பொருளாதாரத்தில் பணவீக்கம் பணவாட்டம் (Inflation & Deflation) வழக்கமானது. பணவீக்கம் பரவலானது ஆனால், பணவாட்டம் அதிகம் புழக்கத்தில் இல்லாதது.
பணவீக்கம்
பொருட்களின் விலை / கட்டணம் அதன் தகுதிக்கு மீறி, அதிகப்படியான தேவை காரணமாக அதிக விலைக்கு விற்கப்படுவதே பணவீக்கம் ஆகும். Image Credit
பற்றாக்குறை காரணமாக தக்காளி விலை திடீரென்று அதன் வழக்கமான மதிப்பை விட அதிக விலைக்கு விற்கப்படும் போது பணவீக்கம் ஏற்படுகிறது.
அதாவது, இது தொடர்பான அனைத்து இடங்களிலும் கட்டணம் உயர்ந்து போலியான விலை உயர்வு அனைத்து இடங்களிலும் நடந்து அனைவரையும் பாதிக்கிறது.
மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டு. இது போல எங்கெல்லாம் உற்பத்தியை விடத் தேவைகள் அதிகரிக்கிறதோ அங்கே அப்பொருளின் மதிப்பு அதிகமாக உயர்கிறது.
இவை சங்கலித்தொடர் என்பதால், ஒவ்வொரு சராசரி நபரின் வாழ்க்கையையும் நேரடியாகப் பாதிக்கிறது.
மேற்கூறியவை பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.
பணவாட்டம்
இச்சொல் பலருக்குக் கேள்விப்படாததாக இருக்கலாம் காரணம், இந்நிலையைச் சந்தித்தது இல்லை. சொல்லப்போனால் நாம் சந்திக்கக் கூடாது.
பணவீக்கம் எப்படித் தேவைகள் அதிகரிப்பதால் உருவாகிறதோ, அதே போலத் தேவைகள் குறைவால் பணவாட்டம் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட பொருளுக்குத் தேவை குறைந்தால் என்ன நடக்கும்? அதை உருவாக்கியவர் நட்டமாகிறார்.
எடுத்துக்காட்டுக்குத் தக்காளி, வெண்டை விற்பனையாகாததால் விவசாயி இவற்றைக் குளத்திலும், குப்பையிலும் கொட்டியது செய்தியாகப் பார்த்து இருப்போம்.
இது போன்ற ஒரு சிலர், தற்காலிகமாக நட்டமாவது தனிப்பட்ட நபரின் இழப்பு என்பதால், அது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதில்லை.
இதுவே மிகப்பெரிய அளவில் நடந்தால்…. அது தான் பணவாட்டம்.
சீனா
எடுத்துக்காட்டு, சீனாவின் தற்போதைய நிலை. சீனா எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சியடைந்ததோ அதே போலச் சிக்கலையும் எதிர் கொண்டு வருகிறது.
சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான Evergrande, உச்சத்திலிருந்து அதல பாதாளத்துக்கு வீழ்ந்து, திவால் அறிக்கை கொடுத்து விட்டது.
ஏராளமான வீடுகளைக் கட்டி, விற்க முடியாமல் திணறி வருகிறது.
கொரோனாக்கு பிறகு சீனா பொருளாதாரம் தள்ளாட்டத்தில் உள்ளது, அதோடு சீனாவிலிருந்து பல நிறுவனங்கள் இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
அதோடு பல ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்குக் கடன் கொடுத்து அவர்கள் கனிம வளம் மற்றும் உழைப்பை எடுத்துக்கொள்ளச் சீன முயன்று வருகிறது.
ஆனால், அந்நாடுகள் கடனைச் செலுத்த முடியாததாலும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கடனைக் கொடுக்க முடியாததால், நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு அனைத்து பக்கமும் இக்கட்டான சூழ்நிலை நிலவி, சீன பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் உள்ளதால், செலவு செய்வதை மக்கள் தவிர்க்கிறார்கள்.
காரணம், எதிர்காலத்தில் மோசமான நிலை ஏற்பட்டால், செலவுக்கு, வாழ்க்கையைச் சமாளிக்கத் தேவையான பணத்துக்குச் செலவுகளைக் குறைத்து, சேமிக்கிறார்கள்.
இதனால், வாங்குவதற்கே ஆள் இல்லாததால், நிறுவனங்கள் விலையைக் குறைத்துக் கொண்டே சென்றதில், பணவாட்டம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு குறைத்தாலும் வாங்கவில்லை என்றால், எப்படி வியாபாரத்தை நடத்துவது?! பொருட்களை விற்பது? இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
எனவே, பணவீக்கம் பணவாட்டம் நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. இதைக்கட்டுக்குள் வைத்துள்ள நாடே பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியும்.
தொடர்புடைய கட்டுரை
கிரி, பணவீக்கம் / பணவாட்டம் குறித்த எளிமையான உங்கள் விளக்கத்திற்கு நன்றி.. கடந்த சில வருடங்களாகவே உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே.. நீங்கள் கூறுவது போல சீனா மிக பெரிய தொகையை கடனாக இலங்கை மற்றும் சில நாடுகளுக்கு அளித்துள்ளது.. அதுவும் கடனுக்கான தவணை காலம் 99 வருடங்கள்.. இலங்கைக்கு வழங்கப்பட்ட தொகையை பெரும் பகுதி ராஜபக்க்ஷே குடும்பமே கொள்ளை அடித்தது தான் இலங்கையின் தற்போதைய நிலைக்கு காரணம்..
எனக்கு நீண்ட நாளாக புரியாத ஒரு விடயம். இந்தியாவிலும் பல மாநிலங்கள் மத்திய அரசிடமும் / பன்னாட்டு நிதி நிறுவனங்களிலும் வட்டிக்கு கடனை பெற்று தான் தன்னுடைய நீண்ட கால திட்டங்களுக்குக்கான தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியாவும் தன் தேவைக்காக வெளியில் கடன் வாங்குகிறது.. இந்த நிலை பல வருடங்களாக தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.. கடந்த 20 வருடங்களில் தமிழ்நாட்டின் கடன் தொகை பல மடங்காக கூடி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது இதே நிலைமை தான் இருக்கும் என எண்ணுகிறேன்.
இவற்றையெல்லாம் எப்போது சரி செய்து சமநிலைக்கு திரும்புவோம் என்று தெரியவில்லை. சாதாரணமாக ஒரு குடும்ப தலைவன் தன் குடும்பத்தை நடத்துவது போல தானே ஆட்சியில் இருப்பவர்களும் நம் நாட்டை நடத்த வேண்டும். நம் வருமானத்திற்கு மேல் கடனை வாங்கி கொண்டே போனால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும். பல மத்திய / மாநில அரசு துறைகள் நட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது.. ஆட்சி மாறும் போது இவர்கள் அவர்களை குறை சொல்வதும், அவர்கள் இவர்களை சொல்வதுமாக தான் சென்று கொண்டிருக்கிறது..
@யாசின்
இதுவொரு சுவாரசியமான கேள்வி. முடிந்தவரை எளிமையாக கூற முயற்சிக்கிறேன்.
ஒரு நாடோ, மாநிலமோ, நிறுவனமோ கடன் வாங்காமல் தொடர முடியாது. அவ்வாறு கடன் வாங்காமல் தொடர்ந்தால் நல்லது ஆனால், வாங்கினால் தவறு இல்லை.
ஒரு நிறுவனம் தனது வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றால், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால், கடன் வாங்கும்.
வாங்கிய கடன் மூலம் வியாபாரத்தை பெருக்கி கடனை திரும்பச் செலுத்தி விடும். இது விரிவாக்க முயற்சிக்காக தொடர்ந்து கொண்டே இருக்கும்.
கடன் வாங்கவில்லை என்றால் பெரிய அளவில் நிறுவனம் வளர முடியாது.
இது நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் பொருந்தும்.
ஆனால், கடனை மட்டுமே பெற்றுக்கொண்டு வளர்ச்சியடையாமல் இருந்தால் சிக்கல். இந்த நிலையில் தான் ஒரு மாநிலமோ, நாடோ திவால் ஆகி விடுகிறது.
ஒருவர் கடன் பெறுகிறார் என்றால், கொடுப்பவர் அதைப் பெறுபவரால் திரும்பக் கொடுக்க முடியும் என்றாலே கடன் கொடுப்பார்.
எடுத்துக்காட்டுக்கு, வங்கி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடன் எல்லையைத் தீர்மானிக்கிறது ஏன்?
காரணம், இவர் 10 லட்சம் சம்பாதிக்கிறார் அதனால் இவருக்கு 1 லட்சம் கொடுத்தால், திரும்பக் கொடுக்க முடியும். இவர் 1 கோடி சம்பாதிக்கிறார். எனவே, 10 லட்சம் கொடுத்தால் திரும்பப் பெற முடியும் என்று வங்கி முடிவு செய்கிறது.
அதே போல இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் GDP என்ன? அந்நிய செலவாணி கையிருப்பு என்ன? வளர்ச்சி விகிதம் என்ன? என்பது போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு கடன் கொடுக்கப்படுகின்றன.
இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். கடந்த இரு வருடங்களில் தமிழகத்துக்கு கடன் அதிகரித்து விட்டது உண்மையே!
பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க மறுக்கும் IMF, இந்தியாக்கு கொடுக்கக் காரணம் இது தான்.
ஒவ்வொரு நாட்டின், மாநிலத்தின் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து கடன் கிடைக்கும். இந்தியாவின் அந்நிய செலவாணி இருப்பு கிட்டத்தட்ட 650 பில்லியன்.
இந்தியா கடனைப் பெற்று இந்தியாவில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது, உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கடனைத் திரும்பச் செலுத்தும்.
இவ்வாறு பெறும் கடனை முறையாக பயன்படுத்தாத போதே அடுத்து வரும் அரசு சிக்கலில் மாட்டுகிறது.
உங்கள் எளிமையான விளக்கத்திற்கு நன்றி கிரி..