Android Kunjappan Ver 5.25 (2019 மலையாளம்) | இயந்திர மனிதன்

2
Android Kunjappan Ver 5.25

வீட்டுக்கு வேலைக்கு, துணைக்கு இயந்திர மனிதன் (Humanoid Robot) வந்தால் எப்படி இருக்கும்? அது தான் Android Kunjappan Ver 5.25. Image Credit

Android Kunjappan Ver 5.25

ஷங்கர் எடுத்த எந்திரன் படத்தைக் குறைந்த முதலீட்டில் எடுத்த மாதிரி ஒரு படம்.

ரொம்ப அழகா அதே சமயம் சொல்ல வரும் விஷயத்தைக் குழப்பம் இல்லாமல் அனைவரும் எளிமையா புரிகிற மாதிரி கொடுத்துள்ளார்கள்.

தனக்கு மகனின் துணை வேண்டும் என்று நினைக்கும் அப்பாக்கு, தற்காலிகமாக இயந்திர மனிதனை கொடுக்க, மறுக்கிறார் அப்பா.

காரணம், அனைத்துமே தான் பார்த்துச் செய்ய வேண்டும், இது செயற்கையாக உள்ளது என்று நினைக்கிறார்.

ஆனால், ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் அனுமதிப்பவர் பின்னர் அதைத் தன் மகனைப் போலக் கருதுவது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

Soubin Shahir

மலையாள திரையுலகில் Soubin Shahir தவிர்க்க முடியாத நபராக உள்ளார். இவரது படங்கள், கதாப்பாத்திரங்கள் அனைத்துமே கவனம் பெற்றவையாக உள்ளது.

தனியாக உள்ள அப்பாவை விட்டுப் பிரியவும் மனம் இல்லாமல், வேலைக்கும் போக வேண்டிய கட்டாயத்தில் Soubin Shahir நெருக்கடியில் வேதனைப்படும் போது பலரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார்.

ரஷ்யாவில் வேலைக்குச் சென்று, அங்கே ஒரு ஜப்பான் பெண்ணைச் சந்திக்கும் காட்சி ரசிக்கும்படி இருக்கும்.

அந்தப்பெண் வரும் போது ஜப்பான் இசை என்று நினைத்து ஒரு இசை வருகிறது ஆனால், அது சீன இசை என்று நினைக்கிறேன்.

Suraj Venjaramoodu

அப்பாவாக நடித்து இருப்பவர் Suraj Venjaramoodu. இவரது கதாப்பாத்திரத்துக்கு உண்மையாகவே வயதான நபரையே நடிக்க வைத்து இருக்கலாம்.

வயதானவராக இயல்பாக நடிக்க முயற்சித்தாலும், அது நடிப்பு என்பதை உடல்மொழி காட்டிக்கொடுத்து விடுகிறது.

ஆனால், இயந்திர மனிதனோடு அவர் பழக்கம், எரிச்சலில் இருந்து விருப்பமாக மாறுவது இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.

எதனால் இயந்திர மனிதன் பிடிக்கிறது என்பதை அவர் விளக்கும் காட்சி அழகு. ஒரு சராசரி நபரின் எதிர்பார்ப்புகளைக் கூறுவது போல உள்ளது.

அதில் முக்கியமான ஒரு விஷயம் எதிர் கேள்வி கேட்பதில்லை என்பது 😀 .

எதிர்பாராமல் இவரோட Crush யைப் பார்த்துப் பழைய நினைவுகளுக்குப் போவதை, ஆண்கள் வயதானாலும் மாறவில்லை என்பதைக் காட்டியுள்ளார்கள் 🙂 .

Soubin Shahir & Suraj Venjaramoodu இருவரும் Vikrithi திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் ஒரு நண்பன் நமக்கு உதவுவான், அக்கதாப்பாத்திரத்தில் Saiju Kurup நடிப்பு சிறப்பு.

இயந்திர மனிதன் Android Kunjappan Ver 5.25

படம் பார்க்கும் நமக்கே, இது போல ஒரு இயந்திர மனிதன் (Humanoid Robot) இருந்தால் நன்றாக இருக்குமே! என்று நினைக்கும் படியுள்ளது.

எந்திரன் சிட்டியை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது.

தன் பையனாகவே கருதுவதால், அதற்கு வேட்டி கட்டுவது, டிராயர் போடுவது, ஜாதகம் பார்ப்பதுன்னு அலப்பறை செய்துள்ளார்கள்.

பக்கத்துக்கு வீடு, கிராமத்தில் உள்ளவர்களுக்கு Android Kunjappan செல்லப்பிள்ளை ஆவது அழகு. நமக்கும் பிடிக்கும்.

என்னதான் இயந்திர மனிதன் அனைத்தையும் செய்தாலும், அது மனிதனை மாற்ற முடியாது என்பதைக் கூற வருகிறார்கள்.

இறுதியில் கூற வருவது புரிந்தாலும், புரியாத மாதிரியுள்ளது. ஏதாவது ஒரு பக்கத்தைத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.

குறைந்த முதலீட்டில் ஒரு விஞ்ஞானப் படத்தை எளிய மக்களுக்கும் புரிவது போல எடுத்துக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும்.

துவக்கத்தில் தொய்வு இருந்தாலும், இயந்திர மனிதன் வந்த பிறகு வேகம் எடுக்கிறது.

இயந்திர மனிதன் திரும்புவது, பேசுவதற்கு ஒலி சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. பாடல்களும் பொருத்தம். கேரளா அழகை ஒளிப்பதிவு நமக்குக் கொடுத்துள்ளது.

கேரள கிராமத்தை எப்படி யார் ஒளிப்பதிவு செய்தாலும் அழகாக இருக்கும் போல 🙂 .

Android Kunjappan Ver 5.25 இயக்குநருக்கு முதல் படமாம். அறிமுக இயக்குநர்கள் கலக்குறாங்க!

பரிந்துரைத்தது விஸ்வநாத். Amazon Prime ல் காணலாம்.

Directed by Ratheesh Balakrishnan Poduval
Produced by Santhosh T. Kuruvilla
Written by Ratheesh Balakrishnan Poduval
Starring Suraj Venjaramoodu, Soubin Shahir
Music by Bijibal
Cinematography Sanu Varghese
Edited by Saiju Sreedharan
Release date 8 November 2019 (Kerala)
Country India
Language Malayalam

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Driving Licence (மலையாளம் 2019)

Vikrithi (2019 மலையாளம்) | சமூகவலைத்தள தவறுகள்

Kumbalangi Nights (2019 மலையாளம்) | God’s Own Country

Virus (மலையாளம் – 2019)

கொசுறு

வீட்டில் அனைவரும் விடுமுறை ஊருக்குச் சென்று விட்டதால், இனி திரை விமர்சனங்கள் அதிகம் வரும் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, இந்த படத்தை என் அலுவலக மலையாள நண்பன் முன்பு பரிந்துரைத்து இருந்தான்.. நான் இன்னும் பார்க்கவில்லை.. இந்த படத்தை தமிழில் எடுக்க கே.ஸ்.ரவிக்குமார் உரிமைகளை வாங்கி வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.. விரைவில் தமிழிலும் காணலாம்.. மலையாள படத்தை பார்க்க ஆரம்பித்த பின் அந்த உலகத்திலிருந்து வெளியில் வர முடியவில்லை.. பார்த்த படங்களையும் திரும்ப, திரும்ப பார்க்க தூண்டுகிறது..

    அவர்களின் உடல் மொழியை புரிந்து கொண்டு படத்தை பார்த்தால் நிறைய காட்சிகளை இன்னும் ரசிக்கலாம்.. எனக்கு 70% மலையாளம் தெரியும் . இருப்பினும் நண்பர்களின் உதவியால் இன்னும் கற்று கொண்டு வருகிறேன்.. சமீபத்தில் வெகுவாக பாதித்த படம் Porinju Mariam Jose. ஏப்பா என்ன திரைக்கதை!!! அமைப்பு மட்டும் வசனங்கள்.. ஜோஸ்ன் நடிப்பு தனிரகம்..

    (வீட்டில் அனைவரும் விடுமுறை ஊருக்குச் சென்று விட்டதால், இனி திரை விமர்சனங்கள் அதிகம் வரும்) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here