பொள்ளாச்சி சம்பவம் | உளவியல் சிக்கல்கள்

5
பொள்ளாச்சி சம்பவம் Crime

க்கட்டுரை எழுதக் காரணமே பொள்ளாச்சி சம்பவம் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசின் அம்மா தான். Image Credit

துவக்கத்தில் இருந்து கூறி வருகிறேன், ஒரு குழந்தை எந்த மாதிரி குணங்களுடன் வளர்கிறது என்பதற்கு மிக முக்கியக்காரணம் பெற்றோரே என்று!

இச்சம்பவம் மேலும் அதை உறுதிப்படுத்தியது.

ஒரு குழந்தை குணம், நடவடிக்கைகள், எண்ணங்கள் போன்றவை வளர முக்கியக் காரணியாகப் பெற்றோரும் அதோடு மரபணுவும் சூழ்நிலைகளுமே!

திருநாவுக்கரசு

இவனுடைய அம்மா இவனுக்காக ஜாமீன் கேட்ட போது வழக்கமான அம்மா பாசத்தில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல வந்தார் என்றே நினைத்தேன்!

ஆனால், காணொளி ஆதாரங்களையே நம்ப மறுத்து, தன் மகன் நிரபராதி என்று அவனுக்காகப் பரிந்து பேசி நீதி மன்ற வளாகத்தில் வாக்குவாதம் செய்கிறார்.

திருநாவுக்கரசு எதனால், இது போலப் பொறுப்பற்று, தவறான நபராக ஆனான் என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. சரியான வளர்ப்பில்லை.

தவறுகளைச் சரியான நேரத்தில் கண்டிக்காமல், தவறுகளுக்குச் சப்பைக்கட்டு கட்டி வளர்த்ததே அவன் இந்த நிலைக்கு வரக் காரணம்.

தன் மகளைப் போல உள்ள பல பெண்களை இவன் கெடுத்து இருக்கானே, நாம் இப்படி தவறாக வளர்த்து விட்டோமே! என்ற குற்ற உணர்வே இல்லாமல், அவனுக்காகப் பரிந்து பேசுகிறார்.

பெற்றோர்

பெற்றோர் தங்களுடைய பசங்களுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுங்கள்.

வீட்டில் கணவன் மனைவி குழந்தைகள் முன்பே சண்டையிட்டால், வாக்குவாதம் செய்தால், அதைப் பார்த்து வளரும் குழந்தைகளின் எண்ணம் என்னவாக இருக்கும்?!

பெண்ணோ பையனோ அதிகச் செல்லம் கொடுத்து வளர்ப்பது எதிர்காலத்தில் பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வரும். இதை இக்காலப் பெற்றோர்கள் உணர்வதே இல்லை.

அதே போல அவர்கள் தவறு செய்தால், உங்களிடம் கூறும் அளவுக்கான சுமூகமான சூழ்நிலையை உருவாக்குங்கள்.

பெற்றோருக்குப் பயந்தே மன உளைச்சலில், யாரிடம் கூறுவது என்ற பயத்திலேயே தவறுகளின் விளைவுகள் இன்னும் மோசமாகின்றன.

கொங்குப் பகுதி

நானும் கொங்குப் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால், நான் கண்ட, அறிந்த சில தகவல்களைக் கூடுதலாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கொங்குப் பகுதிகளில் பெற்றோரின் கட்டுப்பாடுகள் முன்பு அதிகம். எனவே, பள்ளி முடிக்கும் வரை கட்டுப்பாடாக இருந்து பழகியவர்கள் கல்லூரி வரும்போது சுதந்திரமாக உணர்கிறார்கள்.

இவர்கள் மாணவர், மாணவியர் விடுதி, கல்லூரிக்கு வரும் போது அங்கு நண்பர்கள் சேர்க்கை சரியில்லை என்றால், தவறான வழிகளில் செல்ல ஏராளமான வாய்ப்புகள்.

இதுவே இவர்கள் ஏமாறவும் துணை புரிகிறது, எவரும் ஏமாற்றவும் எளிதாகிறது.

உளவியல் ரீதியான காரணங்கள் இவையே!

கட்டுப்பாட்டிலேயே வளர்ந்தவர்கள், கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைக்கும் போது இப்பொறுக்கிகளின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விடுகிறார்கள்.

வீட்டில் இருந்தால், அதைச் செய் இதைச் செய் என்று கூறுவார்கள் என்று பயந்தே பல பெண்கள் கல்லூரியில் மேற்படிப்புப் படிக்கச் சென்ற தலைமுறையுண்டு.

முன்பு அதிகக் கட்டுப்பாடாக இருந்து பிள்ளைகளை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள், தற்போது அதிகச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வருகிறார்கள்.

பையனோ பெண்ணோ அவர்களுக்குப் பொறுப்பைக் கற்றுக்கொடுங்கள். அதீத கட்டுப்பாடும், செல்லமும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

பெண்களே!

தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள்! இதுபோல நடந்ததுக்குப் பிறகு யாரை திட்டி நொந்து என்ன பயன்?! நடந்தது மாறப்போகிறதா?

நல்ல பசங்க எவ்வளவோ பேர் இருக்காங்க ஆனால், தேடிப்போய் மாட்டுவது இவனுங்க கிட்ட!

சமூகத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள். முதலில், யார் என்று தெரியாதவரை நட்பு பட்டியலில் சேர்க்காதீர்கள்.

காரியம் ஆகணும்னா உங்களைப் புகழ்ந்து தான் பேசுவான், இப்படிப் பேசி பேசியே தான் இத்தனை பெண்களைக் கெடுத்து வைத்து இருக்கிறார்கள், இந்தப் பொறம்போக்குகள்.

இந்த நால்வரில் ஒருவன், ஒரு பெண்ணை அறிமுகமான நான்கு மணி நேரங்களில் பேசியே வழிக்குக் கொண்டு வந்து இருக்கிறான் என்று படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

பெண்ணுரிமை, சுதந்திரம் அது இது என்று வசனம் பேசலாம், இறுதியில் பாதிக்கப்படுவது நீங்கள், சம்பந்தமே இல்லாமல் உங்கள் குடும்பம்.

எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

இன்று உங்களை உசுப்பேத்தி பரிந்து பேசுபவர்கள் நாளை உங்களுக்குப் பிரச்சனையென்றால் உதவிக்கு வர மாட்டார்கள், அப்பவும் இதே போலத்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

எனவே, நடைமுறை எதார்த்தம் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

சிலவற்றை தடுப்பது நம் கையில் இல்லை ஆனால், சிலவற்றை எச்சரிக்கையாக இருந்தால் நிச்சயம் தடுக்கலாம்.

உங்களுடைய எச்சரிக்கையுணர்வு மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.

பொள்ளாச்சி சம்பவம் பிரச்சனையைத் தைரியமாக வெளிக்கொண்டு வந்த அப்பெண்ணுக்கும் அப்பெண்ணின் அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இவர்களும் இதைக் கடந்து சென்று இருந்தால், இந்தப் பொறுக்கிகள் இன்னும் எத்தனை பெண்களை இது போலச் செய்து இருப்பார்களோ! நினைத்தாலே அதிர்ச்சியாக உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்

இப்பெல்லாம் ஓரளவு பொறுமையா எழுதிட்டு இருக்கேன். இதே போல ஒரு சூழ்நிலையில் கொல காண்டாகி, 9 வருடங்களுக்கு முன்பு எழுதிய “காட்டுமிராண்டி” கட்டுரை நினைவு வந்தது.

அப்போது என்ன மனநிலையில் இருந்தேனோ, தற்போதும் அதே நிலையில் தான் உள்ளேன்.

ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக் குமுறல்!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. நீங்கள் கொங்கு பகுதியில் வாழ்ந்த காலத்தை விட மிக அதிகமான காலத்தை அதாவது முதல் தலைமுறை இரண்டாவது தலைமுறை என்று இங்கு (வாழ்ந்தவர்களுடன்) வாழ்ந்து வருகிறேன். வாழும் ஊரை, நம்மை வளப்படுத்திய ஊரை, என் குழந்தைகளுக்கு ஆதரவளித்த ஊரை தவறாக எழுதக்கூடாது என்பதற்காக மட்டுமே இங்குள்ள தொழில் அதன் பின்புலம் பற்றியே இதுவரையிலும் எழுதியுள்ளேன். ஒரு மகள் இங்கேயே பிறக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஊர் மேல் அதீத பாசம் இன்று வரையிலும் வைத்துள்ளேன். மற்றபடி மாற்றங்களுக்கு தகுந்தாற்போல மனிதர்களும் ஊர்களும் தொழில்களும் மாறிக் கொண்டேதான் இருக்கின்றது. இங்குள்ள மனிதர்களின் மனோபாவத்தை வேறு எந்த மாவட்டங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது. இவையெல்லாம் தங்கள் வாரிசுகளை எந்த வகையில் பாதிப்படையச் செய்யும் என்பது இவர்கள் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது தான் எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். தாங்கள் வாழ்ந்த மண் தங்கள் வாரிசுகளுக்கு சொந்தமானது என்பதை உணரவே இல்லை என்பதும் அடுத்த சோகம். வாழ்க்கை என்பது அவரவர்களுக்கு சொல்லித்தருகின்ற தனிப்பட்ட பாடங்களை உணர்ந்தவர்கள் பிழைப்பார்கள். உணராதவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் செய்தித்தாளில் தலைப்புச் செய்திகளாக மாறுவார்கள்.

 2. //இன்று உங்களை உசுப்பேத்தி பரிந்து பேசுபவர்கள் நாளை உங்களுக்குப் பிரச்சனையென்றால் உதவிக்கு வர மாட்டார்கள், அப்பவும் இதே போலத்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.//

  உண்மை.

  பெற்றோர்களின் கட்டுப்பாடு கொங்கு பகுதியில் மட்டும் அல்ல, எல்லா ஊர்களிலும் உணவு. சென்னையில் இப்போதும் எனக்குத் தெரிந்த சில குடும்பங்கள் கல்லூரி பஸ்ஸில் ஏற்றிவிட பேரூந்துநிற்குமிடம் வரை வந்து பெண்ணை டிராப் செய்தும், மீண்டும் அதே போல அழைத்தும் செல்வதைக் கண்டிருக்கிறேன். கல்லூரியில் அவர்கள் யாரிடம் ஏமாறுகிறார்கள் என்பதைக் கவனிப்பவர் யார்?

 3. முதல் பெண்ணை இவர்கள் இப்படி வீடியோ எடுத்தபோதே அந்த பெண்/குடும்பத்தினர் போலீசிற்கு போயிருந்தால் மீதி 270 பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். அதே போல நீங்கள் 9 வருடத்திற்கு முன்னர் சொன்னது போல‌ கற்பழிப்பு என்ற வார்த்தை பிரயோகம்/ உருவாக்கம் இப்போது இல்லாமலிருந்தால் அந்த பெண்களில் யாராவது முன்னரே முன்வந்து இந்த நபர்களை காட்டிக்கொடுத்திருப்பார்கள். பெண்கள் முன்னேற்றம் என்பது டிக்டாக்கிலும் மியூசிக்கலியிலும் உடம்பை காட்டுவதில்லை. தனக்கு கொடுமை நடக்கும்போது முன்வந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதுதான்.

  எல்லா பெற்றோர்களுமே தன் பிள்ளையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பது என்னுடய தனிப்பட்ட கருத்து. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் சிறுமியை பலாத்தகாரம் செய்து கொன்ற ஜஸ்வந் என்ற நபரை அவரது அம்மாவே ஜமீனில் எடுத்தார். பின்னர் அவரின் தாயை அவரே கொலை செய்தார். இப்போது மரண தண்டனை வழ‌ங்கப்பட்டுள்ள அவருக்கு அவரின் தந்தை மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க மனு செய்துள்ளார். நீங்கள் அவரின் இடத்தில் இல்லாத‌வரை அந்த தாயின் கதறல் சிறிது அதிகமாகவே இருக்கும். நாங்கள் எல்லோருமே நல்லவர்கள்தான் சந்தர்ப்பம் அமையும் வரைக்கும். சந்தர்ப்பத்திற்கு பின்னர்தான் உண்மையிலேயே நாங்கள் நல்லவர்களா இல்லையா என்பது தெரியும். நான் அந்த தாயையோ இல்லை அந்த இளஞ்ஞர்களையோ நியாயப்படுத்தவில்லை. அவர்கள் அனைவருமே தண்டிக்கப்படவேண்டியவர்களே. அதை விட தமிழர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்களோ என்று எனக்கு இந்த விடயத்துல் தோன்றுகிறது, நீங்கள் இங்கே சொன்ன ஒரு கருத்து மிக மிக முக்கியமானது. பெற்றோர் தங்களின் ஆண் பிள்ளைகளை பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும் மற்றும் பிள்ளைகளின் முன்னால் சண்டை போடக்கூடாது. இது இரண்டும் இருந்தால் அந்த பிள்ளைகள் தன்னால் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். முகப்பு புத்தகத்தையோ இல்லை டுவீட்டரையோ பார்க்கும் போது சிரிப்புத்தான் வருக்கிறது. அந்த தாயை கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்கள். திருநாவுக்கரசின் தங்கையில் படத்தை போட்டு அவரை செருப்பால் அடிக்க சொல்லுகிறார்கள். இப்படி பட்டவர்களின் பிள்ளைகள் மட்டும் ஒழுக்கமாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
  என்னுடய பள்ளிக்காலத்தில் என் நண்பி ஒருவர் அவரின் நண்பரின் வீட்டில் நடந்த விழா ஒன்றில் குடி போதையில் இருவரால் பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்பட்டார். செய்தவர்கள் அவரின் நண்பரின் நண்பரான புதிதாக அந்த நாட்டிற்கு வந்திருந்த இரு பாஞ்சாபிகள். சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கு 11 மற்றும் 7 ஆண்டுகள் சிறை வழங்கப்பட்டது. என் நண்பி சில தினங்களிலேயே சகஜமானார் மருத்துவ ஆலோசனையின் பின்னர். அந்தகய மன நிலை தமிழ் நாட்டில் வாழும் பெண்களுக்கும் வர வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முன்வர வேண்டும். அதே நேரம் சமூகமும் பாதிக்கப்பட்டவரை அவமரியாதை செய்வதை நிறுத்தவேண்டும். உங்களுடய பதிவிலும் பார்க்க என்னுடயது நீளமாக போவதால் நிறுத்திக்கொள்கிறேன்.

 4. @ஜோதிஜி “வாழ்க்கை என்பது அவரவர்களுக்கு சொல்லித்தருகின்ற தனிப்பட்ட பாடங்களை உணர்ந்தவர்கள் பிழைப்பார்கள். உணராதவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் செய்தித்தாளில் தலைப்புச் செய்திகளாக மாறுவார்கள்.”

  அவ்வளோ தான் விசயம் 🙂

  @ஸ்ரீராம் நீங்கள் கூறியது போல அனைத்துப் பகுதிகளிலும் உண்டு ஆனால், நான் சம்பந்தப்பட்ட பகுதி என்பதால் குறிப்பிட்டேன்.

  @ப்ரியா பெண்கள் முன்னேற்றம், சுதந்திரம் என்பதற்கான அர்த்தத்தை ஃபேஸ்புக் போராளிகள் மாற்றி விட்டார்கள்.

  இதை பெண்ணீயம் என்ற பெயரில் பலர் வாந்தி எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

  “எல்லா பெற்றோர்களுமே தன் பிள்ளையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பது என்னுடய தனிப்பட்ட கருத்து. ”

  அப்படி கூற முடியாது. சிலர் அவர்கள் குடும்பத்திலேயே அனுமதிப்பதில்லை.

  இது போல செய்யும் பெற்றோரின் பிள்ளைகள் தான் தவறான வழிகளில் செல்கிறார்கள். பிள்ளைகளை கெடுப்பதே இந்த பெற்றோர் தான்.

  அப்புறம்… முகப்பு புத்தகம் என்று சொல்லாதே.. அது தவறான வார்த்தை பிரயோகம்.

  பெயர்ச்சொல்லை மொழிமாற்றம் மாற்றம் செய்யக்கூடாது, உன்னுடைய பெயரை எந்த மொழியினர் அழைத்தாலும் ப்ரியா தான்.

  உன் பெயரை வேறு மொழியில் மாற்றி அழைத்தால் உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

  “திருநாவுக்கரசின் தங்கையில் படத்தை போட்டு அவரை செருப்பால் அடிக்க சொல்லுகிறார்கள். ”

  முழு சைக்கோவா மாறிட்டானுக. நானும் இது பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், நான் கூற வரும் கருத்தில் இருந்து விலகி செல்லும் என்பதால் எழுதவில்லை.

  “அதே நேரம் சமூகமும் பாதிக்கப்பட்டவரை அவமரியாதை செய்வதை நிறுத்தவேண்டும். ”

  இது கண்டிப்பாக மாற வேண்டும்.. குசுகுசுன்னு பேசுவதை நிறுத்த வேண்டும்.

  “உங்களுடய பதிவிலும் பார்க்க என்னுடயது நீளமாக போவதால் நிறுத்திக்கொள்கிறேன்.”

  நீ தானே எனக்கு சொன்னே.. சொல்ல வருவதை முழுக்க சொல்லணும் என்று 🙂 படிக்க விரும்புவர்கள் படிக்கட்டும், மற்றவர்கள் புறக்கணிக்கட்டும்.

  எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை பிரித்து எழுதினால் படிக்க எளிதாக இருக்கும்.

  பரவாயில்லை.. முன்புக்கு தற்போது உன்னுடைய எழுத்தில் முன்னேற்றம். பிழையின்றி எழுதுவதில் முன்னேற்றம் கண்டுள்ளாய், வாழ்த்துகள் 🙂 .

  இப்படியே தொடரவும்.

 5. கிரி, இந்த நிகழ்வுக்கு யாரை குற்றம் சாட்டுவது என்று தெரியவில்லை.. குற்றம் சாட்ட வேண்டும் என்று சொன்னால் அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.. லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கும் குழந்தைகளுக்கு இந்த பள்ளி, கல்லூரிகள் கற்று கொடுப்பது என்ன??? சமூக பொறுப்பும், தனிமனித சுதந்திரமும், மனிதமும் நம்மிடம் குறைந்து கொண்டே செல்வதும் முதன்மையான காரணமாக கருதுகிறேன்.. தனிமனித சுதந்திரத்தின் வரையறையை ஆணும் / பெண்ணும் சரியாக புரிந்து கொள்ளாததும் ஒரு காரணமே!!!

  இத்தனை ஆண்டுகளாக ஒரு தொடர் நிகழ்வு நடந்து கொண்டிருப்பதை, யாருடைய கவனத்திற்கும் செல்லாதது (கவனத்திற்கு சென்றும் கவனிக்கப்படாமல் விட்டதா என்று தெரியவில்லை) உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது..

  குழந்தைகள் வளர வளர அவர்கள் அதிகம் நேரம் செலவிடுவது பள்ளியிலும், கல்லுரியிலும், நண்பர்களிடத்திலும், சமூதாயத்திலும் தான், அவர்கள் சுற்றி திரிகின்ற என்ற இடம் ஒழுக்கமானதாகவும், சுத்தமாகவும் இருந்தால் மட்டுமே நல்ல பண்புகளை அவர்கள் கற்று கொள்ள முடியும்.. நடந்த இந்த நிகழ்வை போல் பல ஏராளமான கொடுமைகள் அங்கங்கு நடந்து கொண்டு இருக்கிறது.. (தெறி படத்தில் ராஜேந்திரன் விஜய்யிடம் கூறுவது தான் நினைவுக்கு வருகிறது)..

  இனிமேலும் இதுபோல காட்டுமிராண்டிதனமான சம்பவங்கள் நடைபெறாமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இந்த வழக்கிலும் விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று, குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.. எதிர்காலத்தில் தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருபவர்களுக்கு இந்த வழக்கின் தண்டனை ஒரு படமாக இருக்க வேண்டும்.. மனதிற்கு கனமான பதிவு.. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் பேசலாம் கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here