பயணக் குறிப்புகள் [04-04-2013]

14
பயணக் குறிப்புகள் [04-04-2013]

னிப்பட்ட காரணங்களுக்காக 4 நாட்கள் ஊருக்குச் சென்று வந்தேன். இந்த முறை ஒரு நாள் தான் விடுமுறை எடுத்தேன் [வெள்ளி பொது விடுமுறை] என்பதால் நேராக கோவை சென்று விட்டேன்.

மறு சீரமைக்கப்பட்ட கோவை விமான நிலையம் செமையாக இருக்கிறது.

செக் இன் செய்யும் இடத்தில் மட்டும் அறிவிப்பு செய்தால் எதிரொலிக்கிறது, இதனால் புரிய கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

மற்றபடி விமான நிலையம் பக்காவாக இருக்கிறது.

நான் சிங்கப்பூர் போனதில் இருந்து [2007] சென்னை விமான நிலையம் கட்டுகிறார்கள் கட்டுகிறார்கள் இன்னும் கட்டுகிறார்கள்.

உலகத்திலேயே ஆறு வருடங்களாக கட்டப்படும் ஒரே விமான நிலையம் சென்னை விமான நிலையமாகத் தான் இருக்கும்.

நான் மொத்தமாக ஊருக்கு வருவதற்குள் கட்டினால், ஓரிரு முறை வந்த சென்ற சந்தோசத்தைப் பெறுவேன். ஆமை வேகம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அதற்கு இதை உதாரணமாகக் கூறலாம்.

ஆமை கிளம்பி இருந்தால் கூட இந்நேரம் சிங்கப்பூருக்கு மூன்று முறை ரிடர்ன் ட்ரிப் அடித்து இருக்கும் 🙂 .

வெயில்

ம்ம ஊரில் அடிக்குற வெயிலில், அடுப்பின் அருகே இருப்பதைப் போல உணர்வைத் தருகிறது.

யப்பா! நான் சென்னையில் ஃபீல்ட் வேலையிலிருந்து, ஒரே இடத்தில் பணி புரியும் வேலைக்குச் சேர்ந்த போது அப்பாடா! இனி வெயிலில் சுற்ற வேண்டாம் என்று நிம்மதியாக இருந்தது.

தற்போது இது போல வெயிலில் சுற்றிக்கொண்டு இருப்பவர்களை நினைத்தேன்..ஐயோ! நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறது.

இந்த மாதிரி சுற்றி உங்க வீட்டுக்கு வருகிறவர்களுக்கு ஜீஸ் கொடுத்து உபசரிங்க 🙂 குறிப்பா ஃபீல்ட் வேலையில் இருப்பவர்களுக்கு.

ஈரோடு

ரோடு போய் இருந்தேன்.. அங்கே ஏற்கனவே மரம் ஒன்றுமே இல்லை.. இதுல வெய்யில் வேற சும்மா பின்னி எடுக்குது. எங்கும் ஒதுங்கக் கூட இடமில்லை.

எதைத் தொட்டாலும் சுடுகிறது. எங்கேயும் கையை வைக்கவே முடியலை.

இவ்வளவுக்கும் இன்னும் வெயில் ஆரம்பிக்கவே இல்லை.. அவ்வ்வ்வ்வ்.

சிங்கப்பூர் கூட நம்ம ஊர் போல க்ளைமேட் தான் ஆனால் அங்கு மரங்கள் அதிகம் இருப்பதால் இவ்வளவு அனல் இல்லை, ஒதுங்கவும் இடம் உள்ளது.

மழையும் பெய்யாததால் எங்கும் கேட்டாலும் தண்ணீர் இல்லை என்ற பேச்சு தான்.

நம்மவங்க போர் போட்டுட்டே இருக்காங்க.. இப்படியே தோண்டிட்டே சென்றால் ஒரு கட்டத்தில் வேறு மொழியில் பேசுபவர்கள் சத்தம் கேட்கும்…

யோவ் யாருயா நீங்க! என்றால்.. அதுக்கு அவங்க.. அடேய்! தமிழ்நாட்டுல தண்ணீர் இல்லை என்று தோண்டிட்டு பூமியோட அடுத்த பக்கமே வந்துட்டீங்களா! என்று சொல்வாங்க என்று நினைக்கிறேன் 🙂 .

தொலைக்காட்சி

ழக்கம் போலத் தொலைக்காட்சி பார்க்கப் பொறுமையில்லை.

ஞாயிறு, தலைவர் தில்லு முல்லு “K” தொலைக்காட்சியில் போட்டான் என்று பார்த்தேன்.

விளம்பரம் போட்டான் போட்டான் போட்டுட்டே இருக்கான்.. போங்கடா! நீங்களும் உங்க படமும் என்று அதையும் பார்க்கல.

இவர்கள் போடும் கட்டுக்கடங்காத விளம்பரங்களைத் தடுக்க சட்டம் வரப்போகிறதாம். ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடம் மட்டும் விளம்பரம் போடலாமாம்.

இதையும் எப்படியும் சரிக்கட்டி ஒன்றுக்கும் இல்லாத சட்டம் ஆக்கி விடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா.. எத்தனை பார்த்து இருக்கோம் 🙂 .

வினய்

ருக்குப் போனதும் வினய், அப்பா! எனக்கு த்ரீ டேஸ் லீவ் என்று நான்கு விரலைக் காட்டினான். டேய்! என்னடா நான்கு விரலைக் காட்டுறே என்றால்.. டபக்குனு ஒரு விரலை மடிக்கறான்.

அப்பா! நீங்க இனிமே சிக்ஸ் டேஸ் லீவ் னா தான் வரணும், 4 டேஸ் க்கு எல்லாம் வரக்கூடாது என்று ரொம்ப சீரியசாக கூறிக்கொண்டு இருந்தான்.

விடுமுறை என்பதால் வெயிலில் ஆடிட்டு இருக்கான்.. முகம் எல்லாம் வேர்த்து ஊற்றுகிறது அப்பவும் சளைக்காமல் விளையாடுகிறான். ஸ்ஸ்ஸ்ஸப்பா.

டேய்! இப்படியே விளையாடிட்டு இருந்தே.. கரிமேடு கருவாயன் மாதிரி ஆகிடுவே என்றால்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் னு முக்குறான்.

சின்னவன் யுவன், வினய் (சின்ன குழந்தையாக இருந்த போது) அளவிற்கு குறும்பு இல்லை..யார் வேண்டும் என்றாலும் வைத்துக்கலாம். அழ மாட்டான்.

வினய், தங்கச்சி பாப்பா தான் வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தான்.. தம்பி ஆனதால் அவனுக்கு ஏமாற்றம்.

மனைவியின் அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.. பார்க்கச் சென்ற போது, வினய்! நம்ம தம்பிய கொடுத்துட்டு இந்தப் பாப்பாவ எடுத்துட்டு போய்டலாமா என்றால்… அதெல்லாம் முடியாது, தம்பியே இருக்கட்டும் என்று கூறுகிறான் 🙂 .

சிங்கப்பூர் டிக்கெட்

“அப்பா! சிங்கப்பூர் வர டிக்கெட் கொடுங்க” என்று கேட்டான்.. என்னடா பண்ணுறது என்று.. சிங்கப்பூர் ரெக்ஸ் சினிமா டிக்கெட் இருந்தது, எடுத்துக் கொடுத்துட்டேன் [நம்ம பாக்கெட்ல வேற என்ன இருக்கும்].

ஊருக்குக் கிளம்பும் போது நானும் வரேன் என்று காரில் ஏறிக்கொண்டான்.. திடீர்னு இறங்கி.. “இருங்க… நான் டிக்கெட் எடுத்துட்டு வரேன்” என்று போய் நான் கொடுத்ததை!! எடுத்து வந்தான்.

சரி வாடா! என்று அவனையும் கோவை காரில் அழைத்துச் சென்றேன். வழியெல்லாம் கேட்டுட்டே வந்தான்.

வழியில் நான் கொடுத்த டிக்கெட்டை இருட்டில் எங்கேயோ போட்டுட்டான்.. “அப்பா! டிக்கெட் எங்கேயோ விழுந்துருச்சு… என்னை ப்ளைட் ல ஏற்றிப்பாங்களா”…என்று கேட்டு நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து “மாட்டாங்களா!” என்று பாவமாகக் கேட்க எனக்கு தர்மசங்கடம் ஆகி விட்டது.

சரி என்று பர்சில் இருந்த ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தேன். பத்திரமாக கையில் பிடித்துட்டு வந்தான். விமான நிலையம் வந்து என்ன கூறுவது என்று சங்கடமாக இருந்தது.

நாங்கள் வரும் போதே கொஞ்சம் நேரமாகி விட்டது அதனால் சென்றவுடனே அறிவிப்பு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் அவனிடம் அடுத்த முறை அழைத்துச் செல்கிறேன் என்று சமாதானப்படுத்தியும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன், அழ ஆரம்பித்து விட்டான்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடன் வந்த என் அப்பாவும் குடும்ப நண்பரும் சமாதானப்படுத்தியும் அழுகை நிற்கவில்லை.

சிறு வயதில் இருந்தே வெளியில் தான் இருந்தேன் என்பதால்…பிரிவு என்பது எனக்குப் பழகி விட்டது.

அதனால் விட்டுச் செல்வது என்பது வருத்தமாக இருந்தாலும் ரொம்ப பாதிக்காது.

இவன் அழுததும், வேறு யாரையோ அனுப்ப வந்து இருந்தவர்கள் ஏன்? யார்? என்று கேட்டு விசாரித்து அவனைப் பரிதாபமாகப் பார்க்க, எனக்கு கஷ்டமாகப் போய் விட்டது.

இனி இருந்தால் கலங்கி விடுவேன் என்பதால் வேகமாக உள்ளே சென்று விட்டேன்.

ஐஸ்கிரீம்

ரோடு சென்று இருந்த போது அங்கே இருந்த பேக்கரியில் வினய் ஐஸ்கிரீம் கேட்டான் என்று வாங்கிக்கொடுத்தேன்.

இவன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது உள்ளே இருந்து ஒருத்தர் ஐஸ் (வெறும்) கிரீமை ஒரு டப்பாவில் வைத்து எடுத்து வந்து ப்ரீசரில் வைத்தார்.

அந்த டப்பாவில் இருந்த அழுக்கை பார்த்தவுடன் வயிற்றைப் புரட்டி விட்டது.

உணவு விடுதியில் சமையலறையைப் பார்த்தால் சாப்பிட முடியாது என்று கூறுவார்கள் அது போலத் தான் இதுவும் போல… உவ்வே! உள்ளே போய் பார்த்து இருந்தால்…. ஐயையோ!

கோவையில் ஒருநாள் இரவு தங்கி இருந்தேன். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்சாரம் போய் வந்தது…அது கூட பரவாயில்லை.. கொசுத்தொல்லை தான் தாங்க முடியலை.

மின்சாரம்

நிஜ கொசுவைச் சொல்கிறேன் மின்சாரத்தை அல்ல 🙂 .

எங்க கோபி இதுக்கு 100 மடங்கு பரவாயில்ல. காலையில் 6 – 9 அப்புறம் இரவு 7-8 அப்புறம் 10-11 போகிறது.

மின்சாரம் சென்றதும் உடனே அனைத்து வீடுகளிலும் UPS உதவியுடன் மின்சாரம்.

கன்னித்தீவு கதை மாதிரி தமிழகத்தின் மின்சாரக் கதையும் சென்று கொண்டு இருக்கிறது.

அநேகமாக நம்ம 15 நாள் நாராயணசாமி இடத்தை நத்தம் விஸ்வநாதன் பிடித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

இதோ இதோ என்று இரண்டு வருடத்தை ஓட்டி விட்டார்கள்…! “ஜெ” என்னதான் பண்ணுறாங்க?

ஆறுவழி பாதை

கோவையில் இருந்து ஆறுவழி பாதை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் முடித்து விடுவார்கள் என்று கூறினார்கள்.

உண்மையா என்று தெரியவில்லை. பாலம் கட்டிக்கொண்டு இருப்பதால்.. இடது, வலது, நேர் என்று மாறி மாறிச் செல்கிறார்கள்.

எனக்கு பாதையே குழம்பி விட்டது. தினமும் இந்த வழியே வண்டி ஓட்டுபவர்களால் மட்டும் தான் குழப்பம் இல்லாமல் செல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

இல்லை என்றால் ஏதாவது வண்டி பின்னாடியே போய்ட வேண்டியது தான்.

அவன் நம்ம மாதிரி இருந்து விடக்கூடாது என்பது முக்கியம் 🙂 .

ஆறு வழிப்பாதை ஆகி விட்டால் வெகு விரைவில் சென்று விட முடியும்.

இந்தச் சாலை போடத்துவங்கியபோது தான் கோவை நகரத்திலும் சாலை விரிவாக்கம் செய்தார்கள். மரத்தை வெட்டி நகரமே மொட்டையாகி விட்டது.

கோவை என்றால் மரங்கள் தான் நினைவிற்கு வரும்… தற்போது மொட்டை வெயில் தான் நினைவிற்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு சில இடங்கள் மட்டும் தப்பித்து விட்டன.

கோபி

ங்கும் வெயில், வறட்சி இருந்தாலும் இன்னும் கோபி பகுதியில் ஓரளவு பசுமையாகத் தான் இருக்கிறது. குறிப்பாக சத்தியில் இருந்து கோபி வரும் வழியில்.

இதைப் பார்த்து அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாகத் தான் இருந்தது 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

 1. கோவை என்றால் மரங்கள் தான் நினைவிற்கு வரும்… தற்போது மொட்டை வெயில் தான் நினைவிற்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு சில இடங்கள் மட்டும் தப்பித்து விட்டன.

  எந்த இடங்கள் தப்பித்தன ..!?/

 2. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் 14 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு… அடுத்த மாதம் இன்னும் அதிகமாகலாம்… (போனஸ் : + வெயில்)

  UPS நல்ல விற்பனை… அதை விட ரிப்பேர் சரி செய்பவர்களுக்கு நல்ல வருமானம்…!

  யுவன், வினய் – இருவரின் குறும்புகளுக்கு வாழ்த்துக்கள்…

 3. இவ்வளவு உன்னையா புலம்ப வச்சிட்டாய்கலே மச்சி…

 4. ஆஹா பொண்ணுக்கு அடுத்த வரத்தில இருந்து Summer லீவ் வருது (பெங்களூர்), ஒரு வாரம் லீவ் போட்டுடு ஊருக்கு (ஈரோடு) போலாம்னு இருந்தேன். பேசாம வீட்ல மட்டும் அனுப்சுவிட்ரலாமனு இப்போ யோசிக்கிறேன்.

 5. // என் மனைவியின் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.. பார்க்க சென்ற போது, வினய்! நம்ம தம்பிய கொடுத்துட்டு இந்த பாப்பாவ எடுத்துட்டு போய்டலாமா என்றால்… அதெல்லாம் முடியாது, தம்பியே இருக்கட்டும் என்று கூறுகிறான்//

  மாமா பொண்ணாச்சே வினய் ஏதாவது எதிர்காலத்திட்டத்தோடதான் சொல்லியிருப்பான். 🙂

 6. கிரி,
  பயணமென்பதே பிரிவும் அதன் தாக்கமும் அதைத் தாங்கும் திறனுக்ககுமான போட்டியே.
  கள்ளிக்காட்டு இதிகாசத்தில் திரு. வைரமுத்துவின் வரிகளில் படித்த நினைவு, மனிதனின் பயணம் காரணமான பிரிவுகளில் மிகவும் கடினமானது மண்ணைப்பிரிவதே என்பார். அதாவது குடும்பத்தோடு இடம் பெயரும் போதே அவ்வாறு என்பார். அவ்வாறு இருக்கையில் தங்களின் மனநிலை உணரமுடிகிறது.

  பசுமை பற்றிய தங்களின் ஏக்கம் சரியே. திரு. ஜாக்கி வாசுதேவ் அவர்கள் அமைப்பினர் ஒரு கோடி மரம் நடப்போவதாக படித்தேன். நடந்தால் நன்று.

  என்னைக்கேட்டால் இந்த அண்டை மாநிலங்களுடன் சண்டை போட வழக்கு வாய்தாவிற்கு செலவு செய்யும் தொகையினை தமிழகத்திலிருக்கும் மலைகளில் மரம் நட செலவு செய்திருந்தால் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்கும் என்று தோன்றுகிறது.

  இப்போதெல்லாம் நல்ல இடங்களைப்பற்றியும் பசுமை இன்னும் இருக்கும் இடங்களைப்பற்றியும் விளம்பரப்படுத்த – ஆதங்கமாகவேனும் – பயமாக உள்ளது. கண் பட்டு அந்த இடமும் சிறிது காலத்தில் பாழ்பட்டு விடுமோ என.

 7. கிரி தல
  நெஜமாவே கலங்கிட்டேன் வினய் portion ல
  ரொம்ப அழகான பகிர்வு

  – அருண்

 8. வினய் டீச்சரா பத்தி எதுவும் இல்லை எங்களுக்கெல்லாம் ஏமாற்றம்

 9. //இனி இருந்தால் கலங்கி விடுவேன் என்பதால் வேகமாக உள்ளே சென்று விட்டேன்//வினய், யுவன் பத்தியை படிக்கும் போது சற்று வலித்தது.

 10. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ராஜேஸ்வரி RS புரம் போன்ற இடங்கள்.

  @தனபாலன்.. குறும்புக்கு வாழ்த்துக்களா! உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா 🙂

  @காத்தவராயன்.. 🙂 நீங்க சொன்ன மாதிரி இருக்க வாய்ப்பு உள்ளது 😉

  @iK Way ஜாக்கி வாசுதேவ் பற்றி எனக்கு திட்ட தான் விஷயம் உள்ளது 🙂 அவர் பசுமையை அதிகரிக்கிறாரா இல்ல சும்மா வெட்டி பந்தா பண்ணுறாரா! என்று தெரியவில்லை.

  அரசாங்கம் மட்டுமே பசுமையில் பெரியளவில் மாற்றம் கொண்டு வர முடியும். இதை அவர்கள் உணரவே மாட்டார்கள் என்பது தான் சோகம்.

  @கமலக்கண்ணன் நீங்க தான் போன முறையே கூறினீங்க என்று சொன்னீங்க.. அதனால இந்த முறை கூறலை 😉

 11. ஹாய் கிரி எப்டி இருக்கீங்க? வினய், யுவன் வெரி cute …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here