பரதேசியும் எரியும் பனிக்காடும்

9
பரதேசியும் எரியும் பனிக்காடும்

பாலாவின் “பரதேசி” படம் குறித்து பல்வேறு விமர்சனங்களைப் படித்து இருப்பீர்கள்.

சிலர் உலகப்படம் என்றும் சிலர் சுமாரான படம் என்றும் தங்களின் ரசனைக்கு ஏற்பவும் பாலா படம் என்பதாலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். Image Credit

விகடன் உட்பட பெரும்பான்மையானவர்கள் இதை மிகவும் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். பரதேசியும் எரியும் பனிக்காடும் ஒப்பீடு குறித்து பார்ப்போம்.

பரதேசியும் எரியும் பனிக்காடும்

இப்படத்தின் மூலக்கதையான “எரியும் பனிக்காடு” புத்தகத்தைப் பாலா படம் எடுக்கிறார் என்பதற்காகவே வாங்கிப் படித்தேன்.

உங்களில் ஒரு சிலர்… சரி! இரண்டு பேராவது எரியும் பனிக்காடு பற்றி நான் எழுதியதால் “பரதேசி” விமர்சனம் எழுதுவேன் என்று நினைத்து இருக்கலாம்.

இது பட விமர்சனம் அல்ல. அந்த அருமையான புத்தகத்தைச் சொதப்பிய பாலாவைப் பற்றிய விமர்சனம். புத்தகத்தின் வலிமையில் பாதி கூட படமில்லை.

படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் அழுத்தங்கள் இல்லை.

வறட்சி

இந்தப்புத்தகத்தில் மிகவும் வறட்சியாக, ஒருவேளை சாப்பிடக்கூட வழி இல்லாத மக்களாகத் தான் துவக்கத்தில் வருவார்கள்.

இதன் காரணமாகவே என்ன வேலை கிடைத்தாலும் செல்லத் தயாராக இருப்பார்கள்.

பரதேசியில் அப்படியா இருக்கிறது? நெல்லு சோறுக்காக எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்ற அளவிலே இருக்கிறது.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தாக்கத்தை யார் மனதிலும் ஏற்படுத்தி இருக்காது. இது மாதிரி நிறைய இருக்கிறது. கூறவே சலிப்பாக இருக்கிறது.

பி.எச்.டேனியல்

நான் இதை எழுத நினைத்ததற்கு முக்கியக் காரணம்..

தேயிலை தோட்டங்களில் இறந்த, வேதனையை அனுபவித்த, வெள்ளைக்காரர்களின் கொடுமையை அனுபவித்த அப்பாவி மக்களின் கஷ்டம் வெளியுலகிற்கு தெரியாமலே போய் விடக் கூடாது என்று அவர்கள் அனுபவித்த கொடுமைகளை அங்கு பணி புரிந்த மருத்துவர் பி.எச்.டேனியல் “Red Tea” என்ற புத்தகமாகக் கொண்டு வந்தார்.

முருகவேள்

இதைத் தமிழில் “எரியும் பனிக்காடு” என்று முருகவேள் என்பவர் மொழி பெயர்த்தார்.

இப்படிப் பட்ட ஒருவரை கிறித்துவ மதமாற்றம் செய்பவராகக் காட்டி, அவரைக் காமெடி பீஸ் போல ஆடவிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

இந்த மருத்துவர் இல்லை என்றால், “பரதேசி” படமே இல்லை.

மக்களின் எந்தக் கஷ்டமும் இந்தப் படத்தில் வர வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இவரை உயர்த்தி கூறவில்லை என்றாலும்  கேவலப்படுத்தி இருக்க வேண்டாம்.

மருத்துவருடைய மகள் இதைப் பார்த்தால், எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்தாலே கஷ்டமாக உள்ளது.

இந்தப்படத்திற்கு முருகவேள் அவர்கள் தான் மருத்துவர் மகளிடம் பேசி அனுமதி வாங்கிக்கொடுத்தாராம்.

அவருக்குத் தற்போது எப்படி இருக்கும்? அவரும் புலம்பி எழுதி இருக்கிறார்.

மத மாற்றம்

பலரின் நிலையை உலகிற்கு உணர்த்திய, சங்கம் அமைத்து அவர்கள் கஷ்டம் போக்க உதவிய ஒருவரை கேவலப்படுத்தி காட்சி அமைத்தால் என்னவென்று கூறுவது?

எந்த ஒரு மதத்திற்கும் கிண்டலாக / குற்றச்சாட்டாக ஒரு பொது அடையாளம் உள்ளது போல், கிறித்துவ மதத்திற்கு மத மாற்றம் அதிகம் செய்பவர்கள் என்ற பொதுப்படையான பேச்சு உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.

தினகரன் கோஷ்டிகள் ஏசு வருகிறார், அழைக்கிறார் என்று இதே வேலையாகப் பிரச்சாரம் செய்து கடுப்படித்துக்கொண்டு இருப்பதை அனைவரும் அறிவர்.

Eriyum Panikadu

இதைத் தான் பாலா எடுத்ததாக நினைக்கலாம் ஆனால், இதைக் கூற இந்தப்படம் / இக்கதாப்பாத்திரம் பொருத்தமானது அல்ல.

விமர்சனங்கள்

நான் கடவுள்” படத்தில் ஒரு பெரியவர், இந்துக் கடவுளை “தேவடியா பய” என்று திட்டுவார்.

உண்மையில் அந்தக் காட்சி எனக்கு எந்த விதத்திலும் தவறாகத் தோன்றவில்லை காரணம், அங்கு நிலவிய சூழ்நிலை அப்படி!

அது போல ஒரு சூழ்நிலை இந்தப்படத்தில் வரவேண்டிய அவசியமில்லை.

அப்படியே வர வேண்டி இருந்தாலும் அது இந்த மருத்துவர் கதாப்பாத்திரத்தைக் குறிப்பிட்டு வரவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

வேறு ஏதாவது கதாப்பாத்திரத்தை இது போலக் காட்டி இருந்தால் சரி! நடப்பதைத் தானே காட்டி இருக்கிறார் என்று நினைத்து இருக்கலாம்.

புத்தகத்தையும் சொதப்பி எழுதிய அவரையும் தவறாகக் காட்டி, பாலா செய்து இருப்பது மிகவும் தவறான செயல்.

இந்தப்புத்தகத்தை படிக்காமல் படம் பார்த்தவர்கள் மட்டுமே படத்தைப் புகழ முடியும்! படித்தவர்கள் நிச்சயம் கடுப்பு தான் ஆகி இருப்பார்கள்.

ஏங்க! நாங்க தான் புத்தகமே படிக்கலையே, எங்களுக்குப் படத்தில் தவறாக ஒன்றும் தோன்றவில்லை” என்று மற்றவர்கள் கூறினால் அதில் ஒரு நியாயம் உள்ளது,

ஆனால், அனைத்தும் தெரிந்த “பாலா” இது போல எடுத்து இருப்பது நியாயமில்லை.

தாக்கமில்லை

படத்தில் பலர் அழுகிறார்கள், அடிபடுகிறார்கள் ஆனால், நம் மனதில் அதன் தாக்கமே இல்லை. “பாவம்” என்கிற அளவில் உள்ளது அவ்வளவே.

கதாப்பாத்திரத்தோடு ஒன்ற வேண்டிய நாம், வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பது போல உள்ளது.

படம் சொதப்பியதைப் பற்றி வருத்தமில்லை ஆனால், புத்தகம் எழுதியவரையே சொதப்பி விட்டாரே பாலா! என்று நினைக்கும் போது தான் வருத்தமாக உள்ளது.

“எரியும் பனிக்காடு” புத்தகம் வாங்கிப் படித்துப் பாருங்கள். அந்தப் புத்தகத்திற்கும் இப்படத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

பாலா ரசிகன் என்பதால் அவர் செய்யும் அனைத்தையும் சரி என்று கூறி வாதாடும் வேலையை என்னால் நிச்சயம் செய்ய முடியாது.

தவறாக நினைத்தால் நினைத்துக்குங்க.. அதைப் பற்றிக் கடுகளவும் கவலையில்லை.

Read: எரியும் பனிக்காடு – உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு

9 COMMENTS

  1. நீங்கள் சொல்வதை பார்க்கும் போது எரியும் பணிகாடு புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்து விட்டது படிக்கிறேன்

    உங்களில் ஒரு சிலர்… சரி! இரண்டு பேராவது எரியும் பனிக்காடு பற்றி நான் எழுதியதால் “பரதேசி” விமர்சனம் எழுதுவேன் என்று நினைத்து இருக்கலாம்.

    நானும் ஒருவன் ஹி….ஹி

    கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்த்தேன் டைம் பாஸ்

  2. எனக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை வந்து விட்டது. நம்ம சாம் ஆண்டர்சன் படமான “யாருக்கு யாரோ” படத்தை இந்த வாரம் பார்க்கலாம் என்று…

  3. இந்து கடவுளையும், பிராமணனையும் கிண்டலடிப்பது தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள படுவது வருத்தமே . கலச்சார சீர்கேடுகளில் இதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது . dmk , DK கட்சிகளுக்கு இது மிக பெரிய வெற்றி தான். எங்கள் ஊரில் , தெரு முனைகளில் நீங்கள் ஒப்புக்கொண்ட் விஷயம் தான் DK கட்சி எழுதி வைத்திருப்பார்கள் . யாருமே எதிர்க்காதது இன்னமும் எனக்கு ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் தான் உள்ளது.

  4. “பரதேசி” என் மனதில் என்ன இருந்ததோ அதையே பிரதிபலித்துள்ளீர்கள்.

    நான் நாவலை படிக்கவில்லை; ஆயினும் சிறு தாக்கத்தையோ வலியையோ இந்தப்படம் ஏற்படுத்தவில்லை.

    //மருத்துவருடைய மகள் இதைப் பார்த்தால், எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்தாலே கஷ்டமாக உள்ளது.//

    பாலாவுக்கு வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால் நேருக்கு நேர் அவரது மகளை இப்போது சந்திக்க வேண்டும் பேசக்கூடவேண்டாம் கண்களால் நேருக்கு நேர் அவரை பார்க்க முடியுமா?

    நான் பார்த்த பிரிண்டில் ரெட் டீக்கோ, எரியும் பனிக்காட்டிற்கோ எந்த நன்றியும் செலுத்தப்படவில்லை. மிகவும் ஈனத்தனமான செயல் இத்தகைய கலைஞர்கள் என்றுமே உருப்படமாட்டார்கள் ;

    வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்தவரை செருப்பால் அடித்து மரியாதை செய்தது போலத்தான் இருந்தது டேனியல் அவர்களை அவமானப்படுத்தியது. ஜெயமோகன், நாஞ்சில் நாடான் போன்றவர்களுடான பாலாவின் பழக்கம்தான் இதற்கு காரணம்.

    இந்த குமரி மாவட்ட எழுத்தாளர்களுக்கு கிருஸ்தவர்கள் என்றாலே ஆகாது; சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். நான் வாசித்த வரையில் இவர்கள் இருவர் எழுத்தில் “பிள்ளை” வாசம் தூக்கலாக இருக்கும். ஜெமோ எழுத்தில் “நாயர்” வாசம் இன்னும் தூக்கலாக இருக்கும்.

    பொதுவாக நாஞ்சில் நாடான் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; சதுரங்க குதிரைகள் நாவலை படிப்பதற்கு முன்பு வரை. இந்த நாவலில் ஒரே ஒரு வரியில் தன்னுடைய சுயஜாதி வெறியை மறைமுகமாக காட்டியிருப்பார் “நாகர்கோவில் என்றால் நாடார்கள்தானா பிள்ளைமார்களும் அங்கு இருக்கிறார்கள்” என்ற ரீதியில் வெடித்திருப்பார்.

    மலையாள நாயருக்கும் தமிழ் பிள்ளைக்கும் பிறந்த ஜெமோ என்ன என்னமோ கருத்து சொல்வார் புத்தகம் எழுதுவார். “முல்லப்பெரியார்” பிரச்சனையின் போது மட்டும் நடப்பது அனைத்தையும் அமைதியாக கவனிக்கிறேன் அவசரப்பட்டு கருத்து கூறக்கூடாது என்று மெளனமாகிவிடுவார்.

    // பரதேசியில் அப்படியா இருக்கிறது? நெல்லு சோறுக்காக எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்ற அளவிலே இருக்கிறது//

    விக்ரமாதித்யன் இறப்பை ஏன் மறைக்கிறார்கள்? கல்யாணம் நின்று போய்விடக்கூடாது என்பதற்காகவா? இல்லை என்றாவது கிடைக்கும் நெல்லுச் சோத்துக்காகவா? சரியான விளக்கம் இல்லை. அந்த கிராமத்தில் எல்லோரும் நன்றாக சாப்பிட்டு அவர்கள் அளவில் சந்தோஷமாக வாழ்வதாக காட்டியிருப்பது பெரிய சறுக்கல். வேதிகா பாத்திரம் உன்மையிலே எரிச்சல்.

    //கதாப்பாத்திரத்தோடு ஒன்ற வேண்டிய நாம், வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பது போல உள்ளது.//

    மிகச்சரி. படம் கிட்டத்தட்ட உயிர் இல்லாத உடல் போலவே இருக்கிறது. காரணம் அழுத்தமில்லாத திரைக்கதை சினிமாவுக்கென்று சில திரைமொழி உண்டு அது இங்கு மிஸ்ஸிங். இன்னொரு காரணம் இசை. நான் கடவுள் -பிதாமகனில் இருந்து சுட்டு பாலா விருப்பப்படி வாசித்துள்ளார் ஜி.வி அவர் என்ன செய்வார் பாவம்; இது போன்ற படங்கள் எல்லாம் அவருக்கு குருவி தலையில் பனங்காய் போலத்தான்.

    இளையராஜாவை ஏன் இந்த படத்திற்கு பாலா பயன்படுத்தவில்லை என்பது புரியாத புதிர்தான். அடிப்படையில் இளையராஜாவின் வாழ்க்கை இது போன்ற டீஎஸ்டேட், ஏலக்காய் எஸ்டேட் ஆகியவற்றுடன் தொடர்புடையதே…..[பால்நிலா பாதையில் படித்தது]
    இளையராஜாவின் தந்தை தேவிகுளம் – பீர்மேடு பகுதி எஸ்டேட்டில் “கங்கானியாக” இருந்தவர், பலதாரமணம், தவறான பாதையில் சென்றதால் சொத்துக்களை இழந்தவர்; இளையராஜாவும் அவரது சகோதரர்களும் அவரது தந்தையின் மூன்றாம் மனைவிக்கு பிறந்தவர்கள். அதனால் தந்தையை ராஜா என்றுமே முன்னிலைப்படுத்துவதில்லை. சொந்தக்காரர்களோடு ராஜா இந்த எஸ்டேட்டில் பள்ளி ஆண்டு இறுதி விடுமுறையின் போது வேலைக்கு செல்வதுண்டாம். [சுதந்திரத்திற்கு பின்பு கொடுமைகள் வெகுவாக குறைந்திருந்த நேரம்] பின்னர் சிலகாலம் கழித்து அதே எஸ்டேட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக மாதக்கனக்கில் தங்கி தேர்தல் பிரச்சாரம் என்று எஸ்டேட் வாழ்க்கையை கொஞ்சம் உணர்ந்தவர் இளையராஜா இவரை ஏன் பயன்படுத்தவில்லை ???

    // “நான் கடவுள்” படத்தில் ஒரு பெரியவர்//

    அந்த பெரியவர்தான் இந்த படத்தில் பெரியப்பாவக வருபவர்; கவிஞர் விக்ரமாதித்யன். தண்ணியடிச்சிட்டு ஆடும் சீனில் நிஜமாகவே குடிச்சிட்டு ஆடியிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். 🙂

    பாலா என்ற சிறு அத்யாயம் முடிவுக்கு வருகிறது . பாலா மீண்டு[ம்] வந்தால் ஆச்சர்யமே!

  5. கிரி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை..எரியும் பனிக்காடு எழுதியதால் பரதேசி விமர்சனத்தை நானும் உங்களிடம் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். படத்தில் என்னவோ எனக்குப் பிடித்தது ஓட்டுப் பொறுக்கியின் அம்மாவாக வருபவர்தான்..கிரி அப்புறம் கரட்டு மேடம் அருகில் உள்ள தேவனுர்புதுரில் தான் நான் பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன்.economics சார் செந்தில்வேல் தெரியுமா கிரி.அவர் எனக்கு பழக்கம்.scholorship accounts எல்லாம் எங்கள் வங்கியில் தான் ஆரம்பிப்பார்கள்..கிரி மிகவும் சந்தோசமாக இருந்தது நீங்கள் படித்த பள்ளிக்கூடத்தை நானும் பார்திருக்கிறேன் என்று…இப்பொழுதான் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழா கொண்டாடினார்கள் என்று நினைக்கிறென்..எரிசினம்பட்டி,ராவணாபுரம் ,வல்லகொண்டாபுரம் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் எனக்கு மிகவும் பழக்கம் கிரி..நீங்கள் அங்கு எல்லாம் சென்று இருக்கீர்களா?

  6. நமக்கு அழுவாச்சி படம்னாலே செரிபட்டு வராது, இதுல உங்க விமர்சனத்த படிச்சபின்னாடி இந்த படத்த பாக்கறத பத்தி யோசிக்கணும்.

  7. @சரவணன் கண்டிப்பா படிங்க.. ரொம்ப நல்லா இருக்கு.

    @ஆனந்த் நீங்கள் கூறுவது உண்மை தான். இது பற்றி சில வாரங்கள் முன்பு எழுதி இருந்தேன்.

    @காத்தவராயன் RedTea நன்றி போட்டாங்கன்னு நினைக்கிறேன். நீங்கள் கூறுவது போல இளையராஜா இல்லாதது படத்திற்கு பெரிய இழப்பு தான்.

    பாலா என்ன ஆவார் என்றே தெரியலையே!

    @காயத்ரிநாகா செந்தில்வேல் பற்றி நினைவில்லை.. இவர் மட்டுமல்ல ஐயா தவிர்த்து அனைவர் பெயரையும் மறந்து விட்டேன். நிர்மலா டீச்சர் பேரு மட்டும் நினைவு இருக்கு.. அவங்க அடிக்க மாட்டாங்க அதனால 🙂

    எரிசினம்பட்டி தளி ராவணாபுரம் எல்லாம் தெரியாம அங்கே படிக்கவே முடியாதே! 🙂 நல்லாத் தெரியும்.

    @கௌரிஷங்கர் உங்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here