ஏலகிரி செல்ல முடிவாகியதும், செல்லும் வழியில் திருப்பத்தூர் அருகே உள்ள ‘ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி’ செல்லலாம் என்று அனைவரும் விரும்பினார்கள்.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
பொன்னேரியில் இருந்து திருப்பத்தூர் சென்று அங்கே இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஜலகாம்பாறை’ சென்றோம்.
பொன்னேரியில் இருந்து திருப்பத்தூர் சாலை மோசமாக இருந்தது. திருப்பத்தூரில் இருந்து ஜலகாம்பாறை சாலை நன்றாக இருந்தது ஆனால், ஏகப்பட்ட வேகத்தடைகள்.
10 கிலோமீட்டர் என்றாலும், 20 கிலோமீட்டர் சென்ற களைப்பு ஏற்பட்டது.
நீர்வீழ்ச்சியில் தண்ணீர் உள்ளதா?! என்பதை நாங்கள் பொன்னேரி (இங்கே இருந்து தான் ஏலகிரி பிரிகிறது) வந்தவுடன் அங்கேயே கேட்டுக்கொண்டோம்.
அவ்வளவு தூரம் சென்று தண்ணீர் இல்லையென்றால், நேரம், எரிபொருள் வீண். எனவே, தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் இங்கேயே கேட்டுக்கொள்வது நல்லது.
இங்கே வாகன நிறுத்தக்கட்டணம் நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹100. மிக அநியாயம்.
ஏலகிரி ஏரி பகுதியில் நிறுத்தவே ₹30 தான் வாங்கினார்கள். இங்கே எதற்கு இவ்வளவு கட்டணம்? என்பது புரியவில்லை.
இங்கே கோவில் உள்ளது, விருப்பமுள்ளவர்கள் செல்லலாம்.
அருவி செல்ல அதிகம் ஏற வேண்டியதில்லை, மிகக் குறைவான தூரத்திலேயே குளிக்க முடியும்.
உடை மாற்ற அறை உள்ளது ஆனால், கதவு இல்லை. இருந்த கதவு உடைந்து விட்டதோ! என்று எண்ண வேண்டாம், கதவே இல்லை! பெண்கள் உடை மாற்றச் சிரமப்பட்டார்கள்.
மேலே வந்தவுடன் அருவி அருகே செல்லப் படிக்கட்டுகள் முறையாக இல்லை. எனவே, வயதானவர்கள், உடல் பருமனானவர்கள் மேலே செல்லச் சிரமப்பட்டார்கள்.
இவர்கள் செல்ல வேண்டும் என்றால், யாராவது துணையுடன் செல்ல வேண்டும், செல்வது பாதுகாப்பானது.
அரசாங்கம் இந்த எளிய தேவையைக் கூடக் கண்டுகொள்ளாமல் இருப்பது, எரிச்சலை வரவழைத்தது. பலரும் தடுமாறி ஏறிக்கொண்டு இருந்தார்கள். வழுக்கி விடும் அபாயம் உள்ளது.
தண்ணீர் விழும் இடத்திலும் மேம்படுத்த இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன ஆனால், கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.
நாங்கள் சென்ற இரு நாட்களுக்கு முன்னர் மழை பெய்ததாகக் கூறினார்கள் ஆனாலும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது வியப்பாக இருந்தது.
பெரியவர்கள் குழந்தைகள் என்று வயதுபாகுபாடு இல்லாமல் குளித்து மகிழ்ந்து கொண்டு இருந்தனர்.
எண்ணெய் மாலீஷ் க்கு ₹100, ₹200 என்று ஆட்கள் இருக்கிறார்கள்.
அரசாங்கம், சுற்றுலாத்துறை இப்பகுதியை மேம்படுத்தினால் இன்னும் பலர் இங்கே வருவார்கள்.
கீழே உள்ள கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. குரங்குகள் வழக்கம்போல ஏகப்பட்டது இருந்தன. சாப்பிடும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வாகனங்களை நிறுத்தப் போதுமான இடமுள்ளது, கட்டணம் மட்டும் அதிகம்.
ஏலகிரி செல்பவர்கள் நேரம் இருப்பின் ‘ஜலகாம்பாறை’ அருவியை முயற்சிக்கலாம்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அந்த நீர்வீழ்ச்சி படம் போட்டு இருந்தா நன்றாக இருக்கும்
தமிழகத்தில் உள்ள இதுவரையிலும் நான் சென்ற எந்த சுற்றுலா இடங்களும் என்னைத் திருப்தியடைச் செய்தது இல்லை. கோவில் தளங்களும் அப்படித்தான். என் எதிர்பார்ப்புகள் எதுவும் அங்கே நிறைவேறவில்லை. காலப் போக்கில் என் எண்ணங்களை மாற்றிக் கொண்டேன். அங்கே என்ன இருக்கிறதோ அதையே சுவராசியமின்றி கவனித்துப் பார்ப்பதுண்டு.
நீங்கள் எழுதிய ஏலகிரி என்பது எரிச்சலின் உச்சக்கட்டம். ஏன் இங்கே வந்தோம் என்று நினைத்ததுண்டு.
தமிழக அரசு சுற்றுலாத்துறையைச் சரியான அதிகாரியை நியமித்து முழு சுதந்திரம் அளித்துச் செயல்பட விட்டால் தமிழக நிதிநிலை தொகையில் கால்வாசி வருமானம் பெற்றுத் தந்து விடும்.
அதே போலத் தமிழக கோவில்கள் முறைப்படி பராமரித்தால் மீதி கால்பங்கு வருமானம் தரும். இரண்டுமே இங்கே நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தங்களை ஆன்மீக வாதிகள் என்று இங்கு அரசியல் மூலமாகக் காட்டிக் கொண்டவர்கள், ஆண்டவர்கள், சென்றவர்கள், இறந்தவர்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். ஒருவர் கூட அறநிலையத்துறை முழு உள்ளன்புடன் நடத்தவே இல்லை. அதையும் தங்களின் கொள்ளைக்களமாகப் பார்த்தனர். பாவித்தனர். சூறையாடினர். இதில் ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் என்ற பாரபட்சமே இல்லை.
கனிமவளத்துறை, மணல் அள்ளுதல், கிரானைட் எடுக்க அனுமதி போன்றவற்றைச் சரியாக நிர்வாகம் செய்ய அனுமதித்தால் நம் நிதிநிலை ல் துண்டு விழ வாய்ப்பே இல்லை. இதன் வருமானம் அனைத்தும் தனி நபர்கள், கட்சிகளுக்கு, எதிர்க்கட்சி ஆளுங்கட்சி நபர்களின் பைகளுக்குத் தான் செய்கின்றது.
சுற்றுலாத்துறை இறையன்பு இஆப அவர்களைத் தொடக்கத்தில் கலைஞர் நியமித்து இருந்தார். வெறுத்துப் போய் என்னை வேறுபக்கம் நகர்த்தி விடுங்கள் என்று கதறும் அளவிற்குக் கட்சி ஆட்கள் நாஸ்தி செய்து விட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படித்தான்.
நான் சென்ற சிறப்பான சுற்றுலா தளங்கள் என்றால் கேரளாவில்தான் உள்ளது. திற்பரப்பு நீர்வீழ்ச்சி மிகச் சிறந்த உன்னதமான இடம்.
கிரி.. இந்த இடத்திற்கும் இதுவரை போனத்திலை.. சில சுற்றலா தளங்களில் எல்லாவற்றிக்கும் கொள்ளை காசு வாங்குவார்கள்.. வசதியும் சரிவர செய்து கொடுக்கமாட்டார்கள்.. நமக்கு பழகிப்போச்சி!!! வெளிநாடுகளிலிருந்து ஏதோ கற்பனை செய்து கொண்டு வரும் நபர்கள் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள்..
2011 இல் நான் செஞ்சி கோட்டைக்கு சென்றிருந்தேன்.. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் சீருடை அணிந்த ஒரு 10 வெள்ளைக்காரர்கள் கோட்டைக்கு மதிய உச்சி வெயிலில் வந்திருந்தனர்.. அவர்களுக்கு கோட்டையை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்.. ஆனால் சரியான வழிகாட்டி இல்லை..இதை பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில புத்தகங்களும் இல்லை.. அங்கு இருப்பவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை..
ரொம்ப வெறுத்து போயி இருந்த நேரத்தில், என்னோட என்ட்ரி ” ஹலோ சார், வாட் கேன் ஐ டூ பார் யு??? என்னோட மொக்கை இங்கிலீசுல ஒரு மணி நேரம் நான் எட்டாம் வகுப்பில் படித்த தேசிங்கு ராஜாவின் வரலாற்றையும், அவர் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்ததையும், அவருடைய குதிரையை பற்றியும், அவருடைய உற்ற நண்பன் போர் தளபதி மகமுது கானை பற்றியும் அவர்களிடம் பேசினேன்..
உண்மையில் அவர்களுக்கு அது ஆச்சரியத்தை கொடுத்தது… அது ஒரு சுவாரசியமான நிகழ்வு.. இடையிடையில் அவர்கள் நமக்கு செய்த துரோகத்தையும், நமது வளங்களை பற்றி சொல்லும் போதும் இந்தியா (ஒரு ஏழை நாடு) என்ற அவர்கள் கற்பனை செய்து பிரமை உடைந்தது..
இறுதியில் மகிழ்ச்சியாக கைகுலுக்கி விடை பெற்று நடந்து செல்லும் போது பீர் பாட்டில்களில் உடைந்த ஓடுகள் சுற்றிலும் சிதறி கிடந்தது.. இந்த கொடுமையை வேறு எந்த நாட்டிலும் காண முடியுமா என்று தெரியவில்லை.. ஒரு பழமையான புராதனமான இடங்களில் நம்மவர்களது முதல் பணி, மலை உச்சிக்கு சரக்கை கொண்டு போய் அடிப்பது.. அடுத்து மற்ற மற்ற நிகழ்வுகள்.. ஒன்றும் சொல்வதற்கில்லை…
@Ansi அங்குள்ளவர்களின்Privacy க்காக நான் படம் எடுக்கவில்லை. பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என்று ஏராளம் இருந்தனர். அவர்களைத் தவிர்த்து எடுத்தால், மேலே உள்ள படம் போலத்தான் வரும்.
@ஜோதிஜி நீங்கள் கூறுவதை அப்படியே வழி மொழிகிறேன். எனக்கும் இந்த ஆதங்கங்கள் அதிகம்.