கெஞ்சாதீங்க.. கெத்தா இருங்க! | தமிழ் தயாரிப்பாளர்கள்

4
கெஞ்சாதீங்க.. கெத்தா இருங்க! Sathyam-Cinemas

மிழ்த்திரையுலகில் சீரமைப்பு நடந்து வருவது அனைவரும் அறிந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தைரியமான ஒரு முயற்சி, வரவேற்கிறேன். Image Credit

கணினி மயம்

குறிப்பாக, முன்பதிவை இணையத்தின் மூலம் ஒருங்கிணைத்து, முழுக்க கணினி மயமாக்குவதை 2018 ஜூன் 1 முதல் கட்டாயமாக்கி இருக்கிறார்கள்.

அதாவது, இனி திரையரங்கில் சென்று பணம் செலுத்தினால், தனிச் சீட்டாக இல்லாமல் தேதி, நேரத்துடன் கூடிய Print செய்யப்பட்ட சீட்டாகத் தர வேண்டும்.

படத்துக்குச் செல்கிறார் என்றால், அவர் செலுத்திய கட்டணம் கணக்கில் வரும்.

முன்பு 100 பேர் சென்றால், சில திரையரங்கு உரிமையாளர்கள் 60 பேருக்கு மட்டும் கணக்கு காட்டிவிட்டு மீதியை அவர் கணக்கில் வராத பணமாக வைத்துக்கொள்வார்.

இதனால் ஏற்படும் பிரச்சனைகள்

லாபம் கொடுத்த படமும் நட்டம் என்று கூறப்படுகிறது.

அரசுக்கு வரவேண்டிய வரிப்பணம் கள்ளப்பணமாக மாறுகிறது.

தயாரிப்பாளருக்குச் செல்ல வேண்டிய நியாயமான பணம் ஏமாற்றப்படுகிறது.

போலியான நட்டக்கணக்குக் காண்பிக்கப்படுகிறது.

இவ்வகைக் கணக்கில் நேர்மை இல்லாததால், சரியாக நிரூபிக்க முடியாததால் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் ₹100 கோடி ₹200 கோடி வசூல் செய்ததாகப் போலியான தோற்றத்தை மக்களை வரவழைக்க ஏற்படுத்துகிறார்கள்.

கணக்கே இல்லாமல் முதல் நாளே அவ்வளவு வசூலித்தது, இவ்வளவு வசூலித்தது என்று இவர்களே அடித்து விடுகிறார்கள்.

இது போன்ற பிரச்சனைகள் இனி இருக்காது.

கணினி மயமாக்கப்பட்டதால், இனி ஒவ்வொருவர் வாங்கும் பார்வையாளர் சீட்டுக்கும் கணக்கு இருக்கும், ஒரு படம் எவ்வளவு வசூலித்தது என்ற உண்மையான கணக்கு இருக்கும்.

ஆனால்,

திரையரங்கு உரிமையாளர்கள் படம் வெளியாகும் முதல் வார இறுதியில் இணையத்தில் தானே முன்பதிவு செய்து விட்டு Black Ticket ஆக விற்பனை செய்வார்கள், இதைத் தவிர்க்க முடியாது.

ஆனால், கூட்டமில்லை என்று ஏமாற்ற முடியாது. எத்தனை பார்வையாளர் சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதற்குக் கணக்குக் காட்டியாக வேண்டும்.

எனவே, ₹500, ₹1000 என்று வெளியே விற்று விட்டு அதிகாரப்பூர்வ அரசு கட்டணத்தைக்  காட்டுவார்கள். முன்பு இதையும் காட்டாமல், கூட்டமில்லை என்று கூறி விடுவார்கள்.

தயாரிப்பாளர் ஒருநாள் முடிந்ததும், தன்னுடைய படத்துக்கு எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்று உறுதியான கணக்கைப் பெற முடியும், தோராயமான கணக்கை அல்ல.

ஆனால், இவை யாவும் இவர்கள் இதை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே!

எனக்கு இவர்கள் மீது நம்பிக்கையில்லை, பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.

நடிகர்கள் ஊதிய உயர்வுப் பிரச்சனை

இதோடு நடிகர்கள் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதும் இவர்கள் கோரிக்கை.

நியாயமான கோரிக்கை ஆனால், தீர்வு அனைத்தையும் இவர்களே வைத்துக்கொண்டு எதற்கு நடிகர்களிடம் செல்ல வேண்டும்?!

ஞானவேல் ராஜா

இதில் ஒருபடி மேலே சென்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா…

தமிழ் திரையுலகில் தான் அதிகம் ஊதியம் வாங்குகிறார்கள், ஒரு படத்தின் முதலீட்டில் பாதி நடிகர்கள் ஊதியத்துக்கே சென்று விடுகின்றது.

ஆந்திராவில் இது போல இல்லை, படத்தின் லாபத்துக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படுகிறது. எனவே, தயாரிப்பாளர்கள் லாபம் அடைகிறார்கள்.

இப்படியே இன்னும் ஒருவருடம் தொடர்ந்தால், ஆந்திராவுக்கே சென்று விடுவேன். ஏற்கனவே, அங்கே அலுவலகம் அமைத்து விட்டேன். தமிழ் திரையுலகம் வேண்டாம்

என்று கூறி இருக்கிறார்.

போய்யா! உன்னை யாரு இங்க இருக்கச் சொன்னாங்க?! உன்னைப் படம் எடு படம் எடுன்னு யாரும் இங்க கெஞ்சிட்டு இருக்காங்களா?!

8 வருடங்களுக்கு முன்பே பதிவுலகில், சிலர் அடிக்கடி “நான் எழுதுவதை நிறுத்தப்போகிறேன்” என்று ஒரு கட்டுரை எழுதுவார்கள்.

உடனே அவரோட ரசிகர்கள்!! எல்லோரும் “தல போய்டாதீங்க! நீங்க இல்லைனா தமிழ் எழுத்துலகமே அழிந்து விடும்” என்பது போல அளந்து விடுவார்கள்.

பின்னர் சில நாள் கழித்துத் திரும்ப வந்துடுவார். இதெல்லாம் ஒரு கவன ஈர்ப்பே தவிர, வேறு ஒன்றுமில்லை.

போகிறேன் என்று நினைக்கிறவன் அமைதியா விலகிடுவான், இந்த மாதிரி Buildup பண்ணிட்டு இருக்க மாட்டான்.

இந்த ஞானவேல் ராஜாவும் அதே மாதிரி, சும்மா வாய். போறதுன்னா போ!

கெடுப்பதே தயாரிப்பாளர்கள் தான்

நடிகர்களைக் கெடுப்பதே தயாரிப்பாளர்கள் தான். ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே ஊதியத்தை உயர்த்தித் தருகிறேன் என்று இவர்களே ஏற்றி விடுவார்கள்.

உங்களை யாருயா அவர்களுக்குப் பணத்தை அவ்வளவு கொடுக்கச் சொன்னது? நாட்டுல வேற நடிகனே இல்லையா?!

உங்களுக்குப் பேராசை.. எப்படியாவது படம் பெரிய வெற்றி பெற்றால், பணத்தை அள்ளலாம்ன்னு. எனவே, கண்மூடித்தனமாகச் சம்பளத்தை ஏற்றி விட்டுட்டு அப்புறம் படம் நட்டுக்குனு போனால் ஒப்பாரி வைக்க வேண்டியது.

மற்றவர்களுக்கு வாய்ப்புக்கொடுங்க

நடிக்க வாய்ப்பு கிடைக்காம எவ்வளவு பேர் கோடம்பாக்கத்துல சுற்றிட்டு இருக்கான்! அவனை வைத்து எடு, அவனுக்கும் ஒரு வாழ்க்கை கொடு.

அதை விட்டுட்டு பெரிய நடிகர்கள் கிட்ட போய்க் கெஞ்சிட்டு இருந்தால், பிகு தான் பண்ணுவான்.

ஊதியம் அதிகம் என்று யாரும் பெரிய நடிகர்கள் பக்கம் போகாம இருங்க, அவங்களே வேற வழியில்லாம உங்க பக்கம் வருவார்கள்.

ஐடி ல முன்பெல்லாம் ஊழியர்களுக்கு Demand இருக்கும். எனவே, அவனவன் இன்னொரு நிறுவன Offer Letter வைத்து மிரட்டி அதிக ஊதியம் வாங்கினான்.

இப்ப, Automation அது இதுன்னு வந்து, கடும் போட்டியாகி விட்டது.

எனவே, தானாகவே இறங்கி வருகிறான். அதே ஊதியம் கொடுத்தாலும் போதும் அல்லது ஊதியம் என்று எது கொடுத்தாலும் போதும் என்ற நிலைக்கு வந்தாச்சு.

தேவை இருக்கும் வரை ஊதிய உயர்வு இருக்கத்தான் செய்யும். இது உலக நியதி.

திரைப்பட முதலீட்டில் கட்டுப்படியானால் ஊதியம் கொடு, இல்லையா..மறுத்துவிடு. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் எப்படி?!

கெஞ்சாதீங்க.. கெத்தா இருங்க!

நடிகர்களைப் புறக்கணித்தால், அவர்களே தானாக இறங்கி வருவார்கள். அவர்களிடம் சென்று கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்லை.

இதை நீங்களும் செய்ய மாட்டீங்க, அவர்களும் இறங்கி வர மாட்டாங்க. இப்படியே போயிட்டு இருக்க வேண்டியது தான்.

உங்களோட பொறுமை, நிதி சிக்கல் கழுத்து வரை வரும் போது தான் இனி இவங்க வேண்டாம் என்று திரும்புவீங்க. அதுவரை இது முடியாத பிரச்சனை.

தீர்வைத் தன்னிடமே வைத்துக்கொண்டு மற்றவரிடம் கெஞ்சும் விசித்திர பிறவிகள் இந்தத் தயாரிப்பாளர்கள்! கெஞ்சாதீங்க.. கெத்தா இருங்க!

Read : திரையரங்கு உரிமையாளர்கள் Vs தயாரிப்பாளர்கள்

4 COMMENTS

  1. கிரி, ரெண்டு படம் புது நடிகரோ / இயக்குனரோ நடிக்கிறாங்க / எடுக்குறாங்க!!! ரெண்டு படமும் வெற்றி படம் எனில் மூன்றாவது ஒரு படம் சொந்தமா தயாரிக்கிறாங்க!!! அப்போ, இவர்களுக்கு சம்பளம் எவ்வளவு??? ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கே கோடிக்கணக்கில் செலவாகும் என்பது தெரிந்த விஷியமே…வெறும் ரெண்டு படத்தோட வருமானத்தை வச்சிக்கிட்டு படம் தயாரிப்பு என்பது யோசிக்க முடியவில்லை… சினிமா புரியாத புதிராகவே இருக்கிறது….

  2. யாசின் சரியா சொன்னீங்க.. எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம். எப்படி இரு படங்கள் இயக்கி ஒரு படத்தை தயாரிக்கறாங்க? ஒன்றும் புரியலை.

  3. படித்தேன். நன்றி. நண்பர் ஒருவர் அடிக்கடி ஏன் திரைத்துறை அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாக எழுதாமல் தவிர்க்கின்றீர்களே என்று அடிக்கடி கேட்பார். எழுதலாம். அதில் பல இடங்களில் இவர்கள் எல்லாம் ஏன் இன்னமும் சாகாமல் உயிருடன் இருக்கின்றார் என்ற வார்த்தை வருமே? என்றேன். அய்யோ வேண்டாம் சாமி. என்று சொல்லிவிட்டார். திரைத்துறையை விட அதிகம் பணம் புழங்கக்கூடிய திருப்பூரில் மேலும் கீழும் பலதையும் பார்த்து விட்டேன். ஆனால் அந்தக் கொடுமை அங்கே நடக்கும் அக்கிரமங்கள்இங்கே இல்லை. கடந்த 30 வருடங்களில் 50க்கும் மேற்பட்ட திருப்பூர் முதலாளிகள் உள்ளே நுழைந்து இழந்து இன்னமும்அதே ஆசையுடன் தான் இருக்கின்றார்கள். அது தான் சினிமா. அது தான் பலரையும் காவு வாங்கிக் கொண்டே இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here