படையப்பாவும் என் அப்பாவும்!

1
படையப்பாவும் என் அப்பாவும்!

ன் அப்பா ரஜினி ரசிகரில்லை ஆனால், எனக்கு ரஜினி பிடிக்கும் என்பதால், அவர் பற்றி முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகள், தகவல்கள் படித்து, தலைவரைப் பிடித்து விட்டது.

எனவே, திரைப்படம் வெளியாகும் போதெல்லாம், “என்னடா! ரஜினி படம் எப்ப வருது?” ன்னு கேட்பார். Image Credit

அவருடன் திரையரங்கில் பார்த்த படங்கள் கோச்சடையான், கபாலி மட்டுமே!

அப்பா அம்மா சென்னை வந்து இருந்த போது, அப்பா கேட்டார்கள் என்று கபாலிக்கு சென்று இருந்தோம். அப்பாக்கு படம் பிடிக்குமா?! என்று சந்தேகத்துடன் இருந்தேன்.

படம் இடைவேளையில் எனக்குக் கை கொடுத்து, “டேய்! உங்க தலைவர் நல்லா நடிச்சு இருக்காரு, படம் ரொம்ப நல்லா இருக்கு!” என்றார்.

எனக்கு நான் நடித்த படத்தையே சொன்ன மாதிரி ஒரு மகிழ்ச்சி 🙂 .

படையப்பா

தலைவர் நடித்த படங்களிலேயே அப்பாக்குப் பிடித்த படம் படையப்பா தான்.

தலைவர், ரம்யா கிருஷ்ணன் நடிப்பு ரொம்பப் பிடித்தது. அதிலும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை புகழ்ந்து கொண்டே இருப்பார். அவர் வசனம் பேசும் முறை, திமிர், ஸ்டைல் எல்லாமே அவரைக் கவர்ந்து விட்டது.

திரைக்கதை, இருவர் நடிப்பு, இறுதிக் காட்சி வசனம், வாழ்க்கை குறித்த தலைவரின் வசனங்கள், இயக்கம் என்று அனைத்துமே அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

தொலைக்காட்சியில் படமே பார்க்காதவர் “படையப்பா” போட்டால் மட்டும் அமர்ந்து விடுவார்.

ஒரு காட்சியில் ரம்யா கிருஷ்ணன் தலைவரோட நிழற்படத்தை ரசித்துக்கொண்டு இருப்பார். அது என்னன்னு அப்பா கவனிக்கலை, எதோ பார்க்குறாங்க என்று மட்டுமே நினைத்து இருந்தார்.

நான் விளக்கியவுடன் “அப்படியா!” என்று வியப்பாகக் கேட்டு அக்காட்சியையும் இயக்கத்தையும் பாராட்டினார். இது போல பல காட்சிகள் அவருக்குப் பிடித்தவை.

Parkinson

என்னோட அப்பாக்கு Parkinson என்ற நோய் உள்ளது. கை நடுக்கம், மறதி, நிற்கும் போது நிலைத்தன்மை இல்லாதது போன்ற பிரச்சனைகள் உள்ளது. தற்போது மறதி அதிகமாகியுள்ளது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு “படையப்பா” படத்தையே சுத்தமாக மறந்து விட்டார்.

எதோ ஒரு சமயத்தில் பேச்சு வந்த போது இப்படத்தைக் கூறினால், எதுவுமே நினைவில் இல்லை. “தெரியலை” என்று கூறி விட்டார், நானும் அதைப் பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஒரு வருடம் முன்பு சன் டிவியில் “படையப்பா” படம் பார்த்துட்டு இருந்தார், அதோட அதன் காட்சிகளையும் ரசித்துப் பார்த்துட்டு இருந்தார்.

என்னடா இது! மறந்துட்டேன்னு சொன்னாரு இப்ப பார்த்துட்டு இருக்காருன்னு” சென்று கேட்டேன்.

ஓ! இந்தப்படம் எனக்குப் பிடிக்குமா?!” என்று என்னையே திருப்பிக் கேட்ட போது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

பொதுவா நம் நினைவில் இருக்கும் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ரசித்தவை அப்படியே தொடர்ந்தால் மட்டுமே ரசனை அதே போல இருக்கும்.

நமக்கு அது குறித்த நினைவுகள் மறந்து விட்டால், முன்பு நாம் கொண்டாட்டமாக எப்படி ரசித்தமோ அந்த அளவுக்கான ரசிப்பு இருக்காது.

நமக்கே.. “அட! இதையா நாம் ரசித்தோம்!” என்பது போல வியப்பாக இருக்கும். ஏனென்றால், ரசனை மாறிக்கொண்டே இருக்கும்.

அப்பாவுக்குப் படம் குறித்த நினைவுகள் முற்றிலும் மறந்து போனாலும், இயல்பிலேயே இருந்த ரசிப்புத் தன்மை திரும்ப அதே படத்தை அவர் அறியாமலே ரசிக்க வைத்து இருக்கிறது.

எனவே, என் வாழ்க்கையில் படையப்பா மறக்க முடியாத படமாகி விட்டது 🙂 . படையப்பா என்றால் எனக்கு என் அப்பா தான் தற்போது நினைவுக்கு வருகிறார்.

பிற்சேர்க்கை – சென்று வாருங்கள் அப்பா!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

1 COMMENT

  1. படையப்பா படம் ரஜினிசாரின் திரை பொக்கிஷங்களில் ஒரு மைல் கல்.. எல்லா தரப்பு மக்களாலும் ரசிக்க கூடிய படம்… உங்கள் தந்தையின் உடல்நிலை தேறி வர என் பிராத்தனைகள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!