இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை.
அலை ஓசை
பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது. Image Credit
முக்கியக்கதாபாத்திரங்களான சீதா, லலிதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரை மையப்படுத்தி நாவல் முழுவதும் நடைபெறுகிறது.
இக்காலகட்டத்தில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான எதிர்பார்ப்புகள், நடவடிக்கைகள், போராட்டங்கள், கலவரங்கள் ஆகியவை வருகின்றன.
அரைகுறையாகத் தெரிந்த சில விஷயங்கள் இதில் சம்பவங்களாக வருவதைப் பார்த்த பிறகே இதெல்லாம் உண்மையிலேயே நடந்துள்ளதா! என்று தெரிய வந்தது.
ஆசிரியர் கல்கி
நாவல் நான்கு பாகங்களைக் கொண்டது.
கல்கி அவரது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறாரா அல்லது ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் எண்ணங்களை, அவர்கள் தரப்பு விளக்கங்களைக் கூறுகிறாரா என்ற எண்ணம் வருகிறது.
காங்கிரஸ், பிரிட்டிஷ், கம்யூனிசம் ஆகியவை பிரதான கருத்துகளாக உள்ளது. மூவர் மீதும் விமர்சனங்களும் பாராட்டுகளும் சம அளவில் வந்து செல்கிறது.
இவற்றோடு தன் தனிப்பட்ட கருத்துகளையும் கதாப்பாத்திரங்களின் வழியே கல்கி கூறி இருப்பதாகவே கருதுகிறேன்.
சீதா
கடவுள் பிரம்மாக்குப் பிறகு ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது இருவர். ஒருவர் திரைப்பட இயக்குநர், மற்றொருவர் எழுத்தாளர்.
இவர்கள் நினைத்தால், ஒரு கதாப்பாத்திரத்தை உயிர் பிழைக்க வைக்கலாம், சாகடிக்கலாம், கதாப்பாத்திரத்தை அப்படியே நேர் எதிராகக் கொண்டு செல்லலாம்.
சுருக்கமாகத் தாங்கள் நினைத்தபடி கதாப்பாத்திரத்தை மாற்ற முடியும்.
இதிலும் சீதா கதாப்பாத்திரத்தைக் கல்கி ஒரு வழியாக்கி விட்டார். வித விதமாக மாற்றி, மகிழ்ச்சி, கஷ்டங்களைக் கொடுத்து, எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார் என்றே ஊகிக்க முடியாதபடி கொண்டு செல்கிறார்.
பழைய காலம்
சுதந்திரத்துக்கு முன் அல்லது பழைய கால நடைமுறையில் நடந்ததைத் தற்போது படிக்கும் போது காலம் எவ்வளவு மாறி விட்டது என்று உணர முடிகிறது.
சிறு வயதிலேயே திருமணம் வழக்கமானது. கடிதம் மட்டுமே தகவல் பரிமாற்றத்துக்கு இருக்கும் ஒரே சாதனம்.
தொலைபேசி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துவது.
ஒவ்வொருவரும் தனக்கு நெருங்கியவரின் கடிதத்துக்காகக் காத்து இருப்பதும், பதில் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதும் பழைய நினைவுகளைக் கிளறியது.
ரயில் பயணங்கள் போக்குவரத்துக்கு மிக உதவியாக உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் செய்த சிறப்பான சேவைகளில் ஒன்று ரயில் சேவை.
சமூகம்
- அப்போதிருந்த ஏற்றத் தாழ்வுகள் குறித்த விவாதங்கள் சுவாரசியமாகவும் அப்போதே இவ்வளவு பேசப்பட்டுள்ளதும் வியப்பளித்தது.
- மதிப்பு குறைத்து நடந்து கொள்வதை விமர்சிக்கும் சூழ்நிலைகளும் வருகிறது.
- கணவன் மனைவியிடையே உள்ளே சண்டைகள், விவாதங்கள் கல்கியின் எழுத்தில் மிக இயல்பாக உள்ளன 🙂 .
- ₹800 சம்பளம் என்பது மிக உயர்ந்த சம்பளமாக, பதவியாகக் கருதப்படுகிறது.
- நிதி வசூல் செய்து ஏமாற்றும் சம்பவங்கள் அந்தக்காலத்திலேயே அதிகளவில் இருந்துள்ளது. அதே போல வாக்குக்குப் பணம் கொடுக்கும் சம்பவங்களும் உள்ளன.
சில சம்பவங்கள் தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது.
கலவரங்கள்
கல்கத்தாவில் நடந்த கலவரங்களும், சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கு பஞ்சாபில் நடந்த கலவரங்களையும் படித்தால் திகிலாக உள்ளது.
நாம் எல்லாம் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளோம் என்று தோன்றுகிறது.
நடந்த சம்பவங்களில் கல்கி 20% கூறி இருப்பார் என்று கருதுகிறேன், அதுவே பயங்கரமானதாக உள்ளது.
நம் முன்னோர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதைப் படிக்கையில் மிக வருத்தமாக இருந்தது.
சுதந்திர இந்தியாவில் நாம் மகிழ்ச்சியாக இருக்க அவர்கள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள்! கொடூரமான சம்பவங்களாக உள்ளது.
போகிற போக்கில் அப்படியே இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த உலகின் மிகப்பெரிய இடமாற்றத்தை பற்றியும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
காந்தி கடவுளைப் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதே போலக் காந்தியின் முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்த கோபமும் கூறப்பட்டுள்ளது.
யார் படிக்கலாம்?
கதை பெரும்பாலும் பிராமணக் குடும்பங்களின் பார்வையில், குறிப்பாக நான்கு குடும்பங்களில் நடப்பதை கூறுகிறது. 90% பிராமணப் பேச்சு வழக்கே உள்ளது.
எனவே, அனைவருக்கும் பிடிக்கும் என்று கூற முடியாது, குறிப்பாக இடது சாரிகள், திக வினருக்கு பிடிக்க வாய்ப்பே இல்லை 🙂 .
ரமணிச்சந்திரன் போன்றவர்களின் நாவல்களை விரும்பிப் படித்தவர்களுக்கு இப்புத்தகம் பிடிக்கலாம்.
சுதந்திரத்துக்கு முன் இருந்த சூழ்நிலைகள், சம்பவங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களும் படிக்கலாம்.
லலிதா திருமணம் வரை ஊகிக்க முடிந்த என்னால், அதன் பிறகு எதையுமே ஊகிக்க முடியவில்லை.
இதற்கு மேல் என்ன இருக்கப்போகிறது என்று நினைத்தால் ஏதாவது ஒரு சம்பவத்தைப் புகுத்தி இறுதி வரை சுவாரசியமாகவே கொண்டு சென்றுள்ளார்.
சலிப்பாகும் சமயத்தில் எல்லாம் ஏதாவது ஒரு பரபரப்பான சம்பவம் நடக்கிறது. எனவே, எங்குமே நிறுத்த முடியாதபடியுள்ளது.
மேற்கூறியவை சம்மதம் என்பவர்கள் இந்நாவலை படிக்கலாம்.
தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாவல்.
பரிந்துரைத்தது விக்னேஷ் செல்வராஜ்.
நாவலை அமேசானில் வாங்க இங்கே செல்லவும். புத்தகமாக 4 பாகங்கள், நான் Kindle வாங்கினேன், எழுத்துப்பிழைகள் இல்லை.
தொடர்புடைய நாவல்கள்
கிரி, இந்த நாவலை இதுவரை படிக்கவில்லை..தற்போது படிக்க கூடிய சூழ்நிலையும் (மனநிலை) இல்லை.. நாவலின் கரு எனக்கு பிடித்த ஒன்று.. எனக்கு எப்போதும் சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..
இந்த தலைமுறையில் நாம் சாதாரணமாக எதுவுமே செய்யாமல், நமக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை பெற நமது முன்னோர்கள் செய்த தியாகத்தையும், வலிகளையும் நாம் உணர்ந்து கொள்ளவே முடியாது.. எதுமே செய்யாமல் கிடைத்ததால் தான் என்னவோ?? அதன் வலிகள் நமக்கு புரியவில்லை..
“சிறை கைதிகளுக்கு தான் சுதந்திரத்தின்” அருமை தெரியும்.. நிச்சயம் நாவலை எதிர்காலத்தில் படிக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
சரியா சொன்னீங்க யாசின். கஷ்டப்படாம நமக்கு அனைத்துமே கிடைத்ததால் தான் அதன் அருமை தெரிவதில்லை.
ஆனால், நான் முழுமையாக உணர்ந்து வைத்துள்ளேன். அதே போல வேறு நாட்டுக்குச் சென்று வந்த பிறகு நம் நாட்டின் அருமை ரொம்ப புரிந்தது.
“சிறை கைதிகளுக்கு தான் சுதந்திரத்தின் அருமை தெரியும்”
🙂 . எதுவுமே எளிதாக கிடைத்து விட்டால், அதை அருமை புரிவதில்லை.