பொங்கல் பயணக் குறிப்புகள் 1 (2020)

0
Home Gobi பொங்கல் பண்டிகை

திட்டமிட்டபடி இந்த வருடமும் பொங்கல் பண்டிகை விடுமுறை சிறப்பாக முடிந்தது.

பொங்கலுடன் சேர்ந்து எங்கள் ஊர் பாரியூர் கொண்டத்து காளியம்மன் தேர் திருவிழாவும் வருவதால், எப்போதுமே பொங்கல் பண்டிகை சிறப்பானதாக இருக்கும்.

இந்த முறையும் பசங்களை அழைத்துச் சென்று விளையாடினோம். வருடாவருடம் ₹10 அதிகப்படுத்தி வருகிறார்கள் ஆனால், அப்போதும் கூட்டம் அதிகமாத்தான் இருந்தது.

என்னுடைய சிறு வயதில் இரவெல்லாம் நண்பர்களுடன் கோவிலிலேயே இருந்து, ஆர்கெஸ்ட்ரா கேட்டு விட்டுத் தான் வீடு செல்வேன்.

அப்போது ‘காலேஜ் பீடிகள்‘ நிறுவனம் தான் இசை நிகழ்ச்சியைப் பெரும்பாலும் (Sponsor) நடத்தும்.

கோபி

மின்சாரக் கேபிள், குழாய் பதிப்பதற்காகப் பல இடங்களில் கோபியைத் தோண்டி வைத்துள்ளார்கள்.

ஏற்கனவே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் சாலையின் அளவும் குறைந்ததால், வாகனம் ஓட்டுவதே பெரும்பாடாக உள்ளது.

நான் முதன்மை சாலையைத் தவிர்த்து மற்ற சாலைகளில் தான் வாகனம் ஒட்டிக்கொண்டு இருந்தேன். இதை எப்போது சரி செய்யப்போகிறார்களோ?!

உறவினர்கள் / பங்காளிகள்

அனைத்துப் பங்காளிகள் வீட்டுக்கும் சென்று இருந்தேன், ஓரிருவர் வீட்டில் இல்லை. அனைவருமே நாங்கள் வந்ததற்கு மகிழ்ச்சியடைந்தார்கள்.

அவ்வப்போது வந்து சென்றால் தான், உறவு விட்டுப்போகாமல் இருக்கும் என்று அறிவுறுத்தினார்கள்.

எல்லோருக்குமே அவர்கள் தலைமுறைக்குப் பிறகு இது போல சொந்தம் தொடருமா?! என்ற சந்தேகம், எனக்கும் உள்ளது.

ஏனென்றால், என் தலைமுறையில் என்னைப்போல வெகு சிலர் தான் நல்லது, கெட்டது, விழாக்கள், திருமண நிகழ்வுகள் என்று இன்னமும் தொடர்பில் உள்ளார்கள், கலந்து கொள்கிறார்கள்.

நானே கடந்த மூன்று வருடங்களாகத்தான் பின்பற்றி வருகிறேன்.

பலரும் வெளியூரில் இருப்பதால், விடுமுறையில் வரும் போது இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், என் தலைமுறை உறவினர்கள் அதாவது நான் செல்லும் பங்காளிகளின் பிள்ளைகள் பலரை நான் பார்த்ததே இல்லை.

இதனால் இவர்களுக்குப் பிறகு நாங்கள் அதே போலத் தொடர்வது சிரமம் என்றே கருதுகிறேன்.

சிலர் மட்டுமே இன்னமும் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறார்கள், பழகுகிறார்கள். இதனால் சிலர் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லை.

இந்த வருத்தம், ஆதங்கம் எல்லோரிடமும் உள்ளது, அவர்கள் பேசும் போது தெரிகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு உறவினர்கள் என்றாலே பிடிக்காது ஆனால், நேர்மறையாகச் சிந்திக்க ஆரம்பித்து, எதிர்பார்ப்புகளை நிறுத்தியவுடன் ஏன் எல்லோரையும் தவறாக நினைத்தோம்? கோபப்பட்டோம்? என்று வருத்தப்பட்டேன்.

ஒரு சித்தப்பா (பங்காளி) க்கு என் மீது எப்போதும் பிரியம், நான் பேசுவதை ரொம்ப ரசித்துக் கேட்பார், பாராட்டுவார்.

பொங்கலுக்கு வருகிறேன் என்று சொன்னதைக் காப்பாற்றிட்டே!‘ என்று கூறினார் 🙂 . வருடத்துக்கு ஒருமுறை செல்கிறேன்.

இதைப்படித்துக்கொண்டு இருக்கும் என்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு.. ‘ஏன் நம்ம வீட்டுக்கு வரலைன்னு!‘ யோசிக்காதீங்க.. உண்மையிலேயே நேரம் இல்லை 🙂 .

அனைவர் வீட்டுக்கும் செல்ல விருப்பம் தான் ஆனால், முடிவதில்லை.

அலங்கார மின் விளக்கு

பொங்கலுக்கு எங்களுடைய வீட்டில் மின் அலங்கார விளக்கு போடணும் என்பது என் விருப்பம்.

2018 ல் அப்பாக்கு உடல் நிலை சரியில்லை, 2018 இறுதியில் அப்பா காலமாகி விட்டார் அதனால், இவற்றை 2019 லும் போட முடியாத சூழ்நிலை.

இந்த வருடம் போட்டு விட்டேன், பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகக் கூறி நிரந்தரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள் 🙂 .

ஒரு பக்கம் மட்டும் வைத்துக்கொள்ளலாமா! என்று யோசித்துட்டு இருக்கேன்.

தொடர்புடைய கட்டுரை

திருமணமும் பங்காளிகளும்

https://www.facebook.com/giriblog

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here