இறுகப்பற்று (2023) | மண வாழ்க்கை பிரச்சனைகள்

2
இறுகப்பற்று

ணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படம் இறுகப்பற்று. Image Credit

இறுகப்பற்று

விதார்த் & ஸ்ரீ ஆகியோர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுக்கும் மனநல நிபுணராக ஷ்ரத்தா, அவரது கணவராக விக்ரம் பிரபு.

இவர்களின் பிரச்சனைகளை ஷ்ரத்தா சரி செய்தாரா? என்பதே இறுகப்பற்று.

குடும்பம்

தம்பதிகளிடையே நடக்கும் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், ஆணவம், புரிதல் இன்மை, தான் என்ற எண்ணம் ஆகியவை ஒவ்வொரு குடும்பத்திலும் எப்படிச் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதை அழகாகக் கூறுகிறது.

இதில் வரும் ஏதாவது ஒரு காட்சியில் ஒவ்வொரு கணவன் மனைவியும் சம்பந்தப்பட்டு இருப்பார்கள் என்பதே சிறப்பு. சில நேரங்களில் தன் வாழ்க்கையில் நடப்பதைப் பார்ப்பது போன்றே இருக்கும்.

ஸ்ரீ நடிப்பு, கோபப்படுவது ஆகியவை இயல்பாக உள்ளது ஆனால், விதார்த் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

அதாவது அவர் விவகாரத்துக்குக் கூறும் காரணம் நியாயமாக இல்லை. இயல்பில் விதார்த் அவ்வாறான நபராகவும் காட்டப்படவில்லை, அலுவலகத்தில் பிரச்சனை இருப்பதாகவும் தெரியவில்லை.

ஸ்ரீ நடிப்பும், அவரது காரணங்களும் கதைக்கு நியாயமாக உள்ளன.

ஷ்ரத்தா

மனநல நிபுணர்கள் பற்றி எப்போதுமே எனக்கு ஒரு கேள்வி இருக்கும். இந்த நிபுணர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பது தான் 🙂 .

ஊருக்கே ஆலோசனை கூறலாம் அதைத் தன் வாழ்க்கையில் செயல்படுத்துவது எளிதல்ல என்பதே எதார்த்தம்.

ஷ்ரத்தா வாழ்க்கையிலும் அப்படியாவது வியப்பைத் தரவில்லை. விக்ரம் பிரபு எதிர்பார்ப்புகள், அவர் கேள்விகள் நியாயமாக உள்ளன.

நல்ல எண்ணத்தில் ஷ்ரத்தா செயல்படுவது, பின்விளைவுகளை ஏற்படுத்தும். அவரது வழிமுறைகள் தவறாக இருக்கலாம் ஆனால், நோக்கம் சரி.

காதல், அன்பு என்பது அட்டவணை போட்டுச் செயல்படுத்துவதல்ல, இயல்பாக நடப்பது. அதைச் செயற்கையாக மாற்றி அன்பு செலுத்த முயன்றால், அது உண்மையான அன்பாக இருக்காது.

அனுபவம்

அனைத்து குடும்பங்களிலும் நடைபெறும் பிரச்சனைகளுக்குக் காரணங்களாக இருப்பவை கோபம், புரிதலின்மை, ஈகோ, அக்கறையின்மை ஆகியவையே.

இவற்றோடு ஆண்களுக்கென்று சில குணங்கள் இருக்கும், அதே போலப் பெண்களுக்கென்று சில குணாதிசயங்கள் இருக்கும். இவை எப்போதுமே மாறாதவை.

எடுத்துக்காட்டுக்கு, ஆண்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள் ஆனால், பெண்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இப்பிரிவில் பெரும்பாலானவர்கள் அடங்கி விடுவார்கள்.

இதனாலேயே நண்பர்களின் குடும்பக் கதைகளைக் கேட்கும் போது நமக்கு ஒத்ததாக இருக்கும். இதையொட்டியே கணவன் மனைவி மீம்களும் வருகின்றன.

எனவே, கணவன், மனைவி தங்கள் நண்பர்களிடையே பேசும் போது பெண்கள் பிரச்சனைகள் ஒரே மாதிரியும், ஆண்கள் பிரச்சனை ஒரே மாதிரியும் இருக்கும்.

அனைவருக்கும் இவை பொருந்தாது என்றாலும் பெரும்பாலும் பொருந்தும், விதிவிலக்குகள் எங்கும் உண்டு. சூழ்நிலைகளே முக்கியப்பங்கு வகிக்கின்றன.

திரைக்கதை

துவக்கத்திலேயே குடும்பங்களுக்கு ஆலோசனை என்று தொடர்வதால், சில நேரங்களில் ஆவணப்படம் என்ற எண்ணத்தைத் தருகிறது.

குடும்பத்தின் கதையைக் கூறினால், இரு பக்கமும் உள்ள பிரச்சனைகளைக் கூறும் போதே கதைக்கான நியாயம் உறுதிப்படுத்தப்படும்.

ஆனால், இதில் விதார்த், ஸ்ரீ இருவருமே தவறு செய்பவர்களாகவும், மனைவி இருவருமே அப்பாவிகள், அவர்கள் பக்கமே நியாயம் இருப்பது போலக் காண்பிக்கப்படுகிறது.

யாரோ ஒருவரின் மனைவி பிரச்சனை செய்வது போலக் காண்பித்து இருந்தால், இரு பக்க பிரச்சனைகளையும் சமமாக கூற வாய்ப்பாக அமைந்து இருக்கும்.

தம்பதிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைக் கூறும் முயற்சி பாராட்டத்தக்கது ஆனால், திரைக்கதையில் மேலும் கவனம் எடுத்து இருக்கலாம்.

படத்தின் கதைக்குத் தலைப்பு மிகப் பொருத்தமாக உள்ளது.

கதாபாத்திரங்கள்

இறுதியில் பல காரணங்களை, ஏமாற்றங்களை விதார்த் கூறினாலும், துவக்கத்திலிருந்து அவர் நடவடிக்கைகள் அதை எங்கேயும் பிரதிபலிக்காமல் உள்ளது.

திடீரென்று ஒருநாள் அலுவலகத்தில் கோபப்படுவது ஒட்டுமொத்த கதைக்கும் கதாபாத்திர நியாயத்தைக் கொடுத்து விடுமா?!

ஒரு வீட்டை வாங்கி அதற்கு 20 வருடங்கள் கடனைக் கட்ட உழைத்து, யாருக்காக வாழ்கிறோம் என்பதே தெரியவில்லை!

என்று விதார்த் கூறுவது எதார்த்தமாக இருந்தது.

ஷ்ரத்தாவுக்கு விக்ரம் பிரபுவை ஏமாற்றும் எண்ணம் இல்லை ஆனால், அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் பின்பற்றும் நடவடிக்கைகளே பிரச்சனையாகின்றன.

அதை ஷ்ரத்தா உணர்ந்ததும், சண்டையிடாமல் அதைச் சரி செய்ய முயல்வதும், அதற்கு விக்ரம் பிரபு இதுவும் ஒரு செயற்கையான நடவடிக்கையா! என்று சந்தேகப்படுவது இயல்பு.

ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்ததாம் ஆனால், நயன் தேவையில்லை ஷ்ரத்தாவே போதுமானது.

ஒளிப்பதிவில் Upper Class / Upper middle class இடங்களாக உள்ளதில் கொஞ்சம் நடுத்தரவர்க்க காட்சிகளையும் இயல்புக்காகச் சேர்த்து இருக்கலாம்.

காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல் வரிகள் & இசை.

யார் பார்க்கலாம்?

திருமணமானவர்கள் மட்டுமே பார்க்கலாம். மற்றவர்கள் இதை முழுவதுமாக உணர்ந்து பார்க்க முடியாது.

காதலிப்பவர்கள் கூட உணர முடியாது. காரணம், காதலிக்கும் போது சண்டையிட்டாலும் அது வேறு. திருமணமான பிறகான வாழ்க்கை முற்றிலும் வேறு.

இயக்குநர் செல்வமணி மேடையில் கூறிய ‘15 வருடங்கள் காதலித்தோம் ஒரு பிரச்சினையில்லை ஆனால், திருமணமாகி 3 நாட்கள் கூடச் சமாளிக்க முடியவில்லை‘ என்ற பேச்சு குறிப்பிடத்தக்கது 🙂 .

கணவன் மனைவிக்கான படமென்றாலும், புரிதலுள்ள, புரிந்துகொள்ளக்கூடிய தம்பதியினர் ஒன்றாகப் பார்க்கலாம். மற்றவர்கள் தனித்தனியே பார்ப்பது நல்லது.

காரணம், பிரச்சனைகளைச் சரி செய்யாமல், தவறாகப் புரிந்து மேலும் சிக்கலாக்கி விடவும் வாய்ப்புகள் உள்ளது 🙂 .

புதிய முயற்சிகளை ஆதரிக்கும் தயாரிப்பாளர் SR பிரபுக்கு பாராட்டுகள்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Yuvaraj Dhayalan
Written by Yuvaraj Dhayalan
Produced by S. R. Prakash Babu, S. R. Prabhu, P. Gopinath, Thanga Prabaharan R
Starring Vikram Prabhu, Shraddha Srinath, Vidharth, Sri, Abarnathi, Saniya Iyappan
Cinematography Gokul Benoy
Edited by J. V. Manikanda Balaji
Music by Justin Prabhakaran
Release date 6 October 2023
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. ஒரு கால கட்டத்தில் நண்பர்கள் / நெருங்கிய உறவுகளில் நடந்த திருமணங்களில் ஏற்பட்ட (சில நாட்களிலே) விரிசல்களை பார்த்து, திருமணமே வேண்டாம் வாழ்க்கையை தனியாகவே வாழ்ந்து விடலாம் என்ற மனநிலையில் தான் சில ஆண்டுகள் இருந்தேன். பின்பு திருமணம் நடந்த முடிந்த பிறகு தான் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷியங்கள் நடந்தது.

  என்னை பொறுத்தவரை திருமணமாகி ஒரு பத்து வருடம் கடந்த பின்பு தான் அந்த வாழ்க்கையின் அர்த்தமே புரிகிறது. சிறு, சிறு மன கசப்புகள், இடைவெளி திருமண பந்தத்தில் தவிர்க்க முடியாதது. உலகின் எந்த சிறந்த பல்கலை கழகத்திலும், பாட புத்தகத்திலும் படித்து தெரிந்து கொள்ள முடியாத ஒன்று இந்த அனுபவம்.. திருமணம் செய்து வாழ்ந்தால் மட்டுமே புரியும் உண்மை ..

  “எத்தனை முறை படித்தாலும்

  புரியாத புரியாத, ஒரே புத்தகம்

  — பெண் —- ”

  சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் படித்தது.. படித்தவுடன் பிடித்து இருந்தது என்று whatsapp status ல வைச்சேன்.. மனைவி இதை பார்த்துவிட்டு “அப்படி என்ன படிச்சீங்க?? உங்களுக்கு புரியாம போயிடுச்சி??னு கேள்வி கேட்டாங்க??? ரெண்டு மாசம் ஆகிடுச்சி இன்னும் பதில் சொல்லாம தெரியாம .. விடையை தேடிட்டு இருக்கேன்.. ஒரு வேளை இந்த கேள்விக்கான பதில் : திருமணம் என்று இருக்குமோ!!!!!

 2. @யாசின்

  “திருமணமே வேண்டாம் வாழ்க்கையை தனியாகவே வாழ்ந்து விடலாம் என்ற மனநிலையில் தான் சில ஆண்டுகள் இருந்தேன்.”

  🙂 பலருக்கு தோன்றி இருக்கும்.. ஆனால், எதிர்காலத்தில் இவை உண்மையாகவும் வாய்ப்புள்ளது.

  “சிறு, சிறு மன கசப்புகள், இடைவெளி திருமண பந்தத்தில் தவிர்க்க முடியாதது.”

  இவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை.

  “படித்தவுடன் பிடித்து இருந்தது என்று whatsapp status ல வைச்சேன்.. மனைவி இதை பார்த்துவிட்டு “அப்படி என்ன படிச்சீங்க?? உங்களுக்கு புரியாம போயிடுச்சி??னு கேள்வி கேட்டாங்க?”

  இதுக்கு தான் WhatsApp status ம் வைப்பதில்லை, WhatsApp status ம் பார்ப்பதில்லை 😀 . சமூகத்தளங்களிலும் இல்லை 🙂 .

  என் ஒரே இடம் இந்த giriblog தளம் மட்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here