கபாலி பாடல்கள்

14
கபாலி பாடல்கள்

பாலி பாடல்கள் வெளியான உடனே எனக்கு வந்த முதல் செய்தியே பாடல்கள் / இசை சுமார் என்று தான். Image Credit

கபாலி பாடல்கள்

கபாலி பாடல்கள் வெளியாகி அரை மணி நேரத்தில்!! ஒரு தளம் தனது ட்விட்டர் கணக்கில் பாடல்கள் சொதப்பல், சந்தோஷ் நாராயணன் இது வரை இசையமைத்திலேயே மோசமான ஆல்பம் இது தான் என்று கூறி இருந்தது.

ஆனால், இது எதுவுமே என்னில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பாடல்களை ஒரு நாளில் கேட்டு நன்றாக உள்ளது / நன்றாக இல்லை என்று கூறுவதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை.

“நெருப்புடா” போன்ற ஒரு பாடலுக்கு வேண்டும் என்றால் இது பொருந்தலாம்.

ஒட்டுமொத்த ஆல்பத்தையும் அரை மணி நேரத்தில் மொக்கை / சூப்பர் என்று கூறுவதெல்லாம் வெறுப்பு / அதீத ரசிக மனோபாவமாக மட்டுமே இருக்க முடியும்.

பாடல்கள் படம் போல உடனடியாக விமர்சிக்கக் கூடிய விசயமல்ல. இசையைத் தொடர்ந்து சில நாட்கள் கேட்ட பிறகு தான் நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியும்.

நெருப்புடா! கேட்ட உடன் பிடிக்கும் பாடல் அதோடு இது முன்பே கொஞ்சம் (Leak) வெளியாகி விட்டது. எனவே, இதை விட்டால் அடுத்தது எனக்குப் பிடித்தது மாயநதி.

இனி கபாலி பாடல்கள் குறித்துப் பார்ப்போம்.

நெருப்புடா!

டீசர் வெளியான போதே சைரன் சத்தத்துடன் நெருப்புடா! நெருங்குடா!! வந்து விட்டதால், இசை ஏற்கனவே பிரபலமாகி இருந்ததால் இந்தப் பாடல் உடனடி (Instant) வெற்றி பெற்று விட்டது.

சைரன் சத்தம் டீசருக்கு மட்டுமே என்று நினைத்தேன் ஆனால், பாடலிலும் வந்து விட்டது. அந்தச் சத்தத்துடன் 11 வது நொடியில் வரும் கிடார் இசை அமர்க்களம்.

தரமான ஒலி சாதனத்துடன் கேட்டால் அசத்தலாக இருக்கும். குறிப்பாகக் காரில் டெசிபல் அதிகமாக வைத்து கேட்டால் மிரட்டல் தான்.

இதில் வரும் தலைவரின் “பயமா…” வசனமும் அதைத் தொடர்ந்து வரும் நெருப்பு குமார் (மூன்று) சிரிப்புக்குப் பின் வித்யாசமான குரலில் தலைவர் கூறும் “மகிழ்ச்சி”, தொடர்ந்து பாடலை நெருப்பு போலவே வைத்து இருக்க உதவுகிறது.

இந்தப் பாடலில் அழகான இரு தமிழ்ச் சொற்கள் “நெருப்பு” மற்றும் “மகிழ்ச்சி”அனைவரிடையே பிரபலமானதில் எனக்குப் பெரும் “மகிழ்ச்சி” 🙂 .

இதைத் தொடர்ந்து “25 வருசத்துக்கு…” வசனம் பலரை கவர்ந்து விட்டது. தாறுமாறு ஹிட் ஆகி பலரும் இந்த வசனம் தொடர்பாக மீம் போட்டு வருகிறார்கள்.

Lyrics Arun Raja Kamaraj Singer Arun Raja Kamaraj

வானம் பார்த்தேன்

படத்திலேயே சோகமான ஒரு பாடல். ரஞ்சித் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் கதையோடு ஒன்றிய பாடல்கள் தான். திணிக்கப்பட்ட பாடல்களாக இருக்காது.

இதை இவரின் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைப் பார்த்தவர்கள் உணர்வார்கள்.

குறிப்பாக, கேட்கும் போது எந்த உணர்வையும் தராத மெட்ராஸ் “இறந்திடவா” கானா பாலா பாடல் படம் பார்க்கும் போது உலுக்கி விட்டது.

இதே உணர்வை இப்பாடலும் தரலாம் என்று கருதுகிறேன்.

YouTube ல் ஒருவர் இதை இளையராஜா பாடி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறியிருந்தார்.

நானும் அவ்வாறு நினைத்தேன்.. ஆனால், எல்லாமே புதிதாக இருக்கும் போது இக்குரலும் புதிதாக இருப்பதே சரி என்று தோன்றியது.

ஆர்ப்பாட்டமுமில்லாமல் மிக மிக அமைதியான இசை. மனம் அமைதியாக இருக்கும் போதோ, அமைதியை தேடும் போதோ கேட்டால் இதன் சிறப்புப் புரியும்.

தலைவர் படங்களில் இது போல ஒரு பாடலை / இசையைக் கேட்டு வருடங்கள் ஆகிறது.

எப்படி இதை எடுத்து இருப்பார்கள்? என்று ஆர்வமும் இதற்குத் தலைவரின் நடிப்பு எவ்வாறு இருக்கும்? என்ற ஆவலும் அதிகமாக உள்ளது.

“உலகம் ஒருவனுக்காக” பாடல் தவிர்த்து அனைத்துமே மாண்டேஜ் பாடல்கள். எனவே, இப்பாடலுக்கு வரும் மாண்டேஜ் காட்சிகள் குறித்த கற்பனை பலவாறு உள்ளது.

எனக்கென்னவோ இப்பாடல் தலைவரின் நடிப்பை / இழப்பின் வலியை அதிகம் நமக்குக் காட்டும் என்றே தோன்றுகிறது.

அண்ணாமலை “ஒரு பெண் புறா” பாடல் போல ஒரு உணர்வை தரும் பார்ப்போம்.

படத்திலேயே நீளமான பாடலும் (4:53) இது தான். பாடலின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம் என்று நினைத்தேன்.

இதைப் படத்தில் பார்த்த பிறகே முடிவு செய்ய முடியும். நீளமா இல்லையா என்று.

Lyrics Kabilan Singer Pradeep Kumar

வீரத் துரந்தரா

முற்றிலும் புதுமையான பாடல் / இசை தலைவரின் படத்தில். பாடலின் துவக்கமே தலைவரின் படத்துக்கு புது வடிவத்தைக் கொடுக்கிறது. I love it!

கானாப் பாடலை பாடிக்கொண்டு இருந்த கானா பாலாவை ஒரு சுத்த தமிழ் பாடல் பாட வைத்து விட்டார் சந்தோஷ்.

இது Rap பாடல் என்றதும் இதில் கானாபாலாக்கு என்ன வேலை என்று நினைத்தேன் 🙂 . செமையா இருக்கிறது.

கானா பாலா குரலுடன் வரும் Rap பாடலும் 1:58 / 3:06 நிமிடத்தில் வரும் சிரிப்பெல்லாம் பாடலை வேறு கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.

இப்பாடல் 80’s காலகட்டத்தில் வரும் இசை என்று கூறுகிறார்கள்.

எனக்கு அந்த அளவுக்கு இசை ஞானம் இல்லையென்பதால், நன்றாக, வித்யாசமாக, ரசிக்கும் படியுள்ளது என்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது 🙂 .

சுருக்கமாகத் தமிழ் தெரியாதவர்களும் ரசிக்கும் பாடலாக இருக்கும்.

Lyrics Uma Devi Singers Gana Bala, Lawrence R, Pradeep Kumar, Roshan Jamrock

மாய நதி

பலருக்கும் பிடித்த மெலடி பாடல், எனக்கும் ரொம்பப் பிடித்தது. துவக்கத்தில் வரும் இசையே பாடலின் மீதான ஈர்ப்பை தோற்றுவித்து விடுகிறது.

அது கடைசி வரை தொடர்வது இப்பாடலின் வெற்றி.

தலைவர் படங்களில் இது போலப் பாடல்கள் எல்லாம் கேட்டுக் காலங்கள் ஆகிறது. சந்தோஷ் / ரஞ்சித் கூட்டணி கலக்கி இருக்கிறது.

சுருக்கமாகத் தலைவரை வைத்து என்னவெல்லாம் கொடுக்கணும் என்று என்னைப் போலப் பல ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதை ஒரு படி மேலே கொடுத்து இருக்கிறார்கள்.

பாடலில் வரும் மாண்டேஜ் காட்சிகள் கவிதை போல இருக்கும் என்பது என் அனுமானம். ரஞ்சித் அழகாகக் காட்சிப்படுத்தி இருப்பார் என்று நம்புகிறேன்.

காரணம் மெட்ராஸ் படத்தில் காதலை அழகாக ரசிக்கும் படி படமாக்கி இருந்தார்.

எனவே, இதிலும் சமீபமாக யாரும் காட்டாத தலைவரின் மென்மையான காதல் பக்கத்தை இதில் காட்சிபடுத்தி இருப்பார் என்று நம்புகிறேன்.

“நெருப்புடா” பாடல் உடலை முறுக்கேற்றும் பாடல் என்றால் “மாய நதி” உடலை இளக வைக்கும் பாடல்.

சுருக்கமாக அழகான ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான காதல் பாடல். என்னை மிகவும் கவர்ந்த பாடல்.

Lyrics Uma Devi Singers Singers Ananthu, Pradeep Kumar, Shweta Mohan

உலகம் ஒருவனுக்கா

நெருப்புடா பாடலுக்குப் பிறகு பலரைக் கவர்ந்த பாடலாகவும், ஆர்ப்பாட்டமான இசையைக் கொண்ட பாடலாக “உலகம் ஒருவனுக்கா”.

இது ஒன்று தான் மாண்டேஜ் பாடலாக இல்லாமல் நடனத்துடன் வரும் பாடல்.

பாடலில் வரும் Base இசை கலக்கலாக இருக்கிறது.

சிறையில் இருந்து வரும் தலைவரை வரவேற்கும் பாடலாக உள்ளது. இதில் துவக்கத்தில் வரும் (Drums) இசை எனக்கு “பாய்ஸ்” படத்தை நினைவு படுத்தியது.. யாருக்காவது இப்படித் தோன்றியதா?!

கானா பாலா வரியை முடிக்கும் போது சில இடங்களில் இழுக்கிறார் (அழுவது போல 3:01) இதைத் தவிர்க்கலாம்.

இது இவருடைய வழக்கமான முறை என்று புரிகிறது ஆனால், இப்பாடலில் சரியாக பொருந்தவில்லை.

பாடல் வரிகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளன. சர்ச்சை தலைவரை சுற்றியல்ல, ரஞ்சித்தை சுற்றி. ரஞ்சித் என்றாலும் தானாகவே தலைவரையும் சார்ந்தது தான்.

தமிழ் தமிழ் ன்னு குதிக்கிறவணுகளுக்காக வரியை வைத்ததாக விவேக் கூறியிருந்தார். சரியாகத் தான் கூறியிருக்கிறார்.

நம்ம ஆளுங்க தமிழ் தமிழ்னு குதிக்கும் போதெல்லாம் கேரளாவில் ஒருமுறை கொடும்பாவி எரிக்க முயற்சிக்கும் போது அவர்கள் மீதே தீப்பற்றிக்கொள்ளும், அக்காட்சி தான் நினைவுக்கு வருகிறது 🙂 .

so called தமிழன்னு பொங்குபவர்களை விடத் தலைவர் தன் துறையில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்.

பல நாடுகளில் “கபாலி” என்ற தமிழ்ப் படத்தைபலரும் ஆர்வமாகக் கேட்க வைத்தது ஒன்றே போதும் தலைவர் தமிழை எங்கே கொண்டு சென்று இருக்கிறார் என்று.

இது போல உதாரணம் கூற ஏராளம் இருக்கு.. ஆனால், புரிந்து கொள்ளாதவர்களுக்கு / புரிந்து கொள்ள முயலாதவர்களுக்கு விளக்கி என்ன பயன்?!

தலைவரை தோற்கடிக்க முடியாதவர்கள் வேறு வழியே இல்லாமல் புலம்பும் வார்த்தை மற்றும் இயலாமையே “தமிழன் இல்லை, கன்னடன்” போன்றவை.

ரஞ்சித் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னது மாதிரி “நீங்கெல்லாம் அவ்வளோ தான்டா!”.

விவேக் பற்றிக் கூறும் போது ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

விவேக் எழுதிய கவிதை ஒன்றை வைரமுத்துக்கு அனுப்பி வைத்தாராம், அதை வைரமுத்து பாராட்டியவுடன் தான் இவருக்குத் தன் மீது நம்பிக்கை வந்து பாடல்கள் எழுத வந்து இருக்கிறார்.

இவ்வளவு வருடங்களாகத் தலைவரின் முதல் பாடலை வைரமுத்துவே எழுதி வந்தார். ஆனால், இன்று கபாலிக்கு அவர் பாராட்டிய விவேக் எழுதி இருக்கிறார். என்ன ஒரு முரண்பாடு! 🙂 .

வைரமுத்துவின் மனநிலை என்னவாக இருக்கும்!

இப்பாடலை கபிலனுடன் இணைந்து விவேக் எழுதியிருக்கிறார்.

Lyrics Kabilan and Vivek Singers Ananthu, Santhosh Narayanan, Gana Bala, Roshan Jamrock

ஆக மொத்தத்தில் “சந்தோஷ் நாராயணன்” ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு  அதிகமாகவே கொடுத்து விட்டார்.

சிலர் மொக்கைனு சொல்றாங்களே கிரி…!

இதற்காகவே தான் தமிழில் ஒரு அழகான வார்த்தை இருக்கு “புறக்கணிப்பு” 🙂 .

அனைவரையும் யாராலும் திருப்தி செய்ய முடியாது. யார் என்ன கூறினாலும் பெரும்பான்மை மக்கள் ரசிக்கும் பாடல்கள் தான் “கபாலி”.

எனவே, அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை!

சில கொசுறு தகவல்கள்

இதைப் படிப்பவர்கள் நான் ரஜினி ரசிகன் என்பதால் பாடலை மிகைப்படுத்திக் கூறுவதாக நினைக்கலாம் ஆனால், அப்படியெல்லாம் இல்லை உண்மையாகவே பாடல்கள் நன்றாகவும் ஒவ்வொன்றும் வித்யாசமாகவும் உள்ளது.

லிங்காவில் “உண்மை ஒரு நாள்” பாடல் மட்டுமே பிடித்தது என்று கூறினேன், கடைசிவரை அதே முடிவில் இருந்தேன். மற்ற பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை.

பாடல் விமர்சனம் எழுதவும் பிடிக்கவில்லை. எனவே நான் எழுதவே இல்லை. எந்திரன், கோச்சடையானுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்தது  கபாலி பாடல்கள் தான்.

இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாதிரி இசை உள்ளது. Fast Beat, Guitar, Rap, Melody, Sad, Happiness, 80’s Music என்று கலந்து கட்டி அடித்து இருக்கிறார்கள்.

அதோடு இசையும் தலைவர் படங்களுக்கே உண்டான வழக்கமான இசையாக இல்லாமல் புதிய முறையில் உள்ளது.

“இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் சொல்வது போல “பிரெஷா இருக்கு ஜி” 🙂 .

கால மாற்றம்

இப்பாடலின் இசை பல தலைவர் ரசிகர்களுக்குப் பிடிக்காது இப்படியான புதுமையான இசையை அவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது.

தலைவர் இன்னமும் இவ்வளவு காலங்களுக்குப் பிறகும் நிலைத்து இருக்கக் காரணமே காலத்துக்கு ஏற்ப அதோடு செல்வது தான்.

காலத்தோடு மாறவில்லை என்றால் நாம் கரைந்து போய் விடுவோம்.

இதைத் தலைவர் மிகச் சரியாக உணர்ந்து இருக்கிறார். தலைவர் மட்டுமல்ல தலைவர் ரசிகர்களும் மாறவில்லை என்றால், தனித்து விடப்படுவோம்.

ஸ்டைல் என்பது அவருடனே இருப்பது அதோடு அவரின் நகைச்சுவை, சண்டைக் காட்சிகள், கதை இவற்றைக் காலத்துக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

இந்த விசயத்தில் தான் தலைவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு இருக்கிறார்.

லிங்கா க்ளைமாக்ஸ் காட்சிகள் போன்று எப்பவாவது சொதப்பினாலும் மீண்டு அதில் இருந்து பாடம் கற்று “கபாலி” என்ற சட்டுன்னு எழும் குதிரையாக வருகிறார்.

தலையீடு இல்லை

படத்தில் எந்தத் தலையீடும் இல்லையென்பதே அனைவரும் கூறியது.

துவக்கப் பாடலில் SPB இல்லையென்பது பலரின் வருத்தம் அதோடு SPB பாடாத பாபா மற்றும் குசேலன் தோல்விப்படம் என்பது சென்டிமென்ட்டாக ஒரு குறை ஆனால், அந்தக் குறை இதில் யாருக்கும் தெரிவது போல எனக்குத் தோன்றவில்லை.

காரணம் பாடல்கள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக வந்தது தான்.

சண்டைக்காட்சியில் இருவருடன் சண்டை போடுவது போலக் காட்சி.. தலைவர் “ஏம்பா.. ஒரு 10 / 20 பேரை இறக்குங்க அப்பத்தானே நல்லா இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு “சார்! இக்காட்சிக்கு இது தான் தேவை” என்று கூறி எடுத்து இருக்கிறார்கள். சந்தேகத்தோடு நடித்தாலும் காட்சியை மானிட்டரில் பார்த்துச் சண்டை இயக்குநர்களைப் பாராட்டி இருக்கிறார்.

இது குறித்த விரிவான பேட்டி ஒரு இதழில் வந்தது.

கபாலியில் வழக்கமாக 40 / 50 பேரை பறக்க விடும் காட்சிகள் எல்லாம் இல்லாமல் இயல்பான சண்டைக் காட்சிகளாக அமைத்து இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இது தான் கால மாற்றம். இதைத் தலைவரும் உணர்ந்து ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.

தலைவரோட பலம் என்னன்னு பல இயக்குநர்களுக்குப் புரியலை. கபாலியில் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது என்னைப் போலப் பல ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ரஞ்சித் நிறைவேற்றி இருப்பார் என்று தோன்றுகிறது.

இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?

தேவையில்லாமல் எதிர்பார்ப்பை உருவாக்காதீர்கள் என்று தலைவர் கூறியதால், பாடல் வெளியீட்டு விழாவை ரத்துச் செய்து விட்டதால் ரசிகர்களே சென்னை வூட்லண்ட்ஸ் திரையரங்கில் “சிவாஜி” படம் திரையிட்டு கொண்டாடினார்கள்.

வந்து இருந்தவர்கள் பெரும்பாலனவர்கள் இளைஞர்களே!

எங்கே இருந்து திடீர்னு இவ்வளோ பேரு வந்தாங்கன்னே புரியல. லிங்காக்கு இப்படியெல்லாம் இல்லை. இப்படம் இளைஞர்களை ஈர்த்து இருக்கிறது. ரசிகர்களை அதிகப்படுத்தி இருக்கிறது.

லிங்கா தோல்விக்குப் பலர் கிண்டலடித்த கடுப்பிலேயே பல ரசிகர்கள் இவ்வளவு வெறித்தனமாக உள்ளார்கள். அதுவும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

“கபாலி டா!” வசனம் குழந்தைகளைப் பெருமளவில் கவர்ந்து இருக்கிறது. 65 வயதில் ஒருத்தர் இவ்வளவு குழந்தைகளை ஈர்ப்பது எல்லாம் உண்மையில் வியப்பே!

எப்படி இருந்தாலும் உள்ளுக்குள்ள “பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்” என்ற நிலை இருப்பதை மறுக்க முடியாது 🙂 🙂 .

படம் வெளியாகி நன்றாக இருக்கிறது என்று நமக்குத் தோன்றும்வரை ரசிகனாகக் கொஞ்சம் திக் திக்குனு தான் இருக்கு 🙂 .

அப்புறம் கடைசியா, வழக்கம் போல வசனங்களைப் பேசி சண்டைக்கு வருபவர்களுக்கு, அறிவுரை!! சொல்பவர்களுக்கு, நான் இப்படித் தான்.. பிடித்தால் படிங்க.. இல்லையா.. போயிட்டே இருங்க! I don’t mind!

DOT

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

14 COMMENTS

  1. கிரி.. மிகவும் தெளிவான அலசல்… பாடல்கள் இதுவரை கேட்க்கவில்லை.. ஆனால் படத்தின் முன்னோட்டமே கூறிவிட்டது படம் வெற்றி என்பதை. இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தலைவருக்கு பிறகு தலைவர் தான். படம் நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என நம்புகிறேன்.

    கபாலியின் மீது உள்ள எதிர்பார்ப்பு எனக்கு 2.0 படத்தின் மீது இல்லை… விவேக் – வைரமுத்து இதுவும் கடந்து போகும் என்பதை உணர்த்தியுள்ளது. ஆயிரமாயிரம் விமர்ச்சனைகளை தாண்டி நான் விரும்பும் வெகு சிலரில் தலைவருக்கு தனியிடம்… கிரி முன்பு போல் பதிவுகள் அதிகம் பார்க்கமுடியவில்லையே.. பகிர்வுக்கு நன்றி.

  2. எனக்கும் பாடல்கள் மிகவும் பிடித்தது . கிரேட் ரெவியூ Giri

  3. தல,
    அருமையான பதிவு
    எனக்கும் பாட்டு எல்லாம் புடிச்சது

    உங்க பிஸி வாழ்க்கை கு நடுல பதிவு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி தல

    – அருண் கோவிந்தன்

  4. தமிழில் ஒரு அழகான வார்த்தை இருக்கு “புறக்கணிப்பு” ? அனைவரையும் யாராலும் திருப்தி செய்ய முடியாது. யார் என்ன கூறினாலும் பெரும்பான்மை மக்கள் ரசிக்கும் பாடல்கள் தான் “கபாலி”.

    எனவே, அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை!

    உண்மை தான் கிரி

  5. நல்ல ஒரு விமர்சனம்.
    உலகம் ஒருவனுக்கு வரும் தொடக்க இசை, மிக்கேல் ஜாக்சன் பாடலில் வருவது.

  6. @யாசின் “கபாலியின் மீது உள்ள எதிர்பார்ப்பு எனக்கு 2.0 படத்தின் மீது இல்லை”

    எனக்கும் 2.0 படத்தை விட கபாலிக்கே அதிக எதிர்பார்ப்பு.

    “கிரி முன்பு போல் பதிவுகள் அதிகம் பார்க்கமுடியவில்லையே..”

    இரு வாரம் முன்பு தான் இணைய இணைப்பு கொடுத்தேன். அதோட பசங்களை சீக்கிரம் தூங்க வைக்க நானும் தூங்குவதால் எழுத முடிவதில்லை.

    ஆனால், எழுத்து ஆர்வம் அப்படியே தான் இருக்கிறது 🙂 .

    @அபு கோகுல் அருண் சரவணன் நன்றி

    @Rich ரைட்டு 🙂 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை போல..

  7. பாடல்களை ஒரு முறைதான் கேட்டேன்.

    இது கேட்பதற்கான பாடல் அல்ல;
    பார்ப்பதற்கான பாடல்.

    இந்த படத்தின் பாடல்கள் கூறுவது முழுக்க முழுக்க தலைவர் தன்னை இயக்குனரிடம் ஒப்படைத்து விட்டார். முதல் முறையாக இது ரஜினிகாந்த் படப்பாடல்கள் தானா என்ற விவாதம் எழுந்துள்ளது. இயக்குனருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் மிகப்பெரிய துணிச்சலும் நம்பிக்கையும் இருந்தால் அன்றி இது சாத்தியமில்லை. [முன்பு முத்து படத்தில் “குலுவாலிலே” பாடலுக்கு மட்டும் இந்த விவாதம் எழுந்தது]

    எந்த பாடலிலும் 80களின் சாயல் இல்லை, நிகழ்கால இசையே.

    நீண்ட இடைவெளிக்கு பின்னர் பதிவுலகத்திற்கு வ்ந்தமைக்கு வாழ்த்துகள் கிரி.

  8. முதல் முறையாக பாடல்கள் கேட்ட பிறகு , அழுகை வந்தது. சந்தோஷ் நாராயண் சொதப்பி விட்டாரோ என்று.
    நாள் ஆக ஆக, நேர்மறை விமர்சனங்கள் வர ஆரம்பித்தவுடன் …..மகிழ்ச்சி.

  9. நாளை மாலை 6 மணிக்குப் (21ம்தேதி. உங்களுக்கெல்லாம் காதுல புகை வரலாம்) படம் பார்ப்போம். ஹைப்புக்கு ஏற்றபடி இருக்குமா என்பது தெரியவில்லை. புது இளம் இயக்குனர். ரஜினி ஸ்பெஷலான நகைச்சுவை இல்லை. பார்க்கலாம்.

  10. காத்தவராயன் சரியாக உள்ளதே! இதன் பிறகு இருவர் கருத்திட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!