அமெரிக்க சாலையுடன் இந்திய சாலையை ஒப்பிடலாமா?

4
அமெரிக்க சாலையுடன்

ந்திய நெடுஞ்சாலை தரத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களின் விருப்பம்.

அதற்கான நேர்மையான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களில் கட்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி முக்கியமானவர்கள். Image Credit

அமெரிக்கச் சாலை

அமெரிக்காவில் சாலையின் தரம் எப்படி இருக்கும் என்று தெரியாது ஆனால், திரைப்படங்களில் பார்த்தவரை மிகச்சிறப்பாக உள்ளது.

அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட முறையிலோ அரசாங்க முறையிலோ கட்கரி பயணித்து அமெரிக்கச் சாலைகளைப் பார்த்து வியந்து இருக்க வேண்டும்.

எனவே, இது போன்ற சாலையை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று விருப்பப்படுகிறார். விருப்பப்படுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதற்கான முயற்சிகளையும் விரைந்து எடுத்து வருகிறார்.

முயற்சிகளை எடுப்பதோடு அல்லாமல் அதைச் செயல்படுத்தியும் வருகிறார்.

இதையொட்டி ராஜ்யசபாவில் பேசும் போது

'2024 ல் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க சாலைகள் போல இருக்கும். பசுமை சாலைகள் முக்கிய நகரங்களை இணைக்கும், நேரத்தைக் குறைக்கும், போக்குவரத்தை எளிதாக்கும்' என்று கூறினார்.

இது சாத்தியமா?

கண்டிப்பாகச் சாத்தியம் ஆனால், 2024 க்குள் சாத்தியமில்லை 🙂 .

புதிதாக அமைக்கப்படும் பசுமை சாலைகள் மட்டும் சிறப்பான தரத்தில் இருக்கலாம்.

கட்கரியின் விருப்பமும், நம் நாட்டின் கட்டமைப்பை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற ஆர்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால், 2024 ல் சாத்தியப்படாது.

தற்போது இந்தியா புதிய சாலைகளை அமைப்பதில் அதிக முதலீடு செய்து வருகிறது. எனவே, சாலை அமைப்பதற்கான செலவு, இடம் கையகப்படுத்துவது என்று அதிகத் தொகை இதற்கே சென்று விடுகிறது.

புதிய சாலைகள் அமைக்கும் தேவை நிறைவு பெறும் போது, பெரும்பாலான நகரங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் இணைக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு முக்கிய வேலை முடிந்த பிறகு ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்த முயற்சி எடுப்பார்கள், எடுக்க முடியும்.

காரணம், தற்போதுள்ள சாலையை மேம்படுத்துவதை விடப் புதிய சாலைகள் அமைப்பதே இலக்காக உள்ளது, அதுவே சரியும் கூட.

அப்போது அமெரிக்கத் தரச் சாலைகள் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. எது எவ்வளவு விரைவில் என்பது கட்கரிக்கே வெளிச்சம்.

ஆனால், அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை 100% உள்ளது.

உட்கட்டமைப்பு

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்தேவை உட்கட்டமைப்பு.

ஒரு நகரத்தில் மால், பெரிய கட்டிடங்கள், பல மல்டிப்ளெக்ஸ் இருப்பதாலே ஒரு நகரம் வளர்ந்து விட்டதாக அர்த்தமில்லை.

அந்நகரத்தின் சாலைகள், தூய்மை, மழை நீர் வடிகால், குடிநீர் குழாய்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இருந்தாலே அந்நகரம் சிறந்ததாகக் கருதப்படும்.

இவற்றுக்கு நேரடி தொடர்பு இல்லாத ஆனால், மறைமுகத் தொடர்பாக நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருந்தால் பயணியர், சரக்கு போக்குவரத்து எளிதாகும்.

இதைத்தான் கட்கரி செய்து கொண்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே தனது துறையின் புதிய திட்டங்களுக்கு நிதி தேவையில்லை, தேவையான அளவு உள்ளது என்று கூறும் ஒரே மத்திய அமைச்சர் கட்கரி மட்டுமே!

காலத்தை விரையமாக்காமல் சாலைப்பணிகளை விரைந்து மேற்கொள்கிறார். ஒத்துழைப்பு கொடுக்கும் வட மாநிலங்கள் பயனைப் பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு இல்லாததால் (நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக உதவி) ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி நிதியை திரும்பப்பெற போகிறார்கள் 🙁 .

முன்பு காங்கிரஸ் அரசு காலத்தில் தினமும் 12.7 கிமீ சாலை அமைக்கப்பட்டது, அதை 37 கிமீ ஆக உயர்த்தினார். அதன் பிறகு 45 கிமீ என்று திட்டமிடப்பட்டதை தற்போது 60 கிமீ ஆக உயர்த்தியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் தேசிய நெடுஞ்சாலை தரத்துடன் இருக்கும் என்று நம்பலாம்.

கொசுறு

நம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு அரசாங்கப்பணிக்காக, தனிப்பட்ட காரணத்துக்காக சென்று வருகிறார்கள்.

இங்கே வந்து அந்நாட்டின் உட்கட்டமைப்பை புகழ்கிறார்களே தவிர நம்ம ஊரை இது போல மாற்ற வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.

இதை பல முறை நினைத்து உள்ளேன். எதனால், அதிகாரம் இருந்தும் நம் ஊரை மாற்றத் தோன்றவில்லை என்று. என்னைப் போல் பலர் நினைத்து இருப்பார்கள்.

ஆனால், நிதின்கட்கரி நம்மைப் போல நினைத்து, நம் நாட்டு சாலையின் தரத்தை உயர்த்த முயற்சிப்பதாலே எனக்கு இவர் மீது அளப்பரிய மரியாதை.

இவரைப் போல முயற்சிப்பவர் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி.

தொடர்புடைய கட்டுரை

நிதின் கட்கரி என்ற சம்பவக்காரன்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி.. மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களில் கட்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி முக்கியமானவர்கள். உண்மை கிரி.. ஏற்றுக்கொள்கிறேன்.. முதலில் அயல்நாடுகளுடன், நமது நாட்டை Compare செய்வது முட்டாள் தனம். காரணம் ரொம்ப சிம்பிள்..

    நமது நாட்டின் மக்கள் தொகை.. அயல்நாடுகளின் மக்கள் தொகை.. எல்லாவற்றிக்கும் மேல் நமது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு வேறு.. அவர்களின் கட்டமைப்பு வேறு.. அங்கு இருந்தா இங்கும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?? என்ன??? நல்ல சாலைகள் வேண்டும்.. அதை சரியாக பராமரிக்க வேண்டும்.. அப்போது தான் அதன் ஆயுள் சரியாக இருக்கும்..

    வெளிநாடுகளை நாம் compare செய்கிறோம்.. எனக்கு தெரிந்த வரை இங்கு அமீரகத்தில் சாலைகள் செம்மையாக இருக்கும்.. (வடிவேல் 23 வருடம் முன்பே சொல்லி விட்டார்) இங்கு மழை பொழிவு மிக குறைவு.. அதனால் பெரும்பாலும் சாலைகள் பழுதாவது இல்லை .

    அது மட்டுமில்லாமல் சரியான பராமரிப்பு பணியை அரசாங்கம் மேற்கொள்கிறது.. சாலைகள் மூலம் அரசுக்கும் வருமானமும் மிக அதிக அளவில் வருகிறது.. சரியாக திட்டமிட்டால் எல்லாம் சாத்தியமே!!! இதற்கு அமெரிக்கா / ஐரோப்பாவை நாம் ஏன் COMPARE செய்கிறார்கள்..

    தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு இல்லாததால்.. இதை வேற மாதிரியும் பார்க்கலாம் கிரி.. சாலைகள் அவசியம் தான்.. அது அத்தியாவசியமா?? என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா??? யாரோ ஒருவரின் அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக??? அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சுய லாபத்திற்காக போடப்பட்டு பல திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமலே கிடப்பில் கிடக்கிறது..

    நம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு அரசாங்கப்பணிக்காக, தனிப்பட்ட காரணத்துக்காக சென்று வருகிறார்கள். இங்கே வந்து அந்நாட்டின் உட்கட்டமைப்பை புகழ்கிறார்களே தவிர நம்ம ஊரை இது போல மாற்ற வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. உண்மை கிரி.. சில ஹிந்தி படங்களில் வட மாநிலங்களை பார்க்கும் போது சுதந்திரம், வாங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ?? அதே போல் காட்சியளிக்கும் பல காட்சிகளை கண்டு மனம் குமுறியுள்ளேன்..

    75 வருடமாக அங்கும் MLA , MP அரசு அலுவலர்கள் என பல பேர் இருந்திருப்பார்கள்.. மக்களின் வாழ்வியலை மாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.. வேறும் ஜாதியை வைத்துக்கொண்டு மக்களிடம் பிரிவினையை உண்டாகி, அவர்களுக்கு செய்ய வேண்டியவைகளை செய்வதே இல்லை. மத்திய அரசாங்கம் பரவலாக எல்லா மாநிலத்திற்கும் நிதிகளை அளிக்கிறது.. அதை சரியாக சரியாக பயன்படுத்தி இவர்கள் சரி செய்து இருந்தால் மக்கள் கஷ்ப்பட வேண்டியதில்லை.. நினைத்தாலே மனது கணமாகிறது.. ஏழைகள் இன்னும் ஏழையாகி கொண்டிருக்கிறார்கள்.. பணக்காரர்கள் இன்னும் பன்மடங்கு வளர்ந்து கொண்டிருக்கின்றர்..

  2. @யாசின்

    “அயல்நாடுகளுடன், நமது நாட்டை Compare செய்வது முட்டாள் தனம். காரணம் ரொம்ப சிம்பிள்..

    நமது நாட்டின் மக்கள் தொகை.. அயல்நாடுகளின் மக்கள் தொகை.. எல்லாவற்றிக்கும் மேல் நமது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு வேறு.. அவர்களின் கட்டமைப்பு வேறு.”

    முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் யாசின்.

    குறிப்பாக சீனாவுடனான ஒப்பீடு என்பது மிகத்தவறானது.

    சீன ஒரு கம்யூனிச நாடு. அங்கே அரசாங்கம் சொல்வதே சட்டம். அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது.

    எடுத்துக்காட்டுக்கு, இங்கே சாலை அமைக்கிறோம் இடத்தை காலி செய்யுங்கள் என்றால், மறு பேச்சில்லாமல் செய்ய வேண்டும்.

    ஒரு குற்றத்துக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க முடியும், யாரும் கேள்வி கேட்க முடியாது. இது போல கூற ஏராளம் உள்ளது.

    எனவே, இன்னொரு நாட்டுடன் ஒப்பீடு செய்வது தவறு ஆனால், நாமும் வளர்ச்சி அடைய வேண்டும், வளர்ந்த நாடுகளை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு அதில் உள்ள நல்லவைகளை இங்கேயும் செயல்படுத்த வேண்டும் என்று முயல்வது வரவேற்கத் தக்க செயல்.

    சீனாவில் உள்ளது போன்ற கட்டமைப்பை நாமும் கொண்டு வர வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை ஜனநாயக வழியில் எடுப்பது நேர்மறையான செயல்.

    “அமீரகத்தில் சாலைகள் செம்மையாக இருக்கும்.. (வடிவேல் 23 வருடம் முன்பே சொல்லி விட்டார்) இங்கு மழை பொழிவு மிக குறைவு.. அதனால் பெரும்பாலும் சாலைகள் பழுதாவது இல்லை .”

    ஏற்றுக்கொள்ளும்படியான வாதம். அதோடு இவர்கள் அமைக்கும் சாலையும் தரமாக உள்ளது.

    நம் ஊரில் ஊழலால் மோசமான சாலைகள் அமைக்கப்படுகின்றன.

    “அது மட்டுமில்லாமல் சரியான பராமரிப்பு பணியை அரசாங்கம் மேற்கொள்கிறது..”

    சரியான புரிதல்.

    “சாலைகள் மூலம் அரசுக்கும் வருமானமும் மிக அதிக அளவில் வருகிறது.. சரியாக திட்டமிட்டால் எல்லாம் சாத்தியமே!”

    மிகச்சரி யாசின்.

    நமக்கும் சுங்கச்சாவடி மூலமாக ஏராளமான வருமானம் வருகிறது ஆனால், கட்டுரையில் கூறியது போல, புதிய சாலைகளை அமைக்கவே இவை சென்று விடுவதால், சாலை பராமரிப்புக்கு அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.

    இதில் தன்னிறைவு அடையும் போது மற்றவற்றுக்கும் கவனம் செலுத்த முடியும் என்பது என் நம்பிக்கை.

    “அது அத்தியாவசியமா?? என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா??? ”

    சாலைகள் என்றுமே அத்தியாவசியம் தான் யாசின். தற்போது பயனில்லை என்று நினைக்கும் சாலைகள் பிற்காலத்தில் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.

    சாலைகள் அதிகம் இருக்கும் போது வளர்ச்சி அதிகம் இருக்கும்.

    “அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சுய லாபத்திற்காக போடப்பட்டு பல திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமலே கிடப்பில் கிடக்கிறது..”

    இதற்கு ஒரு எடுத்துக்காட்டை கூறலாம்.

    திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதுரவயல் சாலையை ஈகோ காரணமாக ஜெ தடுத்தார். அதை முடித்து இருந்தால், இந்நேரம் பல போக்குவரத்து சிக்கல் குறைந்து இருக்கும்.

    ஏராளமான எரிபொருள் மிச்சம் ஆகி இருக்கும்.

    கெட்டதிலும் ஒரு நல்லதாக, தற்போது இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாறியுள்ளது. 2024 ம் ஆண்டு முடியும் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

    “வட மாநிலங்களை பார்க்கும் போது சுதந்திரம், வாங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ?? அதே போல் காட்சியளிக்கும் பல காட்சிகளை கண்டு மனம் குமுறியுள்ளேன்”

    “மத்திய அரசாங்கம் பரவலாக எல்லா மாநிலத்திற்கும் நிதிகளை அளிக்கிறது.. அதை சரியாக சரியாக பயன்படுத்தி இவர்கள் சரி செய்து இருந்தால் மக்கள் கஷ்ப்பட வேண்டியதில்லை.”

    உண்மை.

    ஆனால், தற்போது வடமாநிலங்கள் வளர்ச்சி பெற்று வருகிறது. இது குறித்து தனிக்கட்டுரையாக பின்னர் எழுதுகிறேன்.

  3. @Vijayakumar

    “we pay road tax.we can sue the union govt for high ways quality”

    You may but I don’t think you will get a possible answer / solution since central Govt is concentrating on laying new roads so they will give some answer thats all but sure we will get quality roads in future.

    “i expect a article about PM – WANI schem.”

    I don’t have idea about it.. will check

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!