புதிய பாஸ்போர்ட் பெறுவது, புதுப்பிப்பதை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது, முன்பு போல நெருக்கடிகள் இல்லை. இக்கட்டுரையில் எளிதாகப் பாஸ்போர்ட்டை பெறுவது / புதுப்பிப்பது எப்படி என்று பார்ப்போம். Image Credit
பாஸ்போர்ட்
- https://passportindia.gov.in/ இணையதளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- உள்ளே நுழைந்தவுடன் Apply for Fresh Passport/Re-issue of Passport தேர்வு செய்து, இணைய வழியில் விண்ணப்பிக்கும் வழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- Fresh Passport / Re-issue of Passport, Normal / Tatkaal என்று தேவைக்குத் தகுந்தபடி தேர்வு செய்து அது தொடர்பான Option களுக்கு பதில் அளிக்கவும்.
- விவரங்களைப் பொறுமையாக, ஒருமுறைக்கு இரு முறை கவனித்து உள்ளீடு செய்யவும். தவறான விவரங்கள் சிக்கலில் விட்டு விடும்.
- நான் பாஸ்போர்ட் புதுப்பிக்கத் தேர்வு செய்தேன்.
இதுவரை செய்ததை இறுதியில் மறக்காமல் சேமித்துக்கொள்ளுங்கள்.
கட்டணம்
கட்டணம் செலுத்தும் முறையில் Credit Card / Debit Card / UPI வசதிகளில் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
என் பரிந்துரை UPI. இதற்குக் கூடுதல் கட்டணம் இல்லை.
ஆனால், பணம் செலுத்தும் போது Error வந்து தடைபட்டு விடுகிறது. விசாரித்ததில் பலருக்கு இது போல நேர்ந்தது என்று தெரியவந்தது.
முன்பு பதிந்தவற்றைச் சேமித்து இருப்பதால் பயமில்லை.
View Saved/Submitted Applications –> Select Application –> Payment and Appointment –> Track Payment Status சென்று Cancel செய்தால் மட்டுமே திரும்பப் பணம் செலுத்த முடியும்.
டிஜிட்டல் இந்தியா என்று இந்தியா வளர்ந்தாலும், பணம் செலுத்தும் பகுதி மட்டும் எப்போதும், எங்கும் திகில் பட அனுபவம் போலவே உள்ளது 🙂 .
SMS அனுப்ப ₹50 செலுத்தும்படி இருக்கும், தேவைப்பட்டால் தேர்வு செய்யலாம் (Optional) ஆனால், அவசியமில்லை.
செலுத்த வேண்டிய கட்டணம் ₹1500.
பாஸ்போர்ட் அலுவலக இடத்தை / நேரத்தை நாமே தேர்வு செய்யலாம்.
அருகேயுள்ள கடற்கரை ரயில்நிலையம் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்வு செய்ய முடிந்தது ஆனால், நேரத்தைத் தேர்வு செய்ய முடியவில்லை.
பாஸ்போர்ட் அலுவலகம்
TCS மேற்பார்வையில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் மிகச்சிறப்பாக உள்ளது என்று பலரும் கூறியதால், பலவித கற்பனைகளோடு சென்றால், 20 X 20 க்கு அறையில் இரண்டே அலுவலர்கள் மட்டுமே இருந்தனர்.
அதோடு அலுவலகமும் பழைய காலத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
அங்கே ஒரு பெண்ணும், ஒரு பெரியவரும் மட்டுமே இருந்தார்கள். இருவரும் சிறப்பான சேவையைக் வழங்கினார்கள்.
பெரியவர் வழக்கமான அரசு அலுவரை போலக் கடுமையாக நடந்து கொள்வாரோ என்று நினைத்ததற்கு மாறாக மிக மரியாதையுடன், பொறுப்புடன் பேசினார்.
பின்னர் தெரிய வந்தது அலுவலகம் TCS மேற்பார்வையில் இல்லை, இவர்களும் TCS ஊழியர்கள் அல்ல, தபால் அலுவலக ஊழியர்கள் என்று.
சேவை சிறப்பாக இருந்தாலும் அலுவலகத்தை மேம்படுத்திப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெளியுறவுத்துறை இதைக்கருத்தில் கொள்ள வேண்டும்.
வடபழனி, தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் சிறப்பாக இருந்ததாகவும், ஏராளமானோரை கையாள்கிறார்கள் என்றும் நண்பர்கள் கூறினார்கள்.
கொண்டு செல்ல வேண்டியவை
- புதுப்பிப்பதாக இருந்தால், பழைய பாஸ்போர்ட்.
- ஆதார் ஒரிஜினல் மட்டும் போதும் என்று நினைத்து இருந்தேன் ஆனால், பான், வாக்காளர் எண்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்ததால் ஒரிஜினல் கேட்டார்கள்.
- DigiLocker வைத்து இருந்தால், அதில் இருந்தே பான் அட்டை காண்பிக்க முடியும்.
- நிழற்படம் (Photo) கேட்டார்கள் (அவர்களாக கொடுத்த ஒரு விண்ணப்பத்தில் ஒட்ட) ஆனால், மற்ற இடங்களில் கேட்கவில்லையென்றார்கள்.
- ஆதார் முழு விவரங்களும் ஒரே பக்கத்தில் வருவது போல ஜெராக்ஸ். அதே போலப் பழைய பாஸ்போர்ட் முதல் கடைசி அட்டை விவரங்கள் ஒரே பக்கத்தில்.
அன்று தான் DigiLocker முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.
ECNR க்கு கல்லூரி விவரங்களைக் கேட்கவில்லை. பாஸ்போர்ட் புதுப்பிப்பு என்பதால், ஏற்கனவே கொடுத்து இருந்ததையே எடுத்துக்கொண்டார்கள்.
ஆதார் Finger Print Lock செய்து வைத்து இருந்ததை, கைரேகைக்காக Unlock செய்தேன்.
எதிர்காலத்தில் அனைத்து அடையாள அட்டைகளும் இணைக்கப்பட்டு ஆதார் மட்டும் போதும் என்ற நிலை நிச்சயம் வரும். இப்போதே ஆதார் மட்டும் போதுமானது ஆனாலும், இது போலக் கேட்கிறார்கள்.
DigiLocker ல் வாக்காளர் அடையாள எண்ணும் இணைக்கப்பட்டு விட்டால், ஒரிஜினல் அனைத்தும் DigiLocker லேயே வந்து விடும்.
மேற்கூறிய விவரங்களைக் கேட்பது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.
Digital Camera ல் நிழற்படம் எடுக்கிறார்கள். எடுத்த பிறகு சரியாக உள்ளதா? என்று கேட்கிறார். சரியில்லை என்றால், திரும்ப முயற்சிக்கலாம்.
அனைத்தும் முடிந்ததும், கிளம்பி விடலாம்.
இதன் பிறகு பாஸ்போர்ட் இணையதளத்தில் (Track Application Status) தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
காவல்துறை சோதனை
பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை முடிந்த பிறகு காவல்துறை சோதனை தான்.
வழக்கமாகக் காவல்துறை சோதனையின் போது அறிவிக்கப்படாத சட்டம், காவலருக்கு ₹200 / ₹300 பணம் கொடுக்க வேண்டும் என்பது.
கொடுக்கவில்லையென்றால், வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்கள், பிரச்சனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுண்டு.
நண்பர்களிடையே விசாரித்த போது பலர் கொடுக்கவில்லை என்றார்கள். வீட்டுக்கு வந்தால் கொடுக்க வேண்டியதில்லை ஆனால், அதே காவல்நிலையம் சென்றால் வாங்கி விடுவார்கள் என்றார்கள்.
15 நாட்களுக்குப் பிறகு தொலைபேசியில் அழைத்த காவலர், முகவரியை உறுதி செய்துகொண்டு வீட்டுக்கே வந்தார்.
ஆதார் கேட்ட போது DigiLocker வழியாக ஆதார் காட்டினேன், தயங்கினார். பின்னர் இதுவும் அதிகாரபூர்வ அட்டை தான் என்றேன், தெரியும் என்றார்.
எத்தனை வருடங்களாக இங்கே வசிக்கிறீர்கள்? என்ற வழக்கமான கேள்விகளுடன் (முகவரி மாற்றம் கேட்டு இருந்தேன்) விசாரித்துச் சென்று விட்டார்.
அட! என்று வியப்பாக இருந்தது. பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடியை எனக்கு ஏற்படுத்தாதற்கு மனதினுள் நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
காவலர் வந்தமா, வேலையை முடித்தமா, போனோமா என்று இருந்தார்.
ஸ்பீட் போஸ்ட்
இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சலும், குறுந்தகவலும் வந்தது. பாஸ்போர்ட் தள ஸ்டேட்டஸில் Passport Dispatched என்று இருந்தது.
அடுத்த நாளே ஸ்பீட் போஸ்ட் வழியாக பாஸ்போர்ட் கொடுத்து விட்டார்கள். விண்ணப்பித்த நாளிலிருந்து 20 நாட்களில் பாஸ்போர்ட் கைக்கு வந்தது.
காவல்துறை எவ்வளவு விரைவாக உறுதிப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து சில நாட்கள் முன்னே பின்னே இருக்கலாம்.
பாஸ்போர்ட்டில் நிழற்படம் மங்கலாக இருந்தது. எனக்கு மட்டுமே தானோ என்று நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களும் இதையே கூறினார்கள்.
வெளிநாட்டு சுங்க சோதனையில் உள்ளவர்களுக்கு கடுப்பாகவே இருக்கும்.
இந்தியா எவ்வளவு தான் முன்னேறினாலும் இது போன்ற விஷயங்களில் மேம்படுத்த வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை உணர்த்துகிறது.
சிறு குறைகள் இருந்தாலும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது மிகப்பெரியளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
கொசுறு
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு எங்கும் யாருக்கும் பணம் கொடுத்துச் சேவை பெற வேண்டாம். யாருடைய உதவியுமின்றி எளிதாக நாமே விண்ணப்பிக்கலாம்.
இக்கட்டுரை படித்தால், விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சிறு சந்தேகங்களும் வராது.
தொடர்புடைய கட்டுரைகள்
DigiLocker | அரசு சேவைகள் உங்கள் கைகளில்
ஆதார் கை ரேகையைப் பாதுகாப்பது எப்படி?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த பதிவை படிக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முதலில் பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது நடந்த நிகழ்வுகள் கண் முன்னே வந்து போகிறது.. நண்பர்கள் மூன்று பேர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்தோம்.. போட்டோ எடுக்கும் போதே பஞ்சாயத்து ஆரம்பித்தது.. மூவருக்கும் கோட் போட்டு எடுக்கவேண்டும் என்ற ஆசை, (அப்ப தான் வெளிநாட்டுக்கு விசா கிடைக்கும் என்று யாரோ சொன்னது) ஸ்டுடியோவில் உள்ள கோட் பழைய மாடல் கோட், அளவும் பெரியது, நன்றாக இல்லை.
அதனால் சாதாரணமான உடையில் போட்டோ எடுத்து விட்டு பின்பு எடிட் செய்து வேற கோட் பிக்ஸ் பண்ணி விடுங்க PHOTOSHOP , CORLDRAW வுல என்றேன். (கணிணி அறிவு கொஞ்சம் எனக்கு இருந்ததால், மற்ற இரு நண்பர்களுக்கும் ஆச்சரியம்..(பில் கேட்சுக்கு அப்பறம் நீதான் மச்சான் என்பது போல என்னை கண்டு ஆச்சரியம் ).. ஆனால் ஸ்டுடியோவில் அப்படி செய்ய முடியாது.. என்ன எடுக்கிறோமோ அதை தான் பிரிண்ட் போட்டு கொடுப்போம் என்றார்.. அந்த சமயத்தில் அது கடலூரில் NO 1 ஸ்டூடியோ..
எனக்கு கொஞ்சம் கடுப்பு.. உங்ககிட்ட கோட்டும் சரியில்ல.. அப்புறம் நாங்க சொன்னதையும் செய்ய மாட்றிங்க.. வேற ஸ்டூடியோக்கு போறோம் என்ற போது, (சந்தானம் ஒரு படத்தில் சொல்வார் இல்ல : மச்சான் குடிச்சா உங்க அக்கா கல்யாணத்துல தான் குடிக்கனும் அதுக்காக தான் வந்தோம்) என்பது போல் என் நண்பன் மச்சான் போட்டோ எடுத்தா இந்த ஸ்டூடியோல மட்டும் தான் எடுக்கனும், இல்லனா திரும்பி போகலாம் என்றான்.. பாஸ்ப்போர்ட்டே வேணாம் என்றான்.
பின்பு ஒரு வழியா ஸ்டூடியோகாரரை சமதானம் செய்து போட்டோ எடுத்தோம்..(PHOTOSHOP தான்..) நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம்.. எப்படி மச்சி!!! அவன் முடியவே முடியாதுனு சொன்னான்.. நீ செம்ம மச்சி னு.. கலக்கிட்டடானு ஒரே பாராட்டு மழை.. போட்டோ கைக்கு வந்த பின் முதன் முதலில் கோட் போட்டு போட்டோவை பார்க்கும் போது, மூன்று பேரின் போட்டோவும் நன்றாக இருந்தது.. மறு நொடியே BACKROUND ல் பாரின் ல SONG ஓடுது..போட்டோவை பார்க்கும் போதே பாரின் போன உணர்வு..
பின்பு இரண்டு நாட்களுக்கு பின்பு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அலுவலகம் சென்றோம்.. அங்கு போனால் 3 ம் உலக போருக்கு போயிட்டு வந்த அனுபவம்.. (மிக நீண்ட நிகழ்வுகள்).. ஒரு வழியாக காவல் துறை விசாரிப்பு முடிந்து, ஒரு மாதத்திற்கு பின் பாஸ்போர்ட் கிடைத்ததாக நினைவு.. பாஸ்போர்ட் வராத போது என்னடா?? இன்னும் பாஸ்போர்ட் வரல? வரல? என்று ஒரே கவலை..
லோக்கல்ல எந்த ட்ராவல் ஏஜென்ட்டை பார்த்தால் பாஸ்போர்ட் வந்த உடனே சொல்லு விசா ரெடி என்றார்கள்.. பாஸ்போர்ட் வந்த பின்பு ஒரு ஏஜெண்டும் கண்டுக்கவில்லை.. பாஸ்போர்ட் வந்த பின் பீரோவில் வைத்து பூட்டி பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு பின் தான் ஒரு நண்பர் உதவியால் வெளிநாடு சென்றேன்.. தற்போது சில நிகழ்வுகளை யோசிக்கும் போது எளிதாக இருந்தாலும் அன்றைய சூழ்நிலையில் எப்படி இருந்தது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது..
=================================================
இணையத்தில் சில நாட்களுக்கு முன் படித்த ஒரு கவிதை.. தந்தையின் வலியை மகனுக்கு உணர்த்தும் கவிதை..
விற்ற காசு
===========
தோப்பும், துரவும்
வீடும், கிணறும்
விற்று வாங்கிய
தொகையை
எண்ணிக் கொண்டிருக்கையில்
ரூபாய் நோட்டுக்கள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்..
கிரி. நான் 2007 இல் பாஸ்போர்ட் எடுத்தேன். 2018 மார்ச் இல் அது காலாவதி ஆகிவிட்டது. Passport renewal அப்போது செய்யவில்லை. இதுவரை நான் வெளிநாடு சென்றதில்லை. எடுத்து உபயோகிக்காததால் எதற்கு என்று விட்டுவிட்டேன். 2018 லேயே காலாவதியான passportஐ மீண்டும் தற்போது renewal செய்ய முடியுமா? அல்லது புதுபாஸ்போர்ட் தான் எடுக்க வேண்டுமா?
@யாசின்
என் முதல் பாஸ்போர்ட்டுக்கும் ஒரு சோக கதை உள்ளது.
நான் அப்போது தான் நிறுவனத்தில் இணைந்துள்ளேன்.
திடீரென்று எங்கள் தலைமையகத்துக்கு (ஜெனீவா) அனைவரும் செல்வதாக முடிவானது. என்னிடம் பாஸ்போர்ட் இல்லை.
அவசரமாக தட்காலில் விண்ணப்பித்து அதற்கு அவர்கள் கொடுத்த குடைச்சல்களில் அங்கே இங்கே அலைந்து தகவல்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றேன்.
பாஸ்போர்ட் வாங்கிய பிறகு ஜெனீவா செல்லும் திட்டம் ரத்தாகி விட்டது. வடை போச்சேன்னு ஆகி விட்டது 🙂
“மறு நொடியே BACKROUND ல் பாரின் ல SONG ஓடுது..போட்டோவை பார்க்கும் போதே பாரின் போன உணர்வு..”
😀 😀
“பாஸ்போர்ட் வராத போது என்னடா?? இன்னும் பாஸ்போர்ட் வரல? வரல? என்று ஒரே கவலை..”
எனக்கும் அந்த சமயத்தில் பெரிய பிரச்சனை ஆகி விட்டது. இதனால் என்ன ஆகுமோ என்ற பீதி இருந்தது.. நல்லவேளை எதுவும் நடக்கவில்லை..
“ரூபாய் நோட்டுக்கள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்..”
எனக்கு தாத்தா நினைவு தான் வர வேண்டும்.
@ஹரிஷ்
“2018 லேயே காலாவதியான passportஐ மீண்டும் தற்போது renewal செய்ய முடியுமா? அல்லது புதுபாஸ்போர்ட் தான் எடுக்க வேண்டுமா?”
மேற்கூறியபடி Fillup செய்யும் போது உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகி 3 வருடங்களுக்குள் உள்ளதா? மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதா? என்ற கேள்வி வரும்.
அதில் நீங்கள் மூன்று வருடங்களைக் கடந்து விட்டது என்று தேர்வு செய்ய வேண்டும், அவ்வளவே.
மற்றபடி புதுப்பிப்பு, புதிய பாஸ்போர்ட் இரண்டுக்கும் வழிமுறைகள் பெரியளவில் வித்யாசமில்லை.
பாஸ்போர்ட் எந்த நேரத்தில் திடீர் என்று தேவைப்படும் யாராலுமே கணிக்க முடியாது. எனவே, என் பரிந்துரை நீங்கள் பாஸ்போர்ட் பெற்று கொள்ளுங்கள் என்பது தான்.
மேற்கூறியவற்றை பின்பற்றினாலே போதுமானது, எளிதாக பெற்று விடலாம்.
நான் பாஸ்போர்ட் வாங்க முதன்முதலில் அப்ளை செய்தபோது அலுவலர் கேட்ட கேள்விகள் கோவத்தை தான் கிளப்பியது.ஏன் காசை வீணாக்கிறாய் என்று கேட்டார்.ஊரில் போலீஸ் விசாரிக்கும் போது ஊரில் என்னை தெரியாது என்ற யாரோ ஒரு நல்லவர் சொல்ல காவல்துறையில் உள்ள நன்பர் மூலம் verification பன்னபிறகும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.அதன் பிறகு பாஸ்போர்ட்க்கு விண்ணபிக்கவில்லை.