ஆன்மீக அரசியல்

8
ஆன்மீக அரசியல் Rajini Aanmeega Arasiyal

டிசம்பர் 31 2017 ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள். “நான் அரசியலுக்கு வருவது உறுதி” “ஆன்மீக அரசியல்” என்று அறிவித்த நாள். ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு விடை கிடைத்த நாள். Image Credit

ஆன்மீக அரசியல்

ரஜினி அரசியலுக்கு வருவார் வரமாட்டார் என்று உறுதியாக நம்பியவர்கள் கூட எதிர்பாராத அறிவிப்பு, “என்னுடையது சாதி மதமற்ற ஆன்மீக அரசியல்” என்ற அறிவிப்பு தான்.

உண்மையில் ரஜினி இப்படிக் கூறிய போது திக்குனு தான் இருந்தது.

என்னடா! இப்படி ஆன்மீக அரசியல்ன்னு சொல்லிட்டாரே! ஏற்கனவே ஆளாளுக்கு இதை வைத்தே பேசிட்டு இருக்கும் போது அவர்களுக்கு மெல்ல அவல் கொடுத்தது போல ஆகி விட்டதே!” என்று தான் நினைத்தேன்.

ஆனால், பின்னர் ரஜினி கூறியது மிகச்சரியான தேர்வு தான் என்று புரிந்தது.

தனித்தன்மை

தற்போது அரசியலுக்கு வருகிறவர்கள் அனைவரும் கூறுவது ஊழலற்ற, நேர்மையான ஆட்சியைக் கொடுப்பேன் என்பது. இதில் என்ன வித்யாசம் இருக்கிறது? அனைவரும் வழக்கமாகக் கூறும் வசனம் தானே!

ரஜினி ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்தது. அதை அவரும் யாருக்காகவும் மறைத்ததில்லை, மற்றவர்களைத் திருப்தி செய்ய நினைத்து வெளி வேசம் போட்டதில்லை.

தற்போது “ஆன்மீக அரசியல்” என்று கூறியதன் மூலம் வழக்கமான அரசியல் செய்பவர்கள் அனைவரையும் ஒரு பக்கத்தில் தள்ளி விட்டு ரஜினி தனித்து வந்து விட்டார்.

இரண்டும் கெட்டானாக இருப்பதை விட, மற்றவர்கள் கூறத் தயங்கிய விசயத்தை தைரியமாக, தெளிவாகக் கூறிய ரஜினி பாராட்டுக்குரியவர்.

ரஜினியைப் பற்றி என்ன குற்றச்சாட்டு வேண்டும் என்றாலும் வைக்கலாம் ஆனால், அவர் மற்ற மதங்களை இழிவு படுத்திப் பேசினார் என்று ஒரே ஒரு உதாரணத்தைக் கூடக் காட்ட முடியாது. இதுவே இவரின் தனித்தன்மையான ஆன்மீக அரசியல்.

மற்ற மதங்களை அநாகரீகமாக விமர்சிக்காத தகுதி

திராவிடக் கட்சிகள் குறிப்பாகத் திமுக,  இந்து கடவுள்களைத் திட்டுகிறார்கள், இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள், கிண்டலடிக்கிறார்கள்.

இந்து மதக் கட்சியான பாஜகவில் உள்ளவர்கள் இந்து மதத்தை உயர்த்த மற்ற மதங்களை விமர்சிக்கிறார்கள்.

முஸ்லீம் மற்றும் கிறித்துவக் கட்சிகளும் மற்ற மதங்களை விமர்சிக்கிறார்கள்.

நாம் எங்கு / யாராக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விமர்சனம் நாகரீகமாக இருக்க வேண்டும். எதிர்கருத்துள்ளவரையும் மதிக்க வேண்டும்.

இந்த இடத்தில் தான் ரஜினி மிக உயர்ந்து இருக்கிறார். ஒரு முறை கூட மற்ற மதத்தை இழிவுபடுத்தியோ, அநாகரீகமாகப் பேசியதோ கிடையாது.

ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறிய போதே இது சாதி மதமற்ற அரசியல் என்று கூறி விட்டார். ஆன்மீகத்துக்கு மதம் கிடையாது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.

அவர் கிளம்பும் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் “சாதி மதமற்ற, நேர்மையான அரசியல்” என்று தெளிவாக விளக்கமும் கொடுத்து விட்டார்.

இஸ்லாம் மதத் தொடர்பு

என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படம் “பாட்ஷா” முஸ்லீம் பெயர், நான் முதன் முதலில் வாங்கிய இடம் முஸ்லீம் நபரிடம் இருந்து, போயஸ் தோட்ட வீடு வாங்கியது முஸ்லீம் நபரிடம் இருந்து

என்று பல உதாரணங்களைக் கூறி தனக்கும் முஸ்லீம் சமுதாயத்துக்கும் இருக்கும் உறவை விளக்கினார்.

ஒரு மதத்தில் தீவிர பற்றாக இருப்பவரால் இது போல நிச்சயம் கூற முடியாது. மதங்களைக் கடந்தவரால் மட்டுமே இன்னொரு மதத்துக்கும் தனக்கும் உள்ள தொடர்பைக் கூற முடியும்.

கோவை குண்டு வெடிப்பில் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஆதரவாக மற்றவர்கள் பேசத் தயங்கிய போது தைரியமாக ரஜினி பேசியது இன்று பலரால் மறக்கப்பட்டு விட்டது.

எனவே, ரஜினி மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவது போல நிச்சயம் மதவாதி அல்ல. உண்மையில் இவர்களே சாதி,  மதத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதை அறியாத மக்களும் ஏமாந்து வருகின்றனர்.

பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகள்

திராவிடக் கட்சிகள் குறிப்பாகத் திமுக, இந்து மதத்தை, அவர்களது நம்பிக்கையைக் கடுமையாக விமர்சிக்கிறது ஆனால், அவர்கள் குடும்பத்திலேயே கடவுள் பக்தி உள்ளவர்களாகவும், கோவிலுக்கு செல்பவர்களாகவும் உள்ளனர்.

இதைக் கேட்டால், “நாங்கள் குடும்பத்தினர் நம்பிக்கையில் தலையிடுவதில்லை, எங்கள் கொள்கைகளை அவர்களிடத்தே திணிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்.

நியாயமான பேச்சு! ஆனால், இதையே ஏன் மற்ற இந்துக்களிடம் காட்டுவதில்லை. ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும்?

இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது அவர்களின் நம்பிக்கை என்றால், மற்றவர்களுக்கும் அது தானே! அவர்களின் நம்பிக்கையை ஏன் கிண்டலடிக்க வேண்டும்?

இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?!

கலைஞர் ஜெ இருவரின் ஆளுமை

40 வருடங்களுக்கு முன்பு பகுத்தறிவு கொள்கைகள், நாத்திகம் போன்றவை மக்களிடம் வரவேற்பை பெற்று இருக்கலாம் ஆனால், அதெல்லாம் கடந்த வருடங்களில் முற்றிலும் மாறி விட்டது.

அதுவும் தற்போது கடவுள் / ஆன்மீக நம்பிக்கை தமிழக மக்களிடையே உச்சத்தில் இருக்கிறது.

இதுவரை கலைஞருக்கும் ஜெ க்கும் வாக்களித்தது அவர்களின் மிகப்பெரிய ஆளுமை காரணமாக மட்டுமே தானே தவிர அவர்களது நாத்திக கொள்கைகள் காரணமாக அல்ல.

அதிலும் ஜெ கடவுள் நம்பிக்கையுள்ளவராகத் தான் தன்னைக் காட்டிக்கொண்டார்.

இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.

அதாவது இவர்கள் ஊழல்கள் செய்து இருந்தாலும், இவர்கள் அல்லாது வேறு யார் வந்தாலும் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதே மக்கள் எண்ணம்.

கடந்த 25 வருடங்களில் திராவிடக் கட்சிகள் வெற்றி பெற்றதுக்குப் பகுத்தறிவு கொள்கைகளோ நாத்திகமோ காரணமல்ல, கலைஞர் ஜெ இருவரின் ஆளுமையே காரணம்.

அதிகரிக்கும் கடவுள் நம்பிக்கை

தமிழகத்தில் தற்போது மக்களிடையே ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் மன ஆறுதல் தேவை போன்றவைகள் காரணமாக இருக்கலாம். தங்கள் பிரச்சனைகளை மறக்க இவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது.

இதைத் தான் பல கார்ப்பரேட் சாமியார்கள் தங்கள் மூளைச்சலவை திறமையால் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எனக்கு ஆன்மீகத்தில் பிடித்த ஒரே ஒரு நபர் “வேதாத்ரி மகரிஷி” மட்டுமே!

பதிவுலகத்தில் அனுராதா என்ற பதிவர் இருந்தார், கேன்சர் காரணமாகக் காலமாகி விட்டார். அவர் கூறிய வார்த்தை இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

நாலு பக்கம் கஷ்டம் வந்தால், நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்” என்பது. பிரச்சனை வருகிற போது ஏதாவது பிடிப்புத் தேவைப்படுகிறது, அதைக் கடவுளாக அனைவரும் நினைக்கின்றனர் அவ்வளவே!

தமிழகத்தில் அதிகரிக்கும் பாபா கோவில்களும், அனைத்துக் கோவில்களிலும் வருடாவருடம் அதிகரிக்கும் மக்கள் கூட்டமும், ஆன்மீக சாமியார்களிடம் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை / ஆன்மீகம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.

இவை மறுக்க முடியாத நடைமுறை எதார்த்தம்.

போலி மதச்சார்பின்மை

தமிழகத்தில் மதச்சார்பின்மை என்றால் என்னவென்றால்,

இந்து மதத்தைத் திட்டுவது, அநாகரீகமாக விமர்சிப்பது, இந்து மதப் பண்டிகை நாளில் “விடுமுறை கொண்டாட்டம்” என்பது, இந்து பண்டிகையைப் புறக்கணித்துச் சிறுபான்மையினர் விழாக்களில் கலந்து கொள்வது.

இவை எல்லாவற்றையும் விட மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் முஸ்லீம் மற்றும் கிறித்துவக் கட்சிகளைச் சேர்ப்பது! இது எப்படி மதசார்பற்ற கூட்டணியாகும்?

இது தான் மதச்சார்பின்மையாகத் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. இதுவா மதச்சார்பின்மை?!

மதசார்பின்மை என்றால் என்ன?

அனைத்து மதங்களையும் ஒருங்கிணைத்து செல்வது. எந்த மதத்தையும் அநாகரீகமாக விமர்சிக்காமல் இருப்பது.

அனைத்து மதங்களையும் முன்னிலைப்படுத்துவது. அனைத்து மதப் பண்டிகைகளையும் ஒரே சமமாகப் பார்ப்பது. அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துத் தெரிவிப்பது.

தமிழகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

ரஜினி சரியான தேர்வு

எனக்கு இந்து மதம் ரொம்பப் பிடிக்கும் ஆனால், மற்ற மதங்களை அநாகரீகமாக விமர்சித்துக் கடந்த 12 வருடங்களில் ஒரு முறை கூட எழுதியது கிடையாது, இனியும் எழுத மாட்டேன்.

அன்று முதல் இன்று வரை என் தளத்தில் கருத்துரை இட்டு வரும் “யாசின்” ஒரு முஸ்லீம். இவரே நான் எப்படி எழுதி வருகிறேன் என்பதற்குச் சாட்சி.

நான் அதி தீவிர இந்து பற்றாளன் கிடையாது. எனவே, மதச்சார்பின்மை என்ற பெயரில் போலியாக இருக்கும் அரசியல் கட்சிகளும் வேண்டாம், தீவிர இந்து மதத்தைப் புகுத்தும் பாஜக வும் எனக்கு வேண்டாம்.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட போலி மதச்சார்பு பேசாத,  அனைத்து மதங்களையும் மதிக்கும், நேசிக்கும் ரஜினியின் “ஆன்மீக அரசியல்” எனக்குப் போதும்.

வழக்கமான கட்சிகளின் போக்கை பிடிக்காதவர்களுக்கும், பாஜகவின் தீவிர இந்துத்துவ கொள்கைகள் பிடிக்காதவர்களுக்கும் சரியான மாற்றாக ரஜினி இருப்பார்.

ஆன்மீக அரசியலுக்கு இருக்கும் ஆதரவு

ரஜினி கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, எவரையும் அநாகரீகமாகப் பேசாதது, “ஆம் நான் ஆன்மீகவாதி தான்! ஆன்மீக அரசியல் தான் செய்யப்போகிறேன்” என்று வெளிப்படையாக அறிவித்தது இவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பலர் எதற்காக நாத்திக, பகுத்தறிவு வேசம் போடுகிறார்கள் என்றே புரியவில்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இதில் மற்ற நம்பிக்கை உள்ளவர்களை எதற்கு விமர்சிக்க வேண்டும்? நக்கலடிக்க வேண்டும்?!

இவர்கள் யாரை திருப்தி செய்ய இப்படிப் பகுத்தறிவு ஆதரவு வேசம் போடுகிறார்கள்? பெரும்பான்மையானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் போது!

எனவே, பெரும்பான்மை மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் போது ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு நிச்சயம் இருக்கும்.

ரஜினி வரும் காலங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார், அவரது திட்டங்கள், கொள்கைகளைப் பொறுத்து மக்கள் கொடுக்கும் ஆதரவில் மாற்றம் இருக்கும்.

ரஜினியை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்

ரஜினியை திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக, சீமான், வேல்முருகன், கௌதமன், உதயகுமார், திருமுருகன் காந்தி, அமீர், பாரதிராஜா தற்போது சரத்குமார் என்று அனைவரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ரஜினி இன்னும் கட்சிப் பெயரைக் கூட அறிவிக்கவில்லை, அதற்குள் என்னமோ இதுவரை ரஜினி தான் தமிழகத்தை ஆட்சி செய்தது போலவும், தற்போது ஆட்சி செய்வது போலவும் அவரே அனைத்துக்கும் பொறுப்பு என்று பேசி வருகிறார்கள்.

இதுவரை இருந்தவர்கள் என்ன செய்தார்கள், தற்போது இருப்பவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்க இவர்கள் எவருக்கும் தோன்றவில்லை.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ரஜினியே முதலாக கருத்தை தெரிவிக்க வேண்டும் தீர்வு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ரஜினி ரஜினி ரஜினி” என்று தூங்கி எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை அவரையே தொடர்ச்சியாகத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எவரையும் விமர்சிக்காத ரஜினி

ரஜினி எப்போதுமே எவரையுமே மரியாதைக்குறைவாக, அநாகரீகமாக விமர்சித்தது கிடையாது. இதுவே அவருடைய பலம். அனைத்து விமர்சனங்களையும் அமைதியாகக் கடந்து செல்கிறார்.

தற்போதும் எந்த விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

ரஜினியே சொன்னது போல “பேச்சில் காட்டாமல் செயலில் காட்டி வருகிறார்”.

ரஜினிக்கு எதிராக ஊடகங்கள்

ஒருவருக்கு எதிராக இத்தனை ஊடகங்கள் செயல்பட முடியும் என்றால் அது ரஜினியாக மட்டும் தான் இருக்க முடியும். ரஜினியை வைத்து எத்தனை விவாதங்கள்? அவர் கூறாததையும் கூறியதாக அதற்கு ஒரு விவாதம்!

ரஜினியை எவ்வளவு மட்டப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்யப் பலர் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். Sponsor செய்து ஃபேஸ்புக்கில் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.

ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு அரசியல்வாதி கட்டுப்பாட்டில் உள்ளது.

ரஜினியை கேவலப்படுத்திப் பேச வேண்டும் என்ற வேண்டுகோளோடு தான் விவாதத்துக்கே அழைக்கிறார்கள்.

இணையச் செய்தித் தளங்களில் ரஜினியை விமர்சித்து எழுதினால் “Hits” கிடைக்கிறது என்று கண்டபடி மனம்போன போக்கில் கற்பனை கதைகளை ஊகங்களை எழுதி வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி ரஜினி வெற்றிப் பெற வேண்டும் என்றால், கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டும்.

இதற்குக் கடவுள் துணையிருப்பார் என்று நம்புகிறோம்.

தெறிக்க விடும் ரசிகர்கள்

ரஜினி அறிவிப்பை வெளியிட்டு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறிய போது,

சரி! கட்சி அறிவிப்பு இன்னும் வரவில்லையே… அங்கே இங்கே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்” என்று நினைத்து இருந்தேன்.

ஆனால், நான் கற்பனையிலும் நினைத்து இராத அளவுக்கு உறுப்பினர் சேர்க்கை மிரட்டலாக நடைபெறுகிறது. இதை நம்பவே முடியவில்லை. எப்படி இத்தனை பேர் ஆர்வமாகச் செய்கிறார்கள்? என்று வியப்பாக இருக்கிறது.

துவக்கத்தில் எதோ ஒரு மன்ற நிகழ்வு என்று தான் நினைத்தேன் ஆனால், வரும் தகவல்கள் கணக்கில்லாமல் உள்ளது. பெண்களும் ஆர்வமாகத் தங்களைப் பதிவு செய்வது வியப்பு தான்.

இவர்கள் சேர்க்கை அனைத்தும் வாக்காக மாறும் என்று கூற முடியாது ஆனால், ஒரு தார்மீக ஆதரவை கொடுக்கும் அதோடு மற்றவர்களிடையே பேசும் போது ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த, ஆதரவை திரட்ட உதவலாம்.

உணராத எதிர்ப்பாளர்கள்

ரஜினியை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளும், ரஜினியை பிடிக்காத மற்றவர்களும் Troll Memes / விமர்சனம் என்று தங்கள் நேரத்தை வீணடிக்கும் நேரத்தில், ரஜினி தன்னை ரசிகர்கள் / மன்றம் மூலம் பலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

செயலி (App) வெளியிட்ட போது சிரித்தார்கள், தற்போது அதன் மூலமும், நேரடி உறுப்பினர் சேர்க்கை மூலமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை உறுப்பினர்களாக சேர்த்து இருக்கிறார்கள்.

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து அமைப்பைப் பலப்படுத்தி வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், கல்வியாளர்களுடன் விவாதித்துத் திட்டங்களை உருவாக்கி வருகிறார்.

கட்சி அறிவிப்பை வெளியிடும் போதோ / மாநாட்டின் போதோ மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புடன் சிறப்பான திட்டங்களுடன் இருப்பார். தற்போது சிரித்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அப்போது அமைதியாகி விடுவார்கள்.

இதை எதிர்ப்பாளர்கள் உணரும் போது நிலைமை கை மீறிச் சென்று இருக்கும்.

ரஜினியின் நோக்கங்கள்

ரஜினி பத்தோடு பதினொன்றாக வந்து செல்ல அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு மிகப்பெரிய திட்டங்கள், (விவசாய வளர்ச்சி, நீர் மேலாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி), குறிக்கோள்கள் உள்ளன.

இதை அவர் முறையாக அறிவிக்கும் போது உணர்ந்து கொள்வீர்கள்.

வெற்று விமர்சனங்களுக்குப் பதில் அளித்து அவரது நேரத்தை அவர் வீணடிக்க விரும்பவில்லை. பேசிக்கொண்டு இருப்பதை விட செயலில் காட்டுவதே சிறந்தது.

அவர் கூறிய “செவிட்டு தவளை கதை“யே இதற்கும் பொருந்தும். சில நேரங்களில் செவிட்டு தவளையாக இருப்பதே நமக்கு, நம்முடைய வளர்ச்சிக்கு நல்லது.

குறிக்கோளை நோக்கி செல்பவர்கள் விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். பயப்படுபவர்களே மற்றவரின் வளர்ச்சியை பார்த்துப் பொறாமைப்பட்டு தொடர்ச்சியாக விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள்.

அனைத்து மதங்களையும் அனுசரித்து, சாதி மதப் பேதமற்ற, நேர்மையான ஆன்மீக அரசியலை ரஜினி முன்னெடுப்பார். அவரின் நல்ல நோக்கம் வெற்றி பெறும்.

இதற்கு கடவுள் உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

நல்லதே பேசுவோம்! நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

மகிழ்ச்சி 🙂

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழருவி மணியன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

கொசுறு

ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து, எழுதக்கூறி கேட்ட நண்பர்களுக்கு நன்றி.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. மதச்சார்பின்மை என்ற பெயரில் போலியாக இருக்கும் அரசியல் கட்சிகளும் வேண்டாம், தீவிர இந்து மதத்தைப் புகுத்தும் பாஜக வும் எனக்கு வேண்டாம்.

    இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட போலி மதச்சார்பு பேசாத, அனைத்து மதங்களையும் மதிக்கும், நேசிக்கும் ரஜினியின் “ஆன்மீக அரசியல்” எனக்குப் போதும்.

    சரியான பார்வை. எனது எண்ணமும் இதுவே தான்.

    நல்லா எழுதிருக்கீங்க கிரி. வாழ்த்துக்கள்.

  2. கிரி, நல்லா எழுதிருக்கீங்க. வாழ்த்துக்கள்!!! இன்று உடகங்கள் நடுநிலை என்ற பெயரில் மிகவும் மோசமாக நடக்கிறது. உங்கள் பதிவில் தலைவர் பெப்ரவரி 2017 பேசியதை பற்றியும் சொல்லலாம்.
    https://www.youtube.com/watch?v=wRdY8LSOQrI

  3. தெளிவான விளக்கம் கில்லாடி.
    காலம் தான் பதில் சொல்லணும். பார்ப்போம்
    நல்லதே நடக்கும் நாம எல்லாருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here