அமரர் கல்கியின் படைப்பில் ஆனந்த விகடனில் வெளிவந்த நாவல் கள்வனின் காதலி. பின்னர் திரைப்படமாக நடிகர் திலகம், பானுமதி நடிப்பில் வெளியானது.
கல்கியின் படைப்பில் முதல் தொடர்கதை இதுவே. Image Credit
கள்வனின் காதலி
முத்தையன் தன் தங்கை அபிராமியுடன் வசித்து வருபவன், கல்யாணியைக் காதலிப்பவன் ஆனால், அப்பாவின் வற்புறுத்தலால் வயதான பணக்கார நபருடன் கல்யாணிக்குத் திருமணம் நடைபெறுகிறது.
இந்நிலையில் தன் தங்கையிடம் தவறாக நடக்க முயல்பவனைத் துவைத்து எடுத்ததில், அடிவாங்கியவர் கொடுத்த பொய் புகாரில் சிறை செல்கிறான்.
தங்கச்சி என்ன செய்வாளோ என்ற கவலையில் சிறையில் உள்ள வேறு திருடன் உதவியுடன் தப்பிக்கிறான் முத்தையன்.
இதன் பிறகு திரும்பப் பழைய நிலைக்குச் செல்ல முடியாமல், திருடனாகவே தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இறுதியில் அபிராமிக்கு என்ன ஆனது? கல்யாணி என்னவானாள்? என்பதே கள்வனின் காதலி.
அவசரப்படுவதால் ஏற்படும் இழப்பே இக்கதை.
பழைய காலம்
இக்கதை பழைய காலத்தில் நடைபெறும் ஒன்றாகும்.
எனவே, ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தில் என்னமாதிரியான காட்சிகள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் இக்கதையில் உள்ளது.
படிக்கும் போதே நமக்கு மனத்திரையில் இக்காட்சிகள் ஓடுகிறது.
முத்தையன் முரடனாக இருந்தாலும், தன் தங்கை மீது வைத்துள்ள பாசம், கல்யாணியின் மீதான அன்பு, நேர்மை என்று கலவையாக இருப்பவன்.
எனவே, இக்கதாப்பாத்திரத்தை வைத்தே கதையைக் கல்கி நகர்த்துகிறார்.
கல்கி
கல்கியின் பல புத்தகங்களைப் படித்து இருந்தாலும், இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் போது தான், அவருடைய எழுத்துத் திறமை தெரிய வருகிறது.
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமி சபதம் போன்ற நாவல்களில் பரபரப்பான காட்சிகள் இயல்பாகவே வந்து விடும்.
ஆனால், இது போன்ற கதையில் நம்மைப் பரபரப்பாகவோ, சுவாரசியமாகவோ கொண்டு செல்வது எளிதல்ல ஆனால், கல்கி சுவாரசியம் குறையும் போதெல்லாம் ஏதாவது ஒரு சம்பவத்தைக் கொண்டு வந்து சுறுசுறுப்பாக்குகிறார்.
இதுவே அவருடைய திறமையாகக் கருதுகிறேன்.
படிக்கும் போதே நமக்குத் தெரிந்து விடும், இக்கதை இவ்வாறு தான் போகும் என்று ஆனால், நம்மைத் தொடர்ந்து படிக்க வைப்பதே இவர் பலம்.
அலை ஓசை நாவலைப்படித்து இச்சிறிய நாவலைப் படிப்பது எளிதாக உள்ளது.
திரைப்படம்
இக்கதையை நடிகர் திலகம், பானுமதி நடிப்பில் படமாக வெளியிட்டுள்ளார்கள்.
இதற்காகவே இப்படத்தைப்பார்த்தேன். நாவலிலிருந்து எப்படி வேறுபட்டுள்ளது? அல்லது அதே போல எடுத்துள்ளார்களா? என்று பார்க்க ஆர்வம் இருந்தது.
சிறு மாறுதல்கள் மட்டுமே செய்துள்ளார்கள், அம்மாறுதலும் கதையை எளிதாகக் கொண்டு செல்லவே. எனவே, நாவலோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாகவே இருந்தது.
நடிகர் திலகத்துக்கு இந்நாவல் மிகப்பொருத்தமாக இருந்தது. அன்பு செலுத்துவதிலும், முரட்டுத்தனமாக நடிப்பதிலும் தேர்ந்தவர்.
திரைப்படம் YouTube ல் உள்ளது.
இதே போலப் பார்த்திபன் கனவு நாவலும் படமாக்கப்பட்டது.
நாவலில் வரும் முதன்மை கதாப்பாத்திரம், தனது அடையாளத்தை மறைத்து வருவதாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.
நாவல் என்பதால், நமக்கும் யார் அது என்ற குறுகுறுப்பு இருக்கும்.
ஆனால், திரைப்படத்தில் முதல் காட்சியிலேயே யார் என்று தெரிந்து விடுவதால், படம் தோல்வியடைந்து விட்டது.
யார் படிக்கலாம்?
கல்கி எழுத்தில் ஆர்வமுள்ளவர்கள், பழைய காலத்துக் கதையில் விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். கல்கி ரசிகர்கள் ஏற்கனவே படித்து இருப்பார்கள்.
பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் முயற்சிக்கலாம்.
கள்வனின் காதலி அமேசானில் வாங்க இங்கே செல்லலாம்.
அமேசான் Kindle மிகப்பயனுள்ளதாக உள்ளது. இதன் வசதிகள், எளிமை ஆகியவை ரொம்ப ஈர்த்து விட்டது. அதோட இலவசமாக ஏராளமான புத்தகங்களைப் படிக்கவும் உதவுகிறது. என் பயணங்களைச் சலிப்பு இல்லாமல் ஆக்குவது Kindle.
தொடர்புடைய நாவல்கள்
கிரி, நீங்கள் படித்த புத்தகங்கள் குறித்த பதிவை படிக்கும் போதே எனக்குள் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்.. காரணம் என்னால் உங்கள் போல் புத்தகங்களை படிக்க முடியவில்லை என்பதால். நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று குறிப்பு வைத்துள்ளேன்.. ஆனால் ஏனோ படிக்க முடியவில்லை.. ஏதேதோ காரணங்கள் இருந்தாலும் என்னுடைய மனநிலை தான் முதன்மை காரணமாக அமைகிறது..கல்கியின் ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்து இருக்கிறேன்.. பொன்னியின் செல்வனும் இதுவரை படிக்கவில்லை..
நாவலை வைத்து எடுத்த வெகுசில படங்களே வெற்றி பெற்றுள்ளது.. படத்திற்கு வேண்டி திரைக்கதை எழுதும் போது சில சமரசங்கள் செய்ய வேண்டி வரும்.. அவ்வாறு செய்யும் போது நாவலின் இயல்பு தன்மை காணாமல் போகி விடும்.. சில நாவல்கள் படிக்க விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் படமாக எடுத்து பார்க்கும் போது சுவாரசியம் காணாமல் போவதும் உண்டு.
ஒரு தெளிவான நீரோடை போல உள்ள மனநிலையில் தான் எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும்.. அந்த தருணத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.. நான் தாமத்திக்க, தாமத்திக்க என்னுடைய படிக்க வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.. கள்வனின் காதலி நாவலையும் இதுவரை படிக்கவில்லை.. நிச்சயம் ஒரு நாள் படிப்பேன் என நம்புகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.