பில்லி சூனியம் செய்வினை [Black Magic] உண்மையா?

17
Black Magic பில்லி சூனியம் செய்வினை

டவுள் இருக்கிறாரா இல்லையா! என்பது எப்படியொரு தீர்க்க முடியாத விவாதமோ அதே போலத்தான் பில்லி சூனியம் செய்வினை.

கடவுள் இருக்கிறார் என்றால் அதற்கு எதிராக உள்ள சாத்தானும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். Image Credit

நல்லது இருக்கிறது என்றால் கெட்டதும் நிச்சயம் இருந்தாக வேண்டும்.

கடவுள் பற்றிய செய்திகள் வரும் அளவிற்கு கெட்டதான, பேய், பிசாசு, பில்லி சூனியம் செய்வினை போன்றவற்றைப் பற்றிய செய்திகளும் வருகிறது.

ஆனால், ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

“நடந்தது என்ன?” போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே இதை மக்கள் காண நேருகிறது.

கடவுளின் கோவில்கள் நிறைய இருப்பதால் எல்லோரும் அங்கே செல்கிறோம், அது பற்றிய நம்பிக்கை வளர்கிறது.

அதோடு, கடவுள் நன்மை மட்டுமே செய்வதாகக் கருதுவதால் அவரை வணங்குகிறோம் அதனால் அவர் பிரபலமாக இருக்கிறார் 🙂 .

பேய்க்குக் கோவில்!!

கெட்டது செய்வது என்பதால், பில்லி சூனியம், பேய் போன்றவை பிரபலம் ஆகவில்லை போல இருக்கு. பேய்க்குக் கோவில்!! வைத்தால் எவன் போவான்…? 🙂 .

பேய் இல்லை என்று கூறுபவர்களும் இரவில் பயப்படுவது நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கே ராக்கெட் சென்று விட்டாலும், இன்னும் மேலை நாடுகளிலும் பேய் பற்றிய செய்திகளுக்குக் குறைவில்லை.

YouTube ல் சென்று இது பற்றித் தேடினீர்கள் என்றால் ஏகப்பட்ட காணொளி வரும்.

சிலது டுபாக்கூராக இருக்கும், சிலது இப்படியும் நடக்குமோ! என்று நம்மைக் குழம்ப வைக்கும். பகலில் பேய் இல்லை என்பவர்கள் இரவு வந்தால் ஜெர்க் ஆவது நடக்கிறது.

எழுதப்படாத, பயம் பற்றிய தகவல் நம்மிடையே சுற்றிக்கொண்டு இருக்கிறது. சிலர் நம்புவார்கள், சிலர் அனுபவப்பட்டு இருப்பார்கள்.

இன்னும் சிலர் இதெல்லாம் இல்லை… சும்மா வெட்டிப் பசங்க பேசுவது என்று கூறிக்கொண்டு இருப்பார்கள் [ஆனால், அவர்களும் இரவில் தனியாகப் போகும் போது “டூய்” என்றால் திகிலாவது வேறு விஷயம் 🙂 ].

இதில் நம்பிக்கை உள்ளதா இல்லையா?

எனக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளது, சுருக்கமாக நமக்கும் மேலே எதோ சக்தி இருக்கிறது என்பதை நம்புகிறேன்.

நம்மையும் தாண்டி எதோ ஒரு விஷயம் உள்ளது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

பில்லி சூனியம் செய்வினை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

“அவ்வளவாக” என்று கூறும் போதே அதில் எதோ இருக்கிறது என்று உங்களுக்குப் புரிகிறது இல்லையா. ஆமாம்! எனக்கு இருக்கு ஆனால் இல்லை என்பது மாதிரி தான்.

சில விஷயங்கள் கேள்விப்பட்டால், எப்படி இது நடக்க முடியும்? சரி! சும்மா கப்சாவாக இருக்கும், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற ரேஞ்சுக்கு எவனாவது அவுத்து விட்டு இருப்பான் என்று புறக்கணித்து விடுவேன்.

இருந்தாலும் எனக்கு மனதிற்குள் இனம் புரியாத ஒரு பயம் இருப்பது உண்மை தான். இதில் மறைக்க என்ன இருக்கிறது!

முழுக்க முழுக்க உண்மை

இதன் பிறகு நான் கூறுவது முழுக்க முழுக்க உண்மை. எந்த ஏமாற்றலும் இல்லை, எந்தப் பொய்யும் இல்லை.

நெருங்கிய உறவினருக்குக் காலில் ஒரு புண் கிட்டத்தட்ட 14 வருடமாக உள்ளது. இதனால் அவர் பட்ட சிரமம் அதிகம். வலியால், நடக்கவே சிரமப்பட்டார்.

செல்லாத மருத்துவர் இல்லை. மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்து விட்டு, காலில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறி விடுவார்கள்.

இது மாதிரி எத்தனையோ மருத்துவரைப் பார்த்தும் குணமாகவில்லை.

என்னதான் பிரச்சனையாக இருக்கும் என்று அனைவருக்குமே குழம்பி விட்டது.

பாடம்

கொஞ்ச மாதங்கள் முன்பு, பாதிக்கப்பட்டவரிடம் அவருடைய நண்பர் ஒருவர், இது பில்லி சூனியமாகக் கூட இருக்கலாம்.

எனவே, எனக்குத் தெரிந்த ஒருவர் “பாடம்” போடுகிறார் அவரைச் சென்று பார்த்து வாங்க! என்று கூறினார்.

பாடம் என்றால் எதோ மந்திரம் கூறி வேப்பில்லை மூலம் அல்லது எதோ செய்வார்கள்.

இவரும், எத்தனையோ மருத்துவரைப் பார்த்தாகி விட்டது இந்த 14 வருடத்தில், சரி! இதையும் முயற்சி செய்து பார்ப்போம் என்று அவரிடம் சென்று இருக்கிறார்.

நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்” (நன்றி பதிவர், அமரர் அனுராதா) எனும் போது இது போன்ற விசயங்களில் நம்பிக்கை உள்ளவர் “ஏன் செய்து பார்க்கக் கூடாது” என்று யோசித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

அவர் நிலையில் நான் இருந்து இருந்தாலும் இதையே தான் செய்து இருப்பேன்.

பில்லி சூனியம் செய்வினை

அவர் பார்த்து விட்டு இவருக்கு யாரோ பில்லி சூனியம் செய்வினை வைத்து இருப்பதாகவும், அதனால் அவர் கூறிய கோவிலுக்குச் செல்ல வேண்டும், இது முடியும் வரை அசைவம் சாப்பிடக் கூடாது போன்ற சிறு கட்டுப்பாடுகள்.

கடைசியாக, இரவு படுக்கப் போகும் முன்பு மஞ்சளை தண்ணீரில் கலக்கி புண் இருந்த இடத்தில் தடவி இருக்க வேண்டும்.

இது போல தான் கூறும் வரை, செய்யக்கூறி இருந்தார்.

உறவினரும் இவர் கூறியதில் எந்தத் தவறும் நேராமல் சிரத்தையாக அனைத்தையும் செய்து வந்தார்.

ஐந்து மாதத்திற்குப் பிறகு (இவ்வளவு நாள் இவர் நம்பிக்கையோட இருந்ததே பெரிய விஷயம், நானாக இருந்தால் மனசை விட்டு இருப்பேன்) ஒரு நாள் காலையில் காலைக் கழுவும் போது புண்ணில் இருந்து சிறு துணி வந்துள்ளது.

அதிர்ச்சியாகி, அவரிடம் கூறியபோது, இது போல ஐந்து பொருட்கள் வரும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

இதன் பிறகு வந்த பொருட்கள், குழந்தையின் உடைந்த பல் போல ஒன்று, முடி, சிறு எலும்பு போன்றவை.

இவை அனைத்தும் ஒரே சமயத்தில் வரவில்லை, சில நாட்கள் இடைவெளியில்.

சந்தேகம்

சத்தியமாக இதை நீங்க நம்ப மாட்டீங்க… ஆனால், இது உண்மை. இப்ப உங்க மனதில் என்னென்ன சந்தேகம் வந்ததோ அத்தனையும் எனக்கும் வந்தது.

நானும் துருவித் துருவிக் கேட்டேன் ஆனால், அவர் கூறியதில் எந்தப் பொய்யும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தது.

இதை விட முக்கியமாக எனக்கு மிக நெருங்கியவரும் அதைப் பார்த்ததாகக் கூறினார். இவர்கள் என்னிடம் பொய் கூற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இதன் பிறகும் நம்ப மாட்டீங்க.. அவரின் கால் புண் சரியாகி விட்டது.

குழி போல இருந்த இடம் சரியாகி நன்கு மூடி விட்டது (காலின் அடிப்பாகம் அல்ல, மேல் பாகம்). எனக்கு வியப்பாகி விட்டது.

14 வருட துன்பம் அவருக்கு முடிவு பெற்றது. இனி செருப்புப் போடாமல் வெளியே எங்கும் செல்லக் கூடாது என்று கூறி இருக்கிறாராம்.

பிரச்சனை சரியானதில், அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு.. இருக்காதா பின்ன..!

இது முடிந்தாலும், இன்னும் அவருக்கு வேறு பிரச்சனைகள் வரலாம் என்றும், ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

வெறும் காலுடன் செல்லும் போது, நம்முடைய கால் மண்ணை எடுத்து இது போல சூனியம் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள்.

இப்பச் சொல்லுங்க நான் நம்புறதா! நம்பாமல் இருக்கிறதா!!

குறிப்பு:

இது எனக்கு வியப்பாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

அதை விட முக்கியம் ஜனகராஜ் மாதிரி ஆகி விட்டேன் 🙂 யாரிடமாவது சொல்ல வேண்டும், இல்லை என்றால் தலை வெடித்து விடும் போல இருந்தது 😀 .

எனவே, இதை ஒரு சம்பவமாக / செய்தியாக உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் அதனால், என்னைப் பில்லி சூனியம் செய்வினை சரி செய்பவனைப் போலக் கருதி, ஆலோசனை கேட்க வந்து விடாதீர்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரை

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

17 COMMENTS

  1. நமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. ஆனா அடிக்கடி டிவில பார்க்கும்போது அப்படியெல்லாம் இருக்குமோன்னு கொஞ்சம் சந்தேகம் வரும். ஆனா ஏதாச்சு ஏமாத்து வேலைன்னு சொல்லி சமாதானம் ஆகிடுவேன்.

    ஹிந்தி சீரியல்ல எல்லாம் மேக்கப் கூட சவுண்ட் எஃபெக்ட்டும் பலமா இருக்குமே? ஸ்ரீலங்காலயும் சிங்களச் சேனல்களில் இந்தக் கொடுமை சிங்களத்துல டப் பண்ணி ஓடிட்டு இருக்கும். அது மகாக் கொடுமை. 🙂 🙂

    ஆங் …. அப்பறம் … நம்ம வீட்டுல எல்லாம் “சன்”ன தூக்கினா என்ன தூக்கிடுவாங்க. தென்றல் புயலா வீசுது. அவ்வ்வ்

  2. எனக்கும் இந்த விஷயத்தில் மதில் மேல் பூனை போலத்தான் மனக்குழப்பம இருக்கிறது.

  3. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம், நம்பிக்கை பொறுத்தது… இதைப் பற்றி மேலும் மேலும் ஆராய்வதில்லை… (நினைப்பதேயில்லை) கொசுறுகள் அருமை… நன்றி…

  4. –> “இது போல ஐந்து பொருட்கள் வரும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்” பத்திரமாக எடுத்து வைத்து, கடைசியில் அவற்றை என்ன செய்தார்?

    –> “அதைக் கட்டியவுடன், அழுது கொண்டே இருக்கும் குழந்தை, அழுகையை நிறுத்தி விடும்.” இது எங்கள் ஊரிலும் நடப்பதுதான்.

    என் சித்தி பொண்ணுக்கு 12 வயது வரைக்கும் காய்ச்சல் வந்தால் (இதை குழந்தை-நலக்கம் என்கிறார்கள்), டாக்டரிடம் சென்றால் சரி ஆகாது. ஒலகடம் (அந்தியூர் அருகே) சென்று தாயத்து வாங்கி வந்து கட்டினால் உடனே சரி ஆகிடும். இதில் விசேஷம் என்னவென்றால், ஒலகடம் சென்று தாயத்து தரும்படி தாயத்து எழுதுபவரிடம் கேட்கும்போது, குழந்தைக்கு நலக்கம் இருக்கிறதா இல்லை வேறு காய்ச்சலா என்று நம்மைப் பார்த்தவுடன் அவரே சொல்லி விடுவார். நலக்கம் என்றால்தான் தாயத்து எழுதுவார் (நாம் எதுவும் சொல்லத் தேவை இல்லை, நம்மைப் பார்த்ததும் நம் குழந்தைக்கு நலக்கமா இல்லையா என்று அவரே சொல்லுவார்). அடுத்த விஷேசம், அங்கு அவர் தாயத்து எழுதியவுடனேயே (கொண்டுவந்து கட்டுவதற்கு முன்பே) என் சித்தி பொண்ணுக்கு காய்ச்சல் குறைந்து விடும். இது பலமுறை நடந்திருக்கிறது. ஆனால், இது 12 வயது வரைதான் கேட்கும் என்று தாயத்து எழுதுபவர் கூறியதால் (ஏனென்றால் 12 வயது வரைதான் குழந்தை-நலக்கம் வரும் என்கிறார் அவர்) 12 வயதுக்குப் பின் செல்லவில்லை. அவர் சொன்னபடி அதற்குப் பின் சரியாகாத அளவுக்கு காய்ச்சல் எதுவும் வரவுமில்லை.

    –> “இதில் தான் அமைதியாக இருப்பவர்கள் கூட, திடீர் மார்க்கெட்டிங் புலியாக மாறி நம்மை இம்சிப்பார்கள்”
    🙂 புரிகிறது, மன்னித்துக் கொள்ளுங்கள் பாஸ்… உணர்ச்சி வசத்தில் இம்சை ஆகிவிடுகிறது. மறுபடியும் நடக்காது. 🙂

  5. கிரி, ஆரம்பத்திலேயே பாதுக்காப்பா பகுத்தறிவு வாதத்திற்கு அணையை போட்டுடீங்க. இருந்தாலும் நான் நாத்திகன் என்பதால் ஒரு சில விஷயம் மட்டும். எந்த ஒரு நிகழ்விற்கும் மூலகாரணம் தெரியாததால் தான் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் ஏற்படுகிறது. உலகம் தட்டை என நம்பிக்கொண்டு இருந்தது அதை பற்றிய உண்மை அதுவரை தெரியாமல் இருந்ததால்.

    ஒரு மனோ தத்துவ நிபுணர் சொன்ன கருத்து மிக அருமை. “ஒருவர் பேய் இருக்கிறது என்று நம்பினால் அது அவரை பொறுத்தவரை ‘உண்மையே’. ஏன் எனில் அது அவர் சார்ந்த, அவர் வாழும் உலகம். அதை மறுத்துப் பேசுவதை காட்டிலும், நம்புபவரும், நம்பாதவரும், ஒரு பொதுப் புள்ளிக்கு வந்து ஆராய்ந்தால் உண்மைகள் தெளிவாகும். எதையும் மறுக்காதீர்கள். அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யாதீர்கள். யார் அதை எத்தனை உறுதியாக சொன்னாலும், அவர் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர் என்றாலும் (உங்கள் தந்தை ஆனாலும் சரி, தந்தை பெரியார் ஆனாலும் சரி) . ஆனால் அந்த நிலையிலேயே நின்று விடாமல் அதை ஆராய்ந்து, அதன் மூல காரணம் தெரியும் வரை ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.”

    ஆன்மீகத்தின் பலவீனமே, ஒரு நம்பிக்கையில் தெளிவு வரும் வரை கேள்வி கேட்க விடாமல், தேடுதலை, ஆராய்தலை தடுத்தி நிறுத்தி ஒரு முடிவுக்கு வந்து விடுவதுதான்.

    பதில் கிடைக்கவில்லை, தெரியவில்லை என்றால் அது தான் அந்த கட்டத்திற்கான நிலையே தவிர, பதில் கிடைக்காததாலேயே, ‘நமக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது’, அதனால் தான் இப்படி நடக்கிறது என்று முடிவுக்கு வரும் நிலை அல்ல. அப்படி ஒரு நிலையை கலீலியோவும் எடுத்து இருந்தால் , உலகம் உருண்டை என்று தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் பிடித்து இருக்கலாம் அல்லது இன்னும் உலகம் தட்டை என்றே நாம் நம்பிக்கொண்டு இருந்து இருக்கலாம்.

    மோட்டார் எதுவும் இல்லாமல் நீரானது, பூமியில் இருந்து 30 அடிக்கும் மேல் கொண்டு செல்லப்பட்டு பல layer கள் கொண்ட ஒரு sealed container இல், வழுக்கைக்கு நடுவில், இளநீராக மாறும் அற்புதமான ஒரு விஷயம், அறிவியலால் விளக்கக்கூடிய சாத்தியமே. அந்த process ஐ அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள முயற்ச்சிக்காமல் உடனே இது ‘ஏதோ ஒரு மாய சக்தி’ என்று முடிவு செய்வது தவறு.

  6. “எங்கள் (சிங்கப்பூர்) வீட்டில் “சன்” தொலைக்காட்சியே இல்லை, இவங்க சங்காத்தமே வேண்டாம் என்று Unsubscribe செய்து விட்டேன்.”….

    இதை முயற்சிக்கவும் … http://livetvchannelsfreein.com/suntv.html

  7. என்ன கிரி சார்,, நீங்க ரொம்ப குழம்பி போயிட்டீங்க போல இருக்கு.

  8. பேய் பற்றிய பயம் நமது ஜீன்கள் வழியாக பரம்பரை பரம்பரையாக வருகிறது என நினைக்கிறன் … ஆனாலும் அறிவியலுக்கு புலப்பாடத விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது

  9. ஹாய் கிரி,
    நம் கற்பனைக்கும்,எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்கள் இருக்க தான் செய்கின்றன..அவற்றை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.அதில் ஒன்னு தான் இந்த பில்லி-சூனியமும்..
    சுந்தர பாண்டியன் நல்ல பொழுது போக்கு படம்..இதிலும் வழக்கமான சசி படங்கள் போல இறுதியில் வன்முறை..

  10. கொசுறு அனைத்தும் அருமை கிரி . மற்றபடி , நீங்க சொன்ன விஷயம் நம்பாம இருக்க முடியல. yennnaaaa சொன்னது நீங்க. 🙂

  11. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஹாலிவுட் ரசிகன் சிங்களத்தில் டப் என்றால் இந்த ஹிந்தி சீரியல்களையா!

    @முத்து நீங்கள் கூறும் நலக்கம் என்பது தான் சரி. நான் இதைக் கூற மறந்து விட்டேன். மார்க்கெட்டிங் புலி என்று கூறியது Amway தயாரிப்புகளை நம்மிடம் விற்பவர்களை நினைத்துக் கூறியது 🙂 உங்களை அல்ல.

    @பாமரன் நான் எந்த முடிவிற்கும் வரவில்லை. இன்னும் குழப்பமாக இருக்கிறது என்று தான் கூறி இருக்கிறேன். விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த சங்கோஜமும் இல்லை. அதே போல நீங்கள் கூறும் இளநீர் உதாரணத்தில் ஒரு லாஜிக் உள்ளது நீர் மேலே செல்வதற்கு ஆனால், அதில் இருந்து தண்ணீருக்குப் பதிலாக துணி எலும்பு போன்றவை வந்தால் குழப்பம் வருமா வராதா! இது மட்டுமே எனது குழப்பம்.

    @மாக்கான் (ஏங்க! ஒரு நல்ல பேரா வைக்கக் கூடாதா!) நன்றி முயற்சித்துப் பார்க்கிறேன்.

    @முனீர் இப்படி நடந்த குழம்பாம என்னங்க பண்ணுறது? சரி.. உங்களுக்கு எப்படி இருக்கு 🙂

    @அகிலா உண்மை தான் (அது நிரூபிக்கப்படும் வரை) அப்புறம் வன்முறை படம் எல்லாம் சிப்ஸ் சாப்பிடுற மாதிரி பார்க்கிற ஆள் என்பதால், இது ஒன்றும் எனக்கு பெரிதாக தெரியவில்லை 🙂

    @ராஜேஷ் நீங்க சொன்னா சரி 🙂

  12. தல பதிவு நல்லா இருக்கு..கஷ்டத்துல ரொம்ப லாஜிக் எல்லாம் பாக்க முடியாது அந்த சமயத்துல என்ன செஞ்சா நாம தப்பிக்கலாம் நு தான் தோணும்.. அதை விட்டு வந்தா கூட மறுபடியும் அதை யோசிக்க கூட மனசு செய்யாது so அந்த டைம் ல மனசு என்ன சொல்லுதோ அதை தான் நாம உண்மை நு அடிச்சு நம்பிடுவோம்.. இது உண்மை யா இல்லை அந்த மனநிலை நம்ம (உங்க friend ) எதாவது ஒரு விஷயம் note பண்ணாம மிஸ் பண்ண வெச்சுதா நு தெரில.. எது எப்படியோ இப்ப அவர் recover ஆயிட்டார் ல அதுவே சந்தோசம் தான்..

    ரொம்ப இதை மட்டுமே நம்பி கிட்டு இருந்துட சொல்லாதீங்க உங்க நண்பர.. ஜஸ்ட் ஒரு suggestion

    சூரி நல்லா பேசி இருக்கார்

    – அருண்

  13. கிரி கொசுறு 3 க்கு மிக்க நன்றி. ரஜினி உனக்கு என்ன செய்தார் என்று கேட்கும் சிலரிடம் சொல்வேன்.. உங்களை மற்றும் சில நண்பர்களை எனக்கு தந்தார் என்று. நன்றி கெட்ட இந்த உலகத்தில் பணம் பொருள் எவ்வளவு இருந்தாலும் ஒரு நல்ல வழிகாட்டியாக ஒரு நண்பன் இல்லாவிட்டால் இவை எவ்வளவு இருந்தாலும் நொடிக்குள் இழந்துவிட கூடும்.

  14. என்னோட அப்பா ஒரு தடவ சொல்ல கேட்டிருக்குறேன்….

    அவரோட தாத்தா மதுரையில ஏதோ ஒரு பெண்ணை ரூட் விட்டதாகவும், விஷயம் தெரிஞ்ச பெண் வீட்டார் தாத்தாவுக்கு சூனியம் வைத்ததாக கேள்வி… எபக்ட் எப்புடீன்னா… தாத்தா மதுரையில இருக்குற வரைக்கும் கண்ணு தெரியாது… ஆனா மதுரைய தாண்டி வந்தா கண்ணு தெரியும்…

    அது தான் எங்க குடும்பம் மதுரைய விட்டு வெளியூருக்கு குடிபெயர்ந்ததுக்கான கதையா சொன்னாரு…

    இந்த மாதிரி பல தினுசான கதைகள் எல்லாம் இருக்குது …

  15. na kuda 10 vayasula 2 times anupava pattu irukean…. Yes pei endral nanum nambamal irunthean athu varai… But athai pathi ipa nanaikum pothu kuda sema kobam varuthu… Pei iku veanum na vayasu anavangala pidika veandiyathu thanae. Eathuiku china pasangala kastapaduthanum…

  16. மஞ்சள் செய்த மாயம்
    Demoid cyst என்பது ஒரு செல் வளர்ச்சி பொதுவாக பெண்களுக்கு ஓவரியில் வருவதுண்டு அதில் முடி நகம் எலும்பு போன்றவற்றைக் காணலாம் இவருக்கு வினோதமாக காலில் வந்துள்ளது துணி செல் தொகுதியாக இருக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!