பலரின் வியாபாரங்களைக் கொரோனா பாதித்துள்ளது. முன்னரே எதிர்பார்த்தது போல OMR உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. Image Credit
களையிழந்த OMR உணவகங்கள்
கொரோனா காரணமாக, ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன.
சில நிறுவனங்கள் ஊழியர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டாலும் பெரும்பான்மை நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிகிறார்கள்.
OMR வளர்ச்சியடைந்தது ஐடி நிறுவன ஊழியர்களை, அவர்கள் சார்ந்த காரணிகளை வைத்தே ஆகும்.
தற்போது பலர் வீட்டில் இருந்தே பணி புரிவதால், வழக்கமாக வரும் கூட்டம் இல்லாமல் பல உணவகங்கள் தவித்து வருகின்றன.
குறைந்து வரும் உணவகங்கள்
கூட்டம் இல்லையாததால், பல OMR உணவகங்கள் தங்கள் கிளையை மூடி வருகின்றன. ஒரே ஒரு உணவகத்தை வைத்து இருந்தவர்களும் சமாளிக்க முடியாததால், மூடி விட்டார்கள்.
சிறு உணவகங்கள் உட்படப் பிரபலமான உணவகங்கள் வரை இதில் தப்பவில்லை.
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் உணவகங்களில் கூட்டம் அதிகம் இருக்கும். பலர் வீட்டில் இருந்து உணவை எடுத்து வராமல், நண்பர்களுடன் செல்வார்கள்.
ஆனால், வெள்ளிக்கிழமை கூட்டமே வழக்கமான நாட்களின் கூட்டத்தை விடக் குறைவாக உள்ளது.
வழக்கமான நாட்களில் காலை, மதிய உணவு நேரங்களில் கொஞ்சம் தாமதமாகச் சென்றாலும், அமர இடம் கிடைக்காது.
தற்போது எப்போது சென்றாலும் நமக்கு முன்னே ஓரிரு நபர்கள் மட்டுமே அமர்ந்துள்ளனர்.
அனைவரும் வருமானம் பெற்று போட்டியுடன் இருப்பதைப் பார்த்து வந்த நமக்கு இப்படியொரு சூழ்நிலையில் உணவகங்களைப் பார்க்க வேதனையாக உள்ளது.
உணவகங்கள் என்றில்லை இனிப்பு கடைகளும் வழக்கமான கூட்டத்தை இழந்துள்ளன.
காப்பாற்றும் Swiggy Zomato
தற்போது நேரடி வாடிக்கையாளர்கள் குறைந்தாலும், Swiggy Zomato வழியாக உணவைப் பெறுபவர்களால் ஓரளவு வியாபாரம் நடைபெறுகிறது.
அதுவும் அனைத்து உணவகங்களுக்கும் கிடைக்கும் என்ற உறுதியில்லை.
அப்பகுதியில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்குச் சென்று விட்டதால், Swiggy Zomato வழியாகப் பெறுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
முன்பு மதிய நேரத்தில் சாப்பிட்ட பிறகு பணம் செலுத்த வந்தால், Swiggy Zomato நபர்கள் தான் வழியை அடைத்துக்கொண்டு நிற்பார்கள்.
நம்மை விட இவர்கள் எண்ணிக்கையே அதிகம் இருக்கும். தற்போதும் வருகிறார்கள் ஆனால், எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது.
திரும்பவும் கொரோனா
அனைத்தும் சரியாகி வரும் வேளையில் கொரோனா அதிகரித்து வருவது, திரும்பச் சில மாதங்களுக்கு வியாபாரங்களைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை உள்ளது. இதுவும் அது போன்ற பிரச்சனைகளுள் ஒன்றே!
எனவே, இன்னும் சில மாதங்களுக்கு ஏற்படும் நெருக்கடியைச் சமாளிப்பது கட்டாயம்.
என்ன தான் தற்போது கொரோனா அதிகரித்து வந்தாலும், முன்பு இருந்த மோசமான நிலைக்குச் செல்லாது என்ற நம்பிக்கையுள்ளது.
பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்
பலர் முகக்கவசம் அணியாமல் திரிவது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுபவர்கள், இன்னொருவரின் வருமானத்தைச் சேதமாக்க மறைமுகமாகத் துணை புரிகிறீர்கள்.
அலட்சியமாக இருப்பது உங்களை மட்டும் பாதிக்கவில்லை, உங்களுக்குச் சம்பந்தமே இல்லாத நபர்களையும் பொருளாதார ரீதியாகப் பாதிப்புள்ளாக்கிறது.
பயம், அலட்சியம் காரணமாக இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால், அத்தவறை தொடராதீர்கள்.
தடுப்பூசி போடுவது நம்மை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பை அளிக்கிறது.
நேர்மறை எண்ணங்களை வளர்ப்போம்
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக, வியாபாரம் செழித்து இருந்தாலே நாமும் நன்றாக இருப்போம்.
ஒவ்வொரு வியாபாரமும் ஒவ்வொன்றுடன் தொடர்பில் சங்கிலி பிணைப்பாக உள்ளது.
யாரோ ஒருவரின் இழப்பு கூட நம்மை மறைமுகமாகப் பாதிக்கும். எனவே, அனைவரும் நலம் பெற நினைப்போம்.
வாழ்க்கை என்பதே நம்பிக்கையில் ஓடுவது தானே! எனவே, இப்பிரச்சினைகள் சரியாகி அனைவரும் வழக்கமான நிலைக்கு வரப் பிரார்த்திப்போம்.
தொடர்புடைய கட்டுரைகள்
WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்!
உண்மைதான். Swiggy, Zomato_வை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருக்கின்றன பெங்களூரில் பல உணவகங்கள். ஓரிரு வருடங்களில் தொற்று குறைந்து நிலைமை சீராகும் என்றாலும் கூட பெரும்பாலான அலுவலகங்கள் இனி ஊழியர்களை இதே போல வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கும் எனத் தெரிகிறது.
ஒரு முறை பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்து அடுத்த அலை பரவாமல் பார்த்துக் கொள்வது மக்களின் கைகளில்தான் உள்ளது.
கிரி, கொரோனவினால் நிறைய துறைகள் பிரச்சனைகளை சந்தித்தாலும், சில துறைகள் அதிக அளவில் பிரச்சனைகளை எதிர் கொள்கிறது.. சில ஆண்டுகளுக்கு பின் நிலைமை சரியானாலும் அதற்குள் பல தொழில்கள் காணாமல் போகிவிடும்.. விட்ட தொழிலை 10 இல் ஒருவர் கூட திரும்ப தொடங்குவது சந்தேகம் தான்..
20 ஆண்டுகளுக்கு முன் என் மாமா சாதரணமாக நான் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலில் டீ குடிப்பதை பார்த்தால் கூட தனியாக கூப்பிட்டு அட்வைஸ் செய்து விட்டு போவார்.. வீட்டை விட்டு வெளியில் சாப்பிடுவதை அவ்வளவு கேவலமாக எண்ணுவார். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர் அவர் .. ஆனாலும் வீட்டை விட்டு வெளியில் எங்கும் சாப்பிட யாரையும் அனுமதிக்க மாட்டார் .. இன்றும் அப்படி தான்.. அவர் அப்போது சொல்லும் போது அலட்சியமாக இருக்கும்.. இங்கு நான் குடும்பத்தை அழைத்து வந்த பின் என் நிலை அவர் நிலை தான்.. அவர் அளவுக்கு கடுமையாக இல்லையென்றாலும் வெளியில் சாப்பிடுவதை நானும் விரும்பமாட்டேன்..
பயம், அலட்சியம் காரணமாக இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால், அத்தவறை தொடராதீர்கள்… தடுப்பூசி போடுவது நம்மை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பை அளிக்கிறது…கண்டிப்பாக கிரி.. இந்த வாரம் நான் தடுப்பூசி போட போகிறேன்.. நன்றி கிரி.
@ராமலஷ்மி பெங்களுருவில் பலர் WFH ல் தான் இருப்பார்கள் என்பதால், நீங்கள் கூறுவதற்கான வாய்ப்பு அதிகமே.
பொதுமக்கள் முகக்கவசமே அணிவதில்லை.. தற்போது பரவுவது கொரோனா தீவிரத்தால் அல்ல, மக்களின் அலட்சியத்தால் மட்டுமே!
@யாசின் பலர் தொழில் முடங்கியது உண்மை. பலரின் வாழ்க்கையில் கொரோனா விளையாடி விட்டது. வாழ்க்கை முறையையே மாற்றி விட்டது.
நான் என் வாழ்க்கையில் வெளியில் சாப்பிட்டதே அதிகம். மாணவர் விடுதி, சென்னை, சிங்கப்பூர் வாழ்க்கை என்று வெளியிலேயே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியதாகி விட்டது.
தடுப்பூசி அவசியம் போட்டுக்குங்க யாசின்.