WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்!

4
WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்!

WFH (Working From Home) என்ற தவிர்க்க முடியாத நிலை, பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலது நல்லதாகவும், சில மிக மோசமாகவும். WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்! பற்றிப் பார்ப்போம்.

கொரோனா பிரச்சனை காரணமாக, பல ஐடி நிறுவனங்கள் வேறு வழி இல்லாமல் WFH வசதியை ஊழியர்களுக்குக் கொடுத்தன.

சில நிறுவனங்கள் ஏற்கனவே கொடுத்து வந்தாலும், பெரியளவில் செயல்படுத்தவில்லை. Image Credit

WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்!

தற்போது WFH முறையில் 100% Productivity கிடைக்கவில்லை என்றாலும், 80% க்கும் மேலே கிடைத்து வருவதால், பெரிய அளவில் உற்பத்தி ரீதியான பிரச்சனையையோ இழப்பையோ ஐடி நிறுவனங்கள் சந்திக்கவில்லை.

உலக பொருளாதார மந்தநிலை காரணமாக, ஒப்பந்தம் ரத்தாவது, வருமானம் பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நடைமுறை பிரச்சனைகள் இருந்தாலும், ஊழியர்கள் உழைப்பில் பெரியளவில் மாற்றத்தைக் காணவில்லை.

WFH முறையால், நிறுவனங்களுக்கு மின்சாரம், House Keeping, Stationery, உணவு, தண்ணீர் (குடிப்பதற்கு / கழிவறைக்கு) ஆகியவற்றின் மீதான செலவு குறைப்பால் குறிப்பிடத்தக்க இலாபம் அடைந்துள்ளன.

இதே நிலை தொடர்ந்தால், பல கிளைகள் / அலுவலகங்களில் சிலவற்றைக் காலி செய்யவும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கட்டிட ஒப்பந்தங்கள்

தற்போது கட்டிடங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதால், பாதியில் வெளியேற முடியாது. எனவே, ஒப்பந்தம் முடிந்ததும் பல தளங்களை, அலுவலகக் கிளைகளை, கட்டிட ஒப்பந்தங்களை நீட்டிக்க மாட்டார்கள்.

நண்பன் பணி புரியும் நிறுவனத்தில் இரு கட்டிடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒன்றின் ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் முடிகிறது.

எனவே, கட்டிட ஒப்பந்தத்தை ரத்துச் செய்து ஊழியர்களை ஒரே கட்டிடத்துக்கு மாற்றப்போகிறார்கள்.

அதாவது 40% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணி புரிவார்கள், மீதி 60% WFH.

ஐடி நிறுவனங்கள் ருசி கண்ட பூனையாகி விட்டார்கள். எனவே, இனி வரும் காலங்களில் WFH பெரியளவில் செயல்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

செலவு குறைவு

ஊழியர்களுக்கும் சென்னையில் இருக்க வேண்டிய தேவையில்லை. அவர்களின் சொந்த ஊரில் இருந்து கொண்டே பணி புரியலாம்.

வாடகை & மற்ற செலவுகள் மிச்சம். கிட்டத்தட்ட ₹20,000 சம்பள உயர்வு போன்றது.

ஊரில் ஒரு செலவு, சென்னையில் ஒரு செலவு என்பவை மாறி ஒரே செலவாக மாற வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் குடும்பச் சச்சரவுகள் தனிப்பிரச்சனை.

ஒருவேளை சென்னையிலேயே தொடர வேண்டிய நிலை வந்தாலும், அதிக வாடகை கொடுத்து முக்கிய இடங்களில் இருப்பதற்குப் புறநகர் பகுதிகளில் வீடு மாறலாம்.

பணிக்கு எடுக்கும் போதே WFH

ஐடி நிறுவனங்கள் பணிக்கு ஆள் எடுக்கும் போதே WFH கேட்டு எடுக்கும் சூழ்நிலை வரும், பயிற்சியை முடித்து விட்டு, ஊருக்கே சென்று விடலாம்.

நிறுவனங்களும் கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நெல்லை, திருப்பூர் போன்ற நகரங்களில் சிறு அளவில் அலுவலகம் திறந்து, அவசரம் என்றால் அப்பகுதி ஊழியர்கள் வந்து செல்லலாம் என்ற அளவில் திட்டமிடலாம்.

3000 பேருக்கு ஒரு அலுவலகம் என்று பல அலுவலகங்களைச் சென்னையில் வைத்து இருப்பதற்கு, 50 பேர் இருக்கும்படியான சிறு அலுவலகங்களைச் சிறு நகரங்களில் திறப்பது செலவு பிடிக்கும் செயலல்ல.

இங்கே வருபவர்கள் தற்காலிக பணிக்காக, மடிக்கணினி மாற்ற / பெற வருபவர்களாகவே இருப்பார்கள். எனவே, பெரியளவில் வசதி வேண்டியதில்லை.

ஒருவேளை முதன்மை அலுவலகம் (Head Office) வர வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு Expense Claim செய்து கொள்ள அனுமதிப்பார்கள்.

மற்ற தொழில்களில் ஏற்படப்போகும் பாதிப்புகள்

WFH மாற்றங்களையொட்டி மற்ற தொழில்களிலும் பெரியளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐடி துறையென்றில்லை எத்துறையாக இருந்தாலும், மற்ற தொழில்கள் சங்கிலிப்பிணைப்பாக ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளன.

உணவகங்கள், பொழுதுபோக்கு / உடற்பயிற்சி கூடங்கள், வாடகை கார்கள், உணவு சார்ந்த கடைகள், பார்கள், பெட்டி கடைகள் என்று அப்பகுதி நிறுவனங்களின் ஊழியர்களைச் சார்ந்துள்ளன.

எடுத்துக்காட்டுக்கு, சென்னை OMR சாலையை எடுத்துக்கொண்டால், ஐடி துறையை மையமாக வைத்தே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது.

இங்கே ஊழியர்கள் வரத்து குறைந்தால், அது நிச்சயம் ஐடி ஊழியர்களை நம்பியுள்ள மேற்கூறிய அப்பகுதி தொழில்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்பகுதியில் பல கோடி முதலீட்டில் வீடுகள் / கடைகள் கட்டி வாடகைக்கு விட்டவர்கள், வாடகைக்கு ஆள் கிடைக்காத நிலை வரலாம்.

இவையெல்லாம் உத்தேசமான கணிப்புகள் மட்டுமே! அப்படியே நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இவையெல்லாம் ஒருவேளை நடந்தால், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டதே.

ஆனால், WFH கண்டிப்பாக அதிகரிக்கப்போகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

இவை எந்த அளவுக்கு மற்ற தொழில்களுடைய பாதிப்பின் மீதான சதவீதத்தைக் குறைக்கும் / கூட்டும் என்பதே தற்போதைய கேள்வி!

Read : சேமிப்பின் அவசியம் உணர்த்தும் கொரோனா

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, எப்படி இருக்கீங்க??? நடக்குற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, இயற்கை மனித தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு மெல்ல சிரிப்பது போல தோன்றுகிறது .. நம்முடைய தலைமுறைக்கே இந்த நிலையேன்றால் நமது சந்ததிகளை பற்றி யோசிக்க முடியவில்லை. உலகம் தோன்றிய போது காடு ,மலை ,அருவி என சொற்பமானது மட்டும் இருந்து இருக்கும் ..

    காற்றின் ஓசையையும் , அலையின் நடனத்தை தவிர இயற்கை எதையும் கேட்டு இருக்காது .. ஆதி மனிதனின் வாழ்க்கையில் நாகரீகம் இல்லையென்றாலும் மன நிறைவும் , மகிழ்ச்சியும் இருந்து இருக்கும் .. வளர்ச்சி வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை மெல்ல மெல்ல அழித்து மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்ததன் விளைவு தான் .. இன்று நாம் கண்முன்னால் காணும் நிகழ்வுகள் .. யாரை குறை சொல்வது .. ???

    தனி மனிதனின் சுயநலம் இன்று எல்லோருக்கும் பெருத்த சுமையை கொடுத்து விட்டது .. 90 வருடம் வரை வாழ்ந்த என் தாத்தாவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி தெரியவில்லை .. ஆனால் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்து இறந்தார் .. தனிமையில் யோசிக்கும் போது தான் புரிகிறது எவ்வளவு முட்டாள்தனமாக வாழ்ந்து கொண்டிருக்குகிறேன் என்று .. தகவலுக்கு நன்றி கிரி ..

  2. @மகேஷ் நன்றி 🙂

    @யாசின் ரொம்ப நல்லா இருக்கேன் 🙂 . இந்த வருடம் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டது. சில நல்லதாகவும், சில மோசமாகவும்.

    யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதால், யாருமே தயாராக இருக்கவில்லை.

  3. Reverse-urbanization னு சொல்லலாமா. யாரேனும் ஏதாச்சும் டேர்ம் உருவாக்கி இருக்காங்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here