நடிகர் திலகம் சிலை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சிலை அகற்றலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் அன்றி வேறில்லை.
நடிகர் திலகம் சிலை
சாலை என்பது போக்குவரத்துக்கு மட்டுமே! சிலை அமைப்பதற்கு அல்ல. தமிழ்நாட்டில் தெருக்களில் எல்லாம் அரசியல்வாதிகள் சிலைகளை வைத்து அட்டகாசம் செய்து வருகிறார்கள்.
தலைவரின் பிறந்த நாள், நினைவுநாள் அன்று கூட்டமாக வந்து மாலையிட்டு அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திப் பொதுமக்களின் சாபங்களை வாங்கி வருகிறார்கள்.
பிடிக்காதவன் எவனாவது வந்து செருப்பு மாலை போட்டு விட்டு போய் விடுவான். அதற்கு ஒரு கலவரம் நடக்கும். இதெல்லாம் தேவையா!
இறந்த பிறகும் திட்டு வாங்க வைக்க மட்டுமே இந்தச் சாலையோர சிலைகள் உதவும்.
சிலை கலாச்சாரம்
சிலை கலாச்சாரத்தை யார் ஏற்படுத்தி வைத்தார்களோ! அது தமிழ்நாட்டில் மோசமான வியாதி போலத் தொன்று தொட்டுப் பரவிவருகிறது.
இதைத் தடுப்பார் எவரும் இல்லை.
தற்போது அகற்றப்பட்ட நடிகர் திலகம் சிலை எங்கேயோ கொண்டு சென்று குப்பையில் போடப்படவில்லை.
நடிகர் திலகத்துக்கு என்று ஆந்திர மகிள சபா அருகே “நினைவு மண்டபம்” அமைக்கப்பட்டுள்ளது. அங்கே தான் சென்று வைக்கப்போகிறார்கள்.
இதில் என்ன தவறு என்பது புரியவில்லை? ஏன் கொந்தளிப்பு? சரியான இடத்தில் வைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநிலம் தமிழ்நாடாகத் தான் இருக்கும்.
எதற்குத் தான் கோபப்படுவது, சண்டைப்போடுவது என்று விவஸ்தை இல்லையா!!
மதிப்பு செய்த சாதனையாலா சிலையாலா!
அண்ணா, எம்ஜிஆர், காமராஜரை மக்கள் நினைவு வைத்து இருப்பது அவர்களின் சிலைகளாலா?! சாதனைகளாலா?!
நடிகர் திலகத்தின் மதிப்பு முழுக்க இந்த ஒரு சிலையில் தான் உள்ளதா?! என்ன ஒரு முட்டாள்த்தனமான வாதம்.
எவ்வளவு பெரிய நடிகர்! அவரின் நடிப்பை, நடிப்பில் செய்த சாதனைகளை இனி எவரும் கனவிலும் நினைத்தும் பார்க்க முடியுமா?!
அதெல்லாம் முடியாது! அவர் சிலை அகற்றுவது அவரை அவமானப்படுத்துவது என்று குதிப்பது எந்த வகையில் சரி!
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அந்தப்பக்கம் இருப்பவன் நடிகர் திலகத்தைத் தான் திட்டிட்டு போவான். இதைத் தான் சிலை அகற்றுவதை எதிர்ப்பவர்கள் விரும்புகிறீர்களா?!
ஏன் அவரவர் இடத்தில் வைக்கக் கூடாது?!
யாரெல்லாம் நடிகர்திலகத்தின் சிலை அகற்றலை எதிர்க்கிறார்களோ அவர்கள் ஏன் அவர்கள் கட்சி அலுவலகத்திலோ / அவர்கள் வீட்டிலோ நடிகர் திலகத்துக்குச் சிலை வைத்துத் தினமும் மாலை அணிவித்து மரியாதை செய்யக் கூடாது?!
சிலையைப் பொது இடத்தில் இருந்து அகற்றினால் என்ன? இவர்கள் தனிப்பட்ட இடத்தில் புதுச் சிலை வைத்து மரியாதை செய்யலாமே!
செய்ய மாட்டார்கள்.. ஏனென்றால், அவர்கள் அக்கறை நடிகர் திலகத்தின் மீதல்ல.. சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே!
தற்போது குதித்துக்கொண்டு இருப்பவர்கள் ஒருத்தர் கூட நடிகர் திலகத்தைப் பற்றி அடுத்தவாரம் நினைக்க மாட்டார்கள். இவ்வளவு தான் இவர்கள் ஆவேசம் எல்லாம்!
எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு
கடவுள் சிலையாக இருந்தாலும், கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. அதே போலத் தான் இருக்க வேண்டியவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதற்கு மரியாதை.
அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் அண்ணாசாலையில் முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுத் தோறும் பிறந்த நாள், நினைவு நாளுக்குக் கட்சிக்காரர்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைக் கூட்டி நெரிசலை ஏற்படுத்துகிறார்கள். Image Credit
அந்த வழியே அவசரமாகச் செல்பவர்கள் அண்ணாவையும் எம்ஜிஆரையும் பாராட்டுவார்களா? திட்டுவார்களா? மனசாட்சிப்படி கூறுங்கள்.
அந்த வழியே சென்றால் என்ன நினைப்பீர்கள்?
லீ குவான் யூ
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு “லீ குவான் யூ” இறக்கும் முன் என்ன கூறினார் தெரியுமா?
“நான் இறந்த பிறகு எனக்குச் சிலை வைக்கக் கூடாது. நான் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கக் கூடாது. ஒருவரின் புகழ் என்பது அவர் செய்த செயலில், சாதனையில் தான் உள்ளதே தவிர நினைவுச் சின்னங்களில் அல்ல” என்று கூறினார்.
Read: நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ”
முடிவு செய்து கொள்ளுங்கள் எது சரி என்று!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இந்த சிலை கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளிலிருந்து பரவி இருக்கும் என நினைக்கிறேன். நமது நாட்டை பொறுத்தவரை உயிரோடு இருக்கின்ற போது விட்டுவிடுவார்கள், இறந்த பின் கொண்டாடுவது போல் நடிப்பார்கள்.
ஒருமனிதனின் இறப்பிற்கு பின் அவனது நற்செயல்கள் மற்றவர்களால் பின்பற்றப்படவேண்டுமே தவிர, அதை தவிர்த்து மற்றவற்றை மேற்கொள்வது, அடுத்தவர்க்கு இடையுறு தருவது, இறந்தவரை அவமானப்படுத்துவதற்கு சமம். தற்போது நிறுவப்பட்ட அப்துல் கலாம் அவர்களது சிலை திறப்பிலும் பல தேவையற்ற பிரச்சனைகள் எழுந்தது. அவர் உயிரோடு இருப்பின் நிச்சயம் வருந்தி இருப்பார்.
நடிகர் திலகம் : இவரை போல் நடிக்க இனி ஒருவரால் முடியுமா??? என்ற வினா??? எப்போதும் என்னுள் எழும்???. இவரது நிறைய படங்கள், பாடல்கள் விரும்பினாலும், ஆண்டவன் கட்டளை படத்தின் பாடல்கள் பொக்கிஷம். குறிப்பாக அமைதியான நதியினிலே, ஆறு மனமே ஆறு… இந்தப்பாடல்கள் என் வாழ்நாளில் எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில்லை. என்மனதை பல நேரங்களில் அமைதியாக்க, கோபத்தை தணிக்க, பகையை மறக்க, சிந்திக்க இந்த பாடல் உதவியிருக்கிறது.
சில நேரங்களில் மிகை நடிப்பாக தெரிந்தாலும் நடிப்புக்காக அவர் மேற்கொள்ளும் பயிற்சி, அவரது நேர்மை, நேரத்தை கடைபிடிப்பது.. இன்னும் பல விஷியங்கள் பிரமிக்க வைக்கிறது.
லீ குவான் யூ : இவரை பற்றி குறைவான தவல்களே தெரியும். இன்னும் அதிகம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர் கூறிய (நான் இறந்த பிறகு…….) சத்தியமான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து.
சிலை வைப்பது என்பதே அரசியல்காரணமாகத்தான். ஆதித்தனார் அவர்களது சிலையை, தந்தி குரூப் பார்த்துக்கொள்கிறது. முரசொலி மாறனுக்கு அவர்களது வளாகத்தில் வைத்திருக்கிறார்கள். மற்றபடி வெளியில் இருக்கும் சிலைகள் எல்லாம், வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவமானம் வரும்படி, பறவைகளின் டாய்லெட் ஆகவும், அரசியல் எதிரிகள் செருப்பு மாலை போடும்படியாகவும், அந்த மாதிரி கலவரங்களுக்குப் பயந்து சிலைகளை கூண்டுக்குள் வைத்து கைதியாக நடத்தப்படுவதாகவும்தான் எனக்குத் தோன்றுகிறது.
சிவாஜி நல்ல நடிகர். ஆனால் அதற்குமேல் அவருக்கு சிலைவைப்பது என்பதெல்லாம் எனக்கென்னவோ வெற்று அரசியல்போல்தான் தோன்றுகிறது. அவர் சம்பாதித்த ஏக்கர் கணக்கில் இருக்கும் அவர் வளாகத்தில் இந்தமாதிரி சிலை கிடையாது. மணி மண்டபத்துக்கும் தமிழக அரசு செலவு. எனக்கு சிவாஜியை மிகவும் பிடிக்கும், ஆனால் அவருக்கு சிலை வைப்பது தேவையற்றது (௧. நடிப்புக்காக அவர் எந்த விருதும், இந்தியாவில் வாங்கியதில்லை. கமலஹாசனுடைய அண்ணன் சாருஹாசன்கூட விருது வாங்கியிருக்கிறார் ௨. சமூகத்திற்கான அவர் குறிப்பிடும்படியான பங்களிப்பு செய்ததில்லை. அப்புறம் எதற்கு சிலை?). இப்போ மணிமண்டபங்களும் ஒவ்வொரு சாதிக்கும் அவர்களது ஈகோவுக்காக, அவர்கள் தலைவராக நினைப்பவர்களுக்கும் அரசு சிலை வைக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில், யாருக்குமே சிலை வைக்கக்கூடாது. அவ்வைக்கு, வள்ளுவருக்குச் சிலை வைத்தவர்கள், அவர்கள் சொல்லியதுபோல் கொஞ்சமாவது நடந்துகொண்டுள்ளார்களா?
@யாசின் மேற்கத்திய நாடுகளில் வந்து இருக்கும் என்று தொடரவில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் கண்ட இடத்தில் வைக்க மாட்டார்கள்.
கலாம் சிலை விவகாரமெல்லாம் வழக்கமான அரசியல். இவனுக திருந்த மாட்டானுக.
நடிகர் திலகம் பல படங்களில் மிகை நடிப்பு தான். அதற்கு காரணம் துவக்கத்தில் நாடகங்களில் நடித்ததால், மற்றவர்களுக்கு கேட்க வேண்டும், நன்கு தெரிய வேண்டும் என்பதற்காக சத்தமாக நடித்து அது அப்படியே திரைப்படங்களில் தொடர்ந்து விட்டது என்பது என் கருத்து.
எனக்கு நடிகர் திலகத்தின் பல படங்கள் அவருடைய இயல்பான நடிப்பில் பிடித்தது. உயர்ந்த உள்ளம், தேவர் மகன் மற்றும் முதல் மரியாதை.
லீ குவான் யூ செம்ம தலைவர்.
@தமிழன்
“மற்றபடி வெளியில் இருக்கும் சிலைகள் எல்லாம், வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவமானம் வரும்படி, பறவைகளின் டாய்லெட் ஆகவும், அரசியல் எதிரிகள் செருப்பு மாலை போடும்படியாகவும், அந்த மாதிரி கலவரங்களுக்குப் பயந்து சிலைகளை கூண்டுக்குள் வைத்து கைதியாக நடத்தப்படுவதாகவும்தான் எனக்குத் தோன்றுகிறது.”
அதே அதே. நீங்க சொன்ன கூண்டு விஷயத்தை எழுத நினைத்து மறந்து விட்டேன். இப்படி ஒரு சிலை அவசியமா?!
என்னை பொறுத்தவரை ஆணியே பிடுங்க வேண்டாம் என்பது தான். சிலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், இருக்கிற பிரச்சனையில் இது வேறையா…