Blogger ஆக இருந்து Video Blogger ஆக மாறி இருக்கும் அதிரடிக்காரன் என்ற பெயரில் எழுதும் முத்து சிவா எழுதிய புத்தகம் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ்.
விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ்
சிறிய புத்தகம் தான், அலுவலகம் சென்று வரும் 40 நிமிட இரயில் பயணத்தில் முடித்து விட்டேன்.
காஷ்மீரில் இருந்து குல்மர்க் செல்லப் புதியதாக ஒரு சொகுசு இரயில் அறிமுகமாகி, பயணமாகிறது. செல்லும் வழியில் திடீர் என்று சத்தத்தில் ரயில் நிற்க, எல்லோரும் என்னவென்று பார்த்தால், இரயிலின் எஞ்சின் மட்டும் காணவில்லை.
அவ்வளவு பனி படர்ந்த, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் அதுவும் அவ்வளவு எடை கொண்ட எஞ்சின் மட்டும் எப்படிக் காணாமல் போக முடியும்? அதை எப்படித் தூக்கி செல்ல முடியும்? அப்படித் தூக்கி சென்றாலும் அதற்கான எந்த அடையாளமும் இல்லையே?!
இதை விசாரிக்க ஒரு குழு களத்தில் இறங்குகிறது. இறுதியில் என்ன ஆகிறது? என்பதே கதை.
சுவாரசியமான, பரபரப்பான கதையில் அமைந்துள்ளது. இக்கதைக்காக முத்து சிவா ‘Home Work’ ம் செய்துள்ளார்.
இரயில் சம்பந்தப்பட்ட நாம் கேள்விப்பட்டு இராத தகவல்கள் உள்ளது.
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை போல நாவல் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், கதை பரபரப்பாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
புத்தகத்தில் உள்ள எழுத்துப்பிழைகளும், ஆங்கிலக்கலப்பும் பலவீனமாக உள்ளது.
ஆங்கிலக் கலப்பு என்பது சுவாரசியத்துக்காகவும், மக்களின் தினப் பயன்பாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அந்நியமாகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தாலும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம்.
இதில் உள்ள அறிவியல் ரீதியான விளக்கங்கள் சிலருக்குப் புரியாமல் போகலாம் ஆனால், இவருடைய எளிமையான எழுத்து அதன் பாதிப்பைக் குறைக்கிறது.
முத்து சிவாவின் பலமே உரையாடல் போல உள்ள எழுத்துத் திறமை தான். அவர் எழுதியதை படித்தால், யாரோ சொல்வதைக் கேட்பது போலவே அவ்வளவு எளிமையாக இருக்கும்.
புரியாத வார்த்தைகளால் தன்னைப் புத்திசாலியாகக் காட்ட முயற்சிக்காமல், எளிமையான எழுத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுவார்.
சுவாரசியமான, திரில்லர், புலனாய்வு தொடர்பான புத்தகத்தை விரும்பும் அனைவருக்கும் இந்நாவலை பரிந்துரைக்கிறேன்.
அமேசானில் வாங்க –> விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸ் Link
கொசுறு
அமேசான் Kindle மிகப்பயனுள்ளதாகவும், என்னுடைய பயணத்தில் தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. பேட்டரி ரொம்ப நாள் வருகிறது. எனவே, பேட்டரி தீர்ந்து விடுவோமோ என்ற எண்ணமே இல்லாமல் பயன்படுத்த முடிகிறது.
நான் பார்ப்பதே, ‘என்ன.. இன்னும் பேட்டரி தீர்ந்து போகல, இன்னும் எவ்வளவு இருக்கு?!‘ ன்னு பார்க்கத்தான்.
‘அமேசான் ப்ரைம்’ பயனாளராக இருந்தால், இலவசமாகப் புத்தகங்கள் கிடைக்கிறது. இவற்றைப் படித்து முடிக்கவே எனக்கு நேரமில்லை. பயணிக்கும் நேரம் மட்டுமே படிக்கிறேன், வீட்டில் படிப்பதில்லை அல்லது படிக்க முடிவதில்லை.
நான் வாங்கிய பொருள்களில், எதிர்பார்த்ததுக்கு மேலே திருப்தி அடைந்தது மூன்று. ஒன்று டிவிஎஸ் ஜூபிடர், இரண்டாவது அமேசான் Kindle. இவை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன்.
மூன்றாவது ‘SONY Soundbar’. இது பற்றி நான் இன்னும் எழுதவில்லை. விரைவில் எழுதுகிறேன் 🙂 . வாங்கி ஒரு வருடமாகி விட்டது.
தொடர்புடைய கட்டுரைகள்