ஏலகிரி பயணப் பரிந்துரைகள்

3
Yealgiri 1 ஏலகிரி பயணப் பரிந்துரைகள்

ண்பர்களாகச் சுற்றுலா சென்று கொண்டு இருந்தோம், குடும்பஸ்தன் ஆன பிறகு அறை நண்பர்கள் இணைந்து குடும்பத்துடன் “ஏலகிரி” செல்ல முடிவானது.

நான்கு குடும்பங்கள் மொத்தம் 13 பேர் குழந்தைகளுடன்.

சென்னையில் காலை 6 மணிக்குக் கிளம்பினோம்.

ஏலகிரி அருகே உள்ள, திருப்பத்தூர் “ஜலகாம்பாறை” நீர்வீழ்ச்சி சென்றோம். இது பற்றித் தனியாக எழுதுகிறேன்.

பின் அங்கே இருந்து கிளம்பி ஏலகிரி செல்ல மாலை 5.30 ஆகி விட்டது.

Zeenath Taj Garden

நான் Booking.com வழியாக ஏற்கனவே இங்கே தங்குவதற்கு முன்பதிவு செய்து இருந்தேன், Rating அடிப்படையில். நான் எதிர்பார்த்ததை விடச் சிறப்பான இடம்.

குறிப்பாகக் குழந்தைகள் விளையாட இடங்கள், விளையாட்டுப் பொருட்கள், மழை பெய்தால் விளையாட உள் விளையாட்டரங்கம் என்று குழந்தைகளுக்குச் சலிப்பாகாத இடம்.

நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் மழை வந்ததால், எங்கும் செல்லவில்லை. காற்றே அடிக்காத சீரான கனமான ஒரு மணி நேர மழை. இரவில் குளிர் (அக்டோபர் 2019).

காலையில் இங்கேயே சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். உணவு மிகச் சிறப்பாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்தது, நபருக்குத் தோராயமாக ₹200 வந்தது (Buffet).

இந்த இடத்தின் முதலாளி 40 வருடங்களுக்கு முன்பே வாங்கிய இடமாம், 12 ஏக்கர் நிலப்பரப்பு. மிகப்பெரிய பரந்து விரிந்த இடம்.

இங்கே ‘வோடஃபோன், ஜியோ’ மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. ‘ஏர்டெல், BSNL’ சிக்னல் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி ஏரி அருகே சென்றால் கிடைக்கிறது. WiFi வசதி உள்ளது.

முதலாளி முஸ்லீம் என்பதாலும், இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதாலும் ‘Prayer Hall’ வசதி உள்ளது.

திருமணம் ஆகாத ஜோடிகள் மற்றும் மதுபானங்களுக்கு அனுமதியில்லை.

ஓய்வெடுக்க மிகச் சிறந்த இடம். எனக்கு ரொம்பப் பிடித்தது. அதற்குக் காரணங்களில் ஒன்று இடம் மிகவும் பசுமையாகவும் மரங்கள் நிறைந்தும் காணப்பட்டது 🙂 .

ஏலகிரி ஏரி

ஏலகிரியில் சொல்லிக்கொள்ளும்படி உள்ள ஒரே இடம் இந்த ஏரியும் படகு சவாரியும் மட்டுமே! ₹50 கட்டணம், 20 நிமிடப் பயணம்

இங்கே உள்ள பூங்காவில் ஜெயண்ட் வீல் உட்படச் சில விளையாட்டுகள் உள்ளது. வெளியே வந்தால், குழந்தைகளுக்கு (5 – 13) விளையாட ஏராளமான விளையாட்டுகள் உள்ளது.

இதில் பெரியவர்களும் சில விளையாடலாம்.

இதை முடித்தால், கோவிலுக்குச் செல்லலாம். எங்களுக்கு நேரம் இல்லாததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை.

நண்பன் ஒருவனுக்கு இரவுப்பணி என்பதால், விரைவிலேயே கிளம்பி விட்டோம்.

பயணத் திட்டப் பரிந்துரைகள் (சனி ஞாயிறு)

உங்களுக்குப் பிடித்த தங்கும் இடத்தை Booking.com ல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், என்னுடைய பரிந்துரை மேற்கூறிய Zeenath Taj Garden.

சென்னையில் இருந்து கிளம்புபவர்கள் செல்லும் வழியில் ‘இரத்தினகிரி’ முருகன் கோவில் உள்ளதால், இங்கே செல்லத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

நாங்கள் காலை உணவு கொண்டு வந்து இருந்ததால், கோவில் அடிவாரத்தில் சாப்பிட்டுக்கொண்டோம்.

உணவகத்தில் சாப்பிடுபவர்கள் அதற்குத் தகுந்த மாதிரி திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

வரும் வழியில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ளே ‘ஸ்டார் பிரியாணி’ கடையில் பக்கெட் பிரியாணி வாங்கிக்கொள்ளுங்கள்.

சிக்கன் ₹1000, மட்டன் ₹1300 (அக்டோபர் 2019).

ஏலகிரி சென்று சாப்பிட்டுக் கொள்ளுங்கள். குளிருக்கு செமையா இருக்கும் 🙂 .

ஒரு மணி நேரம் போல ஓய்வெடுத்து, குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏரி அருகே உள்ள விளையாட்டு இடங்களில் அவர்களை விளையாட வைக்கலாம்.

இதில் சில களைப்படைய வைக்கும் விளையாட்டுகள் உள்ளன, அவற்றை முதல் நாள் (சனி) அன்றே விளையாட வைத்து விடுங்கள். சனி இரவு ஓய்வெடுக்க எளிதாக இருக்கும்.

ஏன் கூறுகிறேன் என்றால், ஞாயிறு இவற்றை விளையாடினால் திங்கள் பள்ளி செல்லும் போது களைப்பாகி விடுவார்கள். எங்களுக்கு நேரம் போதாததால், விளையாட முடியவில்லை.

மாலை கோவிலுக்குச் செல்லலாம் அல்லது தங்கும் இடத்திலேயே நேரத்தைச் செலவழிக்கலாம்.

அடுத்த நாள் காலையில் (ஞாயிறு) தயார் ஆகி, 10 மணிக்கு மேல் படகு சவாரிக்கு சென்று படகு சவாரியை முடித்த பிறகு, அங்கே உள்ள ஜெயண்ட் வீல், வெளியே உள்ள டிராகன் உட்படச் சில விளையாட்டுகள் குழந்தைகள் விளையாடலாம்.

இதன் பிறகு அருகே உள்ள கடைகளில், Home Made Choclate, பழங்கள் மற்றும் மற்றவற்றை வாங்கலாம்.

இதன் பிறகு மதியத்துக்கு மேல் கிளம்பி விடலாம். இரு நாட்களுக்குச் சரியாக இருக்கும்.

ஏலகிரி குடும்பமாகச் செல்ல ஏற்ற இடம் குறிப்பாகக் குறைந்தது இரு குடும்பங்கள் இருக்க வேண்டும். காரணம், குழந்தைகள் கூட்டாக விளையாட வாய்ப்பு.

பசங்க ரொம்பத் திருப்தியாக விளையாடினார்கள், எனக்கு அதில் மிக மகிழ்ச்சி. எனக்கு அவர்கள் விளையாட நேரம் போதாதது மட்டுமே வருத்தம்.

நான் மேற்கூறிய பயணத் திட்டத்தை (மட்டும்) செயல்படுத்தினால் குழந்தைகள் மிகத் திருப்தியாவார்கள். பெற்றோர்களுக்கும் ஒரு மாற்றம் இருக்கும்.

மற்றவர்கள் இங்கே இரு நாட்கள் செலவழிக்க ஒன்றுமில்லை. ஓய்வெடுக்கச்சென்றால், தேர்ந்தெடுக்கும் தங்கும் இடத்தைப் பொறுத்து உங்கள் திருப்தி அமையும்.

தொடர்புடைய கட்டுரைகள் (பிற்சேர்க்கை)

‘ஜலகாம்பாறை’ நீர்வீழ்ச்சி

வாணியம்பாடி தோல் தொழிற்சாலை

3 COMMENTS

  1. தகவலுக்கு நன்றி சார், ஜலகாம்பாறை பற்றி கண்டிப்பாக எழுதுங்கள்..

  2. கிரி.. ஏலகிரி பயணத்தின் கட்டுரை நன்றாக இருக்கிறது.. எனக்கும் நிறைய பயணம் மேற்கொள்ளவேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தாலும்.. விடுமுறையின் சூழலால் என்னால் திட்டமிட முடியவில்லை.. கோவையில் பணிபுரிந்த நாட்களில் சக்தியுடன் பல இடங்களுக்கு திட்டமிடாமலே சென்றோம்.. இன்று போடுகின்ற எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை.. செயல் படுத்திய ஒரே நல்ல திட்டம்.. கடந்த விடுமுறையில் அவ்வளவு நெருக்கடியான சூழலில் உங்களை சந்தித்தது மட்டுமே!!!

    வேலூரில் பழைய ராஜாகாலத்து கோட்டைகள் இருப்பதாக பள்ளி பருவத்தில் படித்ததாக நியாபகம்.. அவைகளையும் பார்க்க வேண்டும்.. ஏலகிரி பயணத்தின் போது திட்டமிடுகிறேன்.. (வாணியம்பாடியில் நாங்கள் பார்த்த தோல் தொழிற்சாலை பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.) படிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @வெங்கடேஷ் எழுதி விட்டேன், படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    @யாசின் நாளை வெளியிடுகிறேன். விரிவாக அல்ல.. மேலோட்டமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here