அனைவரும் எதிர்பார்த்தபடி 2011 பொதுத்தேர்தல் முடிவுகள் பல வியப்புகளைக் கொடுத்துள்ளது. இத்தீர்ப்பு எவருமே எதிர்பாராதது.
2011 பொதுத்தேர்தல் முடிவுகள்
மீண்டும் ஒரு முறை தமிழக மக்களின் எண்ணங்களை கணிப்பது கடினம் என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள்.
நாங்கள் தான் ஜெயிப்போம் என்று அனைத்துக்கட்சிகளும் நினைத்துக்கொண்டு இருந்தாலும் உள்ளூர பயந்துகொண்டு தான் இருந்தார்கள். Image Credit
தற்போதைய முடிவு அதிகமுகவை ஆனந்தத்திலும் திமுகவை கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.
இவ்வளவு பெரிய வெற்றியையும் தோல்வியையும் இரு கட்சிகளுமே நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
அதிலும் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்த்துக் கூட பெற முடியாத அளவிற்குப் போனது மிகப்பெரிய அடி.
“ஜெ” க்கு கிடைத்த வெற்றியா?
நிச்சயம் கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொறுப்பற்ற எதிக்கட்சி தலைவராக இருந்ததை தவிர ஜெ எதுவும் சாதிக்கவில்லை.
பொழுதுபோகவில்லை என்றால் கொடநாட்டில் இருந்து அறிக்கை விடுவார். திமுக என்ற ஒரு கட்சி இருப்பதைக் காட்ட போராட்டம் நடத்தக்கூறுவார்.
மக்கள் பிரச்சனைக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டது கிடையாது.
பின் எப்படி அதிமுக வெற்றி பெற்றது?
தற்போது அதிமுக வெற்றி பெறவில்லை மக்களே! திமுக தோல்வி அடைந்து உள்ளது, இது தான் உண்மை.
திமுக செய்த ஊழல்கள் குடும்ப ஆதிக்கங்கள், மின்சார வெட்டு போன்றவை தான் திமுக தோல்வியடைய முக்கியக்காரணங்கள்.
இவற்றின் மீது இருந்த மக்கள் வெறுப்பே திமுக விற்கு மாற்றான அதிமுகவை வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.
திமுக தோல்வி அடைய மிக முக்கிய காரணங்கள்
குடும்ப ஆதிக்கம், ஊழல்கள், மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை.
பலர் கூறுவதுபோல ஈழத்தமிழர்கள் பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கும் என்று தோன்றவில்லை.
காரணம், நமது ஊடகங்கள் பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டதால் பெரும்பாலான மக்களுக்கு இதன் தாக்கம் புரியவில்லை.
இணையத்தில் இருந்தவர்கள் மட்டுமே ஈழத்தமிழர்கள் விசயத்தில் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டு இருந்தனர்.
குடும்ப ஆதிக்கம்
வரைமுறையே இல்லாத அளவிற்கு கலைஞர் குடும்பம் ஆதிக்கம் புரிந்ததை மனசாட்சி உள்ள எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
குடும்பம் என்றால், கணவன் அல்லது மனைவி மற்றும் ஒன்றிரண்டு பிள்ளைகள் என்று ஊழல் செய்து இருந்தால் மக்கள் இவ்வளவு கொந்தளித்து இருக்க மாட்டார்கள்.
ஆனால், கலைஞர் கொள்ளுப்பேரன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தாது பாக்கி என்கிற அளவிற்கு இவர்களின் குடும்ப ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.
திரைத்துறை, சிமென்ட், ஊடகம் என்று அனைத்திலும் இவர்கள் வைத்ததே சட்டம் என்கிற அளவிற்கு ஆனது.
திரைத்துறை
சன் டிவி அழகிரி பிரச்சனை ஆன பிறகு துவங்கியது தான் கலைஞர் டிவி. இது தான் இவர்களின் திரைப்படத் துறையின் ஆதிக்கத்திற்கு ஆரம்பப்புள்ளி.
அரசியல் பலம் இருந்ததால் வெளியான படங்களை எல்லாம் கலைஞர் டிவி வாங்கிப்போட்டது.
இதை சமாளிக்க சன் டிவி உருவாக்கிய ஐடியா தான் சன் பிக்சர்ஸ் ஆகும். படங்களை நேரடியாக வாங்கி கலைஞர் டிவி க்கு செக் வைத்தது.
இதன் பிறகு கலைஞர் சன் டிவி ஸ்பெக்ட்ரம் விசயத்தில் இவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியதால் “கண்கள் பனித்தது இதயம் இனித்தது” என்று குடும்ப சகிதமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்து பிரச்னையை முடித்துக்கொண்டார்.
இவர்களுக்குப் பிரச்சனை முடிந்தாலும் திரைத்துறைக்கு பிரச்சனை ஆரம்பம் ஆகி விட்டது.
கலைஞர் குடும்பத்தில் ஒவ்வொருவராக படத்தயாரிப்பிற்கு வந்தார்கள் வந்ததோடு மொத்தமாக ஆக்கிரமித்தும் கொண்டார்கள்.
திரையரங்குகளை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் இவர்கள் வைத்ததே சட்டம் என்றானது.
ஒரு படம் எத்தனை நாள் ஓடலாம் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனார்கள்.
இவர்கள் ஆதிக்கத்தால் சிறு தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது நெடுங்காலமாக திரைத்துறையில் இருக்கும் பெரிய தயாரிப்பாளர்களே இவர்களை மீறி எதுவும் செய்ய முடியாதபடி ஆகி விட்டது.
இதில் உதயநிதி தயாரிப்பில் சில நல்ல படங்கள் வெளியானது மட்டுமே இவர்கள் பக்கம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விசயங்களாகும்.
இது குறித்து சர்ச்சை எழுந்தபோது கலைஞர் “ரஜினி கமல் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வரும் போது என் குடும்பத்தில் இருந்து வருபவர்களை மட்டும் விமர்சிக்கிறார்களே!” என்று அறிக்கை விட்டார்.
ஆனால், அவர் கூறாமல் விட்டது யார் திரைத்துறையை ஆக்கிரமித்தார்கள் என்பதை.
ஊடகம்
ஜேம்ஸ்பாண்ட் (Tomorrow Never Dies) படத்தில் வருவது போல மக்கள் என்ன செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனார்கள்.
இவர்கள் (சன் கலைஞர் தினகரன்) கூறுவதே செய்தி என்றாகிப்போனது. நான் அதிகம் கவலைப்பட்டது இதற்குத்தான்.
மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கூறாமலே இவர்கள் பற்றிய (சாதகமான) செய்திகளை மட்டும் கூறி மக்களுக்கு எதையும் அறிந்து கொள்ள விடாமல் செய்கிறார்களே என்று பயமாகவே இருந்தது.
குறிப்பாக ஈழத்தமிழர்கள் பிரச்சனை நடந்த போது காங்கிரஸ் அரசை திருப்தி செய்ய அனைத்து செய்திகளையும் புறக்கணித்தது இவர்கள் செய்த மாபெரும் அநியாயம்.
மக்கள் அதிகம் பார்க்கும் செய்திகள் நிலை இப்படி இருந்தால் என்ன ஆவது?
ஜெயா டிவி உட்பட பலர் அரசியல் சார்பு கட்சித் தொலைக்காட்சிகளும் இதே நிலை தான் என்றாலும் இவர்களைப் பெரும்பான்மையான மக்கள் பார்ப்பதில்லை.
ஊழல் மற்றும் மின்வெட்டு
இது பற்றி ஏற்கனவே நிறைய முறை படித்து இருப்பீர்கள் அதனால், புதிதாகக் கூற எதுவுமில்லை.
எனக்கே சலிப்பாகி விட்டது.
விலைவாசி உயர்வு
1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தாலும் மக்கள் 50 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்க வேண்டிய நிலை. இதுவும் ஒரு முக்கியக்காரணம் என்றாலும் இதற்கு மாநில அரசு காரணமாக இருக்க முடியாது.
இது குறித்து மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால், மக்கள் மாநில அரசையே குற்றம் கூறுவார்கள் அது இயல்பு.
வியப்படையவைத்தவை
சில விஷயங்கள் என்னை மிக மிக ஆச்சர்யப்படுத்தின உடன் அதிர்ச்சியையும் கொடுத்தன.
ஊடகம்
தேர்தல் நேரத்தில் இவர்கள் செய்திகளைப்பார்த்தால் கலைஞர் அரசுக்கு எதிர்ப்பாக உள்ளவர்கள் கூட இவர்களின் மூளைச்சலவையால் ஆதரவாக மாறி விடுவார்கள், அந்த அளவிற்கு இருந்தது.
இதை சாதாரண மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்தேன் ஆனால், டேய்! நாங்க உங்களை விட விவரம்டா! என்று ஆணித்தரமாக நிரூபித்து உள்ளார்கள்.
குறிப்பாக விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசியதை (கட் பேஸ்ட் செய்து) திரும்பத் திரும்ப ஒளிபரப்பி விஜயகாந்த் மீது மாற்று எண்ணம் வர வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்தார்கள்.
இதற்கு தகுந்த மாதிரி விஜயகாந்தும் சில நேரங்களில் எடுத்துக்கொடுத்துக்கொண்டு இருந்தார் என்பதும் உண்மை.
இவர்கள் ஊழல் செய்திகள், ராஜா கைது, ஸ்பெக்ட்ரம் என்று அனைத்தையும் மறைத்தும் மக்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் என்பது எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இதன் மூலம் எப்படி எதைத் திணித்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
இதற்கு திமுக அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சியும் மக்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள பேருதவியாக இருந்தது.
பணம்
மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு விடுவார்களோ திருமங்கலம் போல என்று பயம் இருந்தது.
ஏனென்றால், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டையும் மீறி பணப்பட்டுவாடா நடந்து இருந்தது.
திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு அழிக்க முடியாத இழிச்சொல் வந்து சேர்ந்து இருக்கும்.
காரணம், என்ன தவறு வேண்டும் என்றாலும் செய்யலாம் பணம் கொடுத்தால் போதும் மக்கள் ஓட்டுப்போட்டு விடுவார்கள் என்று ஆகிவிடாதா!
இதையே முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்கள் செயல்படாதா! தமிழகம் என்றாலே கேவலமாக பார்க்கும் நிலை வந்து விடக்கூடிய வாய்ப்பு.
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் தமிழக அரசியல்வாதிகள் தான் பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்பது இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது இந்நிலையில் இவர்கள் வெற்றி பெற்றால் என்ன நினைப்பார்கள்?
இவனுக என்ன செய்தாலும் ஓட்டுப்போட்டு விடுவானுக என்று நினைக்க மாட்டார்களா! இதுவே காரணம்.
இதே இதைப்போல ஊழல் பிரச்சனை இல்லை என்றால் திமுக வெற்றி பெற்றால் அது சாதாரண மக்கள் ஆதரவு என்ற நிலைக்கு மாறி விடும்.
இதைப்போல சங்கடங்கள் இருந்தாலும் மக்கள் எதிர்க்கட்சி பதவி கூட கொடுக்காமல் தர்மடி கொடுத்துள்ளார்கள்.
இனி வரும் காலங்களில் மக்களுக்கு பணத்தை கொடுத்தும் ஊழல் செய்து தப்பித்துச் செல்லவும் நினைத்தால் மக்களிடம் எடுபடாது என தெளிவாக உணர்த்தி விட்டார்கள்.
திமுக அரசு செய்த பல நல்ல திட்டங்கள்
திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பல இருந்தாலும் அவர்கள் செய்த பல நல்ல திட்டங்களை மறந்து விட முடியாது.
108, காப்பீட்டு திட்டம், வீடு, மெட்ரோ ரயில், மகளிர் சுய உதவிக்குழு, இலவச வீடு, ஒரு ருபாய் அரிசி என்று பல விசயங்களை செய்து இருந்தாலும் மக்கள் இதை புறக்கணிக்கும் அளவுக்கு மேற்கூறிய காரணங்கள் விஸ்வரூபம் எடுத்து இருந்தன.
இதில் காப்பீடு திட்டத்தால் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் அதிகம் பயன்பெற்றதாக குற்றச்சாட்டு உண்டு.
மக்கள் இந்த நல்ல செயல்களை எல்லாம் மறக்கக் கூடிய அளவிற்கு திமுக செய்த ஊழல்கள் குடும்ப ஆதிக்கங்கள் பெரிதாகப்போய் உள்ளன என்றால், மக்கள் எந்த அளவிற்கு கடுப்பாகி உள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
கொங்குப் பகுதியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை வளைத்து தொகுதியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தாலும் ஒரு இடம் கூட பெறமுடியவில்லை.
அழகிரியின் மதுரைப் பகுதியில் பத்தில் ஒன்றில் கூட திமுக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை.
முப்பது தொகுதியில் மூன்றில் மட்டுமே பாமக வெற்றி பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் ஒன்றில் கூட இல்லை.
பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வி. திமுகவில் நல்ல பெயரெடுத்த ஸ்டாலினே பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற வேண்டிய நிலை.
வடிவேல் பேச்சை ரசித்தார்களா?
திமுகவின் பெருமையே சிறந்த பேச்சாளர்கள் தான் ஆனால் அவர்களுக்கு வடிவேலை நம்ப வேண்டிய நிலை வந்தது மிக மிகக் கொடுமையான நிகழ்வு.
கன்னி மேடைப்பேச்சிலேயே தான் எப்படிப்பட்டவர் என்பதை வடிவேல் நிரூபித்து விட்டார்.
இதை கலைஞர் உட்பட திமுக புள்ளிகள் சிரித்து ரசித்தது வடிவேல் பேசியதை விட மிகக் கேவலமாக இருந்தது.
இதே வடிவேலுக்கு தைரியத்தை கொடுத்து இருக்க வேண்டும், இதோடு அழகிரியின் ஆசியும் மக்கள் கூட்டமும் பலமாக இருந்ததால் எல்லை மீறி நடந்து கொண்டார்.
தனது சொந்தப்பகையை மனதில் வைத்து கேப்டனை கீழ்த்தரமாக ஒருமையில் இவர் பேசிய போது மக்கள் கூடியதைப்பார்த்து தன் பேச்சிற்குத்தான் கூட்டம் கூடியது என்று தலைக்கனம் கொண்டு மமதையாக இருந்து விட்டார்.
அந்த தைரியத்தில் தான் “இவ்வளவு மக்கள் ஆதரவு தருவார்கள் என்று தெரிந்து இருந்தால் பேசாம நான் தேர்தலில் நின்று இருப்பேன் கலைஞரும் சீட்டுக் கொடுத்து இருப்பார்” என்று கூறி இருந்தார்.
இவரோட கெட்ட நேரத்திலையும் நல்ல நேரம் அப்படி நடக்காமல் போனது. இல்லை என்றால் டெபாசிட் கூட வாங்கி இருந்து இருக்க மாட்டார்.
நகைச்சுவையை ரசிப்பது வேறு நிஜம் வேறு என்பதை வடிவேலுக்கு மக்கள் சரியாக பாடம் புகட்டி விட்டார்கள் ஆனால் இதற்கு வடிவேல் கொடுத்த விலை தான் அதிகம்.
இவர் மேலும் ஏதாவது கட்சியில் சேர்ந்து மேலே வரலாம் ஆனால், தேர்தலுக்கு முன்பு இருந்தது போல மக்கள் மனதில் இருக்க முடியாது.
அரசியல் என்ற புலி வாலை பிடித்து விட்டார் இனி என்ன ஆகப்போகிறது என்பதை காலம் தான் கூறும்.
அசத்திய தேர்தல் ஆணையம்
இத்தேர்தலில் நிச்சயம் தேர்தல் ஆணையமே நிஜ ஹீரோவாகும்.
இவர்களின் கட்டுப்பாடு இல்லை என்றால் ஆளும் கட்சி என்ன வேண்டும் என்றாலும் செய்து இருப்பார்கள். தேர்தல் முடிவும் வேறு மாதிரி வந்து இருக்கும்.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தது சரி என்று முன்பு மறுத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். கடவுள் மாதிரி வந்து சிறப்பாக செய்து விட்டார்கள்.
பிரவீன் குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
இந்தியா முழுதும் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடவில்லை என்பதை இம்முடிவு நிரூபிப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் மனநிறைவு கொஞ்ச நஞ்சமல்ல.
தேர்தல் பிரச்சாரத்தில் சொதப்பிய ஜெ கேப்டன்
ஜெ “தான் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டேன்” என்று மீண்டும் ஒரு முறை இத்தேர்தலில் நிரூபித்தார்.
கூட்டணி கட்சிகளின் ஒப்புதல் இல்லாமலே தன்னிச்சையாக வேட்பாளர் தேர்வை அறிவித்தது, வைகோவை கழட்டி விட்டது, ஜெ கேப்டன் இருவரும் கடைசிவரை மேடையில் ஒன்றாக பேசாதது.
கேப்டனை ஆதரித்து ஜெ பேசாதது, கேப்டன் வேட்பாளரை அடித்ததாக எழுந்த சர்ச்சையில் அதை மேலும் பேசி சிக்கலாக்கி சொதப்பியது.
இதை விட முக்கியமாக ஜெ தேர்தல் நேரத்தில் தான் மக்களுடனான தொடர்பையே ஐந்து வருடத்திற்கு பிறகு ஆரம்பித்தார் இது போல கூறிக்கொண்டே போகலாம்.
மேற்கூறிய இத்தனை பிரச்சனைகள் இருந்தும் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இது திமுக எதிர்ப்பு தவிர வேறு எதுவுமில்லை.
கண்டிப்பாக இது ஜெக்கு ஆதரவாக விழுந்த ஓட்டுகள் இல்லை.
(அதிமுகவிற்கு என்று இருக்கும் வாக்கு வங்கியைத்தவிர) இல்லை என்றால் இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமில்லை இதை உறுதியாக நம்புகிறேன்.
இதை ஜெ உணர்ந்து கடந்த காலத் தவறுகளைத் திருத்தி தன்னை மாற்றிக்கொண்டால்!! நல்லது அவருக்கும் மக்களுக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்
கலைஞர் மு. கருணாநிதி 1924 – 2018
செல்வி ஜெ. ஜெயலலிதா 1948 – 2016
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
//எனக்கு மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு விடுவார்களோ திருமங்கலம் போல என்று பயம் இருந்தது ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டையும் மீறி பணப்பட்டுவாடா நடந்து இருந்தது. இதில் திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு அழிக்க முடியாத இழிச்சொல் வந்து சேர்ந்து இருக்கும் காரணம் என்ன தவறு வேண்டும் என்றாலும் செய்யலாம் பணம் கொடுத்தால் போதும் மக்கள் ஓட்டுப்போட்டு விடுவார்கள் என்று ஆகிவிடாதா!//
Correct Giri………..
//ஈழத்தமிழர்கள் பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை //
200 % உண்மை
விரிவான அலசல். உங்கள் மனதில், எண்ணத்தில் பட்டதை அருமையாக எடுத்து சொல்லி இருக்கும், பதிவு.
எதிர்பார்த்த தேர்தல் முடிவு… இனிமேலாவது நிர்வாகம் நன்றாய் இருக்குமா?
முடிஞ்சி போனத பேசி என்ன பிரயோஜனம் கிரி?
இனி நடப்பதை பேசலாம்… 🙂 🙂
2016 தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைவதற்கு என்ன காரணம் இருக்கலாம்
1 . தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கு மாற்றம். முன்பே பூமிபூஜை செய்த எங்கள் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) வளாகத்தில் மீண்டும் சட்டபையை கட்டப்போவதாக பீதியை கிளப்புகிறார்கள்.
எதற்கு இவ்வளவு சிரமம்? பேசாமல் கோட்டையை கொடநாட்டிற்கு மாற்றிவிடலாம்.
( முடிவு வந்த அடுத்த நாளே பிள்ளையார் சுழி போட்டாச்சு, இனி இதில் ஒவ்வென்றா சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்)
Hi Giri, I hope u r doing well, Good article but no punches from Giri.. U may b upset about the election result or not I don’t know but I personally expect the few more wording from u.. but u didn’t go for tht…. anyway it’s good article….
I feel the peoples need CHANGE the same thing happen in west bengal also. Every time peoples are giving opportunity for the rulers and they always fails to fulfill the basic needs of the public… Every time we are only loser’s politicians winning all the times… ( I was read the lines from some where : trees ask to peoples ” for the last over 2000 years we are given so many ” SILUVAIKAL” but why your peoples can’t able to bring one JESUS – this is true) like still we are searching the GOOD POLITICANS / GOOD RULES/ GREAT LEADERS.. This will never ending story..
Wishes for winners and lesson for losers… but don’t forget the story will be rewrite in 2016 if you do the same mistakes..
ஹாய் கிரி சார் …
ஸ்டாலினின் வெற்றி சந்தேகத்துக்குரியது …
இவங்க டிவி பத்திதான் நீங்க முன்னாடியே “சன்” என்ற ஆக்டோபஸ் ல் சொல்லிடின்களே ….
admk ஜெயிக்கவில்லை Dmk தோற்றுவிட்டது .. சரியாக சொன்னிர்கள் ….
கொசுறு : (நாங்களும் போடுவோம்ல ) ஹன்சிகவோட அம்மா ஒரு ஹார்மோன் ஸ்பெசலிஸ்ட் .. இப்போ தெர்யுதா ஏன் நு
Nice analysis. I think sun group’s torture will be the main reason for anger.
தெளிவான பார்வையுடன் சொல்லியிருக்கீங்கண்ணே சூப்பர் 🙂
ஒரு தேர்ந்த கட்டுரையாளரைப் போல் எழுதியுள்ளீர்கள்.அருமை.வாழ்த்துக்கள்.
நல்ல போஸ்ட் கிரி. ரொம்ப புடிச்சிது.
Good artical கிரி…
நல்லா அலசல் கிரி
அம்மா வோட பேட்டி பார்த்த ரொம்ப matured டா இருக்கு
பாக்கலாம்
– அருண்
mr. giri,
In sivaji film, after earning crores of rupees in foreign, our thalaivar comes to india to start hospital and colleges. I think you too after earning huge money in singapore , return to india and start a newspaper. You are excellent in writing articles.
rajesh. v
நன்றி! அருமை!
இருந்தாலும் ஒரு ரூபாய் அரிசி பற்றிய தா.பாண்டியனின் விமர்சனத்தை கவனிக்க தவறி விட்டீர்களோ? காப்பீட்டுத்திட்டம் செயல் படுத்தியதற்கு பதிலாக அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்தி இருக்கலாம். தொலைகாட்சிப் பெட்டி கொடுத்ததில் போலி ரேஷன் கார்டுகளுக்கு கொடுத்ததாக கணக்கு காண்பிக்கப் பட்டு பணம் கொள்ளை, டிவி வாங்கியதிலும் கொள்ளை, கேபிள் கனெக்ஷன் கொடுத்து அதில் வருமானம் பார்த்தார்கள்.
108 ஆம்புலன்ஸ் சேவை பரவலாக எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. உழவர் சந்தைகளை இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் மேம்படுத்தவில்லை. மேலும் பல வாய்ப்புகள் இருந்தும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்க்க வில்லை. எப்போது பார்த்தாலும் பாராட்டு விழா, ஆடம்பரமான அரசு செலவில் விழாக்கள் என செலவு செய்து விட்டது தான் மிச்சம். நன்றி!
“I think you too after earning huge money in singapore , return to india and start a newspaper. You are excellent in writing articles.”
– repeat tu
– Arun
நல்ல கமெண்ட்ஸ்…….அருமை நன்பர…..
@காத்தவராயன் முடிந்து போனதை பேசவேண்டியதில்லை என்றால் பல விசயங்களைப் பற்றி விவாதிக்கவே முடியாது.
@முஹமது யாசின் நான் வழக்கம்போலத்தான் எழுதினேன். நீங்கள் எதிர்பார்க்கும் எதை நான் தவறவிட்டேன் என்று தெரியவில்லை 🙂
@ஆனந்த் & சோம்ஸ் நீங்க இரண்டு பேரும் பொது அறிவுல ரொம்ப ஸ்ட்ராங் னு ஒத்துக்குறேன் 😉
@சந்தர் சிங், ராஜேஷ் & அருண். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. ரொம்ப சந்தோசமாக உணர்ந்தேன்.
@snkm நான் அனைத்தையும் படித்து எழுதுவது என்பது ரொம்ப சிரமம் கூடுமானவரை படித்ததை வைத்து எழுதுகிறேன். நீங்கள் கூறியது போல பாராட்டு விழாக்கள் மூலம் நிறைய செலவானது உண்மை தான்.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.