30 வருடங்களுக்கும் மேலாகச் சென்னை ஈரோடு ஏற்காடு விரைவு ரயிலில் பயணிக்கிறேன் ஆனால், இது போல ஒரு கூட்டத்தை என் அனுபவத்தில் கண்டதில்லை.
பண்டிகை காலங்களில் பகல் நேர முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களிலும் கூட்டம் இருக்கும் ஆனால், இரவு ரயில்களில் கழிவறை பக்கம் மட்டுமே 10 பேர் போல நிற்பார்கள்.
கடந்த புதன் (17 ஏப்ரல் 2019) அன்று இரவு ஏற்காடு விரைவு ரயிலில் உள்ளே நுழைந்த போதே வழியில் சில பெண்கள் அமர்ந்து இருந்தார்கள். நான் எப்போதுமே Upper Berth என்பதால், உள்ளே நுழைந்தவுடன் மேலே சென்று படுத்து விட்டேன்.
பின்னர் சிறிது சிறிதாகக் கூட்டம் அதிகமாகி ரயில் கிளம்பும் போது முன்பதிவு பயணிகள் (72) அல்லாது கூடுதலாக 200 பயணிகள் ஏறி விட்டார்கள். முன்பதிவு பயணி ஒருவர் திட்டிக்கொண்டே இருந்தார். அவருக்கும் இவர்களுக்கும் சண்டையாக இருந்தது.
காட்பாடி வந்ததும் இறங்கி விட வேண்டும் என்று TTR எச்சரித்தும் யாரும் நகரவில்லை. பின்னர் அப்படியே தான் பயணம் தொடர்ந்தது.
கழிவறை செல்ல நினைத்தால், ஒரு அடி கூட வைக்க முடியாது. வயதானவர்கள் நிலை பரிதாபம்.
இது போலச் சமயங்களில் யாரை குறை கூறுவது? நாம் இவர்கள் போல நிலையில் இருந்தால் என்ன செய்வோம்! விதிவிலக்கான நாளில், அனுசரித்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
வாக்காளர் பட்டியல்
தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது செய்திகளில் வந்தது ஆனால், தேர்தல் ஆணையம் 3 மாதங்களுக்கு முன்பே வாக்காளர் பெயர் பட்டியலை பரிசோதிக்க அறிவுறுத்தி இருந்தது.
இணையத்திலேயே 24 மணி நேரமும் பலர் இருக்கிறார்கள் ஆனால், தேர்தல் ஆணையம் தளத்தில் சென்று தங்களது பெயர் உள்ளதா என்று பார்ப்பதில்லை.
இதைச் சரிபார்க்க எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?
கோடிக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் தவறு இருக்கத்தான் செய்யும், அதைச் சரி செய்ய அவர்கள் அவகாசம் கொடுத்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளாதது யார் தவறு?
இணையம் பற்றித் தெரியாதவர்களுக்கு முகாம் நடத்துகிறார்கள், அதில் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம். அனைத்துக்கும் மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து நம்முடைய கடமையைச் சரிவரச் செய்தாலே, பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
மக்கள் நீதி மய்யம்
வாக்களித்த நாளில் குடும்பத்தினர், நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் இடையே பேசியதில், பலர் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களித்ததாகக் கூறினார்கள்.
வெகு சிலரல்ல, பலர் மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களித்துள்ளார்கள். சென்னை கோவை பகுதிகளில் ஆதரவு கூடுதலாக இருந்தது.
பலருக்கு அதிமுக திமுக க்கு வாக்களிக்க விருப்பமில்லை, இருப்பதில் அவர்களுக்கு இருந்த வாய்ப்பு “மக்கள் நீதி மய்யம்” மட்டுமே! எனவே, பலர் மக்கள் நீதி மய்யத்தைத் தேர்வு செய்துள்ளார்கள்.
தோராயமாக 5% கூட / குறைய வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெறலாம் என்று கருதுகிறேன்.
மேற்கூறியது அனைத்தும் நகர மக்களின் கருத்துகள் குறிப்பாக இளைய தலைமுறையினர், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களிடையே.
கிராம மற்றும் கீழ்த்தட்டு மக்களிடையே எந்த அளவுக்குத் தாக்கம் இருந்தது என்பது தெரியவில்லை. அவர்களிடம் விசாரிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.
தெரிந்தவர் ஒருவர் விவசாயச் சின்னம் என்று வாக்களித்து இருந்தார். பின்னர் அச்சின்னம் சீமானுடையது என்று தெரிய வந்து, கடுப்பாகி விட்டார்.
இச்சின்னத்துக்காகவே கிராமங்களில் வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் விழுந்து இருக்கலாம்.
நான் படித்த பள்ளியில், 12 ம் வகுப்பில் வாக்களித்தேன் 🙂 . மகிழ்ச்சி.
ரஜினி
மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களித்தவர்கள் பெரும்பான்மையோர் ரஜினி வந்தால், ரஜினிக்கு வாக்களிக்கப்போகிறவர்கள். மேலே நான் விசாரித்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களை வைத்துக் கூறியது இது, மற்றவர்கள் பற்றித் தெரியவில்லை.
என்னுடைய மூத்த அக்காவிடம் “தலைவர் வந்தால், நீ பிரச்சாரம் செய்யணும்” என்று கூறி இருந்தேன், “கண்டிப்பாகச் செய்கிறேன்” என்று உறுதி அளித்தார்.
என்னுடைய அக்கா முன்னாள் ஊராட்சி (சுயேட்சை) தலைவரின் மனைவி. எனவே, அவர் பகுதி மக்களிடையே தொடர்புகள் உள்ளது.
ரஜினி டிசம்பர் 31 2017 ல் ஆன்மீக அரசியல் என்று அறிவித்த போது, ஆன்மீகத்துக்குச் சமீபமாக அதிகரித்து வரும் ஆதரவு குறித்துக் கூறி, எதிர்காலத்தில் இவை ரஜினிக்குச் சாதகமாக அமையலாம் என்று கூறியிருந்தேன், பலர் சிரித்தார்கள்.
என் அக்கா வளர்ந்து வரும் ஆன்மீக ஆதரவை (கடவுள் நம்பிக்கையை) குறிப்பிட்டு, “இவை ரஜினிக்கு வாக்கு சேகரிக்கும் போது எளிதாக இருக்கலாம்” என்று கூறினார்.
கடவுளை வணங்குபவர்கள் அனைவரும் ரஜினிக்கு வாக்களிப்பார்கள் என்பதல்ல இதன் அர்த்தம் ஆனால், இதன் தொடர்புடைய கட்சிக்கு இது கூடுதல் பலம் என்பது நான் கூற வருவது.
என்னுடைய அம்மா தலைவரின் அதி தீவிர ரசிகை (நடிப்புக்கும், அவருடைய பொது வாழ்க்கைக்கும்). ரஜினியின் வருகைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.
“தம்பி! ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன், நம்ம சொந்தக்காரர்களிடையே நான் தான் ரஜினி கட்சிக்குக் கொள்கை பரப்பு செயலாளர்” என்று கூறினார் 🙂 .
ரஜினி அதிகாரப்பூர்வமாகக் கட்சியைத் துவங்கிய பிறகு அதனுடைய தாக்கம் எப்படி இருக்கும் என்று தற்போது கிண்டலடிப்பவர்களுக்குப் புரியும்.
மேற்கூறியவை அனைத்தும் உண்மை, மிகைப்படுத்தப்பட்டதல்ல. சொல்லப்போனால் என் அக்கா கூறிய சிலவற்றைத் தவிர்த்து இருக்கிறேன், சரியான சூழ்நிலை அமையும் போது கூறுகிறேன். அப்போது இன்னும் கூடுதல் நிகழ்வுகள் நடந்து இருக்கலாம்.
மழை
கோபி, கோவை பகுதிகளில் வெள்ளி சனிக்கிழமைகளில் இரவு மழை. அடுத்த நாள் வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
வியாழன், வெள்ளி வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் தான் வெளியவே செல்ல முடிகிறது.
டெய்ரி மில்க்
நான் சிறு வயதில் அனைத்துக்கும் சர்க்கரை போட்டே சாப்பிடுவேன். சாம்பார், தயிர் என்று அனைத்திலும் சர்க்கரை. கொஞ்சம் வளர்ந்த பிறகு என்ன காரணம் என்றே தெரியவில்லை, இனிப்பே பிடிக்கவில்லை, வெறுப்பாகி விட்டது.
ஜிலேபி, க்லோப் ஜாமூன் என்று எதுவுமே பிடிக்காது. இனிப்பில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, டெய்ரி மில்க் இந்த இரண்டு மட்டுமே பிடிக்கும்.
இந்த முறை நான் ஊருக்கு சென்று இருந்த போது அம்மா எனக்காக டெய்ரி மில்க் வாங்கி வைத்து இருந்தார்கள் 🙂 . அம்மா வயது 75+ என்னுடைய வயது 40+ ஆனால், இன்னமும் என்னைக் கல்லூரி படிக்கும் வயதில் இருப்பது போலவே தான் பார்க்கிறார்கள்.
“எப்பங்கம்மா வாங்கினீர்கள்?“என்றேன். “போன முறை வந்த போது உனக்கு எடுத்து வைத்து இருந்தேன் ஆனால், வினய் யுவன் (என்னுடைய பசங்க) சாப்பிட்டுட்டாங்க, அதனால், இந்த முறை உனக்குத் தனியாக எடுத்து வைத்தேன்” என்றார்.
அம்மாவின் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை.
இலந்தை வடை
கடந்த மூன்று வருடங்களாகச் சரியாக அமையாத இலந்தை வடை இந்த வருடம் அக்காவுக்குச் சரியாக அமைந்து விட்டது.
நல்லா இருக்குனு ஏகப்பட்டதைச் சாப்பிட்டு நாக்கெல்லாம் புண்ணாகி விட்டது. அப்படியும் திரும்பச் சாப்பிட்டு… உஸ்ஸ்ஸ்.. இலந்தை வடை ஒரு போதை மருந்து 🙂 .
என்னோட பையன் வினய் வேற எனக்குப் போட்டியாக உள்ளான். பிடிக்கலை என்று இருந்தவனைக் “கொஞ்சம் சாப்பிட்டு பாருடா” என்று சில வருடங்களுக்கு முன்பு கூறி அவனுக்குப் பிடித்து, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டேன்.
இந்த முறை ரொம்ப நல்லா இருக்கு.. இருவருக்கும் கொஞ்சம் சண்டையாகத் தான் இருக்கும் 🙂 .
Read: இலந்த வடை சாப்பிட்டு இருக்கீங்களா? 🙂
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பயணம் : இதுபோல தவிர்க்க முடியாத சூழ்நிலையை கோவையில் பணிபுரிந்த நாட்களில் அனுபவித்து இருக்கிறேன்.. அங்கு பணிபுரிந்த நாட்களில் ஒருமுறை கூட ரயிலில் பயணித்தது கிடையாது.. எல்லாநேரமும் பேருந்து பயணம் தான்.. விடுமுறை நாட்களில் இரவு நேர கூட்டம் நெரிசலான பேருந்து பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக, அதிகமாக பகல் நேர பயணத்தை மேற்கொண்டேன்.. அதிகாலை 5 / 6 மணி அளவில் கிளம்புவேன்.. வீடு போய் சேர 4 மணி ஆகிவிடும்.. ஒருநாள் விடுமுறையே போகி விடும்.. ஆனால் இந்த அதிகாலை பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதிகாலை சூரியன், சில்லென்று காற்று, பறவை ஒலிகள், புதிய இடங்கள், விதவிதமான மனிதர்கள் .. என பல சுவாரசியமான நிகழ்வுகளை காண முடியும்…
வாக்காளர் பட்டியல் : என்னுடைய பெயர் இருக்கிறது.. இதுவரை இரண்டு முறை மட்டுமே வாக்களித்துளேன்… வேண்டுமென்று தவற விட்டதில்லை..
மக்கள் நீதி மய்யம் : கமலின் அரசியல் நுழைவு எனக்கு விருப்பம் இல்லை, இருப்பினும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பலன் கிட்டியதை என்னும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.. வரும் காலங்களில் ஆதரவு இன்னும் கூட வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.. இந்த நிகழ்வை காணும் அடுத்த தலைமுறை நடிகர்களின் அரசியல் ஆர்வம் இன்னும் அதிகமாகலாம்.. காலம் பதில் சொல்லும்..
ரஜினி : இந்த பெயருக்குள்ளே காந்தம் இருப்பது உண்மை!!! ஆனால் அவரின் அரசியல் நுழைவு தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை.. அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தாலும் என் நிலைப்பாடு இதுதான்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
மழை : கடுமையான வெயிலின் தாக்கம் உள்ள இந்த நேரத்தில் இந்த மழை சற்று ஆறுதலாக இருக்கும்.. கோடை மழையை பல வருடங்களுக்கு முன்பு ரசித்தவன்.. அதன் பின்பு ரசிக்க வாய்ப்பு அமையவில்லை..
டெய்ரி மில்க் : இந்த நிகழ்வு கலக்கலாக இருக்கிறது.. அம்மாக்களுக்கு எப்போதும் நாம் குழந்தையே!!! இந்த பந்தம் என்றும் தொடர வேண்டும்.. (அம்மாவின் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை.. உண்மை கிரி..) சின்ன வயசுல நான் அதிகம் ஸ்வீட் விரும்பி சாப்பிடுவேன்.. தற்போது அதில் 80 % குறைந்து விட்டது..
இலந்தை வடை : இதுவரை நான் சாப்பிட்டது கிடையாது.. பள்ளி பருவத்தில் எலந்தம் பழம் ஊறுகாய் என்ற ஒன்றை விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன்.. பள்ளி பருவத்தில் சாப்பிட்ட பொருட்களை தற்போது எப்போதாவது நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.. அது ஒரு வசந்த காலம்.. மீண்டும் வராது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
எனக்கு இரவு நேர ரயில் பயணம் மட்டுமே பிடிக்கும். பகல் நேர பயணம் என்றால், குளிர்சாதன வசதியாக இருக்க வேண்டும்.
யாசின் இலந்தை பழம் ஊறுகாய் அல்ல.. அது தான் இலந்தை வடை என்று நினைக்கிறேன். பாக்கெட்டுகளில் போட்டு விற்பனை செய்வார்கள்.
நீங்கள் ஊறுகாய் என்று நினைத்து இருக்கலாம் 🙂
“தம்பி! ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன், நம்ம சொந்தக்காரர்களிடையே நான் தான் ரஜினி கட்சிக்குக் கொள்கை பரப்பு செயலாளர்” என்று கூறினார் ? . ———–பால் பொங்கும் பச்சை தண்ணி பொங்குமா ?