Character Assassination | அண்ணாமலை IPS (Ex)

18
அண்ணாமலை IPS Annamalai IPS

டந்த 2020 மார்ச் ரஜினி பேசும் போது ‘முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லை, வயதாகிறது, உடலில் ஆங்காங்கே பேட்ச் உள்ளது. எனவே, இளைஞர்கள் பொறுப்புக்கு வர வேண்டும்‘ என்றார்.

IAS, IPS படித்த இளைஞர் கையில் பொறுப்பைக் கொடுக்க வேண்டும். ஆட்சியையும், கட்சியையும் ஒருவரே வைத்துக்கொள்ளக் கூடாது‘ என்றார்.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

இதன் பிறகு ரஜினி கூறும் நபர் யாராக இருக்க முடியும் என்ற தேடுதலில் அண்ணாமலை IPS அவர்கள் பெயர் அடிபட்டது.

அண்ணாமலை யார்?

தமிழரான அண்ணாமலை IPS அவர்கள் வட மாநிலங்களில் பணியாற்றிக் கண்டிப்பான அதிகாரி என்ற பெயரை எடுத்துக் கர்நாடகாக்கு மாற்றலில் வந்தார்.

இங்கே குற்றம் புரிபவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக மாறி, மக்களிடையே ‘சிங்கம்‘ என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

இரு வருடங்களுக்கு முன்பு திருக்குறளை எடுத்துக்காட்டாக்கி கர்நாடாகாவில் ஒரு விழாவில் பேசியது சமூகத்தளங்களில் வைரல் ஆகியது சிலருக்கு நினைவிருக்கலாம்.

மானசரோவர் சென்று வந்த பிறகு தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால், ‘கிட்டத்தட்ட 10 வருடங்கள் பணி புரிந்து விட்டேன், இதன் பிறகு மக்களிடையே மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறேன்‘ என்று கூறி 2019 ஜூனில் ராஜினாமா செய்து விட்டார்.

தற்போது தன் சொந்த ஊரான கரூரில் தற்சார்பு விவசாயம் உட்படப் பொதுநல சேவைகளில் உள்ளூர் மக்களுடனும், விவசாயிகளுடனும் இணைந்து We The Leaders என்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

தற்போது என்ன பிரச்சனை?

ரஜினி துவங்கப்போகும் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இவர் அறிவிக்கப்படப்போகிறார் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருதுவதால், இவரைச் ‘சங்கி’ என்று அழைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

பாஜக தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

அப்படியே அண்ணாமலை பாஜக தொடர்பு இருந்தாலோ பின்னர் சேர்ந்தாலோ என்ன தவறு?!

ஆதாரப்பூர்வமான செய்திகளைக் கொடுக்காமல் இப்படி இருக்கலாம், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஊகத்தின் அடிப்படையிலேயே பேசி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக விமர்சனம் கடுமையாகி விட்டது.

அண்ணாமலையிடம் திமுகவினர் கடுமையாக நடந்து கொள்ள, இவர் முதல்வர் வேட்பாளராக இருக்கலாம் என்ற காரணத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

இதோடு இவர் அக்மார்க் தமிழராக இருப்பது பெரும் தொல்லை.

நியூஸ்18 பேட்டி

சமீபத்தில் நியூஸ்18 செய்தி ஊடகம் அண்ணாமலையிடம் பேட்டி கண்டதில், தனக்கு டெல்லியில் மோடியின் மேலாண்மை பிடித்தது என்று ஒரு முன்னாள் IPS அதிகாரியாக அதற்கான காரணத்தைக் கூறி இருந்தார்.

இதன் பிறகு அவரை மிகவும் மோசமாக விமர்சிக்கத் துவங்கினர். இது தான் வேலையென்பது போலத் திமுக வினர் செய்துகொண்டுள்ளனர்.

மோடியின் சில நடவடிக்கைகள் பிடித்தது என்று கூறியதாலையே ஒருவர் மோசமானவர் / சங்கி என்றால், அவருக்கு வாக்களித்துப் பிரதமராக்கிய மக்கள் அனைவருமே அந்தப் பட்டியலில் தான் வருவார்கள்.

திமுகவினர் / இடது சாரியினர் எண்ணம் முழுவதுமே இவருடைய பிம்பத்தைச் சிதைப்பது மட்டுமே!

ஒருவேளை இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அதற்கு முன்பே இவரைச் சங்கி என்று மக்கள் மனதில் நிலை நிறுத்திவிட்டால், தமிழகத்தில் நிலவும் பாஜக எதிர்ப்பு மனநிலையை வைத்துப் பின்னர் இவரை வீழ்த்தி விடலாம் என்பது தான் எண்ணம்.

இது தான் இவர்கள் திட்டம். இதனாலயே சங்கி என்று தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வருகிறார்கள்.

Character Assassination

பிம்பத்தைச் சிதைப்பதில் திமுகவினர் மிகச் சிறந்தவர்கள். மிகப்பெரிய எடுத்துக்காட்டு கேப்டன் அவர்கள்.

கேப்டன் நல்ல மனிதர் ஆனால், அவரது கோபம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவு. அதை வைத்தே அவரை மேலும் கோபப்படுத்தி, அவரை மீம்களில் கேலியாக்கி அவரது பிம்பத்தைச் சிதைத்து விட்டார்கள்.

தற்போது நல்ல மனிதர் என்ற பெயர் / அனுதாபம் மட்டுமே உள்ளது.

இதே வழியைத்தான் ரஜினிக்கும் பயன்படுத்தினார்கள் ஆனால், கேப்டன் செய்த தவறை ரஜினி செய்யாததால், இவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. எனவே, மற்ற வழிகளில் பிம்பத்தைச் சிதைக்கத் தீவிரமாக முயல்கிறார்கள்.

தப்பிப்பாரா? மாட்டிக்கொள்வாரா?

இதே வேலையைத்தான் தற்போது அண்ணாமலைக்கும் செய்து கொண்டுள்ளார்கள். தப்பிப்பாரா? மாட்டிக்கொள்வாரா? என்பது இவரது நடவடிக்கையைப் பொறுத்து.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவருமில்லை. அண்ணாமலை தவறு செய்து இருந்தால், செய்தால், தாராளமாக விமர்சிக்கப்படலாம்.

ஆனால், ரஜினி அறிவிக்கப்போகும் நபராக இருக்கலாம் என்ற ஊகத்தில் வன்மத்துடன் சமூகத்தளங்களில் நடந்து கொள்வது சரியல்ல.

ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை! அவர் ஆரம்பிப்பாரா இல்லையா?! என்பதே விவாதமாக இருக்கும் நிலையில் இவ்வளவு களேபரங்கள்!

வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பதற்கேற்ப மற்றவரின் பிம்பத்தைச் சிதைத்தவர், முயல்கிறவர் தன் பிம்பம் சிதைந்து வருவதை அறிவாரோ!

காலமே / கர்மாவே பதில் கூறும்!

Read : தமிழக பாஜக ஏன் வெற்றி பெற முடியவில்லை?

Read : திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

 1. ஐயா, நீங்கள் ரஜினியின் அதி தீவிர அபிமானியாக இருப்பது நாங்கள் அறிந்ததுதான் ….. ரஜினிக்கு இருப்பதே பிம்பம் மட்டும்தான்… அதை உடைத்து எறிந்தால், காவி முகம்தான் இருக்கும்… அதைத்தான் செய்கிறார்கள்… தனிப்பட்ட முறையில் இப்போதுள்ள ரஜினிக்கு பக்குவம் இருக்கலாம். ஆனால் கால நிர்பந்தம் இருக்கிறது காவியை ஆதரிக்க என்பதை மறுக்க இயலாது .. இதற்கு அவருடைய தொடர்ச்சியான நடவடிக்கைகளே காரணம்.. மற்றபடி ரஜினி மீது எனக்கும் தனிப்பட்ட வன்மம் எதுவும் கிடையாது… மேலும் ஒன்று அண்ணாமலை அவர்கள் ரஜினியை சந்தித்தாரா என்ற மிகச்சாதாரண கேள்விக்கு ஏன் அவ்வளவு மழுப்பல்… ??? மடியில் கனமில்லை எனில் வழியில் பயமேன். ??

 2. பாஜக பத்தி விக்ரமன் நேர்காணல்ல கேக்கும்போது அது ஒரு நல்ல கட்சி அதுக்கு ஒரு நல்ல கொள்கை இருக்குனு சொல்லுற இவரை எப்படி வேற பாக்குறதுனு தெரியல கிரி..

 3. @அருள் “ரஜினிக்கு இருப்பதே பிம்பம் மட்டும்தான்… அதை உடைத்து எறிந்தால், காவி முகம்தான் இருக்கும்”

  🙂 அண்ணாமலை பற்றிய கட்டுரையில் அவரை பற்றி மூன்று வரிகளும் ரஜினியை பற்றி ஏழு வரிகளும் எழுதி இருப்பது தான் அவருடைய ஆளுமை.

  40+ வருட உழைப்புங்க.. இத்தனை போட்டிகளையும் தாண்டி உச்சமாக நிற்கிறார். அவரைக் காவி பிம்பம்னு சாதாரணமா சொல்றீங்க.

  “அண்ணாமலை அவர்கள் ரஜினியை சந்தித்தாரா என்ற மிகச்சாதாரண கேள்விக்கு ஏன் அவ்வளவு மழுப்பல்… ?”

  சந்தித்தாரா இல்லையா என்பதை அண்ணாமலை தெளிவாகக் கூறி இருக்க வேண்டும் என்பதே என் கருத்தும்.

  • //40+ வருட உழைப்புங்க.. இத்தனை போட்டிகளையும் தாண்டி உச்சமாக நிற்கிறார். அவரைக் காவி பிம்பம்னு சாதாரணமா சொல்றீங்க./// உண்மையாக இருக்கலாம் … ஆனால் அது சாதாரண அன்றாடங்காய்ச்சிகள் தங்களின் ஆதர்ச நாயகனாக அவரை வளர்த்தார்கள்… ஆனால் இவரும் மற்றவர்களை போல் வளர்ந்த பின் அந்த பின்தங்கிய மக்களுக்கான குரலாக இல்லை…. இதைதான் நான் சுட்டி காட்டுகிறேன்… அப்படி குரல் கொடுக்க முடியவில்லை எனில் அமைதி காக்கலாம். பெரும்பாலான விஷயங்களில் ஆளும் வர்க்கத்தின் குரலாக இருப்பதையே பாதுகாப்பாக உணர்கிறார்…

   • @அருள் “அது சாதாரண அன்றாடங்காய்ச்சிகள் தங்களின் ஆதர்ச நாயகனாக அவரை வளர்த்தார்கள்… ஆனால் இவரும் மற்றவர்களை போல் வளர்ந்த பின் அந்த பின்தங்கிய மக்களுக்கான குரலாக இல்லை”

    நீங்க தான் அவர் சாதாரண பிம்பம் என்று கூறினீர்கள். சாதாரண பிம்பம் கூறினால் என்ன கூறாவிட்டால் என்ன?

    “அப்படி குரல் கொடுக்க முடியவில்லை எனில் அமைதி காக்கலாம்”

    ரஜினிதனக்கு சரியென்று படுவதை கூறுகிறார். சிலவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

    உங்களுக்குத் தவறு என்று படுவது எனக்குச் சரியாக இருக்கலாம். எனக்குச் சரியாகத் தோன்றுவது உங்களுக்குத் தவறாக இருக்கலாம்.

    இதைச் சரி தவறு என்று யார் முடிவு செய்வது? யார் கூறுவது இறுதி தீர்ப்பு?

    குரல் கொடுப்பதாலையே பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், இந்நேரம் தமிழகத்தில் இந்தியாவில் பிரச்சனைகளே இருக்க கூடாது.

    ஏனென்றால், காலையில் எழுந்தது முதல் எல்லாத்துக்கும் ஒரு அரசியல் தலைவர் விடாமல் அனைவரும் பேசுகிறார்கள்.

    இங்கே பேசி பேசியே மக்களை முட்டாளாக்குகிறார்கள்.. இப்ப என்ன நிலைமை என்றால், குரல் கொடுத்து விட்டால் அவர் நல்லவர்!

    கொடுக்கவில்லை என்றால் கெட்டவர்.. என்னங்க நியாயம்.

    பல பிரச்சனைகளுக்குக் காரணமே அரசியல்வாதிகள் தான்.. ஆனால், அறிக்கை விட்டுவிட்டால், அதுவரை அவர் செய்த தவறுகள் மறக்கப்பட்டு புனிதர் ஆகி விடுகிறார்.

    அறிக்கை விட்டால் போதுமா? அது தான் தீர்வா? பிரச்சனையை எப்படி முடிப்பது என்பது பற்றி அக்கறை இல்லை! அறிக்கையை மட்டும் எதிர்பார்ப்பவர்களுக்கு அது தேவையும் இல்லை!

    யாருமே ரஜினியை மதிக்கவில்லை என்று கூறுகிறார்கள் ஆனால், அவர்களே தான் ரஜினி அனைத்துக்கும் அறிக்கை தர வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    முரண்பாடாக உள்ளது.

    • ரஜினியின் 40 வருட உழைப்பை யாரும் கேள்வி கேட்கவில்லை. அவரின் சமீபத்திய கருத்துகளின் அடிப்படையில் தான் இந்த கேள்விகளே. அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் யாரும் அவரிடம் சென்று இந்த கேள்விகளை கேட்கமாட்டார்கள். அதையும் மீறி கேட்டால் அவருடைய பதில் எதுவாகினும் அது அவருடைய தனிப்பட்டக்கருத்து. ஆனால் தமிழக அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிவிட்டு குறிப்பிட்ட விடயங்களுக்கு மட்டும் தான் நான் பதில் கூறுவேன் என்பது தவறுதானே ?

     கூடவே அவர் கூறும் பதில்கள் சாதாரண மக்களில் ஒருவனாக தெரியவில்லை, அதிகாரத்தின் ஊதுகுழலாக அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பகைத்துக்கொள்ளாத பாங்காகவே இருக்கிறது. நான் உங்களில் ஒருவன், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது நீங்கள் என்று சொல்லிக்கொண்டு எனக்கு தோதான விடயங்களுக்கு மட்டுமே கருத்து சொல்வேன் அதுவும் அதிகாரத்தை பகைத்துக்கொள்ளாத (அ) திருப்திபடுத்தும் அளவில் பதில் சொல்வது சரியானதா என்று நீங்களே சொல்லுங்கள் ?

     • ” தமிழக அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிவிட்டு குறிப்பிட்ட விடயங்களுக்கு மட்டும் தான் நான் பதில் கூறுவேன் என்பது தவறுதானே ?”

      உங்களின் மேற்கூறிய கேள்விகளுக்கு மேலேயே அருளுக்கு பதில் அளித்துள்ளேன்.

      உங்கள் கூற்றுப்படி தற்போதுள்ள தமிழக தலைவர்கள் அனைவரும் அனைத்துக்கும் கருத்து கூறுகிறார்களா?

      அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினாலும் இன்னும் கட்சி துவங்காத ரஜினியை இவ்வளவு கேள்வி கேட்பவர்கள், அரசியலில் இருப்பவர்களை ஊடகமும் மற்றவர்களும் ஏன் கேள்வி கேட்பதில்லை?

      கருத்து கருத்து என்று எல்லோரும் பேசி பேசி தான் நாம் உருப்படாமல் இருக்கிறோம். எல்லோரும் பேசி பேசியே அடுத்த விஷயம் வந்தால், இதை மறந்து அடுத்ததற்கு சென்று விடுகிறோம்.

      இது எல்லாமே அரசியல். அந்தந்த சூழ்நிலை எந்த கட்சிக்கு இலாபமோ அதை பயன்படுத்தி கொள்கிறார்கள். மக்களைப் பற்றிய கவலையில்லை.

      யாருமே மதிக்காத!! ரஜினியை தான் கருத்து சொல்லணும்னு எல்லோரும் எதிர்பார்க்கறாங்க.. சொன்னால்.. இந்தாளு வாயை மூடிட்டு இருந்தால் போதும்னு சொல்றாங்க.

      செய்தாலும் குற்றம், செய்யவில்லையென்றாலும் குற்றம். பேசினால் குற்றம், பேசவில்லையென்றாலும் குற்றம்.

      முதலில் நாம் நினைப்பதை மற்றவர் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறு.

      ரஜினியாக இருப்பது எளிதல்ல.

      இக்கட்டுரை கூட அண்ணாமலை பற்றியது, அவர் தான் மையக்கருத்து ஆனால், அவரை விட இங்கே ரஜினி தான் விமர்சிக்கப்படுகிறார் ஆனால், அதே உலகம் தான் ரஜினி ஒன்றுமில்லை என்று கூறுகிறது.

      “கூடவே அவர் கூறும் பதில்கள் சாதாரண மக்களில் ஒருவனாக தெரியவில்லை, அதிகாரத்தின் ஊதுகுழலாக அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பகைத்துக்கொள்ளாத பாங்காகவே இருக்கிறது”

      சாதாரண மக்களில் ஒன்றாகத் தெரிய வேண்டும் என்றால், ஸ்டாலின் போல எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

      ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட கருத்து உண்டு. அதில் நமக்கு உடன்பாடில்லை என்பதாலையே அவர் கூறுவது தவறு என்று ஆகி விடாது.

      நான் GST, மின்னணு பரிவர்த்தனை, பணமதிப்பிழப்பை ஆதரிக்கிறேன் ஆனால், பாஜக செய்த தவறு, அவற்றை சரியாக செயல்படுத்தவில்லை.

      திட்டம் சரி ஆனால், செயல்படுத்திய விதம் தவறு.

      இவற்றை நான் ஆதரிக்கிறேன் என்றால், நான் பாஜக என்ற கட்சியை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. அவர்களின் செயல்பாட்டில் சில என்னுடைய எண்ணங்களுக்கு பொருந்துகிறது.

      நான் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறேன், அப்படியென்றால் நான் இடது சாரியா?

      இதெல்லாம் நான் இந்த கருத்தில் மட்டும் கூறவில்லை. இதையொட்டி ஏராளமான கட்டுரைகளை விரிவாக எழுதி இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

      அதே போலத்தான் ரஜினியும், அவருக்கு சரி என்று படுவதை கூறுகிறார். அவை உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், அதற்கு என்ன செய்ய முடியும்?

      அனைவரையும் திருப்தி செய்யும் படி எவர் பதில் அளிக்க முடியும்?!

      ஒருவேளை ரஜினி தவறு என்று கூறுவதை மாற்றி உங்கள் எண்ணப்படி கூறி இருந்தால், இன்னொரு கூட்டம் அவரை விமர்சிக்கும்.

      இது தான் எதார்த்தம்.

 4. @கனி அவர் பேட்டியை முழுக்க பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவர் யாரையுமே எதிர்மறையா பேசவில்லை. காங்கிரஸ் பற்றி கேட்டு இருந்தாலும் இதையே அவர் கூறி இருப்பார்.

  அதோடு விக்ரமன் முழுக்க இடதுசாரி சிந்தனை கொண்டவர். பேட்டியில் அவர் நினைக்கும் பதிலை அண்ணாமலை கொடுக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை வெவ்வேறு முறையில் கேட்டுக்கொண்டு இருந்தார்.

  ரஜினி வரி ஏய்ப்பு செய்தார் என்று மாபெரும் பொய்யைக் கூறி இருந்தார். நீதிமன்றமே அவர் மீதான புகார்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி விட்டது.

  அண்ணாமலைக்கு இவ்வழக்கு பற்றி சரியான விவரங்கள் தெரியவில்லை என்று நினைக்கிறேன்..அதனால் அவரால் விக்ரமனுக்கு சரியான பதிலைக் கூற முடியவில்லை.

  இந்தக் காணொளி பார்த்தவர்கள் விவரம் தெரியாதவர்கள் நிச்சயம் ரஜினி வரி ஏய்ப்பு செய்ததாகத் தான் முடிவு செய்து இருப்பார்கள்.

  ஒருவேளை அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தால் கூட இவரளவில் நல்லவராக இருந்தால் என்ன தவறு?

  தவறு செய்தால் தட்டி கேட்கலாம். ஒரு கட்சியில் உள்ளார், ஆதரிக்கிறார் என்பதற்காகவே கடுமையாக விமர்சிப்பது தவறில்லையா!

  நீங்க சொல்லுங்க கனி.. எந்தக் கட்சி நல்ல / நேர்மையான கட்சி? சிறந்த கொள்கைகள் கொண்டது?

  • கிரி, ஒருவர் தேர்தலில் நிற்கும்போது அவரின் கட்சியை மறந்து விட்டு அவர் எந்த அளவுக்கு நல்லவர், எவ்வளவு தூரம் வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் செய்வார் என்பதை கருத வேண்டும் என்று நம்புபவன் நான். இன்று உள்ள சூழலில் எந்த கட்சியும் நல்ல கட்சியும் கிடையாது. யாரும் கொள்கைகளை மதிப்பதும் கிடையாது என்பதே எனது எண்ணம். ஆனால் இந்த திரு. அண்ணாமலை அவர்கள் தேர்தலில் நின்றால் பாஜகவின் முகமாகவே இருப்பர் என்று தோன்றுகிறது. என் எண்ணம் தப்பி நன்றாக செயல்பட்டால் அதுவும் நன்றே.

   • “ஒருவர் தேர்தலில் நிற்கும்போது அவரின் கட்சியை மறந்து விட்டு அவர் எந்த அளவுக்கு நல்லவர், எவ்வளவு தூரம் வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் செய்வார் என்பதை கருத வேண்டும் என்று நம்புபவன் நான்”

    கனி நீங்கள் கூறுவது சரி… இதை பற்றி ஏற்கனவே பதில் அளித்து இருக்கிறேன். ப்ரியாக்குனு நினைக்கிறேன்.

    ஆனால், இது நடைமுறையில் சாத்தியமில்லாதது.. குறைந்த பட்சம் தற்போதைய சிஸ்டத்தில்.

    காரணம், தற்போது எதுவுமே தீர்மானிக்கப்படுவது ஆட்சியில் உள்ளவரால் மட்டுமே! நாம் வாக்களிக்கும் வேட்பாளரை வைத்து அல்ல. சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.. ஆனால், நான் பெரும்பான்மையை பற்றி இங்கே கூறுகிறேன்.

    ஆட்சியில் உள்ளவர் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும், நம் பகுதி வேட்பாளர் அல்ல. தலைமை சரியாக இருந்தால் மட்டுமே அவர் கீழ் உள்ளவையும் சரியாக இருக்கும்.

    எடுத்துக்காட்டுக்கு, எங்கள் மைலாப்பூர் பகுதி வேட்பாளர் நட்ராஜ் (முன்னாள் காவல் அதிகாரி) பதவிக்கு வந்த பிறகு மிகச்சிறப்பாக எங்கள் பகுதியை கவனித்துக்கொண்டார். இவரைப் பற்றி என் தளத்தில் எழுதி இருக்கிறேன்.

    ஆனால், நாளடைவில் அவரால் இந்த சிஸ்டத்தை மீறி நடந்து கொள்ள முடியவில்லை. முதல் சில மாதங்கள் மட்டுமே அவரால் தொடர முடிந்தது, பின்னர் இப்படி தான் இருக்கும் என்று புரிந்து கொண்டார் போல.

    எனக்கு மிக வருத்தம். எனவே, தனி ஒரு வேட்பாளரால், இந்த சிஸ்டத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. தலைமை சரியாக இருந்தால், அவர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும்.

    ” திரு. அண்ணாமலை அவர்கள் தேர்தலில் நின்றால் பாஜகவின் முகமாகவே இருப்பர் என்று தோன்றுகிறது.”

    இருக்கட்டுமே! என்ன தவறு? அவர் மக்களிடையே எப்படி நடந்து கொள்கிறார்? மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதே முக்கியம். அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை வைத்து ஏன் அவரை விமர்சிக்க வேண்டும்?

    தவறு செய்தால் விமர்சியுங்கள்.. வாக்களிக்காதீர்கள். கட்சியை வைத்து விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்?

    நீங்களே தான் மேலே கூறுகிறீர்கள், வேட்பாளர் சரியாக இருந்தால் அவருக்கு தான் வாக்களிப்பேன் என்று.

    ஒருவேளை இவர் பாஜக வில் இருந்தாலும், நேர்மையாக இருந்தால் இவருக்கு வாக்களிப்பதில் என்ன தவறு?! (உங்கள் லாஜிக் படி)

    ஆனாலும், மக்கள் தலைமையை மனதில் வைத்து தான் வாக்களிப்பார்கள்.

    தமிழகத்தில் பாஜக வுக்கு மரியாதை இல்லை. எனவே, இவர் வெற்றி பெற முடியாது. தனிப்பட்ட செல்வாக்கினால் வாக்கு பெற்றால் மட்டுமே உண்டு.

    • சரிங்க கிரி.. பார்க்கலாம் திரு.அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் என்று. 🙂

 5. எந்த கட்சியும், நேர்மையான கட்சியில்லை என்பது உண்மை தான், அதற்காக, பிஜேபியை ஆதரிக்க முடியாது. கையில் கத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுபனை விட, கையில் கத்தி வைத்திருக்கும் முட்டாள் ஆபத்தானவன். அது நடந்து கொண்டிருக்கும், 6 வருட ஆட்சியிலேயே தெரியும். எதாவது சொன்னால் திமுக என்பார்கள். திருமுருகன் காந்தியை, டேனியல் காந்தி, என்று சொல்லுகிறார்கள்.

  ஒரு சிறிய நன்றியும், வேண்டுகோளும், தாங்கள் மூலமாகத்தான், நான் Youturn பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி. அதை தாங்கள் அவ்வப்போது, பார்க்கும் படி வேண்டுகிறேன்.

 6. @Aloy “அதற்காக, பிஜேபியை ஆதரிக்க முடியாது. ”

  ஆதரிக்க வேண்டாம்.. நான் பாஜகவை ஆதரியுங்கள் என்று கூற வில்லையே!

  ஆதரிப்பதும் மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

  “எதாவது சொன்னால் திமுக என்பார்கள். திருமுருகன் காந்தியை, டேனியல் காந்தி, என்று சொல்லுகிறார்கள்.”

  திமுகக்கு எதிராகக் கூறினால் சங்கி, பாஜக என்று கூறுவதில்லையா.. அது போலத் தான்.

  உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததற்கு மகிழ்ச்சி. அனைத்தையும் படிக்கிறேன்.

 7. உங்களை நீண்ட காலமாக வாசிக்கும் எனக்கே நீங்கள் சிறிது சிறிதாக ரஜினிக்காக சங்கி ஆவது போல இருக்கிறது. ரஜினி சாரை நான் நீண்ட காலமாக அவர் வாயை மூடி இருப்பதற்காக விமர்சித்த எனக்கே அவர் வாயை மூடியே இருந்திருக்கலாம் போல இருக்கிறது. ஆனால் நீங்கள் அவருக்கும் இன்னமும் முட்டுக்கொடுப்பது பார்ப்பதற்கு பாவமாக உள்ளது. முதல்தடவை பஜாகாவை ஆதரித்து எழுதி பின்னர் மன்னிப்பு கேட்டீர்கள். மீண்டுமொரு முறை மன்னிப்பு கேட்காதீர்கள்.
  அப்புறம் ரஜினி ரசிகர்களிலும் பார்க்க திமுக முட்டாள்கள் ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதாக நம்புவது மிகவும் நகைப்புக்கிடமாக உள்ளது.
  ரஜினி சார் இன்னமும் வெகு ஜன பத்திரிகைகள் படிப்பதில்லை போல உள்ளது. பத்திரிகைகள் மூலம் எனக்கு தெரிந்த மக்கள் பிரச்சனைகள் கூட அவருக்கு தெரிவதில்லை. கொரோனாவை காரணம் காட்டி ரஜினி சார் திரை , இல்லாத அரசியலில் இருந்து வெளியேறுவது அவரின் ஆயுளை அதிகரிக்கும்.

  • கொரோனா என்னோட வாழ்க்கையிலும் விளையாடி வேலை/ படிப்பை காவு வாங்கிடிச்சு, இப்போதான் திரும்பவும் முதலிலே இருந்து ஆரம்பிச்சிருக்கேன்.

   • இப்படியொரு பதிலை உன்னிடம் எதிர்பார்க்கவில்லை பிரியா.

    நீ தைரியமான, புத்திசாலியான (Smart) பெண் என்பதால், இவற்றை எதிர்கொண்டு மீண்டு வருவாய் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

    வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here