அசுரன் திரைப்படத்தின் மூலக்கதை ‘வெக்கை’ நாவல்.
வெக்கை
இயக்குநர் வெற்றிமாறன், ‘வெக்கை நாவலைப் படித்தவர்களுக்கு ‘அசுரன்’ படம் பிடிக்காது‘ என்று கூறியதால், இந்த நாவலைப் படம் பார்த்த பிறகே படித்தேன்.
ஏனென்றால், ‘எரியும் பனிக்காடு‘ நாவலை முதலில் படித்து, பின் அதை இயக்குநர் பாலா ‘பரதேசி‘ என்று எடுத்துக் கொடுமை செய்து விட்டார்.
நாவலைச் சொதப்பியதும் அல்லாமல், அந்த நூலின் ஆசிரியரையும் பரதேசியில் கேவலப்படுத்தி விட்டார்.
எனவே, அசுரனை பார்த்த பிறகு வெக்கை நாவலைப் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
வெற்றிமாறன் கூறியதில் உண்மை இருக்கலாம் ஆனால், எனக்கு நாவலைவிடத் திரைப்படம் ரொம்பப் பிடித்தது.
இந்நாவல், சிதம்பரம் கொலை செய்து விட்டுத் தனது அப்பாவுடன் சில நாட்கள் பல இடங்களில் மறைவாகத் தங்கி பின்னர் சரணடையச் செல்வதாகக் கதை செல்கிறது.
கிளைக்கதைகள் அம்மக்களின் வாழ்வியல், எண்ணங்களை நம்மிடையே போகிற போக்கில் எளிமையாக, எந்தத்திணிப்பும் இல்லாமல் இயல்பாகக் கூறிச் செல்கிறது.
சட்டம் என்பது பொது தானே! தங்களுக்கு மட்டும் ஏன் வேறு மாதிரி உள்ளது? என்பது தான் நாவல் நெடுக வினவப்படுகிறது.
கொலை நடந்தது மட்டுமே மையக்கருத்து ஆனால், அதன் பிறகு இரு சமூகங்களுக்கு இடையே நடைபெறும் சண்டையைக்காட்டாமல் அவர்கள் எப்படிச் சில நாட்கள் மறைந்து இருந்து பின் சரணடைகிறார்கள் என்பது மட்டுமே நாவல்.
வன்முறையும் இயல்பானது
சிறுவன் செய்த கொலையைக் கூடப் பதட்டம் இல்லாமல், இயல்பாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் சமூகம் காயப்பட்டு இருக்கிறது.
நாவலில் திரைப்படம் போலத் திடீர் திருப்பங்களோ, வியப்புகளோ, சண்டைகளோ இல்லை.
கிளைக்கதைகள் பல இடங்களில் பிரிவதால், நாவலில் தற்போது யார் பேசுகிறார்கள், யார் காட்சியில் இருக்கிறார்கள், யார் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்ற குழப்பம் நாவல் நெடுக இருந்தது, கொஞ்சம் சலிப்பாகவும் இருந்தது.
‘Non Linear’ கதைபோல உள்ளது, பின்தொடரக் கடினமாக இருந்தது.
ஆசிரியர் பூமணி
நாவல் ஆசிரியர் பூமணி, அசுரன் திரைப்படத்தைப் பாராட்டி இருந்தாலும், எடுக்கப்பட்டதில் தனக்கு முழுத் திருப்தி இல்லையென்று கூறியதாக எதோ செய்தித்தாளில் படித்த நினைவு.
ஆசிரியரின் ஏமாற்றம் ஏற்கத்தக்கது ஏனென்றால், நாவலுக்கும் திரைப்படத்துக்கும் வேறுபாடுள்ளது.
தன் படைப்பு என்று கூறப்படும் திரைப்படம் தன் நாவல் போல இல்லாமல் வேறு மாதிரியாக எடுக்கப்பட்டு இருக்கும் போது இவ்வாறு தோன்றுவதில் வியப்பில்லை.
ஏனென்றால், எவருமே தன் எழுத்தை வேறொருவர் மாற்றி அதைத் தன் படைப்பாக வெளியுலகம் உணர்ந்தால், ஏற்க சிரமமே.
தான் சொல்லாத கருத்துகளும், காட்சிகளும் வந்து இருந்தால், அது எப்படித் தன் படைப்பாகக் கருத முடியும்.
எனவே, அவர் நினைத்தது இயல்பான ஒன்றே.
தவிர்க்கப்பட்ட ஆவணப்படம்
நாவலின் மையக்கருத்து, கதாப்பாத்திரங்கள் மற்றும் சில காட்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அசுரன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன் தரப்பில் இருந்து யோசித்தால், அவர் செய்தது சரி தான்.
ஏனென்றால், இந்நாவலை அப்படியே படமாக்கி இருந்தால், அசுரன் ஆவணப்படம் போல இருந்து இருக்கும், பலரை சென்றடைந்து இருக்காது.
ஒருவகையில் வெக்கை நாவல் அப்படியே எடுக்கப்படவில்லையென்றாலும், ஆசிரியர் கூற வந்த மையக் கருத்துச் சிதைக்கப்படாமல் அனைத்து மக்களிடையே சென்று சேர்ந்து இருக்கிறது, தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக ஆசிரியர் ‘பூமணி’ அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் வெக்கை நாவல், விற்பனையில் தற்போது பரபரப்பாக உள்ளது.
எனவே, அவர் கூற வந்து கருத்து பலரிடையே சென்று சேர ‘அசுரன்’ முக்கியக் காரணியாக இருந்துள்ளது.
1982 ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலுக்கு 2019 ல் மிகப்பெரிய வரவேற்பு என்றால், முழுக் காரணமும் ‘அசுரன்’ தான்.
ஆனால், 37 (2019*) வருடங்களைக் கடந்தும் நாவலில் வரும் காட்சிகள் இக்காலத்துக்கும் பொருந்துவது வருத்தமளிக்கிறது.
அமேசானில் வாங்க –> வெக்கை Link
தொடர்புடைய கட்டுரைகள்
எரியும் பனிக்காடு – உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு
பரதேசியும் எரியும் பனிக்காடும்
கொசுறு
அசுரன் திரைப்படம் வெளிவந்த வந்த சமயத்தில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் வரிசையில் முதலிடத்தில் ‘வெக்கை’ நாவல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெட்கை நாவலை படிக்கும் எண்ணம் இல்லை.. ஆனால் அசுரன் படம் இன்னும் சில தடவை கூட பார்க்க ஆர்வம் இருக்கிறது.. அசுரன் படத்தின் கதையில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை.. ஆனால் தனுஷின் நடிப்பு!!!! உண்மையில் மிரட்டல்!!! (தனுஷ் எனக்கு பிடிக்காத நடிகர்). சில துணைப்பாத்திரங்களின் தேர்வு எனக்கு விருப்பமாக இல்லை!!! குறிப்பாக பசுபதி.. எப்படிப்பட்ட நடிகர்.. இன்னும் அவரை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்த வில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு..
நான் படம் பார்த்த பரதேசியின் அனுபவம் வித்தியாசமானது.. எத்தனை பேர்க்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை.. பரதேசி இரவு 11 காட்சிக்கு சென்றேன்.. தியேட்டரில் நல்ல கூட்டம்.. டிக்கெட் எடுத்து உள்ளே சென்றேன்.. நேரம் செல்ல செல்ல ஒருவரும் உள்ளே வரவில்லை.. மேலாளர் மட்டும் வந்து, ஒரே ஒரு டிக்கெட் மட்டும் தான் விற்பனை ஆகி உள்ளது.. விருப்பம் இருப்பின் படம் பார்க்கலாம்.. இல்லை என்றால் பணம் பெற்று கொள்ளலாம் என்று கூறினார்..
பின்பு தான் தெரிந்தது, வந்த கூட்டம் பரதேசிக்கு இல்லை ஹிந்தி படத்துக்கும், மலையாள படத்துக்கும் என்று.. இரவு 11 மணி, பாலாவின் படம், வித்தியாசமான கதைக்களம்.. சொல்லவேண்டுமா என்ன???? படத்தை போடுங்க என்றேன்.. (மேலாளர் நினைத்து இருப்பார், இவன் அகராதியா இருப்பானோ என்று) முழு படத்தையும் மிகவும் ரசித்து பார்த்தேன்.. சில குறைகள் இருந்தது.. படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.. ஆனால் எனக்கு படம் படித்து இருந்தது.. இதுபோல மீண்டும் ஒரு அனுபவத்திற்காக காத்திருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
தனுஷ் ஏங்க உங்களுக்குப் பிடிக்கலை?! 🙂
நீங்க சொன்னபடி பசுபதியை எவரும் சரியாகச் சரியாகப்பயன்படுத்தவில்லை. வெயில் படத்தில் மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தினார்கள்.
எரியும்பனிக்காடு நாவல் படிக்காதவர்களுக்குப் பரதேசி ஒன்றும் தெரியாது இருப்பினும் படம் எனக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அசுரன் படத்தில் நடக்கும் கதைகள் எந்த பகுதியில் எடுக்கப்பட்டன ,வயதான தனுஷ் மற்றும் இளமை தனுஷ் வரும் கதையில் அந்த பகுதியில் ஆண்ட பரம்பரை என்பதுஎந்த இனத்தை குறிக்கும்,,,நாயக்கர்களையா ? மறவர்களையா? இவர்கள் இருவர் மட்டுமே இனத்தின் அடிப்படையில் தமிழ்நாடடை அதிகமாக ஆண்டவர்கள்,இதில் நாயக்கர்கள் தென் தமிழகத்தை முக்கல்வாசி ஆண்டவர்கள்,,அதனால் இன்றும் தமிழ்நாட்டில் நாயக்கனூர் என முடியும் பல ஊர்கள் மற்ற இனங்களில் மிக மிக சொற்ப அளவே ஊர்கள் உள்ளன,, ஏன் என்றால் தமிழ்நாட்டில் புதிதாக வரலாறு இல்லாதவர்கள் இல்லாம் ஆண்ட பரம்பரை என பேசி வருகின்றனர்,,ராஜராஜ சோழனுக்கே 8 சாதிகள் தமிழ் நாட்டில் உரிமை கோரிகின்றன இது நாட்டின் தமிழ்நாட்டின் நிலைமை