ரஜினியின் ஒரு வருட அரசியல்

2
ரஜினியின் ஒரு வருட அரசியல்

நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்ற அறிவிப்பை ரஜினி வெளியிட்ட நாள் (டிசம்பர் 31) இன்று. ரஜினியின் ஒரு வருட அரசியல் கடந்து விட்டது. Image Credit

ரஜினியின் ஒரு வருட அரசியல்

இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள், விமர்சனங்கள், பேட்டிகள், சர்ச்சைகள், ரஜினி மக்கள் மன்ற செயல்பாடுகள் என்று பரபரப்பாகச் சென்ற வருடம்.

ரஜினி பற்றி விவாதம் வராத வாரமே இல்லை எனும் அளவுக்குத் தொலைக்காட்சிகளில் பேசித் தீர்த்து விட்டார்கள்.

பேச, விவாதிக்க எதுவுமில்லை என்றால் கூட ரஜினி பற்றி எதையாவது விவாதிப்போம் என்றாகி விட்டது.

தலைப்பு என்னவோ ரஜினியின் ஒரு வருட அரசியல் என்று இருந்தாலும், கடந்த 23 வருடங்களில் ரஜினியின் பெயர் இல்லாமல் அரசியல் இல்லை என்பதே உண்மை.

ஊடகங்களும் சமூகத்தளங்களும்

ரஜினியை கொலைவெறியோடு பலர் ஊடகத்திலும் சமூகத்தளத்திலும் விமர்சிக்கிறார்கள் 🙂 . ரஜினி அப்படியென்ன அவர்களுக்குக் கெடுதல் செய்து விட்டார் என்பது தான் புரியவில்லை!!

அவர்களோட சொத்தை அபகரித்து விட்டாரா? இல்லை ஏமாற்றி விட்டாரா? ஏதாவது மதத்தைத் தவறாகக் கூறி விட்டாரா? யாரையாவது அநாகரிகமாகப் பேசி விட்டாரா?

எதுவுமில்லை!!

இதற்குக் காரணம் ஒன்றே ஒன்று அவருடைய வளர்ச்சி.

இத்தனை பேர் விமர்சித்தும், ஊடகங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக விவாதித்தும் அவரை ஒன்றுமே செய்ய முடியவில்லையே! என்பது மட்டுமே.

ரஜினியின் தைரியம்

ரஜினியை பயப்படுபவர் என்று விமர்சிப்பவர்களைப் பார்த்துச் சிரிப்பு தான் வருகிறது!

ரஜினி மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல், யாரையும் சமாதானப்படுத்தவும் இல்லாமல் நேரடியாகக் கூறுபவர். சிறந்த உதாரணம் தூத்துக்குடி பேட்டி.

கலவரத்துக்குக் காரணம் சமூக விரோதிகள் என்று கூறியதை, மக்களைத் தான் சமூக விரோதிகள் என்று கூறினார் என்று ஊடகங்கள் அப்படியே திருப்பிப் போட்டு விட்டார்கள்.

அவர் 26 லட்சம்+ நிதி உதவி கொடுத்ததோடு அப்படியே மற்றவர்களைப் போல மக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட எவ்வளவு நேரமாகி விடப்போகிறது?

அதன் பெயர் பயமென்றால்..

ஒரு வாரத்தில் “காலா” படம் வெளியாகிறது என்று தெரிந்தும் மக்களைத் தூண்டி விடாமல் நியாயத்தைத் தில்லாகப் பேசும் ரஜினி பயப்படுபவர் என்றால், அப்படியே இருக்கட்டும்.

மற்றவர்களைப் போல நேரத்துக்குத் தகுந்த மாதிரி பேசாமல், திரும்பத் தான் கூறியதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் இருப்பதன் பெயர் பயம் என்றால், அப்படியே இருக்கட்டும்.

ரஜினி செய்த ஒரே ஒரு தவறு விமான நிலையத்தில் கோபத்தால் கட்டுப்பாடு இழந்து கொடுத்த பேட்டி மட்டுமே! அது தவிர்த்து இருக்க வேண்டிய பேட்டி.

தூத்துக்குடியிலேயே விரிவாகப் பேசிய பிறகு திரும்பப் பேசி இருக்க வேண்டியதில்லை. அவரின் கோபத்தால் இரண்டாவது முறை ஏற்பட்ட பெரும் இழப்பு.

ரஜினி மக்கள் மன்றம்

2018 புத்தாண்டு முதல் ரஜினி மக்கள் மன்றம் துவங்கியது. கிட்டத்தட்ட முதல் ஆறு மாதங்கள் தமிழ்நாடு முழுக்கப் பொறுப்பாளர்களை நியமிப்பதிலேயே சென்றது.

அதோடு உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை என்றால், எண்ணிக்கைக்காக வெறும் பெயர் மட்டுமல்ல, வாக்காளர் எண்ணுடன்.

மிகச்சிறந்த முறையில் கட்சியைக் கட்டமைத்து வருகிறார்.

தவறு இழைத்த உறுப்பினர்கள் நீக்கப்பட்டார்கள். மன்றத்தில் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

இதன் பிறகு பல்வேறு மாவட்ட அமைப்புகளும் தங்களுடைய பகுதியில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

கஜா புயல்

கஜா புயல் ஏற்படுத்திய பேரழிவில் ரஜினி மக்கள் மன்றம் செய்த உதவிகளை ஊடகங்கள் வேண்டும் என்றே புறக்கணித்தன.

2.75 கோடி அளவுக்குத் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்றம் மூலமாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இரவு பகலாக 16 நாட்கள் தொடர்ச்சியாக உழைத்தார்கள். புதியதலைமுறை மட்டுமே ஓரளவு செய்திகளில் காட்டியது.

பல உதவிகள் செய்திகளில் வருவதில்லை எனவே, உங்களில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. நான் இவர்களுடன் தொடர்பில் இருப்பதால் எனக்கு அனைத்தும் தெரிய வருகிறது.

நான் கூறியது பொய் அல்ல. பொய்யான தகவல்களை எழுதுவது எனக்குப் பிடிக்காதது.

#RMMinGajaAffectedAreas

நம்பிக்கையில்லாதவர்கள் #RMMinGajaAffectedAreas என்ற hashtag ல் பாருங்கள். உங்களால் நம்ப முடியாத புயல் நிவாரண உதவிச் செய்திகள் குவிந்து இருக்கும்.

ரஜினியிடம் உள்ள பலம் பலவீனம் இரண்டுமே தான் செய்ததை விளம்பரப்படுத்தாதது.

ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கும் போது செய்த வேலையைக் கூட வெளியே காட்டிக்காமல் இருக்கிறார்.

கடவுள் பார்த்துக்கொள்வார் என்று ரஜினி நினைத்தாலும், இந்தக்காலத்தில் எதற்கும் விளம்பரம் அவசியமாகிறது.

ஸ்டிக்கர் ஓட்டினார்கள் என்று கிண்டலடித்தவர்களே ரஜினி ஒன்றும் செய்யவில்லை என்பது முரண். இதெல்லாம் செய்தே இப்படி என்றால்…!

ஒன்றுமே செய்யாதவர்களே விளம்பரப்படுத்திக்கொள்ளும் போது கடும் உழைப்பை அவரது ரஜினி மக்கள் மன்றம் மூலம் கொடுத்தவர் அமைதியாக இருப்பது வருத்தமே.

அவர் பாணியிலே கூறுவதென்றால், கடவுள் பார்த்துக் கொள்வார் என்பது தான்.

பாராளுமன்றத் தேர்தல்

ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை, இனியும் அவர் ஆரம்பிக்க மாட்டார், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார்” என்று பல்வேறு விமர்சனங்கள்.

ரஜினி அரசியல் அறிவிப்பு வெளியிட்ட போதே “சட்டமன்றத் தேர்தல்” தான் என்று தெளிவாகக் கூறி விட்டார். பாராளுமன்ற தேர்தல் பற்றி அப்போது முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

இனி பாராளுமன்றத் தேர்தலில் கலந்து கொள்ளும் அளவுக்குக் கால அவகாசமில்லை.

இனிமேல் கட்சி ஆரம்பித்து, மக்களிடையே சென்று, ஊடகங்களின் எதிர்மறை பிரச்சாரங்களைக் கடந்து பாராளுமன்ற தேர்தலுக்குத் தயாராவது சிரமமே!

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

கட்சி ஆரம்பிப்பாரா?

இந்தக் கேள்வி பொதுமக்கள் பலருக்கு இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தில் நியாயமுள்ளது.

என்னைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியும், மற்றவர்களுக்கு ஊடகங்கள் கூறுவது தான் செய்தி.

எனவே, அதையொட்டியே அவர்களது எண்ணமும் இருக்கும்.

ரஜினி நிச்சயம் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று தமிழருவி மணியன் அவர்களைச் சந்தித்து விட்டு வந்த பிறகு நான் கூறிய போது பலரும் நம்பவில்லை, ரஜினி ரசிகர்கள் உட்பட.

Read: தமிழருவி மணியன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

தற்போதும் கூறுகிறேன் ரஜினி நிச்சயம் சரியான நேரத்தில் கட்சி துவங்குவார், அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.  அனைத்தையும் யோசித்தே எந்த முடிவையும் அறிவிக்கிறார்.

அவர் களத்தில் இறங்கும் நாள், இதுவரை பேசியவர்கள் இறங்கும் வரை பேசப்போகிறவர்கள் எல்லாம் வாயடைத்து நிற்கத்தான் போகிறார்கள்.

நான் கூறுவது சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம் ஆனால், நடக்கும் போது சிரித்ததற்காக வெட்கப்படுவீர்கள். நிச்சயம் இது நடக்கும்.

நண்பர் ஜீவதர்ஷன் கூறியதை இங்கே கூறி முடிக்கிறேன்.

ஒரு கட்டிடம் கட்டப்படும் போது நான்கு பக்கமும் மூடப்பட்டு இருக்கும். உள்ளே என்ன நடக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது.

ஒரு நாள் அனைத்தும் பணிகளும் முடிக்கப்பட்டு மறைப்புகள் விலக்கப்படும் போது புதிய முழுமையான கட்டிடத்தைக் கண்டு அனைவரும் வியப்பார்கள்.

அந்தக் கட்டிடம் ரஜினியும், ரஜினி மக்கள் மன்றமும் தான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!

மகிழ்ச்சி!

கொசுறு

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்து உங்கள் வாழ்வு வளம் பெறவும் இந்த புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. நல்லதே நடக்கும்.
    உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கில்லாடி

  2. ரஜினி என்ற தனி மனிதனின் உழைப்பு, நேர்மை, திறமை, எளிமை, வளர்ச்சி… என இன்னும் பல விஷியங்கள் மிகவும் பிடிக்கும்.. ஆனால் அரசியலில் ரஜினியின் நுழைவு தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை!!! 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்து இருந்தாலும் என் நிலை இதுவே..

    ஏனெனில் திரையில் நன்றாக நடிக்கும் அவருக்கு, நிஜத்தில் நடிக்க தெரியாது.. அதுவே அரசியலில் மிக பெரிய பலவீனம்.. எல்லாவற்றிற்கும் வளைந்து, நெளிந்து கொடுக்க வேண்டிய சூழல் எல்லாம் சமாளிப்பது எல்லாம் சாத்தியம் என்று எனக்கு தோன்றவில்லை…சினிமாவில் சாதித்த அவர் அரசியலில் அவரது பயணம் எவ்வாறு அமையும் என்று கணிக்க முடியவில்லை… இருப்பினும் அவர் தீவீர அரசியலில் இறங்கினால் அவரது கொள்கைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவரை ஆதரிப்பேன்…

    எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! 2018 எனக்கு கடினமான ஆண்டு பல நெருக்கடிகளை சந்தித்தேன்.. எனக்கு காலங்கள் மீது நம்பிக்கை இல்லையென்றாலும், வரும் ஆண்டு எல்லோருக்கும் நன்றாக அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!