கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் ஒரு பாடலான சூறையாட வாடா! ஒளிப்பதிவும், படமாக்கலும், இசையும் வெறித்தனமாக உள்ளது.
சூறையாட வாடா!
சந்தோஷ் நாராயணன் FM கேட்டுக்கொண்டு இருந்த போது இப்பாடல் வந்தது ஆனால், என்ன படம் என்று தெரியவில்லை, Shazam செயலி மூலம் மகான் படம் என்று தெரிந்தது.
YouTube ல் தேடி போட்டால் தாறுமாறாக உள்ளது.
இப்பாடல் ஒரே முறையில் பிடிக்கக்காரணம் இதனுடைய பறை இசை. எங்க ஊரில் திருவிழா, திருமண நிகழ்வுகள், துக்க நிகழ்வுகள் எங்கும் இந்த இசையே இருக்கும்.
பறை இசைக்கு வெறித்தனமான ரசிகன் என்பதாலும், நான் கேட்டுக் கேட்டு வளர்ந்த இசை என்பதாலும் உடனே பிடித்து விட்டது.
YouTube ல் கேட்கலாம் என்று போட்டால், அதில் வரும் காட்சிகள் பாடலுக்குச் சற்றும் சளைத்ததில்லை என்பது போலத் தாறுமாறாக எடுத்து வைத்துள்ளார்கள்.
அப்படியே கிராமத்துக்குளேயே சென்று அவர்களில் ஒருவராக மாறி விடும் அளவுக்குக் காட்சிகள் உள்ளது.
எப்படி இது போல எடுத்தார்கள் என்று வியப்பாக இருந்தது. நாட்டுப்புற கலைஞர்களை வைத்து முழுப் பாடலையும் பட்டாசாக எடுத்துள்ளார்கள்.
பார்ப்பவர்களுக்கு நிச்சயம் வித்யாசமான அனுபவமாக இருக்கும்.
சந்தோஷ் நாராயணன்
பறை இசையில் சந்தோஷ் நாராயணணுக்கு அதீத ஈடுபாடு. அவரின் பல பாடல்களில் இதைக் கவனித்து இருக்கலாம்.
பறை இசையில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பறை இசை குறித்த தேடல் இவருக்கு அதிகம் என்று கருதுகிறேன்.
குறிப்பாக மகான் இசையைக் கேட்கும் போது கண் கலங்கி விட்டது. ஏனென்றால், பறை இசையை அவ்வளவு ரசித்துக்கேட்பேன். கேட்கும் போது Goosebumps ஆகும்.
அதோடு எங்க ஊரில் சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கேட்டதைத் திரும்பக் கேட்கும் போது கூடுதல் உணர்ச்சிகரமாக உள்ளது.
இந்த இசையைப் பற்றித் தெரியாதவர்களுக்குக் கடந்து போகக்கூடிய, எந்தச் சிறப்பும் தெரியாதது போல உணரலாம். ஆனால், இந்த இசையை உணர்ந்தவர்களுக்கு இதன் மதிப்புப் புரியும்.
சந்தோஷ் நாராயணன் இதையெல்லாம் கேட்டு இருக்க வாய்ப்புக்குறைவு ஆனால், எப்படி இசையை உயிரோட்டமாகக் கொண்டு வந்தார் என்று வியப்பாக உள்ளது.
பாடியவரின் குரலும், பாடல் வரிகளும் கிராமத்து உணர்வைத் தடங்கல் இல்லாமல் கொண்டு வருகிறது.
மோளம் அடிப்பவர் ஒருவர் இறுதியில் அப்படியே ஒரு டைவ் அடித்து உருண்டு வருவார்.. அட்டாகாசம் 🙂 . நிச்சயமாகப் பலரிடம் பேசி விவரங்களைக் கேட்டே இப்பாடலை உருவாக்கியிருக்க வேண்டும்.
மூன்று இசை மாற்றங்களுடன் இப்பாடல் உள்ளது. இம்மூன்று மாற்றங்களையும் பல முறை எங்கள் கிராமத்தில் ரசித்துக்கேட்டுள்ளேன்.
இப்பாடலை தரமான Speaker / Headset பயன்படுத்திக் கேட்கப் பரிந்துரைக்கிறேன்.
படம் எப்படி இருக்கும்னு தெரியல ஆனால், சூறையாட வாடா! தரம்!
தொடர்புடைய கட்டுரை