட்டும் உங்கள் சேவை !
@அருண் வாங்க.. நீண்ட வருடங்களா நாட்களா 🙂
@செந்தில் முயற்சித்துப் பார்க்கிறேன்
@யாசின் & அசோக் நன்றி
நாட்டை விட்டு கிளம்பும் முன் சுவையான பதிவுகளை இட்டு உள்ளீர்கள்…. சாப்பாட்டை ரசித்து சாப்டாவிட்டலும் ரசித்து எழுதி உள்ளீர்கள்….
அருமை கிரி. நிறைய பேருக்கு இந்த பதிவு போய்கிட்டு இருக்கு. நன்றி.
இந்த “வடா தோசா” காரங்க கடை பக்கம் போறதே இல்லியோ 🙂
தல,
வழக்கப்படி கலக்கல் பதிவு
3 partum சூப்பர்
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க உங்க சிங்கப்பூர் பத்தின பதிவு மற்றும் பயண கட்டுரைய சேர்த்து ஒரு புக்கா போடலாம், நிச்சயம் எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்…யோசிச்சு பாருங்க இதை பத்தி..
மத்தபடி பதிவு கலக்கல் ரகம்
– அருண் கோவிந்தன்
வணக்கம் கிரி சார் , எனக்கு அங்கு விற்கும் காய்கறிகளின் விலைகள் சற்று தெரிய வேண்டும் . இந்திய விலையை விட சாதரணமாக எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும் ? தோராயமாக கூறினால் நன்றாக இருக்கும் ..
@பிரகாஷ் ரைட்டு 🙂
@அரிகரன் 🙂 🙂 இரண்டு கடைக்குப் போவேன். ஒரு கடைக்கு எப்போதாவது போவேன்.. இன்னொரு கடை முன்பு நன்றாக இருந்தது தற்போது சுமாராகி விட்டது.
@அருண் முயற்சிக்கிறேன்
@பாலன் நான் காய்கறிகள் வாங்கிப் பழக்கமில்லை. நண்பர்கள் யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்.
நல்ல தகவல். இது உபயோகப்படும் காலம் வரும் என நம்புகிறேன்.