சென்னை விமான நிலையம்

21
சென்னை விமான நிலையம் Chennai International Airport

சென்னை விமான நிலையம் குறித்த இக்கட்டுரை என் அனுபவம் மட்டுமே! மற்றவர்களுக்கு வேறு அனுபவங்கள் / மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.

எப்போதும் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தால், இரவு ரயிலில் சென்று விடுவேன்.

இந்த முறை விடுமுறை நாளின் எண்ணிக்கை குறைவு என்பதால் சென்னையிலிருந்து முதல் முறையாக உள்நாட்டு விமானத்தில் கோவை சென்றேன்.

இந்த முறை புதிய சென்னை விமான நிலையம் என்பதால் கொஞ்சம் ஆர்வமாக இருந்தேன். இது குறித்த என்னுடைய அனுபவங்கள் பின்வருமாறு. Image Credit

சென்னை விமான நிலையம்

சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையம் செல்ல நடந்து கொண்டு இருந்த போது ஒருவர் அங்கே பணி புரிபவர் என்று நினைக்கிறேன்] என்னிடம், “உள்நாட்டு விமான நிலையம் செல்கிறீர்களா?” என்றார்.

“ஆமாம்” என்றவுடன் விமானம் பெயரை கேட்டு விட்டு இன்னும் நேரம் இருக்கிறது, தங்க இடம் உள்ளது, புறப்படும் நேரத்தில் உங்களை கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என்றார் [கட்டணத்துடன் தான்].

இல்லை.. தேவையில்லை நன்றி என்றேன். அவர் மேலும் என்னை தொல்லை செய்யவில்லை.

ஓகே சார்! நீங்க இப்படியே நடந்து போனீங்க என்றால் வரும் அதில் இரண்டாவது தளத்தில் உள்ளது என்றார்.

உள்நாட்டு முனைமம்

நான் இதற்கு முன்பு புதிய உள்நாட்டு முனைமம் சென்றதில்லை என்பதால், இரண்டாவது தளத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே சென்றேன்.

வருகை இருந்தது புறப்பாடு இல்லை.. அப்படியே நடந்து கொண்டே சென்றேன் கடைசியே வந்து விட்டது. அங்கே இருந்தவரிடம் கேட்ட போது அங்கேயே தாங்க இருக்கு என்றார்.

திரும்ப வந்து பார்த்தால், புறப்பட லிப்ட்டில் சென்று இரண்டாவது தளத்தை அடைய வேண்டும் என்று இருந்தது.

நான் கவனிக்கவில்லை போல ஆனால், இதற்கு இன்னும் தெளிவான அறிவிப்புப் பலகை வைத்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.

லிப்ட்டில் சென்று காத்திருப்பு பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்கு விமானத்திற்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் இருந்தது [நள்ளிரவு].

அருகில் இருந்த ஒருவர் அந்தமான் செல்ல இருந்தார், அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.

உள்நாட்டு விமான நிலையம் நன்றாக இருந்தது ஆனால், குப்பையை துடைக்காமல் விட்டு இருந்தார்கள். டைல்ஸ் உடைந்து இருந்தது பார்க்க வெறுப்பாக இருந்தது.

இங்கே பெட்டியை தள்ளி செல்ல நுழைவு வாயில் அருகே தரை சீராக இல்லை.

இடையிடையே தடைகள் / கார்பெட் இருந்தது பெட்டியை இழுத்து செல்லும் போது தடுமாற வேண்டி இருந்தது.

ஒரு நேபாளி பெண் என்று நினைக்கிறேன், அவர் இழுத்து வந்த ட்ராலி சக்கரம் சரியாக வேலை செய்யாததால் அதை தள்ள கடுமையாக முயற்சித்து அதனுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்.

கேட்

சுங்க சோதனை முடிந்து உள்ளே சென்றால், இரு பிரிவாக கேட் இருந்தது. மேலே கேட் 16 – 17 மற்றும் கீழே சென்றால் H 13 – 14 என்று இருந்தது.

எதற்கு இப்படி வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரே பெயர் வரிசையிலேயே வைக்கலாமே! கேட் A 1, 2, 3 கேட் B 1,2,3 என்று. நான் வலது புறம் வந்ததால் H 13 க்கு கீழே செல்லும் பகுதியை கவனிக்கவில்லை.

பிறகு அங்கே சுற்றி வந்த பிறகு தான் கீழே [Escalator] செல்வதையே பார்த்தேன்.

ஊரிலிருந்து திரும்ப சென்னை வந்து வெளியே செல்ல உள்நாட்டு முனைமம் ரொம்ப எளிதாக இருக்கிறது. புறப்பாடை விட வருகை பகுதி நன்றாக உள்ளது.

கன்வேயர் பெல்ட் பகுதியும் நன்றாக உள்ளது.

கோவையில் இருந்து சென்னை வந்து வெளிநாட்டு முனைமம் நோக்கி நடக்க, வழியில் அதே நபர். “சார்! எந்த விமானம்? தங்கி விட்டு செல்கிறீர்களா?” என்று கேட்டார்.

வேண்டாம் என்று மறுக்க.. “நேரா புது விமான நிலையம் சென்று இரண்டாம் தளத்திற்கு போங்க” என்றார்.

இந்த முறை அவர் மீது எனக்கு மதிப்பு வந்தது. இரு முறையும் நான் கேட்காமலே அவரே விவரங்கள் கூறினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு சென்றேன்.

வெளிநாட்டு முனைமம்

வெளிநாட்டு முனைமத்தில் உள்நாட்டு முனைமம் வடிவமைப்பு போலவே உள்ளது. எந்த மாற்றமும் இல்லை. இங்கேயும் நான்கு மணி நேரம் இருக்க வேண்டி இருந்தது.

இதில் நான் கண்ட கடுப்புகளை கூறியே ஆக வேண்டும் என்பதாலையே இதை எழுதுகிறேன். மேலே கூறியது கூடுதல் தகவல் அவ்வளோ தான்.

அறிவிப்பு இல்லை

போர்டிங் பாஸ் போட எந்த விமானம் எந்த வரிசை என்று தெளிவான அறிவிப்பு இல்லை. நாமே தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதாக உள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு மட்டும் தகவல் பலகை இருந்தது. இது ஏர்லைன்ஸ் ஏற்பாடாக இருக்க வேண்டும்.

சுங்க சோதனை முடிந்து, உள்ளே சென்று நான் பார்த்த முதல் அறிவிப்பு தொலைக்காட்சியிலேயே “No Signal” என்று காட்ட செம்ம காண்டாகி விட்டது.

விமான நிலையம் என்பது வெளிநாட்டினரும் வரும் இடம். அவர்களுக்கு நம் மீது வரும் எண்ணம் விமான நிலையைத்திலேயே கடுப்புடன் துவங்கினால் எப்படி இருக்கும்?

அங்கே இருந்த 8 அறிவிப்பு தொலைக்காட்சிகளில் 3-4 வேலை செய்யவில்லை. இதுவே பரவாயில்லை என்கிற அளவில் ஒரு சம்பவம் நடந்தது.

தவறான நேரம்

காத்திருந்த போது அறிவிப்பு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்த போது கவனித்தேன், 23.59 க்கு பிறகு ரொம்ப நேரமாக நேரம் மாறவே இல்லை.

இதை நம்பி ஒருத்தன் அமர்ந்து இருந்தால், அவன் நிலை என்ன ஆவது! வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஏற்கனவே நேர மாற்ற குழப்பம் இருக்கும், நேரமே வேலை செய்யவில்லை என்றால் அவர் “நேரம் 7 1/2” ஆகத் தான் இருக்கும்.

நல்லவேளையாக 15 நிமிடத்தில் சரியாகி விட்டது. இடையில் ஒரு ஜப்பான்காரர் அவரது கடிகாரத்தையும் இதையையும் மாறி மாறி பார்த்து குழம்பிக் கொண்டு இருந்தார் 🙂 .

கடுங்குளிர்

நான் செல்ல வேண்டிய விமானம் கீழ் தளத்தில் [H 13] இருந்ததால், கீழே சென்றேன். ஐந்து நிமிடம் சென்று இருக்கும் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

சர்வர் அறையில் வைத்து பராமரிக்க வேண்டிய குளிரை பயணிகள் பகுதியில் வைத்து இருக்கிறார்கள்.

எப்படியும் 17*C இருக்கும். கண்ணாடிகளில் நீர் வழிந்து கொண்டு இருந்தது. கை எல்லாம் சில்லிட்டு விட்டது. பொறுக்க முடியாமல் திரும்ப மேலே வந்து அமர்ந்து கொண்டேன்.

இங்கு கூட்டம் இருந்ததால், குளிர் குறைவாக இருந்தது. Temperature Control என்ற ஒன்று இவர்களுக்கு நினைவு இருக்கிறதா! என்பதே சந்தேகமாக இருக்கிறது.

அப்படியே ஒரு ரவுண்டு வருவோம் என்று கிளம்பினேன். குழந்தைகள் விளையாடும் இடம் என்று இருந்தது.

அறை மட்டுமே இருந்தது உள்ளே பொருட்கள் எதுவுமில்லை!! குழந்தைகள் காற்றோடு விளையாடுவார்கள் போல உள்ளது.

குழாய் தரம்

தண்ணீர் குடிக்கும் இடத்தில் கீழ் பகுதி திறந்து மின்சார கேபிள்கள் தெரிந்து கொண்டு இருந்தன. வழியில் டைல்ஸ் பெயர்ந்து / திறந்து இருந்தது.

நேரமானதால் கீழே வந்து, கழிவறை சென்று வரலாம் என்று உள்ளே சென்று அங்கு இருந்த கை கழுவும் குழாயில் கை காட்ட, தண்ணீர் வரவில்லை [தானியங்கி குழாய்].

கையை அப்படி இப்படி செய்தும் வரவில்லை.

குழாயை தொட்டால், குழாயே ஆடிக்கொண்டு இருக்கிறது. பக்கத்து குழாய் சரியாக இருந்தது.

வெளியே இருந்த குடிநீர் குழாய் கீழ்ப் பகுதி மேல் தளத்தில் பார்த்தது போல திறந்த நிலையில் இருந்தது.

அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது இந்த விமான நிலையம் இன்னும் முழுமையான பயன்பாட்டிற்கு கூட வரவில்லை அதற்குள்ளே பயன்பாட்டிற்கு விடப்பட்ட பகுதியின் நிலை பரிதாப நிலையாக உள்ளது.

அறிவிப்பு தொலைக்காட்சியின் நிலைமை

கீழ் பகுதியில் ஒரே ஒரு அறிவிப்பு / தகவல் தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. அதில் வந்த ஒரே தகவல் “Page cannot be displayed”. செம்ம கடுப்பாகி விட்டது.

அந்த தொலைக்காட்சியின் கேபிள்கள் மறைத்து வைக்கப்படாமல் வெளியே தொங்கிக் கொண்டு இருந்தன. 

தாய்லாந்து / வியட்நாம் மக்கள் தங்களுக்குரிய கேட் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

குளிர் வேறு தாங்க முடியவில்லை.

அங்கே இருந்தவர்கள் அனைவரும் எப்போது கதவு திறப்பார்கள், வெளியே விமானத்திற்கு சென்று விடலாம் என்று அவஸ்தையாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அனைவருமே குளிர் தாங்க முடியாமல் நெளிந்து கொண்டு இருந்தார்கள்.

அந்தப் பக்கம் இருந்த ஒரு விமான சிப்பந்தி கண்ணாடியில் Is it cold? என்று எழுதிக் காட்டி கலாயித்துக் கொண்டு இருந்தார்.

இன்னும் கூற ஏகப்பட்டது இருக்கிறது ஆனால், இதே பெரியதாகி விட்டது. 7 வருடம் கூடி கட்டிய ஒரு விமான நிலையத்தின் லட்சணம் இது தான்.

விழுந்த கூரை

கடந்த வாரம் நான்காவது முறையாக மேற் கூரை விழுந்து விட்டது.

“புதுப்பேட்டை” படத்தில் தனுஷ் சொல்வாரே! “கழுத்து மேல தலை இருக்குதான்னு தொட்டு பார்த்துட்டே இருக்க முடியுமா”ன்னு! அது மாதிரி எப்போது கூரை தலை மீது விழும் என்று பயந்து கொண்டே இருக்க முடியுமா!!

இதை எல்லாம் பார்க்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைக்கும் போது.

Airport Authority

டெல்லி விமான நிலையம் தனியாரால் கட்டப்பட்டது [பெங்களூர் ஹைதராபாத் கூட தனியார் என்று நினைக்கிறேன்] சென்னை விமான நிலையம் “Airport Authority” யால் கட்டப்பட்டது.

எத்தனை ஊழல் நடந்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இது கட்டப்பட்டு இருந்தால், இப்படி ஒரு கேவலமான தரத்தில் / திட்டமிடலுடன் கட்டி இருக்க முடியும்.

நம்முடைய விமான நிலையம் தரமான விமான நிலையத்தோடு ஒப்பிடும் போது மிக மிக மோசமாக உள்ளது ஆனால், இதையே நம்ம அளவுக்கு ஓகே என்று கூறி மனதை தேற்றும் அளவில் தான் நாம் இருக்கிறோம். மேலே உள்ளது பழைய படம். Image Credit 

விமான நிலையத்தின் வடிவமைப்பு நன்றாக உள்ளது ஆனால், உள்ளே பரமாரிப்பும் / அறிவிப்புகளும் திருப்திகரமாக இல்லை.

கட்டிடம் கட்டியவர்கள் அனைவரும் திறமையானவர்கள் தான் ஆனால், அனைத்திற்கும் கமிசன் அடித்தால் அதற்கு தகுந்த தரத்தில் தான் அவர்களால் பொருட்களை வாங்க முடியும்.

எனவே, பிரச்சனை கட்டிடம் கட்டுபவர்களிடம் அல்ல இதற்கு பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் / அதிகாரிகள் தான்.

லஞ்சம் / கமிசன் கொடுத்தால் மட்டுமே ஆர்டர் கிடைக்கும்.

லஞ்சம்! ஊழல்!! கொள்ளை!!! எனக்கு வருகிற ஆத்திரத்தில் சாட்டை எடுத்து எல்லோரையும் வெளு வெளுன்னு வெளுத்துக்கட்ட வேண்டும் போல உள்ளது.

2300 கோடி

விமான நிலையத்தினுள் நுழைந்தால் ஒரு பயணிக்கு எந்த சந்தேகமும் / குழப்பமும் / அசவுகரியமும் வரக் கூடாது.

அப்படி இருக்கும் ஒரு விமான நிலையம் தான் ஒரு சிறப்பான விமான நிலையமாக இருக்க முடியும்.

நாம் இந்த நிலையை அடுத்த நூற்றாண்டிலாவது பெறுவோமா என்று தெரியவில்லை.

அனைவரும் கூடும் நம்ம ஊர் விமான நிலையம் / ரயில் நிலையம் போன்றவைகள் சிறப்பாக இருந்தால் தான் நமக்குப் பெருமை. மக்களுக்கும் பயன்.

ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்து கட்டப்பட்ட விமான நிலையம் நம்முடைய டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையம் போல கூட இல்லை என்றால் எப்படி?

பல நாட்டினரும் வந்து செல்லும் ஒரு பொது இடத்தை, முதன் முதலாக ஒரு வெளிநாட்டினர் வந்து இறங்கும் இடத்தை நம்மால் சிறப்பாக வைத்துக்கொள்ள / பராமரிக்க முடியவில்லை என்றால், கூற என்ன இருக்கிறது!

FIRST impression is the BEST impresesion. பல ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து, பல ஆண்டுகளை வீணடித்து, பயணிகளுக்கு இதனால் சிரமத்தை கொடுத்து கட்டப்பட்ட விமான நிலையம் எப்படி இருந்து இருக்க வேண்டும்?

ஒரு சாதாரண பயணிக்குத் தோன்றும் யோசனைகள் / பராமரிப்புக் குறைகள் / சந்தேகங்கள் / திருத்தங்கள் / நடைமுறை பிரச்சனைகள் கூடவா, இதற்காகவே படித்து மிகப்பெரிய செலவில் திட்டமிடும் நபர்களுக்குத் தெரியாது!

ரொம்ப வெறுப்பா இருக்கு.

இதில் ஒவ்வொருத்தரும் எவ்வளோ லட்சம், கோடி கொள்ளை அடித்து இருப்பார்கள்!! உள்நாட்டு முனைமம் பட்ஜெட் மட்டுமே 2300 கோடி.

பொறுப்பில் உள்ளவர்களின் அலட்சிய மனோபாவத்தை காணும் போது வரும் ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல.

“இந்தியன்” படத்துல மனோரமா மண்ணை தூற்றி சாபம் விடுவாங்களே… அதை விட அதிகம் மனதில் இயலாமை / கோபம் உள்ளது.

கடைசியாக, பின்வரும் படம் சிங்கப்பூரில் எப்போதோ திறக்கப்போகும் ரயில் பாதைக்காக தயாராக இருக்கும் ஒரு ரயில் நிறுத்தத்தின் நுழைவு வாயில்.

இதைப் பார்த்து வயித்தெரிச்சல் ஆவதை தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதில் என்னை ரொம்பக் கடுப்படித்தது பயணிகளே இன்னும் வராத இடத்தில் ஒரு குப்பைத் தொட்டியை வைத்து இருந்த இவங்க கடமை உணர்ச்சி தான்.

கொசுறு

கோவை விமான நிலையம் ரொம்ப நன்றாக உள்ளது. இங்கே சேவையும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இதுவரை 6 முறை இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளேன், பயன்படுத்தியவரை எந்த பெரிய குறையும் காணவில்லை.

சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

 1. சென்னை விமான நிலையம் பற்றிய தகவல் பகிர்வுகளுக்கு நன்றிகள்..

  எப்படியாவது சென்னை விமான நிலையத்தை தவிர்க்க முயற்சிக்கிறேன்..!

 2. ரசித்துப் படித்தேன்.

  நம் நாட்டில் உள்ள சில பிரச்சனைகள்….

  வங்கியில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும்.
  ஆனால் கர்நாடகா மற்றும் கேரள வங்கிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆங்கிலம் மற்றும் அவர்கள் தாய்மொழியிலேயே இருக்கும்.

  சென்னை முதல் எந்த பகுதிக்கு விமானம் வழியே சென்றாலும் ஹிந்தி பேசும் கிழவிகளிடம் தான் மாறடிக்க வேண்டும். அவர்களுக்கு மற்றொரு பெயர் விமான பணிப்பெண்கள்.

  மத்திய அரசுப் பணி என்றால் கட்டாயம் ஹிந்தி தான். சென்னையில் இருந்தாலும் இங்கே பத்தாண்டுகள் பணிபுரிந்தாலும் அவர்கள் வாயில் தமிழ் வராது.

  அடிப்படைக்காரணங்கள் இரண்டு.

  ஆதிக்க மனப்பான்மை மற்றொன்று இங்கிருப்பவர்களின் அளவு கடந்த சகிப்புத்தன்மை.

  நான் என்னுடைய வேலை என் முயற்சி என் வளர்ச்சி என் தனிப்பட்ட நலன் என்பது இங்கே தனி மனிதர்கள் முதல் இங்கேயிருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரைக்கும் கடந்த 25 ஆண்டுகளாக இருப்பதால் இது போன்ற வினோதமான அக்கறையற்ற நிர்வாகத்தை நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

  விமான சேவை என்பதை எத்தனை சதவிகிதம் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் உயர்ந்துள்ள பேரூந்து கட்டண சேவையின் காரணமாக இன்று பெரும்பாலான தமிழர்கள் ரயில் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் போடப்பட்ட திட்டங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதாக இருந்தாலும் அது இன்னமும் திட்ட மதிப்பீடு என்கிற ரீதியில் தான் உள்ளது.

  கேட்பதற்கும் ஆள் இல்லை. கேட்கும் இடத்திலும் இருப்பவர்களும் எவரும் கேட்க விரும்பவும் இல்லை.

  காரணம் ஒவ்வொரு அரசியல் வியாதிகளும் காலப்போக்கில் தொழில் அதிபர்களாக மாறி விட்டதால் அவர்களின் அரசியல் செல்வாக்கு என்பது அவர்களின் தொழிலை காப்பாற்றவே நேரம் சரியாக இருக்க எப்படி மக்கள் நலப்பணியில் கவனம் செலுத்த முடியும்.

  உங்களின் தனிப்பட்ட பார்வையில் இவ்வளவு சங்கடங்கள் தெரிகின்றதே அதைப் போல இதைப் பயன்படுத்தும் எந்த பத்திரிக்கை மக்களாவது இதற்கு முடிவு கட்டுவார்கள் என்றா நினைக்கின்றிர்கள்?

  அவரவர் நிர்ப்பந்தங்கள், அவரவர் அரசாங்க எதிர்பார்ப்புகள் எதையும் செய்ய விடாது. மொத்தத்தில் தனி மனிதர்கள் தனக்கு எனக்கு தேவை என்பதில் குறியாக இருப்பதால் எவரும் இது போன்ற பொது நலன் விசயத்தில் அக்கறை காட்ட விரும்புவதில்லை என்பது தான் எதார்த்தம்.

  இத்தனை முறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தும் இன்னமும் இங்கே ஒரு சினன குலுங்கல் கூட இல்லையே? மத்திய அரசு என்ன நினைக்கும்? வடிவேல் சொன்னது தான்?

  எம்பூட்டு அடிச்சாலும் இவன் தாங்றான்டா? ரொம்ப நல்லவன்டா? என்ற நினைப்பு தானே வரும்.

  தனக்கு ஒரு பாதிப்பு வருகின்ற வரைக்கும் இங்கே ஒவ்வொன்றும் வெறும் செய்திகளே.

 3. புது வீடுக்கு வாழ்த்துக்கள் கிரி

  6 படம் இன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்த்து விடுவேன்

 4. புது வீடு கட்டியதற்க்கு வாழ்த்துகள். உங்கள் வீட்டில் எல்லா வளமும் நலமும் பெருக இறைவனை பிராத்திக்கிறேன்.. 🙂

 5. வாழ்த்துக்கள் கிரி !! புதிய வீட்டில் எல்லா நலமும் வளமும் பெற்று வளமுடன் வாழ நல்வாழ்த்துக்கள் !!

  கோபி-யில் எந்த பகுதியில் வீடு அமைந்து உள்ளது.? கோபி இப்போது கொஞ்சம் பசுமை யா இருக்கபதாக கேள்விபட்டேன். மகிழ்ந்தேன் !!

 6. கிரி.. சொந்த வீடு என்பது ஒவ்வொவ்ரு நடுத்தர குடிமக்களின் கனவு.. அதை கட்டி முடித்து உள்ளே செல்லும் போது தான் அதன் வலியையும், மகிழ்ச்சியையும் உணர முடியும்.. வாழ்த்துக்கள் கிரி…

 7. ”கொள்ளையடித்தவர்கள் நாசமாய்ப் போவார்கள்.”

  சாபம் பலிக்கப் போவதில்லை. இருந்தாலும், மனசுக்கு ஒரு வகை ஆறுதல்.

 8. Congrats for your new home Giri .

  I had very bad experience in chennai airport too, We departed from chennai airport last night to Australia. My self and wife with 10 month baby aproched to check in check in staff for drop baggage she said all baggage must be scanned before check in . We went to security staff but he said scanning not required. Again I loaded all lauage in 2 trolly and carry oversize lauage . Airline not even apologise to me and ther are many airline staff standing doing nothing but no one never help to unload the baggage. Most of the staff abd security neve respect passengers and not helpfull .

 9. ஏர்போர்ட் இதுவரைக்கும் போனதில்ல. நீங்க எழுதிருக்கறதை படிச்சா தனியா போறதுக்கு பயமா இருக்கு.

  வீடு கட்டினதுக்கு வாழ்த்துகள்னா.

  6 படம் பார்த்துட்டேன். நல்ல படம்.ஆனா நாளைக்கு எல்லா தியேட்டர்ல இருந்தும் தூக்குறாங்க.

 10. புதுமனை புகுந்தற்கு வாழ்த்துக்கள்!
  சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சென்னையை பெங்களுரு ஏர்போர்ட் மிஞ்சுவதாகவும் பயணிகள் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். அதன் காரணத்தை விளக்குகிறது உங்கள் பதிவு. இதுவரை மும்பாய் வழியாகத்தான் இந்தியாவிற்குள் நுழைவேன், ஆனால் அங்கு பஸ் ஏறி உள்நாடு/வெளிநாடு நிலையங்களிடையே மாற வேண்டும் என்பது ஒரு பிரச்சனை. அடுத்தமுறை சென்னை வழியாக ஊருக்கு செல்வதாக இருந்தேன். இப்போது புதுடில்லி அல்லது மும்பாய் என மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் போல. அதிலும் டில்லி ஏர்போர்ட் மிகவும் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். தகவலுக்கு நன்றி.

  @satish kesavan

  ஏனுங்க எந்த ஏர்லைன்னு சொன்னா தவிர்க்க உதவியாக இருக்குமல்லோ?

 11. அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  @ராஜ ராஜேஸ்வரி & நந்தவனத்தான்

  நீங்கள் நினைப்பது போல, வரவே யோசிக்கும் அளவிற்க்கெல்லாம் சென்னை விமான நிலையம் மோசமில்லை. நான் கூறிய அனைத்துமே இவ்வளவு ஆயிரக்கணக்கான செலவு செய்து கட்டப்பட்ட விமான நிலையம் அதற்குண்டான தரத்தில் இல்லை என்பது தான். எனவே இதை தவிர்த்து வேறு விமான நிலையம் செல்வது என்பது எல்லாம் அதிகப்படியான பயம் / எண்ணம்.

  சென்னை விமான நிலையத்தை தவிர்க்கும் அளவிற்கு இன்னும் மோசமாகவில்லை.

  @ஜோதிஜி நம்மவர்களுக்கு எதிர்க்கும் எண்ணம் குறைந்து விட்டது என்பது உண்மை தான். உங்கள் பெட்ரோ விலை உயர்வு சிறந்த உதாரணம்.

  அதோடு நம்மவர்களுக்கு இவற்றை எல்லாம் பார்த்து சலித்து விட்டதால் மேலும் இது பற்றி பேசவே வெறுக்கிறார்கள். பேசினால் தான் தீர்வு கிடைக்கும் ஆனால் எதுவுமே நடக்க மாட்டேங்குது என்ற இயல்பான வெறுப்பும் / சலிப்பும் ஏற்றுக்கொள்ளும்படி தான் உள்ளது.

  இவை தற்போதைய நிலைக்கு சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே இதோடு வாழப் பழகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நான் இப்படித் தான் இருக்கிறேன் அவ்வப்போது இது போல புலம்பலுடன்.

  @சிவா உண்மை தான். கோபி தற்போது பசுமையாக பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. வீடு கள்ளிப்பட்டி பிரிவு அருகே.

  @சதீஸ் இது போன்ற விஷயங்கள் எனக்கு பழகி விட்டது. நீங்களும் பழகிக் கொள்ளுங்கள்.

  @முத்துக்குமார் நீங்கள் நினைக்கும் அளவிற்கு ஒன்றுமில்லை. தாராளமாக செல்லலாம். நான் கூறியது அதில் உள்ள குறைகள் மட்டுமே. வழக்கமாக நடக்கும் விஷயங்கள் எப்போதும் போல நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

  ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் ஏகப்பட்ட பேர் விமான நிலையத்திற்கு வருவார்கள். அவர்களே கவலைப் படாத போது நீங்கள் அது பற்றி யோசிக்கக் கூட தேவையில்லை. அப்படியே சந்தேகம் இருந்தாலும் அங்கே உள்ள எவரையாவது விவரங்கள் கேட்டால் கூறி விடுவார்கள். இது சப்பை மேட்டர்.

  எதுவுமே பயன்படுத்தாத வரை தான், பார்க்க பிரம்மாண்டமாக / பயமாக இருக்கும்…அப்புறம் அட! இவ்வளவு தானா! என்று இருக்கும்.

 12. நல்ல கருத்துக்கள் அண்ணா படிக்க படிக்க கஷ்டமா இருக்கு அண்ணா இதெல்லாம் இந்தியா வின் விதி இத மாத்த முடியாது , தெருவுக்கு நூ ரூ பேரு ஊழல் செய்ரவனா இருந்தா என்ன பண்ண முடியும் சொல்லுங்க

 13. வணக்கம் கிரி
  தங்களுடைய புதிய வீட்டிற்கு இணைய நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

 14. வாழ்த்துக்கள் தல புது வீடு, புது ஏர்போர்ட் ப்ரெமாதம் தல

  பதிவு ரொம்ப நல்லா இருக்கு உங்க பயண கட்டுரை என்னிக்கும் அழகு தான்

  – அருண்

 15. @கார்த்திகேயன் என்ன பண்ணுறது.. ரொம்ப சிரமம் தான். இது போல புலம்ப மட்டுமே முடியும்.

  @ஸ்ரீகாந்த் நன்றி

  @அருண் நீங்க பதிவை முழுதாக படிக்கவே இல்லைன்னு நினைக்கிறேன்.. அதோடு கமெண்ட் போடணுமே என்று போட்டது போல இருக்கிறது. எனக்கு கமெண்ட் போட்டே ஆக வேண்டும் என்பதில்லை. உண்மையிலேயே உங்கள் கருத்தை கூற வேண்டும் என்று விரும்பினால் கூறுங்கள் கட்டாயம் எதுவுமில்லை. நானும் தவறாக நினைக்க மாட்டேன்.

  புது வீடு வாழ்த்துக்கு நன்றி.

 16. ஆபீஸ் ல உங்க சைட் last week ல இருந்து blocked அதான் ரொம்ப அவசரமா அறைகுறைய வீட்ல படிச்சு உடனே கமெண்ட் போட்டேன்

  அதே நேரம் கண்டிப்பா கட்டாயத்தால் போட்ட கமெண்ட் இல்லை இருந்தாலும் ஒரு கடமைக்கு போட்ட மாதிரி தான் எனக்கும் இருக்கு இப்ப படிச்சா

  – அருண்

 17. கிரி, என்னோட வீடும் கள்ளிப்பட்டி பிரிவு தான் !!! ரொம்ப நெருங்கிட்டோமோ..

  • //கிரி, என்னோட வீடும் கள்ளிப்பட்டி பிரிவு தான் !!! ரொம்ப நெருங்கிட்டோமோ//
   “கள்ளிப்பட்டி பிரிவு” ன்னு ஒரு _ _யா?.

 18. 3 மாதத்தில் 6வது முறையாக இடிந்து விழுந்த சென்னை ஏர்போர்ட் மேற்கூரை: பயணிகள் பீதி

  இது இன்றைய செய்தி 3-10-2013

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here