வீடு நிலம் அடமானம் வைக்கிறீர்களா?

5
வீடு நிலம் அடமானம்

டன் பெறும் போது, வங்கியில் வீடு நிலம் அடமானம் வைப்பது வழக்கமானது.

கடனைக் கட்டி விட்டால் மட்டும் போதாது அடமானப் பத்திரத்தையும் முறையாக மீட்டெடுக்க வேண்டும்.

வீடு நிலம் அடமானம்

அப்பா வாங்கி இருந்த கடனுக்காக, வங்கியில் எங்கள் நிலத்தை அடமானம் வைத்து இருந்தார் ஆனால், கடனைக் கட்டியும் அடமான பத்திரத்தை மீட்கவில்லை.

வேறு வேலையாக வங்கி சென்ற போது, வங்கியில் உள்ள தெரிந்தவர் ஒருவர் ‘அப்பா கடனைக் கட்டி விட்டார் ஆனால், பத்திரத்தை மீட்கவில்லை. அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்‘ என்றார்.

அப்போது தான், பத்திரம் தனியாகப் பெற வேண்டும் என்ற தகவலே தெரிந்தது.

அதாவது கடனைக் கட்டி விட்டால், பத்திரமும் உடனே கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால், இல்லை. Image Credit

வில்லங்கம்

கடனைக் கட்டியாகி விட்டது என்று முறைப்படி வங்கி மேலாளரிடம் கடிதம் கொடுத்து அடமானப் பத்திரத்தை மீட்க வேண்டும்.

அப்பா காலமாகி விட்டதால், அவர் சார்பாகக் குடும்பத்தினர் அனைவரும் சென்று வாரிசு, அப்பா இறப்பு சான்றிதழ் கொடுத்துக் கையெழுத்திட்டு வாங்கினோம்.

பத்திரத்தை வாங்கினாலும், பத்திர அலுவலகத்தில் கடனைக் கட்டி விட்டதாகக் விண்ணப்பம் கொடுத்து அடமானம் மீட்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

இதைச் செய்யத்தவறினால், பிற்காலத்தில் அந்த இடம் விற்கப்படும் போது வாங்குபவர்கள் ‘வில்லங்கம்‘ போட்டுப் பார்த்தால், நிலம் / வீடு கடனில் இருப்பதாகக் காட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.

அடமானப் பத்திரம்

  • கடனைக் கட்டிய உடன் அடமானப் பத்திரத்தை வாங்கி விட வேண்டும்.
  • சம்பந்தப்பட்டவர் இல்லையென்றால், குடும்பத்தில் உள்ளவர் கையெழுத்து போட மாட்டேன் என்று பின்னர் பிரச்சனை செய்தால், சிக்கலாகி விடும்.
  • அவசர தேவைக்காக நிலத்தை / வீட்டை விற்கிறோம் என்றால், முடியும் நேரம் பார்த்து ‘வில்லங்கம்‘ இருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும்.
  • வில்லங்கம் இருந்தால், நிலம் அடமானத்தில் இருப்பதாகப் பொருள்படும் (கடனைக் கட்டியிருந்தாலும்). வாங்குபவரே பிரச்சனையுள்ளது என்று ஒதுங்கலாம்.
  • குடும்பத்தினர் பிரச்சனை செய்யவில்லை என்றால், எழுதிக்கொடுத்து பெற்று விடலாம். பிரச்சனை செய்தால், இடம் விற்பதில் தாமதம், சண்டைகள் ஏற்படலாம்.

எனவே, கடனைக் கட்டி விட்டோம் என அசால்ட்டாக இருக்க வேண்டாம். அடமானம் வைத்து இருந்தால், இதன் பிறகு இரு முக்கியப் பணிகள் உள்ளன.

பத்திரப் பதிவு அலுவலகம்

  • வங்கியில் கடிதம் எழுதிக்கொடுத்துப் பத்திரத்தை மீட்க வேண்டும்.
  • பத்திரப் பதிவு அலுவலகத்தில், ‘கடனைக் கட்டி பத்திரத்தை மீட்டு விட்டோம்‘ என்று அந்த இடத்தின் மீதான ‘வில்லங்க‘ விவரங்களை நீக்க வேண்டும்.

பத்திரம் எழுதுபவர்களிடம் சென்றால், எழுதிக்கொடுப்பார்கள்.

கொசுறு

பத்திரங்கள் மிக முக்கியமானவை. கவனக்குறைவாக இருந்து தொலைத்து விட்டால், சிக்கல். ஒரிஜினல் பத்திரத்துக்கு மட்டுமே மதிப்புண்டு.

தொலைந்து விட்டால், சரி செய்யத் தேவையற்ற செலவுகளைச் செய்ய நேரிடும்.

எனவே, பாதுகாப்பு பெட்டகத்திலோ (லாக்கர்) அல்லது வீட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் வைத்து இருங்கள்.

ஒருவேளை தொலைத்து இருந்தால், அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளை எடுங்கள்.

தவறினால், முக்கியமான நேரத்தில் பத்திரம் இல்லாது, நெருக்கடியை ஏற்படுத்தும்.

5 COMMENTS

  1. கிரி, நெருங்கிய உறவினர்கள் குடும்பங்களிலே இது போல பிரச்சனைகள் எழுந்துள்ளதை பார்த்து இருக்கிறேன்.. சம்பந்தப்பட்டவரின் இறப்பிற்கு பின் பிரச்சனை முடியாமல் ரொம்ப வருடங்களாக நீண்டு கொண்டு சென்றதையும் கண்டு இருக்கிறேன்.. அரை மணி / ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய தருணத்தை விட்டுவிட்டு பல ஆண்டுகளாக, முடிக்க முடியாமல் தவிப்பது கொடுமையானது.. தேவையில்லாத மன உளைச்சல், கால வீண்விரயம், வீண் செலவு, உறவுக்குள் விரிசல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.. மிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..

  2. பத்திரத்தை வங்கியிலிருந்து திரும்ப பெற்றால் மட்டும் போதாது. கடன் முழுவதும் தீர்ந்து விட்டது என்று வங்கி/கடன் கொடுத்தவர் மீண்டும் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து இரசீது ஆவணம் எழுதிக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தது வில்லங்க சான்றிதழில் இந்த அடமானப் பத்திரம் (உதாரணம் 159/2012) கடன் தீர்க்கப்பட்டதால் ரத்து செய்யப்படுகிறது என்ற விபரத்திற்கு இந்த இரசீது ஆவணம் 4568/2020 என்ற வகையில் வில்லங்க சான்றிதழில் இடம் பெறும். இப்படி தெளிவாக வேலைகளை முடித்துக் கொள்ள வில்லை என்றால் என்றைக்கு என்றாலும் சிக்கல்தான்.

  3. மிகவும் பயனுள்ள பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி .

  4. @செந்தில் 🙂

    @யாசின் “அரை மணி / ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய தருணத்தை விட்டுவிட்டு பல ஆண்டுகளாக, முடிக்க முடியாமல் தவிப்பது கொடுமையானது.”

    இது தான் மிகப்பெரிய பிரச்சனை. எளிதாக முடிக்க வேண்டியதை.. தாமதித்து சிக்கலில் மாட்டுவது.

    @ஆரூர் சரவணா “பத்திரத்தை வங்கியிலிருந்து திரும்ப பெற்றால் மட்டும் போதாது. கடன் முழுவதும் தீர்ந்து விட்டது என்று வங்கி/கடன் கொடுத்தவர் மீண்டும் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து இரசீது ஆவணம் எழுதிக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.”

    இதையே நானும் குறிப்பிட்டுள்ளேன்.

    @R KASIVISWANATHAN ஓகே சார் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here