அமேசான் Kindle அனுபவங்கள்

12
amazon-kindle அமேசான் Kindle அனுபவங்கள்

ரு வருடமாகக் காத்திருந்து தற்போது அமேசான் பண்டிகை கால விற்பனையில் Amazon Kindle வாங்கி விட்டேன் 🙂 . ₹7999 க்கு இருந்த விலை, தள்ளுபடியில் ₹6089. அமேசான் Kindle அனுபவங்கள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

ஏன் Kindle?

  • புத்தகம் வைக்க அலமாரியில் இடமில்லை.
  • புத்தகத்தை இரவல் வாங்குபவர்கள் திருப்பித் தருவதில்லை.
  • எங்கே வேண்டும் என்றாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்.
  • இவையல்லாது காகித பயன்பாட்டைக் குறைக்க.

அளவு 6″

தற்போது இதன் அளவை குறைத்து விட்டார்கள் போல. முன்பு பெரியதாகப் பார்த்ததாக நினைவு.

வந்தவுடன் அளவை பார்த்துச் செம்ம கடுப்பாகி விட்டேன். “என்ன இவ்வளோ சிறியதாக உள்ளது?!” என்று ஆனால், படிக்க வசதியாகத் தான் உள்ளது.

நான் எதிர்பார்த்த அளவுக்கு மோசமில்லை.

பலரின் கருத்தைக் கேட்டுக் காலத்துக்கு ஏற்ப அளவை மாற்றியிருக்கிறார்கள் போல.

பயன்பாடு

தற்போது அலுவலகம் செல்லும்போது மறக்காமல் எடுத்துச் செல்கிறேன். பல புதிய புத்தகங்களை எளிதாகப் படிக்க முடிகிறது.

ஒரு புத்தகம் முடிக்க எவ்வளவு மணி நேரம் ஆகும்?, இன்னும் எத்தனை % படிக்க உள்ளது? இன்னும் அத்தியாயம் முடிய எவ்வளவு நேரமாகும்? என்று அனைத்துமே உள்ளது. எந்த இடத்தில் விட்டோமோ அதே இடத்தில் இருந்து படிக்க ஆரம்பிக்கலாம்.

மாற்றி மாற்றிப் புத்தகம் படித்தாலும் அதே இடத்தில் இருந்து படிக்கலாம்.

இன்னும் சிலவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியவில்லை ஆனால், விரைவில் கற்றுக்கொள்வேன்.

இனி ஊருக்குச் செல்லும்போது தவறாமல் எடுத்துச் சென்று விடுவேன். ரயில் / பேருந்துப் பயணங்கள் சுவாரசியமாக இருக்கும்.

ஒரே குறை பெரும்பாலான தமிழ் புத்தகங்கள் Kindle க்கு இன்னும் மாறவில்லை 🙁 .

மூன்று மாதம் Unlimited Kindle

என் கணக்கில் முதல் முறையாக வாங்கியதால் ₹2 கட்டணத்தில் மூன்று மாதங்களுக்கு “Unlimited Kindle” அமேசான் கொடுத்தது. அதாவது, பெரும்பான்மை Kindle புத்தகங்களை இலவசமாக இக்காலத்தில் படிக்கலாம்.

எப்புத்தகம் விலை அதிகமோ அதே சமயம் நல்ல புத்தகங்களோ அதையெல்லாம் படித்து வருகிறேன். இலவசமாகக் கிடைக்கும் போதே பயன்படுத்திவிடுவோம் 🙂 .

Kindle பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நல்ல புத்தகங்களைப் பரிந்துரைக்கவும்.

சுஜாதா பாலகுமாரன்

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

அவரின் அறிவுரைகள் எனக்கு மிக உதவியாக இருந்தது. அவர் கதைகளை நான் அதிகம் படித்தது இல்லை ஆனால், எழுத்துக்கு அவர் கூறிய அறிவுரைகளைப் படித்துள்ளேன், பின்பற்றி வருகிறேன்.

பாலகுமாரன் புத்தகங்கள் குறிப்பாக “உடையார்” படிக்க வேண்டும் என்று Kindle வாங்கியவுடன் சென்று பார்த்தால், முதல் 3 பாகங்கள் மட்டுமே Kindle ல் உள்ளது.

எனவே, அனைத்து பாகங்களும் வந்தபிறகு படிக்கலாம் என்றுள்ளேன்.

பாலகுமாரன், சுஜாதா இருவருமே பிராமணப் பேச்சு வழக்கையே வைக்கிறார்கள். வழக்கமான பேச்சு வழக்காக இல்லாமல் இதைப் படிக்கக் கடுப்பாக உள்ளது.

தற்போது “சுஜாதாட்ஸ்” படித்து வருகிறேன். சுஜாதாட்ஸ் பகுதியில், “புத்தகங்கள் வாங்குவது குறைந்து இணையம் வழியாகப் படிப்பவர்கள் அதிகமாகி விடுவார்கள்” என்று 1998 லியே குறிப்பிட்டு வியப்படைய வைத்துள்ளார் 🙂 .

அதாவது Kindle பற்றி அப்பவே குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே, காணொளி அனைவரையும் ஆக்கிரமித்து விட்டது. படிப்பவர்களைவிடப் பார்ப்பவர்கள் மிகுதியாக உள்ளார்கள்.

எனவே, எதிர்காலத்தில் Kindle வழியாகப் படிப்பவர்கள் கூடக் குறைந்து, காணொளி வழியாகப் பார்ப்பவர்கள் மிகுதியாக இருப்பார்கள்.

எதிர்காலத்தில் நானும் இங்கே எழுதுவதை அப்படியே YouTube ல் போட்டு Video Blogging தான் செய்ய வேண்டியது வரும் 🙂 .

புத்தகம் வெளியிடல்

அமேசானில் புத்தகத்தை வெளியிடுவது எளிதாக உள்ளது. மாமல்லன் எழுதிய “அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?” புத்தகம் படித்தேன்.

இதைப் படித்தபிறகு என்னுடைய கட்டுரைகள் சிலவற்றை மேம்படுத்தி Kindle ல் வெளியிடலாம் என்றுள்ளேன்.

நண்பர்கள் சிலர் பல வருடங்களாகப் “புத்தகம் வெளியிடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனக்குத்தான் ஏனோ எண்ணமே இல்லை.

நான் எழுதியவற்றை ஓரிரு வருடங்கள் கழித்துப் படித்தால் சிலது எனக்கே கடுப்பாக உள்ளது 🙂 .

புத்தகம் எழுதும் அளவுக்கு என்னிடம் சரக்கில்லை, அப்படியே எழுதினாலும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஒரு Blog ன்னா எளிது.. புத்தகம் என்றால், சிரமம்.

புத்தகம் வெளியிட்டால் அதை வாங்கிப் படிக்க யார் இருப்பார்கள்? என்ற சந்தேகம் இருப்பதால், புத்தகம் வெளியிடும் எண்ணமில்லை.

அப்புறம் புத்தகத்தைப் படிக்க வைக்கப் பல சந்தைப்படுத்த (Marketing) வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும். நண்பர்களை “படி படி” என்று உயிரை எடுக்கணும் 🙂 .

அதுவெல்லாம் எனக்கு ஒத்து வராது.

எதிர்காலம் Kindle

Kindle ல் இலவசமாக எந்தச் செலவும் இல்லாமல் வெளியிடலாம்.

எதிர்காலம் Kindle போன்ற சேவைகள் மட்டுமே! புத்தகம் வாங்கிப் படிப்பவர்கள் மிகக் குறைந்து விடுவார்கள்.

எனவே, எனக்குப் பிடித்த கட்டுரைகளைத் தனித்தனியாகவோ, தொகுத்தோ விரைவில் வெளியிடும் எண்ணமுள்ளது.

அப்படியே வெளியிடாமல், அதில் திருத்தங்களைச் செய்து, கூடுதலாகச் சிலவற்றைச் சேர்த்து வெளியிடலாம் என்று நினைத்துள்ளேன்.

படிப்பவர்கள் படிக்கட்டும், படிக்கவில்லையென்றாலும் எனக்கு இழப்பில்லை.

காரணம், இதற்கு நான் பணம் எதுவும் செலவழிக்கப்போவதில்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் Blog எப்படியொரு Passion ஆக எழுதுகிறேனோ அதையே Kindle ல் போடப்போகிறேன்.

இதற்கு அட்டைப்படம் தான் எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. நண்பர்கள் யாரிடமாவது கேட்டுப்பார்க்க வேண்டும்.

Kindle இதற்கு உதவி செய்யும் என்றாலும், நம் விருப்பப்படி இருந்தால், திருப்தியாக இருக்கும்.

இந்த வருட (2019) இறுதிக்குள் நான் எழுதிய ஒரு கட்டுரையையாவது வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

முதல் கட்டுரை ‘தளபதி’ நினைவுகள் [1991]. தலைவர் கட்டுரையில் இருந்து பிள்ளையார் சுழி போடுவோம் 🙂 .

நான் கூற மறந்த, கருத்துப்பகுதியில் நண்பர்கள் கூறிய சிலவற்றையும் இதில் சேர்த்து எழுதப் போகிறேன்.

சமீபமாகப் புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. இனி புத்தகங்கள் படிக்க முடியும், படித்த புத்தகங்கள் குறித்து உங்களுடன் பகிர முடியும்.

வாழ்க அமேசான்! வாழ்க Kindle!! 🙂 . அமேசானில் Kindle வாங்க –> Link

தொடர்புடைய கட்டுரை

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

12 COMMENTS

  1. நண்பா தங்களுக்கு தேவையான புத்தகங்கள் சில என்னிடம் உள்ளது விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் – பிடிஎப் கோப்புகளாக உள்ளது அனைத்தும் தெளிவானவை

    நன்றி

    • அனைவர்க்கும் பகிர்ந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி உடையதாகும்

  2. //இந்த வருட (2019) இறுதிக்குள் நான் எழுதிய ஒரு கட்டுரையையாவது வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். முதல் கட்டுரை ‘தளபதி’ நினைவுகள் [1991]. தலைவர் கட்டுரையில் இருந்து பிள்ளையார் சுழி போடுவோம் ? .//

    வாழ்த்துக்கள் கிரி.

  3. அருமை. வாழ்த்துகள்.

    கிண்டில் வாங்கியமைக்கு உங்கள் கண்கள் நன்றி சொல்வதை உணர்வீர்கள்.

  4. கிரி.. எனக்கு என்றும் விருப்பமானது புத்தகமாக படிப்பதே!!! படிப்பதில் பெரிய மேதாவி கிடையாது.. இருப்பினும் பிடித்தவைகளாக இருந்தால் திரும்ப, திரும்ப படிப்பதில் எனக்கு அலாதி விருப்பம்.. எப்படி பிடித்த பாடல்களை திரும்ப,திரும்ப கேட்கிறோமோ அது போல..

    முதன்முதலில் நான் படிக்க ஆரம்பித்ததே வரலாற்று புத்தகங்கள் தான்!!! குறிப்பாக சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து.. கல்லுரி பருவத்தில் முதன் முதலாக படித்தது “கிறுக்கல்கள்” நடிகர் பார்த்திபன் எழுதியது.. என் நண்பனின் காதலி அவனுக்கு கொடுத்த காதல் நினைவு பரிசு..

    அவன் பிரெஞ்சு மொழிபடமாக படிப்பவன்.. அவனுக்கு காதலி அளித்த பரிசு இந்த புத்தகம்.. அவனுக்கு சுத்தமாக படிக்க பிடிக்கவில்லை.. எனக்கு அந்த புத்தகத்தை படிக்க படிக்க கவிதை மேல் ஆர்வம் தொற்றி கொண்டது.. வகுப்பறை முழுவதும் சுற்றிய அந்த புத்தகம் கடைசியில் களவு போகி விட்டது..

    (10 வருடங்களுக்கு முன் கல்லுரி நண்பனுடன் பேசி கொண்டிருக்கும் போது தான் சொன்னேன்.. அந்த புத்தகத்தை திருடியது அவன் தான்.. திருடி அவனுடைய காதலிக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தான் என்று.. அந்த காதலி என்று வேறொருவனுடைய மனைவி.. புத்தகம் என்ன ஆனதோ தெரியவில்லை!!!!)

    என்னுடைய முதல் கவிதை…

    உன்னையே நான் தொடர்ந்து
    கொண்டிருப்பதால் தான்
    என்னவோ.. என் பரிட்சையும்
    என்னை தொடர்ந்து கொண்டே
    வருகிறதோ????!!!!

    இது கவிதையா??? என்று தெரியவில்லை.. ஆனால் கிறுக்கல்கள் படித்ததால் என்னுள் ஏற்பட்ட ஒரு மின்னல்… அதன் பின் கல்லுரியில் நிறைய கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள் என பல பரிசுகள் பெற்றேன்.. தற்போதும் கவிதை ஆர்வம் என்னுள் இருக்கிறது..

    திரைப்பட பாடல்களில் கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாடல்கள் மீது அதிக காதல்… இணையத்தில் படிப்பதை முற்றிலும் வெறுக்கிறேன்.. என்ன காரணங்கள் சொல்லி சமாதானம் செய்தாலும் எனக்கு விருப்பம் இல்லை.. விருப்பப்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை.. உங்கள் புத்தகத்தை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  5. மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை பாருங்கள்.

  6. நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை

    இடம்:
    பயிலகம்
    7 விஜய நகர் முதல் தெரு
    வேளச்சேரி சென்னை 42
    (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்)

    ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில்

    தொடர்புக்கு – த. சீனிவாசன் 9841795468 / முத்துராமலிங்கம் – 8344777333

    ===

    அச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

    FreeTamilEbooks.com ல் 550 மின்னூல்கள் 71 இலட்சம் பதிவிறக்கங்கள் தாண்டியுள்ளது, மின்னூல்களின் வீச்சையும் வாசகர்களுக்கு மின்னூல்கள் தரும் வசதிகளின் விளைவுகளையும் காட்டுகிறது.

    அமேசான் நிறுவனம், எழுத்தாளர்கள் அனைவரையும் சுய பதிப்பாளர்களாக்கி, விற்பனை செய்ய வைத்து, மகிழ வைத்து, மகிழ்கிறது.

    இந்த நிகழ்வின் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், எழுத ஆர்வமுள்ளோர் அனைவருக்குமான மின்னூலாக்கப் பயிற்சிகள் தரப்பட உள்ளன. மின்னூல் வெளியிடுவது எப்படி? அமேசான் கிண்டில் போட்டியில் பங்கு கொள்வது எப்படி? ஆகியவை விளக்கப்பட உள்ளன.

    தலைப்புகள்
    ==========

    1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML
    2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office Word, Sigil, Calibre
    3. Copyrights, Creative Commons License – அறிமுகம்
    4. அட்டைப்படம் உருவாக்குதல்
    5. FreeTamilEbooks.com ல் மின்னூல் வெளியிடுதல்
    6. அமேசானில் கணக்கு உருவாக்குதல்
    7. அமேசானில் மின்னூல் வெளியிடுதல்

    நீங்கள் எழுதிய மின்னூலை வேர்டு ஆவணமாக கொண்டு வருக. நீங்கள் எழுதிய வலைப்பதிவுகள், சமூக ஊடகப் பதிவுகளாகவும் இருக்கலாம்.

    கீழுள்ள காணொளிகளையும் காணுங்கள்

    -https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA

    https://www.youtube.com/user/arunsarathy2008/videos

    -https://www.youtube.com/watch?v=WHHF8eP_UyY

    கட்டணம் – இலவசம் .

    விரும்புவோர் நன்கொடை தரலாம். http://www.kaniyam.com/foundation/

  7. //ஒரே குறை பெரும்பாலான தமிழ் புத்தகங்கள் Kindle க்கு இன்னும் மாறவில்லை//

    தமிழ் PDF தொகுப்புகளை படிக்கும்போது எழுத்துருக்கள் சரியாக வருகிறதா..?!

  8. @வடிவேலன் மிக்க நன்றி

    @ஸ்வாமிராஜன் நன்றி 🙂

    @ஸ்ரீனிவாசன் & ஜெயக்குமார் நான் இந்த வாரம் சென்னையில் இல்லை 🙁

    இருப்பினும் அருண் காணொளிகள் எனக்குப் பயனுள்ளதாக இருந்தது.

    @யாசின் எனக்கும் இணையத்தில், மொபைலில் படிப்பதில் ஆர்வமில்லை ஆனால், Kindle நீங்கள் நினைப்பதில் இருந்து முற்றிலும் வேறானது.

    புத்தகம் படிப்பது போலவே இருக்கும். Screen புத்தகம் போலவே இருக்கும். உங்களுக்கு புத்தகம் படிப்பது போன்ற உணர்வே இருக்கும்.

    @சேலம் தேவா.. ஓ! நீங்கெல்லாம் இன்னும் என் தளம் படித்துட்டு தான் இருக்கீங்களா 🙂 .

    PDF பக்காவா இருக்கு. PDF ல் தெளிவாக இருந்தால், இதிலும் தெளிவாக இருக்கும்.

  9. freetamilebooks.com வலைதளம் உங்கள் கேள்விகளுக்கு விடையாகவும் சந்தேகங்களுக்கு தீர்வாகவும் அமையும். இதோ, அதன் சமீப பயிர்ச்சிப்பட்டரை பற்றிய பதிவை பகிர்கிரேன்.
    மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை
    http://freetamilebooks.com/workshop-on-ebook-making/

    நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை
    இடம்:
    பயிலகம்
    7 விஜய நகர் முதல் தெரு
    வேளச்சேரி சென்னை 42
    (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்)
    ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில்
    தொடர்புக்கு – த. சீனிவாசன் 9841795468 / முத்துராமலிங்கம் – 8344777333
    ===
    அச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.
    FreeTamilEbooks.com ல் 550 மின்னூல்கள் 71 இலட்சம் பதிவிறக்கங்கள் தாண்டியுள்ளது, மின்னூல்களின் வீச்சையும் வாசகர்களுக்கு மின்னூல்கள் தரும் வசதிகளின் விளைவுகளையும் காட்டுகிறது.
    அமேசான் நிறுவனம், எழுத்தாளர்கள் அனைவரையும் சுய பதிப்பாளர்களாக்கி, விற்பனை செய்ய வைத்து, மகிழ வைத்து, மகிழ்கிறது.
    இந்த நிகழ்வின் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், எழுத ஆர்வமுள்ளோர் அனைவருக்குமான மின்னூலாக்கப் பயிற்சிகள் தரப்பட உள்ளன. மின்னூல் வெளியிடுவது எப்படி? அமேசான் கிண்டில் போட்டியில் பங்கு கொள்வது எப்படி? ஆகியவை விளக்கப்பட உள்ளன.
    தலைப்புகள்
    ==========
    1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML
    2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office Word, Sigil, Calibre
    3. Copyrights, Creative Commons License – அறிமுகம்
    4. அட்டைப்படம் உருவாக்குதல்
    5. FreeTamilEbooks.com ல் மின்னூல் வெளியிடுதல்
    6. அமேசானில் கணக்கு உருவாக்குதல்
    7. அமேசானில் மின்னூல் வெளியிடுதல்
    நீங்கள் எழுதிய மின்னூலை வேர்டு ஆவணமாக கொண்டு வருக. நீங்கள் எழுதிய வலைப்பதிவுகள், சமூக ஊடகப் பதிவுகளாகவும் இருக்கலாம்.
    கீழுள்ள காணொளிகளையும் காணுங்கள்
    -https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA
    https://www.youtube.com/user/arunsarathy2008/videos
    -https://www.youtube.com/watch?v=WHHF8eP_UyY
    கட்டணம் – இலவசம் .
    விரும்புவோர் நன்கொடை தரலாம். http://www.kaniyam.com/foundation/
    பயிற்சி அளிப்போர் – இரவிசங்கர் அய்யாக்கண்ணு, த.சீனிவாசன்
    நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை
    இது நேரடிப் பயிற்சி. பங்கு பெறுவோர் அனைவரும் மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.
    பங்கு பெற விரும்புவோர், பின்வரும் படிவத்தை நிரப்புக.
    நிகழ்வில் சந்திப்போம்.
    https://forms.gle/XVvQycURjnnCBwzAA

  10. கிரி,
    இதில் இணையத்தோடு தொடர்பு (Connect ) பண்ண முடியுமா ? இணையத்தில் உலவி தரவு இரக்கம் பண்ண முடியுமா ?
    நான் இணையத்தில் இருந்து எனக்கு தேவையான புத்தகங்கள் தரவு இரக்கம் பண்ணி கொள்கிறேன் அனால் அது எல்லாம் என்னோடுய மடிக்கணினி மற்றும் ஹார்ட் டிஸ்க் சேமித்து வைத்து உள்ளேன் படிப்பது என்றல் மிகவும் பிரயாசை பட வேண்டி இருக்குது
    இதில் எப்படி download பண்ண முடியுமா . ஹார்ட் டிஸ்க் தொடர்பு பண்ண முடியுமா ?

    மேலும் அளவு 6 ” என்று சொன்னீர்கள் அப்படி என்றல் டேப்லெட் போல் இருக்குமா
    நான் இது வரை kindle நேரில் பார்த்தது இல்லை Kindle பாக்கலையானு Kindal பண்ணாதீர்கள் ! 🙂

  11. @அரவிந்த் நன்றி

    @சரவணன் இணையத்தோடு இணைக்க முடியும்.

    உங்களுடைய PDF கோப்புகளை இதனுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினால், இங்கே வந்து விடும். மிக எளிது.

    Tablet யை விடச் சின்னது ஆனால், படிக்க வசதியாக உள்ளது. துவக்கத்தில் இவ்வளவு சின்னதாக உள்ளதே என்று நினைத்தேன் ஆனால், அப்படியில்லை.

    சரியான அளவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!