சம்பளக்காரன் மட்டும் இளிச்சவாயனா?

16
சம்பளக்காரன்

மோடி 500 / 1000 நோட்டுகள் திரும்பப்பெறுவது குறித்த அறிவிப்பு வெளியான பிறகு இந்தியாவே களேபரமாக இருக்கிறது. Image Credit

ஆதரித்தும் எதிர்த்தும் ஊடகங்கள் மற்றும் சமூகத்தளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இக்கட்டுரையில் நான் கூறப்போவது இத்திட்டத்தை ஆதரித்து என்பதை முன்பே தெளிவாகக் கூறி விடுகிறேன்.

மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்

இத்திட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள், ஊடகங்கள், சமூகத்தளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலனவர்கள் கூறுவது ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பது தான்.

எந்த ஒரு பெரிய திட்டம் / மாற்றம் வரும் போது நிச்சயம் பலர் நடைமுறை சிக்கல்களையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியது வரும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

கறுப்புப் பணம் ஒழிப்பு

மோடி அரசு ஆட்சிக்கு வரும் போது கூறப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானது கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்பது.

மக்கள் இதற்காக மட்டுமே வாக்களிக்கவில்லை என்றாலும் இதுவும் ஒரு காரணம்.

வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணத்தை கொண்டு வருவதாகக் கூறிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, இன்றுவரை உருப்படியான செய்தியாக ஒன்றும் வரவில்லை.

பணம் தற்போது வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

கறுப்புப் பணத் திட்டங்கள்

பொதுமக்கள் பலரும் கறுப்புப் பணம் ஒழிக்கிறேன்னு மோடி சொன்னாரே என்ன ஆச்சு? என்று தொடர்ந்து கேட்டு வந்தனர்.

நானும் இவர் இப்படிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று தான் நினைத்தேன்.

ஆனால், தற்போது எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கையையும் இதன் முன்னர் நடந்த சம்பவங்களையும் கவனித்தால், இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவல்ல, நீண்ட மாதங்களாகச் செயல்பாட்டில் இருந்து சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

“ஆதார்” கணக்கு துவங்க அறிவுறுத்தப்பட்டது, வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு “ஜன்தன்” வங்கிக் கணக்கு துவங்கி பல கோடி மக்களுக்கு வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை எடுத்தார்.

இதன் பிறகு கறுப்புப் பணம் வைத்து இருந்தவர்களுக்குப் பணத்தை வரியுடன் கட்ட  அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தனையும் செய்த பிறகு தான் கறுப்புப் பணம் குறித்த தற்போதைய அறிவிப்பு வெளியானது.

எனவே, இதை அவசரக்கோலத்தில் செய்ததாகக் கூறுவது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.

ரகசியமும் நெருக்கடியும்

இவ்வளவு பெரிய விசயம் கடைசி நிமிடம் வரை ரகசியம் காக்கப்பட்டது என்பது சாதாரண விசயமில்லை.

அவர்கள் குழு அல்லாத ஒரே ஒருத்தருக்கு தெரிந்தால் கூட எளிதாக ஊடகத்திற்கு வந்து விடும். கறுப்புப் பண முதலைகள் எச்சரிக்கையாகி இருப்பார்கள்.

இது போல விசயம் என்றால் ஊடகங்களுக்கு யார் முதலில் கூறுவது என்ற போட்டியே இருக்கும். இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மத்திய அரசு செய்த தவறு, மக்களுக்குப் பணம் கிடைக்கச் சரியான அளவில் பணத்தை ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

ஆனால், அது போன்ற ஏற்பாடுகள் செய்தால், இத்திட்டம் குறித்த செய்தி கசிந்து விடும்.

இவையெல்லாம் காரணமாகக் கூறலாம் ஆனால், பணம் ஏற்பாடு செய்வதைச் சரியான முறையில் திட்டமிட்டு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஊடகங்களும் சமூகத்தளங்களும்

இத்திட்டம் அறிவிப்பான இரண்டாவது நாள் முதல் ஆரம்பித்த ஊடகங்கள் மற்றும் சமூகத்தளங்களின் எதிர்மறை செய்திகள் இன்று வரை நிற்கவில்லை.

நேர்மறையான செய்திகளைக் கூறிய ஊடகங்களைத் தேடித்தான் பிடிக்க வேண்டும்.

அந்த அளவுக்கு அனைவரும் மக்களின் கருத்துகளைக் கூறுகிறேன் என்று எதிர்மறை செய்திகளையே கூறி வருகிறார்கள்.

அக்கறை மக்கள் மீதா கறுப்புப் பணத்தின் மீதா?!

அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் எப்படியாவது தங்களது கறுப்புப் பணத்தைக் காப்பாற்றி விட முடியாதா என்பதிலேயே இருக்கிறது.

இத்திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றத்துக்கு ஊர்வலம் செல்கிறார்கள். மக்களின் நலனுக்காகச் சென்றார்கள் என்று நம்புகிறீர்களா?!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்களின் மீது அக்கறை இருப்பது போல பல்வேறு போராட்டங்களை அறிவிக்கிறார்கள், தினமும் அறிக்கை விடுகிறார்கள்.

மக்களுக்கு துவக்கத்தில் இருக்கும் பதட்டத்தைப் பயன்படுத்தி TRP / விற்பனை அதிகரிக்க விரும்பும் ஊடகங்கள் மக்களின் பதட்டத்தைக் காசாக்க, அதை அரசியல்வாதிகள் தங்களுடைய ஆபத்தைச் சரி செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

இது புரியாத மக்கள் “அட! நமக்காக இவர்கள் எல்லாம் எப்படிப் போராடுகிறார்கள்!” என்று மகிழ்கிறார்கள்.

சமூகத்தளங்கள்

ஊடகங்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் இல்லையென்பது போலச் சமூகத்தளங்கள் சமீபமாக மாறி வருகிறது. இது கவலையளிக்கும் போக்கு.

பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர காரணமாக இருந்ததும் சமூகத்தளங்களே ஆனால், இது போல உணர்ச்சி வசப்படுபவர்களைக் கொண்டுள்ளதும் சமூகத்தளங்களே!

ஊடகங்கள் போலச் சமூகத்தளங்களும் அப்போதைய பரபரப்பை மட்டுமே எழுதுகிறார்கள். பின் வேறு ஒரு விசயம் பரபரப்பனால் இதைக் கை விட்டு அடுத்ததுக்குத் தாவி விடுகிறார்கள்.

இதுவா மக்கள் மீதுள்ள அக்கறை?!

உதாரணத்துக்குச் சில சம்பவங்களைக் கூறுகிறேன் பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கடந்த வருட மழை பிரச்சனையில் சமூகத்தளத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு உதவிகரமாக இருந்தார்கள்! சமூகத்தளங்களின் மூலம் கிடைத்த உதவிகள் எண்ணிலடங்காதவை.

மக்களின் ஒற்றுமையை, உதவும் எண்ணத்தை ஒன்றுக்கும் உதவாத “பீப்” பாடல் பிரச்சனை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. ஊடகங்கள், சமூகத்தளங்கள் இதை விவாதிக்க நகர்ந்து விட்டார்கள்.

ReadBeep.. Beep.. Beeeeeeeep

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டமும் சிறப்பாகப் போய்க் கொண்டு இருந்தது. சமூகத்தளங்களில் பலத்த ஆதரவு.

அந்தச் சமயத்தில் இளங்கோவன், ஜெ வை ஆபாசமாகக் கூற அதை அதிமுக வினர் எதிர்க்க அனைவரும் அதன் பக்கம் திரும்பி விட்டார்கள். டாஸ்மாக் அம்போவானது.

சமீபத்தில் காவேரி பிரச்சனையின் போது தமிழ்நாடே தகித்தது. தற்போது நிலை என்ன?

மழை வந்து விட்டதா? அல்லது கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டதா?

ஒன்றும் நடக்கவில்லை. விவாதங்கள், பரபரப்புகள் எங்கே சென்றன? விவசாயிகளுக்குக் கண்ணீர் விட்ட ஃபேஸ்புக் போராளிகள் தற்போது பணம் எடுக்க முடியாத ஏழைகளுக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இது இன்னும் எத்தனை நாள்? எவ்வளவு சீக்கிரம் அடுத்த பரபரப்பு வருமோ அது வரை.

ஊடகங்களுக்கும் சமூகத்தளங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?! நான் கூறியதை உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக யோசித்துப் பாருங்கள்.

மக்கள் சிரமப்படவில்லையா?

தற்போது பொங்குகிறவர்கள் அனைவரும் மக்கள் சிரமப்படவில்லையா என்று ஏழைப் பங்களானாக மாறி விட்டார்கள்.

இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் மட்டும் என்ன “ஏழைகள் நாசமாகப் போகட்டும்” என்றா கூறினார்கள்.

உங்களுக்கு இருக்கும் அக்கறை ஆதரிப்பவர்களுக்கு உங்களைப் போலப் பொங்கவில்லை என்றாலும் நிச்சயம் இருக்கிறது.

அனைவரையும்  திருப்தி செய்யும்படியும் யாருக்குமே பாதிப்பில்லாமலும் எப்படி ஒரு மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்த முடியும்?! கனவில் கூட முடியாது.

என்ன தான் வேண்டும்?

கறுப்புப் பணத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, எல்லாம் வாயில் வடை சுடுவது என்று நக்கல் அடிப்பது. மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க உதவுகிறார்கள் என்று கூறுவது.

நடவடிக்கை எடுத்தால், ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று புலம்புவது.

என்ன தான்யா வேண்டும் உங்களுக்கு!!

பாம்பும் சாகனும் கம்பும் உடையக் கூடாது என்றால், எப்படி நடக்கும்?!

விவேக் நகைச்சுவையில் வருவது போல ஒரே மாத்திரையில் எல்லா நோயும் குணமாகனும் என்றால் எப்படி நடக்கும்?!

யாருக்கும் பாதிப்பு இருக்கக் கூடாதாம் ஆனால், கறுப்புப் பணம் ஒழியனுமாம் என்னங்கயா உங்க போராட்டம். 

அதற்கு மத்திய அரசு மந்திரவாதி அரசாக இருந்தால் மட்டுமே முடியும்!

ஒருவேளை இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால், மோடி கறுப்புப் பணம் ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை என்பீர்கள்.

சம்பளக்காரன் மட்டும் இளிச்சவாயனா?!

ஏழை மக்கள், சிறு வியாபாரிகள், பெரிய வியாபாரிகள் மட்டும் தான் உங்கள் போராளி கண்ணுக்குத் தெரியுமா?

கிறுக்கனுக மாதிரி என்ன அடித்தாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் சம்பளக்காரனுக உங்க கண்ணுக்குத் தெரிய மாட்டார்களா?!

சம்பளக்காரர்களுக்குச் சம்பளம் வருவதே வரிப் பிடித்தம் செய்த பிறகு தான்.

சம்பளக்காரனுக என்ன அடிச்சாலும் தாங்குவானுக, நடுத்தர வர்க்க கோமாளிகள் என்று சம்பாதிப்பதை எல்லாம் வரியின் மூலம் பிடுங்கி விடுகிறார்கள்.

வரியை சமாளிக்கச் செய்யும் அனைத்து வழிகளுக்கும் நெருக்கடி.

இது போதாது என்று எங்கே சென்றாலும் வரி, சாலை வரி, சாப்பிட்டால் வரி, ஏதாவது வாங்கினால் வரின்னு இறுதியில் என்ன தான் மிஞ்சும்.

சிறு வியாபாரிகள், பெரிய வியாபாரிகள், திரைத் துறையினர்,  நிறுவனங்கள் என்று எவருமே ஒழுங்கா வரி கட்ட மாட்டார்கள், நட்டக் கணக்கு காட்டி வருமானத்தை கறுப்புப்பணமாக மாற்றி வைத்துப் பணத்தைச் செலவு செய்வார்கள்.

ஆனால், சம்பளக்காரன் மட்டும் என்ன செய்தால் வரி குறையும் என்று தேடி செய்து அதிலும் பல சிக்கலை வாங்கி முழிக்கணும்.

எல்லோரும் ஏழைகள், சிறு / பெரு வியாபாரிகள் என்று ஆளுக்கொரு காரணம் / சமாதானம் கூறி பொய் கணக்குக் காட்டி வரி கட்டாம ஏமாற்றுவீங்க ஆனால், சம்பளக்காரன் மட்டும் இளிச்சவாயன் மாதிரி என்ன அடிச்சாலும் வாங்கிட்டே இருக்கணும்.

நல்லா இருக்குயா உங்க நியாயம்?

ஒரு சிறு மளிகைக்கடைகாரர் கறுப்புப் பணத்தை வரியில்லாமல் எப்படி மாற்றுவது என்று கேட்கிறார். அது அவருக்கா இல்லை தெரிந்தவருக்கா என்று தெரியவில்லை.

அவர் கூறிய தொகையைக் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறை தான். சத்தியமா என் வாழ்நாளில் இவ்வளவு சம்பாதித்து சேமிக்க இனி வாய்ப்பே இல்லை.

சிறு / பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், நகைக் கடை உரிமையாளர்கள் என்று ஒருவருமே உண்மையான கணக்கைக் காட்டுவதில்லை. 1

லட்சம் வருமானத்துக்கு 3,000 கூடக் கட்டுவது கிடையாது ஆனால், சம்பளக்காரன் மட்டும் 30,000 வரி கொடுக்கணும்!

ஜேப்பியார் நிறுவனத்தில் சமீபத்தில் அகப்பட்டது 8 கோடி பணம் ஆனால், அகப்படாதது எவ்வளவு கோடி! இதெல்லாம் என்ன கணக்கு?!

இவங்கெல்லாம் மேலும் மேலும் கறுப்புப்பணத்தை வெளியிட்டு எங்களைப் பாதிப்படைய வைப்பார்கள் இந்தச் சிரமம் உங்க கண்ணுக்குத் தெரியாது!

நான் மேற்கூறியிருப்பது அனைத்தும் வரி கட்டாமல் ஏமாற்றும் நிறுவனங்களை மட்டுமே!

சம்பளக்காரன் மட்டும் யோக்கியமா?

யார் சொன்னா?

100% ஒழுங்கானவன் என்று எவருமே இல்லை.

எதோ ஒரு வகையில் அரசாங்கத்தை ஏமாற்றி இருப்பான் ஆனால், மாற்றம் வரும் போது, திட்டம் அனைவருக்கும் பொது எனும் போது அனைத்தையும் செய்யத் தயாராகவே இருப்பான்.

ஒவ்வொருத்தனும் அவனவன் தகுதிக்கு ஏற்ப ஏமாற்றுகிறான். இதில் சிறியது என்ன பெரியது என்ன? யார் செய்தாலும் தவறு, தவறு தான்.

தற்போது கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களில் சம்பளக்காரனும் இருப்பார்கள் ஆனால், மற்றவர்கள் அளவுக்குப் பாதிப்பு இவனுக்கு இருக்காது காரணம், நல்லவன் என்று அர்த்தமில்லை.

எப்படி இருந்தாலும், வருமான வரியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தான். கட்டாயம் இல்லையென்றால் இவனும் ஏமாற்றத்தான் செய்வான்.

கட்டாயமோ விருப்பமோ ஆனால், வரி ஒழுங்கா (வேறு வழியில்லாமல்) கட்டுகிறான் என்பது உண்மை.

சம்பளம் உயர்ந்தால், வரி அதிகம் ஆகிறது என்று சம்பள உயர்வைக் கூட வேண்டாம் என்று கூறியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

இதனாலே சம்பளக்கார்கள் மத்தியில் இதற்குப் பெரியளவில் எதிர்ப்பில்லை, சமூகத்தளப் போராளிகள் தவிர்த்து.

கறுப்புப் பணத்தால் என்ன நடக்குது தெரியுமா?

“சிவாஜி” படத்தில் வரும் சுஜாதா வசனம் போல ஏழை மேலும் ஏழை ஆகிறான். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான்.

ஒரு நிலத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால், கறுப்புப்பணம் வைத்து இருப்பவன் 7 / 8 லட்சம் என்றாலும் வாங்கத் தயாராக இருக்கிறான்.

நகை 22 ஆயிரம் என்றால், 25 ஆயிரம் ஆனாலும் கவலைப்படாமல் வாங்கத் தயாராக இருக்கிறான்.

நவம்பர் 8 ம் தேதி அறிவிப்பு வந்தவுடன் இரவு 12 மணி தாண்டியும், கறுப்புப் பணத்தில் 22,500 மதிப்புள்ள நகையை 50,000 கொடுத்து வாங்குறான்.

இதனால், போலியாக விலை உயர்த்தப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் இன்னொருவன் பாதிக்கப்படுகிறான்.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்து வரி கட்டியது போக மீதிப் பணம் என்றால் ஒருவன் இதை வாங்க முடியுமா? இது போல வாங்கத்தான் நினைப்பானா?

இந்த மாதிரி ஒவ்வொரு பொருளின் விலையையும் போலியாகக் கறுப்புப் பணம் மூலம் உயர்த்தி ஒழுங்காக வரிகட்டும் நபரை பாதிப்படைய செய்கிறான்.

இதனால், இவையெல்லாம் எட்டாக்கனியாகவே பலருக்கு ஆகி விடுகிறது.

இதனால் மறைமுகமாகப் பாதிக்கப்படுவது சம்பளக்காரனான நாங்க மட்டுமல்ல, நீங்கள் ஏழைகள் என்று கூறுபவர்களும் சேர்த்துத் தான்.

இதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாது ஆனால், ATM வாசலில் இரண்டு மணி நேரம் நிற்பதைக் கதறிக் கதறி பெரிய செய்தியாக்குவீர்கள்.

உங்களின் போராட்டம் தற்காலிக பிரச்னையைச் சரி செய்வது ஆனால், நீண்ட காலப் பிரச்சனை?

கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா?

சத்தியமா ஒழியாது ஆனால், நிச்சயம் இத்திட்டத்தால் ஓரளவாவது பயன் இருக்கும். SOMETHING is better than NOTHING.

ஆடிட்டர்கள் கிட்ட கேட்டுப்பாருங்க, எவ்வளவு பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் இவர்களிடம் கதறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

இது ஒரு ஆடிட்டர் நண்பர், ஒரு ஆடிட்டர் உறவினர் கூறியது. மேற்கூறிய கறுப்புப்பணப் பட்டியலில் இன்னொருத்தரும் இருக்காரு.. அதைச் சொன்னால் பிரச்சனை.

மக்களின் நிலையைப் பயன்படுத்தி அநியாயமாகப் பணத்தை வாங்கிய அனைவரும் என்ன செய்வது என்று ஆள் பிடித்துப் பணத்தைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

10 கோடி இருந்தால், எப்படியோ பிரிச்சுப் போடறாங்க என்று நினைக்கலாம்.

100 கோடி 500 கோடி என்று வைத்துள்ளவர்கள், அதற்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் வெளியே சிரிக்கிறேன் உள்ளே அழுகிறேன் என்ற நிலை தான்.

வருமான வரித்துறையினர் இனி குடையப் போறாங்க பாருங்க…!

நான் 2012 ல் வெளியே கடன் வாங்கி 8 லட்சம் வங்கியில் பணமாக (வீட்டுக் கடனுக்காக) செலுத்தியதை இப்பணம் எங்கே இருந்து வந்தது என்று 4 வருடங்கள் கழித்துக் கடிதம் அனுப்பிக் கேட்குறாங்க.

எனக்கு எதுக்கு வாங்கினேன் என்று கூட மறந்து விட்டது.

இனி வரும் மாற்றங்கள்

மோடி தெரிந்தோ தெரியாமலோ அரசியல் காரணமோ மக்கள் மீதான அக்கறையோ எதோ ஒரு காரணத்தில் இதைச் செய்து விட்டார்.

இதன் பிறகு மோடிக்குத் தான் தலைவலி.

இதை நியாயப்படுத்த மேலும் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்படிச் செய்யவில்லை என்றால் தற்போது செய்தது ஒன்றுமில்லாமல் ஆகி விடும்.

50,000 க்கு மேல் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் மின்னணு (Digital) முறையில் மட்டுமே நடக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

மக்களுக்கு ஒன்றும் தெரியாது

போராளிகள் மக்களுக்காகப் பரிதாப்படுகிறார்களா அல்லது அவர்களை எப்போதுமே தெரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறார்களா!!

இப்பிரச்சனையால் சில கிராமத்தில் கூட மின்னணு / UPI பணப் பரிவர்த்தனை வந்து இருக்கிறது ஆனால், மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று போராளிகள் கூறி வருகிறார்கள்.

கிராம மக்கள் என்றால், முட்டாள்கள் என்று முடிவே செய்து விட்டார்களா?! ஏன் கிராம மக்களால் செய்ய முடியாதா?

தற்போது இல்லையென்றாலும் நிச்சயம் பின்னாளில் கிராம மக்கள் நீங்கள் அனைவரும் வியக்கும் வகையில் மின்னணு பரிவர்த்தனையில் கலக்கத் தான் போகிறார்கள்.

அதை நீங்களும் பார்க்கத் தான் போகிறீர்கள். முடியாது என்றால் எப்போதுமே முடியாது தான்.

முடிந்தால், தெரியாதவர்களுக்கு இதன் பயனைச் சொல்லிக்கொடுங்கள் அவர்களுக்குத் தெரியாது என்று அவர்களை மேலே வரவே விடாமல் உங்கள் தண்டமான பரிதாபப் பார்வையை வீசாதீர்கள்.

உதவவில்லை என்றாலும், தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மாற நினைப்பவர்களின் ஆர்வத்தைக் கெடுக்காதீர்கள்.

பிரச்சனைகள் நிரந்தரமா?

கடந்த இரண்டு வாரங்களாக இருந்த பரபரப்புத் தற்போது இல்லை. வங்கிகளில் கூட்டம் குறைந்துள்ளது. இனி படிப்படியாகக் குறைந்து வழக்கமான நிலைக்கு வந்து விடும்.

வியாபாரம் போன்றவை பாதிப்பில் இருந்து மீண்டு வர காலங்கள் எடுக்கும். பணப் புழக்காட்டம் குறைவதால், பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

வரும் உத்திரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது சந்தேகமே! வெற்றி பெற்றால் வியப்பே! ஆனால், இக்கோபம் நிரந்தரமானது அல்ல என்பதை மட்டும் கூற முடியும்.

திரும்ப ஓட்டரசியலுக்கோ அல்லது மற்ற அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்குப் பயந்தோ இத்திட்டத்தை மோடி திரும்பப் பெறாமல் இருக்கணும், அப்படிச் செய்து விட்டால் வெற்றி மக்களுக்கல்ல அரசியல்வாதிகள், கறுப்புப் பண முதலைகளுக்கே!

குறுகிய காலப் பிரச்னைக்குப் பயந்து அரசியல்வாதிகள், ஊடகங்கள் பொய் பரப்புரையில் ஏமாந்து நிரந்தர ஏமாற்றத்துக்கு இலக்காகி விடாதீர்கள்.

பிறகு திரும்ப இது போல நடவடிக்கை எடுக்க எவருமே துணிய மாட்டார்கள்.

இறுதியாக….

தற்போது ஏழை மக்களுக்காக என்று போராடிக்கொண்டு இருக்கிறவர்கள் / இருந்தவர்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் வேறு பரபரப்பு செய்தியில் தீவிரமாகி விடுவார்கள்.

அப்புறம்.. இந்த “ஏழை மக்கள்”?!

மழைப் பிரச்சனை, டாஸ்மாக், பீப் பாடல்!!, காவிரி பிரச்சனைக்கெல்லாம் ஊடகங்கள், போராளிகள் போராடினார்களே.. என்ன ஆச்சு?!

ஒண்ணும் ஆகலை..

அதே தான் இதுக்கும்.

தொடர்புடைய கட்டுரை

பணமதிப்பிழப்பு – GST சரியா தவறா?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

 1. கிரி, தெளிவான விரிவான அலசல். தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம் இது, இதன் நன்மை, தீமைகள் எதிர்காலத்தில் தெரியும். வங்கி மற்றும் இது சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்று. சில செய்திகளை பார்க்கும் போது கவலை அளிக்கிறது.

  திட்டத்தை கொண்டுவந்த பின், சில எதிர்ப்புகளுக்கு பின் காலஅவகாசம் நீட்டிப்பது அல்லது ரத்து செய்வது, பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சாதகமாக அமையலாம். (இன்றைய செய்தித்தாளில் படித்தது, 2018 செப்டம்பர் மாதத்திற்க்கு பின் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் விவரங்களை ஸ்விஸ் வங்கி, இந்திய அரசாங்கத்திடம் தரும் என்று.)

  நிறைய விளக்கமாக கூற ஆர்வம் இருந்தாலும், வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இந்த திட்டத்தின் நன்மை, தீமைகளை என்னால் கூற இயலாது. பகிர்வுக்கு நன்றி கிரி.

  • மோடியின் இந்த நல்ல நடவடிக்கையை பலரும் கிழிகிழி என்று கிழித்துக்கொண்டு இருக்கும்போது மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் தெளிவாகக் கருத்திட்ட உங்களைப் பாராட்டுகிறேன். இவர்கள் யாரும் எவரையும் எந்த நல்ல நடவடிக்கையையும் எடுக்க விடமாட்டார்கள். மோடியின் மன உறுதிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அவரது உறுதி தொடர வேண்டும். இது மாதிரி ஆட்களின் கமெண்டுகளுக்கு அவர் செவி சாய்த்துவிடக் கூடாது.

 2. மோடியின் மன தைரியத்தை பாராட்டுபவர்கள் அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு ஏன் அந்த மன தைரியம் இல்லை என்பதையும் தெளிவாக்கினால் நல்லது

  • ஜெயலலிதாவின் மனோதைரியத்தை கூடத்தான் பாரட்டுகிறார்கள். அவர் ஏதாவது கேள்விக்கு பதிலளிக்கிறாரா என்ன?
   சாதாரண பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் அரசியல்வாதிக்கு முக்கியம். பேஸ்புக்கில் வந்து முக்கும் போராளிகள் பெரும்பாலும் ஓட்டுபோடுவதில்லை அதே போலத்தான் எதிர்கட்சிக்காரனும் ஆதரவு ஓட்டுப் போடவதில்லை. எதைச் செய்தாலும் அதை நொட்டை சொல்லுவார்கள், அதுதான் இவர்களுக்கு பொழுதுபோக்கு/பிழைப்பு, இவனுகளுக்கு பதில் சொல்லி காலத்தை வீணப்படிப்பதற்கு மக்களுடன் பேசுவதே நல்லது.

 3. நல்ல பதிவு நண்பா ஆனா இந்த அரசியல்வாதிகள் தொல்லைதான் தாங்க முடியல மக்களுக்காக போராடுரேன்னு சொல்லிகிட்டு இவனுங்க பன்ற அலப்பர தாங்கமுடியல கெஜ்ரிவால் மம்தா அப்பறம் ராகுல் இவனுங்க எல்லாம் எதுக்குதான் உயிரோட இருக்கானுங்களோ

 4. தெளிவான விரிவான அலசல். தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம் இது, இதன் நன்மை, தீமைகள் எதிர்காலத்தில் தெரியும்.

 5. கிரி முடிஞ்ச அளவுக்கு சுருக்கமா எழுதப்பார்க்கிறேன்.

  இந்த பின்னூட்டத்தின் சுருக்கம் இதுதான்.

  சிஸ்ட்டத்தை மேலே இருந்து மாற்றனும்.

  ஊழலை கீழே இருந்து மாற்றனும்.

  =================

  சிஸ்டத்துக்கு ரெண்டு உதாரணம் கூறுகிறேன்.

  1. ஆரம்பத்தில் அரசு பேருந்துகளில் [ரூட் பஸ்] கார்பன் ஷீட் வைத்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் மிகப்பெரிய தில்லு முல்லு நடந்தது. எல்லா நடத்துனர்களும் திருந்துங்கப்பான்னு சொன்னா கேப்பாங்களா? கேட்க மாட்டாங்க. அவங்க கேட்கவில்லை என்பதற்காக ஒரே நாளில் எல்லோரையும் பணிநீக்கம் செய்ய முடியுமா? முடியாது. சிஸ்ட்டத்தை மாத்தனும், அதுக்கு அரசுதான் சரியான வழியை யோசிக்கனும். டிக்கெட் வெண்டிங் மெஷின் வந்த பிறகு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

  2. 49ஓ இருந்தப்ப எத்தனை பேரு அதுக்கு ஃபார்ம் எழுதி கொடுத்து வாக்களித்தார்கள். 49ஓக்கு போட விருப்பம் இருந்தாலும் நடைமுறை சிக்கல் அவர்களை தடுத்தது. நோட்டா வந்த பிறகு, நடப்பது உங்களுக்கே தெரியும். அவர்களுக்கன வசதி வேண்டும் அவ்வளவுதான்.

  இது போல சிலிண்டர் மானியம் விஷய்த்திற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பையும் மறந்துவிடக் கூடாது.

  **

  15 / 20 வருஷத்துக்கு முன்பு எத்தனை கம்பெனிகள் சம்பளப்பணத்தை வங்கிகளில் வரியை பிடித்துக் கொண்டு செலுத்தினார்கள்? அவர்கள் அந்த சிஸ்டத்துக்கு வர எத்தனை வருஷம் ஆச்சு? இப்போ உங்கள் அலுவலகத்தில் சம்பளத்தை ரொக்கமாக கொடுத்தால் எத்தனை சம்பளம் வாங்கும் இளிச்சவாயன்கள் என்று அழைக்கபடுபவர்கள் வரியை ஒழுங்காக கட்டுவார்கள்? அவர்கள் கட்டுவதற்கான சிஸ்டம் இருப்பதால்தான் கட்டுகிறார்களே ஒழிய “தேஷ் பக்தியெல்லாம்” இல்லை. இன்று சக்தி காந்ததாஸ் அளித்த பேட்டியில் இந்த மாசம் அரசு ஊழியர்களுக்கு ரெக்கமாக சம்பளம் கிடையாது என்று அறிவித்துள்ளார். அரசே இன்னும் இந்த சிஸ்டத்துக்குள் முழுமையாக வரவில்லை என்பதே ஆச்சர்யம் அளிக்கக் கூடியது.

  காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்திருப்போர் கண்டிப்பாக வரி ஏய்ப்பு செய்கிறார்கள், அவர்களை வருமானவரி சிஸ்டத்துக்குள் கொண்டு வருவது எப்படி என்றுதான் அரசு யோசித்திருக்க வேண்டும். இது இந்தியா போன்ற நாடுகளில் சாதாரணமானது அல்ல, இது கடினம் என்பதால் அவனிடம் இருப்பதை எல்லாம் ஒரே நாளில் பறித்துக் கொள்வதா? கணக்க காட்டிட்டு வாங்கிக்கோ என்றால் அவன் எங்கே போவான். நம்ம அதிகாரிகளும் புரோக்கர்களும் அவனிடம் இன்னமும் கறந்து கொழிக்க போகிறார்கள்.

  சரி செஞ்சிட்டீங்க, இனி அந்த காய்கறி கடை வைத்திருப்பவனை எப்படி கண்காணிக்க போகிறீர்கள்? என்ன செயல் திட்டம் உள்ளது? இதை அரசு ஆறஅமர யோசித்து முடிவெடுப்பதற்குள், மீண்டும் கணிசமான தொகை அவனிடம் சேர்ந்திருக்கும்.

  ஊழலுக்கு வருகிறேன்:

  அன்னா ஹசாரே லோக்பால் வருது, ஆவின்பால் வருது, எருமைப்பால் வருது, பசும்பால் வருது, எல்லோரும் மாட்டப்போறாங்க ஊழல் ஒழியப் போகுதுன்னு ஊளையிட்டதுதான் மிச்சம். ஒழிஞ்சதா? ஊழலை ஒழிக்க மக்கள் மனசு மாறனும். வியாபார நோக்கமில்லாத நல்ல கல்வியாலும், ஒழுக்கமா வாழனும் என்ற மனமாற்றத்தாலும்தான் இது முடியும்.

  இணையத்தில் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து படம்பார்க்க மாட்டேன் என்பது உங்கள் சுய ஒழுக்க கட்டுப்பாடு, அது போல் சுய ஒழுக்க கட்டுப்பாடு வரவேண்டும்.

  =================

  சிஸ்டமாய் இருக்கட்டும்
  ஊழலாய் இருக்கட்டும்

  மோடி தலைகீழாய் நடந்து கொண்டிருக்கிறார்.

  சில நேரம் அதை மக்கள் ஆச்சர்யமாய் சாதனையாய் பார்ப்பார்கள், சில நேரம் தெருக்கூத்து கோமாளியார் பார்ப்பார்கள்.

  அன்று மோடியை சாதனையளாராய் பார்த்த மக்கள் இன்று கோமாளியாய் பார்க்கிறார்கள்.

  கருப்பு பணம் வைத்திருக்கும் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன என்று வாதிக்கும் “மோடி பக்தர்கள்” அன்று மோடிக்கு ஆதரவாக ஊடகங்கள் ஒப்பாரி வைக்க அன்று மோடி எவ்வளவு கருப்பு கொடுத்திருப்பார் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள். ஒப்பாரி வைப்பது என்பது ஊடகங்களின் குலவழக்கம். ஜல்லிக்கட்டு வந்தால் மாட்டை அடக்க கிளம்பிவிடுவார்கள்.

  ====================

  என்னோட அறிவுக்கு எட்டியவரை; இந்த திட்டத்தால் எதுவுமே நடக்கப் போவதில்லை.

  மோடியின் இந்த திட்டத்தின் நோக்கம்.

  1. வராக்கடன் பிரச்சனையில் இருந்து வங்கிகளையும் கார்பரேட்களையும் காப்பது.

  2. அம்மா கண்டெய்னர் அரசு கண்டெய்னர் ஆனது போல; மோடியின் கைச்செலவுக்கு பணம் சேர்பது.

  இது இரண்டும் அமோக வெற்றியடைவது என்னமோ உறுதி.

  இந்த திட்டத்தின் வெற்றி/ தோல்வியை தெரிந்து கொள்ள ஜிடிபி, பணவீக்கம், பணமதிப்பு, பங்குசந்தை, விலைவாசி என்று எல்லாம் மேவாயில் கைவைத்துப் பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை.

  அடுத்து வரும் எந்த உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு எந்த கட்சியாவது துட்டு கொடுத்தால் இந்த திட்டம் தோல்விதான்.

  பிகு:
  ரிசர்வ் வங்கியில் 10ரூ நாணயத்தை வழங்குகிறார்கள் என்பது செய்தி, ஆனால் தமிழக அரசுப் பேருந்துகளில் 10ரூ நாணயத்தை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாம். [இன்று என்னால் 4 டவுண்பஸ்ஸில் என்னால் மாற்ற முடியவில்லை, அந்த நடத்துனர்கள் கூறிய தகவல். நடத்துனர்களிடம் டிப்போ மேனேஜர்கள் எரிந்து விழுகிறார்களாம், மேனேஜர்கள் கூறும் காரணம் வங்கியில் வாங்குவதில்லையாம்]

  மோடி அரசுதான் ஒரு மாதிரின்னா “அம்மா அரசு” அதுக்கும் மேலே 🙂

  • அருமையான அலசல். கண்டிப்பாக இதனால் பெரிய நன்மை ஏற்படும் என தோன்ற வில்லை. சில நன்மைகள் இருக்கலாம். நன்மையை விட பொருளாதார பாதிப்பும், இழப்புமே அதிகமாக இருக்கும் என தோன்றுகின்றது.

 6. அருமையான பதிவு. பழசு தான் ஆனா இப்படித்தான் சொல்ல முடியுது. புரியாதவனுக்கு புரிய வைக்கலாம். ஆனா புரியாத மாதிரி நடிக்கறவனுக்கு புரிய வைக்க முடியாது.
  இந்த திட்டம் எல்லாத்துக்கும் புரியுது .. ஆனா புரியாத மாதிரி மோடி ய வறுத்து எடுக்குறானுங்க. இது நாட்டுக்கு நல்லது இல்ல.

 7. அட விடுங்க சகோ…அவனவன் காறி துப்பிட்டு அடுத்த ரவுண்டுக்கு க்யூல போய் நின்னுட்டானுங்க… எத்தன உசுரு போனா நமக்கென்ன, எப்பிடியாப்பட்ட கிறுக்குத்தனமான திட்டமா இருந்தா நமக்கென்ன…நாம நமோ புகழ் பாடுவோம்… நமோ நமோ..

 8. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் “திட்டத்தை கொண்டுவந்த பின், சில எதிர்ப்புகளுக்கு பின் காலஅவகாசம் நீட்டிப்பது அல்லது ரத்து செய்வது, பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சாதகமாக அமையலாம்.”

  இது தான் பிரச்சனையே!

  அரசியல்வாதிகள் சொல்றாங்க.. கொஞ்ச நாளைக்கு மக்கள் பயன்படுத்த அனுமதிக்கணுமாம்.. இந்த கொஞ்ச நாள் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களுக்கு பணத்தை வெள்ளையாக மாற்ற போதுமானது.

  @குரு நேற்று பிரதமர் கலந்து கொண்டார் ஆனால், எப்படியும் விவாதம் நடத்தாமல் கத்திட்டே இருக்காங்க.. இதுல இருந்தால் என்ன இல்லாட்டி என்ன?

  @கார்த்திகேயன் மம்தா க்கு இருக்கும் பதட்டத்தைப் பார்த்தால், இவங்க தான் நிறைய பாதிக்கப்பட்டு இருப்பாங்க போல.

  @அஹோரி வார்டன்னா அடிப்போம் என்பது போல இருக்கிறது 🙂

  @ஆஷிக் அகமது அப்படி காறி துப்புனவங்க மேலேயும் காறி துப்பிட்டாங்களாமே!

  எப்படியாப்பட்ட நல்ல திட்டமாக இருந்தாலும், அது மோடி என்றால் எதிர்ப்போம் என்பது போலவா! 🙂

  நீங்க மோடியை திட்டிட்டு இருக்கீங்க.. உங்களைப் போல ஒரு முஸ்லீம் எப்படி இத்திட்டத்தை பாராட்டி இருக்காரு பாருங்க https://goo.gl/PFbEOV

 9. காத்தவராயன் வாங்க வாங்க! 🙂

  நான் துவக்கத்திலேயே இதற்கு ஆதரவு என்று கூறியதால், நீங்கள் கட்டுரையையே படிக்கவில்லை போல 🙂 .

  நீங்க சொன்ன பயணச்சீட்டு சாதனம், 49O மற்றும் எரிவாயு உதாரணம் ரொம்ப சிறப்பு.. அதிலும் பயணச்சீட்டு சாதனம் செம்ம.. யாரும் இப்ப ஒண்ணும் செய்ய முடியல.

  “இப்போ உங்கள் அலுவலகத்தில் சம்பளத்தை ரொக்கமாக கொடுத்தால் எத்தனை சம்பளம் வாங்கும் இளிச்சவாயன்கள் என்று அழைக்கபடுபவர்கள் வரியை ஒழுங்காக கட்டுவார்கள்? அவர்கள் கட்டுவதற்கான சிஸ்டம் இருப்பதால்தான் கட்டுகிறார்களே ஒழிய “தேஷ் பக்தியெல்லாம்” இல்லை.”

  இதை நான் கட்டுரையிலேயே யாரும் யோக்கியம் இல்லைனு சொல்லிட்டேனே!

  ****100% ஒழுங்கானவன் என்று எவருமே இல்லை. எதோ ஒரு வகையில் அரசாங்கத்தை ஏமாற்றி இருப்பான் ஆனால், மாற்றம் வரும் போது, திட்டம் அனைவருக்கும் பொது எனும் போது அனைத்தையும் செய்யத் தயாராகவே இருப்பான்.

  ஒவ்வொருத்தனும் அவனவன் தகுதிக்கு ஏற்ப ஏமாற்றுகிறான். இதில் சிறியது என்ன பெரியது என்ன? யார் செய்தாலும் தவறு, தவறு தான்.

  தற்போது கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களில் சம்பளக்காரனும் இருப்பார்கள் ஆனால், மற்றவர்கள் அளவுக்குப் பாதிப்பு இவனுக்கு இருக்காது காரணம், நல்லவன் என்று அர்த்தமில்லை.

  எப்படி இருந்தாலும், வருமான வரியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தான். கட்டாயம் இல்லையென்றால் இவனும் ஏமாற்றத்தான் செய்வான்.****

  நான் எங்க “தேஷ் பக்தி” என்று கூறினேன் 🙂

  “இன்று சக்தி காந்ததாஸ் அளித்த பேட்டியில் இந்த மாசம் அரசு ஊழியர்களுக்கு ரெக்கமாக சம்பளம் கிடையாது என்று அறிவித்துள்ளார். அரசே இன்னும் இந்த சிஸ்டத்துக்குள் முழுமையாக வரவில்லை என்பதே ஆச்சர்யம் அளிக்கக் கூடியது.”

  தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து ரொக்கமாக சம்பளம் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. மிகவும் பின்தங்கிய இடங்களுக்கு இந்த வசதி இல்லாமல் இருக்கலாம் ஆனால், அங்கும் வந்து விடும்.

  இன்னொன்று

  சிலர் இந்த மாதம் கணக்கில் சம்பளத்தை போடாமல் கையிலேயே கொடுக்க கேட்டு இருந்தார்கள். அதை சொல்கிறாரோ என்று முன்பு நினைத்தேன்.

  “சரி செஞ்சிட்டீங்க, இனி அந்த காய்கறி கடை வைத்திருப்பவனை எப்படி கண்காணிக்க போகிறீர்கள்? என்ன செயல் திட்டம் உள்ளது? இதை அரசு ஆறஅமர யோசித்து முடிவெடுப்பதற்குள், மீண்டும் கணிசமான தொகை அவனிடம் சேர்ந்திருக்கும்.”

  நீங்க சொன்ன கணிசமான தொகை சேர்ந்து இருக்கும் என்பதை முழுக்க ஏற்றுக் கொள்கிறேன்.

  ஆனால், வரும் காலங்களில் தான் தெரிய வரும். ஆற அமர நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது தொடர்ச்சியாக அறிவிப்பு / மாற்றம் வருமா என்று.

  பார்ப்போம்.

  “அன்னா ஹசாரே லோக்பால் வருது, ஆவின்பால் வருது, எருமைப்பால் வருது, பசும்பால் வருது, எல்லோரும் மாட்டப்போறாங்க ஊழல் ஒழியப் போகுதுன்னு ஊளையிட்டதுதான் மிச்சம். ஒழிஞ்சதா?”

  அண்ணா ஹசாரே, எழுதுவதில் எனக்கு ஒரு சரியான படிப்பினை.

  அவசரப்பட்டு எதையும் கூறக்கூடாது என்று என் மண்டை மேலே தட்டி புரிய வைத்தார் 🙂 . நான் இந்த சமயத்தில் பல கட்டுரைகள் இதனால் நன்மை நடக்கும் என்று நம்ம்ம்ம்ம்பி எழுதி செம்ம பல்பு வாங்கிட்டேன்.

  இதன் பிறகு இனி எதையுமே அவசரப்பட்டு எழுதக்கூடாது என்று எனக்கு ஒரு படிப்பினையை கொடுத்து விட்டார்.

  இனி தனி நபர் எவரையுமே நம்ம்ம்பி எதையும் எழுதக்கூடாது என்று முடிவு செய்து விட்டேன். இதை தோல்வியா நினைக்கலை அனுபவமா எடுத்துக்கிட்டேன்.

  “இணையத்தில் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து படம்பார்க்க மாட்டேன் என்பது உங்கள் சுய ஒழுக்க கட்டுப்பாடு, அது போல் சுய ஒழுக்க கட்டுப்பாடு வரவேண்டும்.”

  அனைவரிடமும் இதை எதிர்பார்ப்பது வாய்ப்பே இல்லை.

  “சிஸ்டமாய் இருக்கட்டும், ஊழலாய் இருக்கட்டும் ,மோடி தலைகீழாய் நடந்து கொண்டிருக்கிறார்.”

  காத்தவராயன் நீங்க சொன்னது போலவே நடந்தாலும், இன்னொரு ராயன் மோடி தலை கீழாக நடக்கிறார் என்று தான் கூறுவார்.

  அனைவரையும் திருப்தி செய்வது என்பது நடக்காத காரியம்.

  எப்படியாப்பட்ட திட்டம் கொண்டு வந்தாலும், அதில் பாதிப் பேர் குறை கூறிட்டே தான் இருப்பாங்கன்னு. இதையெல்லாம் தவிர்க்கவே முடியாது.

  நீங்க என்ன சொல்றீங்களோ அதை அப்படியே மோடி செய்தாலும், சிலர் பாதிக்கத்தான் போறாங்க அப்பவும் வேறு ஒருத்தர் வந்து ஏழைகளின் கஷ்டம் புரியாமல் நடவடிக்கை எடுக்கிறார் என்று விமர்சிப்பார்.

  இதெல்லாம், முடிவில்லா பிரச்சனை.

  ஒண்ணுமில்ல, அலுவலகத்தில் 10 பேர் இருக்குற குழுவிலேயே அனைவரும் திருப்தி ஆவது போல ஒரு முடிவு எடுக்க முடிவதில்லை. 110 கோடி பேர் இருக்கும் நாட்டில் எப்படி சாத்தியம்.

  எது செய்தாலும், கொடி தூக்குபவர்கள் இருக்கத்தான் செய்வாங்க.

  “இது இரண்டும் அமோக வெற்றியடைவது என்னமோ உறுதி.”

  இந்த இரண்டுக்காக மோடி இவ்வளவு பெரிய செயலை செய்து இருப்பார் என்று நான் கட்டாயம் நினைக்கவில்லை.

  “அடுத்து வரும் எந்த உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு எந்த கட்சியாவது துட்டு கொடுத்தால் இந்த திட்டம் தோல்விதான்.”

  இது நிச்சயம் நடக்கும்

  இதற்கு நீங்கள் கூறியது போல “இந்த திட்டத்தின் வெற்றி/ தோல்வியை தெரிந்து கொள்ள ஜிடிபி, பணவீக்கம், பணமதிப்பு, பங்குசந்தை, விலைவாசி என்று எல்லாம் மேவாயில் கைவைத்துப் பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை.”

  காலம் தான் பதில் கூறனும். பார்ப்போம்!

 10. கிரி விரிவான பதிலுரைக்கு நன்றி.

  // நான் துவக்கத்திலேயே இதற்கு ஆதரவு என்று கூறியதால், நீங்கள் கட்டுரையையே படிக்கவில்லை போல //

  அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை. இரண்டு முறை முழுசாக படித்தேன். சம்பளகாரர்கள் விஷயத்தில் நீங்கள் சொன்னதைத்தான் நானும் எழுதினேன், என்னோட நடையில் அவ்வளவுதான்.

  “தேஷ் பக்தி” ட்ரெண்ட் வார்த்தை என்பதாலும் “வடா தோசா” உங்களுக்கு பிடிக்கும் என்பதாலும் உபயோகித்தேன். 🙂 🙂

  ==========================

  இந்த நடவடிக்கையால் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ;

  நாட்டுக்காக;

  1.பொதுமக்கள் காக்கும் அமைதி பாராட்டப்பட வேண்டிய விஷயம். [மக்கள் உள்ளுக்குள் கோபப்பட்டாலும் ஏதாவது நடக்கும் என்று அமைதி காக்கிறார்கள். மேலும் இதுவ்ரை அவர்களின் சாப்பாட்டுக்கு பிரச்சனையில்லை என்பதும் அவர்களது அமைதிக்கு காரணம்]
  2. வங்கி ஊழியர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

 11. ““தேஷ் பக்தி” ட்ரெண்ட் வார்த்தை என்பதாலும் “வடா தோசா” உங்களுக்கு பிடிக்கும் என்பதாலும் உபயோகித்தேன். ? ?”

  ஹி ஹி ஹி 🙂 வடா தோசா க்களை பற்றிய எழுத வேண்டிய கட்டுரை ஒன்று பாக்கி இருக்கிறது. நம்ம தமிழ்நாட்டில் இவர்களின் ஆதிக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

  அப்புறம் உங்களுக்கு இந்தித் திணிப்பில் உடன்பாடா என்பது தெரியாது.. ஒருவேளை நீங்கள் “தேஷ் பக்தி” யாளர் என்றால் 🙂 🙂 உங்களை கடுப்படிக்கும் ஒரு கட்டுரையை விரைவில் எழுதப்போகிறேன்.

  மோடி மிகத் தீவிரமாக இந்தியை நுழைத்து வருகிறார். செம்ம்ம்ம கடுப்பில் இருக்கிறேன்.. விரைவில் விரிவாக எழுதுவேன். தற்போதுள்ள சூழ்நிலையில் எழுதினால், தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்பதால் ஒத்தி வைத்து இருக்கிறேன்.

  “பொதுமக்கள் காக்கும் அமைதி பாராட்டப்பட வேண்டிய விஷயம். [மக்கள் உள்ளுக்குள் கோபப்பட்டாலும் ஏதாவது நடக்கும் என்று அமைதி காக்கிறார்கள். மேலும் இதுவ்ரை அவர்களின் சாப்பாட்டுக்கு பிரச்சனையில்லை என்பதும் அவர்களது அமைதிக்கு காரணம்]”

  மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை ஆனால், ஊடகங்கள் மிகைப்படுத்தி எழுதி வருகின்றன என்பதும் உண்மை.

 12. அருமையான பதிவு .

  அரசியல்வாதிகளின் ஓவர் ஆக்டிங் ஒருபுறம் என்றால். மக்களுக்காக பேசுகிறோம் என்று சொல்லி கொண்டு சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றும் எதிர்ப்பார்களின் பெர்பாமென்ஸ்.. அப்பப்பா!

  அம்புட்டு நல்லவங்களா ராசா நீங்க என்று கேட்கும் அளவுக்கு ஆச்சரியப்படுத்துகிறார்கள். ☺☺

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here