இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த படங்களுடைய பாடல்களின் இசை உரிமை குறித்த சர்ச்சை சமீபத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. Image Credit
தன் அனுமதி இல்லாமல் யாரும் தன் இசையைப் பயன்படுத்தக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்து அதற்கு அனுமதியும் பெற்று இருக்கிறார். இந்தக் கட்டுப்பாடால் பண்பலை அலைவரிசைகள் தான் அதிகம் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றன.
யாருக்கு உரிமை?
ஒரு பாடலின் உரிமை யாருக்குச் சொந்தம்? எனக்கு ரொம்ப நாட்களாக இருக்கும் சந்தேகம். எவருக்கும் சரியான / விளக்கமான பதில் தெரிந்தால் கூறவும்.
ஒரு படத்தின் முழு உரிமையாளர் என்பவர் படத்தின் தயாரிப்பாளர் தான்.
திரைப்படம் துவங்கப்படும் போது இயக்குநர், நடிகர்கள், இசையமைப்பாளர், பாடலாசிரியர் & மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு தங்கள் உழைப்பைக் கொடுப்பவர்கள்.
ஒரு படத்தில் தங்கள் பணி முடிந்து சம்பளத்தைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கும் அந்தப் படத்தில் அவர்கள் கொடுத்த உழைப்பு / சேவைக்கான உரிமை முடிந்தது.
முன்னரே இவை குறித்த ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே இதில் மாற்றம் இருக்கும்.
நான் ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்குப் பணி புரிகிறேன்.
அங்கே இருக்கும் போது ஒரு புதிய தொழில்நுட்பத்தை அந்த நிறுவனத்திற்காக உருவாக்கினால் அது அந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது, எனக்கானது அல்ல.
நான் உருவாக்கியது என்று கூறிக்கொள்ளலாம் ஆனால், அதை வைத்து நான் சம்பாதிக்க முடியாது.
நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினால் எனக்கான உரிமையும் முடிந்து விடும் காரணம், நான் அங்குச் சம்பளத்திற்குப் பணி புரிந்த ஊழியன்.
இதே அந்த நிறுவனத்திற்கும் எனக்கும் ஒப்பந்தம் இருந்தால், நான் பணி விலகினாலும் எனக்கான உரிமை இருக்கும்.
எளிமையாகக் கூற வேண்டும் என்றால், கூகுள் நிறுவனத்தில் ஒருவர் ஜிமெயிலை உருவாக்கி இருப்பார்.
ஆனால், அவர் பணியில் இருந்து விலகினால் அவரால் ஜிமெயிலுக்கு உரிமை கோர முடியாது, அதற்கான ஒப்பந்தம் இல்லாவிடில்.
ஜிமெயில் முழுக்கக் கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
இவை திரைப்படத்திற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். இது தான் என்னுடைய புரிதல். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
இளையராஜா என்ன முடிவு எடுத்து இருக்கிறார்?
இளையராஜா தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்துபவர்கள் பாடலுக்கான ராயல்ட்டி பணத்தைத் தனக்கும் தயாரிப்பாளருக்கும் கொடுக்க வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளரும் (தயாரிப்பாளர் சங்கம்) இளையராஜாவும் பயன் பெறுவார்கள்.
போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்தும் இன்னும் தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்துகிறார்கள் என்பது இளையராஜா அவர்களின் குற்றச்சாட்டு.
இதனால் என்ன பிரச்சனை?
இந்த அறிவிப்பின் மூலம் அனுமதியின்றி இனி யாரும் வர்த்தக ரீதியாக இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த முடியாது.
எடுத்துக்காட்டுக்கு பண்பலை வானொலிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் போன்றவை தற்போது போல விருப்பம் போலச் செயல்பட முடியாது.
இந்தத் தடை வர்த்தக ரீதியாகச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே! மற்றவர்களுக்குக் கிடையாது.
அப்படியே இருந்தாலும் இணையம் இருக்கும் வரை எளிதாகத் தரவிறக்கம் செய்து விடுவார்கள்.
சமூகத்தளங்களின் விமர்சனங்கள்
இளையராஜா இது போலச் சட்ட நடவடிக்கை எடுத்ததற்குப் பலர் சமூகத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது இளையராஜா பணம் கேட்கக் கூடாது, இளையராஜா இசை அனைவருக்கும் சொந்தம்!! என்பது போன்ற சென்டிமென்ட் வரிகளைப் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இளையராஜா பாடல்களை ரசித்தவர்கள் திடீர் என்று நாட்டாமை ஆகி தீர்ப்புக் கூற ஆரம்பித்து விட்டார்கள் 🙂 .
இளையராஜா அப்படி இப்படி என்று புகழ்ந்து கொண்டு இருந்தவர்கள் திடீர் போராளியாகி நியாயம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
தன் ஃபேஸ்புக் நிலைத்தகவலை எடுத்து வேறொருவர் போட்டாலே கொந்தளித்து விடும் நபர்கள் தான் இளையராஜா இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தான் எழுதிய கட்டுரையை யாராவது தங்கள் பெயரில் போட்டு விட்டால், கொலை குற்றம் நடந்தது போலக் கொந்தளிப்பவர்கள் தான் இளையராஜா இதை தடுக்கக் கூடாது என்கிறார்கள்.
உங்களுக்குச் சம்பள உயர்வே கொடுக்காமல் உங்கள் மேலதிகாரி பாராட்டிக் கொண்டு இருந்தால் “அட! இவர் ரொம்ப நல்லவர்யா.. மனுசன் என்னமா பாராட்டுகிறார்.
சம்பள உயர்வே தேவையில்லை” என்று இருந்து விடுவீர்களா?
பாராட்டை மட்டும் வைத்துக்கொண்டு இளையராஜா என்ன செய்வார்? இவர் உழைப்பை வேறொருவர் அனுபவித்தால் கோபம் வராமல் குளுகுளு என்றா இருக்கும்!
இவர்களுக்கு ஒரு நியாயம் இளையராஜாக்கு ஒரு நியாயமா?
இயக்குநர் சுந்தர்ராஜன்
இயக்குநர் சுந்தர்ராஜன் ஒரு முறை தான் இயக்கிய ஒரு படத்தின் பாடலைப் ஹலோ டியுனாகப் போட முயற்சித்த போது வழக்கமான கட்டணமான 30₹ கேட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து ஒரு திரைப்பட அறிமுக விழாவில் கூறிய இயக்குநர் சுந்தர்ராஜன்…
“நான் இயக்கிய படத்தின் பாடலுக்கு எனக்கே கட்டணம் கேட்கிறார்கள். எனக்கு இந்தப் படத்தால் கிடைத்த லாபத்தை விட இவர்கள் தான் அதிகம் சம்பாதித்து இருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளருக்கோ எனக்கோ எந்த லாபமும் இல்லை“
என்று வருத்தத்துடன் கூறினார்.
இவர் கூறுவது 30₹ கட்டணத்தை வாங்காமல் தனக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பதல்ல, தங்களுக்கு வரவேண்டிய படத்தின் நியாயமான வருமானம் / உரிமை எல்லாம் யாரோ ஒருவர் அனுபவிப்பதை நினைத்து வரும் ஆதங்கப் பேச்சு.
அந்தக் காலமும் இந்தக் காலமும்
இந்தக் காலத்தில் அனைவரும் உஷாராக இதற்கான ஒப்பந்தம் போட்டு எச்சரிக்கையாக உரிமையைப் பெற்றுப் பெருமளவில் சம்பாதித்து வருகிறார்கள்.
ஆனால் அந்தக் காலத்தில் இது குறித்த புரிதல் இல்லையாததால் பலரும் ஏமாந்து விட்டார்கள்.
இதனால் நொங்கு தின்பது ஒருத்தன் விரல் சூப்புவது இன்னொருத்தன் என்பது போல ஆகி விட்டது.
இதனால் பழைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் பெருமளவில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை இழந்து இருக்கிறார்கள்.
இதைத் தான் தற்போது இளையராஜா போராடி தனக்கும் தயாரிப்பாளருக்கும் பெற்று தந்து இருக்கிறார்.
இதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை.
பொக்கிஷம்
இளையராஜா இசை ஒரு பொதுச் சொத்து என்று வசனம் பேசுவதெல்லாம் சரி தான் ஆனால், இதனால் அவருக்கு என்ன பயன்?
அவருடைய இசை பொக்கிஷம் போல உள்ளது. இன்னும் இரண்டு தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா பழைய பாடல்களுக்குப் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும்.
அதன் பிறகு ரசனையில் ஏற்படும் மாற்றம் புதிய தலைமுறை மக்களின் எதிர்பார்ப்புக் காரணமாக மாற்றம் வரலாம் ஆனால், அதுவரை அவர் பாடல்களுக்கு ஆதரவு இருக்கும்.
இன்றைய பண்பலை தொலைக்காட்சிகள் / வானொலிகள் இரவு ஓடிக்கொண்டு இருப்பதே இளையராஜா பாடல்கள் மூலம் தான் குறிப்பாகப் பண்பலை அலைவரிசை.
வர்த்தக ரீதியாக இவர்கள் இளையராஜா பாடல்கள் மூலம் நேயர்களைத் தங்கள் இருப்பில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மொக்கைப் பாடலைப் போட்டால் யார் கேட்கப்போகிறார்கள்?
இளையராஜா பாடல்களுக்குத் தேவை இருப்பதால் தான் இவர்களும் திணறுகிறார்கள்.
பிரபலமான இசையமைப்பாளர்கள், நடிகர்கள் படங்கள் என்றால் தாங்களாக முன்வந்து பாடலை ஒலிபரப்புகிறார்கள்.
ஆனால், புதிய இசையமைப்பாளர் / நடிகர் படங்களின் பாடல்கள் என்றால் கண்டுகொள்ளப்படுவதில்லை.
ஏன்?
இதற்கு நேயர்களிடையே வரவேற்பு இல்லை அதனால் விளம்பர வருவாய் பெற முடியாது.
அதாவது இவர்களுக்கு லாபம் என்றால் மட்டும் ஒலிபரப்புவார்கள் வரவேற்பு இல்லை என்றால் தவிர்த்து விடுவார்கள்.
இதை நான் தவறு என்று கூறவில்லை. இதே நியாயம் தானே இளையராஜா அவர்கள் பாடல்களுக்கும்.
ஒருவேளை இளையராஜா பாடல்களை யாருமே கேட்பதில்லை என்றால், இளையராஜா இது போல வழக்குத் தொடர்ந்தால் இவர்கள் கண்டுகொள்வார்களா?
சரக்கு இருக்கிறது என்பதால் தானே இளையராஜா பாடல்கள் இன்னும் ரசிகர்களால் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது.
இவ்வளவு நாட்களாக இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் லாபம் சம்பாதித்தவர்கள் தற்போது கூடுதல் கட்டணம் என்றதும் விழிக்கிறார்கள்.
பாடல்களுக்கான கட்டணத்தை இளையராஜா விரும்பினால் குறைக்கலாம் ஆனால், கட்டாயம் கிடையாது.
உங்களின் திறமை காரணமாக நீங்கள் புதிய நிறுவனத்திற்கு மாறப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு யார் கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்களோ அவர்களிடம் செல்வீர்களா? அல்லது குறைவான சம்பளம் தான் கொடுப்போம் என்று கூறும் நிறுவனம் செல்வீர்களா?
எல்லோரும் தங்கள் உழைப்பை பணமாக்கும் போது இளையராஜா ஏன் செய்யக் கூடாது? அவர் ஒன்றும் ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கவில்லையே..!
இதற்கு ஏன் மற்றவர்கள் பொங்க வேண்டும்?!
தொடர்புடைய கட்டுரை – “என்றென்றும் ராஜா”
கொசுறு
கடந்த சிங்கப்பூர் பற்றிய இடுகையில் இந்த விசயத்தைக் கூற மறந்து விட்டேன். திருச்செந்தூர் முருகனை (உற்சவர்) சிங்கப்பூர் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
செங்காங் முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறு (7 – 6 – 2015) கடைசி நாள். எனவே, சிங்கப்பூரில் உள்ளவர்கள் சென்று தலைவர் தரிசனம் பெற்று வாருங்கள்.
முகவரி – Arulmigu Velmurugan Gnana Muneeswarar Temple, 50 Rivervale Crescent. (S)545029 .
Train Route Sengkang MRT –> Sengkang LRT –> Rumbia –> 5 minutes walk to temple.
கோவிலுக்குப் போனால் பிரசாதம் (சாப்பாடு) கொடுப்பார்கள் என்று நினைத்தால், ஒரு பெண் பிரசாதம் என்று கூறி உருண்டையாக ஒன்றைக் கொடுத்தார்.
சரி! எதோ இதாவது கிடைத்ததே என்று சாப்பிட்டால், அது பிஸ்கட்!
கவுண்டர் சொல்ற மாதிரி “அடப்பாவிகளா! புளிச் சோறுல முட்டையை வைத்துப் பிரியாணின்னு பொய் சொல்றியா” என்பது போல ஆகி விட்டது 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி அண்ணனனுக்கு
ஒரு நாட்டாமை நாற்காலி பார்சல்
கிரி, உங்களுக்கு உள்ளது போலவே எனக்கும் ராயல்டி என்ற ஒன்றில் சந்தேகம் உள்ளது… இளையராஜா அவர்களின் கோரிக்கையில் தவறு ஏதும் உள்ளது என்று எனக்கு தோன்றவில்லை…வருடங்கள் பல கடந்தும், பெருமளவிலான ரசிகர்களால் இவரது பாடல்கள் விரும்பபடுவது நிச்சயம் ஒரு மாபெரும் சாதனை… ஆயிரமாயிரம் விமர்சனங்களை தாண்டி நான் நேசிக்கும் ஒரு ஜீவன் இளையராஜா அவர்கள்… பகிர்வுக்கு நன்றி கிரி..
‘உலகின் சிறந்த Composers வரிசையில் உங்கள் பெயர் இடம் பெற்றிருப்பது பற்றி.. … …??
♫ அதைப் பற்றி எனக்கு ஒரு அபிப்பிராயமும் கிடையாது. அது எந்த Award’ஆக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது இந்த உலகின் மிக உயர்ந்த Award’ஆக நீங்கள் கருதும் ஒரு Award’ஆகக் கூட இருக்கட்டும். இசையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒருவனுக்கு எந்த award’ஐப் பற்றிய சிந்தனைகளும் இருக்காது.
நான் செய்யும் வேலைகளில் இருக்கும் குறைகள் எனக்குத் தெரிந்துகொண்டே இருப்பதால், நான் செய்யும் வேலையை நான் நிறையாக நினைப்பதே இல்லை. நான் ஓவ்வொரு நாளும் செய்யும் விஷயங்கள் ஆணி அடித்தாற்போல அப்படியே இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இறைவனின் அருளே.
எத்தனையோ பேர் எட்ட முடியாத உயரத்திற்கு நீங்கள்.. … ..
♫ எத்தனையோ பேர் எட்ட முடியாத உயரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு போகிறேன் என்றுதான் என்னால் நினைக்க முடிகிறதே தவிர, இதை ஒரு சாதனையாக என்னால் கருத இயலவில்லை. ஏனென்றால் அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால் தலைதான் பெரிதாகும். நீங்கள் இன்று என்னைத் தேடி வந்திருப்பதன் காரணம் என்னுடைய சாதனைகள் அல்ல. என்னுடைய சுத்தம். இசையினுடைய Purity என் மேல் உங்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, நாம் இங்கே சந்திக்கிறோம் என்றால், இது நிகழ்வதற்கு ’யாரோ என்னை Select செய்துவிட்டார்கள்’ என்பது காரணம் அல்ல. அதன் பின்னால் உங்கள் அன்பும், என் மேல் நீங்கள் வைத்திருக்கும் ஈடுபாடும் அல்லவா காரணம்? இதற்கு என்ன விலை கொடுத்துவிட முடியும்?
”சினிமாவில் வந்து சாதித்துவிட்டோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
♫ அப்படி எதுவுமே இல்லை. என்னிடம் வேலை வாங்கத்தான் ஆட்கள் இல்லை. என்னிடம் வேலை வாங்கிவிட்டதாக ஒருவன் நினைத்தால் அது அன்றைக்கு அவனுக்குக் கிடைத்த சாப்பாடு. அவ்வளவே. இட்லியோ, பழையசாதமோ, என்னிடம் இருந்து ஒருவன் பெற்றுக்கொண்டதை வைத்து என்னிடம் இருக்கும் விஷயங்களை கணக்குப் போட இயலாது.
”இத்தனை காலங்கள் கடந்து, இன்றைக்கு இருக்கக்கூடிய இளையதலைமுறையினரும் உங்களைக் கொண்டாடுகிறார்களே? இதைப் பற்றி..??
♫ சின்ன வயதில் நான் சென்னைக்கு வரும்போது என்ன Fire’உடன் வந்தேனோ, அதே Fire’உடன்தான் இன்று வரை இருக்கிறேன் என்பதைத்தான் அது காட்டுகிறது
“ஓரோர் சமயம் உங்கள் பாட்டைக் கேட்கும்போது அதே ட்யூனை முன்பே வேறொரு பாட்டில் கேட்ட மாதிரி இருக்கிறதே ?” என்று கேட்டார் ரவிச்சந்திரன்.
“அது சரி. மொத்தம் இருப்பது ஏழு ஸ்வரங்கள் தான். எப்படி ட்யூன் போட்டாலும் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு சாயல் வருவது சகஜம்தான்” என்றவர், “வீடு வரை உறவு” என்ற அடிகளைப் பாடிக் காட்டி, அதே போல் வரும் வேறு சில பாடல்களையும் பாடினார். (ரவை புரளும் சன்னமான சாரீரம் அவருக்கு இருக்கிறது.)
“உங்கள் பாடல்களைப் பல முறை கேட்டு வருகிறேன். மெட்டையும் சாகித்தியத்தையும் தவிர இன்னும் ஏதோ ஒன்று பாட்டுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்ன ?” என்று டாக்டர் கேட்டார்.
இதே கேள்வியை பம்பாயிலிருந்து வந்த ஒரு பெண் என்னிடம் கேட்டாள். அது என்னவென்று என்னால் எப்படி விளக்க முடியும் ? ஆரம்ப காலத்தில், நான் கற்றுக் கொண்ட, தெரிந்து கொண்ட, நாட்டுப்புற ட்யூன்கள் மொத்தத்தையும் கொட்டிவிட்டேன். ஐயோ, இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருந்த போது, தானாகவே பாட்டு வர ஆரம்பித்தது. சிவாஜி காலமான சமயம் அவருடைய மனைவி என்னிடம் அழுதார். ‘அவருக்கு பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். அன்று என்ன படம் இருக்கிறது, என்ன நடிக்கப் போகிறோம் என்ற திட்டங்களை பாத்ரூமில் தான் யோசித்து வைத்துக் கொள்கிறேன் என்பார். வீட்டில் எந்த இடம் சுத்தமாயில்லாவிட்டாலும் பாத்ரூம் மட்டும் சுத்தமாக இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்’ என்று சொல்லி கண்ணீர் வடித்தார். எனக்கு அந்த மாதிரி இல்லை. ஆர்மோனியத்தின் முன்னே உட்கார்ந்ததும் இசை வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது ? ‘It happens. Music happens “ என்றார் ராஜா.
டாக்டர் கௌரிசங்கர், “நீங்கள் ரொம்பப் பிரமாதமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள். சில சமயம் ரொம்ப சாதாரணமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள். அது எதனால் ?” என்று கேட்டார்.
ராஜா சிரித்தார். “இன்னாருக்குப் பாட்டுப் போடுவேன், இன்னாருக்குப் போட மாட்டேன் என்று நான் சொல்வதில்லை. ‘நீங்கள் மியூசிக் போடுகிறீர்கள் என்று சொன்னால் உடனே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார்கள். ஒப்புக் கொள்கிறேன். படம் நன்றாக அமைவதோ, மோசமாக அமைவதோ அவரவர் கொடுப்பினை. சிக்னலில் கார் நிற்கிறது. ஏழையொருவன் வந்து கை நீட்டுகிறான். பையில் கையைவிட்டுக் காசை எடுப்பதற்குள் சிக்னல் கிடைத்து, கார் நகர்ந்து விடுகிறது. இன்னொரு சிக்னலில், வேறொரு ஏழை கை நீட்டுகிறான். ஒரு ரூபாய் போடலாம் என்று எடுத்தால் பத்து ரூபாய் நோட்டாக வருகிறது. போடுகிறோம். அதை என்னவென்று சொல்வது ?”
அட்டகாசம் தல பதிவு
வரிக்கு வரி அப்படியே ஒத்து போறேன்
– அருண் கோவிந்தன்
அட என் மனசுல இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்களே…… நன்றி
இளையராஜாவின் முடிவு சரிதான் அண்ணா…. எவ்ளோ நாள் தான் இவங்க அவர ஏமாத்துவாங்க … இந்த முடிவ அவரு கொஞ்சம் முன்னாடியே எடுத்து இருக்கலாம் ….
இந்த ராயல்டி விவகாரத்தில் இனி வரும் படங்களின் தயாரிப்பாலர்களாவது உஷாராக இருந்து லாபம் சம்பாதித்து கொள்ள வேண்டும் …
அனைவரின் வருகைக்கும் நன்றி
“சமூக தளங்களில் வரும் கடுமையான விமர்சனங்கள் சாதாரண மக்கள் எழுதுவதல்ல. அரசியல் பின்னணியில் அரசியல் காரணங்களுக்காக எழுதபடுபவை. ”
நீங்கள் சமூகத் தளங்களையும் ஊடகங்களையும் குழப்பிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
சமூகத் தளங்கள் என்பது ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ மற்றும் Blogs. இவற்றில் இருப்பது சாதாரண பொது மக்களே! அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் அல்ல.
ஊடகங்கள் என்பது தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், புலனாய்வு இதழ்கள் போன்றவை. இதைத் தான் நீங்கள் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
எனவே, உங்கள் புரிதல் தான் தவறு.
“இளையராஜா உங்களுக்கு பிடித்தமானவர் என்பதால் அவருக்கு எதிரான விமர்சனத்தை தட்டி கேட்டிருகிறீர்கள் இங்கே. இதுவே உங்களுக்கு பிடிக்காத ஒரு பிரபலம் என்றால் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.”
இளையராஜா எனக்குப் பிடித்த பிரபலம் என்று உங்க கிட்ட யார் கூறியது?
ஒருவேளை இளையராஜா ரசிகனாகவே இருந்தாலும் இந்தக் கட்டுரை எழுதுவதில் என்ன தவறு? கட்டுரை சரியா தவறா என்று மட்டும் விமர்சியுங்கள். நான் இவரின் ரசிகர் என்பதால் இதைக் கூறுகிறேன் / கூறவில்லை என்பதெல்லாம் அவசியமில்லாதது. அனைத்திற்கும் கருத்து கூற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
மேகி பிரச்சனை இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லாதது இதற்கு நான் பதில் கூற முடியும் என்றாலும் தொடர்ந்தால், விவாதம் கட்டுரையின் மையக் கருத்தில் இருந்து விலகி விடும்.
இந்தக் கட்டுரை (இளையராஜா இசை உரிமை குறித்த) விமர்சனங்கள் இருந்தால் கூறுங்கள், தொடர்ந்து விவாதிக்கலாம்.
சமூக தளங்களில் வரும் கடுமையான விமர்சனங்கள் சாதாரண மக்கள் எழுதுவதல்ல. அரசியல் பின்னணியில் அரசியல் காரணங்களுக்காக எழுதபடுபவை. இளையராஜாவின் நடவடிக்கையால் பாதிக்க படுவது ரேடியோ மற்றும் டிவி . அதை நடத்துபவர்கள் அரசியல் வாதிகள். அதனால் சமூக தளங்களில் பொங்குகிறார்கள்.
சாதாரண மக்கள் (ரசிகர்கள்) இதை கண்டு கொள்ளவும் மாட்டார்கள். நாக்கில் விஷம் தடவிக்கொண்டு யாரையும் விமர்சிக்கவோ நக்கல் செய்யவோ மாட்டார்கள். திரைப்பட பிரபலங்கள் அரசியல்வாதிகளின் soft target.
ஒரு சினிமா flop ஆனால் நாயகனாக நடித்தவரை எவ்வளவு கேவலமாக மட்டமாக விமர்சனம் செய்கிறார்கள். படம் flop ஆவது என்ன உலக மகா குற்றமா. சில சினிமாக்கள் ஹிட் ஆகும். சிலது வெற்றி பெறாமல் பொய் விடும். தோல்வி அடைய வேண்டும் என்று யாரும் படம் எடுப்பதில்லை.
இளையராஜா உங்களுக்கு பிடித்தமானவர் என்பதால் அவருக்கு எதிரான விமர்சனத்தை தட்டி கேட்டிருகிறீர்கள் இங்கே. இதுவே உங்களுக்கு பிடிக்காத ஒரு பிரபலம் என்றால் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு வேளை சந்தோஷ பட்டிருப்பீர்கள். ஆதரித்தும் இருப்பீர்கள். அது தான் அரசியல் வாதிகளின் வெற்றி.
தற்சமயம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் maagi பிரச்சினையில் கூட உண்மை குற்றவாளி இந்த உணவுகளுக்கு அனுமதி அளித்த அரசாங்கம் தான். ஆனால் சமூக தளங்களில் தாக்க படுவது நடித்த நடிகர்கள் மட்டும் தான். அவர்களும் நம்மை போல சாதாரண மக்கள் தான்.
உணவில் இருக்கும் chemicals பற்றி அவர்களுக்கும் தான் என்ன தெரியும். பணம் கொடுத்தால் நடித்து விட்டு போகிறார்கள். அது அவர்களின் profession . என்னையோ உங்களையோ கூப்பிட்டு நடிக்க சொல்ல மாட்டார்கள். காரணம் நாம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அல்ல.
மீடியா , செய்தி தாள்கள். வலை தளங்கள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அரசியல் வாதிகள் ஆடும் ஆட்டத்தில் மாட்டி கொண்டு தவிப்பவர்கள் பாவம் நடிகர்கள். ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால் ஆட்சியில் இருக்கும் போது எவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்கும்.
கிரி,
என் நினைவில் உள்ளதை எழுதுகிறேன்; மேலும் துல்லியமான விவரங்களுக்கு “கூகுள் இட்”.
IPR – Intellectual Property Rights……. [அறிவுசார் காப்புரிமை]
இதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
IPR பெயர் ஒன்று போதும் இந்த பிரச்சனையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள,
இது எந்த வருடத்தைய சட்டம் என்று ஞாபகம் இல்லை, இதன் அடிப்படையில் முதன் முதாலக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர் பிரபல இந்தி பாடலாசிரியர் குல்சர். இவர் ஜெயித்ததும் தெற்கே [கார்த்திக்]ராஜா விழித்தார்.
பிரச்சனைக்கு மூல காரணம் பண்பலை நிறுவனங்கள் அல்ல; ஆடியோ நிறுவனங்கள்தான்.
செல்போன் நிறுவனத்தினர் / ஒரு பண்பலை நிறுவனத்தினர் ஒரு மாதத்தில் எந்த எந்த பாடல்களை ஒலிபரப்பினார்கள் என்ற விவரத்தின் அடிப்படையில் உரிமம் பெற்ற ஆடியோ நிறூவத்திற்கு சேர வேண்டிய தொகையை கொடுப்பார்கள் [ இவர்கள் இருவருக்கும் இந்த பாடலுக்கு இவ்வளவு என்று ஒப்பந்தம் இருக்கும்] வரும் தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கை IPR – சட்டத்தின் படி ஆடியோ நிறுவனத்தினர் இசையமைப்பாளருக்கு பங்கு கொடுக்க வேண்டும். [சி.டி விற்பனையிலும் பங்குண்டு]
இங்குதான் பிரச்சனை ஆடியோ நிறுவனத்தினர் மொத்தமாக லவட்டிக் கொண்டனர்,
உதாரணமாக் எம்.எஸ்.வியின் பாடல்களுக்கான [பெரும்பாலான] தொகை HMV – க்கு செல்கிறது; அது போல் இளையராஜாவின் பாடல்களுக்கான [பெரும்பாலான] தொகை echo பார்த்தசாரதிக்கு செல்கிறது.
“ராஜாவுக்கு நீங்க தரவேண்டாம் எங்கிட்டயே டீல் வச்சிக்கோங்க பத்து ரூபா பாட்டை எட்டு ரூவாய்க்கு வேணா தரேன்” ஆடியோ நிறுவனத்தினர் FM நிறுவனத்திடம் பேசுவது இந்த ரகத்தில்; இது எனக்கு நெருங்கிய FM நண்பர் சொன்ன தகவல்;
எஃக்கோ பார்த்தசாரதி பணம் தரவில்லை என்று அகி மியூஸிக் நிறுவனத்துக்கு உரிமையை மாற்றிக் கொடுத்தார் [ மேலும் ஒரு நிறுவனத்துக்கும்[ஓரியண்டல்] கைமாறியது என நினைக்கிறேன்], அகி மியூஸிக் அகிலனும் ராஜாவுக்கு நாமத்தை சாத்த, இப்போ எல்லோருக்கும் எதிராக தடை வாங்கியுள்ளார்,
FM நிறுவனத்தினர் [நண்பர்] என்ன சொல்கிறார் என்றால் தீர்ப்பின் விவரம் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை; அதுவரை முன்பு செய்த ஒப்பந்தத்தையே தொடருவோம் என்கிறார்.
இதில் [கார்த்திக்]ராஜாவின் தவறு என்பது சரியாக பிஸினஸ் செய்யவில்லை, இரண்டு மூன்று நிறூவனங்களுக்கு மாற்றி மாற்றி கொடுத்து மிகத்தெளிவாக குழப்பியது மட்டுமே, இப்போ தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொடுத்துள்ளார் என்னைக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் மீது வழக்கு போடப்போகிறாரோ? 🙂
எம்.எஸ்.வி உட்பட மற்றவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் ராஜா ஜெயித்தால் அந்த வழியை பின்பற்றலாம் என்று;
உங்கள் மேல் கோபமாக எழுதியது அல்ல. கோபப்பட இது ஒன்றும் பர்சனல் மேட்டர் அல்லவே. நானும் என் நண்பனும் பேசிக்கொண்டதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான். உங்கள் கட்டுரையில் தவறு எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. We like your articles .
@காத்தவராயன் விளக்கத்திற்கு நன்றி 🙂
எஃக்கோ நிறுவனம் இளையராஜா துவங்கியதாக எங்கேயோ படித்த நினைவு.
எம் எஸ் வி எல்லாம் எத்தனை பாடல்கள்!!!
@Guest நன்றி