இந்தித் திணிப்பும் மொழி அழிப்பும்

31
இந்தித் திணிப்பும் மொழி அழிப்பும்

ந்திக்கு “ஜே” போட்டுக்கொண்டு இருந்தால், இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு நாம வட மாநிலப் பண்டிகைகளைத் தான் கொண்டாடிட்டு இருப்போம். இந்தித் திணிப்பும் மொழி அழிப்பும் கட்டுரை இதை விளக்குகிறது. Image Credit 

இந்தித் திணிப்பு

ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்ய ஆயிரம் பிரச்சனைகள் வரிசைகட்டி இருக்க, மோடி அரசு இந்தியை புகுத்துவதில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

சமூகத்தளங்களில் இந்தியை புகுத்த ஆரம்பித்தவுடன் தமிழ்நாடு மட்டுமல்லாது மற்ற சில மாநிலங்களிலும் கிளம்பிய எதிர்ப்பைப் பார்த்து, இது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் தான் என்று மோடி அரசு பின் வாங்கியது.

என்றைக்கு இது போல ஒரு முடிவை எடுத்து ஆரம்பித்தார்களோ அப்போதே தெரிந்து விட்டது இது தான் அவர்களுடைய எண்ணம் என்பது.

ஏனென்றால் பல மொழி, கலாச்சாரங்கள் நிறைந்த ஒரு நாட்டில் எந்த வித கலந்தாலோசித்தலும் இல்லாமல் தன்னிச்சையாக இவ்வளவு பெரிய முடிவை புகுத்துகிறார்கள் என்றால், இது ஒரு சர்வாதிகார மனநிலை தான்.

எனவே, தான் முதலில் பின்வாங்கினாலும் நிச்சயம் இதை உள்ளடி வேலைகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்துவார்கள் என்று எண்ணினேன்.

கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் முதலில் பகிரங்கமாக செய்ததைத் தற்போது சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள்.

அறிவிப்பு செய்து செய்தால் தானே எதிர்ப்பார்கள், அதையே எதுவும் சொல்லாமல் செய்தால்…! அதைத் தான் மோடி அரசு செய்து கொண்டு இருக்கிறது.

விமான நிலையங்களில் மாநில மொழி புறக்கணிப்பு

வட மாநில விமான நிலையத்தில் (Air India) சுங்கப் படிவத்தில் முழுக்க முழுக்க இந்தியை (ஆங்கிலமில்லாமல்) கொடுத்ததால் பலரும் கடுப்பாகி இது பற்றி சமூக வலைதளத்தில் எழுதி இருந்தார்கள், இது சமீபத்திய உதாரணம்.

இந்தியா என்பது பன்மொழி பேசும் நாடு. எனவே துவக்க காலத்தில் இருந்தே அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தி அலுவல் மொழி தானே தவிர தேசிய மொழி அல்ல. இதை உணராத சிலர் இன்னும் இந்தி தேசிய மொழி என்று உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழி வெறி யாருக்கு?

சமீபத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் UN நிகழ்ச்சியில், தான் இந்தியில் பேசப்போவதாகக் கூறி எந்த வித மொழி மாற்றி உதவியும் இல்லாமல் மற்ற நாட்டினரிடையே இந்தியில் பேசி இருக்கிறார்.

வந்து இருந்தவர்கள் தெரியாத மொழிப் படம் சப்டைட்டில் இல்லாமல் பார்த்தது போல விழித்து இருக்கிறார்கள்.

இது போன்ற பொது நிகழ்ச்சியில் பல நாட்டுத் தலைவர்களும் இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் எப்படி இது போல பேசலாம்!?

இதே UN நபர்கள் போகும் நாடுகளில் எல்லாம் அந்த மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால், அது நடைமுறையில் சாத்தியமா!

உங்களுக்குச் சீன மொழி தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு நிகழ்ச்சிக்காக உங்களை சீனா  அழைக்கிறார்கள். அங்கே உலகப் பொது மொழியான ஆங்கிலத்தில் பேசாமல் /  மொழி மாற்றி வசதி இல்லாமல், மாண்டரின் மொழியில் பேசினால்  விழிப்பீர்களா மாட்டீர்களா?

எதுக்கு என்னை இங்க வரச் சொன்னீங்க.. வர வைத்து இப்படி அசிங்கப்படுத்தறீங்க என்று தோன்றுமா தோன்றாதா!

ஈசாப் நீதிக்கதை

ஈசாப் நீதிக்க கதைகளில் வரும் ஒரு கதையில் ஒரு கொக்கும் நரியும் நண்பர்கள். நரி எப்போதுமே புத்திசாலி என்பதால், கடுப்பான கொக்கு அதை அவமானப்படுத்த ஒரு நாள் நரியை விருந்துக்கு அழைத்தது.

நரி அங்கே சென்றால், சாப்பிட ஒரு பெரிய குடுவையில் சாப்பாட்டை வைத்து கொக்கு சாப்பிடுவது போல அமைத்து விட்டது. நரியால் எப்படி முயன்றும் சாப்பிட முடியவில்லை. வாய் உள்ளே முழுவதும் நுழைக்க முடியவில்லை.

கடுப்பாகி சரி நான் கிளம்புறேன் நீங்க ஒரு நாள் என் வீட்டிற்கு விருந்திற்கு வாங்க என்று அழைத்தது. கொக்கும் நம்ம என்ன வைத்தாலும் சாப்பிடலாம் என்ன செய்துவிட முடியும் என்று தில்லாக வந்தது.

உங்களுக்காக பாயாசம் வைத்து இருக்கேன் என்று நரி கூறி, பாயசத்தை ஒரு தட்டத்தில் ஊற்றிக் கொடுத்து விட்டது. கொக்கால் தட்டத்தில் இருக்கும் திரவ உணவை எப்படி சாப்பிட முடியும்?

தன் தோல்வியை ஒத்துக்கொண்டு தான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மோடி அரசு செய்யும் செயல் இந்தக் கதையைத் தான் நினைவு படுத்தியது.

ராஜ்நாத் சிங்கை  ஜெர்மனிக்கு அழைத்து அங்குள்ளவர்கள் அனைவரும் ஜெர்மனியில் மட்டுமே பேசினால், “ஆஹா அருமை அருமை!” என்று ராஜ்நாத் சிங் தலையாட்டுவாரா! தலையாட்டுவார்.. ஒன்றுமே புரியாமல்.

ஆங்கிலம் பொது மொழி என்று யார் கூறியது? என்று உடனே பொங்கி விடாதீர்கள்.

ஆங்கிலம்

சீனா, ஜப்பான் உட்பட பல நாடுகள் தங்கள் மொழியையே இயங்கு தளமாக (Operating system) கணினியில் பயன்படுத்தினாலும் அவர்களால் 100% அவர்கள் மொழியை மட்டுமே பயன்படுத்தி விட முடியாது.

சில இடங்களில் ஆங்கிலமும் இருக்கும் / பயன்படுத்தியே ஆக வேண்டும். இதை நான் எதோ போகிற போக்கில் கூறவில்லை.

அலுவலகப் பணிக்காக தாய்லாந்து, சீனா, ஜப்பான் உட்பட 8 நாடுகளின் பயனாளர்கள் கணினியை Remote எடுத்து செயல்படுகிறேன்.

எனவே, இது பற்றி நன்கு தெரியும்.

UN நிகழ்ச்சிக்காக வரும் ஒருவர் இந்தியாவிலேயே வாழ வேண்டி இங்கே கிடைக்கும் வசதிகளுக்காக இங்கே வசிக்கத் திட்டமிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

வட மாநிலத்தில் உள்ள பள்ளியில் சேர்த்தால் அங்கே “இந்தி ஒரு பாடமாக படித்துத் தான் ஆக வேண்டும், கட்டாயம்” என்று கூறுகிறார்கள் என்றால், அதில் எந்தத் தவறும் காணவில்லை.

ஏனென்றால், ஒரு கலாச்சாரத்தில் இருக்க நீ வருகிறாய் என்றால், அதற்கு ஏற்றார் போல மாறித்தான் ஆக வேண்டும்.

உனக்கு தேவை என்றால் நீ தான் மாறிக்கொள்ள வேண்டுமே தவிர நீ செல்லும் இடம் உனக்காக மாறாது ஆனால், ஒரு நிகழ்ச்சிக்காக விருந்தினராக வருபவர் கூட இந்தி தான் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது மொழி வெறி.

மொழி வெறியும் மொழிப் பற்றும்

மோடி செய்து கொண்டு இருப்பது மொழி வெறி. தங்கள் மொழி அழிந்து விடக் கூடாது என்ற பயத்தில் இந்தி மொழித் திணிப்பை எதிர்ப்பது, தன் மொழி மீதான பற்று. இதில் என்ன தவறைக் கண்டீர்கள்?

இவை இரண்டிற்குமான வித்யாசம் புரியவில்லை என்பதற்காக, இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள், மொழி வெறியர்கள் ஆகி விடுவார்களா?!

இங்கே யாரும் விமான நிலைய, ரயில் நிலைய form களில் தமிழ் மட்டுமே வைத்து ஆக வேண்டும் என்று கொடி பிடிக்கவில்லை. இதாவது புரிகிறதா இல்லையா!?

பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழி தேசிய மொழியா?

பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழியை தேசிய மொழி ஆக்கினால் என்ன? சீனாவில் மாண்டரின், ஜப்பானில் ஜப்பானீஸ், ஜெர்மனியில் ஜெர்மன் தேசிய மொழி தானே!

அப்படி இருக்கும் போது இந்தியாக்கு இந்தி தேசிய மொழியாக இருந்தால் என்ன? என்பது தான் பலரின் கேள்வி.

கேள்வி என்னவோ நியாயமானது தான் ஆனால், இந்தியாவும் மற்ற நாடுகளும் ஒன்றில்லையே!

இந்த நாடுகளில் ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்று இருக்கிறது எனவே இவர்களுக்கு இது போல வைப்பதில் பிரச்சனையில்லை ஆனால், இந்தியாவில் அப்படியா இருக்கிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை” என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது.

இந்தியாவில் பெரும்பான்மையாவர்கள் இந்துக்கள் தான்.

எனவே, அனைவரும் இந்து மதத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்குமோ அது போலத்தான் பெரும்பான்மை மக்கள் பேசுவது இந்தி அதனால் இந்தி தான் அனைவரும் பேச வேண்டும் என்பதும்.

நாடு ஒன்று என்றாலும், கலாச்சாரம் மத உணர்வுகள் வேறு வேறு.

இந்தி தெரியாததால் மிகப்பெரிய அவமானமா?

இந்தி படிக்காததால எல்லாம் போச்சே, என்னுடைய தலைமுறையே அழிந்து விட்டது என்கிற அளவுக்கு பலர் புலம்பி வருகிறார்கள்.

வட மாநிலம் சென்றால் என்னால் பேச முடியாமல் அவமானம் ஏற்படுகிறது என்று இந்தி ஆதரவாளர்கள் கூறிக் கொண்டு உள்ளார்கள்.

இவர்களைப் போல ஒரு காலத்தில் நானும் நினைத்தேன். பல விவாதங்களையும் கட்டுரைகளையும் படித்த பிறகு தான் இது குறித்த புரிதல் ஏற்பட்டது.

இந்தி விருப்பத்திற்கும் திணிப்பிற்கும் வித்யாசம் புரியாமல் இருப்பது தான் தற்போது நிலவும் மிகப் பெரிய பிரச்சனை.

இதை புரிந்து கொள்ளாமல் இந்தி கற்றுக்கொள்ளாமல் செய்து என் வளர்ச்சியை தடுத்து விட்டார்கள் என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு இருப்பது, இவர்களின் கீறல் விழுந்த வசனங்கள்.

சொல்லப்போனால் கலைஞர் போன்றவர்கள் இதை எதிர்த்ததாலையே நான் இந்தியை ஆதரித்தேன். இந்த கோஷ்டி தான் என்னை இந்தி தெரியாமல் செய்து விட்டது என்று அனைவரையும் போல எண்ணினேன்.

உண்மையில் அவர்கள் அன்று செய்த போராட்டம் தான் இன்று தமிழர்களுக்கான அடையாளத்தை இன்னும் விட்டு வைத்துள்ளது. இல்லையென்றால் நாமும் எப்பவோ “ஆவோ ஜி” என்று கூறிக்கொண்டு  நம் அடையாளத்தை விட்டு விலகி இருப்போம்.

வட மாநிலங்களில் பெங்காலி மொழி பேசுபவர்கள் இந்தியை அனைத்திலும் புகுத்தியதால் இன்று அவர்கள் கலாச்சாரத்தை, மொழியை விட்டு இந்திக்கு மாறி விட்டார்கள்.

இது சிறு எடுத்துக்காட்டு தான் இது போல இந்தியால் அழிந்த மொழிகள், கலாச்சாரங்கள் ஏராளம்.

எந்த மொழிக்கும் தமிழர்கள் எதிரி இல்லை

இந்தியை கற்றுக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை, இந்தி அல்ல எந்த மொழியையும். கூடுதல் மொழி எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறமோ அந்த அளவிற்கு நமக்கு நல்லது. இதில் குறைந்த பட்ச மாற்றுக்கருத்து கூட கிடையாது.

இந்தி எனக்குத் தெரியாது ஆனால், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ரொம்ப அதிகம். தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் மற்ற மொழிகள் விருப்ப மொழியாக இருக்க வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் தமிழ் மொழியே கற்றுக்கொள்ளாமல் ஒருவர் உயர்படிப்பு வரை செல்ல முடிகிறது. ஒரு காட்டை அழிக்க எளிதான வழி நடுவில் ஒரு சாலையைப் போடுவது தான்.

அது போல ஒரு மாநிலத்தின் மொழியை அழித்து விட்டால் போதும் அவர்களின் அடையாளமும் அழிந்து விடும்.

தற்போது இந்தியை திணிக்கிறார்கள் அதுவே பிரச்னையைக் கிளப்புகிறது.

இந்தி தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது, ராஜ்நாத் “நான் பொதுவான நிகழ்ச்சியில் கூட இந்தியில் பேசுவேன்” என்று கூறுவது, சமீபத்தில் சமஸ்க்ருத மொழியை CBSC பள்ளிகளில் ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என்று மோடி உத்தரவிட்டது.

அனைத்து மக்களும் வந்து செல்லும் விமான நிலையத்தில் நான் இந்தி form தான் வைப்பேன் என்பதன் பெயர் தான் திணிப்பு.

இந்தி பேச விரும்பினால்…

இவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்றால் இந்தி பேசும் மக்களிடையே பேசலாம், இவர்கள் மாநில பாஜக கூட்டத்தில் பேசலாம் ஆனால், இது போன்ற நிகழ்ச்சியில் அல்ல, மற்ற மொழி பயன்படுத்துபவர்கள் இடையே அல்ல.

இது போல திணிக்கும் போது நாளடைவில் தமிழ் என்ற மொழியை, கலாச்சாரத்தை மறந்து மக்கள் இந்திக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத் தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் மொழியை, கலாச்சாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க நம்மையே தூண்டுகிறார்கள்.

இது புரியாமல் இந்தியை அனைவரும் உயர்த்தி பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இது கூட பரவாயில்லை இன்னும் சிலர் தமிழ் மொழியை மிகக் கேவலமாகப் பேசுகிறார்கள். இவர்களால் எப்படி தாய் மொழியை கீழிறக்க முடிகிறது!!

உங்கள் தாய்க்கு வயதானால் எந்தப் பயனும் இல்லை என்று அநாதை ஆசிரமத்தில் விடுவதற்கும் இதற்கும் எந்தப் பெரிய வித்யாசமும் இல்லை.

தாய் மொழியை பழிப்பவரும் தாயைப் பழிப்பவரும் ஒன்றே.

தாழ்வு மனப்பான்மை

இந்தியாவில் (என்றில்லை ஆசியாவிலேயே) வெள்ளையர்களைக் கண்டால் அனைவரும் பம்முவார்கள். வெள்ளையர்கள் எப்போதுமே அதிகாரமிக்கவர்களாகவே தங்களை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதோடு மக்களின் எண்ணமும் வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் நாம் அவர்களுக்கு கீழே தான் என்ற தாழ்வுமனப்பான்மை உள்ளது.

ஒரு வெள்ளைக்காரன் கிட்ட பேசுவதற்கு நாம் கொடுக்கும் முக பாவனைகளும் உடல் மொழிகளும் அதே நம் நாட்டைச் சார்ந்த அவர்களை விட உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு கொடுக்க மாட்டோம்.

எடுத்துக்காட்டுக்கு அவர்கள் நாட்டில் மதிக்கப்படாமல் இருக்கிற ஒரு வெள்ளையர் நம்ம ஊருக்கு வந்தால், ராஜ மரியாதையை அனுபவிக்கலாம். ஏன் என்று புரிகிறதா?!

இது ஒரு தாழ்வு மனப்பான்மை மற்றும் அடிமை எண்ணமே! இதை நம் ஆசிய மக்களிடம் பெரும்பான்மையானவர்களிடம் காண முடியும்.

இதே ஒரு நிலை வட மாநிலத்து நபருக்கும் தென் மாநிலத்து நபருக்கும் இடையே இருக்கிறது.

வட மாநிலத்தவர் அதிகாரத்தில் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதோடு தான் பெரிய “இவர்” என்ற எண்ணம் அவர்களிடையே எப்போதும் உண்டு.

அலுவலகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வட மாநிலத்தவராகவும் மற்ற வேலைகளைச் செய்பவர்கள் நம் தென் மாநில மக்களாகவும் இருப்பதை வைத்தே அறியலாம்.

இந்த ஒரு காரணமும் இந்தி பேசுபவர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்ற மன நிலையை விதைத்து வைத்து இருக்கிறது. கசப்பாக இருந்தாலும் அவர்கள் நிர்வாகத்தில் நம்மை விடச் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தி தெரியவில்லை என்று ஏன் வெட்கப்பட வேண்டும்?

வட மாநிலத்தவர் தமிழ் தெரியாததற்கு கவலைப்படுவதில்லை ஆனால், நமக்கு இந்தி தெரியவில்லை என்றால் என்னமோ உலகமே இருண்டு விட்டது போலவும் இனி வாழவே முடியாது போலவும் புலம்பித் தள்ளுவார்கள்.

என்றைக்காவது வட மாநிலத்தார் எவராவது தமிழ் கற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்களா?! அப்புறம் ஏன் உங்கள் சுயமரியாதையை விட்டு கேவலமாக அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஒரு தேவை வரும் போது அனைவரும் கற்றுக்கொள்வார்கள். கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது உன் பிரச்சனையே தவிர மற்றவர்கள் பிரச்சனை அல்ல. இங்கே யாரும் இந்தியை கற்றுக் கொள்வதைத் தடுக்கவில்லை.

அரசியல்

அந்தக் காலத்தில் தமிழுக்காக உண்மையாகப் போராடியவர்கள் இன்று தமிழை வைத்து அரசியல் நடத்துவதால், இயல்பாகவே ஒரு தவறான எண்ணம் மக்களிடையே வந்து விட்டது.

இவங்க தமிழ் தமிழ்னு சொல்லிட்டு லாபம் சம்பாதித்து விட்டு, நம்மை மட்டும் இந்தி கற்றுக்கொள்ள முடியாதபடி செய்து விட்டார்கள் என்பது.

இவர்கள் இன்று இரட்டை வேடம் போடுவது என்பது உண்மை தான் என்றாலும், அன்று அவர்கள் செய்த போராட்டம் சரி தான்.

அன்று மட்டும் அவர்கள் போராட்டம் செய்யாமல் இருந்து இருந்தால், தமிழ்நாட்டில் இன்று இந்தி தான் மேலோங்கி இருக்கும்.

இந்தியா முழுக்க எத்தனையோ மாநிலங்கள் உள்ளது ஆனால், அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்த முடிந்த வட மாநிலத்தவர், திணறுவது  நம்மிடம் மட்டும் தான்.

எப்படி பந்து போட்டாலும் அடிக்குறானுகளே என்ற கடுப்பே இவர்களுக்கு இருக்கிறது.

நம் அடையாளத்தை இழந்து விடுவோம் 

இன்று இந்தி இந்தி என்று மூக்கால் அழுபவர்கள் நினைப்பது போல இந்தியை தமிழ்நாட்டில் திணித்தால் அவர்கள் பாணியில் கட்டாயமாகக் கொடுத்தால், இன்னும் இரண்டு தலைமுறைக்குப் பிறகு தமிழ் என்ற மொழி / கலாச்சாரம் தொலைந்து எல்லோரும் வட மாநிலப் பண்டிகைகளை கொண்டாடிக் கொண்டு நமக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச அடையாளத்தையும் தொலைத்து இருப்போம்.

ஏற்கனவே பாதி காணாமல் போய் விட்டது. அப்பொழுதும் கூக்குரல் இடுபவர்கள் அது குறித்து கவலைப்படாமல் இந்திக்கு ஜே போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

“தமிழா..! ஓ சிங்கப்பூர்ல மலேசியாவுல பேசுவாங்களே.. அது தானே!” என்று கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

நாளடைவில் தமிழின் தேவை குறையும் 

லாஜிக்காக யோசித்துப் பாருங்கள், இந்தி திணிக்கப்படும் போது உங்களுக்கு தேவை என்று வரும் போது தான் தமிழைப் பயன்படுத்துவீர்கள்.

மோடி இந்தி பேசுறாரு, ஷாருக் இந்தி பேசுறாரு, அனைத்து இடங்களிலும் இந்தி என்று போகும் போது நடைமுறையில் இந்திக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது வரும்.

நாளைக்கு இது போல கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் தேவை குறைந்து, தமிழே முற்றிலும் மறக்கப்படும்.

தமிழ் மறக்கப்படும் போது பண்டிகைகளில் / கலாச்சாரங்களில் இந்தி முக்கியத்துவம் புகுந்து விடும். இயல்பாகவே இது தொடரும் போது தமிழர் என்ற நம் அடையாளமும் அழிந்து விடும்.

இது தான் இந்தித் திணிப்பில் உள்ள பிரச்சனை. இது தான் பல மொழிகளுக்கு நடந்துள்ளது, இனியும் நடக்கப்போகிறது.

இரண்டாம் தர மக்கள்

ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாடு முழுக்க அனைவரும் எதிர்காலத்தில் இந்தியே பேசினாலும் வட மாநிலத்தவரைப் பொருத்தவரை நாம் என்றுமே அவர்களுக்கு “மதராஸி” தான்.

நம்மை அனைத்து விசயத்திலும் புறக்கணிப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், நாம் இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்படுவோம்.

கிராமங்கள் அழிந்து வருவதால், தமிழர்களுக்கான அடையாளத்தை ஏற்கனவே தொலைத்து வருகிறோம். தமிழர் பண்டிகைக் காலங்கள் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி நாட்களாகவும், விடுமுறை தினக் கொண்டாட்டங்களாகவும் மாறி விட்டது.

நீயா நானாக்களில் “தமிழில் பேசுவது அசிங்கமாக இருக்கிறது!!” என்று இளையதலைமுறை கூறும் பரிதாப நிலைக்கு வந்து விட்டது.

இதில் மொழியையும் அழித்து விட்டால் நாம் நமக்கான அடையாளமே இல்லாமல் வெற்றுக் காகிதமாகத் தான் இருப்போம்.

இன்னும் பலர், தமிழர்கள் மட்டும் தான் இந்தியை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கிணற்றுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தச் செய்தி இருக்கும் ஆங்கிலத் தளங்களில் கருத்துப் பகுதியில் சென்று படித்துப் பாருங்கள், என்ன நடக்கிறது என்று புரியும்.

இறுதியாக, எந்த மொழியையும் தாழ்த்திக் கூறவில்லை. எந்த மொழிக்கும் யாரும் எதிரியில்லை இந்தி உட்பட ஆனால், அது திணிக்கப்படும் போது நிச்சயம் இது போல எதிர்ப்புக் கிளம்பத்தான் செய்யும்.

இந்தி ஆதரவு

துவக்கத்தில் நானும் இந்தி ஆதரவு நிலையில் தான் இருந்தேன்.

அனுபவங்கள் கிடைக்கும் போது நமது கருத்தில் தவறு என்று உணர்ந்தால் மாற்றிக் கொள்வதில் தவறில்லையே!

மக்கள் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தது இந்தியாவை முன்னேற்றத்தானே தவிர, இந்தியை முன்னேற்ற அல்ல!

நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்கிறது ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு இந்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்தியாவை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் இவர்கள் செய்யும் செயல்கள் தேவையற்ற மொழிப் பிரச்சனைகளையே மாநிலங்களிடையே உருவாக்கும்.

தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை….!

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

பிற்சேர்க்கை

இரு மொழிக் கொள்கை சரியா தவறா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

31 COMMENTS

 1. ஒரு இனம் அழிய வேண்டுமானால் அதன் மொழி அழிக்க படுவது உலக வரலாறு, இது புதிதல்ல காலம் தொட்டு காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது,

  கும்கி படத்தில் வரும் வசனம் போல, இந்த (தமிழ்) தீ இதை போல எத்தனையோ கற்று மலையை பார்த்து விட்டு இன்றும் அணையாமல் எரிகிறது.

  கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய தமிழை மண்ணுக்குள் போக இருக்கும் எந்த மனிதனும் அழித்து விட முடியாது.

  மாநில அரசுகள் தன் சமூகத்தளங்களில் தங்கள் தாய் மொழியை(யும்) பயன் படுத்த வேண்டியது தானே ?

 2. வாழ்க்கையில் எந்த சூழ்நிலைகளிலும் சில விஷியங்களை நம்மால் மாற்ற முடியாது. என் தாயையும், தாய்மொழியையும் நான் மாற்றி கொள்ள முடியாது. ஒரு வேளை நாளை, என் மதம் பிடிக்கவில்லை என்றால் நான் வேறொரு மதம் மாற்றி கொள்ள முடியும்.

  ஆனால் அப்படி, என் தாய்மொழியை மாற்றி கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரை அப்படி மாற்றினால் தாயை மாற்றி கொண்டது போல்!!!

  அப்பா, அம்மா ,தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு கூட்டு குடும்ப கலாச்சாரத்தில் அழகான உறவு பெயர்கள் தமிழ் மொழியில் இருக்க…,

  ஆனால் குடும்ப கலாச்சாரம் நம்மை போல் இல்லாத ஆங்கிலத்தை, கேள்வி கேட்காமல் நம் வீட்டுக்குள் உலவவிட்டதால், இவங்க எல்லோரும் மம்மி, டாடி, அங்கிள், ஆண்டி…என ஆகிடாங்க, உறவுகளின் பெயரை தொலைப்பது உறவுகளையே தொலைப்பது போல என்பதை யாரும் உணர்வதில்லை!!!!

  ஒரு மனிதன் தான் வாழ்க்கையில் அவனவன் தேவைகளுக்கு ஏத்த மாதிரி எத்தனை மொழிகள் வேண்டுமாலும் கற்று கொள்ளலாம். ஆங்கிலம்/ஹிந்தி பேசுவதும், எழுதுவதும் சந்தோஷமான விஷியமே….

  ஆனால் ஒருவனுக்கு இது ரெண்டு மொழிகளும் தெரியவில்லை என்றால் இங்கே ஏதோ பெரிய குற்றமாக பாவிக்கப்படுவது, கொடுமையான ஒன்று.. தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் தமிழில் பேசினாலே அபராதம் என்ற நடைமுறை இன்றும் உள்ளது..இது வரவேற்க்கபடவேண்டிய விஷியமா அல்லது வருத்தபட வேண்டிய ஒன்றா என்று புரியவில்லை…

  ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு ஒருவனை கட்டாய மதமாற்றம் செய்வதும், விருப்பமில்லா ஒரு மொழியை ஒருவனுக்கு திணிப்பதிலும் எந்த வித்தியாசமும் இல்லை… அது ஒட்டுமொத்தமாக அவனையும், அவனது சந்ததிகளின், கலாச்சாரத்தையையும், வடிவத்தையையும், அடிப்படையையும், பண்பாடையும் உருகுல செய்து விடும்…
  ================================================================
  தமிழ்நாட்டில் பிறந்தேன், தமிழ் காற்றை தான் சுவாசித்தேன்…தமிழ் மொழியில் முதன் முதலில் உச்சரித்தேன், எழுதவும் பழகினேன். இதே உணர்வோடு தான் இறக்கவும் விரும்புகிறேன்.. என் குழந்தைகளையும் இதே பாரம்பரியத்தில், தமிழன் என்ற அடையாளத்தோடு தான் வளர்க்க விரும்புகிறேன்.. அடுத்தவர்களின் விருப்பங்களை தயவுசெய்து எங்கள் மீது திணிக்காதீர்கள்…
  ================================================================
  “ஆவோ ஜி”, பம்முவார்கள், பெரிய லபக்கு, பெரிய வெண்ணை வெட்டிகள், கபி கபி, ஜெர்க்காவது – வழக்கத்துக்கு மாறான கிரியின் உரைநடையில் கண்டுபிடிக்க முடியாத வார்த்தைகள்.. உணர்வுபூர்வமாக எழுதியுள்ளிர்கள், பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி கிரி.. நீண்டடடடட பின்னோட்டதிற்கு மீண்டும் மன்னிக்கவும்..

 3. மிக அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் கிரி

 4. அருமையான பதிவு அண்ணா என் மனதை படித்தேன் நன்றி

 5. தாய்மொழியைப் பழித்து. பிற மொழிகளை உயர்த்திப் பேசும் வெட்கம் கெட்டவர்கள் இதுவரை உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இது நான் பலரிடம் கண்டு அனுபவித்த உண்மை. பெற்ற தாயையும், தாய்மொழியையும் இழிவாகப் பேசினால், தரித்திரம் இவர்களை துரத்தி துரத்திப் பிடிக்கும்.

 6. சமீபத்தில் ஒரு FM-ல் இந்தி திணிப்பு பற்றி ஒரு மக்கள் கருத்து கேட்பை ஒலிபரப்பினார்கள். இதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இதில் பேசிய அனைவரும் இந்தி வேண்டும் இது தெரியாததால் தான் தாங்கள் சிரமபட்டோம். தங்கள் குழந்தைகள் கற்றால் தான் அவர்கள் எதிர்காலம் நல்லாயிருக்கும் என்பது போல பேசினார்கள். எனக்கு தெரிந்து இந்தி கற்றுக் கொண்டவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். இந்தியால் வாழ்வாதாரம் உயரும் என்பதெல்லாம் சும்மா, இந்தி இங்கு பள்ளியில் இல்லை என்றாலும் பிரச்சார் சபா முலம் கற்று கொடுத்துககொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் மாக்கள் ஆக இருக்கிறார்கள், மொழிக்காக உயிரையும் கொடுத்த மொழிப்போர் தியாகிகளை முட்டாளாக்கி விட்டார்கள்.

 7. மிக மிக அருமையான பதிவு கிரி..
  நானும் முன்பு உங்களை போல தான் நினைத்தேன் ஹிந்தியை படிக்க விடாமல் அரசியல் செய்கிறார்கள் என்று..இப்போது தான் முழுமையாக புரிகிறது..இவர்களின் ஹிந்தி திணிப்பு..
  அவரவர்க்கு அவர்களின் தாய் மொழி உயர்ந்தது..இந்த உணர்வை எந்த திணிப்பாலும் அழிக்க முடியாது..

 8. கட்டுரையாளர் தமிழ்மொழி நூற்றாண்டுகால பழமைவாய்ந்தது என்கிறார். ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழிகள் தமிழனின் பழமை பத்தாயிரம் ஆண்டுகள் என கார்பன் டேட் கணிக்கப்பட்டுள்ளது. மெமாழிஆராய்ச்சியாளர்கள் தமிழ் ஒரு லட்சம்ஆண்டுக்கு முன் பேச்சுவழக்கில்வந்தர் என்கிறார்கள். வெறும் ஐநூறு ஆண்டு இந்தியை நாம் ஏற்கவேண்டியதாகிவிட்டது. இது தமிழன் எந்த அளவு ஏமாளி என்பதை உணர்த்துகிறது

 9. கிரி எனக்கு ஒரு சந்தேகம்.

  ஏர்போர்ட்ல கொடுக்கிற இந்தி விண்ணப்பத்தில் தமிழில் நிரப்பி கொடுத்தால் எப்படி இருக்கும்?

  அசிங்கபடுவான் ஆட்டோகாரன்! 🙂

 10. நல்ல இடுகை கிரி. தமிழை வெறுப்பதற்கு தாழ்வு மனப்பான்மையும், அடிமை புத்தியும்தான் காரணம். எங்கோ படித்தது “குரங்கு கையில் பூ மாலை போல், தமிழனிடம் தமிழ்”.

 11. இன்று அத்தையை அம்மா என்று கூற சொல்லுகிறார்கள், நாளை அம்மாவையே அத்தை என்று கூற சொல்வார்கள்.

 12. கிரி என்ன சொல்றதுனே தெரியல கலக்கி புட்டீங்க கலக்கி 🙂 அப்படியே புல்லரிக்குது.

 13. //நிச்சயம் இது ஒரு சர்வாதிகார மனநிலை தான்//
  இதைதான் அப்பொழுதே அனைவரும் கதறினார்கள். ஆனால் உங்களை போன்று சில/ பல பேர் பிஜேபி நாடு முன்னேற்றம் அடையும் என்றிர்கள். மோடி சர்வாதிகாரம் இனி தான் ஆரம்பம். வளர்ச்சி (சுயநலம்) மட்டும் எதிர்பார்த்தால் இப்படி தான் நடக்கும்.

  //இந்தி அலுவல் மொழி தானே தவிர தேசிய மொழி அல்ல//
  இதுவரை / இன்னமும் இந்தி தான் தேசிய மொழி என்று நம் தமிழர்களே எண்ணுவது உந்து. நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

  //இந்தி விருப்பத்திற்கும் திணிப்பிற்கும் வித்யாசம் புரியாமல் இருப்பது தான் தற்போது நிலவும் மிகப் பெரிய பிரச்சனை//
  100 % சேரியாக சொன்னிர்கள்

  //உண்மையில் அவர்கள் அன்று செய்த போராட்டம் தான் இன்று தமிழர்களுக்கான அடையாளத்தை இன்னும் விட்டு வைத்துள்ளது. //
  உண்மைதான் ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டடீல் திமூகவோ கலைஞரோ மட்டும் காரணம் இல்லை. 1937 ல் பெரியார் அவர்கள் அப்போழுத ஹிந்தியை எதிர்த்தார் பின்னாளில் 1964 ல் மீண்டும் போராட்டம் திமூக அதை நன்கு பையென்படுதி கொண்டார்கள். source: http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu
  நாம் இந்த ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டடை மற்றவர்க்கும் முடிந்தவரை எடுத்து சொல்ல வேண்டும்.
  இனி எவனும் நம்மை (தமிழரை) பார்த்து தேசிய மொழி தெரியாது என்று சொல்ல முடியாது :).

  Gujarat High Court verdict on national language: http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms

 14. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் நீங்கள் சுட்டிக்காட்டிய சில வார்த்தைகளுக்கு நன்றி. தனித்தனியாக எழுதும் போது தெரியவில்லை.. ஆனால் இது போல மொத்தமாகப் பார்க்கும் போது தவறான வார்த்தை பிரயோகமாக தெரிகிறது. நேற்று என் வீட்டின் அருகே உள்ள தமிழ் குடும்பத்தினரிடம் பேசிய போது அவர் இந்தக் கட்டுரையை ப்ரிண்ட் எடுத்து பள்ளியில் கொடுப்பதாகக் கூறினார் (இவர் பள்ளியில் பணி புரிகிறார்). இது போல வார்த்தைகள் இருந்தால், நாகரீகமாக இருக்காது என்று அவற்றை திருத்தி விட்டேன். நன்றி

  @விஜயகுமார் நீங்கள் கூறுவது சரி. நம்மில் பலரும் இது போலவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் ஒரு காலத்தில் நினைத்தவன் தான்.

  @மிதுலன் நூற்றாண்டு என்பது உதாரணம் தான்..இதன் இன்னொரு அர்த்தம் பல நூறு ஆண்டுகள்.

  @விஜய் செம 🙂

  @தமிழ் செல்வன் சரியா சொன்னீங்க.. தமிழ் மொழியின் அருமை தெரியாதவர்களிடம் மொழி.

  @தமிழன் உங்களுக்கும் மேலே வைத்தீஸ்வரன் அவர்களுக்கு கூறிய பதிலே.

 15. மிக மிக முட்டாள்தனமான பதிவு கிரி ..விளம்பரத்திற்கான பதிவு… மக்களை மேலும் முட்டாளாக்கக் கூடிய பதிவு…தமிழிற்காக இவ்வளவு பேசும் நீர் அந்நிய மொழி பேசும் நாட்டில் வேலை பார்ப்பது எதற்கு? நீர் அந்நிய மொழியையை கற்றுக் கொண்டதனால் தமிழை மறந்து விட்டீரா அல்லது இதுவரை தமிழை தவிர வேறெதையும் கற்றுக் கொள்ளவே இல்லையா…? தேசிய மொழி தேவை இல்லை என்றால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நாடு மட்டும் எதற்கு..?மோடியின் தாய்மொழி குஜராத்தி அவர் ஏன் ஹிந்தி மொழியின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்? சீனாவின் முன்னேற்றத்திற்கு
  தேசிய மொழி மாண்டரினும் ஒரு காரணம். ஒரு நாட்டின் பிரதமர் தன்னுடைய கருத்தை தன்னுடைய திட்டங்களை தெரிவிக்க நாட்டுக்கென்று பொதுவான மொழி ஒன்று இந்தியாவில் மட்டும்தான் கிடையாது..ஒரு நாட்டின் பிரதமர் ஒவ்வொரு மாநிலத்திலும் பேச ஒவ்வொரு மொழியை கற்க வேண்டும்.அப்புறம் எதற்கு நமக்கு புரியாத மொழியில் ஒரு ஒரு மத்திய அரசு ,ஒரு பிரதமர்… தமிழ்நாட்டை தனிநாடாக பிரகடனப் படுத்த வேண்டித்தானே ?இது அவலம்.ஒரு நாட்டின் தலைவன் அந்த நாட்டு மக்களிடம் சென்று சேரும் வகையில் பேசக்கூடிய ஒரு பொதுவான மொழியை பேச வேண்டும் என்று நினைப்பது என்பது திணிப்பா? ஒரு கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அனைவரிடமும் சென்று சேரக்கூடிய வகையில் ஆங்கிலத்தில்தான் பேச முடியும்..இதில் எங்கிருந்து வந்தது மொழி திணிப்பு>>>? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணி தேசிய மொழி…ஒரு மொழியை கற்றுக் கொள்வதால் மற்றுமொரு மொழி அழிந்து போகுமென்பது முட்டாள்களின் வாதம். இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட ஒரு நாடு. பல மொழிகளிருப்பினும் தொடர்பு மொழியாக இருப்பது ஹிந்தியும், ஆங்கிலமுமே. நீங்கள் தொழில் நிமித்தமாக சிங்கப்பூரில் இருப்பதால் கேட்கிறேன்.. சிங்கப்பூரில் அனைவரிடமும் தமிழிலேயே பேச வேண்டித்தானே..எதற்காக அந்நிய மொழியின் உதவியுடன் பேசுகிறீர்கள் ?மற்ற மொழியை கற்பதால் தாய்மொழியை மறந்து விடுவார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று..எடுத்துக்காட்டு உங்கள் வலைத்தளம் தமிழில் இருப்பதுதான்…தமிழின் பெருமையையை பறைசாற்றிய மகா கவி பாரதியே பல மொழிகளை கற்ற பின்பு தான் கூறினார்.அவர் பல மொழிகளை கற்றதனால் தமிழை அவர் துச்சமென மறந்து விட்டார் என்று கூற முடியுமா?
  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்
  பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
  இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
  நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
  வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
  தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
  பரவும் வகை செய்தல் வேண்டும.
  யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
  வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
  பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
  உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
  ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
  வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
  சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
  தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
  இறவாத புகழுடைய புதுநூல்கள்
  தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
  மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  சொல்லுவதிலோர் மகிமை யில்லை
  திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.தாய்த் தமிழை வணங்குவோம் மற்ற மொழிகளையும் அறிவோம்…ஒருங்கிணைந்த இந்தியாவின் வளர்ச்சிக்காக பெரும்பான்மையான மக்களால் பேசக்கூடிய மொழியொன்றை தேசிய மொழியாக்குவோம்…இதில் தமிழ் அழிந்து போகுமென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று…காயத்ரிநாகா…தவறிருந்தால் மன்னிக்கவும்…காயத்ரிநாகா…

  கீழ்காண்பவை credit V. ஜெய்குமார் நிர்வாக ஆசிரியர் – தமிழன்குரல் இணைய நாளிதழ்
  தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி பயிற்று விக்கப்படுகிறது. தொழில் நிமித்தமாகவோ, புனித பயணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ தமிழகத்தை விட்டு நாம் வெளியே செல்லும் போது நமக்கு ஹிந்தி கட்டாயம் தேவை என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

  ஆங்கிலதை நாம் கற்றிருந்தாலும் பொது இடங்களில் வழி கேட்க நமக்கு ஹிந்தி கட்டாயம் தேவை. அங்குள்ள மக்களுக்கு அதிகமாக ஆங்கிலம் தெரிவதில்லை ஆனால்100க்கு 95 பேருக்கு ஹிந்தி தெரிந்துள்ளது. இதை தமிழ் நாடு அல்லாத அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
  மேலும், நமது ஊரிலும் வட இந்தியர்கள் வெகுவாக பெருகி விட்டனர். அவர்களுடன் வியாபார தொடர்பிற்கும் நமக்கு ஹிந்தி தேவை, ஆகவே நிறைய ஆர்வம், தினசரி கொஞ்சம் நேரம் செலவழித்தால் நாமும் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டும்தான் ஹிந்தி சுத்தமாகத் தெரிவதில்லை.
  அரசியல்வாதிகளிடம் ‘நாம் ஏன் ஹிந்தி கற்கக் கூடாது?’ என்று கேட்டால் அதற்கு நாம் ஏற்றுக்கொள்ளும் படி பலகாரணங்கள் கூறலாம். ஆனால் இது கடந்த ஐம்பதாண்டுகளுக்கு வேண்டுமானால் பொறுத்தமாக இருந்திருக்கலாம். நம்ப ஊரிலேயே படித்து இங்கேயே வேலை, தொழில் என்று முழு ஆயுளையும் ஒப்பேற்றிவிடலாம்.

  ஆனால், இப்பொழுதுதான் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் கிட்டத்தட்ட அத்தனை அரண்களையும் உடைத்துவிட்டனர். திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மொழி அறியாத காரணத்திற்காக ஏன் வாய்ப்புகளை இழக்க வேண்டும்? என்னதான் யோசித்துப் பார்த்தாலும் ஹிந்தி உள்ளே நுழைந்தால் தமிழ் நசுங்கிப் போகும் என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சாகத்தான் தெரிகிறது.
  வடக்கத்திக்காரன் இங்கு திராவிட கட்சிகளை தாண்டி உள்ளே வர முடிவதில்லை என்பது திராவிட அரசியல்வாதிகளுக்கு பெரும்பலம். ஆனால் உண்மையில், சாமானிய மக்களின் அத்தனை சிறகுகளையும் இது பிடுங்கிப் போட்டுவிடுகிறது என்பதுதான் நிதர்சனம்.

  தமிழ் மூலம் தமிழ் பற்றுடன் வேறு ஒரு மொழியை கற்றுக்கொள்வதால் தமிழுக்கு யாதொரு தீங்கும் வரப்போவதில்லை. மாறாக தமிழரின் மொழித்திறன் மேம்படுவதுடன், வட்டமும் விரிவாகும், அண்டை வீட்டாரான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலத்தவர்கள் ஹிந்தியை படித்து பல மத்திய அரசு பணிகளில் நம்மை முந்தி சென்று கொண்டுள்ளனர்.

  தமிழைபோலவே பல இலக்கிய செல்வங்களும், கலை பொக்கிஷங்களும் கொண்டது ஹிந்தி. அதை வெறுத்து ஒதுக்காமல் கற்பதன் மூலம் நாமும் இந்தியன் என்று பெருமிதம் கொள்வோம்.
  அத்துடன், ஹிந்தி கற்பதன் மூலம் சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி நேபாளியையும் உள்ளிட்ட மொழிகளை படிக்க முடியும், ஏனென்றால் இந்த மொழிகளெல்லாம் தேவநாகரி என்ற எழுதும் முறையில் எழுதப் படுபவையாகும்.

  ஹிந்திக்கு கொடி பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த தலையங்கம் எழுத வில்லை. ஹிந்தி ஒரு மொழி, நாம் எப்படி ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டாளோம். அதுபோல ஹிந்தியையும் பயன்படுத்திக் கொண்டு மேலே வரப் பார்க்க வேண்டும்.

  அதை விட்டு, இதை சென்ஸிடிவ் பிரச்சினையாக மாற்றி தங்களது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி இன்னுமொரு தலைமுறையின் வாய்ப்புகளையும் இருள செய்வதையாவது நிறுத்திக் கொள்ளலாம் என்பதற்காகச் சொல்கிறேன். நம் பிள்ளைகளின் பாவம் நம்மைச் சும்மா விடாது.

  கடைசியாக ……. ஹிந்தி மொழி கற்றல் வேறு …. திணித்தல் வேறு …ஹிந்தி மொழியினை எதிர்த்த பல அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஹிந்தி படித்ததினால் மட்டுமே மத்திய அமைச்சர்களானார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஹிந்தி மொழியை படித்து நாமும் நமது வாய்ப்புக்களை வளமுடையாதாக செய்து கொள்வதில் தவறில்லை.
  வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

 16. @காயத்ரிநாகா நீங்கள் கட்டுரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் இந்தக் கட்டுரையிலேயே பதில் இருக்கிறது. ஒருவேளை அது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது.

  அப்புறம் இந்தக் கட்டுரையை விளம்பரத்திற்காக எழுதியதாகக் கூறி இருக்கிறீர்கள்.. இன்னும் அந்தப் பரிதாபமான நிலைக்கு என் தளம் வரவில்லை, அப்படி வந்தாலும் நான் என்றைக்கும் அந்தக் கேவலமான வேலையை செய்ய மாட்டேன். நீண்ட வருடங்களாக படிப்பவர் என்ற மரியாதையை மனதில் வைத்து, இது குறித்து மேலும் விமர்சிக்காமல் இதோடு முடிக்கிறேன்.

 17. விளம்பரத்திற்கான பதிவு,முட்டாள்தனமான பதிவு என்று அநாகரிகமாக கூறியதற்கு வருந்துகிறேன்..நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்….!கட்டுரையை முழுதாய் படிக்காமல் template பின்னூட்டங்கள் என்றுமே நான் இடுவதில்லை…ஆனாலும் எனது பின்னூட்டம் எனது தெளிவில்லாத மனநிலையை,பக்குவமின்மையை காட்டுகிறது..உங்களுடைய பதில் பக்குவப்பட்ட எழுத்தாளனின் பதில் போல இருக்கிறது..வெட்கித் தலை குனிகிறேன்…! முகமறியா நண்பரே !!!!!அரசியல்வாதிகள் மீதுள்ள கோபம் ,ஹிந்தி தெரியாததால் பட்ட அவமானம் ஆகியவற்றின் வெளிப்பாடே எனது பின்னூட்டம்.. ஆகவே என்னுடைய கருத்து உங்களுடைய கட்டுரைக்கு எதிராய் அமைய காரணம்…உங்களுடைய வலைப்பதிவு படித்த பின்பு தான் இணையத்தில் என்னுடைய பயன்பாடே அதிகம்…முடிந்தால் பின்னூட்டத்தை நீக்கி விடவும்… என்றும் உங்கள் வாசகராய்….!

  காயத்ரிநாகா

 18. இது உணர்ச்சிப் பதிவு. முதலில் சி.பி.எஸ்.ஸி பள்ளிகள் என்பது மத்திய அரசு மற்றும் இந்தியாவுக்கானது. அதில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுங்கள் என்று சொல்வது எப்படித் தவறாகும்? தமிழ் கோஷம் போடும் எல்லோரும் ஏன் மெட்ரிக் பள்ளிகளை நடத்துகிறார்கள்? ஏன் தாய்தமிழ் பள்ளி நடத்துவதில்லை? தமிழ் கலாசாரம் என்று பேசும் எல்லோரும் ஏன் மக்கள் தொலைக்காட்சி போல் தமிழில் பேச, தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்க முயற்சி செய்வதில்லை? நம் கலாசாரம் யாரால் பாதுகாக்கப் படுகிறது? உடை, உணவு, இருப்பிடம், வாழ்வு என்று நாம் நம் கலாசாரத்தைத் துறந்து வெகு காலமாகிவிட்டது.

  தமிழ்னாட்டில் (ஏர் போர்டுகளில்), தமிழ் மற்றும் ஆங்கிலம் ஃபார்ம்கள் இருக்கலாம். ஹிந்தி தப்பில்லை. இந்த மும்மொழிக் கொள்கை ஒவ்வொரு மானிலத்துக்கும் அவசியம்.

  அதைத் தவிர, கலாசாரம் அது இது என்று அரசியல்வாதிகள் மட்டும்தான் பேசமுடியும்.

  நம் மக்கள், நம் கலாசாரம், நம் மண் என்று நினைப்பவன், பவண்டோக்குப் பதிலாக பெப்ஸி குடிப்பானா? தமிழர் உடைக்குப் பதிலாக சுடிதார், பேண்ட், அரைக்கால்சராய் போட்டுத் திரிவார்களா?

  நாம் வெளியில் தமிழ், தமிழுணர்வு என்று பேசி, தமிழ் கலாசாரத்தை அழிப்பவர்கள். தமிழ் கலாசாரம் என்று சொல்பவர்கள், கள்ளுக்குதான் ஆதரவு கொடுக்கவேண்டும். மிடாசுக்கல்ல.

  ஹிந்தி கேரளாவிலும், கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் இருக்கிறது. ‘நாம் கலாசாரத்தைப் பேணுவதில் கேரளாவி 20 சதம்கூட இருக்கமாட்டோம். கோயமுத்தூரிலும் இன்னும் பல இடங்களிலும் கேரள செண்டை வாத்தியம்தான் இருக்கிறதே தவிர, தமிழின் நாதஸ்வரத்தைக் காணோம். ஹிந்தி நம்மை அழிக்காது. தமிழனின் குணம்தான் அவனை அழிக்கும்.

 19. நெல்லைத் தமிழன்…. ! மிக நன்று!நீங்கள் தெளிவாக சொல்லி விட்டீர்கள்..எனக்கு சொல்லத் தெரியவில்லை… ஆனால் ஒன்று மன்னிப்பு கேட்பவன் மனிதன்…! மன்னிக்கத் தெரிந்தவன் மாமனிதன்….ஆனால் எனது மன்னிப்புக்கு பதிலேதும் இல்லை… தமிழ் தமிழ் என்று பெரும் ஓசை எழுப்புவோர்கள் பற்றி இதில் இருந்தே தெரிந்து கொள்ளல்லாம்…எதிர்மறை கருத்துக்கள் வரும் போது அதற்கேற்ற சிறந்த பதிலை தருவது தான் எழுத்துக்கே (எழுத்தாளனுக்கே ) மதிப்பு…தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன்…..சுய மரியாதைக்குப் பஞ்சமில்லை….! மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமுமில்லை… ! எனது பின்னூட்டத்திற்கு சிறந்த பதிலும் இல்லை…ஆமாம் சாமி போடுவதை விட ஆரோக்கியமான விவாதத்தையே எதிர்பார்க்கிறேன்…மிக்க வருத்தங்களுடன் நான்கு வருட பயணத்திற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்…!

  காயதரிநாகா…

 20. நெல்லைத் தமிழன்…. ! மிக நன்று!நீங்கள் தெளிவாக சொல்லி விட்டீர்கள்..எனக்கு சொல்லத் தெரியவில்லை… ஆனால் ஒன்று மன்னிப்பு கேட்பவன் மனிதன்…! மன்னிக்கத் தெரிந்தவன் மாமனிதன்….ஆனால் எனது மன்னிப்புக்கு பதிலேதும் இல்லை… தமிழ் தமிழ் என்று பெரும் ஓசை எழுப்புவோர்கள் பற்றி இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் …எதிர்மறை கருத்துக்கள் வரும் போது அதற்கேற்ற சிறந்த பதிலை தருவது தான் எழுத்துக்கே (எழுத்தாளனுக்கே ) மதிப்பு…தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன்…..சுய மரியாதைக்குப் பஞ்சமில்லை….! மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமுமில்லை… ! எனது பின்னூட்டத்திற்கு சிறந்த பதிலும் இல்லை…ஆமாம் சாமி போடுவதை விட ஆரோக்கியமான விவாதத்தையே எதிர்பார்க்கிறேன்…மிக்க வருத்தங்களுடன் நான்கு வருட பயணத்திற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்…!

  காயத்ரிநாகா…

 21. @நெல்லைத் தமிழன் நீங்கள் கூறிய CBSE சமஸ்க்ருத காரணத்தை ஏற்றுக்கொள்கிறேன். இந்த மொழி அழிந்து வருவதால், இது பற்றி வரும் தலைமுறைக்கு கூற இது போல செய்கிறார்கள்.

  தமிழர்கள் நீங்கள் கூறிய எதையும் பின்பற்றுவதில்லை என்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இந்தக் கட்டுரை இந்தியை புகுத்துவதால் ஏற்படும் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்டது.

  தமிழர்கள் தமிழில் பேசாமல் இருப்பதைப் பற்றியும் கலாச்சாரத்தை பின்பற்றாமல் இருப்பதைப் பற்றியும், மெட்ரிக் பள்ளிகளைப் பற்றியும் எழுதினால் நிச்சயம் எனக்கும் கூற உங்களைப் போல நிறைய இருக்கிறது.

  நடைமுறையில் சாத்தியப் படுவதை மட்டுமே நானும் ஆதரிக்க முடியும். தமிழ் என்ற காரணத்திற்காக அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று என்னால் கூற முடியாது. இதில் அது பற்றி கூறி இருக்கிறேன் https://www.giriblog.com/request-to-tamil-media/

  “தமிழ்னாட்டில் (ஏர் போர்டுகளில்), தமிழ் மற்றும் ஆங்கிலம் ஃபார்ம்கள் இருக்கலாம். ஹிந்தி தப்பில்லை. இந்த மும்மொழிக் கொள்கை ஒவ்வொரு மானிலத்துக்கும் அவசியம்.”

  நீங்கள் கூறுவது சரி தான் ஆனால், இவர்கள் இதையே ஒரு கூடுதல் வசதியாக எடுத்துக்கொண்டு இந்தியை அனைத்து இடங்களிலும் புகுத்தும் போது தான் பிரச்சனை வருகிறது.

  இதே போல நானும் ஏன் இந்தியை மட்டும் விமான நிலையத்தில் வைக்கிறீர்கள் ஆங்கிலமும் வைக்க வேண்டியது தானே என்று தான் கேட்கிறேன்.

  இவர்கள் இது போல இந்தியை மட்டும் வைக்கும் போது இவர்கள் நேர்மையில் சந்தேகம் வருவது இயல்பு தானே! இதையே அனைத்து இடங்களிலும் செய்ய மாட்டார்கள் என்ன உத்திரவாதம்.

  நாளைக்கு இந்தி தான் அனைவரும் பேசுகிறார்கள் எனவே எதற்கு தமிழில் அறிவிப்பு பலகை, இந்தியே போதுமே! என்று கூறுவார்கள். ஏற்கனவே தமிழ் இல்லாமல் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே உள்ளது நம் மாநில தேசிய நெடுஞ்சாலை சில அறிவிப்புகளில்.

  “நாம் வெளியில் தமிழ், தமிழுணர்வு என்று பேசி, தமிழ் கலாசாரத்தை அழிப்பவர்கள்”

  உண்மை தான். இதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

  “ஹிந்தி கேரளாவிலும், கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் இருக்கிறது. ‘நாம் கலாசாரத்தைப் பேணுவதில் கேரளாவி 20 சதம்கூட இருக்கமாட்டோம்.”

  இது தான் நம்மிடம் உள்ள பிரச்சனை. அவர்கள் பேணுகிறார்கள் நாம் பேணுவதில்லை. இதோடு மொழியும் அழிந்தால் நம்மிடம் அடையாளமாக எதுவும் இருக்காது. பிரச்சனையே நாம் தான்.

  நீங்கள் கூறிய மாநிலங்களில் அவர்கள் மொழி அழியவில்லை என்பது போல, இந்தியால் அழிந்த வட மாநில மொழிகள் உண்டு. நீங்கள் இவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்வதைப் போல நான் அழிந்த மொழிகளை உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.

 22. @காயத்ரிநாகா உங்களுக்கு என்ன பிரச்சனை? கோபப்பட்டு என்னை திட்டியது நீங்கள்…! பின்னர் நீங்களே மன்னிப்புக் கேட்டீர்கள்…! தற்போது திரும்ப என்னிடம் கோபித்துக் கொள்கிறீர்கள். இதில் என் தவறு என்ன?

  நீங்கள் மன்னிப்பு கேட்டால் உடனே அதற்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதே போல நான் அதை புறக்கணிக்கிறேன் என்று நீங்களே முடிவும் செய்து கொள்ளாதீர்கள்.

  நீங்கள் கோபப்பட்டு பின்னூட்டம் இட்டது போல அளவுக்கு அதிகமாகவே மன்னிப்பும் கேட்டு இருந்தீர்கள். இது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. இதற்கு நான் உடனே பதில் அளித்தால் திரும்ப உணர்சிவசப்படுவீர்கள் என்று பொறுமையாக அளிக்கலாம் என்று இருந்தேன்.

  தற்போது நீங்களாக ஒரு முடிவிற்கு வந்து விட்டீர்கள்.

  “தமிழ் தமிழ் என்று பெரும் ஓசை எழுப்புவோர்கள் பற்றி இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் …”

  இதற்கு நான் அழுவதா சிரிப்பதா? நான் பதில் அளிக்காததற்கும் தமிழுக்கும் என்னங்க சம்பந்தம்? என்னிடம் தவறு இருந்தால் என்னைக் கூறுங்கள்.. எதற்கு சம்பந்தமே இல்லாமல் மற்றவர்கள் சட்டையைப் பிடித்து இதில் இழுக்கிறீர்கள்?

  சரி! இப்ப என்னைப் பற்றி நல்லா தெரிஞ்சுக்கிட்டீங்களா?

  “எதிர்மறை கருத்துக்கள் வரும் போது அதற்கேற்ற சிறந்த பதிலை தருவது தான் எழுத்துக்கே (எழுத்தாளனுக்கே ) மதிப்பு…”

  ஹா ஹா போன பின்னூட்டத்தில் எழுத்தாளனாக எனக்கு போட்ட மாலையை அதுக்குள்ள பிடிங்கிட்டீங்களே! 🙂 🙂 நான் எழுத்தாளன் எல்லாம் கிடையாதுங்க.. எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தில் அவ்வப்போது எழுதுபவன்.

  “தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன்…..சுய மரியாதைக்குப் பஞ்சமில்லை….! மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமுமில்லை… ! எனது பின்னூட்டத்திற்கு சிறந்த பதிலும் இல்லை…ஆமாம் சாமி போடுவதை விட ஆரோக்கியமான விவாதத்தையே எதிர்பார்க்கிறேன்”

  நீங்கள் எங்கே பணிபுரிகிறீர்கள் என்பதெல்லாம் இங்கே அவசியமில்லாதது. நான் உங்களை மன்னிப்புக் கேட்கவும் கூறவில்லை. நீங்களே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்!

  நான் எப்படி விவாதம் செய்கிறேன் கருத்துகளுக்கு எப்படி மதிப்பு கொடுக்கிறேன் என்பதை படிப்பவர்கள் அறிவார்கள். நான் மதிப்பு கொடுக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால், நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

  இன்று வரை என்னுடைய தளத்தில் பின்னூட்ட மட்டுறத்தல் இல்லாமல் இருப்பதே நான் கருத்து சுதந்திரத்திற்கு கொடுக்கும் மதிப்பு.

  உங்களை நான் ஆமாம் சாமி போடக் கூறி எங்கேயும் கூறவில்லை, அதை நான் வரவேற்பதும் இல்லை. அனைவரையும் திருப்தி படுத்துவது என் வேலை அல்ல.

  “மிக்க வருத்தங்களுடன் நான்கு வருட பயணத்திற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்…!”

  இதுவும் உங்கள் முடிவே!

  உங்களுக்காகவே ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் இதைப் படியுங்கள். நீங்கள் செய்து கொண்டு இருப்பது என்னவென்று புரியும். https://www.giriblog.com/no-end-of-experience/

  நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது “இந்தி அல்ல”, நிதானமும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடாமல் இருப்பது எப்படி என்பதையும் தான்.

 23. * ஹிந்தி –> டெல்லி-ஊத்தரபிரதேச மொழி
  திணிக்கப்பட்ட மானிலங்கள்->
  மும்பை-> ஹிந்தியால் மராட்டி 80% செத்து விட்டது…
  கல்கட்டா-> ஹிந்தியால் பெங்காளி 85% செத்து விட்டது…
  பிகார்-> பாட்னா பிகாரி 93% செத்து விட்டது…
  ஹைதராபாத் -> 30%
  விசாகபட்டினம் –> 25%
  கொச்சின் –> 10%
  தமிழ் நாடு –> 2%

  மும்பையில் தயார் ஆகும் எல்லா படங்கலும் ஹிந்தியே மரட்டி படம் அல்ல.
  இதில் இருந்து மரட்டி எந்த அளவு அழிஞ்சி போச்சின்னு தேரிய வரும்…
  இன்றைக்கு சுப்பர் டுப்பர் ஹிட்டு bade achhe lagte hain ஹிந்தியே மரட்டி சீரியல் அல்ல.

  இந்தியா முழுவதும் உள்ள Jawahar Navodaya வித்யாலய தமிழ் நாட்டில் இல்லை..

  மலேசியாவில் மலே எழுத்துரு(Bahasa Melayu; Jawi script: بهاس ملايو) எப்படி இப்பொழுது ஒன்றும் இல்லாமல் போய்விட்டதோ அப்படி இந்தி வந்தால்போய் விடும் என்பதில் ஐயம் இல்லை.
  சின்னாக்கு(சுலபமாக)இருக்கு என்று ஆங்கிலத்தில் எழுத துவங்கி இன்று மலெ எழுத்து உரு உருதெரியாமல் அழிந்து விட்டது.

  நாம் தான் தமிழை காப்பாற்ற வேண்டும்.
  நான் ஜப்பானிய மொழியை 7 வருடம் பயின்றி இருக்கிறேன்.
  மண்டரின் சின மொழிழை 1 வருடம் பயின்றி இருக்கிறேன்.
  ஹிந்தி பயில வாய்ப்பு கிடைக்க வில்லை.

  மும்பை போன பொழுது எகப்பட்ட படத படு படுத்தி விட்டது என்னமோ உன்மை.
  அங்கிலம் ஒருவருக்கு குட தேரியவில்லை. எப்படியோ ஓட்டை சீரியல் ஹிந்தியை (வடபாவ்) வை வைத்து சமாளிச்சாசி.

  தமிழன் மட்டும் தான் பிரமொழியை எளிதாக கற்றுகொள்வார்கள் என்பது என் நம்பிக்கை.
  நான் லண்டன் போய்யிருந்த பொழுது.. தமிழர்கள் ஜெர்மனி, பிரன்ச், ஸ்பானிஸ்..
  சரலமாக பேசுகிறர்கள்.
  இதை அங்குளாவர்களே ஒத்து கொள்கின்றனர்….

  ஆதலால் நமக்கு எங்கு வேலை கிடைகிறதோ அங்கேபோய் அந்த மொழியை கற்று கொள்ளளாம்..

  காந்திமதி என்ற சொல்லுக்கு இரண்டு அர்தம் உண்டு….
  காந்தி+மதி = kaanthi+Mathi == நிலவின் ஒளி
  காந்தி+மதி = Gaanthi +mathi == காந்தியின் அறிவு

  இது ஹிந்தியில் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
  இது மாதிரி ஒரு சில விசயத்துக்காக மொழியையே கற்க வேண்டும் என்பதில்லை.

  இதே டெல்லி தலை நகரமாக இல்லாமல் சென்னை இருந்தால் தமிழ் தான் தேசிய மொழியாகி இருக்கும்……{எல்லோர்க்கும் இது இனிப்பாக இருக்கும்}…..

  ஹிந்தி எதிர்ப்பு சரியே இது வலுக்கட்டாயாமக்கபடும் வரை

 24. சின்னாங்கு மலே மொழியில் சுலபமாக என்று அர்தம்.
  हिंदी हमारी राष्ट्रीय भाषा नहीं है – ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல.
  ヒンディー語は、私たちの国の言語ではありません->ஹிந்தி மொழி என்பது, எங்களுடைய நட்டினுடைய தேசிய மொழி இல்லை.
  印地文的语言不是我们的民族语言.

  I’m using NHM writer Software to type tamil,hindi,malayalam and sanskrit
  for Japanese and Chinese I’m using NJStar Software

 25. //இந்தியாவில் பெரும்பான்மையாவர்கள் இந்துக்கள் தான் எனவே, அனைவரும் இந்து மதத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்குமோ அது போலத்தான் பெரும்பான்மை மக்கள் பேசுவது இந்தி அதனால் இந்தி தான் அனைவரும் பேச வேண்டும் என்பதும். நாடு ஒன்று என்றாலும், கலாச்சாரம் மத உணர்வுகள் வேறு வேறு.//

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/11/blog-post_18.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here