முதல் அமேசான் இ-புத்தகம்

4
முதல் அமேசான் இ-புத்தகம் Thalaivar Rajini Amazon E-Book

மேசானில் Kindle வாங்கிய பிறகு பல புத்தகங்களைப் படிக்க முடிந்தது. இன்னொன்று, பல வருடங்களாகக் காரணமே தெரியாமல் தள்ளிப்போட்டுக்கொண்டு இருந்த அமேசான் இ-புத்தகம் வெளியிடுவது மூன்றே வாரங்களில் நடந்தது 🙂 .

கடந்த இரு வாரங்களாகப் பல்வேறு இணையத் தளங்கள், YouTube காணொளிகள் பார்த்து, படித்து எப்படிப் புத்தகம் வெளியிடுவது என்று கற்றுக்கொண்டேன்.

இ-புத்தகம் வெளியிட மாமல்லன் எழுதிய ‘அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி’ புத்தகமும், அருண் சாரதி YouTube காணொளிகளும் உதவியாக இருந்தது,

அருண் சாரதி YouTube Link 

என்னுடைய பல்வேறு சந்தேகங்களை இவர்களின் விளக்கங்களே தீர்த்து வைத்தன. நான் வேறு யாரிடமும் உதவி கேட்காமல் இவற்றை வைத்தே வெளியிட்டு விட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன், அதே நடைபெற்றதில் மகிழ்ச்சி 🙂 .

பல வருடங்களாக எழுதும் எல்லோருமே கிட்டத்தட்ட புத்தகம் வெளியிட்டு விட்டார்கள் ஆனால், எனக்கு ஏனோ ஆர்வமே இல்லை அல்லது நான் நினைத்தபடி வெளியிட இதுபோலச் சந்தர்ப்பம் அமையவில்லை.

என்னிடம் உள்ள கெட்ட பழக்கம், எனக்குத் திருப்தியாகும் வரை எதையும் நான் ஆரம்பிக்க மாட்டேன். எதிலுமே ஒரு ‘Perfection’ இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஏனோ தானோவென்று செய்ய என்னால் முடியாது.

சிறு வயதில் இருந்தே அப்படியே பழகி விட்டது, மாற்றிக்கொள்ள முடியவில்லை.

தலைவர்

புத்தகம் வெளியிடத் தீர்மானித்த பிறகு, எனக்கு மிகவும் பிடித்த, நான் ரசிக்கும், பல நல்ல எண்ணங்களை என்னுள் விதைத்த, பல அனுபவங்களை எனக்குக் கொடுத்த ரஜினி பற்றி நான் எழுதிய கட்டுரையையே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

‘தளபதி நினைவுகள்’ கட்டுரையையே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

இதற்காகக் கூடுதல் தகவல்களை அதாவது நான் கட்டுரையில் எழுத மறந்த தகவல்கள், நண்பர்கள் கூறியவை ஆகியவற்றைச் சேர்த்து தயார் ஆகி விட்டேன்.

வெளியிடலாம் என்று தீர்மானத்துக்கு வந்து வெளியிடத் தயாரான நிலையில்,

நண்பர் தேவ் ‘கிரி! ஒரு கட்டுரையாகப் போடாதீங்க. இன்னும் சில தலைவர் கட்டுரைகளைச் சேர்த்து போடுங்க அப்பத்தான் நல்லா இருக்கும். செய்வன திருந்தச் செய்ங்க‘ என்றார்.

உண்மையில் இதே சில வருடங்களுக்கு இச்சம்பவம் நடைபெற்று இருந்தால், நான் இவர் கூறியதை கேட்காமல் புறக்கணித்துப் பிடிவாதமாக நான் நினைத்ததையே செய்து இருப்பேன் ஆனால், தற்போது கொஞ்சம் நிதானம் வந்துள்ளது.

இவர் கூறியதும் நியாயமாகத் தோன்றியதால், எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளைப் புதுப்பித்து, பிழை திருத்தம் செய்து, புதிய தகவல்களைச் சேர்த்தேன்.

எல்லாமே பழைய கட்டுரைகளாக இருந்தால், புதிதாகப் படிப்பவர்களுக்குச் சுவாரசியமாக இருக்கலாம் ஆனால், ஏற்கனவே என் தளத்தில் படித்தவர்களுக்குச் சுவாரசியத்தைத் தராது.

ஓடிக்கொண்டே இருக்கும் குதிரை

எனவே, சிலவற்றை திருத்தியும், தளத்தில் வெளியிடாத, ஒரு கட்டுரையைப் புதிதாக சேர்த்தும் இருக்கிறேன் 🙂 . தலைப்பு ‘ஓடிக்கொண்டே இருக்கும் குதிரை‘ .

அமேசான் இ-புத்தகம் வெளியிடும் முயற்சியில் பல புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன்.

இதில் உள்ள அட்டைப்படம் எவரின் உதவியும் இல்லாமல் நானே செய்தது. இதை எளிதாகச் செய்பவர்களுக்குப் பெரிய விஷயமில்லை. முதல் முறையாக முயன்று இதைச் செய்வது என்னைப் பொறுத்தவரை எனக்குச் சாதனையாக உள்ளது 🙂 .

மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், என் நிலையில் இருந்து யோசித்தால் அப்படித் தோன்றாது.

இணையத்தில் இலவசமாகப் பல தளங்கள் இதைச் செய்ய உள்ளன. இவையெல்லாம் இருக்கிறது என்பதே எனக்கு இப்பத்தான் தெரியும். இது நாள் வரை எனக்குத் தேவை வரவில்லை. எனவே, இவ்வசதிகள் பற்றி அறிந்திருக்கவில்லை.

இலவசமாக வெளியிடவே நினைத்தேன் ஆனால், அமேசான் அனுமதிக்கவில்லை. குறைந்தபட்ச விலை ₹49 கட்டாயம். ஏனென்றால், அவர்களுக்கு இது வியாபாரம்.

Kindle Unlimited போன்ற அமேசான் வசதிகள் மூலம் இலவசமாகவும் படிக்கலாம். ₹49 விலை குறைவு என்பதால், வாங்க நினைப்பவர்களுக்குச் சுமையில்லை.

அமேசானில் வாங்க –> தலைவர் ரஜினி Link

இந்தச் சுட்டி Amazon.in க்கு உண்டானது, மற்ற நாடுகளிலும் கிடைக்கும்.

பல்வேறு கட்டுரைகளை ஒருங்கிணைத்து இ-புத்தகம் வெளியிடும் திட்டமுள்ளது. இணையம் இருக்கும் வரை என் புத்தகங்கள் சுற்றிக்கொண்டு இருக்கும்.

எனக்கு எழுதுவது ரொம்ப விருப்பம். எனவே, Blog க்கு அப்புறம் பெரிய மாற்றமாக அமேசான் இ-புத்தகம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை அளித்துள்ளது.

எதிர்காலம் E-Book என்பதால், இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறேன், பார்ப்போம் எப்படிப் போகிறது என்று.

என் எழுத்தார்வம் தொடர்ந்து நான் எழுத உறுதுணையாக இருந்தாலும், படிக்கும் உங்களின் ஆதரவும் உற்சாகமும் நான் தொடர மிக முக்கியக் காரணம்.

இதுவரை என்னை உற்சாகப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙂 .

என் முதல் புத்தகம் ரஜினியை ரசிப்பவர்களுக்குச் சமர்ப்பணம்.

Read : அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கிரி.. கலக்கிட்டிங்க போங்க!!! எவ்வளோவோ பெரிய விஷியத்தை சும்மா சாதரணமாக அதுவும் குறுகிய நேரத்துல முடிச்சி இருக்கீங்க!!! எனக்கு Kindle பற்றி அடிப்படை அறிவு கூட கிடையாது.. நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் Kindle ஒன்று இருப்பது..

  (இந்த வருட (2019) இறுதிக்குள் நான் எழுதிய ஒரு கட்டுரையையாவது வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.) ரெண்டு வாரத்துக்கு முன்பு தான் சொன்னிங்க.. நானும் நினைத்தேன் ஒரு மாதம் இல்லை, ரெண்டு மாதத்திற்கு பின் தான் வெளியிடுவீங்கன்னு.. சூப்பர்.. சீக்கிரம் வெளியிட்டுடிங்க!!!

  எனக்கு சில அடிப்படை கேள்விகள் இருக்கு???
  புத்தகம் PDF FORMAT ல இருக்குமா???
  பணம் அமேசான் தளத்துல கட்டி வாங்கணுமா???
  வாங்கிய பின் சாதாரணா PC யில DOWNLOAD பண்ணி பின்பு படிக்க முடியுமா??? இல்ல Kindle மட்டும் படிக்க முடியுமா???
  நாங்க புத்தகத்தை வாங்கிய பின் உங்களுக்கு ஏதேனும் வருமானத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா???
  இல்லை முழுப்பணம் அமேசானுக்கு செல்லுமா???
  எத்தனை பேர் உங்கள் புத்தகத்தை வாங்கி உள்ளார்கள் அல்லது தரவிறக்கம் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிய முடியுமா???
  பின்னுட்டம் இட வாய்ப்பு இருக்கிறதா?????

  நீங்க முதிர்ச்சி கொண்ட அனுபவசாலி.. ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்.. இந்த ரஜினி சார் குறித்த கட்டுரைக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. எதுவாக இருப்பினும் உங்கள் பயணம் தொடரட்டும்.. இந்த புதிய முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்….

  உங்களோடு சேர்ந்து ஒரு பயணியாக GIRIBLOG இல் வந்தது போல், வருவேனா என்று தெரியவில்லை.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. புத்தகம் PDF FORMAT ல இருக்குமா?

  Kindle format ல் இருக்கும்.. PDF போலவே இருக்கும். நம் வசதிக்கு ஏற்ப எழுத்துக்களின் அளவை கூட்ட குறைக்க முடியும்.

  பணம் அமேசான் தளத்துல கட்டி வாங்கணுமா?

  ஆமாம்.

  வாங்கிய பின் சாதாரணா PC யில DOWNLOAD பண்ணி பின்பு படிக்க முடியுமா??? இல்ல Kindle மட்டும் படிக்க முடியுமா?

  Kindle ல் மட்டுமே படிக்க முடியும். இதில் படிப்பதை தான் நானும் வலியுறுத்துவேன். Kindle App உள்ளது, இதிலும் படிக்கலாம்.

  நாங்க புத்தகத்தை வாங்கிய பின் உங்களுக்கு ஏதேனும் வருமானத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லை முழுப்பணம் அமேசானுக்கு செல்லுமா?

  நீங்கள் ₹49 செலுத்தினால் எனக்கு அதில் ₹15 கிடைக்கும்.

  எத்தனை பேர் உங்கள் புத்தகத்தை வாங்கி உள்ளார்கள் அல்லது தரவிறக்கம் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிய முடியுமா?

  அறிய முடியும். மிக விரிவாக அனைத்து தகவல்களையும் அமேசான் தருகிறது.

  பின்னுட்டம் இட வாய்ப்பு இருக்கிறதா?

  ஆமாம். உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் (ஒருவேளை ஏதாவது புத்தகம் பின்னாளில் வாங்கினால்) 🙂 .

  “ரஜினி சார் குறித்த கட்டுரைக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. எதுவாக இருப்பினும் உங்கள் பயணம் தொடரட்டும்”

  நன்றி. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இலவசமாக படிக்கவே யோசிக்கிறார்கள் எனவே, பணம் கட்டி பெறுபவர்கள் பற்றி எனக்கு எதிர்பார்ப்பே இல்லை.

  இதனால் தான் நான் இதுவரை புத்தகமே வெளியிடவில்லை. இதற்கு மார்க்கெட்டிங் வேலை மிக கொடுமையானது, எனக்கு அது பிடிப்பதில்லை.

  இ-புத்தகம் என்றால் முதலீடு இல்லை. படிப்பவர்கள் படிக்கலாம் நமக்கும் புத்தகம் வெளியிட்ட திருப்தி.

  எனவே, எனக்கு Blog எப்படியோ அதே போல தான் இ-புத்தகமும். இங்கே எப்படி நான் Passion ஆக எழுதுகிறேனோ அதே போல தான் இ-புத்தகமும்.

  எனக்கு ரஜினி மிகப் பிடித்தவர் அதனால் அவரில் இருந்து துவங்கினேன். சொல்லப்போனால் இப்புத்தகத்தை இலவசமாகவே வெளியிட முயன்றேன் ஆனால், அமேசான் அனுமதிக்கவில்லை

  “உங்களோடு சேர்ந்து ஒரு பயணியாக GIRIBLOG இல் வந்தது போல், வருவேனா என்று தெரியவில்லை.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்”

  பெரும்பாலும் இங்கே எழுதியதை தான் தற்போது அங்கே புத்தகமாக வெளியிடுவேன்.

  எதிர்காலத்தில் இங்கே எழுதாதையும் எழுதும் எண்ணம் உள்ளது. அப்போது நீங்கள் முயற்சிக்கலாம் விருப்பமிருந்தால் 🙂 .

 3. இப்போது தான் உங்கள் இடுகையைப் பார்த்தேன்..
  வாழ்த்துகள் கிரி.

  இதுபோல் இன்னமும் பல படைப்புகளை
  நீங்கள் உருவாக்குவீர்கள் என்கிற நம்பிக்கை
  எனக்கு இருக்கிறது.

  “ரஜினி” – எனக்கும் பிடித்தவர்…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here