த்ரில்லர் கலந்த ஒரு Road Movie ‘Route 10’. சவூதியில் நடப்பதாகக் கதை உள்ளது.
Route 10
தந்தையின் திருமணத்துக்காக அவருடைய மகனும் மகளும் ரியாத்திலிருந்து அபுதாபி செல்ல விமானத்துக்குத் தயாராகும் போது விமானம் ரத்து என்ற தகவல் வருகிறது.
வந்தே ஆக வேண்டும் என்று அவரது அப்பா சாலை வழியாக (900 கிமீ ) வரக்கூறுகிறார். Image Credit
இவர்கள் இருவரும் காரில் பயணிக்கும் போது இன்னொரு வாகனத்தில் வருபவர் இவர்களைக் கொல்ல முயற்சிக்கிறார்.
இறுதியில் என்ன நடந்தது என்பதே Route 10.
வழக்கமான கதை
இத்திரைப்படத்தில் புதிதாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே Road Movie பார்த்து இருந்தால், அதே போல த்ரில்லராக இருக்கும்.
இப்படத்துக்கு விமர்சனம் எழுத நினைக்கக்காரணம் நடப்பது சவுதியில் என்பதால்.
ஏராளமான நாட்டின் திரைப்படங்களைப் பார்த்து இருந்தாலும், சவூதி நாட்டின் திரைப்படங்களைப் பார்த்தது இல்லை.
அங்கே படம் எடுப்பார்கள் என்றே தற்போது தான் தெரியும்.
சவூதி பற்றித் தெரிந்து கொள்ளவும், அதன் இடங்களைக் காணவுமே பார்த்தேன்.
அமெரிக்காவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் என்றால், அங்கே உள்ள காடுகள், வறட்சிப் பகுதிகள், மலைமுகடுகள் என்று சுவாரசியமான பகுதிகள் அதிகம்.
அது ஒரு அழகு என்றால், பாலைவனம், எங்குக் காணினும் மணல், உடைகள், பழக்க வழக்கங்கள் என்று இதுவொரு அழகு.
ஆனால், Route 10 பெயரிலேயே எந்த மாதிரி இருக்கும் என்று தெரிந்து விட்டாலும், கதை முழுக்கப் பாலைவன சாலையிலேயே பயணிப்பதால், புதிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
கடுமையான வெயில்
உலகின் நீளமான, நேரான சாலையாக Highway 10 குறிப்பிடப்படுகிறது.
வெயில் அதிகம் இருப்பதால், சில நேரங்களில் ஒருவரின் மனநிலையே மாறி விடும் என்பதாக ஒரு காட்சி வந்தது. உண்மையா?!
நெடுஞ்சாலையில் அந்தக் கடுமையான வெயிலிலும் Police Patrol இருக்கிறார்கள்.
இவை தவிரக் கலாச்சார ரீதியாகப் பெரிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனாலும் அவர்கள் அப்பா பற்றிக் கூறுவது, அவரின் கடுமையான நடவடிக்கைகளை விவாதிப்பது நமக்குப் பலவற்றைப் புரிய வைக்கும்.
ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும்படியில்லை, மற்றவை பரவாயில்லை ரகம்.
கிட்டத்தட்ட Steven Spielberg இயக்கிய Duel படத்தின் சாயலில் உள்ளது. இறுதிவரை துரத்துபவர் முகம் தெரியாது.
யார் பார்க்கலாம்?
Road Movie பார்க்க விரும்புபவர்கள் தாராளமாகப் பார்க்கலாம், மற்றவர்கள் திரில்லருக்காக, வித்யாசமான அனுபவத்துக்காகப் பார்க்கலாம்.
NETFLIX ல் உள்ளது. பரிந்துரைத்தது ராம்.
Road Movie என்றால் என்னவென்று புரியாதவர்களுக்கு, கதை பெரும்பாலும் சாலைப்பயணத்தில் நடக்கும்.
தமிழில் வந்த குறிப்பிடத்தக்க Road Movie என்றால் பையா படத்தைக்கூறலாம்.
NH 10 என்ற அனுஷ்கா சர்மா படம் செமையா இருக்கும். இதை முழுமையான Road Movie என்று கூற முடியாது, ஆனால் அப்படித் துவங்கி முடியும்.
Director Omar Naim
Writer Omar Naim
Stars Baraa Alem, Fatima Al-Banawi, Abdulmohsen Alnemr
Music by Omar Fadel
Cinematography by Matthew Irving, Michael Lagerwey
Art Direction by Safi Raai
Costume Design by Missy Tohmeh
Running time 81 minutes
Language Arabic
கொசுறு
Le Grand Voyage
நண்பர் யாசின் Le Grand Voyage என்ற திரைப்படத்தைப் பரிந்துரைத்தார். இது சவூதி படமல்ல ஆனால், பிரான்சிலிருந்து மெக்காக்கு காரிலேயே வரும் கதை.
படம் மெதுவாகச் செல்லும் ஆனால், அட்டகாசமாக இருக்கும். (Amazon Prime US ல் உள்ளது). திரும்பவும் காண விருப்பமுள்ளது 🙂 .
சவூதி குறித்தான சுவாரசியமான திரைப்படங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்.
தொடர்புடைய திரை விமர்சனம்
4L (2019 Spanish) | பாலைவனப் பயணம் போகலாமா?!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. எனக்கு தெரிந்தவரை சவூதியின் சட்டதிட்டங்கள் மிக கடுமை.. அதனால் சவுதியில் திரைப்படங்கள் எடுக்க அரசு அனுமதி தருவது சந்தேகமே.. ஆனால் தற்போதைய ஆட்சியில் சுற்றுலா துறையை வளர்க்க வேண்டி, நிறைய புதிய மாற்றங்கள் அங்கு நடந்து வருகிறது.. அதன் நீட்சியாக தான் சவூதி அரசு சில வருடங்களுக்கு முன் முதன்முதல் திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தது.. முதல் தமிழ் படம் ரஜினி சாரின் காலா படத்தை வெளியிட்டனர்..
8 வருடங்களுக்கு முன் கால்பந்தை மையமாக கொண்ட ஒரு அரபி மொழி படத்தை பார்த்தேன்.. படத்தின் பெயர் நினைவிலில்லை.. படம் எகிப்திலும் / பிரான்சிலும் எடுக்கப்பட்டிருக்கும்.. நான் பார்த்த ஒரே அரபிமொழி படம் இது தான்.. அரபி மொழியின் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும்.. கிட்டத்திட்ட இசையை கேட்கும் போது ஹிந்தி பாடல்களின் சாயல் இருக்கும்..
Le Grand Voyage உங்கள் நினைவில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. நான் உங்களிடம் கூறி கிட்டத்திட்ட 7/8 வருடமிருக்கும்.. நல்ல ரசனையான படம்.. சவூதியை பொறுத்தவரை அதிகம் பாலைவனம் தான்..
நான் 2019 மே மாததில் ஒரு புனித பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன்..மிக பெரிய நாடு.. ஒரு நகரத்திற்கும் இன்னொரு நகரத்திற்கும் சுமார் 1000 / 1400 KM தொலைவுகள் இருக்கின்றது.. HIGHWAY சாலைகள் நன்றாக இருந்தது.. விடுமுறை இல்லாததால் 10 நாட்களுக்குள்ளாகவே மீண்டும் திரும்பி வந்து விட்டேன்.. சவூதி குறித்தான சுவாரசியமான திரைப்படங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும். கண்டிப்பாக கிரி..
@யாசின்
“தற்போதைய ஆட்சியில் சுற்றுலா துறையை வளர்க்க வேண்டி, நிறைய புதிய மாற்றங்கள் அங்கு நடந்து வருகிறது.. அதன் நீட்சியாக தான் சவூதி அரசு சில வருடங்களுக்கு முன் முதன்முதல் திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தது”
கால மாற்றம்.. ஏனென்றால், எதிர்காலத்தில் எரிபொருள் வருமானத்தை நம்பி இருக்க முடியாது.
மின்சார வாகன உயர்வு எரிபொருள் தேவையை குறைத்து விடும்.
தற்போதைய இளவரசர் / அரசர் சிறப்பாக செயல்படுவதாக அறிகிறேன்.
“முதல் தமிழ் படம் ரஜினி சாரின் காலா படத்தை வெளியிட்டனர்..”
நினைவுள்ளது 🙂
“அரபி மொழியின் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும்.. கிட்டத்திட்ட இசையை கேட்கும் போது ஹிந்தி பாடல்களின் சாயல் இருக்கும்..”
எனக்கு அரபி பாடல்கள் பிடிக்கும்.. கஜல் போலவும் இருக்கும்.
“Le Grand Voyage உங்கள் நினைவில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. நான் உங்களிடம் கூறி கிட்டத்திட்ட 7/8 வருடமிருக்கும்.”
நல்ல படங்கள் எப்போதும் மறப்பதில்லை.
“ஒரு நகரத்திற்கும் இன்னொரு நகரத்திற்கும் சுமார் 1000 / 1400 KM தொலைவுகள் இருக்கின்றது”
அடேங்கப்பா!
வாழ்க்கையில் ஒருமுறையாவது சவூதி பக்கம் சென்று வந்து விட என்ற விருப்பமுள்ளது 🙂 .