தமிழருவி மணியன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

7
தமிழருவி மணியன் Tamilaruvi Manian

மிழருவி மணியன் அவர்கள் பற்றிய அறிமுகம் எனக்கு ஒரு WhatsApp ல் தான் தொடங்கியது.

நண்பர்களில் யாரோ அவர் மேடைப்பேச்சை பகிர்ந்து இருந்தார். ஒரு சராசரி பொதுஜனத்தின் மனக்குமுறலை பிரதிபலித்து இருந்தார்.

பின்னர் தலைவருடன் தமிழருவி மணியன் அவர்கள் சந்திப்பு என்று செய்தி படித்த போது தான் மீண்டும் அறிமுகமானார். Image Credit

இதன் பிறகு அவருடைய பேட்டிகளில் இருந்த தெளிவும் அதைவிட அவருடைய ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சும் மிகப் பிடித்தது.

தமிழருவி மணியன்

அருவி போலத் தமிழ் பேசுவதாலே இவருக்கு “தமிழருவி மணியன்” என்று பெயர் வந்ததாகப் படித்து இருக்கிறேன். ஆங்கிலம் கலக்காத தமிழுக்கு நான் ரசிகன்.

இதன் பிறகு இவரைச் சந்திக்க வேண்டும் என்று பல முறை முயன்றேன் ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முடியவில்லை.

நேற்று “ஒன் இந்தியா ஷங்கர்” அவர்கள் உதவியால் தமிழருவி மணியன் அவர்களைச் சந்திக்க முடிந்தது, உடன் நடிகர் ஜீவாவும் இருந்தார்.

சமூக எதிர்பார்ப்புகள்

தமிழருவி மணியன் அவர்களைச் சந்திக்க எனக்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது.

என் தளத்தைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்றால், என் சமூகக் கோபங்கள், நீர் மேலாண்மை, சமூக எதிர்பார்ப்புகள் போன்றவற்றைக் கவனித்து இருப்பீர்கள்.

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பது உறுதியாகி விட்டது.

எனவே, அவரிடம் ரசிகனாக என்பதை விட ஒரு சராசரி பொதுஜனமாக என்  எண்ணங்களை, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் மற்றும் நான் திரட்டிய பல தகவல்களைக் கொடுக்க முடிவு செய்து இருந்தேன்.

எனவே, அதற்கான தகவல்களைக் கடந்த ஆறு மாதங்களாகத் திரட்டி வருகிறேன்.

தலைவரைச் சந்திப்பது எளிதல்ல என்றாலும், நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்பது உறுதி.

அதில் நீர் மேலாண்மை குறித்தும் இன்னபிற தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த எண்ணங்களைப் பகிர வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழருவி மணியன் அவர்கள் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அடிக்கடி சந்திக்கிறார், விவாதிக்கிறார். தமிழகத் திட்ட மேலாண்மை குழுவில் இருந்த அனுபவம் பெற்றவர்.

எனவே, இவரிடம் என்னுடைய தகவல்களைக் கொண்டு சேர்த்தால், அது தலைவரிடம் கொண்டு சேர்க்கும் என்பதாலும் சந்திக்க முடிவு செய்தேன்.

நான் கூறிய தகவல்கள் அனைத்தையும் 100% ஏற்கனவே விவாதித்து இருப்பார்கள் என்பதில் துளி கூட எனக்குச் சந்தேகமில்லை.

இருப்பினும் என் திருப்திக்காகக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.

ஏனென்றால், தமிழை, தமிழகத்தை மிக நேசிக்கிறேன். ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா என்று நினைக்கும் சராசரி தமிழர்களில் ஒருவன்.

சந்திப்பு

50 வருடங்களாக அரசியலில் இருக்கிறார் ஆனால், தமிழக அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கிறார், நம்பச் சிரமமாக இருந்தது.

மிகச் சிறிய வீடு, வீடு முழுக்கப் புத்தகங்களாக வைத்து இருக்கிறார்.

எனக்கு இவரைப் பார்க்கும் போதும், பேசும் போதும் அரசியல்வாதி என்பதை விட ஒரு ஆசிரியருடன் உரையாடுவது போலத்தான் இருந்தது.

பல தகவல்களை நினைவில் இருந்து கூறுகிறார், ஆண்டு வாரியாகப் பேசுகிறார், பலரின் கவிதைகளை அப்படியே கூறுகிறார்.

நல்லவேளை என்னைப் போல இவர் கூகுள் பயன்படுத்தாததால் தப்பித்தார் 🙂 .

நாகரீகம் கருதி தலைவர் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை, அவரே சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தலைவர் அரசியலுக்கு வருகிறார் என்பதில் யாராவது இன்னும் சந்தேகத்துடன் இருந்தால், அவர்களை நினைத்துப் பரிதாபப்படத்தான் முடிகிறது.

தலைவர் வருவது 100% உறுதி, அதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இவர் கூறிய சில திட்டங்களைக் கேட்டதும், இவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

நான் யோசித்த விஷயத்துக்கும் இவர் கூறியதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம்.

இதெல்லாம் நடந்தால், தமிழகதத்தின் நிலையே வேறு, நடக்கும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை 🙂 .

நடைமுறை எதார்த்தம்

பேசிய சிறிது நேரத்தில் நான் தெரிந்து கொண்டது..

தமிழருவி மணியன் அவர்கள் முன்னரே கூறியது போல.

எதிர்ப்பு அரசியல் கிடையாது, விமர்சனங்களில் கவனத்தைச் செலுத்துவதை விட ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்பதில் தலைவர் கவனம் செலுத்தப்போகிறார்.

நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி மிக முக்கியமான முன்னெடுப்புகளாக இவர்கள் அரசியலில் இருக்கப்போகிறது.

என்னைப் போல வருகிறவர்கள் பெரும்பாலானவர்கள் (நான் உட்பட) நீர் மேலாண்மை குறித்த கருத்துகளையே அதிகம் பகிர்ந்து இருக்கிறார்கள் என்பது இவர் கூறியதில் இருந்து தெரிகிறது.

எனக்கு மணியன் அவர்களிடம் பேசியதில் புரிந்தது, பிடித்தது என்னவன்றால், நடைமுறை எதார்த்தத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்கிறார்.

தமிழகத்தைப் புரட்டிப் போட்டு விடலாம் என்பது போல முழங்காமல், எது எது சாத்தியமோ அதை நேர்மையாக அரசு அதிகாரத்தின் மூலமாகச் செய்யலாம் என்பதில் தலைவரும் மணியன் அவர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

சுருக்கமாக,  நடைமுறை எதார்த்ததுடன் இருக்கிறார்கள், சிந்திக்கிறார்கள்.

ஜீவா

லொள்ளு சபாக்குப் பிறகு, நடிகர் ஜீவா தற்போது தான் நேரடி அறிமுகம், ரொம்ப நட்பாகப் பேசினார், திறந்த மனதோடு பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ரசிகர்கள் எப்படித் தங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக்கொள்ள வேண்டும், மனப்பக்குவம் அடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தலைவருக்கு அரசியலில் மூத்த, ஊழல் கறை படியாத நபராகத் தமிழருவி மணியன் போன்றோர் வழிகாட்டியாக இருப்பது மிக அவசியம்.

அனுபவம் உள்ளவர்கள் உடன் இருப்பது, மிக முக்கியம்.

எத்தனையோ பேர் இருக்க, தமிழருவி மணியன் அவர்களைத் தலைவர் தேர்வு செய்தது மிக்க நம்பிக்கையை அளிக்கிறது.

தமிழருவி மணியன் நடிகர்கள் குறித்து எதிர் கருத்துக் கொண்டவர், தலைவரையும் விமர்சித்து இருக்கிறார். தலைவருடன் பழகிய பிறகு தன் கருத்தில் மாற்றம் கொண்டு இருக்கிறார்.

இவர் தலைவருடன் இணைந்ததற்கு மிக முக்கியக் காரணம் ஜீவா. தலைவர் ரசிகர்கள் இதற்காகவே ஜீவாவை பாராட்ட வேண்டும். நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

விரைவில் ரசிகர் சந்திப்பு

விரைவில் ரசிகர் சந்திப்பு நடக்கப்போகிறது. கட்சி பற்றிய அறிவிப்பும் சரியான நேரத்தில் தலைவரே கூறுவார் என்று பேட்டியில் தமிழருவி மணியன் கூறி இருந்தார்.

தலைவர் அரசியல் அறிவிப்பு வெளியாகததால் ரசிகர்கள் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்கள், இது குறித்த வருத்தம் அனைத்து ரசிகர்களிடையேயும் இருக்கிறது.

இருப்பினும் தலைவர் மீது உள்ள அன்பால்,  நம்பிக்கையால் இவற்றைப் புறந்தள்ளி நம்பிக்கையுடன் தங்களின் “நாளுக்காக” காத்து இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு நான் சொல்வது, “நீங்கள் காத்து இருந்தது வீண் போகாது. ரசிகர்கள் பெருமைப்படும்படியான மக்கள் நலத் திட்டங்களுடன் நிச்சயம் தலைவர் வருகிறார். அப்போது நீங்கள் பட்ட அவமானங்கள் மறைந்து இருக்கும்“.

கிண்டலடிப்பவர்களை, தரக்குறைவாக விமர்சிப்பவர்களைப் புறந்தள்ளுங்கள். இவர்களால் முடிந்தது இது மட்டுமே!

இனி என் அடுத்தச் சந்திப்புக்கான முயற்சி தலைவர் தான். நிச்சயம் சந்திப்பேன் அப்போது எழுதுகிறேன் “கிரி Blog Exclusive” என்று 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. //தலைவர் அரசியல் அறிவிப்பு வெளியாகததால் ரசிகர்கள் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்கள், இது குறித்த வருத்தம் அனைத்து ரசிகர்களிடையேயும் இருக்கிறது.

    இருப்பினும் தலைவர் மீது உள்ள அன்பால், நம்பிக்கையால் இவற்றைப் புறந்தள்ளி நம்பிக்கையுடன் தங்களின் “நாளுக்காக” காத்து இருக்கிறார்கள்.//

    பல ரசிகர்களின் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்து இருக்கிறீர்கள். எல்லோரும் அந்த ஒரு நாளுக்காகவும், ஆட்சி பீடத்தில் அமர போகும் நாளுக்காகவும் காத்து கொண்டு இருக்கிறோம். அதன் பின்பு தான் இருக்கிறது, கிண்டல் செய்தவர்களுக்கு நாம் திருப்பி கொடுக்க போகும் பதிலடி.

    “கண்ணா, நான் எப்பவும் வாங்கிப்பேன். அப்புறம் தான் திருப்பி கொடுப்பேன், அது அன்பானாலும் சரி, அடியானாலும் சரி, இப்புடு சூடு”. – தலைவரின் பதிலே, நம்முடைய பதிலும்.

  2. சூப்பர் கிரி சார்..உங்களுக்கு போன் பண்ணலாமா? நமது தலைவருக்காக வாட்ஸுப் குரூப்ல இருக்குனு நம்புகிறேன்..

  3. கிரி… உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் மிக மிகத் தாமதமாக இந்த முடிவை எடுத்துள்ளார். அதனைத் தலைமை ஏற்று நடத்தும் எனெர்ஜியை அவர் பத்து வருடங்களுக்கு முன்னாலேயே இழந்துவிட்டார் என்பது என் கணிப்பு.

    அவர் நல்லவர், நல்ல எண்ணங்களைக் கொண்டவர், முடிந்த அளவு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

  4. கிரி, நமக்கு பிடித்த நல்ல மனிதர்கள், நல்ல தலைவனாக வருவது என்றும் வரவேற்க்கதக்க ஒன்று. என்னுடைய பார்வையில் என்றுமே சகாயம் அய்யாவை நினைவில் கொள்வதுண்டு. துறைசார் அனுபவம் கொண்ட மனிதர். கல்வித்தகுதியும், அனுபவமும் உண்டு. ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் அவர் அரசியலுக்கு வருவதை மறுத்துள்ளார். சகாயம் அய்யா, நாம் அறிந்த ஒரு முகம் மட்டுமே!!! ஆனால் நாம் அறியாத, காணாத பல நேர்மையான முகங்கள் இன்னும் இருக்கின்றன.

    ரஜினி சாரின் திறமை மதிப்பிடமுடிய ஒன்று. ஆனால் அரசியலுக்கு அது எவ்வாறு பயன்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. முழுமையான அரசியலில் இறங்கிய பின் தேர்தலில் தனி கட்சியா??? கூட்டணியா??? என பல்வேறான கேள்விகள் முன்னோக்கி உள்ளது.. தனி கட்சி, கூட்டணி இரண்டிலுமே சாதகம் & பாதகம் உள்ளது.

    கண்டிப்பாக யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டார். ஒரு ரசிகனாக நீங்கள் அவர் அரசியலுக்கு தற்போது வருவதை வரவேற்கலாம்.. ஆனால் நான் ரஜினி சாரை திரையில் மட்டும் காண விரும்புகிறேன்… ரஜினி சாரின் சந்திப்பு வெகு விரைவில் நடைபெற என்னுடைய வாழ்த்துக்கள்..பகிர்வுக்கு நன்றி கிரி.

  5. இயற்க்கை விவசாயதிற்கென தனியே ஒரு பல்கலைகழகமும், கிராம பொருளாதாரம் வளர்ச்சியடைய செயல்திட்டங்களும், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் மற்றும் மழைநீர் சேமிப்பு செயல்பாடு திட்டங்களும் மிக மிக அவசியம்.

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @சுந்தர் இறுதியில் நீங்கள் கூறியதே 🙂

    @தமிழன் நீங்கள் கூறும் உடல்நிலை குறித்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை முன்னாடியே வந்து இருந்தால், அது பொருத்தமற்ற காலமாகக் கூட இருந்து இருக்கலாம்.

    தற்போது இருக்கும் சூழ்நிலை 10 வருடங்கள் முன்பு வந்து இருந்தால், நன்றாக இருந்து இருக்கும் என்ற எண்ணம் எனக்குண்டு.

    @யாசின் காலம் பதில் கூறும், பார்ப்போம் 🙂

    @சோமேஸ்வரன் நீங்கள் கூறியவை குறித்த திட்டங்கள் அவர்களிடத்தே உண்டு. செயல்படுத்த வாய்ப்புக் கிடைக்காதவரை, அது பற்றி கூறினால் சிரிப்பாகவே இருக்கும்.

    நடக்கும் போது பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here