மெரினாவை தெறிக்கவிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு ஊர்வலம்!

15
ஜல்லிக்கட்டு

ல்லிக்கட்டுக்கு நேரடியாக எந்த விதத்திலும் ஆதரவு தெரிவிக்க முடியவில்லையே! என்ற ஏக்கத்துக்குப் பதிலாக மாறியது மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு ஊர்வலம்.

சமூகத்தளங்களில் ஊர்வலம் குறித்துப் படித்தவுடன் உறுதியாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன், உடன் நண்பனும் இணைந்து கொண்டான்.

இருவரும் காலை 6.50 க்கு “கலங்கரை விளக்கம்” வந்த போது கடும் வாகன போக்குவரத்து நெரிசல். என்னடா இது! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க இத்தனை பேரா! என்று வியப்பாகி விட்டது.

பின்னர் தான் தெரிந்தது “விப்ரோ மராத்தானுக்காக” வந்த கூட்டம் என்று. சப்பென்று ஆகி விட்டது.

வேட்டி புடவை

வரும் போது ஆண்கள் வேட்டியையும் பெண்கள் புடவையும் அணிந்து வரக் கூறி இருந்தார்கள். எனவே இருவரும் வேட்டியுடன் சென்று இருந்தோம்.

வேற யார் வேட்டி அணிந்து இருக்கிறார்கள் என்று பார்த்த போது சிலர் நின்று கொண்டு இருந்தார்கள்.

அவர்களும் எங்கே செல்வது என்று குழம்பிக் கொண்டு இருந்தார்கள். ஒருவர் அண்ணா! நீங்க ஜல்லிக்கட்டு ஆதரவு ஊர்வலத்துக்கு வந்தீங்களா? (வேட்டியைப் பார்த்து) கேட்டார்.

ஆமாம்! என்று கூறி அவரையும் அழைத்துக்கொண்டு கலங்கரை விளக்கம் service lane சென்று பார்த்தால், 200 பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.

பரவாயில்லை ஓரளவு கூட்டம் இருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டு நின்றோம்.

கொஞ்ச நேரத்தில் கூட்டம் வந்தது, வந்தது, வந்தது வந்து கொண்டே இருந்தது.

200 பேர் என்று இருந்த கூட்டம் நகர நகர 5000 பேருக்கு மேல் ஆனது (நான் குறைவாகக் கூறுகிறேன்) வரிசையில் வந்து கொண்டு இருந்ததால், சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

குறிப்பிடத்தக்க அளவில் பலர் வேட்டி, புடவையுடன் வந்து இருந்தார்கள். பங்கு கொள்வதே முக்கியம் என்று பேன்ட் அணிந்து வந்தவர்களும் அதிகளவில் இருந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் பெண்கள் ஆதரவு

குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் கலந்து கொண்டு இருந்தார்கள். ஆண்களோடு சேர்ந்து அவர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவாகக் கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

இன்னும் சிலர் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.

வேடிக்கை பார்க்க வந்த வெளிநாட்டு ஜோடியும் பேனர் பிடித்து தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள்.

இதை எல்லாவற்றையும் விடப் பலரை வியப்பில் ஆழ்த்தியது, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், இன்னொருவர் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து இருந்தார்.

பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

கிரிக்கெட் மைதானத்தில் அலை அலையாகப் பார்வையாளர்கள் எழுந்து அமருவார்கள், கவனித்துப் இருப்பீர்கள்.

அது போலக் கோஷங்கள் எழுப்புவது அப்படியே அலை அலையாகச் சென்றது பட்டாசாக இருந்தது.

பரபரப்பான கூட்டம்

திடீர் என்று எல்லோரும் “ஒதுங்குங்க! ஒதுங்குங்க!!” என்று குரல் வந்து வழி ஏற்படுத்தினார்கள்.

இங்க யார்ரா அவ்வளோ பெரிய ஆளு! இவருக்கேன் இவ்வளவு முக்கியத்துவம்? என்று குழம்பி விட்டது.

அருகே வர வர மிகப்பெரிய ஆராவாரம் அதிகரித்துக்கொண்டே வந்தது. யாருக்குடா இவ்வளோ ஆராவாரம்? என்று வியப்பானது.

பின்னர் தான் நடிகர்களின் துவக்க காட்சியைத் தூக்கி வீசும் படி அதிரடியாக ஒரு “காளை” மாலை எல்லாம் போட்டுச் சரவெடியாக அழைத்து வரப்பட்டது.

இந்த எதிர்பாராத நாயகனை கண்டதும் கூட்டம் அதிர்ச்சியாகி எழுப்பிய ஆராவாரம் மெரினாவையே கலங்கடித்து இருக்கும். செம்ம 🙂 .

இது வரை திரைப்படங்களின் Intro எவ்வளவோ பார்த்து இருக்கிறேன் ஆனால், இந்த Intro மிரட்டி விட்டது.

அங்கு நின்று கொண்டு இருந்த அனைவரும் உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள். உடலே சிலிர்த்து விட்டது.

காளையைப் பார்த்த அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் எனக்குக் காளையை நிழற்படம் எடுக்கக் கூடத் தோன்றவில்லை. வேறு யாராவது பகிர்ந்து இருந்தால், அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க.. யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் நடுநாயகமாக மிரட்டலாக ஒரு “காளை” வந்தால் எப்படி இருக்கும்?!

சரவெடி என்பது இது தான் 🙂 .

அதிகரித்துக்கொண்டே சென்ற கூட்டம்

இதன் பிறகு கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது எவ்வளவு ஆயிரம் பேர் என்பது தெரியவில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தை எவருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இணையத்தில் மட்டும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல, வாய்ப்புக் கிடைத்தால், ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் நேரடியாக ஆதரவு தருவோம் என்று இளைஞர்கள் அலை அலையாக வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

பலர் ஜல்லிக்கட்டு ஆதரவு அட்டையுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டார்கள்.

ஊர்வலம் உழைப்பாளர் சிலையுடன் முடிந்ததால், பலர் அங்கே நின்று கொண்டு இருந்தார்கள். சிலர் அங்கே இருந்து வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

சிலர் 10 மணி உண்ணாவிரத்துக்குத் தயார் ஆனார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுக்கும் நிகழ்ச்சியில் நாமும் கலந்து கொண்டோம் என்ற மனநிறைவுடன் நானும் கிளம்பினேன்.

நண்பன் மதியம் வேறு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால், உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு மட்டுமல்ல நம் அடையாளம்

மக்களே! ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு மட்டுமல்ல அது நம் அடையாளம். அதோடு நாட்டுக் காளை இனம் அழியாமல் இருக்கத் துணை புரிகிறது.

வெளிநாட்டு சக்திகளின் ஏமாற்றுதலுக்குப் பலியாகி “ஜல்லிக்கட்டை” எதிர்ப்பதை நாகரிகம் என்று கருதிக்கொண்டு இருக்காதீர்கள்.

நம் மக்களுக்கு நாம் ஆதரவு தரவில்லை என்றால், வேறு யார் தருவர்! எனவே, ஜல்லிக்கட்டு நடக்க உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. நண்பர் கிரி, நிச்சியம் எனது ஆதரவும் சல்லிக்கட்டுக்கு உண்டு, தமிழர்களின் பரம்பரிய விளையாட்டை பல கோடி தமிழர்களின் அனுமதி இல்லாமல் , நமது கருத்தையும் கேட்காமல் தடை விதிப்பது இந்திய ஒற்றுமையை கண்டிப்பாக சிதைப்பதாகும், இது ஒரு இனத்திற்கு எதிரான அடக்கு முறையாகும்.மேலை நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுக்கள் இன்றளவும் நடக்கின்றது எனவே நமது பாரம்பரியத்தை காப்பது நமது கடமையே, இருந்த போதிலும் நமது விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் பயிர் செய்யமுடியாமல் இறந்து கொண்டிருப்பது வேதனையானது எனவே இதற்கும் நமது ஆதரவையும்,ஒற்றுமையையும் காட்ட வேண்டும்.

  2. கில்லாடி,
    நல்ல பதிவு. என்னால கலந்துக்க முடியல 🙁

  3. புரியல கிரி என்ன நடக்குது என்றே புரியல கிரி!!! கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. எவ்வளவு வளமான பழமையான தேசம் இன்று முன்னேற முடியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. விவசாயிகளின் மரணம் மிக கொடியது. என்னுடைய தேசத்தின் அடையாளமே விவசாயமே, அதுவே இன்று தத்தளித்து கொண்டு இருக்கிறது.

    ஆட்சியாளர்களின் நிலை இன்னும் வருத்தத்தை அளிக்கிறது. நம்முடைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. நீங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவு ஊர்வலத்தில் கலந்தமைக்கு என்னுடைய பாராட்டுக்கள். நம்முடைய பாரம்பரியம் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஜல்லிக்கட்டு நிலைப்பாட்டில் நம் தமிழக அரசு இன்னும் மௌனம் காப்பது வருத்தத்தை அளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி கிரி.

  4. //ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு மட்டுமல்ல அது நம் அடையாளம். அதோடு நாட்டுக் காளை இனம் அழியாமல் இருக்கத் துணை புரிகிறது.வெளிநாட்டு சக்திகளின் ஏமாற்றுதலுக்குப் பலியாகி “ஜல்லிக்கட்டை” எதிர்ப்பதை நாகரிகம் என்று கருதிக்கொண்டு இருக்காதீர்கள். //

    ஜல்லிக்கட்டுக்கும் காளை இனம் அழிவதற்கும் என்ன சம்மந்தம்? இதில் என்ன வெளிநாட்டு சதி?

    நாகரீகம் என்ற பெயரில் நாம் தொலைத்த அடையாளம், பாரம்பரியம் இது ஒன்று மட்டுமா? வெளிநாட்டுக்காரர்களை பார்த்து “நாம்மை தொலைத்தது நாம்தான்”.

    ஒரு படத்துல பாக்யராஜ் சொல்லும் முள்ளு குத்திடுச்சு கதைதான்.

    காளையை மறந்து
    டிராக்டருக்கு மாறிட்டோம்
    பசுவை மறந்து
    பாக்கெட் பாலுக்கு மாறிட்டோம்

    யார் இருக்கா இங்க மாடு வளர்க்க?

    மற்ற நாட்களில் மாட்டைக் கண்டால் மூக்கைப் பொத்திக்கிட்டு ஒதுங்கிப் போறதும் நாம்தான்.

    அரசு ஜல்லிக்கட்டை தடை செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; கொஞ்ச வருடம் விட்டிருந்தால் தானா ஜல்லிக்கட்டு அழிஞ்சி போயிருக்கும். 🙂

    ஒரு அடல்ட் விஷயம் சொல்லுறேன்; ஜல்லிக்கட்டுக்கு பழக்கப்படுத்தும் மாட்டை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்த மாட்டாங்க மாட்டின் வீரியம் குறைந்துவிடும் என்பதால். ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல பொதுவாகவே விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்தும் காளைகளையும் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்த மாட்டாங்க; விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்தும் காளைகளின் உணர்ச்சிகளை நாம் கட்டிப் போடுவதால்; நாம் அசந்த நேரம் அது “பாய்ந்து” விடும், அதனால் காளைகளின் ஆண்மையை அழித்துவிடுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆக இனப்பெருக்கத்துக்கு என்று தனியாக காளைகள் உண்டு.

    இன்று பெண் கிடைப்பது கடினம் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது; காரணம் 80களில் நடந்த கருக்கலைப்பு. பெண்குழந்தை பிறந்த வீடும் காளைக் கன்னுக்குட்டி பிறந்த வீடும் இழவு வீடுபோலத்தான் கிராமங்களில் காட்சியளிக்கும்.

    இப்போ புரிஞ்சிருக்கும் காளைகளை அழித்தது யார் என்று? நம் உணர்ச்சிகளை தூண்டவே இந்த வெளிநாட்டு சதி என்று கூறுகிறார்கள்.

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    ===========
    இதை படிச்சிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் என்று நினைச்சிடாதீங்க. 13 பால்மாடு; ரெண்டு சோடி உழவு மாடு வைத்திருந்த குடும்பம் எங்களுடையது; நாகரீகம், காலமாற்றத்தால்எங்க மாட்டுத்தொழுவும் குப்பை கிடங்கும் இன்று வீடாகிப்போச்சு. 80களில் எங்க ஊரிலும் மஞ்சு விரட்டு நடக்கும், மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அழைத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலம் போவோம்; ஊர்வலத்தின் கடைசியில் மாட்டுக்கு ஒரு கரும்பு கொடுப்பாங்க; கரும்புத்தோகை மாட்டுக்கு, கரும்பு எனக்கு. 🙂

    அரசியல் கட்சிகளின் மதுரை பிரச்சாரத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு இடம்பெறுவதையும் அதன் பின்னால் உள்ள ஓட்டு வங்கி அரசியலும் எனக்கு பிடிக்கவில்லை.

  5. நான் பார்த்தவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட வேட்டி சேலையில் வந்தவர்கள் குறைவு. ஆரம்பத்தில் சில பதாகைகளைக் காட்டாதீர் என்றார்கள் பின்னர் கடைசியில் கூட்டம் அதிகமானதால் தணிக்கை செய்யவில்லை. கட்சி சார்பின்றி டி.ஆர்.பி. ராஜாவும் வந்திருந்தார்

  6. @சோமேஸ்வரன், அருண் & விஜய் நன்றி

    @கார்த்திக் மத்திய அரசிடம் தமிழ் இனி கிடையாது எங்களுடைய மொழி “இந்தி” என்றால் உடனே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

    இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்கும் என்று நம்பிக்கையளித்து வாயில் வடை சுட்டே ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள். இவர்களை ஜல்லிக்கட்டில் நம்பினால் அவ்வளோ தான்.

    @யாசின் “நம்முடைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது”

    இதுவே பிரச்சனை. இதன் வீரியம் உணராமல் நம் மக்கள் இருக்கிறார்கள்.

    @நீச்சல்காரன் வேட்டி கட்டி வந்தவர்கள் குறைவு தான் காரணம், பெரும்பாலானவர்களிடம் வேட்டியே இருந்து இருக்காது.. அதோடு கட்டவும் தெரிந்து இருக்காது.

    பங்கு கொள்வதே முக்கியம் என்ற அளவில் வந்து இருப்பார்கள், இதையே நானும் குறிப்பிட்டு இருந்தேன்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேட்டி கட்டி இருக்கலாம் என்று நானும் என் நண்பனும் கூட பேசினோம்.

    இவர்கள் வேட்டியில் வந்தால், நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை செய்ய சிரமமாக இருந்து இருக்கும். ஓடிக்கொண்டே இருந்தார்கள். எனவே, இவர்களிடம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

  7. @காத்தவராயன் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியும் ஆனால், இப்பிரச்சனையில் விவாதம் செய்து பிரச்னையை “விளையாட்டு” போல ஆக்க விரும்பவில்லை.

    உங்கள் கருத்து உங்களுக்கு நியாயமானது என் கருத்து எனக்கு நியாயமானது.

    “அரசு ஜல்லிக்கட்டை தடை செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; கொஞ்ச வருடம் விட்டிருந்தால் தானா ஜல்லிக்கட்டு அழிஞ்சி போயிருக்கும். 🙂 ”

    காத்தவராயன் இது எப்படி இருக்கிறது தெரியுமா? நம் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அப்படியே விட்டு இருந்தாலே செத்துப் போய் இருப்பாங்க.. அவர்களுக்கு சிகிச்சை செய்து என்ன ஆகப் போகிறது? என்பது போல.

    நீங்கள் சொல்வது போல அப்படியே விட்டு இருந்தால், சில வருடங்களில் காளைகள் இல்லாமல் அழிந்து விடும் என்பது உண்மை தான் ஆனால், அதை நாம் சொல்லக் கூடாது.

    வளர்ப்பவர்கள் சொல்ல வேண்டும். அவர்களால் எவ்வளவு வருடங்கள் முடியுமோ அவ்வளவு வருடங்கள் நடத்தப்போகிறார்கள். முடியாத போது நிறுத்தப்போகிறார்கள்.

    உலகில் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல காத்தவராயன் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முடிவு இருக்கிறது. அதனால் எதற்கு வீணா செய்து கொண்டு என்று ஒவ்வொருவரும் கிளம்பினால், வாழ்க்கையே ஒன்றுமில்லாது சென்று விடும்.

    வாழ்வதற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நம்பிக்கையில் தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

    நம்முடைய சூழ்நிலைகளால் நாம் மாடு வளர்ப்பதையோ காளைகளை வளர்ப்பதையோ நிறுத்தி இருக்கலாம் ஆனால், இன்னமும், விவசாயம் தான் செய்வோம் எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்று இருப்பவர்களில் காளைகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

    இதை முடிவு செய்ய வேண்டியது அவர்களே!

    எதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் என்று பார்க்கிறீர்களா.. நீங்கள் கூறியதில் சில உடன்பாடுகள் இருந்தாலும், ஒரு உணர்ச்சி பூர்வமான விசயத்தில் கிண்டலான தொணி இருந்தது அது வருத்தமாக இருந்தது.

    நான் காளை வைத்து ஜல்லிக்கட்டு நடக்கப்போவதில்லை ஆனால், காளை வைத்து இருப்பவன் ஜல்லிக்கட்டுக்கு தடை என்றதும் எப்படி மனம் புழுங்கி இருப்பான் என்பதை என்னால் உணர முடியும்.

    “அரசியல் கட்சிகளின் மதுரை பிரச்சாரத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு இடம்பெறுவதையும் அதன் பின்னால் உள்ள ஓட்டு வங்கி அரசியலும் எனக்கு பிடிக்கவில்லை.”

    உங்களுக்கு மட்டுமல்ல ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களுக்கும் இது தெரியும், அவர்களுக்கும் இது பிடிக்காது.

  8. //கிண்டலான தொணி இருந்தது அது வருத்தமாக இருந்தது.//

    அட போங்க கிரி 🙂

    இது போல நினைத்துவிடக் கூடாது என்றுதான்; நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்று எழுதியிருந்தேன்.

    சரியா தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க 🙂

    நான் ஏன் என் மக்களை கிண்டல் செய்ய வேண்டும். அது எனது கோபத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடு.

    எங்கள் வீட்டில் மாட்டினம் அழிந்ததற்கு நாங்கள்தான் பொறுப்பு; யார் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை.

    நான் ஏதோ மாநகரில் இருந்து கொண்டு கிண்டல் செய்வதாக நினைத்திருப்பீர்கள், உன்மை அதுவல்ல.

    கடந்த நான்கு வருடங்களாக எனது முழுநேரத்தொழில் விவசாயம் என்றால் நீங்க நம்பித்தான் ஆகனும். நீங்க சிங்கப்பூரை விரும்பி விட்டுட்டு வந்தது போல நான் பெங்களூரை விரும்பி விட்டுட்டு வந்தவன்.

    நான் ஏன் என் மக்களை கிண்டல் பண்ணப்போறேன். கண்முண்ணே மாட்டினம் அழிகிறதே என்ற கோபத்தின், ஆற்றாமையின் வெளிப்பாடுதான் அது. எங்கள் வீட்டில் மாடு அழிந்ததற்கான பழியை வேறு ஒருவர் மீது சுமத்த விரும்பவில்லை.

    //அரசு ஜல்லிக்கட்டை தடை செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; கொஞ்ச வருடம் விட்டிருந்தால் தானா ஜல்லிக்கட்டு அழிஞ்சி போயிருக்கும்.:)//

    இந்த வரிகளுக்கு பின்னால் உள்ள பாசிடிவ் விஷயம் என்னன்னா………

    இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழை அடுத்த 30 வருடங்கள் கல்விக்கூடங்களில் உயிர்ப்புடன் வைத்திருந்தது, அதுபோல இன்று நடக்கும் போராட்டங்கள் ஜல்லிக்கட்டை இன்னும் சில பல வருடங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

    மதுரை தவிர்த்து மற்ற ஊரார்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடக்க ஆரம்பிப்பதே பாசிட்டிவான விஷயம்தான்.

  9. கமெண்ட் செய்வது சில நேரங்களில் சிரமாக உள்ளது கிரி. ப்ளீஸ் சரி செய்யவும். ஒரு வரியை அது ஏற்றுக் கொள்ளாததால் பிரித்து போட வேண்டியது உள்ளது.

  10. by the way ;
    இதுதான் சமயம் என்று கட்டாய விடுமுறை, விருப்ப விடுமுறைக்கு தமிழ்நாடு பொங்கியது கொஞ்சம் ஓவர், சாதாரண ஜனங்களுக்குத்தான் லீவ் சிஸ்டம் புரியாது என்றால், அரசு ஊழியர்களும் போராடியது ரொம்பவே ஓவர். தவறான முன்னுதாரணம்.

    என்னைக் கேட்டால் ஜனவரி26, ஆகஸ்ட்15 மற்றும் அக்டோபர்2 தவிர்த்து ஏனையவைகளை விருப்ப விடுமுறையாக அறிவிப்பதுதான் சரி. வடக்கில் உள்ளவன் பொங்கலை கொண்டாட வேண்டாம்; தெற்கில் உள்ளவன் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாட வேண்டாம்.

  11. “இது போல நினைத்துவிடக் கூடாது என்றுதான்; நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்று எழுதியிருந்தேன்.”

    இது சரியான விளக்கமா? காத்தவராயன் 🙂 . ஏதாவது ஒரு நடிகரை கண்டபடி திட்டிவிட்டு நானும் அவருக்கு ரசிகன் தான் என்று கூறுவது போல உள்ளது. நீங்கள் திட்டவில்லை அவ்வளோ தான்.

    “நான் ஏதோ மாநகரில் இருந்து கொண்டு கிண்டல் செய்வதாக நினைத்திருப்பீர்கள், உன்மை அதுவல்ல.”

    உண்மையில் கடந்த சில வருடங்களாக நீங்கள் கருத்து கூறியதை வைத்து நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்ற முடிவுக்கே நான் வரவில்லை அதனால், மாநகரில் இருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நினைக்கவில்லை.

    “கடந்த நான்கு வருடங்களாக எனது முழுநேரத்தொழில் விவசாயம் என்றால் நீங்க நம்பித்தான் ஆகனும். நீங்க சிங்கப்பூரை விரும்பி விட்டுட்டு வந்தது போல நான் பெங்களூரை விரும்பி விட்டுட்டு வந்தவன்.”

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கப்பூரை விட்டு வருவது ஒன்றும் பெரிய விசயமில்லை.. சப்பை விசயம் ஆனால், நகரத்தில் இருந்து திரும்ப உங்கள் ஊருக்கே வந்து முழு நேர தொழிலாக விவசாயம் செய்கிறேன் என்று கூறுகிறீர்களே! அந்தத் தைரியம் எனக்கு இன்னும் வரவில்லை.

    “இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழை அடுத்த 30 வருடங்கள் கல்விக்கூடங்களில் உயிர்ப்புடன் வைத்திருந்தது, அதுபோல இன்று நடக்கும் போராட்டங்கள் ஜல்லிக்கட்டை இன்னும் சில பல வருடங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.”

    முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

  12. “கமெண்ட் செய்வது சில நேரங்களில் சிரமாக உள்ளது கிரி. ப்ளீஸ் சரி செய்யவும். ஒரு வரியை அது ஏற்றுக் கொள்ளாததால் பிரித்து போட வேண்டியது உள்ளது.”

    உங்களுக்கு மட்டும் தான் இது போல நடக்கிறது காத்தவராயன். எனக்கே ஏன் என்று புரியவில்லை 🙂

    ஆனால் ஒன்று, வெளிவரவில்லை என்றாலும் நிச்சயம் அது தாமதமாக என்னால் வெளியிடப்படும்.

    “என்னைக் கேட்டால் ஜனவரி26, ஆகஸ்ட்15 மற்றும் அக்டோபர்2 தவிர்த்து ஏனையவைகளை விருப்ப விடுமுறையாக அறிவிப்பதுதான் சரி. வடக்கில் உள்ளவன் பொங்கலை கொண்டாட வேண்டாம்; தெற்கில் உள்ளவன் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாட வேண்டாம்.”

    தமிழகப் பண்டிகைகளுக்கு கட்டாய விடுமுறையும் மற்ற மாநில பண்டிகைகளுக்கு விருப்ப விடுமுறையும் கொடுக்கலாம். இது தான் நியாயம்.

  13. நண்பர் கிரி நீங்களே சரியான விடையத்திற்கு வந்திருக்கிறீர்கள் நம்மிடையே மொழி ஒற்றுமையில்லாததால் தான் பீட்டா போன்ற ஆங்கில அமைப்பின்பேட்சைக் கேட்டுக்கொண்டு மத்திய அரசும் இதைத் தமிழர் பண்பாடு என நினைத்து தடை விதிக்கின்றது அது மட்டுமா மொத்த இந்தியர்களும் இதில் நமக்கு சம்மந்தம் இல்லை என வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றது , மொழி ஒற்றுமை வேண்டும் என்பது இப்போது புரியும் என நினைக்கின்றேன் இல்லையேல் நாம் தனி நாடு வேண்டும் எனப் போராடும் தூரம் விரைவில் வரும்.ஆங்கிலத்தின் வெற்றியே பிரித்தாளுவதில் தானே இருக்கின்றது அதுதான் இவ்விசயத்திலும் நடக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here