சில வருடங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 28 டிசம்பர் 2023 காலமானார். Image Credit
கேப்டன் விஜயகாந்த்
மதுரையில் அரிசி ஆலை நடத்தி வந்தவர், திரைப்பட விருப்பத்தில் நடிக்க வந்து போராடி அவருக்கான இடத்தைப்பெற்றார். நாயகர்களுக்கே உரித்தான நிறமாக இல்லாமல் கறுப்பாக இருந்தும், அதையும் தாண்டி வெற்றி பெற்றார்.
உச்சத்திலிருந்த ரஜினி கமல் இருவரையும் தாண்டி வெற்றி பெற்றவர். பல முன்னணி நடிகர்களுக்கு அமையாத ராசியான 100 வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்.
RK செல்வமணி என்ற அறிமுக இயக்குநரின் படமான புலன் விசாரணை வெற்றியைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் என்ற 100வது படத்தில் நடித்தார்.
ஏராளமான படங்களில் நடித்து இருந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பிறகு அனைவராலும் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
நிதி நெருக்கடியிலிருந்த நடிகர் சங்கத்தை மீட்ட பெருமை கேப்டனுக்கு உண்டு.
திரை வாழ்க்கை
வயதான பிறகு காலத்துக்கு ஏற்பக் கதைகளை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யாதது திரைப்படங்களில் அவருக்கான இடத்தை இழக்க வைத்தது.
2000 க்கு பிறகான அவரது வெற்றியைக்கூறும் படங்களாகத் தவசி மற்றும் ரமணா அமைந்தது. ரமணாக்கு பிறகு இதையே பிடித்து இது போன்ற கதைகளில் தொடர கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டார்.
விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் இப்ராஹிம் இராவுத்தர். கேப்டனின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவர்.
கேப்டன் சோர்ந்து இருந்த போது அவருக்கு உற்சாகம், நம்பிக்கையளித்துப் போராட வைத்து வெற்றி பெற வைத்தவர். கால மாற்றத்தில் இருவருக்குமான நட்பு முறிந்தது.
இந்திய அரசாங்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதிகம் கொன்றது கேப்டனாகத் தான் இருப்பார். கேப்டன் படங்களில் தேசப்பற்று ஓங்கி இருக்கும்.
தேசத்தை முன்னிறுத்தி நடித்த தற்கால தலைமுறை நடிகர்களில் ஒருவர் கேப்டன்.
காவல்துறை படங்களில் அம்சமாகப் பொருந்தி, காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தவர். இன்றும் சத்ரியன், மாநகர காவல், புலன் விசாரணை திரைப்படங்கள் ரசிக்கத்தக்கவை.
கேப்டன் உடல் ஊர்வலம் சென்ற போது அவர்களை அறியாமலே காவல்துறையினர் சல்யூட் அடித்ததே கேப்டன் பெற்ற மதிப்பை அறியலாம்.
அரசியல்
கேப்டன் தனது இறுதிக்கால படங்களில் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்ததோடு கட்சியைத் துவங்கி சின்னத்தையும் படங்களில் பயன்படுத்தி வந்தார்.
இதன் பிறகு உறுதியான முடிவை எடுத்து அரசியலில் களம் இறங்கினார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டார். மக்களோடு மட்டுமே கூட்டணி என்று 2006 சட்டமன்றத்தேர்தலில் யாருமே எதிர்பாராத 8%+ வாக்குகளைப் பெற்றார்.
அறிமுக கட்சிக்கு இவ்வாக்குகள் மிக அதிகமே!
கேப்டன் துவக்கத்திலிருந்தே திமுகவை எதிர்த்து வந்தார், அவர் மீது இருந்த கடுப்பில் கலைஞர் அவரது மண்டபத்துக்குக் கொடுத்த குடைச்சல்கள் அனைவரும் அறிவர்.
அதிமுக கூட்டணி
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். திமுக கடுமையாக முயன்றும் கூட்டணி அமையாததால் திமுக கோபத்திலிருந்தது.
இக்கூட்டணி அமையப் பத்திரிகையாளர் சோ காரணமாக இருந்தார். இத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றிகளை விட தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இதன் பிறகு ஜெ க்கும் கேப்டனுக்கும் சண்டை ஏற்பட்டுப் பிரிந்தார்கள். ஜெ வை சந்திக்க கேப்டனை மிகவும் காக்க வைத்ததாகக் குற்றச்சாட்டு உண்டு.
சட்டமன்றத்தில் கேப்டன் கோபமாகச் சண்டையிட்டது சர்ச்சையாகப்பார்க்கப்பட்டது.
கேப்டனை ‘குடிகாரன்’ என்று ஜெ விமர்சிக்க, ‘எனக்கு இவர் தான் ஊற்றிக்கொடுத்தாரா?’ என்று கேப்டன் பதிலடி கொடுக்கப் பிரச்சனை பெரியதானது.
இதன் பிறகு பல மாவட்டங்களில் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து கேப்டனை ஜெ அலைக்கழித்தார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதன் பிறகு ஜெ அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார் ஆனால், அதன் பிறகு கேப்டன் பெரியளவில் சோபிக்கவில்லை.
ஒரு மிகப்பெரிய கட்சி, அனுபவம் பெற்ற ஆளுமையின் கீழ் உள்ள கட்சி எதையும் கடந்து வரும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு.
அதே போல வளரும் கட்சிகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், திட்டமிட வேண்டும், பொறுமை வேண்டும் என்பதை தேமுதிக தவறுகள் உணர்த்துகிறது.
அரசியலில் கேப்டன் குடும்பத்தினரின் தலையீடும் தேமுதிக வளர்ச்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
கோபம் அவசரம்
அரசியலில் வெற்றியைத் தடுத்த முக்கிய காரணிகள் கோபம் அவசரம்.
கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் கோபக்காரரே! அவரைக்கட்டுப்படுத்துவது எளிதல்ல, எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளன.
அரசியலுக்குப் பொறுமை, அவசரமின்மை மிக முக்கியமானது ஆனால், இவை கேப்டனுக்கு இல்லாதது அவரின் அரசியல் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.
கோபம் அவசரம் தனது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன என்பதை இறுதிவரை கேப்டன் உணரவில்லை என்பது சோகம்.
இவற்றில் எச்சரிக்கையாகி தன்னை மாற்றிக்கொண்டு இருந்தால், நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் ஆனாலும், அவரது உடல்நிலை ஒரு பெரிய தடையாக இருந்தது.
தமிழக ஊடகங்கள்
தமிழகத்தின் சாபக்கேடு தமிழக ஊடகங்கள். அரசியல்வாதிகளை விட கேவலமானவர்கள்.
துவக்கத்திலிருந்தே திமுக கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால், கேப்டனின் கோபத்தை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி கேள்விகளைக் கேட்டார்கள்.
அதாவது, எப்படிக் கேட்டால் கோபம் ஆவார் என்று திட்டமிட்டுக் கேள்விகேட்டு அவரைக் கோபப்படுத்தி அதைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி அவரது பிம்பத்தைச் சிதைத்தனர்.
எந்த நிகழ்ச்சி என்றாலும் தவறாமல் படமாக்கி அதில் ஏற்படும் சில சர்ச்சைகளை மட்டும் முன்னிறுத்தி வெளியிட்டுக் கேப்டனை கோமாளி போல ஆக்கினர்.
கேப்டன் இறந்த பிறகு தமிழக ஊடகத்தினரை உள்ளேயே விட்டு இருக்கக் கூடாது. இதுவே அவருக்குச் செய்யும் மரியாதையாக இருந்து இருக்கும்.
தற்போதும் அவரை வைத்து TRP மூலம் சம்பாதிக்கிறார்கள். தமிழக ஊடகங்களைப் போலக் கேவலமானவர்களைப் பார்ப்பது அரிது.
அவர் துப்பியது 100% சரி, அதற்கு மிகப்பொருத்தமானவர்கள்.
வடிவேல்
கேப்டனுக்கும் வடிவேலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதைத் திமுக தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி வடிவேலுவை வைத்துக் கேப்டனை மிக மோசமாக 2011 சட்டமன்றத் தேர்தல் மேடையில் பேச வைத்தனர்.
வடிவேலும் தனக்குக்கூடிய கூட்டத்தைப் பார்த்த போதையில் மிக அநாகரீகமாக கேப்டனை விமர்சித்தார். இதற்காகவே வடிவேலுவை இன்று வரை பலர் மன்னிக்கவில்லை.
கேப்டன் இறந்த பிறகு அதிகம் விமர்சிக்கப்பட்டவர்களில் ஒருவராக வடிவேல் உள்ளார். மக்களின் கோபத்துக்குப் பயந்தோ என்னவோ இறப்புக்கும் வரவில்லை.
பொதுவாழ்க்கையில் வந்த ஒருவரை விமர்சிப்பது வழக்கமானது என்றாலும், வடிவேலு தனது சொந்த பிரச்சனைகளுக்கு மேடையைப் பயன்படுத்திக்கொண்டார்.
வடிவேலு பேசியதை திமுக தனது தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பியது.
வடிவேல் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுப்பதாகவும் பேசப்பட்டது ஆனால், நடக்கவில்லை. அவர்களுக்குத் தெரியும், யாரை எங்கு, எதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஆனால், வடிவேலுக்கு அது தெரியவில்லை.
தனக்குக்கூடிய கூட்டத்தைப் பார்த்து, தன் பேச்சை மக்கள் ரசிக்கிறார்கள் என்று இருந்த வடிவேலுக்கு, தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்தது.
இதன் பிறகு 10 வருடங்கள் அவருக்குப் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. திறமையான கலைஞரான வடிவேல் தன் வாயால் அழிந்தார், இன்று வரை அவரால் மீள முடியவில்லை, பழைய நகைச்சுவை நடிப்பையும் பெற முடியவில்லை.
இதன் பிறகும் திருந்தாமல் தற்போதும் திமுகவுடன் சுற்றிக்கொண்டுள்ளார். திமுகக்கு ஆதரவாகப் பேசித் திட்டு வாங்கிக்கொண்டுள்ளார்.
இவ்வளவு கேவலமாக வடிவேல் பேசியும் கேப்டன் ஒரு விமர்சனம் கூட வைக்காதது மிகப்பெரிய மதிப்பை மக்களிடையே அவருக்கு அளித்தது.
வடிவேலுவின் அநாகரீக பேச்சுகளைப் பொறுமையாகக் கடந்த கேப்டன் பின்னர் ஏன் கோபம் அடைந்து ஊடகங்களின் வலையில் விழுந்தார் என்பது புரியாத புதிர்.
2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தான் மீம் தமிழ் சமூகத்தளங்களில் அறிமுகமாகியிருந்தது.
இன்று பலரின் மீம்களுக்கு வடிவேல் நகைச்சுவைகள் பயன்படுத்தப்பட்டாலும், அப்போது வடிவேலுவே மீம்களில் வறுத்தெடுக்கப்பட்டு இருந்தார்.
அப்போது Blog எழுதிக்கொண்டு இருந்தவர்கள் அறிவார்கள்.
உடல்நிலை
கேப்டன் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அதைச் சரிசெய்ய முயற்சிக்கவில்லை.
கேப்டன் இருந்த நிலையில் தான் ரஜினியும் இருந்தார் ஆனால், ரஜினி சுதாரித்து, யோகாவில் கவனம் செலுத்தியதோடு மருத்துவ முயற்சிகளையும் மேற்கொண்டார் ஆனால், கேப்டன் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறி விட்டார்.
ஒரு நல்ல மனுசன் பொம்மை போல மேடைகளில் தோன்றியது, உட்கார வைக்கப்பட்டது அவரை நேசித்த அனைவருக்கும் வேதனையை அளித்தது.
ஒருவர் மீது மற்றவர்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளார்கள் என்பது அவரின் இறப்புக்கு வரும் கூட்டத்தில் தெரியும் என்பார்கள்.
கேப்டனுக்கு கூடிய கூட்டம் சேர்த்த கூட்டமல்ல, தானாக சேர்ந்த கூட்டம்.
அரசியலில் கேப்டன் வெற்றி தோல்விகளைச் சந்தித்து இருந்தாலும், நல்ல மனிதர் என்ற அளவில் அனைவர் மனதிலும் வெற்றி பெற்றவராகவே உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலையில் சோதனைகளைக் கடந்து தொடர்ச்சியான போராட்டங்களைச் சந்தித்தவருக்கு ஓய்வு தேவையே!
கேப்டனின் உதவும் குணம், கேப்டனை என்றும் மக்களின் நினைவுகளில் நிலைத்து நிற்க வைத்திருக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்
செல்வி ஜெ. ஜெயலலிதா 1948 – 2016
கலைஞர் மு. கருணாநிதி 1924 – 2018
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. சிறு வயதில் என்னை கவர்ந்த முதல் ஹீரோ கேப்டன் தான்.. என்னுடைய நண்பன் ரஜினி ரசிகன்.. நான் கேப்டனின் ரசிகன்.. இருவரும் மணிக்கணக்கில் இவர்கள் நடித்த படத்தை பற்றி பேசுவோம்.. எங்களுக்குள் நடித்து காட்டி கொள்வோம்.. பூந்தோட்ட காவல்காரன் படத்தை பார்த்து மிரண்டு இருக்கிறேன்.. அந்த படத்தில் வரும் கான கருங்குயிலே என்னுடைய விருப்ப பாடல் இது. அதே போல் வைதேகி காத்திருந்தாள் இறுதிக்கட்ட சண்டையை பார்த்து பயந்து தருணங்கள் உண்டு.
துவக்கத்தில் பல வித்தியாசமான கதைக்களங்களில் கேப்டன் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் R.சுந்தர்ராஜனும். S. சந்திரசேகரும் இவரின் கலைப்பயணத்தில் மிக முக்கியமானவர்கள். ஊமைவிழிகள் படம் தற்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும். இவரை வைத்து படம் எடுத்த இந்த தயாரிப்பாளரும் நட்டமடைந்ததாக நான் இது வரை ஒரு செய்தியை கூட படித்ததில்லை.. ரஜினியும் இது போல தான்..
செந்தூரப்பாண்டி படம் மூலம் நடிகர் விஜய்க்கு பாதை அமைத்து கொடுத்தார். தன்னுடைய 100 ஆவது படத்தை சொந்தபடமாக கேப்டன் பிரபாகரன் படத்தை தயாரித்து மிக பெரிய வெற்றியை பெற்றார். அந்த அனுபவத்தை இயக்குனர் RK.செல்வமணி CHAI WITH CHITRA நிகழ்ச்சியில் பகிர்ந்து இருப்பார்.. அவ்வளவு இனிமையான நேர்காணல் அது. கேப்டனின் திரை வெற்றிகள் அனைத்திற்கும் இப்ராஹிம் ராவுத்தர் உடன் இருந்தது எல்லோரும் அறிந்தது.
அரசியலை பொறுத்தவரை கேப்டனின் அவரின் நுழைவு நான் எதிர்பார்க்காதது.. 2002 வாக்கில் பா ம க ஒரு கட்டத்தில் ரஜினியை தீவிரமாக பாபா படம் ரிலீஸின் போது எதிர்த்தனர்.. ரஜினி அந்த சூழலில் நிலைமை கையை மீறி சென்றதால் சற்று சோர்வடைந்தார்.. ஆனால் இதே பா ம க கேப்டனிடம் ஒன்றும் செய்ய முடியாமல் போனது அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள். அரசியலை பொறுத்தவரை இருவரின் ஆளுமை வேறு வேறு..
“கோபத்தில் எழுபவன் நட்டத்தில் அமர்கிறான்” இந்த கோபமும், அவரது குணமும் தான் அரசியிலில் அவரை இன்னும் அதிக தூரம் பயணிக்க முடியாமல் போனதற்கான காரணம். அது மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்னும் சிலரை வைத்து தான் கட்சியை தொடங்கினார்.. ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் உள்ளே நுழையும் போது பழைய ஆட்களுக்கு முக்கியத்துவம் இல்லாமால் போனது..
இது தான் கட்சியின் சரிவுக்கு முதல் காரணம்.. எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் இவரது MLA சிலர் படிப்படியாக வேறு கட்சிகளுக்கு தவறினார்கள்.. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்கவில்லை. மேலும் இவரை தவிர்த்து கட்சிக்கு FACE VALUE இல்லை என்பது எல்லோரும் அறிந்தது.. எல்லாவற்றிக்கும் மேல் மக்கள் நல கூட்டணி , தேர்தலுக்கு பின் கட்சி படிப்படியாக கீழே சென்றது..
மொத்தத்தில் அரசியலை தவிர்த்து, ஒரு தனி மனிதனாக கேப்டன் ஒரு மாணிக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.. தன் வாழ்நாள் முழுவதும் நிறைய உதவிகளை இவர் செய்து இருக்கிறார்.. நிச்சயம் இதற்கான பலனை அவர் அடைவார்.. மரணம் என்பது உடலுக்கு மட்டும் தான்.. இறந்தும் அவர் அன்றும் வாழ்வர்..
@யாசின்
“ஊமைவிழிகள் படம் தற்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும்.”
இப்படம் நட்புக்காக கேப்டன் நடித்துக்கொடுத்த படம். அவரே எதிர்பார்க்காத வெற்றி. திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த படம் என்று நினைக்கிறன்.
அவர்களை ஊக்கப்படுத்த நடித்துக்கொடுத்தார், அதுவும் வயதானவராக.
“தன்னுடைய 100 ஆவது படத்தை சொந்தபடமாக கேப்டன் பிரபாகரன் படத்தை தயாரித்து மிக பெரிய வெற்றியை பெற்றார்.”
மாபெரும் வெற்றி. இப்படம் வெளியான போது ஏற்பட்ட பரபரப்பு மறக்கவே முடியாது. மன்சூர் மிகப்பிரபலமாக இருந்த காலம்.
அதில் முதலில் இரவில் ஒரு விளக்கு தெரியும் பின்னர் அப்படியே வரிசையாக கார்கள் வருவதை காண்பிப்பது வியப்பாக பார்க்கப்பட்டது.
சரத் கொஞ்ச நேரமே வந்தாலும் மறக்க முடியாத கதாப்பாத்திரம். பாடல்களும் இளையராஜா இசையில் அசத்தலாக இருக்கும்.
கேப்டன் அறிமுகமே செம மாஸாக இருக்கும்.
“2002 வாக்கில் பா ம க ஒரு கட்டத்தில் ரஜினியை தீவிரமாக பாபா படம் ரிலீஸின் போது எதிர்த்தனர்.. ரஜினி அந்த சூழலில் நிலைமை கையை மீறி சென்றதால் சற்று சோர்வடைந்தார்.. ஆனால் இதே பா ம க கேப்டனிடம் ஒன்றும் செய்ய முடியாமல் போனது அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.”
உண்மை.
ரஜினி அமைதியானதற்கு இன்னொரு காரணம் ரசிகர்கள் பாதிக்கப்பட்டனர். கேப்டன் முழுக்க அரசியலில் இறங்கியதால் துணிச்சலாக செயல்பட்டார்.
அதோடு அவர்கள் பகுதியிலேயே போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இது தான் அதிரடி.
““கோபத்தில் எழுபவன் நட்டத்தில் அமர்கிறான்” இந்த கோபமும், அவரது குணமும் தான் அரசியிலில் அவரை இன்னும் அதிக தூரம் பயணிக்க முடியாமல் போனதற்கான காரணம்.”
மிகச்சரி.
“குடும்பத்தினர் உள்ளே நுழையும் போது பழைய ஆட்களுக்கு முக்கியத்துவம் இல்லாமால் போனது..”
இதனால் தான் ஒருநபரை நம்பி ஆரம்பிக்கப்படும் கட்சிகள் பின்னர் சோபிப்பதில்லை. இதற்கு அனைத்து கட்சிகளும் எடுத்துக்காட்டு.
திமுகவும் குடும்ப கட்சியாக இருந்தாலும், அதற்கு வரலாறு இருப்பதால் தாக்கு பிடிக்கிறது. உதயநிதி முக்கியப்பொறுப்பில் வரும் போது கட்சியின் சறுக்கல் ஆரம்பம் ஆகும்.
இதில் மாட்டாதது பாஜக மட்டுமே!
“இவரை தவிர்த்து கட்சிக்கு FACE VALUE இல்லை என்பது எல்லோரும் அறிந்தது.”
ஆமாம்.
“எல்லாவற்றிக்கும் மேல் மக்கள் நல கூட்டணி , தேர்தலுக்கு பின் கட்சி படிப்படியாக கீழே சென்றது..”
இது சரி தான் என்றாலும், அனைவருமே கூட்டணி வைக்கிறார்கள், புதிதாக முயற்சிக்கிறார்கள்.
இவர்கள் கெட்ட நேரம் அக்கூட்டணி சொதப்பி விட்டது. ஒருவேளை சில இடங்களை பிடித்து இருந்தால், காட்சி மாறி இருக்கும்.
“தன் வாழ்நாள் முழுவதும் நிறைய உதவிகளை இவர் செய்து இருக்கிறார்.. நிச்சயம் இதற்கான பலனை அவர் அடைவார்.”
உண்மை. அவரது பிள்ளைகள் அனுபவிக்கலாம்.