கற்பனைத் திறன் / Writer’s Block / Passion

6
Passion கற்பனைத் திறன்

ந்தப் படைப்பாளியாக இருந்தாலும் துவக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரே மாதிரியான அல்லது அதைவிட அதிகப்படியான கற்பனைத் திறன் / திறமையுடன்  இருக்க முடியாது.

ஏதாவது ஒரு காலத்தில் கற்பனை வறட்சி வரும்.

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

உண்மையில் “பல்லவி அனுபல்லவி” எடுத்து முடித்த பின் ‘இனி என்ன செய்யப் போகிறேன்?’ என்று தான் எண்ணியிருந்தேன். Image Credit 

எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் இந்தப்படத்தில் செலவழித்து விட்டேன். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் இந்தப் படத்தில் செய்து விட்டேன்.

நடிகர்கள் குறிப்பிட்ட பாணியில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அந்தக் காலப் படங்களில் அவர்கள் பின்பற்றிய சில விதிமுறைகளை நான் விரும்பியதில்லை. அதை என் படத்தில் பின்பற்றாமல் பார்த்துக் கொண்டேன்.

ஒரு குறிப்பிட்ட பாணியில் ஷீட் செய்வதை நான் விரும்பவில்லை. வண்ண வண்ண ஆடைகளை நடிகர்களுக்கு அணிவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

அந்தக்காலப் படங்களில் எனக்குப் பிடிக்காத எதுவும் “பல்லவி அனுபல்லவி”யில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டேன்.

இனிமேல் நான் எந்தப் பாதையில் பயணிப்பேன்? என் அடுத்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன், என்னிடம் இருக்கும் ஐடியாக்கள் தீர்ந்து இருக்கும் என்று எண்ணினேன்.

ஆனால், அடுத்த ஸ்க்ரிப்ட்டில் வேலை செய்யும் போது தான், நமக்குத் தெரியாத இன்னும் பல விஷயங்கள் நமக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்கிறோம்.

முற்றிலும் புதியதொரு கான்சப்டை எடுத்துக்கொண்டு, யாரும் பயணிக்காத பாதையில் பயணிக்கும் போது, நம்மிடம் நிறைய ஐடியாக்கள் உதயம் ஆகின்றன.

‘இதை நான் எப்படிச் செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று எண்ணிக்கொண்டு ஒரு வேலையைத் தொடங்கும் போது தான் நம்மால் தங்கு தடையின்றி இயங்க முடிகிறது. அந்த எண்ணமே கற்பனை வற்றாமல் பார்த்துக் கொள்கிறது.

என்று கூறியிருக்கிறார்.

Readமணிரத்னம் படைப்புகள் : ஓர் உரையாடல்

முதல் படம்

நிச்சயம் பல இயக்குநர்களைக் கவனித்து இருக்கலாம். முதல் படத்தில் பட்டையைக் கிளப்பிய பிறகு அடுத்தப் படத்தில் சொதப்பி விடுவார்கள்.

இதற்குக் காரணம் மணிரத்னம் அவர்கள் கூறியது போலத் தங்கள் முழுத் திறமையையும் முதல் படத்திலேயே பயன்படுத்தி விடுவது தான்.

திறமையைப் பட்டை தீட்டுபவர்கள் மணிரத்னம் போலத் தங்களிடம் ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அடுத்தப் படங்களில் வெற்றி பெறுகிறார்கள்.

சரக்கு தீர்ந்தவர்கள் தொடர முடியாமல் தோல்வி அடைகிறார்கள்.

என்ன தான் திறமை இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் கற்பனைத் திறன் குறையும் / நடப்பு காலத்துத் திறமைகளோடு போட்டி போட முடியாத நிலை ஏற்படும்.

இதைத் திறமைக் குறைவு என்று எடுத்துக் கொள்ளாமல் காலமாற்றத்தில் தற்போதைய தலைமுறையினர் இன்னும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று நேர்மறையான  எண்ணத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

இயக்குநர் ஜாம்பவான்கள்

வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் “முத்துராமன்” அவர்கள் “பாண்டியன்” பெரிய வெற்றி என்று கூற முடியவில்லையே!

இதன் பிறகு ஒரு படத்துடன்  திரைப்படம் இயக்குவதை நிறுத்திக்கொண்டார்.

“பாலச்சந்தர் பாரதிராஜா” போன்ற ஜாம்பவான்களும் இறுதிக் காலத்தில் வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியவில்லை.

“மணிரத்னம்” படங்களும் இதே போல நிலையைக் கடந்து “ஓ! காதல் கண்மணி”யில் கொஞ்சம் மீண்டு இருக்கிறார்.

இளையராஜா

இளையராஜாவும் இதில் தான் வருகிறார். இளையராஜாவின் திறமை பற்றிப் புதிதாகக் கூற ஒன்றுமில்லை ஆனால், அவருக்கும் மாற்றத்தோடு இணைவது சிரமமாக இருக்கிறது.

அந்தக்காலத்தில் எந்த இயக்குநராக இருந்தாலும் அசத்தல் இசை கொடுத்தார்.

ஆனால், தற்போது பாலா, கமல், பாலுமகேந்திரா போன்ற சில இயக்குநர்களின் படங்களில் மட்டுமே சிறப்பான இசையைக் கொடுக்க முடிகிறது.

தற்போது மற்ற இயக்குநரின் படங்களில் இளையராஜா இசையை அவரது ரசிகர்கள் மட்டுமே ஆராதிக்கிறார்கள் பொதுமக்கள் முன்பு போல ரசிப்பதில்லை.

இனி என்ன எழுதப் போகிறோம்?

நானும் பல நேரங்களில் இனி என்ன எழுதப் போகிறோம் என்று கவலையடைந்து இருக்கிறேன்..!

ரொம்ப வேகமாகப் போனால் விரைவில் காணாமல் போய் விடுவோம் என்று துவக்கத்திலேயே உணர்ந்து விட்டேன்.

எத்தனையோ முறை இனி நாம் என்ன எழுதுவோம்? எழுத ஒன்றுமே இல்லையே! என்று நினைத்து உள்ளேன்.

ஆனால், மணிரத்னம் அவர்கள் கூறியது போல நமக்குள் உள்ள வேறு திறமைகளை உணரும் போது எளிதாகிறது.

ஏதாவது ஒன்றைப் படிக்கும் போது உடனே இதைப் பற்றி எழுத முடியும் என்ற தோன்றும். எப்போது இது குறைகிறதோ அன்று எச்சரிக்கையாகி விட வேண்டும்.

எழுதுவதை முழு நேரத் தொழிலாகச் செய்யாதவர்கள் குடும்ப சூழ்நிலை, பணி நிமித்தம் காரணமாகத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டாலும் நேரம் கிடைக்கும் போது “ஆர்வம்” எழுத வைக்கும்.

கடமை Vs ஆர்வம்

எதையும் கடமையாகச் செய்தால், தொடர்வது கடினம் ஆனால், அதே Passion என்ற அளவில் செய்தால் தொடர முடியும்.

ரசித்துச் செய்தால் சலிப்பு வராது, கடமைக்குச் செய்தால் ஒரு கட்டத்தில் சலிப்பு வரும், தொடர முடியாது.

அனைவரும் செய்கிறார்கள் அதனால் நாமும் செய்வோம் என்று ஆரம்பித்தால், ஆர்வம் இருந்தால் மட்டுமே தொடர்வது சாத்தியம்.

இல்லையென்றால் துவக்கத்தில் பரபரப்பாக இருந்து பின்னர் அமைதியாகி விடுவோம்.

எழுத்து / இயக்கம் போன்றவை மட்டுமல்ல அனைத்துக்கும் பொருந்தும்.

உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்பவர்கள் துவக்கத்தில் பரபரப்பாக இருப்பதும் இரண்டு வாரத்தில் ஆர்வத்தை இழப்பதும் எதனால்?!

Passion

எழுத்தாளர்கள் சாரு / ஜெயமோகன் இருவர் மீதும் விமர்சனங்கள் இருந்தாலும், அவர்கள் எழுத்தை Passion ஆகக் கருதுவதால் தான் இன்றும் அவர்களால் வருடங்கள் கடந்தும் சலிப்படைய முடியாமல் தொடர்ந்து எழுத முடிகிறது.

எழுத்தாளர் “சுஜாதா” அவர்கள் தனது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாகத் தொடர அவர் காலத்திற்கேற்ப தன் எழுத்துக்களை மாற்றிக்கொண்டதே காரணம்.

சுஜாதாவின் பழைய கதைகள் தற்போது படித்தால் சில சுவாரசியம் இருக்காது ஆனால், அவை அப்போது பிரபலமாக இருந்தன.

ஆர்வம் என்ற ஒன்று இருந்தால் கூட ஒருவர் தொடர்ச்சியாக அதே திறமையுடன் / வேகத்துடன் கடைசி வரை இருப்பது என்பது சாத்தியமில்லாதது.

எனவே, இதை உணரும் தருணம் வரும் போது எச்சரிக்கையாகி மாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிலும் விதிவிலக்கு இருப்பது போலச் சிலர் விதிவிலக்காக இருக்கலாம் ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.

எனவே, Writer’s Block, கற்பனைத் திறன் குறைவு பிரச்சனைகள் எல்லாம் வழக்கமான நிகழ்வு  தான்.

சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால் அதே அளவு பிரகாசிக்க முடியவில்லை என்றாலும் தொடர்ச்சியாகக் கவனம் பெற முடியும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. கிரி,
  பதிவு வித்தியாசமா இருக்கு.. ரொம்ப ரசிச்ச portion “கடமை Vs ஆர்வம்”

  இனி என்ன எழுதப் போகிறோம்?
  – இது உங்களுக்கு பிரெச்சனை நு என்னால நினச்சு பார்க்கவே முடியல.. என்னை பொறுத்த வரைக்கும் கிரி நா எல்ல விஷயமும் தெரிஞ்ச ஆளு 🙂

  நீங்க இப்ப நெறைய புத்தகம் படிக்குறது நாள உங்க writing skill இன்னும் professional ஆனதா feel பண்ணுறேன்

  – அருண் கோவிந்தன்

 2. இந்த குறிப்பிட்ட ஒரு விஷியத்தை பற்றி நீங்கள் முன்னரே சில இடங்களில் அவ்வப்போது நினைவுட்டி கொண்டுதான் இருக்கீரிர்கள் கிரி. ஆர்வம், தேடல் என்பது உங்களிடம் இருக்கின்றவரை நீங்கள் அடையபோகும் இலக்கு உங்களுக்கு தெரியாது.

  உங்களை ஆர்வபடுத்த, உங்கள் தேடுதலை அதிகப்படுத்த, உங்களை உற்சாகபடுத்த நிறைய நண்பர்கள் உள்ளனர். கற்பனைக்கு என்றுமே எல்லை கிடையாது. நல்ல புத்தகங்கள் என்றுமே நல்ல நண்பர்கள். நல்ல புத்தங்களை கொண்டு உங்கள் கற்பனை திறனை இன்னும் நீங்கள் அதிகப்படுத்தி உங்களுக்கு விருப்பமனவற்றை நிறைய எழுதலாமே!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 3. @அருண் பிரச்சனையே வராமல் எவர் இருக்க முடியும் 🙂 நான் மட்டும் விதிவிலக்கா

  “நீங்க இப்ப நெறைய புத்தகம் படிக்குறது நாள உங்க writing skill இன்னும் professional ஆனதா feel பண்ணுறேன்”

  பத்தி பிரித்து சிறு தலைப்பு வைத்து எழுதுவதை சொல்றீங்களா.. ஆமாம் என்றால் இதை நானாக மாற்றிக் கொண்டது. படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று.

  எழுத்தில் மாற்றம் என்றால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

  @யாசின் நீங்கள் நீங்கள் நினைப்பது போல எனக்கு உற்சாகப்படுத்த நிறைய நண்பர்கள் எல்லாம் இல்லை. என்னுடைய விருப்பம் மற்றும் உங்களைப் போல வெகு சிலரே காரணம்.

 4. நண்பா கிரி
  நீங்கள் என் கமெண்ட் கு பதில் போடா வில்லை என்றாலும் நான் தொடர்ந்து கமெண்ட் அடிப்பேன் ….
  எழுத்து என்பது நம் கற்பனை வளத்தை பொருத்தது

  யாருக்கு எழுதுகிறோம் என்பதை பொருத்தது

  ஏன் எழுதுகிறோம் என்பதை பொருத்தது

  ஆகவே நீங்கள் எதையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளமால் தோன்றுவதை எழுதவும்

  வேண்டியதை நாங்கள் பெற்று கொள்கிறோம்

  இப்படிக்கு
  உங்கள் பதிவின் மீது தீவிர பற்று கொண்ட
  ஸ்ரீகாந்த்
  (கடந்த வருடம் சிங்கப்பூரில் வாசம்
  இந்த வருடம் துபாயில் வாசம் )

 5. @ஸ்ரீகாந்த் நான் என்னுடைய கட்டுரைகளுக்கு வரும் கருத்துக்களில் கேள்விகள் இருந்தால் நிச்சயம் பதில் அளிப்பேன். பாராட்டி இருந்தால், மொத்தமாக நன்றி தெரிவித்து இருப்பேன். ஒவ்வொருவரின் பாராட்டுக்கும் தனித்தனியாக பதில் அளித்தால் அது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலத்தான்.

  உங்கள் அன்பிற்கு நன்றி ஸ்ரீகாந்த்.

  துபாய் போயிட்டீங்களா.. மறக்காம விவேகானந்தர் தெருவும் போயிட்டு வந்துடுங்க 🙂 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here