மலேசியா லங்காவி பயணம் | கேபிள் கார்

16
மலேசியா லங்காவி பயணம்

சிங்கப்பூர் வந்தால் அனைவரும் கண்டிப்பாகச் செல்வது மலேசியா காரணம் மிக அருகில் இருப்பதும் சிங்கப்பூர் போலவே வண்ணமயமாக மாடர்னாக இருப்பதும் ஒரு காரணம். அருகிலேயே மலேசியா லங்காவி.

மலேசியா லங்காவி

பெற்றோரை ஒரு மாதம் சிங்கப்பூர் அழைத்து இருந்தேன். சுற்றிப்பார்க்க மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவான லங்காவியை தேர்வு செய்தேன்.

புதிதாகத் திருமணம் ஆனவர்கள், வயதானவர்கள், அமைதியாக விடுமுறையை கழிக்க விரும்புகிறவர்கள் போன்றவர்களுக்குச் சிறந்த இடம் மலேசியா லங்காவி.

இங்கே  த்ரில் விளையாட்டுகளும் உண்டு.

இங்கே செல்லக் கப்பல் அல்லது விமானம் தான். மலேசியாவில் இருந்து கப்பல், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்றோம்.

விமான நிலையம் சிறியதாக அழாக அளவாகக் கட்டப்பட்டுள்ளது. பணிபுரிகிறவர்கள் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.

கஸ்டம்ஸ் முடிந்து வந்தால் வாடகைக்கார் போன்றவற்றை அங்கேயே முன்பதிவு செய்யலாம்.

மிக முக்கியமாக உங்களுக்குக் கார் ஓட்டத் தெரிந்தால் வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு நீங்களே தீவு முழுக்க சுற்றலாம் 🙂 .

இணையத்திலேயே ஹோட்டல் முன்பதிவு செய்து விட்டோம். நாங்கள் தங்கி இருந்தது Bay View என்ற ஹோட்டலில்.

லங்காவியில் 90 % மக்கள் முஸ்லிம்கள்

லங்காவியில் 90 % மக்கள் முஸ்லிம்கள் மீதி 10 % மற்ற மதத்தினர். முஸ்லிம்கள் அதிகம் இருந்தால் அசைவ உணவு விடுதிகளே அதிகம் இருந்தன.

பெற்றோர் சைவம். சைவ உணவு விடுதியைக் கண்டுபிடிக்க அந்த ஏரியாவையே சுற்றி விட்டோம் ஒன்று கூட இல்லை.

ஒரு கடையில் நூடுல்ஸ் போட்டுத் தரக்கூறி கேட்டு வாங்கினோம்.

நான் அசைவம் எனக்குப் பிரச்சனையில்லை, பெற்றோர் சைவம் என்பதால் சிக்கலாகி விட்டது. ஒரு வட இந்திய உணவகம் இருந்தது ஆனால், மதியம் இல்லை என்று கூறி விட்டார்கள்.

மலேசியாவில் இந்தப் பிரச்சனை இல்லை சைவ உணவு எளிதாகக் கிடைக்கும்.

நான் இங்கே சைவ உணவு கிடைக்க சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இந்த அளவிற்கு மோசமாக அல்ல.

ஒரு சில நண்பர்கள் தங்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை உணவகம் கிடைத்தது என்றார்கள்.

கேபிள் கார், போட்டிங் (Boat) மற்றும் பறவைகள் பூங்கா

லங்காவியில் அனைத்து இடங்களும் போக முடியவில்லை. கண்டிப்பாகப் போக வேண்டிய இடங்கள் கேபிள் கார், போட்டிங் (Boat) மற்றும் பறவைகள் பூங்கா.

ரொம்ப ரொம்ப அருமையான இடங்கள் இந்த மூன்றும்.

இங்கே சென்றால் இந்த மூன்று இடங்களும் செல்லாமல் போகவே கூடாது.

இந்தப்பதிவில் கேபிள் கார் பற்றிக் கூறுகிறேன் அடுத்த பதிவில் பறவைகள் பூங்கா மற்றும் போட்டிங் பற்றிக் கூறுகிறேன்.

படங்களால் பெரியதாகி விட்டால் மூன்றாவது பதிவில் மீதியைக் கூறுகிறேன்.

டாக்சி

இங்கே டாக்சி ஏமாற்றுவதில்லை (நான் இருந்த இரண்டு நாளில் உள்ள அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன்) ஒரே கட்டணத்தைத் தான் தான் கூறுகிறார்கள்.

ஏமாற்றி விடுவார்களோ என்ற தயக்கம் இருந்தாலும் பின்னர் சரியாகி விட்டது.

மலேசியா லங்காவி கேபிள் கார்

இது மிகப்பெரிய இடம் என்பதால் காரில் சென்றாலே நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கேபிள் கார் செல்ல 30 நிமிடம் மேல் ஆகியது.

இவ்வளவுக்கும் சாலையில் யாருமே இல்லை ஊரே காலியாக இருக்கிறது.

இதை விட உயரமான கேபிள் கார் இருக்க முடியுமா என்ற சந்தேகம் இங்கே செல்லும் எவருக்கும் வரும். உயரம் என்றால் உயரம் அப்படியொரு உயரம்.

எப்படி இவ்வளவு உயரத்தில் இதை அமைத்தார்கள் என்று வியப்பாக இருந்தது.

இதில் சென்றால் இரண்டு இடத்தில் இறங்கி நாம் சுற்றிப்பார்க்கலாம் அதாவது இரண்டு இடத்தில் நிறுத்தம் உள்ளது.

கேபிள் கார் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். எனவே, நாம் இறங்கி சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்ப அடுத்து வரும் கேபிள் காரில் ஏறிக்கொள்ளலாம்.

ஒரு நிறுத்தத்தில் தல பில்லா படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் வரும் தொங்கு பாலம் உள்ளது. நாங்கள் சென்ற போது பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்ததால் இதில் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை, ஏமாற்றம் தான்.

தொலைநோக்கி கருவி

இங்கே மிகப்பெரிய தொலைநோக்கி கருவி வைத்துள்ளார்கள் இதன் மூலம் மிகத் தூரமான பகுதிகளைக் காண முடிகிறது.

மிக உயரமான பகுதி என்பதால் ஊட்டி கொடைக்கானல் போல மேகங்கள் நம்மை மோதிச் செல்கிறது.

இந்த இடத்திற்கு வரும் போது கேபிள் காரில் இருந்து கீழே பார்த்தால் அடி வயிறு ஜிலீர் என்கிறது.

அறுந்து விழுந்தால் என்ன ஆகும் என்ற எண்ணமும் வந்து போகத் தவறவில்லை. விழுந்தால் ஒன்றும் மிஞ்சாது அம்மா தான் பயந்து விட்டார்கள்.

கேபிள்கார் மேலே செல்லும் போது எதிரே பார்த்தாலே தூரமும் ஆழமும் வயிற்றை புரட்டுகிறது இதனால் அம்மா மேலே பார்க்கவே மாட்டேன் என்று கூறி விட்டார்கள் 🙂 .

இன்னொரு நிறுத்தத்தில் ஒரு கடை உள்ளது. இங்கே காபி குளிர் பானங்கள் என்று அனைத்துமே கிடைக்கிறது.

கேபிள் கார் ஆடி வரும் போது வழக்கம் போலப் பொண்ணுக கீச் கீச்சுன்னு சத்தம் கெக்க பிக்கேன்னு ஒரே சிரிப்பு.

எந்த ஊராக இருந்தாலும் பொண்ணுக ஒரே மாதிரி தான் போல 😉 .

காதல் சின்னம்!!

இங்கே ஒரு இடத்தில் நம்ம ஊரைப்போலப் பலர் தங்கள் தங்கள் காதலன் / காதலி பெயரைப் பொறித்து தங்கள் கடமையை ஆற்றி வைத்து இருந்தார்கள் பெரும்பாலும் மலாய் சீன பெயர்கள் தான் இருந்தன.

தமிழ் பெயர் உள்ளதா என்று பார்த்தேன் நம்ம மக்கள் பெயரும் இருந்தது [அதானே! 🙂 ] எங்கே சென்றாலும் மேன் மக்கள் மேன் மக்களே 🙂 .

இங்கே மேலே கீழே படிக்கட்டில் நடந்ததில் என் அம்மா அப்பா ஓய்ந்து விட்டார்கள் எனவே ஹோட்டலுக்கு மாலை திரும்பி விட்டோம். 

மதியமே ஒழுங்கா சாப்பிடாததால் ரொம்ப களைப்படைந்து இருந்தார்கள்.

நான் அந்த ஏரியா முழுக்க சல்லடை போட்டுத் தேடி கஷ்டப்பட்டு ஒரு Sweet Bread வாங்கி அப்பாவிற்கு கொடுத்து வந்தேன்.

எனக்கு இதே போதும் நீங்க போய்ச் சாப்பிட்டு வந்துடுங்க என்று கூறி விட்டார்.

அம்மாவிற்கோ ரொம்ப பசி.. என்னடா பண்ணுறது என்று மண்டை காய்ந்து விட்டது.

வட இந்திய உணவகம்

சரி Pizza வாவது சாப்பிடலாம் என்று சென்றால் தெய்வம் மாதிரி நம்ம வட இந்திய உணவகம் திறந்து இருந்தார்கள்.

இந்த உணவகம் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே உள்ளது ஆனால், திங்கள் செவ்வாய் மதியம் இல்லையாம், இரவில் மட்டும் தான் திறந்து இருக்குமாம்.

எங்க கிரகம் நாங்க போனது இந்த இரண்டு நாட்கள் தான் 🙁

உள்ளே சென்றால் எல்லாம் நம்ம ஐட்டம். நான், சப்பாத்தி என்று வழக்கமான உணவுகள். அம்மாவை அப்போது தான் நிம்மதியாகப் பார்த்தேன்.

அங்கே பரிமாறியவர்களும் ரொம்ப நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள்.

நாங்க “சென்னா நான்” ஆர்டர் செய்தோம் செமையாக இருந்தது. நான் ஒரு டைகர் பீர் 🙂 .

ஒரு வாட்டர் பாட்டில் கூறி அதைத் திறக்க அங்கே இருந்தவரை அழைத்து என் அம்மா தமிழில் கூறியவுடன் அவர் விழித்தார் காரணம் அவர் ஹிந்தி வாலா 🙂 .

குச் குச் கோத்தா ஹை

அப்புறம் அம்மா கிட்ட ‘அம்மா! அவர் குச் குச் கோத்தா ஹை அவருக்குத் தமிழ் தெரியாது‘ என்று கூறி அவரிடம் ஆங்கிலத்தில் கூறி திறக்க வைத்தேன் 🙂 .

ஒழுங்கா சாப்பிட்டதும் தான் அம்மாவுக்குப் பேச்சே வந்தது.

மலேசியா லங்காவி கேபிள் கார் கட்டுரையைத் தொடர்ந்து அடுத்த பதிவுகளில் போட்டிங் மற்றும் பறவைகள் பூங்கா பற்றிக் கூறுகிறேன்.

Read: மலேசியா லங்காவி பயணம் – பறவைகள் பூங்கா

Read: மலேசியா லங்காவி பயணம் – த்ரில் போட்டிங்

கொசுறு 

லங்காவி விமான நிலையத்தில் கோவை விமான நிலையம் மாதிரி விமானத்தில் இறங்கி நடந்து தான் வரணும் நேரடியாக விமான நிலையத்தினுள் வருகிற வசதி இல்லை.

விமானத்தில் இருந்து இறங்கி வெயிலில் சிகப்பு வண்ண (Air Asia) விமானத்தைப் பார்த்ததும் ஒரு ஹாலிவுட் படத்துல இருக்கிற ஃபீல் வந்தது 🙂

கேமராவை உள்ளே வைத்து இருந்ததால், படம் எடுக்க முடியவில்லை.

பரந்த நிலப்பரப்பு சுற்றியும் மரங்கள் சூழ்ந்த மலைகள் அங்கே இந்த விமானநிலையம் அதில் இப்படியொரு சிகப்பு வண்ண விமானம் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. //ஒரு நிறுத்தத்தில் தான் தல பில்லா படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் வரும் தொங்கு பாலம் உள்ளது. நாங்கள் சென்ற போது பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்ததால் இதில் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை. எனக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான்.//

    அடக் கொடுமையே….
    🙁

  2. இரண்டு வருடம் முன்னால் நானும் என் கணவரும் மலேஷியாவில் இருந்து போய் வந்தோம். டூவீலர் வாடகைக்கு எடுத்து கொண்டு ஆளே இல்லாத ரோடுகளில் சுற்றி வந்த போது கொஞ்சம் பயமாய் கூட இருந்தது. பாராசெயிலிங் செய்தது எனக்கு மறக்கவே இயலாது. மிக அருமையான ஊர்.

    நீங்கள் மேலே உள்ள நேம்,,ஈமெயில்..வெப்சைட் போன்றவைகளை எடுத்து விடுங்களேன்.

  3. அசத்தல். நானும் என் நண்பர்களோடு சென்றிருந்தேன். ரொம்ப ரொம்ப அருமையான ஊர். குடும்பத்துடன் திரும்பவும் செல்ல வேண்டும்…

  4. ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க கிரி.

    டைம் இருந்த உங்க giri blog face bookla நெறைய போடோஸ் upload பண்ணுங்க. போடோஸ் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு.
    ——————————————————————————————————–
    kalyan jewellersukku rendu masam munnadi ponen. nalla kootam. Adhey madhiri 8% setharam mattumdhan nu solra lalitha jewelleryukku pona varam ponen. Angeyum kootam. Itthanaikkum nan rendu kadaikkumey week daysladhan ponen. 🙂

    Rajesh.v

  5. எங்களைப் போன்றவர்களையும் கிரிவலம் சாரி கேபிள் கார் வலம் அழைத்து சென்றமைக்கு நன்றி!

  6. தங்கள் வலைப்பூ , இந்த வார என் விகடனில் , தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .

    இணையத் தமிழன், விஜய் .

  7. வாழ்த்துக்கள் கிரி, பதிவுக்கும் மற்றும் ஆவி வலைஒசைக்கும்

  8. இந்த வாரம்-என் விகடன் – கோவை வலையோசையில் இடம் பெற்ற கோபிச்செட்டிப்பாளையம் இனிய-நண்பர் கிரிக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்…

    உங்கள் புகைப்படமும் வெளியாகியிருப்பது கூடுதல் சிறப்பு…

  9. படத்திலிருந்தே ஊகிக்க முடிகிறது கேபிள் கார் செல்லுகிற உயரத்தை. இயற்கையின் அழகு அதி அற்புதம்.

    சாப்பாடு பெரிய பிரச்சனைதான் பயணங்களில். இனி செல்லுபவருக்குப் பயனாகும் வகையில் உள்ளது பகிர்வு.

    என் விகடன் வலையோசைக்கு வாழ்த்துகள்:)!

  10. தங்கள் வலைப்பூ , இந்த வார என் விகடனில் , தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    —————————————————————————————————
    சொல்லவே இல்ல , இது எப்ப ? 🙂 😛

  11. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கோவிகண்ணன் அப்ப நீங்க நல்லா என்ஜாய் பண்ணுணீங்களா? 🙂

    @அமுதாகிருஷ்ணா நீங்க கூறிய மாதிரி அங்கே ஆள் அரவமே இல்லாமல் இருப்பது கொஞ்சம் கிலியாகத் தான் இருக்கும்.

    நீங்கள் கூறிய விஷயங்கள் WordPress ல் default ஆக வருவது அதை நான் நீக்க முடியாது. மெயில் வெப்சைட் ஓகே பேரையும் சேர்த்து எடுத்து விடக்கூறுகிறீர்கள் 🙂 இதை எடுத்து விட்டால் எப்படி பெயரை அறிவது. அனைவரும் தங்கள் பெயரை கீழே குறிப்பிட மறக்காமல் இருக்க மாட்டார்கள் என்பது எப்படி நிச்சயம். இதை ஏன் வைத்துள்ளார்கள் என்று கூறுகிறேன்.

    பெயர் – ஏற்கனவே கூறி விட்டேன்

    மெயில் – இதை பதிவு கமெண்ட்ஸ் Follow up க்காக கொடுப்பது. உங்களுக்கு உங்கள் மின்னஞ்சலை கொடுக்க விருப்பமில்லை என்றால் ஏதாவது டம்மியாக கூட கொடுக்கலாம். like a@mail.com.

    வெப் சைட் – இது எதற்கு என்றால் வேறு தளம் வைத்து இருப்பவர்கள் தங்கள் தளங்களை இதில் குறிப்பிடலாம் இதன் மூலம் நமக்கும் இன்னார் என்று அறிய முடியும் அதே போல இவர்கள் எழுதிய கருத்து பிடித்து இருந்தால் எழுதியது யார் என்று காண பின்வருபவர்களுக்கு பயன்படும். இதை க்ளிக் செய்வதன் மூலம் அவர்கள் தளம் செல்லலாம். இதில் நீங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

    ஓகே வா 🙂

    @ராஜேஷ் இந்த தொடர் முடிந்த பிறகு அப்லோடு செய்கிறேன்.

    வலையோசையில் வந்ததற்கு வாழ்த்து கூறிய விஜய் லோகன் ஸ்ரீநிவாசன் ராமலக்ஷ்மி ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி.

  12. உங்களோட மிக சிறந்த பதிவு ல ஒன்னு இது…
    நானும் எங்க அப்பா, அம்மா வ கூட்டிட்டு வந்து சுத்தி காட்டணும் நு ஆசையா இருக்கு .. அது தான் இந்த பதிவோட வெற்றி

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here