கடந்த முறை பண்ணாரி கோவில் சென்ற போதே அருள்மிகு தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்கும் செல்ல வேண்டும் என்று விருப்பம்.
என் விருப்பக் கடவுள் தலைவர் முருகன்.
Read: பண்ணாரி [அக்டோபர் 2016]
மலைக் கோவில்
சத்தி பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றால் அதிகபட்சம் 15 நிமிடங்களில் சென்று விடலாம்.
சிறப்பு நாட்களைத் தவிர கூட்டம் இருக்காது. சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
270 படிகள்.
முழங்கால் வலி உள்ளவர்கள் ஏறச் சிரமம் ஆனால், சமாளிக்கக்கூடிய உயரம் தான். மெதுவாக நடந்து சென்றால் சென்று விடக்கூடிய உயரமே!
நடந்து செல்ல முடியாதவர்கள் வாகனப் பாதை வழியாகச் செல்ல வசதி உள்ளது.

எதிர்பார்க்காமல் சென்று கிடைக்கும் வியப்பு, மகிழ்ச்சி என்பது தனி உணர்வு தான். கோவில் மிகச் சிறப்பாக இருந்தது.
முக்கியக் காரணம், கோவில் வடிவமைப்பு, இயற்கை, குன்றின் சிறு உயரம், இட வசதி, தண்ணீர் வசதி, அமைதி, அர்ச்சகர் நடந்து கொள்ளும் முறை, கோவிலைச் சுற்றி இருந்த பிரகாரம் என்று அனைத்துமே அட்டகாசம்.
கோவிலை அடைந்தவுடன் நினைத்தது, விரைவில் மீண்டும் வர வேண்டும், இன்னும் சீக்கிரமாக வந்து இங்கே நீண்ட நேரம் இருந்து செல்ல வேண்டும் என்பது தான்.
கோவில் உள்ளே அமைப்பு சிறப்பாக இருந்தது. முருகனை படம் எடுக்கவில்லை.
கோவில் இன்னும் பழமை மாறாமல் இருப்பதே இக்கோவிலை மேலும் மேலும் அழகாகக் காட்டுகிறது. இங்கே திருமணம் செய்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

எனக்கு மிகவும் பிடித்த எங்கள் ஊர் கருங்கரடு முருகன் கோவிலுக்கு இணையாகப் பிடித்தது என்றால், இக்கோவில் எவ்வளவு பிடித்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
குன்று இருக்கும் இடமெல்லாம் முருகன் உடன் இயற்கையும்
குன்றின் மீது இருந்து பார்த்தால், அட! நம்ம ஊர் இவ்வளவு அழகா! என்று வியப்பாக இருக்கும்.
எங்கே பார்த்தாலும் மரங்களே! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இருக்கிறது. சத்தி நகரமே காட்டுக்குள் இருப்பது போலத் தெரிகிறது ஆனால், உண்மையில் அப்படியில்லை.


மலைக் கோவில்
இக்கோவில் “மலைக் கோவில்” என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு மலைக் கோவில் என்றால் தான் உடனடியாகப் புரியும்.
கோவில் உள்ள பெரிய கொடிவேரி சாலை எந்த நகரப் பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கும். இரு சக்கர வாகனத்தில் செல்வதே சுகமான அனுபவம்.
இப்பகுதி செல்பவர்கள் கோவிலுக்குச் சென்று வர முயற்சிக்கவும். நிச்சயம் உங்களை ஏமாற்றாது. அங்கே நிலவும் அமைதியைக் கெடுக்காமல் வணங்கி வரவும்.
ஒரு வேண்டுகோள்
அருள்மிகு தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் செல்பவர்கள் பிளாஸ்டிக் உட்பட குப்பைகளைப் போடாமல், கோவிலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
“ஓதி மலை முருகன் அற்புதங்கள்” (2008)
என்னை பொறுத்தவரை மன அமைதி தரும் இடங்களில் ஆலயங்கள் மற்றும் கல்லறைகளுக்கு நிகர் எதுவும் இல்லை. அதில் முதலிடம் ஆலயங்களே!!! 2006 இம் ஆண்டில் சத்திக்கு அருகில் (மேகலா கரோனா ) என்ற நூற்பாலையில் ஒரு மாதம் பயிற்சிக்காக சென்ற அனுபவம் உண்டு.
அதிக இடங்கள் சுற்றி பார்க்க வாய்ப்பு இல்லை. அந்த பகுதி மிகவும் அழகாக பசுமையாக இருந்தது. அங்கு பேருந்து நிலையத்தில் அருந்திய தேநீரின் சுவை இன்னும் நாக்கில் ஒட்டி கொண்டுள்ளது. நண்பன் சக்திக்கு இந்த கோவில் பிடிக்கும் என நினைக்கிறேன். மீண்டும் சுற்ற வாய்ப்பு கிடைத்தால் இங்கு செல்ல முயற்சி செய்கிறோம். பகிர்வுக்கு நன்றி கிரி.
ரமணா படத்தில் வட மாநில காவல் அதிகாரி சொல்லுவார்.. யாருயா இவர்… எனக்கே பார்க்கணும் போல இருக்கேன்னு.. 🙂
அது மாதிரி உங்கள் சக்தியை பார்க்கணும் என்ற விருப்பம் அதிகமாகி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் அவரை தொடர்பு படுத்துவது எனக்கு வியப்பாக இருக்கிறது.
உங்களை போல ஒருவரை நண்பராகப் பெற்றது அவர் பாக்கியம்.
இந்த இடம் மிகவும் அமைதியானது. வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள். இங்கே வந்தீங்க என்றால்.. மறக்காமல் என்னையும் அழையுங்கள் 🙂