பயணக் குறிப்புகள் [மார்ச் 2019]

2
gobichettipalayam

வெயில் அதிகம் இருந்ததால், ரயிலில் குளிர் இருக்காது என்று போர்த்திக்கொள்ள எதுவும் தேவையில்லை என்று நினைத்து, சரி எதற்கும் இருக்கட்டும் என்று சால்வை எடுத்துச் சென்றேன்.

நல்லவேளை, எடுத்துச்சென்றதால் தப்பித்தேன். குளிர் பின்னி எடுத்து விட்டது, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, கடுமையான குளிர். பகலில் வெயில் பொளக்கிறது, இரவில் இப்படி.

கோபியிலும் இதே தான், குறிப்பாக அதிகாலையில் செம குளிர். மதியம் வெயில் பளீர் என்றுள்ளது. வெளியே பார்க்கவே முடியாத அளவுக்கு கொளுத்துகிறது. வெளியே செல்ல வேண்டும் என்றால், நான்கு மணிக்கு மேல் தான் செல்ல வேண்டும்.

ஏர்டெல்

ஏர்டெல் ரோமிங்கில் இருந்தால், VoLTE வராது. என்னுடைய எண் சென்னை Circle ல் இருப்பதால், சென்னை தாண்டினால் ரோமிங். எனவே, ஊருக்குச் சென்றால் எனக்கு 4G மட்டுமே காட்டும்.

சமீபத்தில் ரோமிங்கிலும் VoLTE வரும் என்றார்கள் என்றதால், ஈரோட்டில் இறங்கியதும் பார்த்தேன். ஆமாம், VoLTE வந்து விட்டது.

சென்னை, தமிழ்நாடு என்று பிரித்து கடுப்படிக்கிறார்கள். இப்பிரச்னைக்கு என்று தான் தீர்வோ!

தண்ணீர்

சென்னையில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து விட்டது, இது பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

ஊருக்கு சென்றால், வாய்க்காலில் தண்ணீர் நிரம்பிச் செல்கிறது. அப்படியே சென்னைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது 🙂 .

வீட்டின் முன்பு வைத்த செடிகள் வளர்ந்து விட்டன. நிழல் கொடுக்கும் அளவுக்கு வளர இரு வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.

உறவினர்கள்

சில உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வந்தேன். இரு நாட்களே இருந்ததால், அதிகம் செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டுக்கு அம்மாவைப் பார்க்க பலரும் வந்து செல்கிறார்கள். இதனால், மரியாதைக்காகவாது செல்ல வேண்டும்.

சண்டை போட்டால் “போங்கய்யா” என்று கூறி விட்டு சென்று விடுவேன், அதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன் ஆனால், இப்படிச் செய்யாமல் பலரும் அன்பையே முன் வைக்கிறார்கள் அல்லது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

நான் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, எதிர்பார்ப்புகளைக் குறைக்க ஆரம்பித்த பிறகு எல்லோருமே நல்லவராகத் தெரிகிறார்கள் 🙂 . இதனால் எனக்கு எந்த வித நெருக்கடியோ, பதட்டமோ, கோபமோ, பொறாமையோ எதுவுமே சமீபமாக வருவதில்லை.

இது நல்லா இருக்கு 🙂 .

மற்றவங்க எப்படியோ இருந்துட்டு போறாங்க.. நம்ம மனசாட்சிக்கு நாம சரியா இருந்தால், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எதிர்பார்ப்புகளே பிரச்னைகளுக்குக் காரணம்!

Read : எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

மிளகாய்க் குழம்பு

கடந்த முறை ஊருக்கு சென்று வந்த போது மிளகாய்க் குழம்பு நன்றாக இருந்தது என்று எழுதி இருந்தேன். நண்பர் தளபதி முஸ்தபா எப்படிச் செய்வது என்று கேட்டு இருந்தார்.

அம்மாவிடம் கேட்டு வந்துள்ளேன், விரைவில் எழுதுகிறேன் 🙂 .

ரயில் கூட்டம்

என்னங்க அநியாயமா இருக்கு..! மே மாதம் கடைசிக்கு முன்பதிவு செய்தாலும் ரயிலில் இடமில்லை.

விடுமுறை காலம் என்றாலும், தற்போதெல்லாம் குறைந்தது 50 நாட்கள் முன்பு முன்பதிவு செய்தால் தான் வார இறுதியில் படுக்கை வசதி கிடைக்கிறது.

வார நாட்களில் கூட்டமில்லை ஆனால், சென்னையில் இருந்து செல்லும் போது வெள்ளி, அங்கே இருந்து வரும் போது ஞாயிறு எப்போதுமே கூட்டம் தான், பயணசீட்டு கிடைப்பதே இல்லை.

நான் எப்போதுமே ரயில் தான். ரயிலில் பயணசீட்டு கிடைக்கவில்லை என்றால், ஊருக்கே செல்ல மாட்டேன், கடந்த மூன்று வருடங்களில் இரு முறை மட்டுமே பேருந்தில் சென்றுள்ளேன்.

பேருந்தில் கட்டணம் அதிகரித்ததால் பலரும் ரயிலை தேர்வு செய்கிறார்கள் போல, இதனால் எப்போதுமே ரயிலில் மட்டுமே செல்லும் என்னைப்போன்றவர்களுக்குச் சிக்கலாகி விட்டது 🙁 .

RAC ல வந்தால், இடுப்பு கழண்டு விடும்.  50 நாட்கள் முன்பு திட்டமிடலாம், அதற்கு மேல் எப்படித் திட்டமிட்டு முன்பதிவு செய்வது என்பது புரியவில்லை.  இனி வார இறுதி முன்பதிவு சிக்கலே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. தற்போது நான் வசிக்கும் ஊரின் காலநிலையை புரிந்து கொள்ளமுடியவில்லை.. தற்போது மழையும், இரவில் அதிகமான குளிரும் அடிக்கிறது.. பொதுவாக மார்ச் மாதத்தில் இதுபோல் இருக்காது, கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறை இந்த மாற்றத்தை உணர்கிறேன்..

    பள்ளி, கல்லூரி படிக்கின்ற நேரத்தில் உறவினர்கள் யார் வந்தாலுமே , எனக்கு அதிர்ச்சி தான்.. (அம்மாவின் தங்கை தவிர).. யாரிடமும் அதிகம் பேசவும், பழகவும் பிடிக்காது.. குறிப்பான காரணம் ஏதும் இல்லை.. ஒன்று அம்மா ரொம்ப கஷ்டப்பட தருணங்களில் யாரும் உதவவில்லை என்ற கோபம், மற்றொன்று தேவையில்லாத கேள்விகள் கேட்பது / அவர்களின் STATUS ஐ நாம் முன் காட்டுவது.. நான் வீட்டில் நுழையும் போது, ஏதேனும் புதிய காலணிகள் வீட்டில் இருந்தால் ஒரு மணி / இரண்டு மணி நேரம் கழித்து தான் மீண்டும் வீட்டுக்கு வருவேன்..

    தற்போது நிலைமை தலைகீழ்.. எல்லோரிடமும் பேசவும், பழகவும் பிடித்து இருக்கிறது.. கடந்த கால என்னுடைய தவறுக்கு வருந்தியும் உள்ளேன்.. வெளிப்படுத்தப்படாத அன்பு…….. மண்ணுக்குள்ள புதஞ்சி கிடக்கும் தங்கத்துக்கு சமம். அதனால யாருக்கும் பயனில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து இருக்கிறேன்..

    ரயில் உங்களுக்கு எப்படியோ அப்படி தான் விமானம் எனக்கு.. ஜூலையில் ஊருக்கு செல்ல எண்ணம் இருக்கிறது.. தற்போது டிக்கெட் விலை, தாறுமாறாக இருக்கிறது.. ஒரு மாதமாக டிக்கெட் விலையை சோதித்து கொண்டு இருக்கிறேன்.. ஏதும் மாற்றம் இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் அனுபவமே வாழ்க்கை 🙂 . நானும் முன்பு நினைத்து இருந்த கருத்துகளுக்கும் தற்போதுக்கும் ஏராளமான மாற்றம்.

    விடுமுறை காலங்களில் விமானக்கட்டணம் தாறுமாறாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here