மலேசியா லங்காவி பயணம் | பறவைகள் பூங்கா

17
பறவைகள் பூங்கா

ங்காவி பறவைகள் பூங்கா எனக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் அதற்கு காரணம் இருக்கிறது.

பறவைகள் பூங்கா

நான் இங்கே செல்கிறேன் என்று கூறிய போது அனைவரும் கேபிள் கார் போட்டிங் பற்றித் தான் அதிகம் கூறினார்களே தவிர யாரும் பறவைகள் பூங்கா பற்றிக் கூறவில்லை.

நாங்கள் போட்டிங் செல்ல ஒரு வாடகைக் காரில் சென்றோம் வண்டி ஓட்டிச்சென்றது ஒரு மலாய் முஸ்லிம் பெண் அவருடன் மலாய் தமிழ் இந்துப்பெண்.

இவர் நாங்கள் தமிழ் என்றதும் ரொம்ப மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் தான் பறவைகள் பூங்கா பற்றிக் கூறி இங்கே செல்லக் கூறினார்.

உண்மையில் பறவைகள் பூங்கா பற்றி நான் 20 % எதிர்பார்ப்புடனே சென்றேன்.

யாருமே இதைப் பற்றிக் கூறவில்லையே அதனால் இங்கே என்ன பெருசா இருந்து விடப்போகிறது என்று நினைத்தே சென்றேன் ஆனால், 100 மடங்கு வியப்புடன் சுற்றிப்பார்த்தேன்.

நிழற்படம்

நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகு உள்ளே நுழையும் முன்பே நம்மை அங்குள்ள கிளிகளை நம் கையில் நிற்க வைத்து படம் எடுக்கிறார்கள்.

கிளி எந்த வித பயமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறது.

இதை நாம் அனைத்தும் முடிந்து வெளியே வரும் போது பிரிண்ட் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள்.

நமக்குத் தேவை என்றால் வாங்கிக்கொள்ளலாம் இல்லை என்றால் வாங்கத் தேவையில்லை. நுழைவுச்சீட்டை விட இந்தப் படத்தின் விலை அதிகம் என்பது அதிர்ச்சியான ஒன்று.

நினைவாக இருக்கட்டும் என்று நாங்கள் ஒன்று வாங்கிக்கொண்டோம்.

படம் கொஞ்சம் பெரிது தான் என்றாலும் நம்ம பணத்தில் 600 ரூபாய்க்கு மேல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

உள்ள நுழையும் போதே அங்கே உள்ள பறவைகள் மற்றும் மற்ற விலங்குகளுக்கு கொடுக்க பணம் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அங்கே வருபவர்கள் பெரும்பாலனவர்கள் வாங்குகிறார்கள்.

எனவே, இதை நடத்துபவர்கள் பறவைகள் சாப்பாட்டிற்கு செலவே செய்ய வேண்டியதில்லை.

நம்ம கிட்டயே பணத்தை வாங்கி அவர்கள் பறவைகளுக்கு உணவு கொடுத்து விடுகிறார்கள். எப்படி ஐடியா! 🙂 .

பெரும்பாலான இடங்களில் நாம் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ சாப்பாட்டு பொருட்களைத் தரத் தடை இருக்கும், இங்கே அது இல்லை என்பது நல்ல விஷயம்.

பறவைகளுக்கு பழங்கள், கோழி போன்று இருக்கும் பறவைகளுக்கு ஏற்ற உணவுகள் என்று கலந்து கொடுக்கிறார்கள்.

கிளிகள்

ஏகப்பட்ட கிளிகள் இங்கே உள்ளது அது விசயமில்லை இவை எல்லாம் கூண்டில் இல்லாமல் திறந்த வெளியில் இருப்பது தான்.

கூண்டில் இருப்பது போலவே எங்கும் செல்லாமல் அதே இடத்திலேயே அமர்ந்து இருக்கின்றன.

எனக்கு ரொம்பப் பெரிய வியப்பு! எப்படி இவை பறந்து செல்லாமல் இங்கே இருக்கின்றன என்று.

ஒன்று இரண்டு கிளிகள் என்றால் கூடப் பரவாயில்லை ஏகப்பட்டது இது போல இருக்கு.

கிளிகள் மட்டுமல்ல பல்வேறு பறவைகள் இங்கே உள்ளது உடன் சிறு விலங்குகளும். ஒரு பெரிய இடத்தில் வலை போட்டு மூடப்பட்ட இடத்தில் லவ் பேர்ட்ஸ் ஏகப்பட்டவை உள்ளது.

நம் கையில் அதற்கான உணவை வைத்து நீட்டினால் ஒரு பத்து லவ் பேர்ட்ஸ் கிட்ட வந்து நம் கையில் உட்கார்ந்து அதில் உள்ளவற்றை சாப்பிடுகின்றன.

அம்மா இதில் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார். இங்கே தான் ரொம்ப நேரம் இருந்தோம்.

எங்களுடன் வந்த ஒரு ஜோடி, பறவைகளுக்கு உணவு வாங்கி வராமல் இருந்து விட்டார்கள். எனவே ரொம்ப ஏமாற்றமாகி விட்டார்கள்.

பிறகு கருணை உள்ளமான என் அம்மா 🙂 அவர்களுக்கு கொஞ்சம் உணவைக் கொடுத்துக் கொடுக்கக் கூறினார்கள்.

அவர்களுக்கு பரம சந்தோசம் முதலில் கூச்சப்பட்டாலும் பின்னர் எங்களிடம் கேட்டு வாங்கி கொஞ்சம் கொடுத்தார்கள்.

குழந்தைகள்

குழந்தைகள் மகிழ்ச்சியை பார்க்கவே நமக்கு பெரிய மகிழ்ச்சி. லவ் பேர்ட்ஸ் வந்து உட்கார்ந்தால் குழந்தைகளுக்கு ஒரே சிரிப்பு சந்தோசம் 🙂 .

ஈமூக்கோழி மாதிரி ஒன்று (ஈமூக்கோழி தான் என்று நினைக்கிறேன்) இருக்கிறது அடேங்கப்பா! என்னா உயரம்!! அதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இரண்டே எட்டில் வெகு சீக்கிரம் நம் இடம் வந்து விடுகிறது.

கழுத்து மட்டும் இரண்டடி இருக்கும் போல! இதைப் பார்த்தால் அருவருப்பு கலந்த ஒரு பயமாக இருக்கிறது. இங்கே உள்ளவர் சுத்தம் செய்து கொண்டே இருந்தார்.

தலையை டக் டக் என்று மேலும் கீழும் ஏற்றி இறக்கும் போது நமக்கு பார்க்க வித்யாசமாக இருக்கிறது.

மயில் / கோழி

இன்னொரு பகுதியில் மயில் இருக்கிறது. ஆண் இனத்தின் மானத்தைக் காப்பாற்றும் ஒரு பறவை 🙂 .

மயில்களில் ஆண் மயில் தான் அழகு என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஆண் மயில் தான் தோகை விரித்தாடும் நாங்கள் சென்ற போது வெள்ளை மயில் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.

நான் படம் எடுக்கச் சிரமப்பட்டது மயிலையும் கோழியையும் எடுக்கத்தான்.

படம் எடுக்கிற சமயத்தில் தலையை விசுக் விசுக்கென்று திருப்பி விடுவதால் மண்டை காய்ந்து விட்டது அப்படியும் ஒரு குத்து மதிப்பாக எடுத்தேன் 🙂 .

இங்கே செல்பவர்கள் மறக்காமல் பறவைகளுக்கு உணவு வாங்கிச்செல்லுங்கள். அடுத்த பதிவில் த்ரில் போட்டிங் பற்றி கூறுகிறேன்.

Read: மலேசியா லங்காவி பயணம் – த்ரில் போட்டிங்

Read: மலேசியா லங்காவி பயணம் – கேபிள் கார்

கொசுறு

நாங்கள் லங்காவியில் Bay View Hotel என்ற இடத்தில் தங்கி இருந்தோம். அங்கே எடுத்த படம் இது.

பொதுவாக என் படங்களையோ குடும்பத்தினர் படங்களையோ பகிர்வதில்லை (மகன் படம் தவிர்த்து).

ஒவ்வொருமுறையும் இது போலச் சந்தர்ப்பங்களில் நண்பர்கள் உங்கள் படத்தை ஏன் பகிரவில்லை என்று கேட்பார்கள். பகிரக் கூடாது என்று எந்த முன் முடிவும் இல்லை.

சரி! சந்தர்ப்பம் கிடைக்கும் போது அல்லது பகிரனும் என்று தோன்றும் போது செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

இந்த முறை விகடனிலும் வந்து விட்டதால் சரி பகிர்வோம் என்று என் அம்மாவுடன் இருப்பதை பகிர்கிறேன் 🙂 .

இந்தப்படத்தில் இருக்கும் இந்த அம்மா தான் இந்த அம்மா 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

17 COMMENTS

  1. பகிர்வுக்கு நன்றி கிரி.. இறைவனின் பார்வையில் பறவைகள் என்றுமே அழகுதான்!!!

  2. படத்தில் இருப்பது தாங்கள் தானா.. நம்பவே முடியவில்லை. நான் பாட்டுக்கு உங்கள் தமிழ் உரைநடைகளை பார்த்து எப்படியும் ஒரு 45 வயதிற்கு மேல் இருக்கும் இளைஞர் என்று நினைத்தேன். வாழ்த்துக்கள்.
    நீங்கள் கூறிய மாதிரி நானும் டிசம்பர் வாக்கில் ஒரு ஏர்செல் prepaid வாங்கி சவுதிக்கு கொண்டு வந்துள்ளேன் இன்றுவரை என் மனைவி அதில் sms மட்டும் அனுப்பி வருகிறார் மாதம் 10 ரூபாய்க்கு டாப் அப் செய்ததும் அதிலிருந்து ஒரு sms சும்மானாச்சிக்கும் அனுப்பி வைப்பேன். இருந்தாலும் நம்ம நாட்டு தொலைபேசி நிறுவனங்கள் போல உலகில் கேவலமான கொள்ளை அடிக்கும் நிறுவனங்கள் வேறெங்கும் இல்லை. நம்ம காசு போட்டு ரீசார்ஜ் செஞ்சா அதுல 3/4 பங்குதான் நமக்கு வருது.

  3. நாங்களும் இனிய அனுபவம் பெற்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. தொடருங்கள் சகோ!

  4. வணக்கம் தலைவா…!! நலமாக இருப்பீங்கன்னு நம்புறேன். வழக்கம் போல் தங்களது இன்றைய பதிவும் செம கலக்கல்..! அரிய புகைப்படங்களுடன் இயல்பான கட்டுரை அமைப்பும் கலக்கல். அனைத்து பதிவுகளையும் மின்னஞ்சலில் படித்து விடுவதால்… கருத்து பிறகு சொல்லலாம் என்று ஒவ்வொரு பதிவிலும் தள்ளிப் போய்விட்டது. இப்பவும் சொல்லலனா… அப்புறம் இதே போல ஒவ்வொரு பதிவிலும் சொல்ல இயலாமா போய்டும். விகடனில் தங்களது பதிவுகள் வந்ததில் எனக்கு ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் தங்களது பதிவுகளுக்கு எப்பவோ வந்திருக்க வேண்டும் இது ரொம்ப தாமதம்தான். இருந்தாலும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் தலைவா….!!! அப்புறம் தங்களது புகைப்படம் பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். எனது 4 வருட கற்பனை முகம் மறைந்தது. ஒரு சில சமயம் என் கனவில் கூட நீங்க புகைப்படம் போட்டிருப்பது போன்றும் அதை நான் பார்த்தது போன்றும் 1 வருடத்திற்கு முன்பு வந்தது. ஏனென்றால் தங்களை காண வேண்டும் எனும் ஆவல் என் மனதில் ஆவலாக இருந்தது….!! அது இன்று நிறைவேறியது. மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் தலைவா…!!! என்றும் தங்கள் வாசகனாய், தங்கள் எழுதித்தின் ரசிகனாய் பிரவின்குமார். காஞ்சிபுரம்.

  5. முதல் முறையாக உங்கள் படத்தை வெளியிட்டீர்கள், வாழ்த்துக்கள் கிரி, புகைப்படங்கள் அருமை

  6. அம்மாவுக்கு நமஸ்காரம் சொல்லிடுங்க
    செம ஸ்மார்ட் டா இருக்கீங்க தல ஒரு படத்துல நடிக்கலாமே .. நெஜமா ஒரு ஹீரோ மாதிரி இருக்கீங்க!! வீட்டுல சுத்தி போட சொல்லுங்க

    பதிவு ரொம்ப நல்லா இருக்குது தல

    – அருண்

  7. //தலையை விசுக் விசுக்கென்று திருப்பி விடுவதால் //

    பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள் விலங்குகள் அத்தனை எளிதில் போஸ் கொடுத்து விடாது:))! குத்து மதிப்பும் காத்திருப்பும் தேவையாகிறது. அழகான படங்கள்.

    சிங்கப்பூரிலும் கேபிள் காரில் ஏறியதும், செண்டோசா தீவுக்குள் என இப்படிதான் கேட்காமலே படமெடுத்து விடுவார்கள். நாம் இறங்கும் இடத்தில் அல்லது வெளிவரும் இடத்தில் மானிட்டரில் நாமே நம்மை வரவேற்போம்:)! ஆனா சொன்ன மாதிரி ஒரு படம் நம் பண மதிப்புக்கு ரூ.7௦௦ வரை ஆகிறது. வெகுசிலரே ப்ரிண்ட் கேட்டு வாங்கினார்கள். நைட் சஃபாரியில் மட்டும் இலவசமாக ப்ரிண்ட் போட்டு வைத்திருந்தார்கள் உள்ளே சுற்றி விட்டு வரும் முன்.

    நல்ல பகிர்வு. அம்மா நிச்சயம் பயணத்தை நன்கு ரசித்திருப்பார்கள்.

  8. Nice Photos giri, Nice write up.. Wildlife here also will be good will try to send you some snaps.
    Apparum, antha pose … Nalla Pulla Narayanan mathiri (Naan kooda appadithan)… Bhale ponga

  9. நண்பர் கிரி,
    சற்று வேலை மிகுதியால் சென்ற இரு வாரங்கலாக தங்கள் தளம் வர முடியாமல் போய்விட்டது. விகடன் வலையோசை பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய உயரம் நீங்கள் வருவீர்கள்.
    நான் பணிபுரிந்த நாடுகளில் சிங்கைக்கு அடுத்து என்னை மிகவும் கவர்ந்த நாடு மலேசியா, சில பிரச்சனைகள் இருந்தாலும், மிக அழகிய வனப்பு மற்றும் வளங்களை கொண்டது. கென்ட் மற்றும் பெனாங் பகுதியை ஒரு முறை சென்று பாருங்கள் கிரி.
    அதுவும் லங்காவி போல ஒரு பரவச நிலையை எனக்குள் உண்டாகியது. இயற்கை பிரியரான தங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    மற்றபடி தங்களை பற்றி என் மனதில் இருந்த உருவகத்தை அந்த ஒளிப்படம் சுக்கு நூறாக்கி விட்டது. எனது சகோதரனை ஒத்த உருவம் என்பதால் இன்னும் நெருக்கமாகிவிட்டது.
    அம்மா என்றாலே ஒரு சாந்தம் தான் கிரி, இருந்தாலும் ஒரு சிறு வேண்டுகோள் தங்கள் தந்தை படத்தையும் பதிவேற்றி இருக்கலாம்.

    அன்புடன்
    சிட்டிபாபு.

  10. படத்தில் இருப்பது தாங்கள் தானா.. நம்பவே முடியவில்லை. நான் பாட்டுக்கு உங்கள் தமிழ் உரைநடைகளை பார்த்து எப்படியும் ஒரு 45 வயதிற்கு மேல் இருக்கும் இளைஞர் என்று நினைத்தேன்//////

    அட …நான் கூட அப்படிதாங்க நெனச்சன் ….

    u looking so young anna

  11. ஹாய் கிரி,

    நீங்கள் எப்படி இருப்பீர்கள் என நானும் யோசித்ததுண்டு…ஆனால் இதைப்பற்றி கேட்க privacy இடம் கொடுக்கவில்லை….Looking trendy

    Shoe வும் top யும் ஒரே மாதிரி உள்ளது…refreshing

    முதல் முறை பார்ப்பதால் உங்களை பற்றி மட்டுமே comment

  12. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ராஜ்குமார் அது என்னங்க 45 வயது இளைஞர்!! 🙂 நன்றி

    @பிரவின் நன்றி கவுண்டர் கேட்குற மாதிரி உங்க கனாவுல நான் வந்தனா 🙂 உங்கள் பாராட்டிற்கு நன்றி.

    @அருண் இது உங்களுக்கே கொஞ்சம் (ரொம்ப) ஓவரா தெரியல 🙂

    @ராமலக்ஷ்மி உண்மை தான். என்னோட அம்மா இந்தப் பயணத்தை ரொம்ப ரசித்தார்கள்.

    @காமேஷ் நல்ல புள்ள நாராயணன் ஹி ஹி Enjoyed 🙂

    @சிட்டி பாபு நன்றி.. என்னுடைய அப்பா படம் மொத்தமாக படங்களை இணைப்பேன் அதில் வரும்.

    @ஆனந்த் ரைட்டு. நன்றி 🙂

    @சதா Shoe actualla Faded Black அதனால் பிரவுன் மாதிரி தெரியுது 🙂 Trend பற்றி பதிவு எழுதிட்டு நாம அப்படி இல்லேன்னா எப்படி 🙂 நன்றி

  13. நானும் உங்களை 45 வயசு இளைஞராதான் நினைச்சுட்டிருந்தேன்…

    இந்த வயசுல இவ்வளவு பொறுப்பான எழுத்து.. 🙂 வாழ்த்துக்கள்.

  14. பிறகு கருணை உள்ளமான என் அம்மா icon smile மலேசியா லங்காவி பயணம் பறவைகள் பூங்கா
    அவர்களுக்கு கொஞ்சம் உணவை கொடுத்து கொடுக்கக் கூறினார்கள். அவர்களுக்கு
    பரம சந்தோசம் முதலில் கூச்சப்பட்டாலும் பின்னர் எங்களிடம் கேட்டு வாங்கி
    கொஞ்சம் கொடுத்தார்கள். குழந்தைகள் சந்தோசத்தை பார்க்கவே நமக்கு பெரிய
    சந்தோசம். லவ் பேர்ட்ஸ் வந்து உட்கார்ந்தால் குழந்தைகளுக்கு ஒரே சிரிப்பு
    சந்தோசம் icon smile மலேசியா லங்காவி பயணம் பறவைகள் பூங்கா .

    ——————————————————————————————
    🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here