FlashPay | நம்ம ஊருக்கு எப்போது வரும்?

9
FlashPay

லகத்திலேயே சில்லறையை மையமாக வைத்து ஒரு சுரண்டல் நடக்க முடியும் என்றால், அது இந்தியாவில் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். Image Credit

சில்லறை இருக்கா?

எந்தக் கடை / பேருந்து சென்றாலும் “சார்! சில்லறை ரெடியா வைத்துக்குங்க!” என்ற குரல் தான் வருகிறது.

கடந்த முறை சிங்கப்பூரில் இருந்து முதன் முறையாகத் திருச்சி வந்த சமயத்தில் Exchange ல் பணம் மாற்றிய போது 100 ரூபாயாக இருந்ததால் பேருந்தில் என்ன பிரச்சனை செய்யப் போகிறார்களோ என்ற கவலையே எனக்கு இருந்தது.

அந்த அளவிற்குச் சில்லறைக்குப் பயந்து இருக்கிறேன்.

கடையில் எது வாங்கினாலும், “சார்! சில்லறை இல்லை இந்தக் கடலை பர்ஃபி ₹5 வாங்கிக்குங்க!!!, சாக்லேட் வாங்கிக்குங்க!” என்ற கண்டபடி கடுப்பை ஏத்துறாங்க.

இவர்களாலே Halls சாக்லேட் நிறுவனம் பெரிய பணக்கார நிறுவனமாக மாறி இருக்கும் என்று நினைக்கிறேன்.

பேருந்தில் நடத்துனர் பையில் சில்லறை இருந்தாலும் கொடுப்பதில்லை. 50 பைசா 1 ரூபாய் மீதம் இருந்தால், அது காந்தி கணக்குத் தான். வடிவேல் மாதிரி, கொடுப்பாரா என்று பார்த்துட்டே வர வேண்டியதாக இருக்கிறது.

இறுதியில் கொடுப்பதே இல்லை, கொடுத்தால் உலக அதிசயம்.

கட்டணத் தள்ளுபடி 

நமது மத்திய அரசாங்கம் கள்ளப்பணத்தை ஒழிக்கப் பற்று அட்டை (Debit card) கடனட்டை (Credit card) போன்றவற்றை ஊக்குவிக்கத் தற்போது முயற்சித்து வருகிறது.

இதற்குத் தற்போது விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்யவும் பரிசீலித்து வருகிறது.

இதன் மூலம் நிறுவனங்கள் சிறு கடைகள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதை நிறுத்துவதால், பொதுமக்கள் அட்டைகளை அதிகம் பயன்படுத்துவார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு முடிவு செய்து இருக்கிறார்கள்.

மிக நல்ல முயற்சி.

இதன் மூலம் சில கடைகளில் கடனட்டை பயன்படுத்தும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தால் பொது மக்கள் கடனட்டை பயன்படுத்தும் தயக்கம் நீங்கும்.

அரசுக்கும் வரவு செலவு பரிமாற்றம் சரியான அளவில் கிடைக்கும்.

FlashPay

சிங்கப்பூரில் நம்முடைய பற்று அட்டை / கடனட்டையில் ஒரு வசதி உள்ளது.

அதாவது நீங்கள் இந்த அட்டைகளில் இருக்கும் வசதி மூலம் எளிமையாகப் பணம் செலுத்தலாம். ஒரே முறையில் 100$ க்கு மேல் செலவு செய்ய முடியாது.

இந்தக் அட்டைகளில் ஒரு chip இருக்கிறது, கடைகளில் வைத்துள்ள சாதனத்தில் காட்டினால் அதுவே பணத்தை எடுத்துக் கொள்ளும்.

இதற்காகக் கையொப்பம் இடுவதோ / Passcode அழுத்துவதோ அவசியமில்லை. அட்டையை 2 நொடி காண்பித்தால் போதும்.

சிங்கப்பூரில் இந்தியா போலக் கடனட்டைக்கு Passcode கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, நம் கடனட்டை தொலைந்தால், வேறு யாரும் தவறாகப் பயன்படுத்தும் முன்பு உடனடியாக முடக்க வேண்டியது அவசியம்.

நம்ம ஊருக்கு வந்தால்..!

காய்கறிக் கடை, மருந்துக் கடை, பல்பொருள் அங்காடி, உணவகம் போன்ற வழக்கமாக அதிகம் புழங்கும் இடங்களில் இதை நாம் எளிதாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் சில்லறை பிரச்னையை அறவே தவிர்க்கலாம்.

நமக்கு யாரும் கடலை பர்ஃபியோ ஹால்ஸ் மிட்டாயோ கொடுத்துச் சரிக்கட்ட முடியாது 🙂 . நமக்கும் மன உளைச்சல் குறையும்.

FlashPay என்பது இறுதியான பெயர் அல்ல. ஒவ்வொரு நிறுவனமும் இந்த வசதிக்கு வெவ்வேறு பெயர்கள் (PayPass / PayWave) வைத்துள்ளன.

இந்த வசதி நம்முடைய பேருந்தில் வந்தால் எப்படி இருக்கும்?

வழக்கமான பயணச் சீட்டு முறை மாறித் தற்போது கொடுக்கப்படும் மின்சாதன பயணச்சீட்டு வரும் என்று நாமெல்லாம் நினைத்து இருப்போமோ!

அது போல இதே வசதி இல்லையென்றாலும் வேறு முறை நிச்சயம் வரும்.

சென்னையில் இதைப் பரிசோதிக்கப் போகிறார்கள் அதாவது மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து இரண்டுக்கும் ஒரே அட்டை பயன்படுத்த முடியும், சிங்கப்பூர் போல.

ஆனால், இதற்குத் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பும்.

காரணம், நடத்துனர் பணி பறி போய்விடும்.

Credit card Passcode

முன்பு கடனட்டை பயன்படுத்துவது என்றால், கையெழுத்து மட்டும் போடுவதாக இருந்தது, இதை எவரும் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இதற்கு Passcode இருந்தால் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்று கூறி இருந்தேன்.

தற்போது இந்திய வங்கித்துறை Passcode கட்டாயமாக்கி விட்டது. அதோடு இணையப் பரிமாற்றத்துக்கும் OTP / கடவுச் சொல் வசதி வந்து விட்டது. மிகச் சிறந்த மாற்றம்.

இது போல FlashPay நிச்சயம் நம்ம ஊருக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நான் கூறியது நல்லதோ கெட்டதோ இந்தத் தளத்தில் கணித்த விசயங்கள் பல நடந்து இருக்கிறது. அது போல இதுவும் விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

பிற்சேர்க்கை Contactless Transaction இந்தியாக்கு வந்து விட்டது 🙂 .

UPI இதற்கு முன்பே வந்து மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டது என்பது இதற்கு தொடர்புடைய கருத்து 🙂 .

Read கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

கொசுறு

சிங்கப்பூரில் 50 cent க்கு ஒரு பொருள் வாங்கி 50$ கொடுத்தாலும், எந்தக் கேள்வியும் கேட்காமல் 49.50$ திருப்பிக் கொடுப்பார்கள்.

50Cent, 1$ இருக்கிறதா? என்று கேட்க மாட்டார்கள். நாமே தேடி சில்லறையாகக் கொடுக்க முயற்சித்தாலும் அதற்குள் அவர்கள் மீதியைக் கொடுத்து விடுவார்கள்.

ஆனால், இதே இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் கல்லாவில் இருக்கும் கடை சென்றால், பெரும்பாலும் நம்ம ஊரைப் போலவே சில்லறை இருக்கிறதா? என்று கேட்பார்கள். 

இது மனதளவில் அப்படியே பழகி விட்டது என்று நினைக்கிறேன்.

நானும் சில நேரங்களில் சில்லறைக்காகப் பெரிய மதிப்பு நோட்டுக்களை கொடுத்து இருக்கிறேன்.

எங்கே சென்றாலும் நம் எண்ணங்களும் பழக்கங்களும் மாறவே மாறாது போல.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. உண்மைதான் இந்த மாற்றம் வரவேண்டும், நிச்சயம் வரும்.

  2. கல்லூரியில் படிக்கும் போது 0.25 பைசா, 0.50 பைசா பொதுவா பேருந்தில் செல்லும் போது தர மாட்டர்கள். ரொம்ப அரிதா ஒன்றிரண்டு நடத்துனர்கள் திருப்பி தருவார்கள்.. தற்போது சில்லறை இல்லாத நேரத்தில் 5 /10 பாக்கி கூட சரியா தருவதில்லை.. கொஞ்சம் அழுத்தி கேட்டால் வார்த்தைகள் வேறு மாதிரி வரும்..

    (இது போல FlashPay நிச்சயம் நம்ம ஊருக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். நான் கூறியது நல்லதோ கெட்டதோ இந்தத் தளத்தில் கணித்த விசயங்கள் பல நடந்து இருக்கிறது. அது போல இதுவும் விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்)

    கண்டிப்பாக நடக்க வாய்ப்பு உள்ளது.. ஆனால் பாமர மக்களை சென்றடைய கொஞ்சம் காலம் ஆகும் என நினைக்கிறன்….. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. கிரி,
    செம நியூஸ் இது “FlashPay”
    தகவலுக்கு நன்றி தல.. paywave youtube video செம super

    – அருண் கோவிந்தன்

  4. நல்ல பதிவு கிரி, இதைத்தான் நானும் பலமுறை நினைத்திருக்கிறேன். பல்வேறு முறை ஹாங்காங் சென்றிருந்தாலும் கடந்த நான்கு வருடமாக அங்குள்ள “ஆக்டோபஸ்” என்ற கார்டை உபயோகப்படுத்தி வருகிறேன். அதற்க்கப்புறம் தான் அதன் மகத்துவம் புரிந்தது. பேருந்து, சிறிய பெரிய சூப்பர் மார்க்கெட், பெட்டிக்கடை (நம்ம ஊர்ல அது பெரிய்ய்ய்ய கடை) டாக்சி, ரயில்வே, ஏர்போர்ட், ஹோட்டல், உணவகங்கல், சிறிய பெரிய கப்பல் / போட் பயணம் இப்படி எங்கு பார்த்தாலும் இந்த கார்டை உபயோகப்படுத்த முடியும். ரீசார்ஜ் செய்ய எந்த ஒரு மெட்ரோவுக்கு சென்றாலும் அங்கே கஸ்டமர் கேரில் செய்து கொள்ளலாம்.

    இதனை பெற அடையாள அட்டை ஒன்றும் தேவை இல்லை 150 டாலர் (1245 ரூபா) கட்டினா 100 டாலர் உபயோகப்படுத்தி கொள்ளலாம் (அம்பது டாலர் அந்த கார்டை நாம் எப்போது திரும்ப கொடுத்தாலும் பெற்றுகொள்ளலாம்) இன்னமும் எனது மொபைலின் கவரில் வைத்துள்ளேன்.

    முன்பெல்லாம் ஹாங்காங் போகும்போது நான் வெறுக்கின்ற ஒரே விஷயம் கையில் இருக்கும் சில்லறைகள் தான் – அதை எப்படி செலவு செய்வது என்ற பிரச்சினை. ஏனெனில் 0.05 டாலராக இருந்தாலும் கடைக்காரர் திரும்ப தந்துவிடுவார், மெட்ரோவின் தானியங்கி எந்திரம் கூட திரும்ப தரும் – ஏன்னா அவங்க கவர்மெண்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு … ஆரம்ப அபராதமே 5000 டாலர் (ஹாங்காங் எங்க திரும்பினாலும் ஏதாவது ஒரு அபராத போர்டை பார்க்கலாம்). அப்படி சேர்த்து சேர்த்து பார்த்தால் யார் சென்றாலும் கடைசியில் எப்படியும் ஒரு அரை கிலோ அளவுக்கு சில்லறை தேறும்.

    இதற்கும் ஒரு மாற்று வழி கண்டு பிடித்தார்கள் அது கேத்தே பசிபிக் பிளைட்டில் (ஹாங்காங் தேசிய விமானம்) பயணம் செய்ததால் இந்த சில்லறைகளை நாம் டொனேட் செய்துவிடலாம். இதை பார்த்து மற்ற விமானங்களில் காப்பி அடித்தார்கள்.

    இதை எல்லாம் விட லோக்கல் ட்ரெயினில் சென்றால் சில நயாபைசாக்கள் தள்ளுபடி உண்டு.

    ஹான்காங் மெட்ரோவை பார்த்துவிட்டு டெல்லிக்கு போய் அங்கே பார்த்ததில் எதோ தேவலாம் என்றிருந்தது. ஆனா மும்பை மேட்ரோவை பார்த்து ரொம்பவே மனசுக்குள் அழுதேன்… நாலு ரூவா டிக்கட்டு – அதை கூட 90% சதவீத மக்கள் எடுப்பதில்லை. நம் மக்களிடம் பிடிக்காத விஷயம் எந்த ஒரு விஷயத்தையும் நன்மை தீமை பார்க்காமல் எதற்கெடுத்தாலும் போராட்டம்.

  5. தமிழ்நாடு இப்ப நல்ல முன்னேற்றம் …சில்லறை விஷயத்துல……இப்ப சில கடைல அஞ்சு ருபாய் டைரி மில்க் கொடுக்குறாங்க ..அஞ்சு ரூபாய்க்கு பதிலா

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் பாமர மக்களுக்கு செல்ல தாமதம் ஆகும்.. ஆனால் கால மாற்றத்தில் விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

    @ராஜ்குமார் அட்டைகளை பயன்படுத்த துவங்கி விட்டால், நீங்கள் கூறியது போல சில்லறை நிறைய சேர்ந்து விடும். எனக்கும் இங்கே நிறைய சேர்ந்து அதை சரவண பவன் உணவகத்தில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்வேன்.

    @ராஜேஷ் 😀 😀

  7. கிரி தாங்கள் கூறுவது போல இந்தியாவில் flash Pay வருவது என்பது சற்று கடினமான விசயம், காரணம் இங்கு மக்கள் தொகை வளர்ச்சி அதிகம் அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் , இங்கு திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பாதி படித்த தொழில்நுட்ப அறிவு உடையவர்கள் தான் இங்கு இரகசிய எண் இருந்தாலும் அவற்றையும் திருடி பணத்தை எடுத்து விடுகின்றனர் இங்கு flash Play வந்தால் பண அட்டை வைத்திருப்பவர்களின் கதி ஒருவழி ஆகிவிடும்.
    மேலும் தங்கள் கூறுவதைப் போல சில்லறைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது கடைகளில் எதாவது வாங்கச் சென்று சரியான சில்லறை இல்லையென்றால் இவர்களிடம் சண்டை பிடிப்பதற்குப் பதிலாக முழுபனத்திற்கும் வீட்டிற்குத் தேவையான சில பொருட்களையும் சேர்த்து வாங்கி விடுவேன்,இவையேல்லாம் மாற இன்னும் ஒரிண்டு தலை முறையாவது ஆகும்.

  8. நீங்கள் ஒரு ரூபாய்க்கு சொல்லுறீங்க.. பெங்களூர் பேரூந்துகளில் 5 ரூபாய்க்கு கூட சில்லறை இல்லைன்னு அவங்களே மீதி சில்லறை வெச்சுப்பாங்க … 🙁 இதை எங்கே சொல்லுவது …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here