ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியலும் பொது மக்களும்

18

ழ தமிழர்கள் பற்றிய பதிவு என்றாலே அது விடுதலை புலிகளுக்கு ஆதரவான பதிவு தான் என்று முடிவிற்கு வந்து விடுகிறார்கள்.

சாதாரணப் பொதுமக்களில் ஒருவனாக என் மனதில் தோன்றிய விஷயங்களே அல்லது கேள்விகளே இந்தப் பதிவு.

ஈழ தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் தாக்குதல்கள் பற்றி வரும் செய்திகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. Image Credit

மனிதாபிமானமுள்ளவர்கள் எவராலும் இந்தச் செய்திகளைத் தாங்கிக் கொள்ள முடியாது.

அதுவும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் சகிக்க முடியவில்லை.

பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டுத் தற்போது அந்த இடங்களிலே குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறது.

ஐ நா

இதை ஐ நா படங்களுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் தற்போது உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் மிகையல்ல.

இதில் குறிப்பாகத் தமிழகம் அல்லாத தமிழர்கள் வெளிநாடுகளில் நடத்திய போராட்டங்கள் பெரிய அளவில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நான் கூடக் கடைசி வரை உலகத்திற்கு ஈழ தமிழர்கள் படும் கஷ்டம் தெரியாமலே போய் விடுமோ என்று நினைத்தேன்… ஆனால் தெரிந்தும் யாரும் ஐ நா உட்பட எதுவும் செய்ய முடியவில்லை.

இங்கிலாந்தில் இருந்து வந்தெல்லாம் கோபமாகப் பேசிவிட்டு சென்று விட்டார்கள் ஆனால், யாருக்கும் போர்க்களத்தில் சென்று செய்தி சேகரிக்க அல்லது உண்மை அறிய அனுமதி கொடுக்கப்படவில்லை இலங்கை அரசால்.

இதில் இருந்தே இவர்கள் போரில் எந்தளவு நியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் உண்ணாவிரதம்

கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது தேர்தலுக்காக என்பது பலரின் கருத்து.

அவர் உண்ணாவிரதம் இருந்து, பிறகு சில மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது என்னால் நம்ப முடியவில்லை.

காரணம் இலங்கை அரசு கிட்டத்தட்ட விடுதலை புலிகள் வசம் இருந்த அனைத்து பகுதிகளையும் பிடித்து விட்டு இருந்தது.

மிஞ்சி உள்ள பகுதிகளையும் விரைவில் பிடித்து விடும் நிலையே அனைத்து ஊடங்களிலும் கூறப்பட்டு இருந்தது.

முடிந்து விடும் நிலையில் இருக்கும் போது மற்றும் கொஞ்சம் கூட மனித தன்மை இல்லாமல் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் போது கண்டிப்பாகப் போரை நிறுத்த விரும்பாது!

லாஜிக்காக யோசித்தால் எனக்கு இவ்வாறு தான் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் (மத்திய அரசு) சிதம்பரம் கூறியதாகக் கலைஞர் உண்ணாவிரதத்தைத் முடித்துக் கொண்டார்.

போர் நிறுத்தப்படவில்லை

போர் நிறுத்தப்படவில்லை விமானத்தாக்குதல் மற்றும் பீரங்கி குண்டுகள் வீசப்படுவது நிறுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதாகச் செய்திகளில் வந்தது.

சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை என்று கோத்தாபய ராஜபஷே என்று கூறி உள்ளார்.

ஆனால், போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இன்றும் தமிழக அரசு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது.

கலைஞர் மற்றும் காங்கிரஸ் அரசு சொல்வது படி போர் நிறுத்தம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு இருந்தால் எழும் பின்வரும் கேள்விகள் தவிர்க்க முடியாதது.

சில மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யக்கூடிய அளவிற்குக் கலைஞர் அவர்களுக்கு சக்தி இருக்குமானால் அதை ஏன் இத்தனை நாட்களாக (மாதங்களாக) செய்யவில்லை?

சில மணி நேரத்தில் போரை நிறுத்தக்கூடிய அளவிற்குக் காங்கிரஸ் அரசிற்கு இலங்கை அரசிடம் செல்வாக்கு அல்லது அதிகாரம் இருந்தால் இத்தனை நாள் கூறி வந்தது என்ன?

இப்போது மற்ற நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதைப் போல இல்லையா?

ஒரு சிலர் கலைஞரை மட்டுமே குறை கூறுகிறீர்களே அனைவரும், இது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு…

பொறுப்பில் இருப்பவரிடம் தானே தங்கள் கோபத்தைக் காட்ட முடியும்? கேள்வி கேட்க முடியும்?

அவர் தானே அதிகாரம் படைத்தவர், அவர் தானே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியும், அவரிடம் தானே மக்கள் கொடுத்த 40 MP க்கள் இருக்கிறார்கள்.

போரை நிறுத்தும் படி கேட்க கூட வேண்டாம் அது அயல் நாடு விவகாரமாக இருந்தால், ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அங்குத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அழுத்தமாகக் குரல் கூடக் கொடுக்கக் கூடாதா!

அது கூடவா முடியாது! தந்தி அடிக்கும் நேரம் இதுவா!

இவ்வாறு இருக்கும் போது மக்கள் யாரை அதிகம் கேள்வி கேட்பார்கள் கோபம் அடைவார்கள்?

ஜெ

இதே ஜெ முதல்வர் பதவியில் இருந்தாலும் இதைப் போல எதுவும் செய்யவில்லை என்றால் அனைவரும் ஜெ வை காய்ச்சி எடுத்து இருப்பார்கள் இப்போது கலைஞரை அனைவரும் திட்டுவது போல..

மக்களுக்கு, அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் மற்றும் கோபமே தவிர அது ஜெ வா இல்லை கலைஞரா என்பது பிரச்சனை இல்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்து ஐ டி துறையைக் கலைஞர் அரசுக்குப் பேசியபடி தராமல் காங்கிரஸ் அரசு இழுத்தடித்த போது கடுப்பான கலைஞர் மத்திய அரசை மிரட்டியதில் கால் பங்கு கூட ஈழ தமிழர்களுக்காக மிரட்ட வில்லையே!

அப்புறம் எப்படி மக்கள் கோபப்படாமல் இருப்பார்கள்? எப்படிக் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ஜெக்கு தேர்தலை முன்னிட்டு ஈழ தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்து விட்டது.

இத்தனை நாளாக எதிர்த்து விட்டுத் தற்போது ரவிசங்கர் ஈழ கொடுமைகளை வீடியோ வில் காட்டியதை பார்த்து இவர் மனம் மாறிவிட்டதாம்.

தனி ஈழம்

தனி ஈழம் அமைத்து தருவேன் இராணுவத்தின் துணையுடன் என்று அள்ளி விட்டுக்கொண்டு இருக்கிறார். இவர் தமிழ்நாட்டில் இதுவரை உருப்படியான திட்டத்தைக் கொண்டுவந்தது உண்டா!

இந்தியாவில் இருக்கும் மாநிலத்து தலைவர்களுடனும் சண்டை, இந்த லட்சணத்தில் இன்னொரு நாட்டில் காலம் காலமாக இருந்து வரும் தனி ஈழம் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறாராம்.

நாளையே தேர்தல் முடிந்தால் அது பற்றியே பேச மாட்டார்.

கலைஞரை விமர்சிப்பதால் அவர்கள் ஜெக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஆனால், பலர் கலைஞரை எதிர்த்தால் அவர்கள் ஜெ க்கு ஆதரவாளர் என்ற கோணத்திலேயே பேசி வருகிறார்கள்.

கலைஞர் ஜெ என்றில்லை வைகோ திருமா ராமதாஸ் விஜயகாந்த் என்று ஒருவருக்கும் ஈழ தமிழர்கள் மீது அக்கறை இல்லை.

MP பதவி

அனைவருக்கும் பெறப்போகும் MP பதவியின் மீது மட்டுமே குறி. அதன் மூலம் நாம் என்ன ஆதாயம் தேடலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது பற்றி மட்டுமே அதிக அக்கறை.

ஈழ தமிழர்களை வைத்து இன்னும் எத்தனை பேர் தேர்தலை ஓட்டுவார்களோ!

திமுக செய்வது சரி இல்லை அதற்காக அதிமுக விற்கும் ஒட்டு போடமுடியாது, காங்கிரஸையும் தோற்கடிக்க வேண்டும் அப்படி என்றால் யாருக்கு தான் ஒட்டு போடுவது? இதுவே பலரின் குழப்பம்.

ஈழ தமிழர்கள் ஆதரவு நிலை அல்லது மனிதாபிமான ஆதரவு நிலை

வட இந்தியாவில் உள்ளவர்கள் (ஊடகங்கள் உட்பட) ஈழ தமிழர்கள் பிரச்சனையில் அக்கறை காட்டுவதில்லை அவர்களுக்குத் தென் இந்தியாவைப் பற்றிய எந்தக் கவலையுமில்லை என்று கூறுகிறார்கள்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் தமிழகத்தைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழக மக்களிடையே ஈழ தமிழர்களுக்கு ஆதரவு பெருகி இருப்பது உண்மை தான், அதை மறுக்க முடியாது.

ஆனால், இவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத மக்களும் அல்லது இந்தப் பிரச்சனை பற்றித் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

நம்மவர்களிடையே இவ்வாறு இருக்கும் போது வட இந்தியர்களைக் கூறி என்ன பயன்?

ஈழ செய்திகள்

வலையுலகத்தில் உள்ளவர்களும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களும் மட்டுமே ஈழ செய்திகள் பலவற்றை அறிந்து வைத்துள்ளார்கள் விவாதித்துக்கொண்டுள்ளார்கள்.

இதில் எனக்கும் ஓரளவு ஒப்புதல் உண்டு, இதற்கான விடை தேர்தல் முடிவு ஒன்றே.

காங்கிரஸ்

இந்தத் தேர்தலில் ஈழ பிரச்சனை முக்கியப் பிரச்சனையாகக் கருதி காங்கிரசிற்கு மக்கள் ஓட்டளிக்கவில்லை என்றால் இணைய மக்கள் மற்றும் பொது மக்களின் எண்ணங்களும் இந்த விசயத்தில் ஒன்று தான் மற்றும் இந்தப் பிரச்சனைகளைப் பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று அறிந்து கொள்ளலாம்.

அவை அல்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்கள் ஈழ பிரச்சனை பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் ஓட்டுப்போடுவார்கள் அல்லது ஈழ பிரச்னையைத் தாங்கள் முக்கியமாகக் கருதவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸ் தமிழகத்தில் வெற்றி பெற்றால் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களைக் கேவலப்படுத்தியதை விட நம் மக்களே அதிகம் அசிங்கப்படுத்தியதை போலாகும்.

இதில் வருத்தமளிக்கும் விஷயம் ஈழ பிரச்சனைகள், அங்கு மக்கள் படும் துன்பங்கள் பற்றிப் பல மக்களுக்கு ஒன்றுமே தெரியாதது தான்.

இந்தத் தேர்தல் முடிவுகள் பல உண்மைகளை மக்களின் மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அது ஈழ தமிழர்கள் விசயத்தில் ஆதரவு அளிக்கும் விஷயமாகவும் இருக்கலாம் அல்லது பேசியவர்கள் அனைவரும் நொந்து நூடுல்ஸ் ஆகும் படியும் இருக்கலாம்.

நம்பிக்கை என்பது ஒரு பக்கம் என்றாலும் நிதர்சனம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..

இணைய அறிவாளிகள்

ஒரு பண்டிதர் ஆற்றைக் கடக்க வேண்டியது இருந்தது, அதற்கு அங்குள்ள படகுகாரரிடம் உதவியைக் கேட்டார், அதற்கு அவரும் இத்தனை கட்டணம் என்று கூறி அவரை ஏற்றி கொண்டு பயணப்பட்டார்.

படகு செல்லும் போது பண்டிதர் அந்தப் படகுகாரரிடம் உனக்கு அது தெரியுமா! இது தெரியுமா! என்று பல விசயங்களைக் கேட்டுக்கொண்டே வந்தார்.

படகுகாரரும் ஐயா! எனக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது நான் படிக்காதவன் என்று கூறினார்.

உடனே பண்டிதர் பலமாகச் சிரித்து விட்டு இந்த விஷயங்கள் அல்லது செய்திகள் கூடத் தெரியாமல் நீயெல்லாம் எப்படி வாழ்கிறாய் என்ற ஏளனமாகச் சிரித்துப் படகுகாரரை வரும் வழியெல்லாம் கிண்டலடித்துக்கொண்டே வந்தார்.

படகுகாரரும் அது பற்றிக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார்.

படகு நடு ஆற்றுக்கு வந்த போது அடித்த காற்றில் தடுமாறியது படகுகாரர் எவ்வளோ முயன்றும் படகை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

விரைவில் படகு கவிழ போகிறது என்பது அவருக்குத் தெரிந்து விட்டது.

உடனே அவர் பண்டிதரிடம் ஐயா! எனக்கு நீங்கள் கேட்ட எதுவும் தெரியாது என்றாலும் நீச்சல் நன்கு தெரியும் நான் தப்பித்துக்கொள்வேன் நீங்களும் குதியுங்கள் என்று கூறினார்..

பண்டிதர் கூறினாராம் ஐயையோ! எனக்கு நீச்சல் தெரியாதே எப்படித் தப்பிப்பேன் என்று அழுதாராம்.

கடைசியில் அவரின் நிலை என்ன ஆனது என்பது நமக்குத் தேவையில்லாத விஷயம்.

இதில் பண்டிதர் என்பவர் நமது வலைப்பதிவாளர்களையும் மற்றும் இணையம் அல்லாது அரசியல் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசும் படித்த மக்களையும் குறிக்கிறது.

படகுகாரரை நமது சாதாரணப் பொது ஜனமாக அல்லது படிக்காத மக்களாகக் கருதலாம்.

வாக்களிப்பது எத்தனை பேர்?

இங்கு வாய்கிழிய பேசும் எத்தனை பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது?

எத்தனை பேர் தவறாமல் ஒட்டு போடுகிறீர்கள்? போட்டு இருக்கிறீர்கள், மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்.

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதைப் போல நம்மவர்கள் கோபமும் அரசியல் வாக்குவாதமும் கணினி முன் உட்கார்ந்து இருக்கும் வரையே அல்லது நண்பர்களுடன் விவாதிக்கும் வரையே.

ஆனால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

யாருயா போய் வரிசையில் நிற்பது? வெயில் வேற ஓவரா இருக்கு அதற்கு பதிலா கொஞ்ச நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து இணையத்தையாவது மேயலாம்!

அப்புறம் என்ன பண்ணுவது உங்கள் கோபத்தை வைத்து?

அரசியல்வாதிகள் அது செய்துவிட்டார்கள் இப்படி ஏமாற்றி விட்டார்கள் அதைக் கொடுக்கவில்லை இதைக் கொடுக்கவில்லை என்று கூறுபவர்கள் தங்களது ஒட்டு போடும் கடமையைச் சரி வரச் செய்தது உண்டா?

இதில் இவர்கள் ஒட்டுப் போடாமல் இருந்து விட்டு இவர்கள் ஜெயித்து விட்டார்களே அவர்கள் தோற்று விட்டார்களே என்று புலம்புவதில் எந்த ஒரு பயனும், நியாயமும் இல்லை.

ஓட்டுப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற வழக்கமான கேள்வியைத் தயவு செய்து கேட்க வேண்டாம், அதற்கான விளக்கம் மேலே உள்ளது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

 1. மிக மிக அருமையான இடுகை. பாரபட்சமற்ற கருத்துக்கள்.

 2. //அவர் உண்ணாவிரதம் இருந்து, பிறகு சில மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது என்னால் நம்ப முடியவில்லை,//

  அதன்பிறகும் குண்டு போட்டு பலர் பலின்னு பேப்பர்லயும் தொலைக்காட்சியிலையும் பார்க்கும் போது என்னாலையும் தான் நம்ப முடியல!

  இவுங்க அரசியல் விளையாட்ல நாம எல்லாம் ஜோக்கர்ஸ்!

 3. தேர்தலுக்காக லீவு போட்டு இந்தியா வர்றேன்னு சொன்னா புரிஞ்சிக்கமாட்டோமா!

  வாங்க வாங்க!

 4. பதிவுலகின் பொதுவான மனநிலையை இடுகை பிரதிபலிக்கிறது.மக்கள் மனமும் இதுவாகவே இருக்கவேண்டும் என்பது போல் நினைக்கிறேன்.மே 16 உண்மைகளை சொல்லிவிடப் போகிறது.

 5. //கலைஞரை விமர்சிப்பதால் அவர்கள் ஜெ விற்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பலர் கலைஞரை எதிர்த்தால் அவர்கள் ஜெ க்கு ஆதரவாளர் என்ற கோணத்திலேயே பேசி வருகிறார்கள்.//

  வழி மொழிகிறேன்….

 6. ஒரு சிலர் ஈழ தமிழர்கள் பற்றிய பதிவு என்றாலே அது விடுதலை புலிகளுக்கு ஆதரவான பதிவு தான் என்று முடிவிற்கு வந்து விடுகிறார்கள்.

  THAT YOU ARE TRYING TO SAY, THE PERSON WHO HAS NAME LIKE THIS “RAJEEVGANDHI PIRIYANKA” PIRIYANKA IS DIFFRENT RAJEEVGANDHI IS DIFFRENT,THEY DON’T HAVE ANY CONNECTION BETWEEN THEM.LIKE THIS YOU TRY TO SAY LTTE IS DIFFRENT SRILANKAN TAMILS ARE DIFFRENT.Hahaha don’t paly man play!! we know what is the truth.
  Egg came first? or hen came first?

 7. I like piriyanka!! and her behaviour!!
  I realy like her interview which is shown in NDTV.But i don’t like her party which is belongs to her and her family.

 8. nalla pathivu giri.. honest ta intha rendu question ku answer pannunga
  1. Unga vottu yaaruka irukalam:)
  2. Yaar tamilnadu la majority seats jai panga nu ninai kureenga?

  Thanks,
  Arun

 9. தங்கள் கருத்துக்களோடு ஒத்து போகாதவர்கள் கூட உங்கள் தமிழோடு ஒத்து போவார்கள் கிரி !
  பதிவிற்கு நன்றிகள் !

  என்றும் அன்புடன்
  சிவாஜி

 10. #இங்கு வாய்கிழிய பேசும் எத்தனை பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, எத்தனை பேர் தவறாமல் ஒட்டு போடுகிறீர்கள்? போட்டு இருக்கிறீர்கள், மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்.#

  எத்தனைப் பேர் இந்தியாவை சேர்த்தவர்கள்

 11. Shivaji(formerly Shivaji Rao Admirer) on 5:33 PM, May 06, 2009 said…

  //தங்கள் கருத்துக்களோடு ஒத்து போகாதவர்கள் கூட உங்கள் தமிழோடு ஒத்து போவார்கள் கிரி !//

  இந்தக் கருத்தோடு நானும் 100 சதவிகிதம் ஒத்துப் போகிறேன்:)!

 12. ரொம்ப சரி. யாருக்குத் தான் ஓட்டுப் போடுவது என்ற கேள்விக்கான விடை இதோ:

  இந்த வேட்பாளர் எந்த வாக்குறுதியும் தருவதில்லை. அவர் ஆரம்பத்தில் சொன்னது தான் இப்பவும். இவர் பெருவாரியாக வாக்குகளைப் பெற்றால்தான் நமக்கெல்லாம் விடிவுகாலம். இல்லையெனில் தில்லு முல்லு கழகம், அகில இந்திய அதிக தில்லு முல்லு கழகம், தேமேன்னில்லாமல் முனகிக்கொண்டே திண்டாடும் கழகம், என இன்னும் பல குட்டைகள் வந்து கொள்ளையடித்துக் கொண்டே இருப்பார்கள். நாமும் ப்ளாக் எழுதி, கமெண்டுகள் போட்டு வேலை முடிந்ததென்று செட்டில் ஆகி விடுவோம்.

  அது சரி, அந்த வேட்பாளர் பெயரை சொல்ல மறந்து விட்டேனே? அவர் தான் 49 O.

 13. கலைஞர் ஜெ என்றில்லை வைகோ திருமா ராமதாஸ் விஜயகாந்த் என்று ஒருவருக்கும் ஈழ தமிழர்கள் மீது அக்கறை இல்லை, அனைவருக்கும் பெறப்போகும் MP பதவியின் மீது மட்டுமே குறி. அதன் மூலம் நாம் என்ன ஆதாயம் தேடலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது பற்றி மட்டுமே அதிக அக்கறை.//

  உண்மைதான் என்ன செய்ய????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here